வொல்வோ குழுமம் பற்றிய பொது விபரம்: வேலைநிறுத்தம் செய்யும் நியூ ரிவர் வலி தொழிலாளர்கள் எதை எதிர்த்து நிற்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வேர்ஜீனியாவின் டப்ளினில் அண்ணளவாக 3,000 தொழிலாளர்கள் வட அமெரிக்க வொல்வோ கனரக வாகன நிறுவனத்தை எதிர்க்கும் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தில் இரண்டாவது வாரத்திற்குள் நுழைகிறார்கள். இந்த வேலைநிறுத்தம், ஐக்கிய வாகனத் தொழிலாளர்கள் சங்கத்தின் (United Auto Workers union-UAW) ஆதரவு பெற்ற இரண்டாவது நிறுவன சார்பு ஒப்பந்தம் 90 சதவீத தொழிலாளர்களால் ஜூன் 7 அன்று நிராகரிக்கப்பட்டதன் பின்னர் தொடங்கப்பட்டது.

முதல் வாரத்திலேயே, தொழிலாளர்கள் இரண்டு முன்னணி போரை எதிர்கொள்வது இன்னும் தெளிவாகத் தெரிந்தது. ஒருபுறம், நிறுவனம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் மருத்துவ பாதுகாப்பு நலன்களை வெட்டியது, வேர்ஜீனியா மாநில துருப்புக்களின் பாதுகாப்புடன் கருங்காலிகளைக் கொண்டு உற்பத்தியைத் தொடர முயற்சித்தது, மேலும், வேலைநிறுத்தக்காரர்களை மிரட்டுவதற்காக பணிநீக்கக் கடிதங்களையும் அனுப்பியது. மறுபுறம், வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை தனிமைப்படுத்துவதற்கான அனைத்தையும் UAW செய்துள்ளதோடு, வேலைநிறுத்தம் பற்றி வாகனத் தொழிலாளர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களுக்கு தெரிவிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், UAW அண்ணளவாக 800 மில்லியன் டாலர் வேலைநிறுத்த நிதியைக் கொண்டிருந்தாலும், தொழிலாளர்களை பசி பட்டினிக்குள் தள்ளும் வகையில் வாரத்திற்கு 275 டாலர் சொற்ப ஊதியத்தை மட்டும் வழங்க அது திட்டமிடுகிறது.

சுவீடனின் கோத்தென்பர்க்கில் உள்ள வொல்வோ குழுமத்தின் தலைமையகம் (ஆதாரம்: வொல்வோ குழுமம்)

இந்த காட்டிக்கொடுப்பை எதிர்க்கும் போராட்டம் வொல்வோ சாமானிய தொழிலாளர்கள் குழுவால் (Volvo Workers Rank-and-File Committee-VWRFC) வழிநடத்தப்பட்டுள்ளது, இது, UAW வேலைநிறுத்த நிதியிலிருந்து தொழிலாளர்களுக்கு முழு வருமானத்தை வழங்குவது மற்றும் அனைத்து வொல்வோ தொழிலாளர்களையும் ஒருங்கிணைக்க போராடுவது உட்பட தொழிலாளர்களின் வெற்றிக்கு ஒரு மூலோபாயம் தேவை என வலியுறுத்தியுள்ளது. VWRFC ஜூன் 8 அன்று விடுத்த அறிக்கையில் இவ்வாறு கூறியது: 3. ஏனைய வொல்வோ தொழிலாளர்களுடன் ஒன்றிணைவது. “ஏனைய வொல்வோ தொழிலாளர்களிடமிருந்து, அதிலும் குறிப்பாக வொல்வோ மாக் தொழிலாளர்களிடமிருந்து எங்களைப் பிரிக்கும் UAW இன் வேண்டுமென்றே செய்யப்படும் தந்திரோபாயம் இப்போது முடிவடைகிறது. தொழிலாளர்கள் ஐக்கியப்படுவதை விரும்புகிறார்கள். எதிரி நம்மீது போர் தொடுக்க விரும்பினால், ஹேகர்ஸ்டவுன் (Hagerstown), மாகுங்கி (Macungie), மற்றும் ரோனோக் (Roanoke), அத்துடன் சுவீடன், பிரான்ஸ், பெல்ஜியம், ரஷ்யா, பிரேசில், இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள வொல்வோ நிறுவனங்கள் உட்பட, எதிரியின் பின்புறத்தில் இருந்து புதிய முன்னணிகளைத் திறக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.”

