பிரேசிலில் சர்வாதிகார ஆட்சியை பலப்படுத்த போல்சொனாரோ ஒட்டுமொத்த இராணுவ கட்டளையகத்தை நீக்குகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரேசில் வரலாற்றில் முன்னுதாரணமற்ற ஒரு நடவடிக்கையாக, நாட்டின் பாசிச ஜனாதிபதி ஜெய்ர் போல்சொனாரோ, இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் சீருடையணிந்த தளபதிகளுடன் சேர்த்து தனது பாதுகாப்பு அமைச்சரையும் பணிநீக்கம் செய்துள்ளார். அவரது வெளிப்படையான நோக்கம், பிரேசிலில் கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக நிலவும் பேரழிவுகர சூழ்நிலை, மற்றும் ஆழமடைந்து வரும் சமூக மற்றும் அரசியல் நெருக்கடி ஆகிய நிலைமைகளின் கீழ், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு தயாரிப்பு செய்ய அரசின் மீதான மொத்த பிடியையும் தன்வசப்படுத்திக் கொள்வதாகும்.

பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சொனாரோவும் மற்றும் இராணுவ தளபதி ஜெனரல் எட்சன் புஜோலும் (Credit: AgenciaBrasil)

இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடனான போல்சொனாரோவின் மோதலானது, அவரது அரசாங்கத்தின் திட்ட நிரலுக்கு, அதிலும் குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய் தொடர்புபட்ட, இனப்படுகொலையையொத்த சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கைக்கு ஆயுதப்படைகளை முழுமையாக அடிபணியச் செய்ய வேண்டும் என்ற அவரது அதிகரித்தளவிலான வலுவான கோரிக்கைகளின் பின்னணியிலிருந்து எழுந்துள்ளது. ஆயுதப்படைகளின் மூத்த தளபதிகள் ஒட்டுமொத்தமாக மாற்றம் செய்யப்பட்ட அதேநாளில், நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறை தேசியளவிலான வீழ்ச்சியை எதிர்கொண்ட நிலையில், பிரேசில் 3,668 கோவிட்-19 இறப்புக்களை பதிவு செய்தது.

சமீபத்திய வாரங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில், கோவிட்-19 நோய்தொற்றுக்களும் இறப்புக்களும் கடுமையாக அதிகரித்து வருவதற்கு பதிலிறுக்கும் வகையில், மாநில மற்றும் நகராட்சி அரசாங்கங்கள் செயல்படுத்தும் எந்தவொரு சமூக இடைவெளி நடவடிக்கையுடனான மோதலையும் போல்சொனாரோ ஊக்குவித்துள்ளார். “மக்களை வீட்டிலேயே தங்கியிருக்க வலியுறுத்த எனது இராணுவம் வீதிகளுக்கு இறங்கிச் செல்லாது” என்று அறிவித்தார்.

திங்களன்று, அரசாங்க செயலகம், பணியாளர் தலைமை, வெளியுறவு, பாதுகாப்பு, நீதி, மற்றும் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் உள்ளிட்ட ஆறு அமைச்சகங்களை பாதிக்கும் வகையில் அமைச்சரவை மறுசீரமைப்புக்கு அரசாங்கம் அறிவித்தது. பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் பெர்னாண்டோ அசெவெடோ இ சில்வாவுக்கு பதிலாக ஜெனரல் பிராகா நெட்டோ நியமிக்கப்பட்டார், இவர் முன்னர் போல்சொனாரோவின் தலைமைப் பணியாளராக பணியாற்றியவராவார். போல்சொனாரோ உடனான ஒரு குறுகிய சந்திப்பிற்குப் பின்னர், அசெவெடோ இ சில்வா இராஜினாமா செய்ய ஒப்புக் கொண்டார், இருப்பினும் இவர் ஜனாதிபதியால் பதவிநீக்கம் செய்யப்பட்டார் என்பதே உண்மை.

ஜெனரல் தனது இராஜினாமா கடிதத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைவராக, “ஆயுதப்படைகளை அரசு நிறுவனங்களாக கருதி நான் பாதுகாத்தேன்,” என்று குறிப்பிட்டிருந்தமை, அவரது நீக்கத்திற்குப் பின்னர், அது இனிமேல் நிரூபனமாகாது என்பதை பரிந்துரைக்கிறது.

