இலங்கை: மனித உயிரை விட இலாபத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் அரசாங்கத்தின் கொள்கையை தோற்கடிக்க மருத்துவமனைகளில் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவோம்!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் உள்ள மருத்துவமனைகள் தற்போது பிரிட்டிஷ் வைரஸ் உட்பட கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் நிரம்பி வழிகின்றதுடன் நோயாளிகள் வீட்டிலும் வாகனங்களிலும் இறப்பதற்கான நிலைமைகள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது ஜூன் 14 விபரப்படி, நாட்டில் சுமார் 33,000 கொவிட்-19 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதோடு, குறைந்தபட்ச பரிசோதனைகளின் கீழ் கூட தினமும் 2,000-3,000 இடைப்பட்ட எண்ணிக்கையிலான நோய் தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றனர். உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின் படி, ஜூன் 13 வரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 223,638 ஆகும் மற்றும் இறப்பு எண்ணிக்கை 2,136 ஆகும்.

தொற்றுநோய் இந்தளவு வேகமாக பரவும் நிலையில், நாட்டை முழுமையாக முடக்கி, அத்தியாவசிய சேவைகளை மட்டுமே பராமரிக்கும் அதே வேளை, வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதன் மூலம் உயிர்களை காப்பாற்ற வேண்டியது அவசியமாகும். ஆனால் ஜனாதிபதி இராஜபக்ஷவும் அத்தகைய திட்டத்தை முற்றிலும் நிராகரித்து, உலகின் ஏனைய ஆட்சிகளைப் போலவே, பெருவணிகத்தின் இலாபங்களை மனித வாழ்க்கைக்கு மேலே சுமத்தும் கொள்கையைப் பின்பற்றுகிறார்.

சுகாதார ஊழியர்களின் பிரச்சாரம்

இதன் மூலம் முன் வரிசையில் இருந்து நோயை எதிர்த்துப் போராடும் சுகாதார ஊழியர்களுக்கு மிகவும் பதட்டமான மற்றும் ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளது.

இலாப நோக்குடைய முதலாளித்துவ முறைமைக்கும் மற்றும் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் போராட்டம் இன்றி இந்த அழிவுகரமான நிலைமைகளை தோற்கடிக்க முடியாது. அத்தகைய போராட்டத்தைத் முன்னெடுப்பதற்காக, முதலாளித்துவ முறைமையுடன் இறுக்கமாக பிணைந்திருக்கும் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக, ஒவ்வொரு வேலைத் தளத்திலும், குடியிருப்பு பிரதேசங்களிலும் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்கள், கட்டியெழுப்பபட வேண்டியது அவசியமாகும்.

எனவே, வைத்தியசாலைகளில் அனைத்து தரங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க சுகாதார ஊழியர்கள் முன்வர வேண்டும். தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் சர்வதேச வலையமைப்பை உருவாக்குவதன் மூலம் அரசாங்கங்களின் மனிதப்படுகொலை செயற்பாடுகளை தோற்கடிப்பதற்காக தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் ஒடுக்கப்பட்ட மக்களின், பலத்தைத் அணிதிரட்டுவதே இன்றைய உடனடி தேவையாகும்.

இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் கொவிட் நோயாளர்கள் மில்லியன் கணக்கில் அதிகரிப்பதற்கும், வைத்தியசாலை கட்டமைப்புகள் நிரம்பி வழிந்து ஆயிரக்கணக்கானோர் தினமும் இறப்பதற்குமான நிலைமைகளை உருவாக்கியுள்ள கொலைகார அரசாங்கங்களின் குற்றவியல் கொள்கைகளுக்கு எதிராக, இந்த நாடுகளின் சுகாதாரத் தொழிலாளர்கள் ஏற்கனவே தொடங்கியுள்ள போராட்டங்கள், இலங்கை உட்பட உலகெங்கும் நிரம்பி இருக்கும் இலட்ச கணக்கிலான சுகாதார ஊழியர்களுக்கு முன்னுதாரணத்தையும் மற்றும் உறுதிப்பாட்டையும் வழங்குகிறது.