வொல்வோ எனும் இராட்சத நிறுவனம்

இதற்காகப் போராட, தொழிலாளர்கள் எதை எதிர்த்து நிற்கிறார்கள் என்பதற்கான தெளிவானதொரு வேலைத்திட்டம் அவசியம். வட அமெரிக்க வொல்வோ கனரக வாகன ஆலையின் தாய் நிறுவனமான வொல்வோ குழுமம் ஒரு பெரும் சக்திவாய்ந்த எதிரியாகும். இது, 61 பில்லியன் டாலருக்கு அதிகமான சொத்துக்களைக் கொண்டுள்ள, ஒரு டஜனுக்கு மேற்பட்ட நாடுகளில் செயல்படக்கூடிய, மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கும் மற்றும் செல்வாக்கை நிலைநாட்டும் அளவிற்கு கணிசமான வளங்களையும் கொண்டுள்ள ஒரு மிகப்பெரிய, பன்னாட்டு நிறுவனமாகும்.

வொல்வோ, உலகில் இரண்டாவது மிகப்பெரிய கனரக வாகன உற்பத்தியாளராக வளர்ச்சியடைவதற்கு கடந்த 20 ஆண்டுகளாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் அறிந்தபடி, நிறுவனத்தை அமெரிக்காவில் விரிவுபடுத்த 2001 இல் மாக் நிறுவனத்தை (ரெனால்ட் கனரக வாகன உற்பத்தி நிறுவனத்தின் ஒரு பகுதி) வாங்கியது. பின்னர் வொல்வோ ஆசியாவில் ஊடுருவ 2007 இல் நிசான் டீசல் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து சீனாவின் ஒரு மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான டோங்ஃபெங்கின் கனரக வாகன உற்பத்தியுடன் 2013 இல் கூட்டுடைமையை மேற்கொண்டது, மேலும் இந்தியாவில் 2008 இல் எய்ச்சர் (Eicher) நிறுவனத்துடன் இதேபோன்ற ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.

வொல்வொ தொழிலாளர் சக்தியின் உலகளாவிய விநியோகம் (ஆதாரம்: வொல்வோ குழுமம்)

இந்த ஆக்கிரோஷமான சர்வதேச அளவிலான வளர்ச்சி இதனை பெரும் பணக்கார மற்றும் இலாபகர நிறுவனமாக்கியுள்ளது. நிறுவனம் 2019 ஆம் ஆண்டில் மட்டும், 4.3 பில்லியன் டாலர் துல்லிய இலாபத்துடன் 51 பில்லியன் டாலர் விற்பனையை செய்துள்ளது.

நிறுவன அறிக்கைகளின்படி, தலைமை நிறைவேற்று அதிகாரி மார்ட்டின் லண்ட்ஸ்டெட் (Martin Lundstedt) 2020 ம் ஆண்டில், 5,272,760 அமெரிக்க டாலர்களை (SEK இல் இருந்து கணக்கிடப்பட்டது) சம்பாதித்துள்ளார், அதேவேளை தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் கோவிட்-19 நோய்தொற்றால் பாதிக்கப்பட்டனர். வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு மாதத்திற்கு 1,800 டாலர் நிரந்தர ஊதிய உயர்வு அளிக்க லண்ட்ஸ்டெட்டின் சம்பளம் மட்டுமே போதுமானதாக இருக்கும்!

ஆனால் உண்மையான பணம் நிறுவனத்தின் பங்குகளில் உள்ளது. வொல்வோ உரிமையாளர்களின் செல்வம் கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

மார்ச் 2020 நிலவரப்படி நிறுவனத்தின் சந்தை மூலதனம், அதாவது நிறுவனத்தின் மொத்த மதிப்பு 22 பில்லியன் டாலராக இருந்தது. மார்ச் 2021 இல் இது 57 பில்லியன் டாலராகி இருந்தது! கோவிட் காலத்திற்கு முன்னைய நிறுவனத்தின் பங்குகளை நீங்கள் ஒப்பீடு செய்தாலும், வொல்வோ உரிமையாளர்கள் தங்கள் செல்வத்தை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கியுள்ளது தெரியும்.

