ஸ்பானிய நீதிமன்றங்கள் பாசிச ஃபிராங்கோயிச சர்வாதிகாரத்தை நியாயப்படுத்தும் பிரச்சாரத்தை விரிவாக்குகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஸ்பெயினில் அரசியல் அபிவிருத்திகள் அதிகரித்த வகையில் ஆபத்தான திசையில் நகர்கின்றன. மூன்று ஆண்டு கால ஸ்பானிய உள்நாட்டுப் போரைத் தொடங்கிய இராணுவத் தளபதி பிரான்சிஸ்கோ பிராங்கோ தலைமையிலான 1936 பாசிச சதித்திட்டத்தில், இதில் ஹிட்லர் மற்றும் முசோலினியின் ஆதரவுடன் பிராங்கோயிச படைகளின் வெற்றி 1978 வரை நீடித்த ஒரு சர்வாதிகாரத்தை அமைத்தது. இன்று எண்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் ஸ்பெயினின் நீதிமன்றங்கள் பிராங்கோயிசத்தை தீவிரமாக புனருத்தாரணம் செய்கின்றன.

அவை, ஒரு பாசிச தலைவரின் யூத-விரோத அறிக்கைகளை குற்றப்பொறுப்பில் இருந்து விடுவிப்பது மற்றும் பாசிச இராணுவப் பிரிவுகளையும் தலைவர்களையும் கௌரவிக்கும் தெருப் பெயர்களை மாற்றுவதை எதிர்ப்பது போன்ற பிற்போக்குத்தனமான எண்ணுக்கணக்கற்ற தீர்ப்புகளை வெளியிட்டுள்ளன. 1936 ஆம் ஆண்டு பிராங்கோவின் ஆட்சி மாற்றத்திற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்த பின்னர், பிராங்கோ போரின் போதோ அல்லது அவரது 40 ஆண்டுகால சர்வாதிகாரத்தின் போதோ மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்யவில்லை என அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எச்சரிக்கப்பட வேண்டும். பாசிசத்தின் குற்றங்கள் புனர்வாழ்வளிக்கப்படுகிறதென்றால், சமூக சமத்துவமின்மை, சிக்கன நடவடிக்கை மற்றும் கொலைகார “சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கைகளுக்கான வெகுஜன எதிர்ப்பிற்கு எதிராக ஆளும் வர்க்கத்தின் சக்திவாய்ந்த பிரிவுகள் இரக்கமற்ற மற்றும் குற்றவியல் முறைகளைப் பயன்படுத்தத் தயாராகி வருகின்றன.

Adolf Hitler and Francisco Franco meeting in 1940 (Wikimedia Commons)

இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஒரு நீதிபதி, பாசிச ஃபாலஞ்சின் (Falange) தலைவரான இசபெல் பெரால்டா (Isabel Peralta), இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு பொது உரையில் நீலப் பிரிவை (Blue Division) கௌரவித்தானது யூதர்களுக்கு எதிராக "வெறுப்பைத் தூண்டவில்லை" என தீர்ப்பளித்திருந்தார். இது சமூக ஊடகங்களில் பரவலாக கண்டனத்திற்கு உட்பட்டது. இந்த நீலப் பிரிவு என்பது, இது சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான நாஜி ஜேர்மனியின் அழிப்புப் போரை ஆதரிப்பதற்காக இரண்டாம் உலகப் போரின்போது பிராங்கோ அனுப்பிய 45,000 வலுவான காலாட்படைப் பிரிவாகும்.

