தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளும் அப்பாவி தமிழ் மக்களும் படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து 12 ஆண்டுகள்

தமிழ் தேசியவாதிகள் தொழிலாளர்களை பிளவுபடுத்துவதற்காக இலங்கை போர் குறித்த ஏகாதிபத்திய-ஆதரவு பொய்களை விதைக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12வது நினைவுதினம் நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், சென்ற மாதத்தில், இலங்கையின் உள்நாட்டுப் போரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களின் சங்கம் இலங்கையின் வட மாகாணத்திலுள்ள வவுனியா மாவட்டத்தில் வீதியோர ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது. 2009 இல் இந்த போர் முடிவடைந்திருந்த நிலையில், 2015 முதலாக இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் 1500 நாட்களுக்கு மேலாக நடக்கின்றன. கடுமையான போலிஸ் தடைகளையும் மீறி நூற்றுக்கணக்கான மக்கள் இவற்றில் கலந்துகொண்டு வந்துள்ளனர்.

இவர்களில் பலரும் வயதானவர்கள்; அவர்கள் தங்களது வறுமையையும் முதுமையையும் மீறி, காணாமல் போன தங்களது அன்புக்குரியவர்களது புகைப்படங்களை உயர ஏந்தி, அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியப்படுத்தும்படி கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

இப்போராட்டத்தில் ஈடுபட்ட 80க்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் தலைவிதியை அறியாமலே இறந்துள்ளனர். அத்தோடு இராணுவத்திடம் தமது உறவினரை நேரடியாக கையளித்ததற்கு இருந்த சாட்சியங்களும் அழிந்து போகின்றன.

ஏப்ரல் 15 அன்றான ஒரு வீதியோர ஆர்ப்பாட்டத்தில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியை (TNPF) சேர்ந்தவரும் வவுனியா பிரஜைகள் குழுவின் ஒரு உறுப்பினருமான கோபாலகிருஷ்ணன் ராஜ்குமார் உதிர்த்த பிதற்றல் கருத்துக்களில், இலங்கையிலும் அதனைத் தாண்டியும் தொழிலாளர்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகள் கூர்மையாக வெளிப்பட்டன. மில்லியன் கணக்கான உயிர்கள் உலகளாவிய கோவிட்-19 பெருந்தொற்றினால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன மற்றும் சீனாவுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இந்திய மிரட்டல்கள் வளர்ந்து செல்கின்றன என்ற நிலைக்கு மத்தியிலும் கூட, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கு தமிழ் முதலாளித்துவ அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்படுகின்ற அரசியல் பொய்களுக்கான ஆகச்சிறந்த உதாரணமாக ராஜ்குமாரின் கருத்துக்கள் அமைந்துள்ளன.

இலங்கை கொழும்பில் ஒரு வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து Kelanitissa மின் உற்பத்தி நிலையத்திற்கு வெளியே இலங்கையின் இராணுவத்தினர் ரோந்து சுற்றுகின்றனர். அக். 29, 2008 புதன். (AP Photo/Eranga Jayawardena)

பெருந்தொற்றைக் குறித்தோ போர் அச்சுறுத்தலைக் குறித்தோ எதுவும் வாய்திறக்காத ராஜ்குமார், அதற்குப் பதிலாய், அவரது முன்னோர்களைப்போலவே, இலங்கையின் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு எதிரான ஒரு இனரீதியான வசைமாரியை பொழிந்தார். இலங்கையிலான தேசியப் பிரச்சினை குறித்து பேசுகையில், “எந்தவொரு தீர்வையும் அடைவதற்கு, தமிழர்களுக்கு மூன்று தடைகள் இருக்கின்றன. முதலாவது புத்தமதகுருக்கள், இரண்டாவது சிங்கள அரசியல்வாதிகள் இறுதியாக சிங்களப் பொதுமக்கள், அவர்கள் எப்போதும், சிங்கள இனவெறி அரசியல்வாதிகளையே தேர்ந்தெடுக்கின்றார்கள்” என தமிழ் இனவெறி வாந்தியை எடுத்தார்.

அதன்பின் ராஜ்குமார், தமிழ் மக்கள் தங்களது பிரச்சினைகளை தீர்க்க வாஷிங்டன், புது டெல்லி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு கூறினார். அவர் தெரிவித்தார், “நமது போராட்டத்தில் அமெரிக்கா தலையீடு செய்ய வேண்டும் என 2017 பிப்ரவரி முதலாக நாங்கள் கேட்டு வருகிறோம்.... இனப்படுகொலையில் இருந்தும் ஒடுக்குமுறையில் இருந்தும் தமிழர்களை மீட்பதற்கு அமெரிக்க உதவியை நாங்கள் கூட்டாக கேட்டு வருகிறோம்.” TNPF இன் ஏகாதிபத்திய ஆதரவு நோக்குநிலையை சுட்டிக்காட்டும் விதமாக, “பொருத்தமான அரசியல் தீர்வையும் பொருளாதார வளர்ச்சியையும் அடைவதற்கு தமிழர்களுக்கு உதவ அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா தலையிடுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என அறிவித்தார்.

2009 முள்ளிவாய்க்கால் படுகொலையானது, 21 ஆம் நூற்றாண்டில் மனிதகுலத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட முக்கிய குற்றங்களில் ஒன்றாகும். இந்தக் குற்றத்திற்கான பொறுப்பை, இந்தப் படுகொலையை ஆதரித்த ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ சக்திகளிடம் இருந்து, இதற்கு எந்தவிதத்திலும் காரணமல்லாத அப்பாவி சிங்கள உழைக்கும் மக்கள் மீது திருப்பி விடும் இழிந்த நோக்கம் கொண்டதாய் ராஜ்குமாரின் கருத்துக்கள் இருந்தன. இந்த இரத்தக்களரி படுகொலையானது இலங்கை முதலாளித்துவ ஆட்சி மற்றும் ராஜ்குமார் பாதுகாக்கும் உலக முதலாளித்துவ அமைப்புமுறை ஆகியவற்றின் குற்றவியல் தன்மையின் மீதான ஒரு உலுக்கும் அம்பலப்படுத்தலாக இருந்தது.

ராஜ்குமாரும் தமிழ் தேசியவாதிகளும் கூச்சமில்லாமல் பொய்யுரைப்பதுபோல, இலங்கை முதலாளித்துவ ஆட்சியால் வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டவர்களில் வெறும் தமிழ் இளைஞர்களும் தொழிலாளர்களும் மட்டும் இருக்கவில்லை. 1983-2009 இலங்கைப் போரின் போது 200,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போகச் செய்யப்பட்டனர். ஐ.நா மதிப்பீட்டின் படி, 2009 இல் முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் படுகொலையில் மட்டும், 40,000க்கும் அதிகமான அப்பாவித் தமிழ் மக்கள் கொத்து குண்டுகளாலும் ஆட்டிலறி தாக்குதல்களாலும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அத்துடன்கூடவே, 1971 இல் முதலாவது JVP கிளர்ச்சியின் போதும் 1987-90 இரண்டாவது கிளர்ச்சியின் போதும் 100,000க்கும் அதிகமான சிங்கள இளைஞர்களும் வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டிருந்தனர்.

