முன்னோக்கு

இலங்கை அரசாங்கம் தொற்றுநோய் வேகமாக பரவும் நிலையில் அரசாங்க ஊழியர்களின் வேலைநிறுத்தங்களை குற்றமாக்குகின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

தெற்காசிய தீவு நாடான இலங்கையில் ஆபத்தான அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. இவை பற்றி உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் விழிப்புடன் இருப்பதோடு செயலூக்கத்துடன் எதிர்க்க வேண்டும்.

கடந்த இரண்டு வாரங்களில், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ, இரண்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இதன் மூலம் கிட்டத்தட்ட பத்து இலட்சம் அரசாங்கத் துறை தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம் செய்வதற்கு உள்ள சட்டபூர்வ உரிமையை அபகரிப்பதற்காக நாட்டின் சட்டங்கள் எதேச்சதிகாரமாக திருப்பி எழுதப்பட்டுள்ளன.

தொற்றுநோய்க்கு அரசாங்கத்தின் கொலைகாரத்தனாமன பிரதிபலிப்பை எதிர்த்தும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டலை தீவிரப்படுத்துவதற்கும் பொது சேவைகளை குறைப்பதற்குமான அதன் முயற்சிகளுக்கும் எதிராக வேலைநிறுத்தம் செய்தால், இந்த தொழிலாளர்கள் இப்போது பாரிய வேலை நீக்கம் மற்றும் நீண்ட சிறைவாசம் உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை எதிர்கொள்கின்றனர். இந்த ஆணைகள், வேலைநிறுத்த நடவடிக்கைக்கு பரிந்துரைக்கும் எந்தவொரு தனிநபரையும் அல்லது அமைப்பையும் குற்றவாளியாக்குகின்றன.

இலங்கை ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ நடுவில் இருக்கிறார் (AP Photo/Eranga Jayawardena)

மே 27 அன்று வெளியிடப்பட்ட முதல் ஆணையின் உடனடி நிமித்தம், கோவிட்-19 தடுப்பூசிகளை வழங்க கோரி 12,000 கிராம அலுவலர்கள் வேலை நிறுத்தம் செய்ய அச்சுறுத்தியதாகும். எனினும் இந்த உத்தரவு, இலட்சக்கணக்கான ஏனைய அரசாங்க ஊழியர்களின் அடிப்படை உரிமைகளையும் அபகரிக்கின்றது. கிராம அலுவலர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம், திட்டமிட்ட வேலைநிறுத்த நடவடிக்கையை உடனடியாக கைவிட்டது.

ஐந்து நாட்களுக்குப் பின்னர், ஜூன் 2 அன்று, பல பெரிய மருத்துவமனைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய அச்சுறுத்தியதற்கு சற்று முன்னதாக இராஜபக்ஷ இரண்டாவது ஆணையை வெளியிட்டார். இதன் மூலம் வேலைநிறுத்தங்கள் மீதான தடையை சுகாதார சேவை மற்றும் ஏனைய அரசாங்க ஊழியர்களுக்கும் நீடித்தது.

துறைமுகம், இரயில், பஸ் போக்குவரத்து, பெட்ரோலியம், எரிவாயு, அரச வங்கி மற்றும் காப்புறுதி தொழிலாளர்கள்; செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்கள்; அரசாங்க நிர்வாகத் தொழிலாளர்கள், அரசுக்குச் சொந்தமான உணவு விநியோக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள்; மற்றும் இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளின் ஊழியர்கள் மீதும் இந்த இரண்டு கட்டளைகளும் ஆதிக்கம் செலுத்தும்.

வேலைநிறுத்த தடையை மீறும் தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்யலாம். 2,000 முதல் 5,000 ரூபாய் வரையான அபராதம், இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரையான "கடுமையான சிறைத்தண்டனை", அவர்களின் "அசையும் மற்றும் அசையாச் சொத்தை" பறிமுதல் செய்தல் மற்றும் அவர்களின் தொழில்முறை சான்றுகளை நீக்குதல் ஆகியவற்றையும் அவர்கள் எதிர்கொள்கின்றனர்.

