முன்னோக்கு

அமெரிக்க ஆளும் வர்க்கம் மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு வேலையின்மை உதவிகளை அகற்றுவதற்கான "பரிசோதனைகளில்" ஈடுபட்டுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

25 அமெரிக்க மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் ஏற்கனவே உதவிகளை இல்லாதொழித்துள்ளனர் அல்லது விரைவில் தொற்றுநோய் தொடர்பான மேலதிக வேலையின்மை உதவிகளை அகற்றத் தொடங்குவார்கள். இது Century Foundation அமைப்பின் படி நான்கு மில்லியன் வேலையற்ற தொழிலாளர்களுக்கு 22 பில்லியன் டாலர் மேலதிக உதவியை பறிக்கின்றது.

சியாட்டிலில் முகாம்களில் உள்ள வீடற்றவர்கள் (David Lee, Flickr Creative Commons)

கடந்த சனிக்கிழமையன்று மிசிசிப்பி, மிசூரி, அயோவா மற்றும் அலாஸ்காவில் ஒரு வாரத்திற்கு 300 டாலர் மத்திய அரசின் வேலையின்மை சலுகைகளை நீக்குவது தொடங்கியது. மற்ற 21 மாநிலங்கள் ஜூலை 10 க்குள் உதவியை நீக்க உள்ளன. மேரிலாந்து, டெக்சாஸ் மற்றும் டென்னசி உட்பட 25 மாநிலங்களில் 21 மாநிலங்கள் தொற்றுநோய் வேலையின்மை உதவி (“நிரந்தர ஒப்பந்தமற்ற தொழிலாளர்களுக்கு”) மற்றும் தொற்று அவசர வேலையின்மை இழப்பீட்டுத் திட்டம் போன்ற தொற்றுநோய் தொடர்பான அனைத்து திட்டங்களான முடிவுக்கு கொண்டுவருகின்றன.

இந்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் மாநிலங்கள் குடியரசுக் கட்சி ஆளுநர்களால் வழிநடத்தப்படுகின்றன. இருப்பினும், இக்கொள்கை இரு கட்சிக்கும் பொதுவானது. கடந்த மாதம், ஜனாதிபதி ஜோ பைடென், வேலை-தேடல் தொடர்பான கோரிக்கைகளை மீண்டும் தொடங்க அனுமதிப்பதன் மூலம் உதவிகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது ஆதரவை அடையாளம் காட்டினார். செப்டம்பர் 6 ஆம் தேதி முழு நாட்டிற்கும் மத்திய அரசின் வேலையின்மை சலுகைகள் மூன்று மாதங்களுக்குள் காலாவதியாக அனுமதிக்க தனது ஆதரவையும் அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து ஜூன் 4 ம் தேதி வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் ஜென் சாகி அளித்த அறிக்கையில், குடியரசுக் கட்சி ஆளுநர்கள் கூட்டாட்சி நலனை "ஏற்றுக்கொள்ளாதிருக்க" ஒவ்வொரு உரிமையும் உண்டு என்றும், "அது சரி" என்றும் கூறினார்.

முதலாளித்துவ ஊடகங்களில், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான வேலையின்மை ஆதரவை அகற்றுவதற்கான நடவடிக்கை ஒரு "பரிசோதனை" என்று விவரிக்கப்பட்டுள்ளது. ஜூன் 11 அன்று NBC News: "இது ஒரு தைரியமான, பாரிய, சமூக மற்றும் பொருளாதார பரிசோதனையின் தொடக்கமாகும். இது மத்திய அரசின் வேலையின்மை நலன்களை பாதி நாட்டிற்கு முன்கூட்டியே முடக்குவது அந்த மாநிலங்களில் உள்ளவர்களை மீண்டும் வேலைக்கு செல்லத் தூண்டுமா என்பதைப் பார்ப்பது" என அறிவித்தது.