பிரேசிலின் வெளியேற்றப்பட்ட இராணுவத் தலைவர்கள்: எட்சன் புஜோல் (காலாட்படை), இல்க்ஸ் பார்போசா (கடற்படை), மற்றும் அன்டோனியோ கார்லோஸ் மோரேட்டி பெர்முடெஸ் (விமானப்படை) (Credit: AgenciaBrasil)

செவ்வாய்க்கிழமை காலையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் பொறுப்பை ஏற்றவுடன் தளபதிகளின் இராஜினாமா பற்றி பிராகா நெட்டோ அறிவித்தார். விமானப்படையின் முன்னாள் தளபதி அன்டோனியோ கார்லோஸ் மோரேட்டி பெர்முடெஸ், கூட்டத்திற்குப் பின்னர் அசெவெடோ இ சில்வாவைப் போல அதே கருத்தை ஏற்றுக்கொண்டதற்கான ஒரு அறிக்கையுடன் ஒரு காணொளியை வெளியிட்டார். இதில், விமானப்படையை ஒரு “அரசு நிறுவனம்” என்று கருதியும், “வான்வெளி எனும் நமது இறையாண்மை”க்காகவும் தான் பணியாற்றியதாக பெர்முடெஸ் அறிவித்தார்.

பிரதிநிதிகள் சபையில் போல்சொனாரோவின் கூட்டணிகளின் ஒரு பகுதி அவமதிக்கப்பட்டதையும் செவ்வாய்க்கிழமை குறித்தது. சபையில் சமூக தாராளவாதக் கட்சியின் (Social Liberal Party-PSL) தலைவர் மேஜர் விட்டோர் ஹ்யூகோ, தேசிய அணிதிரட்டலுக்கு ஆணையிடுவதற்கான நோக்கத்துடன், கோவிட்-19 பெருந்தொற்று காலம் போன்ற பொது சுகாதார அவசரநிலைகளை வரையறுக்கும் மசோதா மீதான வாக்கெடுப்புக்கு வலியுறுத்த முயன்றார்.

போர் தொடர்புபட்ட விவகாரங்களில் இன்று தீர்மானிக்கப்படக்கூடிய தேசிய அணிதிரட்டல்கள், பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் உற்பத்தியில் தலையிடவும், மற்றும் பொதுமக்களையும் இராணுவப் படையினரையும் அவரது உத்தரவுகளுக்கு கீழ்படியச் செய்யவும் ஜனாதிபதியை அனுமதிக்கின்றன. இது, அதிகாரத்தின் முக்கிய தொகுப்பு ஜனாதிபதியின் கைகளில் இருப்பதைக் குறிக்கிறது. சபைக்குள் இருக்கும் வலதுசாரி பிரமுகர்கள் கூட இந்த திட்டத்தை “சதி” முயற்சியாக விவரிக்கின்றனர்.

போல்சொனாரோ தனது அமைச்சரவையையும் மற்றும் இராணுவ உயர்மட்ட கட்டளையகத்தையும் முன்னுதாரணமற்ற வகையில் கலைத்துப்போட்டது, புதன்கிழமை பிரேசிலின் 1964 அமெரிக்க-ஆதரவு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதித்திட்டத்தின் 57 ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் பிராகா நெட்டோவின் முதல் நடவடிக்கை, இரண்டு தசாப்த கால மிருகத்தனமான சர்வாதிகாரத்திற்கு வழிவகுத்ததான இந்த அரசியல் குற்றத்தை கொண்டாடக் கோரி அன்றைய தினம் இராணுவ உத்தரவை வெளியிடுவது இருந்தது.

இந்த உத்தரவு, “அமைதி மற்றும் ஜனநாயகத்திற்கான உண்மையான அச்சுறுத்தலுக்கு” பதிலிறுப்பதற்கு “1964 இயக்கத்தின்” ஒரு பகுதியாக இந்த இராணுவ சதித்திட்டம் இருந்தது என்ற பொய்யை ஊக்குவித்தது. இந்த இழிந்த “போல்சொனரைட்” கற்பனை, “இன்று நாம் அனுபவிக்கும் ஜனநாயக சுதந்திரங்களுக்கு உத்தரவாதமளிக்க” ஆயுதப்படைகள் “தினசரி துன்பத்தை எதிர்கொள்கின்றன” என்று குறிப்பிட்டு, வீதிகளில் மக்கள் இயக்கமாகத் தொடங்கி பிரேசிலிய ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசாங்கத்தின் ஆதரவுடன் முடிவடைந்த ஒரு சதியை விளைவித்தது.

உண்மையில், 1964 இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் பிரேசிலிய ஆளும் வர்க்கத்தால் நேரடியாக வடிவமைக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டது. இது இராணுவம் “தினசரி துயரத்தால்” பாதிக்கப்பட்டது என்பதல்ல, மாறாக 21 ஆண்டுகள் நீடித்த இரத்தக்களரியான அதன் சர்வாதிகாரத்தின் போது பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை அது கொன்றது மற்றும் சித்திரவதை செய்தது.