வேலைநிறுத்த தடைக்கு உட்பட்ட ஒருவரை, "சரீர ரீதியான செயல் மூலம் அல்லது பேச்சு அல்லது எழுத்து மூலமாகவேனும்" வேலைக்கு சமூகமளிக்காமல் இருக்கத் "தூண்டுவது, உந்துவது அல்லது ஊக்குவிக்க" செயற்படும் எந்தவொரு நபரும், இதே போல் அபராதம், சொத்து பறிமுதல், ஐந்து ஆண்டுகள் வரையான சிறைத்தண்டனை ஆகியவற்றிற்கு உள்ளாவார்.

பொது விவாதங்களை நடத்துவது ஒருபுறம் இருக்க, முன் எச்சரிக்கை கூட இன்றி, இலங்கையின் அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம் மற்றும் வேலைநிறுத்தம் செய்வது உட்பட அடிப்படை ஜனநாயக உரிமைகள், பேனாவில் ஒரு குறுக்கு கோடு போடுவதன் மூலம் அபகரிக்கப்பட்டுள்ளன.

தொற்றுநோயைப் பற்றி சுருக்கமாகக் குறிப்பிடும் முதல் ஆணை, வேலைநிறுத்தத் தடையின் கீழ் உள்ள அரச சேவைகள் மற்றும் திணைக்களங்கள் "கோவிட்-19 தொற்றுநோயை எதிர்கொள்வதில்" இன்றியமையாதவை என்று கூறிக்கொள்கின்றது. உண்மையில், உயிர்களை காப்பாற்றுவதற்கு மேலாக இலாப நலன்களுக்கு திட்டமிட்டு முன்னுரிமை அளிப்பதன் மூலம், தொற்றுநோயை தடுப்பதற்கான எந்தவொரு விஞ்ஞான அடிப்படையிலான நடவடிக்கைக்கும் குழிபறித்திருப்பது அரசாங்கமும் இலங்கை ஆளும் வர்க்கமுமே ஆகும்.

ஏப்ரல் முதல், தீவு முழுவதும் தொற்றுநோய் அதிகரித்துள்ளது. உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை கடந்த ஐந்து வாரங்களில் இரு மடங்காக அதிகரித்து 1,656 ஆக உள்ளது. அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின்படி, புதிய நோய்த்தொற்றுகள் தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 3 ஆயிரத்துக்கும் அதிகமாகும். இது குறைத்து மதிப்பிடப்பட்ட எண்ணிக்கை ஆகும். ஆயினும்கூட, இராஜபக்ஷ அரசாங்கம், எதிர்க்கட்சிகளின் முழு ஆதரவோடு, “பொருளாதாரமும்” குறிப்பாக ஆடை உற்பத்தி துறை, தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்கள் போன்ற பெரிய ஏற்றுமதித் தொழில்களும் தொடர்ந்து இயங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) வேண்டும் மற்றும் முன்நிலை தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் போன்ற கோரிக்கைகள், வளர்ந்து வரும் அரச தொழிலாளர் போராட்டங்களில் பெருமளவில் காணப்படுகின்றன. இது பெருந்தோட்ட மற்றும் ஏனைய தனியார் துறை தொழிலாளர்கள் மத்தியில் பெருகி வரும் அமைதியின்மையுடன் ஒருங்கிணையும் என்று அரசாங்கம் பீதியடைந்துள்ளது.