பெரால்டா, 1930 கள் மற்றும் 1940 களில் ஐரோப்பிய யூதர்களை அழிக்க வழிவகுத்த மொழியைப் பயன்படுத்தி, “அவர் எதிரி எப்போதும் வெவ்வேறு முகமூடிகளை அணிந்திருந்தாலும் ஒரே மாதிரியாகவே இருப்பார்: யூதர்” என்றார். அப்பெண்மணி மேலும் கூறுகையில், "இந்த அறிக்கையை விட உண்மை எதுவுமில்லை: யூதரை குற்றம் சாட்டுவது, யூதரை குற்றம் சாட்டுவது, நீலப் பிரிவு இதற்காகப் போராடியது." மார்க்சிசத்தை "தொழிலாளர்களை ஒருவருக்கொருவர் எதிர்த்து நிற்கும் ஒரு யூத கண்டுபிடிப்பு" என்று அவர் வெறித்தனமாக கண்டித்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பெரால்டாவையும் பாசிசக் கட்சிகளையும் நீதிபதி ஆதரித்தார், "குறிப்பிடப்பட்ட உரையை வெளியிடுவதைக் கடைப்பிடிக்கும் எந்தவொரு குழுவும் எந்தவொரு விரோத செயலையும் செய்யப்போவதில்லை அது யூத மக்கள் மீதான அவர்களின் வளர்ந்து வரும் வெறுப்பு அல்லது அவமதிப்பை மட்டுமே பிரதிபலிக்கிறது" என்று கூறினார்.

பிரான்சிஸ்கோ பிராங்கோ தேசிய அறக்கட்டளை போன்ற பிராங்கோயிச சார்பு அடித்தளங்களை தடை செய்ய சோசலிஸ்ட் கட்சி (PSOE)-பொடேமோஸ் அரசாங்கம் நிறைவேற்றிய சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை கடந்த வாரம் நீதித்துறையின் பொது கவுன்சில் ஒப்புதல் அளித்தது. அந்த அறிக்கையின்படி, "அரசியலமைப்பால் பிரகடனப்படுத்தப்பட்ட மதிப்புகளுக்கு முரணாக இருந்தாலும், கருத்துச் சுதந்திரத்தால் பாதுகாக்கப்படும் கருத்துக்களின் வெளிப்பாடாக இது அமைகிறது" என்கிறது, இது ஃபிராங்கோயிசத்திற்கான மன்னிப்பாகும்.

20 ஆம் நூற்றாண்டு காட்டியுள்ளபடி, பாசிச அமைப்புகளை அரசு சட்டவிரோதமாக்குவதை சோசலிஸ்டுகள் எதிர்க்கின்றனர். அத்தகைய அரசு அதிகாரங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக திருப்பப்படுகின்றன.
நீதித்துறையின் பொதுக்குழு தன்னை "பேச்சு சுதந்திரத்தின்" ஒரு கோட்டையாக சித்தரிக்கும் முயற்சிகள் நகைப்புக்குரியவையாகும். பயங்கரவாத குற்றச்சாட்டுகள் அல்லது "முடியாட்சிக்கு எதிரான அவமதிப்புகள்" தொடர்பாக அதன் நீதிமன்றங்கள் பாடகர்களையும் கலைஞர்களையும் தவறாமல் துன்புறுத்துகின்றன. ஸ்ராலினிச ராப் இசை பாடகர் பப்லோ ஹஸல் அரச மற்றும் போலீசாருக்கு எதிரான டுவீட் (Tweet) மற்றும் பாடல்களுக்காக சிறையில் இருக்கிறார்.

இந்த தீர்ப்பானது, பாசிசத்தின் புனருத்தாரணம் மற்றும் அதன் பாரிய படுகொலை மற்றும் அடக்குமுறை கொள்கைக்கு எந்தவொரு வரம்பையும் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாட்ரிட்டில் பாசிசத்தை மதிக்கும் தெரு பெயர் மாற்றங்களைத் தடுக்க நீதிமன்றங்களின் தலையீடு பாசிசத்துடன் கைகோர்த்துச் செல்கிறது. The Fallen of the Blue Divison street மற்றும் General Millan Astray போன்ற வீதிப் பெயரானது, ஃபிராங்கோவின் தலைமை உதவியாளர்களில் ஒருவரும் ஸ்பானிஷ் படையணியின் நிறுவனரின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது.

