வேர்ஜீனியாவில் உள்ள வொல்வோ கனரக வாகனத் தொழிலாளர்கள் இரண்டாவது UAW ஆதரவு ஒப்பந்தத்தை பெருமளவில் நிராகரிக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வேர்ஜீனியாவின் டப்ளினில் உள்ள நியூ ரிவர் வலி (NRV) ஆலையில் வொல்வோ கனரக வாகனத் தொழிலாளர்கள் ஞாயிறன்று ஐக்கிய வாகனத்துறை தொழிற்சங்கம் (UAW) முன்மொழிந்த ஆறு ஆண்டுகால தொழிலாளர் ஒப்பந்தத்தை தீர்க்கமாக தோற்கடித்தனர். இதன் விளைவு மிகப்பெரியது: மணிநேர தொழிலாளர்களில் 90 சதவீதம் பேரும், 91 சதவீத ஊழியர்களும் இணைந்து நிறுவன சார்பு ஒப்பந்தத்தை நிராகரித்துள்ளனர்.

ஆலையில் உள்ள கிட்டத்தட்ட 3,000 தொழிலாளர்களுக்கு மத்தியில் மே 16 அன்று நடந்த முதல் வாக்குப்பதிவை விட தற்போதைய வாக்குப்பதிவுகள் மிகஅதிகம் என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர், அப்போது 91 சதவீத மணிநேர தொழிலாளர்களும், 83 சதவீத ஊழியர்களும் “இல்லை” என வாக்களித்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்புக்கு முன்னைய நாட்களில், வொல்வோ சாமானிய தொழிலாளர்கள் குழு (Volvo Workers Rank-and-File Committee - VWRFC) “இல்லை” என்று வாக்களிக்க கோரும் ஒரு அறிக்கையை தொழிற்சாலை முழுவதும் பரவலாக வினியோகித்தது.

The tally for the vote on the second UAW-backed agreement (UAW Local 2069)

UAW பேச்சுவார்த்தை நடத்திய கடைசி மூன்று ஒப்பந்தங்களில் கடுமையான பின்னடைவுகளுக்கு ஒப்புக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குப் பின்னர், தொழிலாளர்கள், பல அடுக்கு ஊதிய மற்றும் சலுகை முறையை முறியடிக்கவும், கணிசமான ஊதிய உயர்வுகளை வென்றெடுக்கவும், அதிகபட்ச சுகாதார செலவுகள், 10 மணிநேர வேலைநாள் மற்றும் ஓய்வூதிய நலன்களில் வெட்டுக்கள் ஆகியவற்றை திணிப்பதற்கான முயற்சிகளை எதிர்க்கவும் உறுதிபூண்டுள்ளனர்.

வெள்ளியன்று தொழிற்சாலைக்குள் ஒப்பந்தம் தொடர்பாக பிரச்சாரம் செய்ய வொல்வோ நிர்வாகம் ஆலைக்கு அழைப்பு விடுத்திருந்த உயர் UAW தேசிய மற்றும் பிராந்திய அதிகாரிகள், ஒப்பந்தத்தை மேம்படுத்த பணம் இல்லை என்று கூறியபோது தொழிலாளர்களின் கோபத்தையும் ஏளனத்தையும் எதிர்கொண்டனர்.

கோரிக்கைகளை மேலும் திரும்பப் பெற தொழிலாளர்களை கோரும் அதேவேளையில், வொல்வோ கனரக வாகன தாய் நிறுவனமான சுவீடன் நாட்டைச் சேர்ந்த வொல்வோ குழுமம், அதன் ஜப்பானைத் தளமாகக் கொண்ட கிளை நிறுவனத்தின் UD கனரக வாகனங்களை விற்றுக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, தோராயமாக 2.3 பில்லியன் டாலர்களை பங்குதாரர்களிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது. இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் தோராயமாக 3.68 பில்லியன் டாலர் அளவிற்கு நிறுவனத்தின் வரலாற்றில் அது செலுத்திய மிகப்பெரிய இலாபப்பங்கீடாக இருந்தது.

