இலங்கையின் இனவாத போர் முடிவடைந்து பன்னிரண்டு ஆண்டுகள்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்களால் பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிராகவும் இன்னும் பரந்தளவில் தீவின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராகவும் முன்னெடுக்கப்பட்ட 26 ஆண்டுகால இரத்தக் களரி இனவாத போர் முடிவடைந்து 12 ஆண்டுகள் கடந்திருப்பதையே மே 18 குறிக்கின்றது.

பாராளுமன்றத்தில் குறித்த நாளன்று பேசுகையில், பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ, "நாட்டை பயங்கரவாதத்திடம் இருந்து விடுவித்தமைக்காக" இராணுவத்திற்கு புகழாரம் சூட்டினார். "நாம் போர் யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம்," இடம்பெயர்ந்த அகதிகள் "அவர்களது கிராமங்களில் குடியேற்றப்பட்டுள்ளனர்" மற்றும் "வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்கள் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இன்று கண்ணியத்துடன் சுதந்திரமாகவும் வாழ்வதுடன் ஜனநாயகத்தை அனுபவித்து வருகின்றனர், என அவர் மேலும் கூறினார்.

இலங்கையின் படையினர், கொழும்பில் இருந்து வடகிழக்கே 300 கிலோமீட்டர் (186 மைல்) தொலைவில் உள்ள யாழ்ப்பாணத்தில், 21 ஜூன் 2006 அன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது. (AP Photo/Eranga Jayawardena, File) [AP Photo/Eranga Jayawardena]

இது வரலாற்றை தலைகீழாக புரட்டி போட்டு, போரின் முடிவு பற்றிய பயங்கரமான உண்மையை மறைப்பதாகும். 2009 இன் தொடக்க மாதங்களில் இராணுவத்தின் தொடர் தாக்குதல்கள் மூலம், தீவின் வடகிழக்கு கடற்கரையில் உள்ள முல்லைத்தீவுக்கு அருகில் ஒரு சிறிய நிலப்பரப்பிற்குள் விடுதலைப் புலிகளுடன் இலட்சக் கணக்கான தமிழ் மக்களும் விரட்டியடிக்கப்பட்டனர்.

இலங்கை இராணுவம், ஈவிரக்கமின்றி அந்த இடத்தின் மீது ஆட்டிலறி ஷெல்கள், போர் விமானங்கள் கொண்டு குண்டு மழை பொழிந்தது. மருத்துவமனைகள், உதவி நிலையங்கள் மற்றும் பொது மக்கள் தங்கியிருந்த இடங்களும் வேண்டுமென்றே குறிவைத்து தாக்கப்பட்டன. ஐக்கிய நாடுகளின் மதிப்பீட்டின் படி, சுமார் 40,000 பொது மக்கள் இறந்துள்ளனர். விடுதலை புலிகளின் பாதுகாப்பு நொறுங்கியபோது, இராணுவம் சரணடைந்த புலிகளின் தலைவர்களை படுகொலை செய்ததுடன் சுமார் 300,000 பொது மக்களை இராணுவ சிறைச்சாலையில் தள்ளியது. பல நூறு இளைஞர்கள், தெரியாத இடங்களுக்கு "புனர்வாழ்வூட்டுவதற்காக" அனுப்பப்பட்டனர்.

அப்போது இலங்கை ஜனாதிபதியதாக இருந்த மஹிந்த இராஜபக்ஷ, நடந்த போர் குற்றங்களுக்கும் அப்பட்டமான ஜனநாயக உரிமை மீறல்களுக்கும் நேரடி பொறுப்பாளி ஆவார். அவரது இளைய சகோதரரான, நாட்டின் தற்போதைய ஜனாதிபதியான கோட்டாபய இராஜபக்ஷ, இராணுவத்தின் குற்றவியல் நடவடிக்கைகளை பாதுகாப்பு செயலராக இருந்து மேற்பார்வையிட்டார். வெள்ளை கோடி ஏந்தி வந்து சரணடைந்த புலிகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டதில் அவருக்கு நேரடி தொடர்பு உண்டு.

இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நிலைமையைப் பொறுத்தவரை, தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருந்தவர்கள்,"மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்". அவர்களில் பலர் அடிப்படை வசதிகள் அற்ற குடிசைகளில் மோசமான வறுமையில் வாழ்கின்றனர். தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் சுமார் 90,000 போர் விதவைகள், பிழைப்பதற்காகப் போராடுகிறார்கள். போரினால் பாதிக்கப்பட்ட இரண்டு மாகாணங்களும் கடும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளன. தமிழ் மக்கள், குறிப்பாக இளைஞர்கள், தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறார்கள், அச்சுறுத்தப்படுகிறார்கள். "காணாமல் ஆக்கப்பட்டவர்கள்" பற்றிய தகவல்களைக் கோரியும் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரியும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

விடுதலை புலிகள் மீதான வெற்றி தெற்கில் கொண்டாடப்படும் அதே வேளை, வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு இராணுவ-பொலிஸ் ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ள அரசாங்கம், முல்லைத்தீவு படுகொலையில் கொல்லப்பட்ட தங்கள் அன்புக்குரியவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதற்காக டசின் கணக்கானவர்களை கைது செய்தது.

நாட்டில், கோவிட்-19 தொற்றுநோய் அதிகரித்து வருவதால், இந்த மாதம் வெற்றி கொண்டாட்டங்களை மட்டுப்படுத்தி நடத்த அரசாங்கம் கட்டாயப்படுத்தப்பட்டது. ஊதியம் மற்றும் வேலை வெட்டுக்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பிற அடிப்படை பொருட்களுக்கான விலைகள் உயர்ந்து வருவதை முகம் கொடுக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் வளர்ந்து வரும் வெகுஜன எதிர்ப்பைப் பற்றி கொழும்பு ஆட்சி பீதியடைந்துள்ளது.

வளர்ந்து வரும் சமூக அமைதியின்மைக்கு பதிலிறுக்கும் அரசாங்கத்தின், வர்க்கப் போருக்கான தயாரிப்பில் இராணுவத்தை பலப்படுத்துகிறது. வெற்றி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஆயிரக்கணக்கான சிப்பாய்கள் பதவி உயர்த்தப்பட்டனர். விடுதலைப் புலிகளின் தோல்வியின் பிரதிபலனாக, இராணுவம் சுருக்கப்படுவதற்குப் பதிலாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இராணுவச் செலவுக்கான ஒதுக்கீடு இந்த ஆண்டு மீண்டும் 440 பில்லியன் ரூபாய்க்கு (2.2 பில்லியன் அமெரிக்க டாலர்) அதிகரிக்கப்பட்டுள்ளது.

2009 இல் ஆளும் வட்டாரங்களில் ஏற்பட்ட மகிழ்ச்சியை எதிர்த்து, உலக சோசலிச வலைத் தளம் எழுதியதாவது: “விடுதலைப் புலிகளின் இராணுவத் தோல்வி, உள்நாட்டுப் போருக்கு காரணமான அடிப்படை பிரச்சினைகளைத் தீர்க்க எதுவும் செய்யவில்லை. முதலாளித்துவ அடிப்படையில், இரத்தக்களரி அடக்குமுறை மற்றும் அட்டூழியங்கள் மூலமாக மட்டுமே இலங்கை அரசின் ஐக்கியத்தை நிலைநிறுத்த முடியும் என்பதை அது நிரூபித்துள்ளது. (21 மே 2009 அன்று வெளியான WSWS முன்னோக்கு).

1948 இல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் இருந்து உத்தியோகபூர்வ சுதந்திரம் பெற்ற பின்னர், இலங்கை முதலாளித்துவ வர்க்கமும் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பின்பற்றிய இனவாத அரசியலின் விளைவாக, 1983 இல் போர் வெடித்தது.

உழைக்கும் மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் எதிர்கொள்ளும் எந்தவொரு ஜனநாயக அல்லது சமூக பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாமல், ஒவ்வொரு அரசியல் நெருக்கடியின் போதும், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கும் பலவீனப்படுத்துவதற்கும் கொழும்பு அரசாங்கங்கள் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தையும் தமிழர்-விரோத பேரினவாதத்தையும் நாடின.

சுதந்திரத்திற்குப் பின்னர் உடனடியாக, அன்றைய அரசாங்கம், பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களால் மலிவான உழைப்பாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு மில்லியன் தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையை பறித்தது. தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் எழுச்சிக்கு வழிவகுத்த ஆழ்ந்த ஆட்சி நெருக்கடியைத் தொடர்ந்து, 1956 இல், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிங்களம் மட்டும் கொள்கையின் அடிப்படையில் தேர்தலில் வென்றது. இது சிங்களத்தை ஒரே உத்தியோகபூர்வ மொழியாக மாற்றியதுடன், தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக்கியது.