போலி-இடது பொடேமோஸ் தலைமையிலான முந்தைய நகரசபை பாசிச ஜெனரலை கௌரவிக்கும் தெருவை மாற்ற விரும்பியது "இணங்க முடியாதது" என்று நீதிபதி கூறினார், ஏனெனில் "மில்லன் ஆஸ்திராய் இராணுவ எழுச்சியில் பங்கெடுத்தார், உள்நாட்டுப் போரின்போது இராணுவ நடவடிக்கைகளில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை, அல்லது சர்வாதிகாரத்தின் அடக்குமுறை ஆகியவற்றில் எந்தவொரு பங்கையும் கொண்டிருக்கவில்லை என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி ஊகிக்க முடியாதுள்ளது." நீதிமன்றம், நீலப் பிரிவு "உள்நாட்டுப் போர் முடிவடைந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 1941 இல் உருவாக்கப்பட்டது, எனவே அது இராணுவ எழுச்சியை உயர்த்திய காலத்திலோ அல்லது உள்நாட்டுப் போரிலோ நுழையவில்லை" என்று அறிவித்தது.

தீர்ப்பின் பின்னர், பாசிச வோக்ஸ் கட்சியின் ஆதரவுடன் வலதுசாரி பாப்புலர் கட்சியால் நடத்தப்படும் மாட்ரிட் கவுன்சில், ஸ்பெயினின் படையணியின் நினைவாக 20 டன், ஆறு மீட்டர் சிலையை நிறுவப்போவதாக அறிவித்தது.

ஸ்பெயினின் பாசிச குற்றங்கள், வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக உள்ளதானது சந்தேகத்திற்கு இடமின்றி சர்வதேச அளவில் நன்கு அறியப்பட்டவை. ஸ்பெயினின் ஆளும் வர்க்கம் அதன் குற்றங்களின் கூட்டு மறதி நோயைச் செயல்படுத்த முயற்சித்த போதிலும், பிராங்கோ மற்றும் தற்போதைய ஃபிராங்கோவுக்குப் பிந்தைய ஆட்சியின் கீழ், அதன் குற்றங்கள் எண்ணற்ற வழிகளில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள், திரைப்படங்கள், பாடல்கள் மற்றும் கலைப்படைப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற உண்மையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

உள்நாட்டுப் போருக்கு முன்னும் பின்னும் ஆஸ்திராயின் குற்றவியல் பதிவு நன்கு அறியப்பட்டதாகும். வடக்கு மொரோக்கோவில் ஸ்பெயினின் காலனித்துவ போர்களில் ஊனமடைந்த அவர் "புகழ்பெற்ற ஊனமுற்றவர்" என்று அழைக்கப்பட்டார். அவர் இடது கை மற்றும் வலது கண் இரண்டையும் இழந்தார்.

அவர் ஸ்பானிய படையணியை நிறுவினார், இது மொரோக்கோவில் காலனித்துவ ஆட்சியை எதிர்ப்பவர்களின் தலைகளை துண்டித்து, எதிரிகளின் தலைகளை துப்பாக்கியின் கத்தி முனையில் குத்திவைப்பதை வழக்கமாக கொண்டிருந்தது. ஸ்பெயினின் உள்நாட்டுப் போருக்கு முன்னதாக, 1934 இல் அஸ்டூரியாஸ் நகராட்சியில் கொடூரமான அடக்குமுறையை லெஜியன் படையணி நடாத்தி 2,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை தூக்கிலிட்டது. போரின்போது, அவர் படாஜோஸ் (ஸ்பெயினின் தென்மேற்கு நகரம்) படுகொலையை மேற்கொண்டார், அங்கு 4,000 தொழிலாளர்கள் மற்றும் இடதுசாரி அனுதாபிகள் தூக்கிலிடப்பட்டனர்.

ஆஸ்திராய் 1936 ஆம் ஆண்டில், ஆர்ஜென்டினா சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பி வந்து, வானொலி, பத்திரிகை மற்றும் பிரச்சார அலுவலகத்தின் இயக்குநராக பிராங்கோவுடன் பணியாற்றினார். பாசிஸ்டுகள் செய்த சட்டவிரோத கொலைகளை பகிரங்கமாக விமர்சித்த வலதுசாரி புத்திஜீவி மிகேல் டு ஊனாமூனோ க்கு எதிராக சலமன்கா பல்கலைக்கழகத்தில் "புத்திஜீவிகளுக்கு மரணம்" என்று கூச்சலிட்டதற்காக அவர் மிகவும் பிரபலமானவர். இந்த காட்சி, அலெஹாந்ரோ அமெனாபாரின் 2019 திரைப்படமான While at War இல் மில்லியன் கணக்கான பார்வையாளர்களால் பார்க்கப்படுகிறது, அங்கு ஆஸ்திராய் ஒரு மிருகத்தனமான பாசிச குண்டராக சித்தரிக்கப்படுகிறார்.