அமெரிக்காவில் மசாசூசெட்சில் உள்ள டெனட் ஹெல்த்கேர் என்ற ஒரு பெரும் நிறுவனத்திற்கு சொந்தமான சென் வின்சென்ட் மருத்துவமனையில் 700க்கும் மேற்பட்ட செவிலியர்கள் சுமார் இரண்டு மாதங்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சுகாதாரத் துறையில் பற்றாக்குறை காரணமாக தங்களுக்கும் அதேபோல், நோயாளர்களுக்கும் உருவாக்கப்பட்டுள்ள பயங்கரமான நிலைமைகளுக்கு எதிராகவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உலகின் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நாடான அமெரிக்காவில், பெரிய வணிக பில்லியனர்கள் தொற்றுநோய்க்கு மத்தியில் கூட பில்லியன் கணக்கான டொலர்களை குவித்துக்கொள்ளும் அதேவேளை, சுகாதார ஊழியர்களின் பாதுகாப்புக்கும் சம்பளத்துக்கும் நிதி இல்லையென கூறும் அந் நாட்டு அரசு, தற்போது ஆறு லட்சத்துக்கு அதிகமான கொவிட்-19 மரணத்திற்கு.வழி சமைத்துள்ளது.

2021 இல் இலங்கையின் சுகாதார சேவைக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை 2019 ஆம் ஆண்டை விட 28 பில்லியன்களால் வெட்டிக் குறைத்துள்ள இராஜபக்ஷ அரசாங்கம், உழைக்கும் ஏழைகளுக்கு எதிராக பொலிஸ்-இராணுவ பொறிமுறையை கட்டியெழுப்புதவற்கான நிதியை அதிகரித்துள்ளது. பெரும் வணிகர்களுக்கு, இது கடந்த ஆண்டு குறைந்தபட்சம் 230 பில்லியன் ரூபாயை செலுத்தியது.

தொற்றுநோய்க்கான தடுப்பூசிகள் உடனடியாக பொதுமக்களுக்கு வழங்கப்படுவதற்கும், விரைவாக அதிகரித்துவரும் நோயாளிகளுக்கு ஏற்றவாறு மருத்துவமனை கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கம் குறைந்தபட்ச பிரதிபலிப்பையே காட்டியுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் விஞ்ஞான நிறுவனத்தின் இயக்குநர் வைத்தியர் சந்திமா ஜீவந்தர கூறியது போல, இறப்பு விகிதம் நூற்றுக்கு 55 ஆகவும், பரவல் 50 சதவீதமும் கொண்ட பிரித்தானிய வைரஸ் விகாரம் இலங்கையில் பரவுவதும் அடையாளம் காணப்பட்டது தொடர்பாக ஏப்ரல் 8 அன்றே பொறுப்புவாய்ந்த நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் நோய் இப்போது முப்பது வயதுகளில் உள்ள இளைஞர்கள் மத்தியில் பதிவாகியுள்ளது. நோய் வேகமாகப் பரவுவதைத் தடுக்க பொது முடக்கம் அத்தியாவசியம் ஆகியுள்ளதைக் காட்டியுள்ள இலங்கையின் மருத்துவ நிபுனர்களின் சங்கம், இலங்கையில் ஓக்ஸிஜன் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் களஞ்சியப்படுத்தல் போதுமானளவு இல்லாமையால், இந்தியாவைப் போன்று சாலைகளிலும், மருத்துவமனைகளிலும் நோயாளிகள் இறக்கும் வாய்ப்பு இலங்கையிலும் தோன்றக் கூடிய நிலைமை குறித்து எச்சரிக்கிறது.

அத்துடன், கேகாலை ஆஸ்பத்திரியின் நுண்ணுயிரியலாளர் வைத்தியர் முதித அபயகோன் கூறுகையில், மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றதால் இப்போது நாட்டை ஒரு மாதத்திற்கேனும் முடக்குவதைத் தவிர நிலைமையைக் கட்டுப்படுத்த வேறு எந்த வழியும் இல்லை என்று தெரிவித்தார்.