இராஜபக்ஷ அரசாங்கம் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள பாக்கு நீரிணையை நோக்கியும் பீதியுடன் பார்க்கிறது, அங்கு தொற்றுநோயின் பேரழிவு எழுச்சிக்கு மத்தியில் கொவிட்-19 இல் இருந்து பாதுகாப்பு இன்மைக்கு எதிராக ஹூண்டாய், ரெனால்ட்-நிசான் மற்றும் ஏனைய வாகனத் தொழிலாளர்களின் ஏராளமான வேலை நிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

இராஜபக்ஷ அரசாங்கத்தின் சமூக நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் கொலைகாரத்தனமான கொள்கையானது தொழிலாள வர்க்கத்திடமிருந்து இலாபத்தை கறப்பதற்கான அதன் உந்துதலின் உயர்ந்த கட்டமாகும். இது சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதன் ஊடாகவும் இடம்பெறுகின்றது.

"எதிர்க்கட்சிகள்", கூட்டுத்தாபன ஊடகங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-இடது குழுக்களுமாக அனைத்தும், இந்த ஆணைகள் குறித்து மௌனமான உடன்பாட்டை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், .இது பற்றி சர்வதேச தொழிலாள வர்க்கத்தை எச்சரிக்க வேண்டியது மிகவும் அவசியமானது. கடந்த வியாழக்கிழமை தபால், ஆசிரியர்கள் மற்றும் சுகாதார சேவை தொழிற்சங்கங்களின் கூட்டணியின் அறிக்கையையானது இந்த கட்டளைகள் குறித்து "வருத்தத்தை" மட்டுமே வெளிப்படுத்தியது. ஜனாதிபதியின் கட்டளைகள், அடிப்படை ஜனநாயக உரிமைகளை எதேச்சதிகாரமாக இரத்து செய்கின்றது என்ற விடயத்தை அந்த அறிக்கை முற்றிலும் புறக்கணித்துள்ளது.

அரசாங்கம், இதுவரை, தனது கொடூரமான புதிய அதிகாரங்களை அரசாங்க ஊழியர்களுக்கு எதிராக பயன்படுத்த முற்படவில்லை. பரந்த தொழிலாள வர்க்க அமைதியின்மைக்கு அஞ்சி, கடந்த வியாழக்கிழமை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் மீது தனது கட்டுப்பாடுகளை அது திணிக்கவில்லை. முன்னர் திட்டமிடப்பட்டவாறு தாதியர்கள், மருத்துவர்கள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பிற ஊழியர்களும் ஐந்து மணி நேர வேலை நிறுத்தத்தை முன்னெடுத்தனர்.

ஆனால் ஒருபுறம் இலங்கை ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரச எந்திரத்துக்கும், மறுபுறம் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட கிராமப்புற உழைப்பாளிகளுக்கும் இடையிலான உக்கிரமான மோதல் பட்டியலில் இருக்கின்றது.

தொழிலாள வர்க்கத்துடன் மோதலுக்கான தயாரிப்பில், தீவின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான 30 ஆண்டுகால யுத்தத்தில் பற்களை கூர்மையாக்கிக் கொண்டுள்ள இராணுவ அதிகாரிகளுடன் அரச இயந்திரத்தை இராஜபக்ஷ பலப்படுத்தி வைத்துள்ளார்; அவர் அதிதீவிர வலதுசாரி சிங்கள-பௌத்த அமைப்புகளை வளர்த்து வைத்திருப்பதுடன், ஜனாதிபதியின் எதேச்சதிகார அதிகாரங்களை மேம்படுத்தும் வகையில் அரசியலமைப்பை மாற்ற சதி செய்தும் வருகிறார். சமீபத்தில், இராஜபக்ஷவின் அமைச்சர்களில் ஒருவர், ஜனாதிபதி, "ஹிட்லரைப் போலவே" ஆக வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.

இலங்கையின் அபிவிருத்திகள் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். இலங்கை தொழிலாளர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் சர்வாதிகார வழிமுறைகள் எல்லா இடங்களிலும் தொழிலாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும்.