நியூ ரிவர் வலி ஆலையில் தொழிலாளர்கள் (ஆதாரம்: வொல்வோ குழு)

வொல்வோ தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்திடம் இங்கு போராடுவதற்கான மிகுந்த உணர்வு இருப்பதாக கூறினார்கள். “மக்கள் இதில் மிகுந்த பைத்தியமாகவும், ஆர்வமாகவும் உள்ளனர், மேலும் இது இப்போதே கவனிக்கப்படவேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்,” என்று ஒரு தொழிலாளி கூறினார். “தொழிற்சங்க முக்கியஸ்தர்கள் தொழிற்சாலைக்குள் சென்று பேசி அனைவரது மனதையும் மாற்ற முயன்றனர், என்றாலும் பின்னர் அது கைவிடப்பட்டது. [லோக்கல் 2069 தலைவர்] மாட் ப்ளாண்டினோ, தங்களால் ஒரு சிறந்த ஒப்பந்தத்தை எட்ட முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தார், என்றாலும் சுகாதார காப்பீட்டிற்கு நாங்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது, ஏனென்றால் ஊதிய அளவு உயர்ந்து கொண்டே இருக்கிறது” என்றும் கூறினார்.

மேலும் இந்த தொழிலாளி இவ்வாறு தெரிவித்தார்: “2008 இல் ஒரு மணி நேரத்திற்கு 7 டாலரை இழந்த ஒரு தொழிலாளி, ப்ளாண்டினோவிடம் ‘நீங்கள் இந்த கொடுப்பனவுகள் பற்றி கேட்கவிடாமல் எங்கள் தொண்டையை நெரித்தீர்கள், மேலும் அப்போது நேரம் குறைவாக உள்ளது, நீங்கள் உதவ வேண்டும் என்று எங்களிடம் கூறினீர்கள். ஆனால் இப்போது நிறுவனம் பில்லியன்களை சம்பாதிக்கையில் கூட நீங்கள் இன்னும் எங்களைத் திருப்பி விடுகிறீர்கள்’ என்று கூறினார். தற்போது, தொழிற்சங்கம் உயர்வாக கருதப்படவில்லை. நிறுவனத்திற்காக அவர்கள் பரிந்து பேசுவதால் மக்கள் கோபப்படுவதோடு, அவர்களை அங்கிருந்து வெளியேற்ற விரும்புகிறார்கள். இந்த நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு பல பில்லியன்கள் இலாபப் பங்கீட்டை வழங்கி வருகிறது, இதற்கு மாறாக பணத்தை சம்பாதித்துக் கொடுக்கும் மக்களுடன் அவர்கள் இந்த செல்வத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும்.”

வொல்வோ சாமானிய தொழிலாளர்கள் குழுவின் பங்கு பற்றி பேசுகையில் ஒரு தொழிலாளி, “இதில் இந்த குழு ஒரு பெரும் பங்காற்றியது. இந்த அறிக்கை இல்லாமல் இருந்திருக்குமானால், அனைவரையும் தக்க வைத்துக் கொண்டிருக்க முடியாது. ஒவ்வொரு நாளும், தொழிலாளர்கள் உங்கள் வலைத் தளத்தை [WSWS] பார்க்கின்றனர். தொடர்ந்து தகவல்கள் வழங்கப்படுவதும், ஒரு குழுவைக் கொண்டிருப்பதும் ஒரு பெரிய விடயமாகும். எங்களது அறிக்கைகள் அனைவருக்கும் தகவல் வழங்கி இதில் ஈடுபட வைத்தன” என்று கூறினார்.

UAW அழுகிப்போன ஒப்பந்தங்களுடன் திரும்பி வரப்போகிறது என்று எச்சரித்து, இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல தற்போது தொழிலாளர்களுக்கு ஒரு மூலோபாயம் தேவை என்று அவர் கூறினார். “அவர்கள் மீண்டும் என்ன தந்திரம் செய்யப் போகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. சில மூத்த தொழிலாளர்கள் ஏதேனும் சிறப்பானதைக் கொண்டுவருவதற்கு முன்னர் இன்னும் 2-3 நிராகரிப்புகள் நிகழும் என்று கூறுகின்றனர். இதை பல ஆண்டுகளுக்கு முன்னரே சரி செய்யப்பட்டிருக்க வேண்டும். நாங்கள் வேலைநிறுத்தம் செய்ய வேண்டுமென UAW விரும்புகிறது என நான் நினைக்கவில்லை. தொழில்நுட்ப ரீதியாக நாங்கள் இப்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடியும். அநேகமாக நாளை பிற்பகலுக்குள் லோக்கலின் பேஸ்புக் பக்கத்தில் சில அறிவிப்புகள் பதிவிடப்படலாம்.”