பிரதான கொவிட் மருத்துவமனைகளில், அங்கொட தொற்று நோய்கள் மருத்துவமனை, வேறு நோய்களுடன் கொரோனா தொற்றுக்கு உள்ளான நாடு பூராவும் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் ஹோமாகம விசேட கொவிட் மருத்துவமனையின் குழந்தை வார்டு மற்றும் கவலைக்கிடமான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பிரிவு, அண்மையில் கொவிட் சிகிச்சை மருத்துவமனையாக பெயரிடப்பட்ட தெல்தெனிய மருத்துவமனை, பெனிதெனியவில் உள்ள கொரோனா தொற்றுக்குள்ளான பெண்களுக்கான பிரிவு மற்றும் கரந்தெனிய மாவட்ட வைத்தியசாலையின் சிகிச்சைப் பிரிவு போன்றவை இப்போது நோயாளர்களால் நிரம்பி வழிகின்றது.

அனுமதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகளுக்கு ஒக்ஸிஜன் அவசியமாக இருந்த போதிலும், சில மருத்துவமனைகளில் இது ஒரு நோயாளியிடமிருந்து அகற்றுவதன் மூலம் மற்றொரு நோயாளிக்கு வழங்கி மாற்றி மாற்றி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தீவிர சிகிச்சை பிரிவுகள் அனைத்தும், நோயாளிகளால் நிரம்பி வழிகின்றது. இந்த மருத்துவமனைகளில் காணப்படும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக, சேவையாளர்கள் மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர்.

நிலைமை இவ்வாறான போதிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நோயாளிகளை அனுப்பிவைப்பதற்கு, “படுக்கைகள் இருக்கிறதா?” என்று கேட்டு, காலை முதல் இரவு வரை ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் அழைப்புகள வருவதாக ஊழியர்கள் கூறுகிறார்கள்.

கொவிட்-19 நோய்க்கான மருத்துவமனைகள் நிரம்பி இருப்பதால் சில மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுகாதாரத்துறையின் உத்தரவுகளை மீறி, போக்குவரத்து அமைச்சர் காமினி கொகுகே மேற்கொண்ட தலையீட்டால் பொதுமுடக்கம் அகற்றப்பட்ட பிலியந்தல சுகாதாரப் பகுதியில் சுமார் 100 நோயாளிகள், மருத்துவமனையில் அனுமதிப்பது மற்றும் அம்புலன்ஸ் வருகை தாமதம் காரணமாக வீட்டில் தங்கி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார ஆய்வாளர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறுகையில், ஏராளமான நோயாளிகள் வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் சிகிச்சை மையங்களுக்குச் செல்வதும், போக்குவரத்து வழங்குவதும் சிக்கலாக இருப்பதாகவும், இது பொது சுகாதார ஆய்வாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றார். நாட்டை முடக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறுகிறார்.

பேராதனை போதனா வைத்தியசாலை மற்றும் கண்டி மருத்துவமனையில் நோயாளிகள் கொவிட் மருத்துவமனைக்கு மாற்றப்படும் வரை தற்காலிகமாக வைக்கப்பட்டிருக்கும் கொவிட் வார்டுகள், நிரம்பி வழிகின்றன. இன்னும் நோயாளிகள் வந்தால் அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டியிருக்கும் என்று மருத்துவமனையின் வைத்தியர்கள் கூறுகிறார்கள். சில நோயாளிகள் புனானை மற்றும் உந்துகொட கொரோனா மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

வத்துபிட்டிவல மருத்துவமனையின் சுகாதார ஊழியர் ஒருவர், வத்துபிட்டிவல இளைஞர் படை மையம் ஒரு கொரோனா இடைத்தங்கங் மையமாக மாற்றப்பட்டுள்ள போதிலும், அதன் 143 படுக்கைகளில் 150-200 வரையான நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தனது மருத்துவமனை ஊழியர்களும் அங்கு பணியாற்ற வேண்டியிருந்தது என்றும், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், அடிக்கடி இங்கிருந்து நோயாளிகளை யாழ்ப்பாணத்தில் உள்ள கொரோனா மையங்களுக்கு அனுப்பப்படுகின்றனர் என்றும் அவர் கூறினார்.