உண்மையில், இன்னும் சில நாட்களில், ஜூலை 1, 2021 அன்று, நிறுவனம் அதன் பொதுக் கூட்டத்தின்போது தனது பங்குதாரர்களுக்கு பாரிய இலாபப்பங்கீட்டை வழங்க தயாராகி வருகிறது. அதாவது, உற்பத்தி மூலம் உருவாக்கப்பட்ட 2,318,135,376 டாலர்கள் மொத்தப் பணமும் வெளியேற்றப்படும். இது ஆண்டின் முற்பகுதியிலிருந்து 3.68 பில்லியன் டாலராக உச்சத்தில் இருந்தது.

இந்த தொகை, நியூ ரிவர் வலி ஆலை மட்டுமல்லாமல், உலகளவில் வொல்வோ நிறுவனத்தின் ஒட்டுமொத்த 51,131 தொழில்நுட்பத் தொழிலாளர்களுக்கு 116,954 டாலர் மேலதிக கொடுப்பனவை வழங்க போதுமானதாக இருக்கும் என நாங்கள் கணக்கிட்டோம்.

வொல்வோவின் பணம் மரங்களிலிருந்து வளரவில்லை என்பதை வலியுறுத்த வேண்டும். இது தொழிலாளர்கள் மூலம் கிடைக்கிறது.

உலகெங்கிலுமுள்ள வொல்வோ உற்பத்தி வழிகளிலிருந்து ஒவ்வொரு நாளும், வொல்வோ நிறுவனத்தை வைத்திருக்கும் மிகப்பெரிய வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தொழிலாளர்களிடமிருந்து இலாபத்தை பிழிந்தெடுக்க இந்நிறுவனத்தை பயன்படுத்துகின்றன. இந்தியா, அல்லது பிரான்ஸ், அல்லது மெக்சிக்கோ, கனடா, அல்லது சுவீடன் என வொல்வோ நிறுவனத்தின் அனைத்து பிரிவுகளிலும் வொல்வோவின் இலாபங்கள் உற்பத்தி பிரிவில் உள்ள தொழிலாளர்களை கசக்கி பிழிவதன் மூலம் கிடைக்கின்றன.

நிறுவனத்தை வைத்திருக்கும் வங்கிகள், தொழிற்சங்கங்கள்

இந்தப் பணம், நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை தன்வசம் வைத்திருக்கும் BlackRock, Vanguard, Industrivarden (சுவீடன் சொத்து மேலாளர்), SEB, Nordea, JP Morgan போன்ற சில முக்கிய வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களுக்கு பாய்ச்சப்படுகிறது.

வொல்வோவின் மூன்றாவது பெரிய உரிமையாளராக உண்மையில் சுவீடன் தொழிற்சங்கங்கள் உள்ளன, குறிப்பாக சுவீடன் தொழிற்சங்க கூட்டமைப்பு (Swedish Trade Union Confederation) மற்றும் சுவீடன் நிறுவன கூட்டமைப்பு (Confederation of Swedish Enterprise) ஆகிய தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்தும் ஒரு காப்பீட்டு மற்றும் நிதி மேலாண்மை நிறுவனமான AMF தான் மூன்றாவது உரிமையாளராக உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர், இந்த நிதியின் தலைவர்கள் தமக்குத் தாமே பெரும் மேலதிக கொடுப்பனவுகளையும் ஓய்வூதியங்களையும் வழங்கிக் கொண்ட ஊழலில் சிக்கியுள்ளனர், அதே நேரத்தில், சாமானிய சுவீடன் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியத்தை நிறுவனம் குறைத்துவிட்டிருந்தது.

பரிட்சியமான ஒலிபோலல்வா?

அமெரிக்காவின் முக்கிய கனரக வாகன மற்றும் கார் நிறுவனங்களின் குழுமங்களில் UAW வெறுமனே அங்கம் வகிப்பது – உதாரணமாக வொல்வோவுடன் அழுகிப்போன ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ரே கரி (Ray Curry), சரக்குக் கப்பல் கனரக வாகன உரிமையாளர் Daimler AG இன் குழுமத்தில் அங்கம் வகிக்கிறார் – அதன் நிர்வாகிகளை கூட்டு நிர்வாக நிதியிலிருந்து இலாபகரமான சம்பளத்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்கிறது, எனவே வொல்வோவுடன் சுவீடன் தொழிற்சங்க பிரதிநிதிகளும் இதைச் செய்கிறார்கள். VFF ஓய்வூதிய நிதி நிர்வாகியைப் போல, சுவீடனின் இரண்டு மிகப்பெரிய தொழிற்சங்கங்களான IF Metall மற்றும் Unionen இன் பிரதிநிதிகளும் இயக்குநர் குழுமங்களில் அங்கம் வகிக்கின்றனர். இந்த “தொழிலாளர் பிரதிநிதிகள்” நியூ ரிவர் வலி ஆலையில் நடக்கும் வேலைநிறுத்தம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை, பேச விரும்பவும் இல்லை.