அத்தனை இனங்களையும் சேர்ந்த உழைக்கும் மக்களுக்கு எதிராக இலங்கை முதலாளித்துவ அரசால் நடத்தப்பட்ட பாரிய படுகொலையானது முதலாளித்துவ தேசியவாதத்தின் திவால்நிலை மீதான ஒரு அம்பலப்படுத்தலைக் கொண்டுள்ளது. 1980களின் பிற்பகுதி தொடங்கி இலங்கையில் 60,000 முதல் 100,000 பேர் வரை காணாமல் போனதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 30 ஆண்டு கால அமெரிக்க-தலைமையிலான போர்கள் மற்றும் ஆக்கிரமிப்பினால் சிதைக்கப்பட்ட ஈராக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு அடுத்து உலக அளவில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்த வரலாற்றை புறந்தள்ளிவிட்டு, ராஜ்குமார், ஒட்டுமொத்த சிங்கள மக்களின் மீது கண்டனத்தை சுமத்துகிறார்; இத்தகைய பாரிய படுகொலைகளுக்கு ஒரு தீர்வு காண நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளிடமும் புது டெல்லியிடமும் விண்ணப்பம் செய்கிறார். இதே சக்திகள் தான், கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாட அனுமதித்து கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்கள் அவற்றின் எல்லைகளுக்குள்ளாக உயிரிழப்பதற்கு இட்டுச்சென்றிருக்கும் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” சமூக படுகொலை கொள்கைகளை செயல்படுத்தி வந்திருக்கின்றன. இலங்கையில் ”சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கைகள் இப்போது இந்தியாவை உலுக்கிக் கொண்டிருப்பதைப் போன்றதொரு அதிகரிப்புக்கு அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன என எச்சரிப்பதற்குப் பதிலாக, TNPF, இந்தியாவின் இந்து மேலாதிக்கவாத அரசாங்கத்தை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.

சிங்கள மக்களுக்கு எதிரான ராஜ்குமாரின் சேறடிப்புக்கள் அலட்சியத்துடன் புறந்தள்ளுவதைத் தவிர்த்து வேறெதற்கும் தகுதியானவை அல்ல. முதலாவதாய், 2009 படுகொலையின் போது அதிகாரத்தில் இருந்த மஹிந்தவின் சகோதரரான ஜனாதிபதி கோத்தபாய இராஜபக்‌ஷவிற்கு தமிழர்கள் மத்தியில் நிலவும் பாரிய வெறுப்புக்கு மோசடியான முறையில் விண்ணப்பம் செய்வதற்கு ராஜ்குமார் முயற்சிக்கிறார். ஆனால் முந்தைய 2015-19 “நல்லாட்சி” அரசாங்கத்தின் உழைக்கும் மக்கள் விரோத, சிக்கன நடவடிக்கை ஆதரவு கொள்கைகளின் சுமையால் தான் 2019 இல் இப்போதைய இராஜபக்‌ஷவிற்கு சிங்கள மக்கள் பலரும் வாக்களித்தனர்.

சிறிசேன அரசாங்கம், இராஜபக்‌ஷ குடும்பத்தின் சீனாவுடனான உறவுகளை குறிவைத்து, புதுடெல்லி மற்றும் இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஆதரவுடன், அமெரிக்க-தலைமையில் நடத்தப்பட்ட ஒரு திரைமறைவு ஆட்சி மாற்ற நடவடிக்கையின் மூலமாக அதிகாரத்திற்கு வந்திருந்தது.

உண்மையில், சீர்திருத்தங்களுக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கும் “நல்லாட்சி” அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் பொறிந்துபோனதற்குப் பின்னர், 2015 இல் தான் இப்போது நடக்கும் போராட்டங்கள் தொடங்கப்பட்டிருந்தன. உலகெங்கும் “காதலர் தினம்” என பலராலும் கொண்டாடப்படுகின்ற பிப்ரவரி 14 அன்று, இலங்கையில் காணாமல் போனவர்களது குடும்பங்கள் தங்களது நேசத்திற்குரியவர்களின் நினைவாக, “காணாமல் போன நேசத்திற்குரியவர்களின் தினம்” என்று அதனை அறிவித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் கொழும்பில் உள்ள பிரதமர் மஹிந்த இராஜபக்‌ஷ மற்றும் ஜனாதிபதி கோத்தபய இராஜபக்‌ஷவின் அலுவலகங்களை நோக்கி பேரணி நடத்தினர்.

இரண்டாவதாக, ராஜ்குமாரின் நேர்மையற்ற முதலாளித்துவ தேசியவாத விண்ணப்பங்களை ஒரு மையமான முரண்பாடு அடையாளப்படுத்துகிறது. 2009 முள்ளிவாய்க்கால் படுகொலையை அவர் கண்டனம் செய்கின்ற அதேநேரத்தில், அப்படுகொலை நடக்க உதவிய அதே முதலாளித்துவ சக்திகளின் மீது நம்பிக்கை வைப்பதற்கே வடக்கு, கிழக்கிலுள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அவர் அழைப்புவிடுக்கிறார். உண்மையில், 2000 இல் ஆனையிறவில் ஒரு அழிவுகரமான தோல்வியை இலங்கை இராணுவம் சந்தித்திருந்த நிலையில், அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் இந்திய ஆளும் உயரடுக்கின் நிதிரீதியான, இராஜதந்திரரீதியான, உபகரணரீதியான உதவி இல்லாமல் 2009 படுகொலையை அதனால் ஒருபோதும் நடத்தியிருக்க முடியாது.

முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு முன்பாக ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் இந்தியாவிடம் இருந்து கிடைத்த ஆதரவைக் குறித்து மஹிந்த இராஜபக்‌ஷவே கூறிய சிடுமூஞ்சித்தனமான கருத்துக்களில் இது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. World Is One News (WION) ஊடகத்திடம் சென்ற ஆண்டு பேசுகையில், இராஜபக்‌ஷ கூறினார், “இது மனிதாபிமானத்திற்கான போராக இருந்தது. இந்தியா சாத்தியமான ஒவ்வொரு வழியிலும் எங்களுக்கு உதவியது. நாங்கள் அதனை விளம்பரப்படுத்த விரும்பவில்லை, ஊடகங்களிடம் அதிகமாகக் கூறவில்லை. சீனாவும் பாகிஸ்தானும் மட்டுமல்ல, பிரிட்டனும் அமெரிக்காவும் கூட எங்களுக்கு உதவின.”