நிலைமை இவ்வாறு அதிகரிக்கும்போது, பெருவணிகர்களால் ஹோட்டல் அறைகளை நோயாளிகளுக்கு நாளொன்றுக்கு 17,000 ரூபாவிற்கு விற்கும் மோசடி வியாபாரம் நடக்கின்றது.

தற்போதுள்ள வைத்தியசாலை வார்டுகள், சிறிய மருத்துவமனைகள், மருத்துவமனை அல்லாத வேறு கட்டிடங்கள் போன்றவற்றை கொவிட் வார்டுகள், கொவிட் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களாக மாற்றுவதற்கான ஒட்டு போடும் திட்டத்தை அரசாங்கம் தயாரித்து வருகிறது. உதாரணமாக, பேராதனை மருத்துவமனையின் வார்டு 18, கட்டுகஸ்தொட்ட பிராந்திய மருத்துவமனை, மத்திய மாகாணத்தின் அட்டபாகே மருத்துவமனை, கம்பஹா வெரெல்லவத்தவில் கைவிடப்பட்ட ஆடைத் தொழிற்சாலை, மற்றும் புத்தளத்தில் மதுரங்குளியில் உள்ள ஒரு கல்வி நிறுவனம் ஆகியவை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டு வருகின்றன.

ஆனாலும் இவற்றில் சேவையில் ஈடுபடுவதற்காக தற்போதுள்ள பற்றாக்குறையான சுகாதார ஊழியர்களே இருக்கின்றனர். இதனால், ஏற்கனவே கடினமான அதிக வேலை காரணமாக சோர்வாக இருக்கும் சுகாதார ஊழியர்களுக்கு தாங்க முடியாத நிலைமைகள் உருவாகி வருகிறன.

ஒரு சில கட்டிடங்களைத் தவிர, எந்தவொரு மனித வள அல்லது குறிப்பிடத்தக்க பௌதீக வளங்களையும் அதிகரிக்க அரசாங்கம் முற்றிலும் தவறிவிட்டது. எனவே, நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, இறப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த சுகாதார ஊழியர்களும் ஒரு பெரிய நெருக்கடியை எதிர்கொள்கின்ற போதிலும், அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களும் தங்கள் உறுப்பினர்களுக்கு புறமுதுகு காட்டி அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திற்கு முண்டு கொடுக்கின்றன.

ஏப்ரல் 24 அன்று, ஜனாதிபதி இராஜபக்ஷ, நாட்டை பெருவணிகத்திற்கு அவசியமான முறையில் திறந்து வைக்கும் அரசாங்கத்தின் கொள்கையை, 'கொவிட் அச்சுறுத்தளுக்கு ஒரு தீர்வாக தற்காலிகமாக நாட்டை முடக்குவதானது மக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்திற்கு பேரழிவு விளைவை ஏற்படுத்தும் ஒரு செயல்முறை' என்று கபடத்தனமாக விவரித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தொற்று நோயயை அல்ல, நாட்டை பொதுமுடக்கத்தில் இருந்தே காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த குற்றவியல் முதலாளித்துவ மூலோபாயத்தின் கொடூரத்தினால் இன்று ஆயிரக்கணக்கான கொவிட் நோயாளிகள் நாட்டில் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த மோசமான சூழ்நிலைக்குள் இலங்கை விரைவாக மூழ்கி வருவதால், மருத்துவர்கள் உட்பட சுகாதாரப் பணியாளர்கள் உடனடியாக தங்களது சொந்த சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை அமைத்துக்கொண்டு, முதலாளித்துவ அரசாங்கத்தின் கொலைகாரக் கொள்கையை தோற்கடிப்பதில் முன்னிலை வகிக்க வேண்டும் என்று சுகாதாரத் தொழிலாளர் நடவடிக்கைக் குழு வலியுறுத்துகிறது. நாங்கள் உங்களுக்கு ஆதரவளிப்போம்.

எங்களுடன் தொடர்புகொள்வதற்கான மின்னஞ்சல்: healthworkers-sl@wsws.org தொலைபேசி மற்றும் குறுந்தகவல்: 0773562327

Loading