விலைபோகும் அரசியல்வாதிகள்

வொல்வோ நிறுவனம் எங்கு செயல்பட்டாலும், அங்கு பிரதமர்கள், ஜனாதிபதிகள், ஆளுநர்களிடம் தமது சக்திவாய்ந்த செல்வாக்கை பிரயோகிக்கிறது. ஜூன் 10 அன்று, தலைமை நிறைவேற்று அதிகாரி மார்ட்டின் லண்ட்ஸ்டெட் சுவீடனுக்கான பிரெஞ்சு தூதரின் இல்லத்தில் “பிரான்சில் தொழில்துறையில் அவரது அர்ப்பணிப்புக்காக” பிரான்சின் உயர்விருதான Chevalier de la Légion d'honneur வழங்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சுவீடனின் கோத்தென்பர்க்கில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டின் போது, பிரான்சில் “செல்வந்தர்களின் ஜனாதிபதி” என்று அழைக்கப்படும் பிரெஞ்சு பிரதமர் இமானுவல் மக்ரோனுக்கும், சுவீடன் பிரதமருக்கும் வொல்வோ குழுமத்தின் தலைமையகத்தில் இவர் விருந்தளித்தார்.

அமெரிக்காவில், வொல்வோவும் அதன் துணை நிறுவனங்களும் அரசியல்வாதிகளுக்கு 750,000 டாலர்களையும், வேர்ஜீனியா, ஒரேகான், வடக்கு கரோலினா மற்றும் ஏனைய மாநிலங்களில் பிரச்சார பங்களிப்புகளுக்கு 131,646 டாலர்களையும் நன்கொடையாக அளித்தன. மேற்கு வேர்ஜீனியாவைச் சேர்ந்த அமெரிக்க செனட்டர் ஷெல்லி மூரே கேபிட்டோ போன்ற குடியரசுக் கட்சியினர் 51.15 சதவீத நன்கொடைகளையும், மற்றும் வேர்ஜீனியாவில் செனட்டர் மார்க் வார்னர் போன்ற ஜனநாயகக் கட்சியினர் 48.85 சதவீத நன்கொடைகளையும் பெற்றனர். இதன் விளைவாக, மேரிலாந்தின் ஹேகர்ஸ்டவுனில் உள்ள நியூ ரிவர் வலி ஆலை நடவடிக்கைகளுக்கு பெரும் வரி குறைப்புக்களும் மற்றும் பிற சலுகைகளும் கிடைத்துள்ளன.

இந்த நிறுவனம் வேர்ஜீனியாவின் ஜனநாயகக் கட்சி ஆளுநர் ரால்ஃப் நோர்த்தமுடன் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், நோர்த்தம் தனது கோவிட்-19 வணிக பணிக்குழுவில் சேர்க்க வொல்வோ கனரக வாகன டப்ளின் ஆலையில் துணைத் தலைவர் மற்றும் பொது மேலாளராக பிராங்கி மார்ச்சண்ட் (Franky Marchand) ஐ நியமித்தார். பணியிடங்களில் கொடிய தொற்றுநோய் தீவிரமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையிலும், மற்றும் UAW ஐ மீறி மிச்சிகன், ஒஹியோ மற்றும் ஏனைய மாநிலங்களில் வாகனத் தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளமை வாகன, கனரக வாகன மற்றும் ஏனைய உற்பத்தி ஆலைகளை மூடுவதற்கு கட்டாயப்படுத்தும் நிலையிலும், பணிக்குழுவின் நோக்கம் வணிகங்களுக்கான கட்டுப்பாடுகளை எவ்வாறு தளர்த்துவது என்பது தொடர்பாக ஆளுநருக்கு ஆலோசனை வழங்குவதாகும்.

