முன்னோக்கு

கமலா ஹாரீஸின் புலம்பெயர்வு-விரோத பயணம்: ஏகாதிபத்திய சேவையில் அடையாள அரசியல்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

விடுதலை காற்றைச் சுவாசிக்க ஏங்கும், உங்களின் மனம் தளர்ந்த, வறிய, குழம்பிய அந்த ஜனங்களை என்னிடம் அனுப்புங்கள்… " (சுதந்திர தேவி சிலையின் அஸ்திவாரத்தில் பொதியப்பட்ட, Emma Lazarus இன் கவிதை)

வராதீர்கள், வர வேண்டாம்... எங்கள் எல்லைக்கு வந்தால், நீங்கள் திருப்பி அனுப்பப்படுவீர்கள்,” (இது, மத்திய அமெரிக்காவின் கொடிய வறுமை மற்றும் வெறித்தனமான வன்முறையிலிருந்து தப்பி வரும் புலம்பெயர்ந்தோர்க்கு துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ் கூறுவது.)

அமெரிக்க துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் கமலா ஹாரிஸ் இந்த வாரம் அவரின் முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார். குவாத்தமாலா மற்றும் மெக்சிகோவிற்கான மூன்று நாள் திடீர் விஜயமாக இருந்த அது, பொலிஸ் மற்றும் குண்டர் படுகொலைகளுடன் சேர்ந்து கடுமையான வறுமையிலிருந்து தப்பிக்கவும், அமெரிக்காவிலுள்ள அவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் மீண்டும் இணைவதற்கும் முயற்சிக்கும் மத்திய அமெரிக்க புலம்பெயர்ந்தவர்களின் வருகையை வன்முறையாக நசுக்க, அந்நாடுகளது பாதுகாப்புப் படைகள் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த நோக்கம் கொண்டிருந்தது.

இத்தகைய உயர்மட்ட அரசு முறைப் பயணத்தில் வெளிநாடுகளில் வாஷிங்டனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் பெண்மணி மற்றும் முதல் ஆபிரிக்க/ஆசிய-அமெரிக்கர் ஹாரிஸ் என்று இதுதான் அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்களில் அதிகம் கூறப்பட்டது. புலம்பெயர்ந்தவர்களின் மகளான ஹாரிஸிடம், புலம்பெயர்வு மீதான பன்னாட்டு ஒடுக்குமுறையை ஒருங்கிணைக்கும் இழிந்த, உண்மையில் சொல்லப் போனால், கொலைகார வேலை ஒப்படைக்கப்பட்டிருந்தது.

Vice President Kamala Harris listens to a reporter's question during a news conference with Guatemalan President Alejandro Giammattei at the National Palace in Guatemala City, Monday, June 7, 2021. (AP Photo/Oliver de Ros)

உள்நாட்டில் முதலாளித்துவ ஒழுங்கையும் வெளிநாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களையும் பாதுகாப்பதில், அடையாள அரசியலின் பங்கை ஒருவர் வேறெங்கும் இதை விட அப்பட்டமாக காண முடியாது.

இளம் பெண்கள் "முன்னேற்றத்திற்கு" 40 மில்லியன் டாலர் வாக்குறுதி உட்பட, ஹாரிஸ் விஜயத்தில் இத்தகைய தொனியுடன் கூடிய சோடனைகள் உள்ளடங்கி இருந்தன. இது, மக்கள்தொகையில் பாதிப்பேர் ஏழைகளாக வகைப்படுத்தப்படும் மற்றும் புவியில் ஆறாவது மிக அதிக ஊட்டச்சத்தின்மை விகிதம் கொண்ட ஒரு நாட்டுக்குக் கடலில் கரைத்த பெருங்காயம் போல வழங்கப்படும் ஒரு சிறுதுளியாகும். குழந்தைகள் ஒவ்வொரு நாளும் உணவின்றி இறந்து வரும் நிலையில், குழந்தைகளின் நீடித்த ஊட்டச்சத்தின்மை விகிதம், அந்நாட்டில் இப்போது உலகிலேயே மிக அதிகபட்சமாக அதிர்ச்சியூட்டும் வகையில் 70 சதவீதமாக உள்ளது.