நீலப் பிரிவு பற்றிய தீர்ப்பு, உயர்நிலைப் பள்ளி பாடப்புத்தகங்களில் கூட அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை புறக்கணிக்கிறது, ஸ்பெயினின் உள்நாட்டுப் போரின்போது ஹிட்லர் ஆதரவளித்ததற்காக ஃபிராங்கோ ஹிட்லருக்கு ஆதரவளித்ததன் ஒரு பகுதியாக நீல பிரிவு இருந்தது. 1941 ஜூன் 22 அன்று சோவியத் ஒன்றியத்தின் நாஜி படையெடுப்பின் 80 வது ஆண்டு நிறைவுக்கு சில வாரங்களுக்கு முன்பு இது நடக்கிறது, இது கிட்டத்தட்ட 27 மில்லியன் சோவியத் மக்களை கொன்றது. அணு ஆயுத ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான நேட்டோ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், இராணுவவாதத்தையும் போரையும் தூண்டும் நோக்கில் இது மாஸ்கோவிற்கு எதிரான மற்றொரு முனைப்பு ஆகும்.

ஃபிராங்கோயிசத்தை புனர்வாழ்வளிக்க ஸ்பெயினின் நீதித்துறை தைரியமாக முன்வருகிறது என்பது தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் மகத்தான ஆபத்துக்களைக் காட்டுகிறது. ஸ்பெயினின் ஆளும் உயரடுக்கு, "இடது" என்று பொய்யாகக் கூறி கடந்து செல்வதைப் பற்றி இது நிறையவே கூறுகிறது - முதன்மையாக, குட்டி முதலாளித்துவ பொடெமோஸ் கட்சி. பொடேமோஸ் நீதித்துறையின் முடிவுகளுக்கு எந்தவொரு எதிர்ப்பையும் அணிதிரட்டாது என்று நீதிமன்றங்களுக்குத் தெரியும், ஏனென்றால் இது ஃபிராங்கோயிசத்தை மீண்டும் சட்டபூர்வமாக்குவது உட்பட ஆளும் வர்க்கத்தின் ஒரு கருவியாக உள்ளது.

கடந்த டிசம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக தங்களை ஆதரவளிக்குமாறு கோரி ஃபிராங்கோயிச அதிகாரிகளின் குழுக்கள் மன்னருக்கு கடிதங்கள் எழுதத் தொடங்கியதை அடுத்து, ஆறு மாதங்களுக்கும் மேலாக, PSOE- பொடேமோஸ், இரவு பகலாக இராணுவத்தில் வெளிவரும் பாசிச துர்நாற்றத்தை மூடிமறைத்துள்ளது. கசிந்த வாட்ஸ்அப்களில், இந்த அதிகாரிகள் ஃபிராங்கோவின் சதித்திட்டத்தை பாராட்டியதோடு, "26 மில்லியன் மக்களைக் கொலை செய்ய அழைப்பு விடுத்தனர்," இது ஸ்பெயினில் இடதுசாரி வாக்காளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் எண்ணிக்கை குறித்த அவர்களின் மதிப்பீடாகும்.

அப்போதைய பொடேமோஸின் பொதுச் செயலாளராக இருந்த பப்லோ இக்லெசியாஸ், "இந்த மனிதர்கள், ஏற்கனவே ஓய்வு பெற்ற தங்கள் வயதில், ஒரு சிலர் அதிக மதுபானங்களுடனான கலந்துரையாடலில் கூறப்படும் கருத்துக்கள், எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது" என அறிவித்தார்.