இந்த "தைரியமான பரிசோதனை" என்பது நடைமுறையில், மில்லியன் கணக்கான மக்களை வறுமை மற்றும் வறுமையில் தள்ளுவதோடு, கொரோனா வைரஸ் தொற்றுநோயை மேலும் பரப்புவதற்கு உதவுகிறது. உதாரணமாக, மிசிசிப்பியை எடுத்துக் கொள்ளுங்கள், அங்கு 29 சதவீதத்திற்கும் குறைவான மக்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர் மற்றும் சனிக்கிழமை 70,000 வேலையற்ற தொழிலாளர்கள் வேலையின்மை கொடுப்பனவுகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகத்தால் நடத்தப்பட்ட மிசிசிப்பியில் வயது வந்தவர்களில் கிட்டத்தட்ட 15 சதவீதம் பேர் “சில நேரங்களில் அல்லது பெரும்பாலும்” கடந்த ஏழு நாட்களில் சாப்பிட போதுமான உணவு இல்லை என்று தெரிவித்தனர். மேலும், கிட்டத்தட்ட 37 சதவிகித முதியவர்கள் கடந்த வாரத்தில் வழக்கமான வீட்டுச் செலவுகளைச் செலுத்துவது "ஓரளவு அல்லது மிகவும் கடினம்" என்று கூறியுள்ளனர்.

மிசிசிப்பியில் நிலைமைகள் நாடு முழுவதும் மீண்டும் மீண்டும் வருகின்றன. மத்திய அரசின் நலன்களைக் குறைப்பது வேலையற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு பேரழிவை தரும். அவர்களில் பலருக்கு உடல்நல காரணங்களுக்காக, குழந்தை பராமரிப்பு இல்லாமை அல்லது வாழக்கூடிய ஊதியங்கள் இல்லாததால் வேலை கிடைக்கவில்லை.

வேலையின்மை நலன்களைக் குறைக்க ஒன்றோடொன்று தொடர்புடைய இரண்டு உந்துதல்கள் உள்ளன.

முதலாவதாக, தொற்றுநோய் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான உயிர்களைக் கொன்று வருவதோடு, டெல்டா மாறுபாடு போன்ற ஆபத்தான புதிய விகாரங்களும் வேகமாகப் பரவி வருவதால், தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு கொண்டுவருவது ஆளும் வர்க்கத்திற்கு அத்தியாவசிமாக உள்ளது. பைடென் நிர்வாகத்தின் தலைமையில் ஆளும் வர்க்கம் தொற்றுநோயை "முடிந்துவிட்டது" என்று அறிவித்துள்ளது.

மார்ச் 2020 இன் பிற்பகுதியில் நிறைவேற்றப்பட்ட CARES சட்டத்தில் வாரத்திற்கு 600 டாலர் கூடுதல் மத்திய அரசின் வேலையின்மை சலுகைகள் சேர்க்கப்பட்டன. தொற்றுநோயின் பொருளாதார தாக்கத்தால் பேரழிவிற்கு உட்பட்டவர்களுக்கு வழங்கப்படும் தற்காலிக உதவி ஒரு இடைக்கால நடவடிக்கையும் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டின் ட்ரில்லியன் கணக்கான பிணை எடுப்பு நடவடிக்கையை முக்கியமாக மூடிமறைக்கும் நோக்கத்தில் வழங்கப்பட்டதாகும்.

பணக்காரர்களுக்கான இந்த பாரிய கையளிப்பு சட்டமாக மாறியதும், தொழிலாளர்களை பணிக்கு திரும்பப் செய்வதற்கான கோரிக்கைகள் தொடங்கியது. அதோடு, ஒரு வாரத்திற்கு 600 டாலர் மானியத்தை இரு கட்சிகளும் வேலைக்கு திரும்புவதை ஊக்கமளிப்பதை இல்லாதொழிப்பதாக கண்டனம் செய்தன. இந்த திட்டம் ஜூலை 2020 இல் காலாவதியாக அனுமதிக்கப்பட்டு பின்னர் ட்ரம்பின் கீழ் வாரத்திற்கு 300 டாலர் என ஒரு தற்காலிக திட்டத்தால் மாற்றப்பட்டது. ஒரு வாரத்திற்கு 300 டாலர் உதவி இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பைடெனின் கீழ் நீட்டிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் வரை வழங்கப்படவுள்ளது.