முள்ளிவாய்க்கால் படுகொலையில் அமெரிக்க-இந்திய உடந்தையை விக்கிலீக்ஸ் கேபிள்கள் அம்பலப்படுத்துகின்றன

முள்ளிவாய்க்காலில் தமிழ் தேசியவாத விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளும் அப்பாவித் தமிழ்மக்களும் பாரிய எண்ணிக்கையில் படுகொலை செய்யப்பட்டதில் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் கூட்டாளிகளும் உடந்தையாக இருந்ததை சந்தேகத்திற்கிடமின்றி ஸ்தாபிக்கின்ற, இராஜபக்‌ஷவின் ஒப்புதல் வாக்குமூலத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க இரகசிய இராஜதந்திர கேபிள்கள் ஊர்ஜிதப்படுத்துகின்றன.

ஹிலாரி கிளிண்டனின் “நம்பிக்கை மற்றும் விழுமியங்களுக்கான குரு” (“faith and values guru”) என அறியப்பட்ட ஒரு பிரச்சாரகரான பேர்ன்ஸ் ஸ்ட்ரைடர் (Burns Strider) ஹிலாரி கிளிண்டனுக்கு 2009 மே 4 அன்று அனுப்பியிருந்த ஒரு மின்னஞ்சலில் கூறினார்: “புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும், அதற்காக தனிப்பட்ட மக்கள் மீது இலங்கை அரசாங்கத்தினால் நிகழ்த்தப்படும் எந்த பக்கவாட்டு சேதாரமும் ஏற்புடையது என்றே உலக வங்கி மற்றும் IMF இரண்டு தரப்பிலும் மற்றும் களத்திலிருப்பவர்களும் நம்புகிறார்கள் என்றே நான் கருதுகிறேன்....”

கசிந்த இன்னொரு இரகசியச் செய்தி, 2008 ஆகஸ்ட் மாதத்தில் அப்போது இலங்கைக்கான அமெரிக்க தூதராக இருந்த ரோபர்ட் பிளேக்கிற்கும் ஐநாவிற்கான இந்திய தூதராக இருந்த டி.எஸ். திருமூர்த்திக்கும் இடையில் நடைபெற்றதொரு விவாதத்தின் விபரங்களை அளிக்கிறது. வாஷிங்டனும் புது டெல்லியும் LTTE ஐ நோக்கிய தங்களது பொதுவான குரோதத்தை விவாதித்ததோடு, அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொல்வதற்கான கருத்துக்களையும் வழிமொழிந்தன, பின் ஒரு வருட காலத்திற்குள்ளாக முள்ளிவாய்க்கால் படுகொலையில் பிரபாகரன் கொல்லப்பட்டார்.

அந்த செய்தியறிக்கை கூறுகிறது: ”’பிரபாகரன் முடிக்கப்பட வேண்டும் என்று இராஜபக்‌ஷ விரும்புகிறார்’ என திருமூர்த்தி கூறியதோடு LTTE தொடர்ந்தும் ஐரோப்பாவில் இருந்து நிதியாதாரம் பெற்றுவருவதையும் சுட்டிக்காட்டினார். இது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் கவலையளிக்கும் விடயமாக இருப்பதாகவும், மேற்குக்கு இது ஒரு நம்பகத்தன்மைக்கான பிரச்சினை என்றும் அவர் தெரிவித்தார். LTTE க்கு வரும் நிதியாதாரத்தை துண்டித்தால் தான் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வர அது ஊக்கமளிக்கும் என்பதை அவர் வலியுறுத்தினார். பிரபாகரன் கைது செய்யப்படுவதை அல்லது கொல்லப்படுவதைக் கண்டு அமெரிக்கா மகிழ்ச்சி கொள்ளும் என்றும், ஒரு அதிகாரப் பகிர்வு உடன்பாட்டில் முன்னேற்றம் காண்பதில், பிரபாகரனின் இறப்பை இராஜபக்‌ஷ அனுகூலமாக்கிக் கொள்ள அமெரிக்காவும் இந்தியாவும் அனுமதிக்கக் கூடாது என்றும் தூதர் பிளேக் தெரிவித்தார்.”

இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் இருக்கும், இலங்கை தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகளாக காட்டிக்கொள்ளும் தமிழ் முதலாளித்துவக் கட்சிகளும் இந்தப் படுகொலைக்கு உடன்பட்டன என்று இந்த அறிக்கையை தயாரித்த அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர் என்பது முக்கியத்துவமுடையதாகும். “தமிழ்நாட்டில் கணிசமான LTTE ஆதரவு என்பது இப்போது இல்லை எனினும் அகதிகள் வருகை அதிகரிக்கும்போது அந்நிலைமை மாறக் கூடும்” என்று திருமூர்த்தி கூறினார்.

அவர்கள் மேலும் கலந்துரையாடுகையில், “இலங்கை நிலவரம் குறித்து தமிழ்நாட்டில் இருந்து இந்திய மத்திய அரசாங்கத்துக்கு எந்த அழுத்தமும் இருப்பதை மறுத்த திருமூர்த்தி, இப்போது LTTEக்கு அங்கே அனுதாபம் இருக்கவில்லை என்று கூறினார். தமிழ்நாட்டிற்குள் அகதிகள் அதிகமான எண்ணிக்கையில் வரும்போது மட்டுமே இந்நிலையில் மாற்றம் உண்டாகக் கூடும் என்று அவர் மேலும் கூறினார்.”

அதாவது, திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) அல்லது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (ADMK) சேர்ந்த முதலாளித்துவ அரசியல்வாதிகளும் ஒரு படுகொலை நடத்தப்படுவதற்கு ஆதரவாகவே இருந்தனர், அட்டூழியங்களும் அகதிகளின் ஒரு பாரிய வருகையும் இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் தூண்டக்கூடிய ஒரு குரலைக் குறித்து மட்டுமே அவர்கள் அஞ்சினர்.

இலங்கை அரசாங்கம் உட்பட “களத்தில்” உள்ள தமிழ் தேசியவாதிகளும், இந்திய அரசாங்கமும், கருணாநிதி உட்பட தமிழ் நாட்டு தேசியவாதிகளும் அப்பாவிமக்கள் மீது நடக்கவிருக்கும் படுகொலைகளையும் காணாமலாக்கல்களையும் ஏற்கெனவே அறிந்திருந்தனர் என்பதை இந்த கேபிள் செய்திகள் நிரூபிக்கிறது.