ட்ரொட்ஸ்கிச அமைப்பு என்று கூறிக்கொண்ட லங்கா சம சமாஜ கட்சி, ஆரம்பத்தில் இனவாதத்திற்கு ஒரு தடையாக செயல்பட்டு, சிங்கள மற்றும் தமிழ் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தை ஊக்குவித்தது. ஆனால் 1964 இல், சிறிமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்திற்குள் நுழைந்து, சிங்கள ஜனரஞ்சகவாதத்தைத் தழுவிக்கொண்ட போது, அதன் சீரழிவும் காட்டிக்கொடுப்பும், “ஆயுதப் போராட்டம்” மற்றும் இனவாத அரசியலை அடிப்படையாகக் கொண்ட குட்டி முதலாளித்துவ தீவிரவாத அமைப்புகள், குறிப்பாக, வடக்கில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் மற்றும் தெற்கில் கிராமப்புற சிங்கள இளைஞர்கள் மத்தியில் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) உருவாக அது வழிவகுத்தது.

1977 இல் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர். ஜயவர்த்தனவின் வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) அரசாங்கம், சந்தை சார்பு மறுசீரமைப்பை செயல்படுத்தி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மலிவான உழைப்பில் இலாபம் பெறுவதற்காக ஊக்குவிப்பதன் மூலம், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு பதிலளித்தது. தொழிலாள வர்க்க எதிர்ப்பு வெடித்தபோது, ஜயவர்தன ஒரு எதேச்சதிகார நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நிறுவ அரசியலமைப்பை திருத்தி எழுதியதுடன், அடித்தடுத்து தமிழர்-விரோத ஆத்திரமூட்டலில் ஈடுபட்டார். அது 1983 இல் பேரழிகரமான தமிழ்ர்-விரோத படுகொலைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதுவே போர் வெடிக்க வழிவகுத்தது.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் (பு.க.க.) மட்டுமே, தொழிலாள வர்க்கத்தை ஒன்றிணைக்கும் போராட்டத்தின் அடிப்படையில் இனவாதப் போரை தொடர்ந்து எதிர்த்து வந்தன. வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை நிபந்தனையின்றி திரும்பப் பெறுமாறு நாம் கோரியதுடன் தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்தோம். அதே நேரம், பு.க.க./சோ.ச.க. தொழிலாள வர்க்கத்தை இனவாத ரீதியில் பிரிப்பதை ஊக்குவித்த புலிகளின் பிரிவினைவாத அரசியலையும் எதிர்த்தது.

1987 இல், நான்காம் அகிலத்தின் அனைத்தலக குழுவும் (நா.அ.அ.கு.) பு.க.க.வும், தெற்காசியாவில் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்திற்காக போராடுவதன் ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு என்ற முன்னோக்கை முன்வைத்தது. இந்த வேலைத்திட்டம் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஜனநாயக பணிகளை தீர்ப்பதில், கிராமப்புற ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தலைமை கொடுக்க தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே முடியும் என்பதை நிரந்தரப் புரட்சி வலியுறுத்தியது.

நீடித்த மற்றும் பேரழிவுகரமான யுத்தம், இனவாத அரசியலில் ஆழமாக மூழ்கியிருக்கும், இலங்கை முதலாளித்துவத்தின் எந்தவொரு கன்னையும் உழைக்கும் மக்களின் ஜனநாயக அபிலாஷைகளை பூர்த்தி செய்ய இலாயக்கற்றது என்பதை நிரூபித்தது. பெரும்பான்மை சிங்கள ஸ்தாபனத்தின் அதிகாரத்தையும் சலுகைகளையும் தக்க வைத்துக் கொள்ள, கொழும்பு அரசாங்கங்கள் சிங்கள இளைஞர்களின் வாழ்க்கையை தியாகம் செய்த அதே வேளை, முதலாளித்துவ தமிழ் கட்சிகளோ தமிழ் தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதற்கு, பெரும் சுயாட்சி அல்லது தனி தமிழ் முதலாளித்துவ அரசை எதிர்பார்த்திருக்கின்றன.

2009 இல் புலிகளின் தோல்வி, முதன்மையாக ஒரு இராணுவ பிரச்சினை அல்ல, மாறாக அதன் முதலாளித்துவ-தேசியவாத முன்னோக்கின் விளைவாகும் என்று சோ.ச.க. எச்சரித்தது. இலங்கையின் எல்லா இடங்களிலும், சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கம் ஒருபுறம் இருக்க, தமிழ் தொழிலாளர் வர்க்கத்துக்கு அறைகூவல் விடுக்க புலிகள் இலாயக்கற்று இருந்தனர். பேரழிவுகரமான இறுதி இராணுவத் தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கையில், அது "சர்வதேச சமூகம்" எனப்படும், கொழும்பின் போருக்கு ஆதரவளித்த தோடு அதன் அட்டூழியங்களை கண்டும் காணாதது போல் இருந்த அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட அதே சக்திகளுக்கு, பரிதாபகரமாக வேண்டுகோள் விடுத்தது.