அனைத்து உதவிகளும் முடிவுக்கு வர வேண்டும் என்ற ஆளும் வர்க்கத்திற்குள் ஒருமித்த உடன்பாடு, வைரஸ் பரவுவதில் மீதமுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் அகற்றும் பைடென் நிர்வாகத்தின் பிரச்சாரத்துடன் ஒத்துப்போகிறது.

கடந்த மாதம் முககவசங்களை அணியவேண்டும் என்ற ஆணைகளை அகற்றுவதற்கும், சமூக விலகல் வழிகாட்டுதல்களைக் குறைப்பதற்குமான நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் முடிவு, சுகாதார நிலையங்களுக்கு மட்டுமே பொருந்தும் தொழிலாளர் துறையின் பணியிட பாதுகாப்பு வழிகாட்டுதல்களை அடுத்து வெளியிடப்பட்டது. கட்டாய முககவசங்களை அணிவது, சமூக விலகல் அல்லது தொழிலாளர்கள் வைரஸ் தொற்றுதலுக்கு ஆளாகும்போது அவர்களுக்குத் அறிவிக்கவேண்டியது போன்ற அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செய்வதற்கு சட்டத்தால் கடமைப்படாத மீதமுள்ள தொழிலாள வர்க்கங்கள் பணியிடங்களில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும்.

இரண்டாவதாக, சில தொழிற்துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறை அதிகரித்து வரும் ஊதியங்களுக்கு கரணமாகின்றது என்று ஆளும் வர்க்கம் கவலை கொண்டுள்ளது. "மத்திய வங்கி அதன் பணவீக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் வேலைகள் பற்றிய தலைவலியை எதிர்கொள்ளக்கூடும்" என்று கடந்த வாரம் CNBC எழுதியது. "மக்களை மீண்டும் வேலைக்கு அனுப்புவதற்கு அதிக காலம் எடுக்குமானால்" முதலாளிகள் அதிகமாக செலவழிக்க வேண்டியிருக்கும்" என்று அது அறிவித்தது.

Pantheon Macroeconomics இன் தலைமை பொருளாதார நிபுணர் இயன் ஷெப்பர்ட்சனை CNBC மேற்கோளிட்டு: “துரதிர்ஷ்டவசமாக, தொழிலாளர் பங்கேற்பு அதன் முந்தைய கோவிட் நிலைக்கு விரைவாக திரும்பாது என்று நினைப்பதற்கு நல்ல காரணங்களைக் காண்கிறோம். இங்கே என்ன நடந்தாலும், இலையுதிர்காலத்தில் தொழிலாளர் சக்திக்கு திரும்புவதற்கு பெடரலுக்கு இவர்களில் ஏராளமானோர் தேவை” என எழுதியது.

குறியிடப்பட்ட இந்த வார்த்தைகளின் பின்னால் ஒரு இரக்கமற்ற வர்க்க தர்க்கம் உள்ளது. மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வறுமை நிலை வேலைகளை ஏற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்துவதன் மூலமும், ஆபத்தான சூழ்நிலையில், வேலையின்மை சலுகைகளை குறைப்பதன் மூலமும் ஆளும் வர்க்கம் குறைந்த ஊதியங்களுக்கு அழுத்தத்தை உருவாக்க விரும்புகிறது.

பணவீக்கத்தைப் பொறுத்தவரை, ஆளும் வர்க்கம் பொதுவாக "பணவீக்கத்தை" பற்றி அக்கறை கொள்ளவில்லை. ஆனால் நுகர்வோர் பொருட்களின் உயரும் செலவுகளுக்கு ஏற்ப ஊதியத்தை அதிகரிப்பதற்கான தொழிலாளர்களின் கோரிக்கைகளுடன். இது பெருநிறுவன இலாபங்களைக் குறைக்கும்.