உள்நாட்டு போர் 83ல் ஆரம்பிக்கையில், அதை இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களின் பேரில் சுரண்டிக்கொள்வதன் பாகமாக தென்னிந்திய கடற்கரையை எந்தவித கட்டுப்பாடுமின்றி திறந்துவிட்ட மத்திய மற்றும் தமிழ் நாட்டு ஆளும்தட்டு, 83 காலத்தையும் விட இலட்சக் கணக்கானோரின் உயிர் பாதுகாப்புக்கு அவசியமாகியிருந்த 2009 இன் வேளையில் காங்கிரசும் கருணாநிதி தலைமையில் திமுக வும் ஒரு ஈ கூட உட்புகாத வகையில் இரும்பு கண்காணிப்பிட்டு மூடிக்கொண்டது.

LTTE மீதும் பொதுமக்கள் மீதுமான இராஜபக்‌ஷ ஆட்சியின் படுகொலைக்கு இந்திய ஆதரவு என்பது, மூலோபாய மற்றும் வர்த்தக முதலீடுகளுக்கான பேரம்பேசும் பொருளாக ஆகியிருந்தது. இலங்கையில் சீனாவின் செல்வாக்கின் இடத்தில் அதனினும் அதிகமான செல்வாக்கைப் பெறும் கவலையில் இந்தியா இருந்தது என்பது மட்டுமல்ல, போரை முடிவுக்குக் கொண்டுவந்து LTTE போராளிகள், பொதுமக்களின் இரத்த ஈரத்தின் மீது வர்த்தக சாம்ராஜ்யங்களை ஸ்தாபிப்பதன் மூலம் மிகப்பெரும் இலாபங்களைக் குவிப்பதற்கு தமிழ்நாட்டின் முதலாளித்துவ வர்க்கம் எதிர்பார்த்திருந்தது.

2009 படுகொலையில் உதவியதற்காக தமிழ்நாட்டின் ஆளும் உயரடுக்கிற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, இராஜபக்‌ஷ, திமுக நாடாளுமன்றவாதியான டி.ஆர்.பாலு மற்றும் முன்னாள் தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதியின் மகளான கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கொண்ட ஒரு குழுவை அழைத்து, அவர்களுக்கு பரிசுகள் வழங்கியதோடு எதிர்கால முதலீடுகளைக் குறித்தும் விவாதித்தார். பெருமளவுக்கு திமுக அரசியல்வாதியான ஜெ.ஜெகத்ரட்சகன் குடும்பத்திற்கு சொந்தமான ஒரு நிதியமான சில்வர் பார்க் இண்டர்நேஷனல், இலங்கையில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்தது, ஹம்பந்தோட்டையில் எண்ணெய்சுத்திகரிப்பு துறையில் 3.85 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ததும் இதில் அடங்கும். இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் பி.சிதம்பரத்தின் மகன் கார்த்தியும் இலங்கையின் ஆடம்பர விடுதிகளில் முதலீடு செய்துள்ளார்.

TNPF தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து 2012ல் இங்கிலாந்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கருத்து தெரிவிக்கையில், LTTE ஐ படுகொலை செய்வதற்கான திட்டங்களைக் குறித்து அவர் சார்ந்த அமைப்பு உட்பட ஏராளமான தமிழ் தேசியவாதக் கன்னைகள் ஏற்கெனவே ஏகாதிபத்திய சக்திகளால் கலந்தாலோசனை செய்யப்பட்டிருந்தன என்ற மெய்சிலிர்க்கவைக்கும் உண்மை வெளிப்பட்டது.

தமிழ் நாட்டு பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி அர்ஜுன் சம்பத்துடன் மேடையை பகிர்ந்து கொண்ட பொன்னம்பலம், படுகொலை குறித்து ஏகாதிபத்திய சக்திகளுடன் தான் நடத்திய திரைமறைவு பேச்சுவார்த்தைகள் குறித்து பின்வரும் வசனங்களைக் கூறினார்.

யூடியூபில் பொதுப் பார்வைக்கு கிடைக்கத்தக்கதாக இருக்கின்ற அந்த பேச்சில், பொன்னம்பலம், படுகொலை குறித்து பிரதான சக்திகளுடன் தான் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தியதையும், உழைக்கும் மக்களின் முதுகிற்குப் பின்னால் ஒரு உடன்பாட்டிற்கு அவற்றுடன் சேர்ந்து தான் வேலை செய்ததையும் வெளிக்காட்டுகிறார். இது கிட்டத்தட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையில் உடந்தையாக இருந்ததை ஒப்புக்கொள்வதற்கு நிகரானதாய் உள்ளது.

அவர் அறிவித்தார்:

அந்தக் குற்றங்கள் இழைக்கப்படுகின்ற வேளையில், நாடாளுமன்றத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் உறுப்பினர்களாக நாங்கள் சர்வதேச சமூகத்துடன் செயற்பட்டுக் கொண்டிருந்தபோது, எங்களுக்கு இரண்டு உத்தரவாதங்கள் வழங்கப்பட்டன. முதலாவது, அங்கே ஒரு இரத்தக்களரி இருக்குமானால், இலங்கை அரசுக்கு தீவிரமான பின்விளைவுகள் இருக்கும் என்பதான உத்தரவாதம் தமிழ் மக்களுக்கு அளிக்கப்பட்டது. வழங்கப்பட்ட இரண்டாவது உத்தரவாதம் என்னவென்றால், புலிகள் -சர்வதேச சமூகத்தின் கண்களில் ஒரு பயங்கரவாத அமைப்பாக இருப்பதால்- அந்த அமைப்பு வரைபடத்திலிருந்து நீக்கப்பட்டவுடன், தமிழ் மக்களுடைய தங்கள் உரிமைகளுக்கான போராட்டம் அங்கீகரிக்கப்படும், அமைதி உண்டாகும்" என்பதாகும் என்றார்.

தமிழ் தேசியவாதிகள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஏன் காட்டிக்கொடுத்தனர்?

இந்தக் காட்டிக்கொடுப்பு, தமிழ் தேசியவாத அரசியல்வாதிகளின் தந்திரோபாயத் தவறுகளது விளைபொருளன்று, மாறாக ஒரு அரசியல் நோக்குநிலையின் திவால்நிலையால் விளைந்ததாகும். முழுக்க இலங்கையின் எல்லைகளுக்குள்ளான ஆயுத நடவடிக்கை எனும் தமிழ் தேசியவாதிகளது முன்னோக்கானது, மற்ற பிராந்திய முதலாளித்துவ சக்திகளுடன், குறிப்பாக இந்தியாவுடன், ஒப்பந்தங்களை செய்வதை நோக்கிய ஒரு நோக்குநிலையை உடன்கொண்டிருந்தது. பல்வேறு தமிழ் தேசியவாதக் குழுக்களும் இந்திய அரசிடம் இருந்தும் இந்திய ஸ்ராலினிசக் கட்சிகளிடம் இருந்தும் ஆயுதங்கள் மற்றும் பயிற்சியுடன் உதவியை எதிர்நோக்கியிருந்தன. கடந்த அரைநூற்றாண்டு காலத்தின் போதான பொருளாதார பூகோளமயமாக்கத்தின் தாக்கத்தின் கீழ், இந்த சக்திகள் அனைத்தும் வலதின் பக்கம் வெகுதூரம் ஒன்றாக நகர்ந்து விட்டிருந்தன.