குவாத்தமாலாவின் ஆளும் தன்னலக்குழு மற்றும் இராணுவத்தின் ஆதரவுடன் பதவிக்கு வந்த ஒரு தீவிர வலதுசாரி அரசியல்வாதியான ஜனாதிபதி அலெஜாண்ட்ரோ ஜியாம்மடேயுடனான (Alejandro Giammattei) கலந்துரையாடலில், ஹாரிஸ் அவரின் ஒரு நாளை குவாத்தமாலாவில் செலவிட்டார். அந்த அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் கோவிட்-19 தொற்றுநோயை அது குற்றகரமாக கையாண்டதற்கு எதிராக கடந்தாண்டு வெடித்த வெகுஜன போராட்டங்களால் அவர் கிட்டத்தட்ட பதவியிலிருந்து தூக்கியெறியப்பட இருந்தார், காங்கிரஸ் சபை கட்டிடம் எரிக்கப்பட்டதும் அதில் உள்ளடங்கும்.

ஜியாம்மடேயின் அரசியல் வாழ்வில் அந்நாட்டு சிறைகளுக்கான தலைவராக அவர் வகித்த ஒரு பதவியும் அடங்கும், அவர் பதவியின் போது தான் பாதுகாப்புப் படைகள் 2006 இல் கைதிகளைப் படுகொலை செய்தனர். அந்த கொலைகள் மற்றும் சிறைச்சாலைகளில் இருந்த கொடூரமான நிலைமைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் பேரில் அவர் சிறிது காலம் சிறையில் அடைக்கப்பட்டார். ஒருவேளை அது, அப்போதைய கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் ஹாரிஸூடன் அவருக்குப் பிணைப்பை ஏற்படுத்த சேவையாற்றி இருக்கலாம். மாநிலங்களின் சிறைச்சாலைகளது நிலைமைகள் அமெரிக்க அரசியலமைப்பை மீறி "கொடூரமாக மற்றும் வழக்கத்திற்கு மாறான தண்டனையை" உள்ளடக்கி உள்ளன என்ற நீதிமன்றத் தீர்ப்புகளை மாற்றியமைக்க, ஹாரிஸ் அப்போது ஓர் ஆக்கிரோஷமான பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

ஜியாமட்டியுடன் கூட்டாக இணைந்து ஹாரிஸ் வழங்கிய பொது அறிக்கையில், "வரலாற்று சிறப்புமிக்க உறவுகளை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்." “நாங்கள் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைந்து கொண்டிருக்கையில், அண்டை நாடுகளாக இந்த உறவின் விசேஷ முக்கியத்துவத்தை உணர்கிறோம்,” என்றார்.

குவாத்தமாலாவுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான "வரலாற்று" பிணைப்புகள் பற்றி புரிந்து கொள்ளத்தக்க எந்த காரண விவரங்களையும் ஹாரிஸ் வழங்கவில்லை. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் இருந்து, இந்த "பிணைப்புகள்", குவாத்தமாலாவின் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பூர்வீக பழங்குடி மக்கள் மீதான மிருகத்தனமான சுரண்டல் மற்றும் இரத்தந்தோய்ந்த ஒடுக்குமுறை மூலமாக உருவாக்கப்பட்டன. அந்நாட்டின் பொருளாதாரம் United Fruit நிறுவனம் மற்றும் பிற அமெரிக்க வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களால் திறம்பட கைப்பற்றப்பட்டது, இவற்றின் நலன்கள் தொடர்ச்சியான பல இராணுவ சர்வாதிகாரங்களால் பாதுகாக்கப்பட்டன, வேலைநிறுத்தமோ அல்லது போராட்டமோ செய்ய துணிந்த தொழிலாளர்களை இந்த சர்வாதிகாரங்கள் தொடர்ந்து தூக்கிலிட்டன மற்றும் படுகொலை செய்தன.