“இது அவர்களிடமிருந்து [UAW] விலகி புதிய ஒன்றை உருவாக்குவதற்கான போராட்டமாக இருக்கும். ஆனால் அனைவரும் ஏதோவொன்றை விரும்புகிறார்கள். நாம் அனைவரும் ஒன்றாக மாட்டிக்கொண்டோம். குழுவின் அறிக்கைகளை நாம் தொடர்ந்து வழங்க வேண்டும்.

“கடினமான நேரங்கள் வந்து கொண்டிருக்கின்றன, பங்கு சந்தை சீர்குலையக் கூடும். கடந்த சில ஆண்டுகளாக, மக்களின் கண்கள் திறக்கப்படுகின்றன. இது வொல்வோ தொழிலாளர்களுக்கு மட்டுமானதல்ல, அலபாமாவின் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள், இந்திய தொழிலாளர்கள் என எவரும் எங்களிடமிருந்து வேறுபட்டவர்கள் அல்ல. எங்களைப் போலவே அவர்களும் கடினமாக உழைக்கிறார்கள்.”

மற்றொரு வொல்வோ தொழிலாளி, “இது, அவர்களது தந்திரமிக்க ஒப்பந்தங்களில் நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை என்பதைக் காட்டுவதற்கான மற்றொரு வாக்களிப்பாகும். அவர்கள் இன்னும் கொஞ்சம் கடினமாக முயற்சி செய்யப் போகிறார்கள். மேலும், மற்றொரு அழுகிப்போன ஒப்பந்தத்தை அவர்கள் மீண்டும் கொண்டு வருவார்களானால், அதையும் நிராகரித்து நாங்கள் வாக்களிப்போம்” என்று கூறினார்.

“UAW உண்மையில் இதை நிறைவேற்ற கடினமாக அழுத்தம் கொடுத்தது. ஒரு தொழிலாளி ஓய்வூதிய சலுகை வெட்டுக்கள் குறித்து ஒரு தொழிற்சங்க அதிகாரியை தான் எதிர்கொண்டதை வீடியோ பதிவு செய்திருந்தார். அவர், ‘இந்த ஆலையின் தொழிலாளி எவரும் ஒரு கட்டத்தில் ஓய்வுபெறப் போகிறார்கள். நிறுவனம் அவர்களை பசி பட்டினிக்கு ஆளாக்கி வறுமையில் தள்ளவே முயற்சிக்கிறது’ என்றும், பின்னர் அவர்கள் இணையத்திலிருந்து வீடியோவை விரைந்து அகற்ற முனைந்தனர் என்றும் கூறினார்.”

“இந்த ஒப்பந்தத்தை தோற்கடிக்க குழு நிச்சயமாக உதவியது. இது விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், நிறுவனம் மற்றும் தொழிற்சங்கத்திற்கு எதிராக வளர்ந்து வரும் தொழிலாளர்களது எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்த அவர்களுக்காக குரல் கொடுத்தது. [UAW அதிகாரிகளுக்கு] வழங்கப்பட்ட பகிரங்க கடிதத்தையும், மற்றும் ஏனைய எதிர்ப்பு அறிக்கைகளையும் அவர்கள் பார்த்தனர். நிறுவனம் பணக்காரர்களுக்கு இலாபப்பங்கீட்டை வழங்குகிறது, அதேவேளை எங்களுக்கு கையேடுகளை வழங்குகிறது என்று அவர்கள் கோபமடைந்தனர்.”

“பெரிய கேள்வி என்னவென்றால்: நாங்கள் இங்கிருந்து எங்கு செல்வோம்? வொல்வோ விரைவில் பகுதியளவு வெளியேறக் கூடும் என்றும், வேலையின்மை சலுகைகளை வழங்குவதற்கு மாறாக வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் எங்களை வெளியேற்றும் என்றும் வதந்திகள் நிலவுகின்றன.”