கூர்மையடைந்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களுக்குள், குறிப்பாக சீனாவுடனான அமெரிக்க மோதலுக்குள் இலங்கை இழுபட்டுச் சென்றுள்ளதோடு கோவிட்-19 தொற்றுநோயால் மேலும் ஆழமடைந்துள்ள உலகளாவிய பொருளாதார நிலைமையினுள்ளும் மூழ்கிப் போயுள்ள நிலையில், யுத்தம் முடிவடைந்து பன்னிரண்டு ஆண்டுகளின் பின்னரும் இலங்கை ஆழ்ந்த அரசியல் நெருக்கடிக்குள் வழிநடத்தப்பட்டுள்ளது. உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் மோசமான சமூக நிலைமைகள் குறித்து அமைதியின்மை வளர்ந்து வருவதால், போரின்போது கட்டியெழுப்பப்பட்ட இராணுவமும் அதன் கொடூரமான வழிமுறைகளும் இப்போது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பயன்படுத்த திட்டமிடப்பட்டு வருகின்றன.

2008-09 உலக நிதி நெருக்கயின் பின்னணியிலேயே போர் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே போரின் பெரும் செலவுகள் மற்றும் அதன் பேரழிவுகளால் பொறிந்து போயிருந்த இருந்த இலங்கை பொருளாதாரம், இன்னும் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் நிதி உதவிக்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடியதுடன், அதன் சிக்கன நடவடிக்கை கட்டளைகளை நடைமுறைப்படுத்தியதுடன் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் எதிர்ப்பிற்கு எதிராக இராணுவ மற்றும் பொலிஸ் அடக்குமுறையை நாடியது.

அதே நேரத்தில், யுத்தத்திற்கு ஆயுதங்களையும் நிதியையும் வழங்கிய சீனாவுடனான இராஜபக்ஷவின் உறவுகளை அமெரிக்கா கடுமையாக எதிர்க்கின்றது. வாஷிங்டனில் இருந்து திட்டமிடப்பட்ட ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையில், 2015 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் இராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டார். ஐ.தே.க. மற்றும் முதலாளித்துவ தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) மற்றும் போலி இடது குழுக்களின் ஆதரவோடு மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தார்.

ஜனாதிபதி சிறிசேன மற்றும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த தேசிய ஐக்கிய அரசாங்கம், அதன் "நல்லாட்சி" மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது போன்ற வாக்குறுதிகளை விரைவாக கைவிட்டது. போரில் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தமை மற்றும் அதன் அட்டூழியங்கள் காரணமாக, சிறிசேன மற்றும் விக்ரமசிங்கவும் இராஜபக்ஷ ஆட்சியின் குற்றங்கள் குறித்து உண்மையான விசாரணை நடக்காது என்பதை உறுதிப்படுத்தினர். பொருளாதார நெருக்கடி ஆழமடைகையில், அவரது அரசாங்கமும் மீண்டும் சர்வதேச நாணய நிதியத்தின் பக்கம் திரும்பி, தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளுக்கு புதிய சுமைகளை திணித்து, சமூக அமைதியின்மையை அடக்குவதற்கு பொலிஸ்-அரசு வழிமுறைகளைப் பயன்படுத்தியது.

சிறிசேனவையும் விக்ரமசிங்கவையும் ஆட்சிக்கு கொண்டுவர ஒத்துழைத்த போலி-இடது குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள், தேசிய ஐக்கிய அரசாங்கத்தை முழுமையாகப் பாதுகாத்தன, வளர்ந்து வந்த வேலை நிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு உதவின. தமிழ் முதலாளித்துவத்தின் தலைமை பிரதிநிதியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஏறத்தாழ அரசாங்கத்தின் ஒரு பங்காளியாக இருந்தது.