1954 இல், சிஐஏ நேரடியாக வடிவமைத்த ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதி, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி Jacobo Árbenz ஐ பதவியிலிருந்து தூக்கியெறிந்தது, ஏனெனில் United Fruit நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த, ஆனால் பயன்படுத்தப்படாமல் இருந்த, நிலங்களை, உரிய இழப்பீட்டுடன், பறிமுதல் செய்வதை உள்ளடக்கிய ஒரு மட்டுப்படுத்தப்பட்ட நிலச் சீர்திருத்தத் தொடங்கியதே அவர் செய்த குற்றமாக இருந்தது.

அந்த ஆட்சிக்கவிழ்ப்பு, மூன்று தசாப்த காலம் காட்டுமிராண்டித்தனமான இராணுவ சர்வாதிகாரங்களுக்கும் மற்றும் அமெரிக்க-ஆதரவு கிளர்ச்சி-எதிர்ப்புப் போருக்கும் வழிவகுத்தது, அதில் 200,000 பேர் உயிரிழந்திருக்கலாமென மதிப்பிடப்பட்டது, அவர்களில் பெரும்பாலானவர்கள் பென்டகனால் ஆயுத பயிற்சியளிக்கப்பட்ட ஓர் இராணுவத்தின் இனப்படுகொலை நடவடிக்கையில் அழிக்கப்பட்ட பூர்வீக பழங்குடியின விவசாயிகள் ஆவர். பெண்கள் "முன்னேற்றத்திற்காக" என்று கூறப்படும் ஹாரிஸ் வழங்கும் பணம், குவாத்தமாலா பாதுகாப்புப் படைகளின் பாரிய கொலைகாரர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக வாஷிங்டன் வாரி வழங்கும் பணத்தில் ஒரு சிறிய பகுதியாகும்.

Árbenz இக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு சதியை அடுத்து வரையப்பட்ட ஓர் இராஜாங்க குறிப்பில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் குறிப்பிடுகையில், இலத்தீன் அமெரிக்க நாடுகள் "அவற்றின் பொருளாதாரங்களைத் தனியார் நிறுவன முறை அடிப்படையில் அமைக்க நிர்ப்பந்திப்பதும், அதற்கு இன்றியமையாதபடி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இரண்டினது தனியார் முதலீட்டிற்கும் உகந்த ஓர் அரசியல் பொருளாதார சூழ்நிலையை உருவாக்குவதுமே" இந்தப் பிராந்தியத்தில் வாஷிங்டனின் நோக்கம் என்று குறிப்பிட்டது.

குவாத்தமாலாவுக்கான அவரது விஜயத்தில் ஹாரிஸ் தெளிவுபடுத்தியதைப் போல, ஆறு தசாப்தங்களுக்கும் அதிக காலத்திற்குப் பின்னர் இப்போதும் அதுதான் அப்பகுதியில் வாஷிங்டனின் முக்கிய கொள்கையாக உள்ளது. வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக என்று கூறி, அதன் மூலம் புலம்பெயர்வு வருகையைக் கடுமையாக தடுக்க அவர் வழங்கும் முக்கிய "உதவி", "தொழில்முனைவோரை" ஆதரிப்பதற்கான ஒரு தொகுப்புப் பொதியும் மற்றும் அமெரிக்க பெருநிறுவனங்களின் நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டால் அவை அப்பிராந்தியத்தில் "பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்கவும் வேலை பயிற்சிகளிலும்" முதலீடு செய்யும் என்ற வாக்குறுதியுமாக இருந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மலிவு உழைப்பு தேடலில் வரும் அமெரிக்க மூலதன பாய்ச்சலின் மீது எந்தவித கட்டுப்பாடுகளும் இருக்கக் கூடாது, அதே நேரத்தில் தொழிலாளர்களை தேசிய எல்லைகளுக்குள் அடைத்து வைக்க எஃகு சுவர்கள் எழுப்பப்படுகின்றன.