வேர்ஜீனியாவில் ஒரு மாணவருக்கான செலவு 2008 ஆம் ஆண்டு முதல் 8 சதவீதம் குறைந்துள்ளது, மேலும் நோர்த்தமின் வரவு-செலவுத் திட்ட வெட்டுக்கள், தேசிய சராசரியை விட மிகக் குறைவான ஊதியங்களைப் பெறும் ரிச்மண்ட் மாநில தலைநகரில் உள்ள கல்வியாளர்களை கடந்த பல ஆண்டுகளாக வேலைநிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்த மீண்டும் மீண்டும் தூண்டிவிட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டில் நியூ ரிவர் வலி ஆலை விரிவாக்கத்திற்கு வொல்வோ அறிவித்தபோது, வேர்ஜீனியா எண்டர்பிரைஸ் மண்டல திட்டத்தின் பிற சலுகைகளுடன், 16.5 மில்லியன் டாலர் மானியத்தை நிறுவனத்திற்கு ஆளுநர் வழங்குவதை இது தடுக்கவில்லை. அந்த நேரத்தில், வொல்வோ நிறுவனம் “இந்த சமூகத்தின் அஸ்திவாரமாக” இருந்து “பிராந்திய பொருளாதாரத்திற்கு எரியூட்டியதாக” ஆளுநர் சீறினார்.

வொல்வோ தொழிலாளர்களின் மறியல் எல்லைகள் ஊடாக செல்லும் கருங்காலிகளை வரி செலுத்துவோரின் செலவில் பாதுகாப்புடன் அழைத்துச் செல்ல வேர்ஜீனிய மாநில துருப்புக்களை நியமித்து வொல்வோ நலன்களை தற்போது நோர்த்தம் பாதுகாத்து வருகிறார்.

தொழிலாளர்களின் கூட்டாளிகள்

வொல்வோவும், டைம்லர் போன்ற அதன் சர்வதேச போட்டியாளர்களும், நீண்ட காலமாக உற்பத்தியின் பூகோளமயமாக்கலை உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்துப் போட்டியிடுவதற்குப் பயன்படுத்துகின்றனர். நம்பிக்கையற்ற காலாவதியான தேசியவாத முன்னோக்கின் அடிப்படையில் அமைந்த UAW உம் மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களும், எந்தவித முற்போக்கான பாணியிலும் பூகோளமயமாக்கலுக்கு பதிலளிக்க திறனில்லாத நிலையில், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி பலவீனப்படுத்த நிறுவனங்களின் முயற்சிகளுடன் கைகோர்த்து கொள்ள முயல்கின்றன.

இந்தியாவின் பெங்களூரில் உள்ள வொல்வோ பேருந்து தொழிலாளி (ஆதாரம்: வொல்வோ குழுமம்)

ஆனால், உற்பத்தியின் பூகோள அளவிலான ஒருங்கிணைப்பு என்பது, தொழிலாளர்கள் எந்த நாட்டவராயினும், அனைத்து தொழிலாளர்களின் வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் பணி நிலைமைகளைப் பாதுகாக்க உலகளாவிய போராட்டத்தை நடத்துவதற்கான முன்நிகழ்ந்திராத நிலைமைகளை அது உருவாக்கியுள்ளது.

உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டது போல:

வேர்ஜீனியாவின் டப்ளினில் உள்ள வொல்வோ தொழிலாளர்கள், சுவீடனின் கோத்தென்பர்க்கில் தலைமையகத்தைக் கொண்ட இந்த நிறுவனம், ஒவ்வொரு கண்டத்திலும் பரவலாக 18 வெவ்வேறு நாடுகளில் அமைந்துள்ள உற்பத்தி வசதிகளில் கிட்டத்தட்ட 100,000 தொழிலாளர்களை கொண்டுள்ளது என்ற உண்மையை நன்கு அறிவர். இவற்றில் பல வசதிகள் ஒன்றுடன் மற்றொன்று சார்ந்துள்ளன, அதாவது ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு பொருட்களை வழங்கும் தேவையுள்ளது. நிறுவனங்களுக்கான எதிர்ப்பு என்பது நம்பிக்கையில்லாதது என்ற அதிகாரத்துவத்தின் கூற்றுகளுக்கு மாறாக, தொழிலாளர்களை பூகோள அளவில் ஒருங்கிணைத்து பயன்படுத்தினால், அவர்களது சாத்தியமான சக்தி பிரம்மாண்டமானது என்பதை அவர்கள் உணர்கிறார்கள்.