1972 இல் இலங்கை முதலாளித்துவ அரசுக்கு ஒரு புதிய ஜனநாயக விரோத அரசியலமைப்பு சட்டம் செயல்படுத்தப்பட்டு அடுத்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. சிங்களம் மட்டும் கொள்கையை தழுவியமை, புத்தமதத்தை அரச மதமாக ஆக்கியமை மற்றும் பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்களுக்கு அனுமதிக்கு பாரபட்சம் காட்டியமை, தமிழ் அரசாங்க உத்தியோகத்தர்கள் சிங்கள மொழி கற்க கட்டாயப்படுத்தியமை ஆகியவற்றை உத்தியோகபூர்வமாக்கியதன் மூலம், இலங்கையில் வகுப்புவாத வன்முறை கட்டுப்பாடற்று வெடிப்பதற்கு இது பாதையை திறந்து விட்டது. லங்கா சம சமாஜக் கட்சியின் ஆதரவுடன் வரைவு செய்யப்பட்ட இது, LSSP ட்ரொட்ஸ்கிசத்தை மறுதலித்தமை மற்றும் 1964 இல் முதலாளித்துவ பண்டாரநாயக அரசாங்கத்தில் அது நுழைந்தமை ஆகியவற்றின் நஞ்சூட்டப்பட்ட விளைபொருளாக இருந்தது.

எனினும், இலங்கை தொழிலாள வர்க்கத்தின் பிரதான கட்சியாக இருந்து வந்த கட்சியால் ட்ரொட்ஸ்கிசத்திற்கு இழைக்கப்பட்ட இந்த மாபெரும் காட்டிக்கொடுப்புக்கு இரண்டு தனித்துவமிக்க விமர்சனங்கள் இருந்தன. இந்த இரண்டு விமர்சனங்களும் நேரெதிரான வர்க்க நிலைப்பாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தின.

1968 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கை பிரிவாக ஸ்தாபிக்கப்பட்டிருந்த, சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) முன்னோடியான புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கழகம் (RCL), LSSP முதலில் பாதுகாத்திருந்து பின்னர் காட்டிக்கொடுத்திருந்த நிரந்தரப் புரட்சி முன்னோக்கினை பாதுகாத்து நின்றது. சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட போராட்ட பாரம்பரியங்களை அது தாங்கிப் பிடித்தது. ஆசியாவெங்கிலும் முதலாளித்துவத்தை தூக்கிவீசி சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கான ஒரு பொதுப்போராட்டத்தில் தொழிலாளர், ஒடுக்கப்பட்ட மக்களை ஐக்கியப்படுத்துவதன் மூலமாக மட்டுமே அன்றைய கூட்டரசாங்கத்தால் தூண்டிவிடப்பட்ட இன மோதல் வெற்றிகாணப்பட முடியும் என்று அது விளக்கியது.

தமிழ் தேசியவாதிகள், 1972 அரசியலமைப்பு சட்டத்தையும் LSSP இன் சந்தர்ப்பவாதத்தையும் கண்டனம் செய்த அதேநேரத்தில், அது வலதுபுறமிருந்தான விமர்சனமாக இருந்தது. 1977 வட்டுக்கோட்டை மாநாட்டின் தீர்மானத்தில், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF), "ஒரு மதச்சார்பற்ற, சோசலிச தமிழ் ஈழத்தில் மனிதனை மனிதன் சுரண்டும் நிலை தடைசெய்யப்படும்” என்று உறுதிகூறியிருந்தது என்னவோ உண்மை தான். ஆனால், அது தனது பிரிவினைவாத வேலைத்திட்டத்தை மூடிமறைப்பதற்கு பயன்படுத்திய இந்த அரைகுறை சோசலிச வாய்வீச்சுக்குப் பின்னால், 1947 இல் பிரிட்டனில் இருந்து நாடு உத்தியோகபூர்வ சுதந்திரம் பெற்றபோது ஏகாதிபத்திய சக்திகளுக்கும் உள்நாட்டு முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையில் உடன்பாடு காணப்பட்டிருந்த முதலாளித்துவ தேசிய அரசு அமைப்பு முறையை பாதுகாப்பதை நோக்கிய ஒரு நோக்குநிலை அமைந்திருந்தது.

கறுப்பு ஜூலையிலான தமிழர்-விரோத கலவரங்களைத் தொடர்ந்து, 1983 இல் இலங்கையில் உள்நாட்டுப்போர் வெடித்தபோது, இந்தப் போருக்கு எதிரானதாகவும் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களின் ஜனநாயக உரிமைகளை ஒரேபோல பாதுகாத்து நின்ற ஒரேயொரு கட்சியாக RCL மட்டுமே இருந்தது. 1987 இல் புது டெல்லிக்கும் கொழும்புக்கும் மற்றும் தமிழ் தேசியவாதிகளுக்கும் இடையிலான உடன்பாட்டின்படி இலங்கையில் இந்திய தலையீடு நடந்தபோது, அதனையும் உழைக்கும மக்களின் நிலைப்பாட்டில் இருந்து RCL எதிர்த்தது. LTTE உள்ளிட அத்தனை தமிழ் தேசியவாதக் குழுவாக்கங்களும் இந்திய தலையீட்டை ஆரவாரமாக வழிமொழிந்தன. “நமது மக்களின் விடுதலைக்காகவும் வருங்கால பாதுகாப்புக்காகவும்” இந்திய இராணுவத்திடம் ஆயுதங்களை ஒப்படைக்க பிரபாகரன் உறுதியளித்தார்.

என்றபோதும், மூன்றாண்டு கால இந்தியத் தலையீடு ஒரு குருதிகொட்டிய படுதோல்வியில் முடிந்தது. இந்திய இராணுவத்திற்கு அந்த பிராந்தியம் குறித்தோ அல்லது உள்ளூர் மொழியோ தெரியாத நிலையில், அது உள்நாட்டின் தமிழ் தேசிய இராணுவத்தின் (முன்னர் இது குடிமக்கள் தொண்டர் படை என்று அழைக்கப்பட்டது) உதவியை நம்பியிருந்தது. ஆனால், இந்திய துருப்புகளும் தமிழ் தேசிய இராணுவமும் ஒருபுறம் LTTE இன்னொருபுறம், மற்றும் இலங்கைத் துருப்புகளுடனான ஒரு இரத்தக் களரியான முத்தரப்பு மோதல் வடக்கு, கிழக்கு இலங்கை மக்களுக்கு நாசகரமான பின்விளைவுகளைக் கொண்டிருந்தது.