கடந்த ஆண்டு, கிட்டத்தட்ட ஒவ்வொரு நிதிச் சொத்தின் விலையிலும் பாரிய பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. இது பெடரல் ரிசர்விலிருந்து பங்குச் சந்தைகளுக்கு வரம்பற்ற பணத்தை உட்செலுத்துவதன் மூலம் உந்தப்படுகிறது. இது உலகளாவிய பில்லியனர்களின் செல்வம் 8 டிரில்லியன் டாலரிலிருந்து 13.1 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ள தன்னலக்குழுவின் செல்வத்தில் ஒரு தொடர்புடைய அதிகரிப்பை உருவாக்கியுள்ளது. இந்த காலகட்டத்தில் வெட்டப்படவுள்ள மத்திய அரசின் வேலையின்மை சலுகைகளுக்கான செலவைவிட தன்னலக்குழுவின் செல்வத்தின் அதிகரிப்பு 227 மடங்கு அதிகம்.

சில வேலையற்ற தொழிலாளர்கள் வழங்கப்பட்ட அற்ப உதவிகளினால் தப்பிப்பிழைக்க முடிகிறது என்று புலம்பும் தினசரி கட்டுரைகள் உள்ளன என்றாலும், வோல் ஸ்ட்ரீட்டிற்கான நிதியை திறந்துவிடுதலை நிறுத்தப்பட வேண்டும் என்று முதலாளித்துவ பத்திரிகைகளில் யாரும் பரிந்துரைக்கவில்லை. இதுவும் ஒரு "பரிசோதனை" ஆகும். அவர்கள் அதைச் செய்ய ஆர்வம் காட்டவில்லை.

ஆளும் வர்க்கத்தின் கொலைகார சமூக நோய் எதிர்ப்பு சக்தி கொள்கையின் “பரிசோதனை” அமெரிக்காவில் 600,000 க்கும் அதிகமானோர் கொல்லப்படுவதற்கு வழிவகுத்தது. இப்போது வேலையின்மை உதவியைக் குறைப்பது மில்லியன் கணக்கான மக்களுக்கு சமூக அழிவை ஏற்படுத்தும். இரண்டு சந்தர்ப்பங்களிலும் முதலாளித்துவத்தின் யதார்த்தமும், நிதி தன்னலக்குழுவின் நலன்களுக்கு சமூகம் கீழ்ப்படுத்தப்பட்டதன் விளைவுகளும் அம்பலப்படுத்தப்படுகின்றன.

வேலையின்மை சலுகைகளின் வெட்டு தொழிலாள வர்க்கத்தில் பெருகிவரும் எதிர்ப்பைத் தூண்டும். வேர்ஜீனியாவில் வொல்வோ, பென்சில்வேனியாவில் உள் ATI எஃகுத் தொழிலாளர்கள் மற்றும் மாசசூசெட்ஸ் செவிலியர்கள் ஆகியோரின் தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள் வளர்ந்து வரும் வெடிப்பின் ஆரம்ப வெளிப்பாடுகளாகும்.

ஆளும் உயரடுக்கின் கொள்கைகளுக்கு தொழிலாள வர்க்க எதிர்ப்பை அடக்குவதற்கு பல தசாப்தங்களாக முறையாக உழைத்துள்ள பெருநிறுவன சார்பு தொழிற்சங்கங்களின் கைகளில் இருந்து எடுக்கப்பட்டு இந்த போராட்டங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

வேலையின்மை சலுகைகளை வெட்டுவதற்கு எதிரான போராட்டம், தன்னலக்குழுக்களை பறிமுதல் செய்யவும், மாபெரும் வங்கிகள் மற்றும் நிறுவனங்களை பொது உடமைகளாக்கவும், முதலாளித்துவ அமைப்பை ஒழிக்கவும், சமூக நோய் எதிர்ப்பு சக்தி கொள்கைக்கு எதிராக மற்றும் சுரண்டலுக்கு எதிராக அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

Loading