புதன்கிழமை காலை பிரேசில் முழுவதிலுமான இராணுவ குடியிருப்புக்களில் உள்ள இராணுவப் படையினருக்கு உரக்க வாசிக்கப்பட்ட இந்த உத்தரவு, இந்த வரலாற்றிலிருந்து பாசிச படிப்பினைகளை பெறுவதற்கு வழிவகுத்தது. இது இவ்வாறு தெரிவிக்கிறது: “தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலை சுற்றுச்சூழல் பிரச்சினைகள், இணையவழி அச்சுறுத்தல்கள், உணவு பாதுகாப்பு மற்றும் தொற்றுநோய்கள் போன்ற புதிய சவால்களை முன்வைக்கிறது. மக்களை பாதுகாப்பதில் இராணுவப் படை முன்னணியில் இருக்கின்றது.”

இந்த தோல்வியிலிருந்து பிரேசிலிய தொழிலாள வர்க்கம் தனக்கான சொந்த அரசியல் படிப்பினைகளை கற்றுக்கொள்ள வேண்டியது அவசரம். ஏனென்றால், முதலாளித்துவ வர்க்கத்தின் அதிகரித்தளவிலான சர்வாதிகார முறைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியாக தன்னை ஆயுதபாணியாக்கிக் கொள்வது என்பது வாழ்வா சாவா பிரச்சினையாகும்.

1964 ஆம் ஆண்டில், ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியால் ஊக்குவிக்கப்பட்ட, ஜோவோ கவுலார்ட்டின் (Joao Goulart) முதலாளித்துவ தேசியவாத அரசாங்கத்திற்கு தொழிலாளர்கள் அரசியல் ரீதியாக கீழ்படியவைக்கப்பட்டது, சதித்திட்டத்தை எதிர்க்கும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை நிராயுதபாணியாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது.

சர்வாதிகாரம் உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வந்த ஆண்டான 1985 இல், தொழிலாளர் கட்சியுடன் (PT) இணைந்த அரசியல் சக்திகள், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான குற்றங்களுக்கு பொறுப்பாளிகளான இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளின் “துன்புறுத்தலை” எதிர்த்து, ஒரு சிவிலியன் முதலாளித்துவ ஆட்சிக்கான ஒரு சுமூகமான மாற்றத்திற்காக செயல்பட்டன. இந்த பாதை இராணுவ சர்வாதிகாரத்தின் மரபார்ந்த கணக்குகளை தீர்ப்பதைக் குறிக்கிறது என்ற அரசியல் பொய் இந்த அரசியல் அமைப்பிலிருந்து போல்சொனாரோ தோன்றியதன் மூலம் அப்பட்டமாகியுள்ளது.

இன்று கூட, இந்த அரசியல் துரோகங்களுக்குப் பின்னால் உள்ள வரலாற்று ரீதியிலான அதே சக்திகள் தற்போதைய சூழ்நிலையின் உடனடி ஆபத்துக்களை அறியவிடாமல் தொழிலாள வர்க்கத்தை குருடாக்க முயல்கின்றன.

வெவ்வேறு போலி-இடது குழுக்கள், குறிப்பாக அர்ஜென்டினா திருத்தல்வாதி நஹூவல் மொரேனோவின் (Nahuel Moreno) அரசியல் வாரிசுகள், “இங்கு பார்ப்பதற்கு எதுவும் இல்லை, அப்படியே முன்னேறுங்கள்” என்ற அதே முடிவை கடந்த வார நிகழ்வுகளிலிருந்து எடுத்துள்ளன.

தொழிலாளர் கட்சியில் முன்னணி பதவிகளை வகித்தவரும், Convergencia Socialista என்ற முன்னாள் மொரேனாய்ட் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான வலேரியோ ஆர்கரி (Valerio Arcary) என்பவரால் மிகவும் கோரமான சூத்திரங்கள் வகுக்கப்பட்டன. இன்று, சோசலிசம் மற்றும் சுதந்திரக் கட்சிக்குள் (PSOL) நிலவும் “எதிர்ப்பு” போக்கின் தலைவராக, போல்சொனாரோவின் சர்வாதிகார நடவடிக்கைகள் குறித்து “பதட்டமான முறிவின் விளிம்பில்” இருப்பவர்களை ஆர்கரி கேலி செய்து, அப்பட்டமாக இதை அறிவித்தார்: “அமைச்சக மறுசீரமைப்புடன் என்ன நடந்தது என்பது ஒரு சுய-சதித்திட்ட தயாரிப்பிற்கான முன்னோடியாக இருக்கவில்லை. … பெரும் மூலதனம் ஆட்சியை கீழறுப்பதை ஆதரிக்கவில்லை.”