புதிய நியூ ரிவர் வலி தொழிலாளர்கள் இந்த பாரிய எந்திரத்தை எதிர்த்துப் போராட விரும்புவார்களாயின், அவர்களால் தனித்து அதைச் செய்ய முடியாது. ஒரு பன்னாட்டு நிறுவனத்தை எதிர்த்து போராடுவதன் நன்மை என்னவென்றால், இதே நிலைமைகளின் கீழ் உலகின் ஏனைய பகுதிகளிலும் இதே வேலையைச் செய்யும் பல தொழிலாளர்கள் அவர்களுடன் இருப்பது தான்.

உலகெங்கிலுமுள்ள வொல்வோ குழுமத்தின் முக்கிய நடவடிக்கைகளுக்கான முக்கிய மையங்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களால் தனித்து நின்று போராட முடியாது. நிறுவனம் உலகளவில் அதன் செயல்பாடுகளை கொண்டுள்ளது; எனவே தொழிலாளர்களும் உலகளாவிய பதிலிறுப்பை செய்யவேண்டும்.

பென்சில்வேனியா, மேரிலாந்த் மற்றும் ஏனைய மாநிலங்களின் சக தொழிலாளர்களை அணுகுவதற்கு மேலாக, ஐரோப்பாவில் உள்ள தங்களது சகோதர சகோதரிகளையும் தொழிலாளர்கள் தொடர்பு கொள்ள வேண்டும், இங்கு ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். அதேபோல, ஆசிய சந்தைக்கான ஒரு முக்கிய நாடியான இந்தியாவிலும் உள்ளனர். தற்போது, ஏனைய நாடுகளைச் சேர்ந்த இந்த தொழிலாளர்களில் பெரும்பாலானவர்களுக்கு உங்கள் வேலைநிறுத்தம் பற்றி தெரியாது, ஏனென்றால் நிறுவனம், UAW மற்றும் ஏனைய நாடுகளிலுள்ள தொழிற்சங்கங்களும் அவற்றால் முடிந்த மட்டும் மவுனம் சாதிக்கின்றன. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது பற்றி உங்கள் சக தொழிலாளர்களுக்கு சொல்லுங்கள் மற்றும் இந்த செயல்பாட்டுக்கு கூட்டாளிகளைக் கண்டறியுங்கள்.

வட அமெரிக்கா (அனைத்து மையங்கள்)

  •  லே வலி மாக் கனரக வாகன ஆலை, மகுங்கி, பென்சில்வேனியா: 2,100 ஊழியர்கள்
  •  ஹேகர்ஸ்டவுன், மேரிலாந்த்: 1,700 ஊழியர்கள்
  •  மிடில்டவுன் மறுஉற்பத்தி மையம், பென்சில்வேனியா
  •  வொல்வோ கட்டுமான உபகரண ஆலை, ஷிப்பென்ஸ்பர்க், பென்சில்வேனியா: 800 ஊழியர்கள்
  •  நோவா பேருந்து ஊழியர்கள் (1,500 தொழிலாளர்கள்): பிளாட்ஸ்பர்க், நியூயோர்க்; செயிண்ட்-யூஸ்டேச், கியூபெக்; செயிண்ட்-ஃபிராங்கோயிஸ்-டு-லாக், கியூபெக்
  •  மெக்சிக்கோ வொல்வோ குழுமம், மெக்சிக்கோ நகரம்: 1,300 ஊழியர்கள்
  •  வொல்வோ பென்டா, லெக்சிங்டன், டென்னிசி: 130 ஊழியர்கள்
  •  வொல்வோ விநியோக மையம், பைஹாலியா, மிசிசிப்பி: 500 ஊழியர்கள்

ஐரோப்பா (முக்கிய மையங்கள்)

  •  டூவ் ஆலை, கோத்தென்பர்க், சுவீடன்: 1900 ஊழியர்கள்
  •  பிளான்வில் ஆலை, லியோன், பிரான்ஸ்: 1,900 ஊழியர்கள்
  •  ஸ்கோவ்டே, சுவீடன்: 3,000 ஊழியர்கள்
  •  உமே, சுவீடன்: 1,600 ஊழியர்கள்
  •  கென்ட், நெதர்லாந்த்: 2,300 ஊழியர்கள்
  •  கலுகா, மாஸ்கோ, ரஷ்யா: 700 ஊழியர்கள்
  •  ரெனால்ட் கனரக வாகன ஆலை, போர்க்-என்-பிரெஸ்ஸே, பிரான்ஸ்: 1,350 ஊழியர்கள்
  •  வெனிசியக்ஸ் எந்திர ஆலை, பிரான்ஸ்: 700 ஊழியர்கள்

ஆசியா (முக்கிய மையங்கள்)

(வொல்வோ இந்தியாவிலுள்ள அதன் நிறுவனங்களில் மொத்தம் 12,000 ஊழியர்களைக் கொண்டுள்ளது. பெங்களூரில் ஒன்றுக்கொன்று அருகாமையில் அமைந்துள்ள மூன்று முக்கிய ஆலைகளில் 3,500 தொழிற்சாலைத் தொழிலாளர்கள் உள்ளனர்.)