ஸ்பெயினில் பாசிசத்தின் புனர்வாழ்வு என்பது சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு அவசர எச்சரிக்கையாகும். சிக்கன நடவடிக்கை மற்றும் இலாபங்களுக்கு எதிராக தொழிலாள வர்க்க வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் வெடிக்கும் அதே வேளையில், தொற்றுநோய்களின் போது பொருளாதார பிணையெடுப்புக்கள் மனித வாழ்க்கையை விட முன்னுரிமை பெறுவதால், பாசிச சதித்திட்டங்கள் மற்றும் வெகுஜன கொலைகள் பற்றிய விவாதங்கள் முதன்மை பெறுகிறது. குறிப்பாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜோ பைடெனின் தேர்தல் வெற்றியின் சான்றிதழைத் தடுக்க ஜனவரி 6 ம் தேதி ஆட்சி கவிழ்ப்பு சதி முயற்சிக்கப்படதிலிருந்து காணலாம்.

ஜேர்மனியில், வலதுசாரி தீவிரவாத பேராசிரியர் ஜோர்க் பாபெரோவ்ஸ்கி ஜேர்மன் பல்கலைக் கழகங்களில் திருத்தல்வாத வரலாற்றை ஊக்குவிப்பதற்காக அணிவகுத்துச் செல்கிறார், நாஜி குற்றங்களுக்கு சோவியத் ஒன்றியத்தை குற்றம் சாட்டினார் மற்றும் ஹிட்லர் "மிருகத்தனமானவர் அல்லர்" எனக் கூறி, பகிரங்கமாக புனர்வாழ்வு அளித்தார். நவ-நாஜி வலையமைப்புக்கள் பொலிஸ் மற்றும் இராணுவத்தில் பரவலாக உள்ளன. தீவிர வலதுசாரி கொலைக் குழுக்களால் தூக்கிலிடப்பட வேண்டிய அரசியல்வாதிகளின் பட்டியல்கள் வரையப்பட்டதாக அறியப்படுகிறது.

பிரான்சில், ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், பாசிச சர்வாதிகாரியும், நாஜி ஒத்துழைப்பாளருமான பிலிப் பெத்தானை, சமூக சமத்துவமின்மைக்கு எதிரான "மஞ்சள் சீருடை" ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் ஒரு "சிறந்த சிப்பாய்" எனப் பாராட்டினார். இப்போது, முஸ்லிம்களுக்கும் பிரான்சின் தொழிலாள வர்க்க புறநகர்ப் பகுதிகளுக்கும் எதிராக வெகுஜன அடக்குமுறையை தொடங்கும் ஒரு சதித்திட்டத்திற்கு அழைப்பு விடுத்த ஓய்வுபெற்ற தளபதிகள் மற்றும் செயலில்-கடமையில் உள்ள இராணுவ சிப்பாய்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆளும் வர்க்கத்தால் பாசிசம் புனர்வாழ்வு செய்ப்படுவதை எதிர்ப்பதற்கு "இடது" என்று கூறும் சக்திகளிலிருந்து, அது ஸ்பெயினில் பொடேமோஸ், ஜேர்மனியில் இடது கட்சி அல்லது பிரான்சில் அடிபணியா பிரான்ஸ் கட்சி எதுவாக இருந்தாலும் சரி, அவற்றிலிருந்து சுயாதீனமாக அரசியல் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட வேண்டும். ஐரோப்பா முழுவதும் பாசிசத்திற்கு சக்திவாய்ந்த தொழிலாள வர்க்க எதிர்ப்பு உள்ளது. இது, ஸ்பானிய மக்களின் உயிர்வாழும் நினைவில் மிகவும் அதிகமாக உள்ளது.

எவ்வாறாயினும், பாசிசத்திற்கு எதிரான வரலாற்று ரீதியாக வேரூன்றிய இந்த எதிர்ப்பு, ஆளும் வர்க்கத்தின் போருக்கும் பாசிச ஆட்சிக்கும் உந்துதலை எதிர்ப்பதற்குமான ஒரு விரிவான முன்னோக்குடன் வெளிப்பாட்டைக் காணவேண்டும். இதற்கு தொழிலாள வர்க்கத்தில் ஒரு இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும். தொழிலாளர் வர்க்கத்திற்கு அரசாங்க அதிகாரத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சோசலிச, சர்வதேசிய மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் இயக்கத்துடன் தொழிலாளர் போராட்டங்களின் வளர்ச்சியை இணைக்க, ஸ்பெயினிலும் உலகெங்கிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை கட்டியெழுப்புவதற்கான அவசர அவசியத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Loading