இலங்கையில் இந்தியாவின் அமைதிப் படையால் (IPKF) உண்டான மனிதச் சேதங்களின் எண்ணிக்கையை மனித உரிமைகளுக்கான தமிழ் மையம் (TCHR) தொகுத்திருந்தது. அமைதிப்படையால் 8,118 பேர் கொல்லப்பட்டிருந்தனர், 4,184 பேர் காணாமல் போயிருந்தனர், 10,156 பேர் சித்திரவதை செய்யப்பட்டிருந்தனர், 3,507 பேர் பாலியல் வன்கொடுமைக்கு இலக்காக்கப்பட்டிருந்தனர், 15,422 பேர் காயமடைந்திருந்தனர், 550,250 பேர் இடம்பெயரத் தள்ளப்பட்டிருந்தனர். இந்திய ஆக்கிரமிப்பின் வேளையில் கொல்லப்பட்டவர்களில் RCL இன் ஆதரவாளரான கிருஷ்ணானந்தனும் இடம்பெற்றிருந்தார், யாழ்ப்பாணத்தில் ஒரு பிரசித்திபெற்ற பொருளாதாரப் பேராசிரியராக திகழ்ந்து அச்சமயத்தில் யாழ்ப்பாண மாணவர்களிடம் மதிப்புடையவராக இருந்தார். என்றபோதும் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு வழிகாட்டிகளாக செயற்பட்ட வரதராஜ பெருமாள் மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான தமிழ் தேசிய இராணுவத்தால் (TNA) அவர் படுகொலை செய்யப்பட்டார்.

1987 இல் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் இந்த கசப்பான அனுபவத்தில் இருந்து அடிப்படையான அரசியல் படிப்பினைகளை ICFIம் RCLம் தேற்றம் செய்தன. அக்கருத்தாத்தக்கங்கள், கடந்த மூன்று தசாப்தங்களின் நிகழ்வுகளில், குறிப்பாக தமிழ் தேசியவாதக் குழுக்கள் அத்தனையும் ஏகாதிபத்தியத்திடம் சரணடைந்ததில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளன. அந்த அறிக்கையானது, அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனவின் தேசியவாதத்தை மட்டுமல்லாது, LTTE இன் தேசியப் பிரிவினைவாதம் உருவாக்கியிருந்த முட்டுச் சந்தையும் கூட அம்பலப்படுத்தியது.

கொழும்பின் சம்மதத்துடன் நடத்தப்பட்ட இந்திய தலையீடு, நாசமிழைத்த ஒரு பேரிடராக மாறியது. தெற்கில் இலங்கை இராணுவம் சிங்கள மக்களது ஒரு எழுச்சியை ஒடுக்கிக் கொண்டிருந்ததும் வடக்கில் இந்திய இராணுவம் LTTE மற்றும் தமிழ் மக்களை தாக்கிக் கொண்டிருந்ததுமான வேளையில், ICFI இன் அறிக்கை விளக்கியது: “சிங்கள தேசிய இறையாண்மையை ஜெயவர்த்தனா பாதுகாக்கும் இலட்சணமும் தமிழர் சுதந்திரத்தை ராஜீவ் காந்தி பாதுகாக்கின்ற இலட்சணமும் அவர்கள் யாருக்காகப் பேசுவதாக கூறிக் கொள்கிறார்களோ அதே மக்களுக்கு எதிரான அவர்களது ஒன்றுபட்ட இராணுவ நடவடிக்கைகளின் அவலட்சணமான கண்ணை உறுத்தும் காட்சியாக, எதிர்பார்க்கத்தக்க விதத்தில், சீரழிந்திருக்கின்றன.”

இந்த நெருக்கடியின் வர்க்க வேர்களை அது விளக்கியது:

70 ஆண்டுகளுக்கும் முன்னர் லெனின் எச்சரித்தவாறாக, ஓர் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதலாளித்துவத்தின் தேசிய சுயநிர்ணய உரிமை பற்றிய எண்ணக்கரு என்னவெனில், தனது சொந்த பிரத்தியேக முன்னுரிமைகளை பாதுகாத்துக்கொள்வதும் மற்றும் ஒரு “சுதந்திரமான” நாட்டினுள் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் சுரண்டுவதற்கான மிகச் சிறப்பான நிலைமைகளை உருவாக்கிக்கொள்வதற்குமான நிலைப்பாட்டில் இருந்தே கருதிப்பார்க்கிறது.” இந்த சுயநலமானது புறநிலையாக, ஒரு வர்க்கமாக கூலி உழைப்பில் இருந்து உபரி மதிப்பை சுரண்டுவதன் மீது அதாவது தொழிலாள வர்க்கத்தை கீழ்ப்படுத்துவதன் மீது தனக்கு அடித்தளம் அமைத்துக் கொள்கிற முதலாளித்துவ வர்க்கத்தின் இயல்பில் வேரூன்றியதாக உள்ளது. விடுதலைப் போராட்டமானது முதலாளித்துவ ஆட்சிக்கு ஒரு அச்சுறுத்தலாக ஆகக் கூடும் என்ற அச்சத்தால் மிரட்சியுற்று, அது தொடர்ச்சியாக “ஒடுக்கப்பட்ட மக்களின் அணிதிரட்டலுக்கு வரம்புகளை இடுகிறது” அத்துடன் “தேசங்களை அவற்றின் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை செய்வதற்கு” அவசியமான “சர்வவியாபக தன்மையை அடைவதற்கு இயல்பிலேயே தகமையற்றதாக்கும் வகையில்” ஒரு “தேசிய புறநீங்கல்வாத பாதையை” பின்பற்றுகிறது என அனைத்துலகக் குழுவின் அறிக்கை விளக்கியது.

இந்திய துணைக் கண்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்ததற்குப் பின்னர் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பர்மா ஆகிய நாடுகளில் நடந்த நிகழ்வுகளைக் குறித்து ஒரு வரலாற்றுத் திறனாய்வை செய்த பின்னர், அது எழுதியது:

முதலாளித்துவ அரசுகளின் இற்றுக்கொண்டிருக்கிற கட்டமைப்பைக் கொண்டும், அவற்றின் செயற்கையான எல்லைகளது மூச்சுத்திணறடிக்கும் வரம்புகளுக்குள்ளாகவும், வெகுஜனங்களின் ஜனநாயக அபிலாசைகளும் சரி அல்லது அவர்களின் அடிப்படை பொருளியல் தேவைகளும் சரி பூர்த்தி செய்யப்பட முடியாது. இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பிந்தைய காலத்தில், ஒரேயொரு தேசிய அரசும் கூட அதன் பல்வேறு மொழி, மத மற்றும் இனக் கூறுகளது உண்மையான ஜனநாயக சமத்துவத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுவதற்கு ஏகாதிபத்தியம் அனுமதித்தது கிடையாது. ஏகாதிபத்திய அங்கீகரிப்புடனான “சுதந்திரம்” என்பது எப்போதும், ஜனநாயகக் கோட்பாடுகளின் ஒரு மரணகரமான சமரசத்தின் மீது கட்டியெழுப்பப்படும் அடித்தளங்கள் கொண்ட முறைதவறிய அரசுகளை உருவாக்குவதாகத் தான் அர்த்தமளித்து வந்திருக்கிறது.