எல்லா இடங்களிலும், ஆளும் உயரடுக்கினர் தொற்று நோயால் பெரிதும் ஆழமடைந்துள்ள உலகளாவிய முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கு, தொழிலாளர்கள் விலை கொடுக்க வேண்டும் எனபதில் உறுதியாக உள்ளனர். உலகெங்கிலும் 3.5 மில்லியனுக்கும் அதிகமானோர் இறந்த தொற்றுநோயின் பேரழிவுகரமான தாக்கம், மனித உயிர்களுக்கும் மேலாக பெருநிறுவன இலாபங்களுக்கு முன்னுரிமை அளிக்க அரசாங்கங்கள் எடுத்த முடிவின் நேரடி விளைவு ஆகும். எல்லாவற்றுக்கும் மேலாக, பணக்காரர்களை பிணை எடுப்பதெனில், பொது சேவைகளை அழிப்பதையும் சுரண்டலை தீவிரமாக்குவதையும் அமுல்படுத்த வேண்டும்.

ஆனால் இந்த வர்க்கப் போர், அமெரிக்காவில் வொல்வோ டிரக் தொழிலாளர்கள், கனடாவில் வேல் இன்கோ சுரங்கத் தொழிலாளர்கள், பிரேசிலில் ஆசிரியர்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள், இந்தியாவில் வாகனத் தொழிலாளர்கள் மற்றும் சிலியில் பி.எச்.பி. செப்பு சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டங்கள் உள்ளிட்ட வளர்ந்து வரும் எதிர்ப்பை எதிர்கொள்கிறது. கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் மற்றும் ஸ்தாபன "இடது" கட்சிகளால் பல தசாப்தங்களாக அடக்கப்பட்டு வந்த தொழிலாள வர்க்கப் போராட்டங்கள், இப்போது அந்தப் பிடியை மீறி வெடிக்கின்றன.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஆளும் வர்க்கங்கள் சர்வாதிகார ஆட்சி முறைகளுக்கு மாறி, சமூக எதிர்ப்பை குற்றமாக்குவதுடன் தீவிர வலதுசாரி சக்திகளை ஊக்குவிக்கின்றன. கொலம்பியாவில், அமெரிக்க ஆதரவு கொண்ட டியூக் ஆட்சியானது, வரி அதிகரிப்பு, நசுக்கும் வறுமை மற்றும் எப்போதும் அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மைக்கும் எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கு விரோதமாக, கொலைகார பொலிஸ் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. ஸ்பெயினிலும் பிரான்சிலும் இராணுவ அதிகாரிகளிடமிருந்து ஆட்சி கவிழ்ப்பு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

உலகளாவிய முதலாளித்துவத்தின் மையமான அமெரிக்காவில், குடியரசுக் கட்சித் தலைமை மற்றும் இராணுவ-பாதுகாப்பு எந்திரத்தின் பிரதான பிரிவுகளின் ஆதரவோடு, டிரம்ப், அப்பட்டமான ஒரு சதித்திட்டத்தை அரசங்கேற்ற முயற்சித்தார். இது ஜனவரி 6 அன்று காங்கிரஸ் கட்டிடத்தின் மீதான தாக்குதலில் உச்சக்கட்டத்தை அடைந்தது.

கடனில் மூழ்கியுள்ள இலங்கை முதலாளித்துவம், பெருகிய முறையில் கிளர்ச்சி செய்யும் தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்கிறது. மேலும், சீனாவிற்கு எதிரான அமெரிக்க தாக்குதலில், தெற்காசியா ஒரு மைய தளமாக உருவெடுத்துள்ளதால், இலங்கை அதன் புவிசார் அரசியல் நோக்குநிலை குறித்து கடுமையாக பிளவுபட்டுள்ளது. மேலும், இலங்கையின் 30 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்த பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை.

மாற்ற வேண்டியதை மாற்றுவதன் மூலம், ஒவ்வொரு முதலாளித்துவ ஆளும் உயரடுக்கினரும், இதேபோன்ற சிக்கலான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அதற்கான அவற்றின் பதில், தொழிலாளர்களை சுரண்டுவது, பிற்போக்கு, இராணுவவாதம் மற்றும் போரையும் தீவிரப்படுத்துவது மட்டுமே ஆகும்.