மற்றொரு தொழிலாளி, “அனைவரும் ஒன்றுபட்டிருப்பதை நான் நேசிக்கிறேன்” என்று கூறினார். மேலும் அவர், இங்கு வேலைநிறுத்தம் நடந்தாலும் UAW தலைவர்கள் மட்டும் தொடர்ந்து நல்ல சம்பளம் பெறுகிறார்கள், அதேவேளை தொழிலாளர்கள் “வாரத்திற்கு 800-1000 டாலர் சம்பாதிக்கப் பயன்படுத்தப்பட்டாலும் வாரத்திற்கு வெறும் 275 டாலர் வேலைநிறுத்த ஊதியத்தையே பெறுவார்கள்” என்றும் கூறினார்.

“எங்களுக்கு வெற்றி பெற ஒரு மூலோபாயம் தேவை!” என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், நீண்ட, பயனற்ற வேலைநிறுத்தத்திற்கான அச்சுறுத்தல்கள் இருப்பது குறித்து தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கான UAW முயற்சிகளை VWRFC நிராகரித்தது. “வேலைநிறுத்தம் தான் எங்களது ஆயுதம் என்று நாங்கள் கூறுகிறோம். இது நிறுவனத்தை அச்சுறுத்துவதற்கு பயன்படுத்தப்பட வேண்டும், மாறாக தொழிலாளர்களை அச்சுறுத்த அல்ல.” வொல்வோ போராட்டத்தை தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவுகளின் போராட்டங்களுடன் ஒன்றிணைப்பது உட்பட, நிறுவனத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தை வெல்வதற்கான ஒரு மூலோபாயத்தை இது சுருக்கமாக வழங்குகிறது.

NRV ஆலையில் ஏற்பட்ட இந்த படுதோல்வி, தொற்றுநோய்க்கான ஆளும் வர்க்கத்தின் பதிலிறுப்பால் பெரியளவில் தீவிரமடைந்து, அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பின் சமீபத்திய வெளிப்பாடாகும். இந்த போராட்டங்கள் பெருநிறுவன சார்பு தொழிற்சங்கங்களுடனான நேரடி மோதலில் உருவெடுக்கின்றன.

அலபாமாவில், 1,100 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள், அமெரிக்காவின் ஐக்கிய சுரங்கத் தொழிலாளர்கள் (United Mine Workers of America) என்ற தொழிற்சங்கத்தின் ஆதரவு பெற்ற ஒப்பந்தத்தை பெரியளவில் நிராகரித்து பின்னர், Warrior Met நிறுவனத்திற்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒன்டாரியோவின் சட்பரியில், ஐக்கியப்பட்ட எஃகுத் தொழிலாளர்கள் (United Steelworkers) என்ற தொழிற்சங்கத்தின் ஆதரவு பெற்ற ஒப்பந்தத்தை நிராகரித்து, Vale Inco நிறுவனத்திற்கு எதிராக 2,400 சுரங்கத் தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்தனர், இது தொற்றுநோய் காலத்தின் போது தொழிலாளர்களை வேலையில் வைத்திருக்க ஜூன் 2020 இல் ஒரு சிறப்பு ஓராண்டு கால ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டது.

ஏனைய குறிப்பிடத்தக்க போராட்டங்களில், மாசசூசெட்ஸில் உள்ள செவிலியர்கள், மற்றும் பென்சில்வேனியா மற்றும் ஏனைய மாநிலங்களில் ATI நிறுவனத்தில் பணிபுரியும் எஃகுத் தொழிலாளர்கள்; பிரேசிலில் ஆசியர்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள்; இந்தியாவில் வாகனத் தொழிலாளர்கள்; மற்றும் சிலியில் தாமிர சுரங்கத் தொழிலாளர்கள் ஆகியோரது போராட்டங்கள் அடங்கும்.

இந்த போராட்டங்களை ஆளும் வர்க்கத்திற்கு எதிரான ஒருங்கிணைந்த எதிர் தாக்குதலாக உருவாக்க, வொல்வோ தொழிலாளர்களால் ஸ்தாபிக்கப்பட்டது போன்ற சாமானிய தொழிலாளர் குழுக்களின் வலையமைப்பை கட்டியெழுப்புவது அவசியமாகும். இந்த நோக்கத்திற்காக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியைத் தொடங்கியுள்ளது.

Volvo workers: Contact the Volvo Workers Rank-and-File Committee by email at volvowrfc@gmail.comor by text at (540) 307-0509.

Loading