அறிக்கையானது இலங்கையில் இனப் போருக்கு தனது சமரசமற்ற எதிர்ப்பை மறுஊர்ஜிதம் செய்த அதேவேளையில், “தமிழ் மக்களின் தீர்க்கப்படாத ஜனநாயகக் கடமைகள் சோசலிசத்திற்காக தொழிலாள வர்க்கம் நடத்துகின்ற ஐக்கியப்பட்ட சர்வதேசப் போராட்டத்தின் மூலமாக மட்டுமே சாதிக்கப்பட முடியும்” என்பதையும் வலியுறுத்தியது. சிங்கள மற்றும் தமிழ் தேசியவாதிகளது முன்னெடுப்புகளுக்கு எதிரான விதத்தில், அது, தெற்காசிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்தின் பாகமாக சிறிலங்கா, தமிழ் ஈழ சோசலிச அரசுகளின் ஒன்றியம் ஒன்றுக்கான போராட்ட முன்னோக்கை முன்வைத்தது.

இலங்கையில் ஒரு புதிய இந்திய தலையீட்டுக்கு தமிழ் தேசியவாதிகள் அழைப்பு விடுப்பதற்கு எதிராக

34 வருடங்களுக்கு பின்னரும் கூட, இந்த வரிகள் இலங்கையிலும் ஆசியா எங்கிலும் தொழிலாளர்கள் முகம்கொடுக்கும் அடிப்படையான அரசியல் பிரச்சினைகளை வெளிச்சம்போட்டுக் காட்டுபவையாக உள்ளன. முதலாளித்துவ பூகோளமயமாக்கம், நாடுகடந்த உற்பத்தி ஆகியவற்றின் அபிவிருத்தி மற்றும் 1991 இல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டமை ஆகியவற்றுடன், இந்த காலகட்டத்தின் போது மிகப்பரந்த பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் வேகமெடுத்து வந்திருக்கின்றன. ஆசியாவெங்கிலும் நூறு மில்லியன் கணக்கான மக்கள் தொழிலாள வர்க்க படையணியாக உற்பத்தியில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த மாற்றங்கள், முதலாளித்துவ சக்திகள் பெருந்தொற்றினை குற்றவியல்தனமாக கையாண்டதின் மூலம் தீவிரமடைந்துகொண்டிருக்கும் முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் திவால்நிலை மற்றும் விலைபோகும் தன்மை அத்துடன் பெருகும் போர் அபாயம் ஆகியவற்றை இன்னும் கூர்மையாக மேலெழுப்புகின்றன.

வகுப்புவாதப் போரில் LTTE தோல்விகண்டமை மற்றும் 2009 முள்ளிவாய்க்கால் படுகொலை ஆகியவையும் கூட பரந்த சர்வதேச அளவிலான மாற்றங்களது விளைபொருட்களாகவே இருந்தன. 23 ஆண்டுகால இராணுவத்திற்கு எதிரான போரின் காலத்தில், LTTE இலங்கை தமிழ் மக்களிடம் ஆதரவை இழக்கவில்லை. மீனவர்களது மீன்பிடிப்பில், விவசாயிகளின் அறுவடைகளில் அல்லது ஆசிரியர்களின் ஊதியங்களில் வரி இட்டு வருவாய் ஈட்டியபோதிலும், அது ஒரு இரத்தக்களரியான, முடிவில்லாத மோதலை மட்டுமே உருவாக்கியது. அதேநேரத்தில் சர்வதேச புவியரசியலில் ஏற்பட்ட பரந்த மாற்றங்களில் அது, தான் தவறாக கால் வைத்து விட்டிருந்ததைக் கண்டுகொண்டது.

அமெரிக்க ஏகாதிபத்தியம், ஈராக்கிற்கு எதிராக 1991 இல் தொடங்கிய வளைகுடாப் போரில் தொடங்கி மத்திய கிழக்கில் மில்லியன் கணக்கான மக்களைக் கொலைசெய்த தோல்வியடைந்த ஏகாதிபத்தியப் போர்களை நடத்திய வேளையில், பிராந்தியத்தில் அதன் நிலையை மேலுயர்த்துவதற்கு முயற்சியை மேற்கொண்டது. 1991 இல் உலகச் சந்தைகளுக்கு நாட்டைத் திறந்து விட்டது முதலாக, மிகவும் வலதின் பக்கம் நகர்ந்து விட்டிருந்த இந்திய முதலாளித்துவ வர்க்கத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு கூட்டாளியைக் கண்டுகொண்டது. 2005 இராணுவ ஒப்பந்தம் ஒன்றில் இந்தியா, சீனாவின் உயர்ந்துசென்ற பொருளாதாரத்திற்கு எதிரான வாஷிங்டனின் முக்கியமான பிராந்தியக் கூட்டாளியாக மாறுவதை நோக்கிய ஒரு திருப்பத்தை தொடங்கியது.

அமெரிக்காவும் இந்தியாவும், இராஜபக்‌ஷ ஆட்சியுடனான சீனாவின் கூட்டணிக்கு அஞ்சி, கொழும்பில் தங்கள் செல்வாக்கை தக்கவைப்பதற்காக, முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு உடன்பட்டன. படுகொலையில் ஏகாதிபத்திய சக்திகளும், இந்திய அரசும் மற்றும் பல்வேறு தமிழ் முதலாளித்துவ அரசியல்வாதிகளும் உடந்தையாக இருந்ததை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

எனினும் இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் பாரிய படுகொலையினாலோ, அல்லது இலங்கை இராணுவத்தின் நிலைநிறுத்தத்தினாலோ, முதலாளித்துவத்தின் கீழ் தீர்க்கப்பட முடியாதவையாக இருக்கின்ற தேசியப் பிரச்சினைகளை தீர்த்து விடவும் முடியவில்லை, அல்லது இந்த நிகழ்வுகளைக் குறித்து மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களின் மத்தியில் இப்போதும் கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருக்கும் நியாயமான கோபத்தை ஊமையாக்கி விடவும் முடியவில்லை.

வடக்கில் காணாமல் போனவர்களைப் படுகொலை செய்திருந்ததை இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்டு விட்டிருக்கிறது. 2020 ஜனவரியில், ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹன்னா சிங்கர் உடன் ஜனாதிபதி செயலகத்தில் நடந்த ஒரு சந்திப்பில், கோத்தபாய இராஜபக்‌ஷ “காணாமல் போயிருப்பவர்கள் உண்மையில் இறந்து விட்டிருக்கிறார்கள்” என்று முதன்முறையாக அறிவித்ததோடு “காணாமல் போன இவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஆணவத்துடன் அறிவித்தார்.