அதே அத்தியாவசிய அரசியல் பார்வையை ஆர்ஜென்டினா சோசலிச தொழிலாளர் கட்சியுடன் (PTS) இணைந்த புரட்சிகர தொழிலாளர் இயக்கத்தின் (MRT) மொரேனாய்டுகளும் வைத்திருக்கிறார்கள். தங்களது வலைத் தளமான Esuqerda Diario இல், போல்சொனாரோவுக்கு இராணுவத்திற்குள் ஆதரவில்லை என்று அவர்கள் விவரிக்கிறார்கள், மேலும் மைய-வலது கட்சிகளால் “தொல்லைப்படுத்தப்படுகிறார்கள்.” இந்த தளம், “போல்சொனாரோவுக்கான அடிப்படை ஆதரவை தெளிவாக பலவீனப்படுத்தி சிதைக்கும் தருணத்தில் அவரது சதித்திட்டத்தை மிகைப்படுத்திக் கூறும் பகுப்பாய்வுகளை விட மிக நிதானமாக முடிவை” ஆதரிக்கிறது.

இந்த போலி-இடது குழுக்களின் நடுத்தர வர்க்க தன்னிறைவு, அவமதிப்புக்கு மட்டுமே தகுதியான, முதலாளித்துவ அரசின் நித்திய ஸ்திரத்தன்மை குறித்த அவர்களது அசைக்க முடியாத நம்பிக்கையிலிருந்து உருவாகிறது. போல்சொனாரோவின் அச்சுறுத்தல்களை பிரேசிலிய தொழிலாள வர்க்கம் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

உலகெங்கிலுமான முதலாளித்துவ ஜனநாயகத்தில் முறிவை ஏற்படுத்தி வரும், மற்றும் ஒவ்வொரு நாட்டின் ஆளும் வர்க்கத்தையும் சர்வாதிகார வழிமுறைகளை நோக்கி உந்தித் தள்ளும் உலக முதலாளித்துவ அமைப்பின் ஆழ்ந்த நெருக்கடியால் பிரேசிலின் அரசியல் யதார்த்தம் தீர்மானிக்கப்படுகிறது. போல்சொனாரோவால் பகிரங்கமாக பாராட்டப்பட்ட, மேலும் அவரது மகன் எட்வர்டோ போல்சொனாரோ நெருக்கமாக பின்தொடர்ந்த, அமெரிக்காவின் ஜனவரி 6 ஆட்சிக் கவிழ்ப்பு என்பது, சர்வதேச அளவிலான அரசியல் மாற்றத்தின் மிகக் கடுமையான வெளிப்பாடாகும்.

கோவிட்-19 பெருந்தொற்று நோய் முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகளை வெடிக்கும் மட்டத்திற்கு உயர்த்தியுள்ளது. சமூக சமத்துவமின்மை கொடூரமாக அதிகரித்திருப்பது, பிரேசில் முழுவதுமான கொரோனா வைரஸின் பேரழிவுகர விளைவுகள், மற்றும் பிரேசிலிய முதலாளித்துவத்தின் அதிதீவிர நெருக்கடி ஆகியவை போல்சொனாரோவின் சதித்திட்டத்திற்கான புறநிலை உந்து சக்திகளாக உள்ளன.

எவ்வாறாயினும், இதே புறநிலை காரணிகள் தான் பிரேசிலிலும் மற்றும் உலகெங்கிலுமுள்ள தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த புரட்சிகர இயக்கம் உருவாவதற்கான நிலைமைகளை உருவாக்குகின்றன. பிரேசிலின் தொழிலாள வர்க்கத்தால் மற்றொரு பாசிச இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதியை அனுமதிக்க முடியாது. அத்தகைய ஒன்றைத் தடுக்க அது தன்னைத்தானே அரசியல் ரீதியாக ஆயுதபாணியாக்கிக் கொள்ள வேண்டும்.

சர்வாதிகார அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டம் என்பது, கோவிட்-19 பெருந்தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான, மற்றும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களைப் பாதிக்கும் சமூக நெருக்கடியை தீர்ப்பதற்கான போராட்டத்துடன் இணைந்து கொள்ள வேண்டும். வரவிருக்கும் புரட்சிகர எழுச்சிகளின் அலைகளை எதிர்கொள்வதற்கு தயாராவது குறித்த தீர்க்கமான கேள்வி, தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச அளவிலான தலைமையை கட்டமைப்பது பற்றியதாகும், அதாவது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரேசிலிய பிரிவு உருவாக்கப்பட வேண்டும்.

Loading