தேசிய ஐக்கிய அரசாங்கம் அரசியல் ஸ்தாபகத்தை மேலும் துண்டு துண்டாக்குவதற்கு வழி வகுத்தது. ஆளும் வர்க்கத்தின் இரண்டு பிரதான கட்சிகளான ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.சு.க. ஆகியவை சிதறிப் போயின. மிகவும் நிலையற்ற இந்த சூழ்நிலையில், இராணுவம் மற்றும் பெருவணிகத்தின் கனிசமான பிரிவுகளின் ஆதரவுடன் கூடிய கோட்டாபய இராஜபக்ஷ, 2019 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற வெகுஜன அதிருப்தியைப் பயன்படுத்திக் கொண்டார். அதில் வாக்குகள் இனவாத அடிப்படையில் ஆழமாகப் பிரிக்கப்பட்டன. போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பான இராஜபக்ஷவுக்கு தமிழர்கள் வாக்களிக்கவில்லை என்றாலும், தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் ஒரு பகுதியாக புதிய சமூகச் சுமைகளை சுமத்திய ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர், சஜித் பிரேமதாசவுக்கு சிங்கள உழைக்கும் மக்கள் வாக்களிக்கவில்லை.

இராஜபக்ஷ மற்றும் அவருக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.), 270 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்த, 2019 ஈஸ்டர் ஞாயிறன்று உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதக் குழு நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களைச் சுரண்டிக்கொள்ள முடிந்தது. ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. “தேசிய பாதுகாப்பில்” உறுதியாக இருக்கும் ஒரு வலுவான மற்றும் நிலையான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதாக வாக்குறுதியளித்தது.

இலங்கை இப்போது இராஜபக்ஷ சகோதரர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இவர்கள் போரின் இறுதி மாதங்களில் இராணுவத்தின் குற்றங்கள் மற்றும் அட்டூழியங்களுக்கு மிகப் பெரிய பொறுப்பைக் கொண்டிருக்கும் இரண்டு நபர்கள். இதுபற்றி தொழிலாள வர்க்கம் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆழ்ந்த மற்றும் சமூக நெருக்கடிக்கு மத்தியில், தொழிலாள வர்க்கத்தின் பெருகிவரும் எதிர்ப்பை அடக்குவதற்கு முதலாளித்துவம் கோட்டாபய இராஜபக்ஷவையும், அவரது "வலுவான அரசாங்கத்துக்கான" வாக்குறுதியையும் நம்பியுள்ளது.

பாதுகாப்பு செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னைவையும், தேசிய கோவிட் -19 கட்டுப்பாட்டு செயலணியின் தலைவராக இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவையும் நியமித்தமை உட்பட, ஜனாதிபதி இராஜபக்ஷ, அரசாங்கத்தின் முக்கிய பதவிகளுக்கு ஓய்வு பெற்ற அல்லது பதவியில் உள்ள தளபதிகளை நியமித்துள்ளார். அதே நேரத்தில், அவர் சிங்கள அதிதீவிரவாதக் குழுக்கள் மீது பெரிதும் தங்கியிருப்பதுடன், தமிழர்-விரோத மற்றும் முஸ்லீம்-விரோத பேரினவாதத்தைத் தூண்டுவதற்கு உதவியுள்ளார்.

இனவாத அரசியலின் விளைவாக ஏற்படும் பேரழிவுகளிலிருந்து தொழிலாளர்கள் தேவையான அரசியல் படிப்பினைகளை பெற வேண்டும். பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களின் படுகொலைக்கு தலைமை தாங்கிய கோட்டாபய மற்றும் மஹிந்த இராஜபக்ஷ, தொழிலாள வர்க்கத்திற்கும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கும் எதிராக அதே கொடூரமான வழிமுறைகளைப் பயன்படுத்த தயங்கப் போவதில்லை.

போருக்கு காரணமான சிங்கள பௌத்த மேலாதிக்கம் மற்றும் தமிழ் பிரிவினைவாதம் ஆகிய அனைத்து வகையான தேசியவாதத்தையும் பேரினவாதத்தையும் நிராகரிக்காமல் தொழிலாள வர்க்கம் அதன் எந்தவொரு ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளையும் பாதுகாக்க முடியாது. முதலாளித்துவ வர்க்கம், அவர்களின் கூட்டு ஒடுக்குமுறையாளர்கள் மற்றும் அது காலூன்றி இருக்கும் இலாப நோக்கு அமைப்பு முறைக்கு எதிரான ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்தின் மூலம் மட்டுமே தொழிலாளர்களால் கிராமப்புற மக்களை தங்கள் பக்கம் வென்று, ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காக போராட முடியும். அத்தகைய அரசாங்கம் தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, செல்வந்தர்களின் இலாபத் தேவைகளுக்காக அன்றி, பெரும்பான்மையினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்தும் அமைப்பாக இருக்கும்.

சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே இந்தத் வேலைத் திட்டத்திற்காகப் போரடுகிறது. சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்துகொள்ளுமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

Loading