இந்திய ஆக்கிரமிப்பு கொடூரங்களின் போது இலங்கையின் வடகிழக்கில் முதலமைச்சராக இருந்த இந்திய கைகூலி வரதராஜப் பெருமாள், அவரது பங்கிற்கு, இவ்வாறு தெரிவித்தார்: “காணாமல் போனவர்கள் உயிருடன் இல்லை என்பது அவர்களது உறவினர்களுக்கு நன்றாகவே தெரியும். சர்வதேச விசாரணை என்பதெல்லாம் சாத்தியமில்லாதது, ஜனாதிபதி அவர்களுக்கு இழப்பீடு வழங்குவார் அவர்களது பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பார்.” அதாவது, காணாமல் போனவர்களது குடும்பங்கள் கோத்தபாயவின் அதிர்ச்சியூட்டும் அறிவிப்பைக் கொண்டும், அவர் பார்த்து கொடுக்கின்ற இரத்தக்கறை படிந்த பணத்தைப் பெற்றுக்கொண்டும் திருப்தி காண வேண்டும் என்றும் அவர் ஆலோசனையளிக்கிறார்.

இப்போதும் இராஜபக்‌ஷ சகோதரர்களின் எதிரிகளாக காட்டிக்கொள்ளக் கூடியவர்களும் 2015 இல் அமெரிக்க தலைமையிலான ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையில் அமர்த்தப்பட்ட சிக்கன-நடவடிக்கை ஆதரவு “நல்லாட்சி” அரசாங்கத்தினை ஆதரித்தவர்களுமான தமிழ் தேசியவாதிகள், படுகொலையில் உடந்தையாக இருந்த முதலாளித்துவ சக்திகளுடன் தங்களது உறவுகளை ஆழப்படுத்தியுள்ளனர்.

சென்ற குளிர்காலத்தின் போது, தமிழ் தேசியவாத அரசியல்வாதிகளில் பலரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியுடன் ஒரு அரசியல் மற்றும் இராணுவக் கூட்டணிக்கு மோசமான விண்ணப்பத்தை செய்தனர். இலங்கை பாரதிய ஜனதா கட்சி (SLBJP) ஒன்றை உருவாக்குவதற்கும் அவர்கள் வழிமொழிந்தனர். “ஈழத் தமிழர்கள் இந்த மண்ணில் ஒருபோதும் சீன நிறுவனங்களை அனுமதிக்க மாட்டார்கள்” என்று சூளுரைத்த தமிழ் தேசியக் கட்சியின் தலைவரான கே.சிவாஜிலிங்கம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக “பாஜகவின் பெயரில் இன்னொரு சர்வதேச அமைப்பு” ஒன்றை உருவாக்க அழைப்புவிடுத்தார்.

1987-90 இல் இந்தியா நடத்தியதைப் போல இலங்கையின் வடக்கில் மீண்டும் ஒரு புது இராணுவ ஆக்கிரமிப்பு நடக்க முடியும் என்று சிவாஜிலிங்கம் இராஜபக்‌ஷ ஆட்சிக்கு அச்சுறுத்தல் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர், “இந்தோ-பசிபிக்கில், நீங்கள் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் எதிராக செயல்படுவதாக இருந்தால், நிச்சயமாக பெரியதொரு மோதல் அங்கே உண்டாகும் ... இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் அமெரிக்க அல்லது இந்திய துருப்புகள் வந்திறங்காது அல்லது நிலைகொள்ளாது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை” என்றார்.

இத்தகைய கருத்துக்கள், சிவாஜிலிங்கத்தையும் அவரது அரசியல் சக-சிந்தனையாளர்களையும், தொழிலாள வர்க்கத்தை மிருகத்தனமாக ஒடுக்குவதற்கு இந்திய அரசுடன் மீண்டுமொரு முறை சேர்ந்து வேலைசெய்ய தயாரிப்புடன் இருக்கும் அரசியல் பிற்போக்குவாதிகளாக அடையாளம் காட்டுகின்றன.

ஒரு புதிய போர் மற்றும் இந்திய ஆக்கிரமிப்பு குறித்த மிரட்டல்களுடன் வாஷிங்டன் மற்றும் புது டெல்லியுடன் ஒரு கூட்டணி சேர்வதற்கு தமிழ் தேசியவாதிகள் விடுக்கின்ற அழைப்புகளது பிற்போக்கான தன்மையை, பெருந்தொற்று இன்னும் அதிகமாய் அம்பலப்படுத்துகிறது. மோடி ஆட்சிக்கான அவர்களது வழிமொழிவு, கொரோனா வைரஸ் மக்கள் மத்தியில் கோரத் தாண்டவமாடுவதற்கு அனுமதிக்கின்ற, எல்லாவற்றிற்கும் முதலில் வாஷிங்டனால் செயல்படுத்தப்படும் ஒரு கொள்கைக்கான வழிமொழிவாக இருக்கிறது. இந்தியாவில் பெருந்தொற்றின் ஒரு புதிய வெடிப்பில், அன்றாடம் கிட்டத்தட்ட அரை-மில்லியன் இந்தியர்கள் இந்த கொலைபாதக நோய்த் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள், அது அண்டையிலிருக்கும் இலங்கையிலும் தாக்குவதற்கு அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அவ்வாறிருந்தும் தமிழ் தேசியவாதிகள் நரேந்திர மோடி ஆட்சிக்கு புகழ்பாடி வருகின்றனர்.

தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதுதான், இராஜபக்‌ஷ ஆட்சியையும், “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொலைகார கொள்கைகளையும் மற்றும் ஏகாதிபத்தியப் போரையும் எதிர்க்கின்ற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முகம்கொடுக்கின்ற இன்றியமையாத பிரச்சினையாக உள்ளது. தேசியவாதத்துடன் ஒரு நனவான உடைவு என்பதே இதன் அர்த்தமாகும்.

தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்ததை என்பதை கண்டறிவதற்கும், படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிப்பதற்குமான போராட்டமானது, காலாவதியாகிப்போன முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தால் சர்வதேச ரீதியாக நடாத்தப்படும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

இலங்கையில், ஒரு ட்ரொட்ஸ்கிச முன்னோக்கிற்காகப் போராடுகின்ற சோசலிச சமத்துவக் கட்சி (SEP) மட்டுமே, உழைக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களது அபிலாசைகளை பிரதிநிதித்துவம் செய்கின்றதொரு ஆட்சியை ஸ்தாபிப்பதற்கு போராடிக் கொண்டிருக்கிறது.

இலங்கையில் SEP யும் உலகெங்கிலும் ICFI இன் பிரிவுகளையும் கட்டியெழுப்புவதே தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே வழியாகும்.

Loading