  •  ஹோஸ்கோட் கனரக வாகன ஒருங்கிணைப்பு ஆலை, பெங்களூர், இந்தியா
  •  பீன்யா கட்டுமான உபகரண ஆலை, பெங்களூர், இந்தியா
  •  பீதாம்பூர் வணிக வாகனங்கள், பெங்களூர், இந்தியா
  •  பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா: 600 ஊழியர்கள்

தென் அமெரிக்கா (முக்கிய மையங்கள்)

  •  குரிடிபா, பி.ஆர்., பிரேசில்: 350 ஊழியர்கள்

ஆபிரிக்கா (முக்கிய மையங்கள்)

  •  கனரக வாகன ஒருங்கிணைப்பு ஆலை, டர்பன், தென் ஆபிரிக்கா: 170 ஊழியர்கள்

முன்னோக்கிச் செல்லும் வழி

தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நிறுவனத்தின் கஜானாக்களில் பில்லியன் கணக்கான டாலர்கள் உள்ளன. அதேபோல, வேலைநிறுத்தத்திற்கு நிதியளிக்க UAW வேலைநிறுத்த ஊதிய நிதியில் மில்லியன் கணக்கான டாலர்கள் உள்ளன.

பெல்ஜியத்தின் கென்டில் உள்ள வொல்வோ தொழிலாளர்கள் (ஆதாரம்: வொல்வோ குழுமம்)

வேலைநிறுத்தத்தை விரிவுபடுத்துவது, பணம் இல்லை என்ற பொய்யை நிராகரிப்பது, மற்றும் தொழிலாளர்களின் நலன்களை உண்மையில் மேம்படுத்த சாமானிய தொழிலாளர் குழுக்களின் வலையமைப்பை விரிவுபடுத்துவது ஆகியவற்றின் மூலம் மட்டுமே இந்த வேலைநிறுத்தம் வெல்லப்படும். அதே நேரத்தில், வொல்வோ தொழிலாளர்களுக்கு உதவ முன்வருவதும், பெருநிறுவன சார்பு UAW அவர்களது வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்த முனைவதை முறியடிப்பதும் ஒட்டுமொத்த தொழிலாளர்களின், அதிலும் குறிப்பாக வாகனத்துறை தொழிலாளர்களின் கடமையாகும்.

தொழிலாளர்கள் தங்களிடம் உள்ள அனைத்தையும் கொண்டு வேலைநிறுத்தத்தை வென்றெடுக்க, அவர்களது நலன்களையும் போராட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சொந்த அமைப்பு அவர்களுக்கு தேவை. வொல்வோ தொழிலாளர்கள் வொல்வோ சாமானிய தொழிலாளர்கள் குழுவில் (Volvo Workers Rank-and-File Committee-VWRFC) சேர வேண்டும் என்பதுடன், வேலைநிறுத்தம் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கு ஒருங்கிணைந்த சர்வதேச அளவிலான முனைப்பைக் கொண்டிருக்க வேண்டும், மேலும் இந்த போராட்டத்திற்காக கூட்டாளிகளைக் கண்டுபிடித்து உருவாக்க வேண்டும்.

ஏற்கனவே, பல நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்யும் வொல்வோ தொழிலாளர்களுக்கு ஆதரவு தர அறிக்கைகளை அனுப்பியுள்ளனர்.உலக சோசலிச வலைத் தளம் (WSWS) உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்களுடன் தொடர்பு கொள்ள வழிவகைகளை ஏற்படுத்தவும், மேலும் இந்த முக்கியமான போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கான அவர்களது முயற்சிகளை ஒருங்கிணைக்கவும் தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கும்.

வொல்வோ தொழிலாளர்கள் வொல்வோ சாமானிய தொழிலாளர்கள் குழுவை volvowrfc@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக அல்லது (540) 307-0509 என்ற தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமாக தொடர்பு கொள்ளலாம்.

Loading