இது அமெரிக்க வாகனத்துறை, மின்னணுவியல், பாதுகாப்பு மற்றும் பிற தொழில்துறைகளுக்கான விநியோக சங்கிலியின் பாகமாக மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவில் அமெரிக்காவுக்குச் சொந்தமான தொழிற்சாலைகளை நம்பியிருக்கும் நாடுகடந்த பெருநிறுவனங்களுக்கு மிக முக்கிய மிகப்பெரும் வாய்ப்பாகும். இந்த பெருந்தொற்று காலத்தில் கூட இந்த ஆலைகளைத் திறக்க வாஷிங்டன் வலியுறுத்தியது, அந்த அரசாங்கங்களும் அதற்கு உடனடியாக இணங்கின, இது நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்பு விகிதங்களை வேகமாக தீவிரப்படுத்தியது.

இதே விஷயம் தான் செவ்வாய்கிழமை மெக்சிகன் ஜனாதிபதி (AMLO) உடனான ஹாரிஸின் பேச்சுவார்த்தைகளிலும் வலியுறுத்தப்பட்டது, அந்த பேச்சுவார்த்தைகள் "மெக்சிகோவுக்கு வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்து வலுப்படுத்துமாறு" ஓர் அறிக்கையைக் கொண்டு வந்தது. மீண்டுமொருமுறை, வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு எல்லைகள் திறக்கப்படுகின்றன, உழைக்கும் மக்களுக்கு இராணுவமயமாக்கப்பட்ட எல்லைகள் கட்டமைக்கப்படுகின்றன.

"இடது" அரசாங்கம் என்று கூறிக்கொள்ளும் மெக்சிகோவின் AMLO அரசாங்கமும் சரி வலதுசாரி மத்திய அமெரிக்க ஆட்சிகளும் சரி இரண்டுமே பைடென் நிர்வாகத்தின் புலம்பெயர்ந்தோர் மீதான போரில் விருப்பமுள்ள துணை-ஒப்பந்தக்காரர்களாக சேவையாற்றி வருகின்றன. ஏப்ரலில், மெக்சிகோவை ஒட்டி 10,000 சிப்பாய்களையும், குவாத்தமாலா அருகில் 7,000 துருப்புக்களையும், ஹோண்டுராஸ் அருகில் அதன் வடக்கு எல்லையில் 1,500 பாதுகாப்பு அதிகாரிகளையும் நிலைநிறுத்துவதாக வெள்ளை மாளிகை அறிவித்தது. ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏனைய கண்காணிப்பு கருவிகளுடன் இந்த படைகள் பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், இவற்றுக்கு அமெரிக்க "ஆலோசகர்களின்" ஆதரவும் இருந்தன.

புலம்பெயர்ந்தோரைப் பேருந்துகளில் ஏற்றி வருவதற்குப் பதிலாக, டெக்சாஸ் எல்லையை ஒட்டிய மெக்சிகோவின் தமௌலிபஸ் மற்றும் சிஹூவா மாநிலங்களில் இருந்து ஹோண்டுரன் நகரமான சான் பெட்ரோ சுலாவுக்கும் மற்றும் மிகப்பெரிய புலம்பெயர்ந்தோர் தடுப்பு முகாம்களைக் கொண்டுள்ளதும் மற்றும் AMLO கட்சி சட்டமன்ற உறுப்பினர்களாலேயே சிறைவதை முகாம்களாக விவரிக்கப்படும் தெற்கு மெக்சிகன் நகரங்களான வில்லாஹெர்மோசா மற்றும் தபாசுலாவுக்குக் "காற்றுப்பை பாலம்" (air bridge) அமைத்து, கடந்த மாதம், மெக்சிகோ அவர்களை இடம்பெயர்த்துவதை விரைவுபடுத்தியது.

அமெரிக்க எல்லையிலேயே கூட, புலம்பெயர்ந்தவர்களைத் திருப்பி அனுப்புவதற்குக் கடுமையான அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. வெளிப்பார்வைக்குப் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக என்ற அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் பொது சுகாதார உத்தரவு தலைப்பு 42 ஐ காரணங்காட்டி, சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, ஏப்ரலில், அமெரிக்க எல்லை ரோந்துப் படையால் கைது செய்யப்பட்ட 178,622 புலம்பெயர்ந்தவர்களில் 111,714 பேர் கேள்விமுறையின்றி மெக்சிகோவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்த உத்தரவுக்கு எந்த விஞ்ஞானபூர்வ அடித்தளமும் இல்லையென பொது சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள், பலரும், அவர்களின் முதுகில் துணி மூட்டைகளைத் தவிர வேறெதுவுமின்றி, எல்லையின் தொலைதூரப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, மெக்சிகோவிற்குள் திரும்பிச் செல்ல கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் இப்போது இழிந்த கூடார முகாம்களில் சிக்கியிருப்பதுடன், தண்ணீர், உணவு மற்றும் மருத்துவ கவனிப்பு இல்லாமல், அன்றாடம் வன்முறை மற்றும் கடத்தல் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர்.