உலக சோசலிச வலைத் தளம் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களை இலங்கையில் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளை பாதுகாப்பதற்கு முன்வருமாறு கேட்டுக்கொள்கிறது. முதல் எடுக்க வேண்டிய நடவடிக்கை, இராஜபக்ஷவின் வர்க்கப் போர் உத்தரவுகளின் உள்ளர்த்தம் மற்றும் முக்கியத்துவத்தை பரவலாக அறியச்செய்து, பாதிக்கப்பட்ட எந்தவொரு தொழிலாளருக்கும் ஆதரவாக ஒத்துழைப்பை தயாரிப்பதோடு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் சமூக சக்தியை அணிதிரட்டுவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்துவதும் ஆகும்.

கூட்டுத்தாபன தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாகவும், அவற்றுக்கு எதிராகவும் போராடுவதற்கான புதிய அமைப்புகளை, அதாவது வேலைத் தளங்களில் நடவடிக்கை குழுக்களைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியானது தேசியம், இனம் அல்லது பாலினம் ஆகிய வேறுபாடுகளைக் கடந்து, தொழிலாளர்களின் புறநிலை ஐக்கியத்தை நிரூபிக்கின்றது. ஆனால் இந்த ஒற்றுமை, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் நனவுடன் நிராகரிப்பதன் மூலமே நிலைத்திருக்கும்.

இலங்கையில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை ஒன்றிணைப்பதற்கான போராட்டமானது அரச அனுசரணையிலான “சிங்களம் முதலில்” கொள்கையை எதிர்ப்பது, அதே போல், வாஷிங்டனின் சீனாவுக்கு எதிரான போர் திட்டங்களுக்கு இலங்கையை அடிபணிய வைப்பதற்கு மிக உறுதியான ஆதரவாளர்களாக தலைதூக்கியுள்ள தமிழ் முதலாளித்துவம் தமிழ் தேசியவாதத்தை ஊக்குவிக்க எடுக்கும் முயற்சிகளையும் எதிர்ப்பதாகும்.

இந்த நோக்கத்திற்காக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, அதன் மே தின இணையவழி கூட்டத்தில், சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு கூட்டணியை (IWA-RFC) ஸ்தாபிப்பதற்கு முன்முயற்சி எடுத்தது.

தொற்றுநோய் மற்றும் பரவலான சமூக சமத்துவமின்மை முதல், போர் மற்றும் சர்வாதிகார ஆபத்து வரை, தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் மையப் பிரச்சினைகள், பூகோள தன்மை கொண்டவை, தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கை மூலம் மட்டுமே அவற்றை எதிர்த்துப் போராட முடியும். இராஜபக்ஷ ஆட்சியையும் அதன் பின்னால் நிற்கும் இலங்கை முதலாளித்துவத்தையும் அரசியல் ரீதியாக எதிர்கொள்வதற்கான தயாரிப்புகளின் ஒரு முக்கிய அங்கமாக, இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களுடன் தங்கள் போராட்டங்களை ஒன்றிணைத்து ஐக்கியப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

அனைத்து ஒடுக்கப்பட்ட பிரிவுகளையும் இதன் பின்னால் அணிதிரட்டிக்கொண்டு, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சக்திவாய்ந்த எதிர் தாக்குதலை அபிவிருத்தி செய்வதானது, ஒரு புரட்சிகர சோசலிச தலைமைத்துவத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாதது. அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும், ஆளும் வர்க்கத்தை அகற்றுவதற்கும், தனியார் இலாபத்திற்கு அன்றி சமூகத் தேவையின் அடிப்படையில் ஒரு சோசலிச சமுதாயத்தை நிறுவுவதற்கும், அனைத்து துறைகளிலும் மற்றும் அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள் ஒரு பொதுவான அரசியல் எதிர்தாக்குதலுக்காக ஐக்கியப்படுத்தப்பட வேண்டும்.

Loading