பைடென் நிர்வாகம் பாசிச முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அடிப்படைக் கொள்கைகளையே தொடர்கின்ற நிலையில், தஞ்சம் கோரும் உரிமை மீதான சர்வதேச சட்டம் மற்றும் அமெரிக்க சட்டம் இரண்டையும் அப்பட்டமாக மீறுவதென்பது, அமெரிக்க ஆளும் ஸ்தாபகத்திற்குள் ஓர் ஒருமித்த கொள்கையாக உள்ளது.

கூட்ட நெரிசல், கடுமையான குளிர் மற்றும் வாயில் வைக்க முடியாத உணவு என குழந்தைகள் உட்பட புலம்பெயர்ந்தவர்கள் இந்த நிலைமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் நிலையில், புலம்பெயர்வு சிறைசாலைகளின் நிலைமைகளோ மனிதாபிமானமற்றவையாக உள்ளன. தடுப்புக்காவலில் உள்ள புலம்பெயர்ந்தவர்களில் வெறும் 7 சதவீதத்தினருக்கு மட்டுமே தடுப்பூசி இடப்பட்டுள்ள அதேவேளையில் அவர்கள் மத்தியில் 2,007 நோயாளிகள் கண்டறியப்பட்டிருப்பதாக கடந்த மாதம் உள்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது, கூடுதல் கோவிட்-19 நோய்தொற்றுக்களும் வேகமாக அதிகரித்து வருகின்றன.

"அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் அபாயகரமாக மலையேறி" வருவது குறித்து கமலா ஹாரிஸ் நிறைய முதலை கண்ணீர் விட்டார். இந்த பெரும் அபாயங்கள் எல்லாம், புலம்பெயர்வை ஒடுக்குவதற்காக அமெரிக்க அரசாங்கத்தால் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டவை ஆகும். இது ட்ரம்பின் கீழ் இருந்ததைப் போலவே பைடெனின் கீழும் உண்மையாக உள்ளது.

அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் மெக்சிகோ மற்றும் மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் உழைக்கும் மக்களைப் பாதுகாக்க அமெரிக்க தொழிலாளர்கள் முன்வர வேண்டும். அவர்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான அமெரிக்க ஏகாதிபத்திய ஒடுக்குமுறையால் ஏற்படுத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான நிலைமைகளில் இருந்து தப்பிக்க முயல்கிறார்கள், இன்னும் பலர், குழந்தைகள், தாய்மார்கள், தந்தையர் பெரும்பிரயத்தனத்துடன் அவர்களின் குடும்பங்களுடன் மீண்டும் ஒன்று சேர முயல்கிறார்கள்.

கோவிட்-19 பெருந்தொற்றின் பாரிய இறப்பு மற்றும் நோய்களுக்கு மத்தியில் இலாபங்களை அறுவடை செய்துள்ள அதே நாடு கடந்த பெருநிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கம் போராட்டத்திற்குள் உந்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டங்களின் வெற்றி தொழிலாளர்கள் தேசிய எல்லைகளைக் கடந்து ஒன்றுபடுவதைப் பொறுத்துள்ளது. இதற்கு முதலாளித்துவக் கட்சிகளும் பெருநிறுவன தொழிற்சங்கங்களும் பரப்பி வரும் வெளிநாட்டவர் விரோத மனோநிலை மற்றும் தேசியவாதத்தை நிபந்தனையின்றி நிராகரிப்பதும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்கள் விரும்பும் நாட்டில் வாழ்வதற்கும் வேலை செய்வதற்குமான ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதும் அவசியமாகும்.

Loading