இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் சம்பள வெட்டு மற்றும் வேலை சுமை அதிகரிப்புக்கு எதிராக போராடுகின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

ஜனவரி மாதம், தேயிலை மற்றும் ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு, ஏப்ரல் மாதம் முதல் 1,000 ரூபாய் (5 அமெரிக்க டாலர்) தினசரி சம்பளம் வழங்க (900 ரூபாய் அடிப்படை சம்பளம் மற்றும் 100 ரூபாய் கொடுப்பனவு) தோட்ட கம்பனிகளுக்கு இராஜபக்ஷ அரசாங்கம் உத்தரவிட்டது. அரசாங்கத்தின் அறிவிப்பின் குறிக்கோள், தோட்டத் தொழிலாளர்களின் வறுமை மட்டத்திலான சம்பளத்தின் மீது வளர்ந்து வரும் கோபத்தை தணிப்பதாக இருந்தது.

இலங்கை பெருந்தோட்டங்களை நிர்வகிக்கும் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் (RPC) இந்த அதிகரிப்பை எதிர்த்தன, அரசாங்கத்தின் தீர்மானத்தை சவால் செய்ய நீதிமன்றங்களுக்குச் சென்றன. தோட்டத் தொழிலாளர்களின் பரந்த எதிர்ப்பை உணர்ந்து, மேல்முறையீட்டு நீதிமன்றம் அரசாங்கத்தின் முடிவுக்கு ஒப்புதல் அளித்தது.

காட்மோர் தோட்டத்தில் லயன் அறைகள்  [Credit: WSWS Media]

பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள், குறிப்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), இந்த ஊதிய உயர்வை தொழிலாளர்களுக்கு கிடைத்த ஒரு பெரிய வெற்றி என பொய்யாக அறிவித்தது. இ.தொ.கா., இராஜபக்ஷ அரசாங்கத்தின் ஒரு பங்காளியாகும், அதன் தலைவர் ஜீவன் தொண்டமான் இராஜாங்க அமைச்சராக உள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பிற்கு பிரதிபலித்த பெருந்தோட்ட கம்பனிகள், ஊதிய உயர்வை ஈடுசெய்ய உற்பத்தியை அதிகரிக்க முயற்சித்துவருவதுடன் தொழிலாளர்களின் வருவாயைக் குறைக்க ஏனைய நடவடிக்கைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளன.

மே 10 அன்று, மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனியால் நிர்வகிக்கப்படும் மரே மற்றும் பிரவுன்ஸ்விக் தோட்டங்களிலும் மற்றும் ஹட்டன் பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான வெலிஓயா தோட்டத்தின் மேல் பிரிவிலும், வேலை இலக்கு அதிகரிப்புக்கும் 1,000 ரூபாய் நாள் சம்பளத்தை செலுத்த மறுத்த நிர்வாகத்திற்கு எதிராகவும், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

மரே தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 700 தொழிலாளர்கள் ஏப்ரல் மாதத்தில் அதிகரிக்கப்பட்ட புதிய சம்பளத்தை கொடுக்க நிர்வாகம் தவறியதையும், அதிகரிக்கப்பட்ட புதிய உற்பத்தி இலக்குகளுக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். 1,000 ரூபாய் சம்பளத்தை வழங்க, தினசரி 18 கிலோ தேயிலை பறிக்கும் இலக்கை 2 கிலோவால் அதிகரிக்க வேண்டும் என்று நிர்வாகம் கோருகிறது.

ஏப்ரல் மாத சம்பளம் வெட்டப்பட்டிருந்ததால் பிறவுன்ஸ்விக் தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நிர்வாகம் 1,000 ரூபாய் தினசரி சம்பளத்தை செலுத்திய அதே வேளை, வழக்கமான தினசரி இலக்கை விட கூடுதலாக பறிக்கப்பட்ட தேயிலை கொழுந்துக்கு பணம் கொடுக்க மறுத்துவிட்டது. பிறவுன்ஸ்விக் தோட்டத் தொழிலாளர்களுக்கு முன்னர் தினசரி இலக்கை விட அதிகமாக பறிக்கப்பட்ட தேயிலை கொழுந்து கிலோவுக்கு 40 ரூபாய் வழங்கப்பட்டது.

வெலிஓயா தோட்டத் தொழிலாளர்களும் இதே காரணத்திற்காக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

உணவு ஆதாரம் கோரி போராடும் தனிமைப்படுத்தப்பட்ட போடைஸ் தோட்டத் தொழிலாளர்கள் [Credit: Annachinews]

ஒரு வாரத்திற்கு முன்னதாக, பொகவந்தலாவை தோட்டத் தொழிலாளர்கள் இதேபோன்ற சம்பள வெட்டு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹட்டனை நோக்கிச் செல்லும் பிரதான வீதிக்கு அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய தினசரி சம்பள விகிதத்தை வழங்கியபோதும் வேலை நேரத்தை அதிகரித்துள்ள நிர்வாகம், காலை 8 மணிக்கு வேலையைத் தொடங்கி, மாலை 6 மணி வரை வேலை செய்ய நிர்ப்பந்திப்பதாக தொழிலாளர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

ஏப்ரல் மாதத்தில், பொகவந்தலாவை தோட்டத் தொழிலாளர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே, அதாவது முழு மாதத்திற்கும் 13 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டது. இது அவர்களின் வருமானத்தை வெகுவாகக் குறைத்தது. நிர்வாகம் அவர்களுக்கு 15 நிமிட தேநீர் இடைவெளியை மட்டுமே அனுமதித்தது, மேலும் ஐந்து நிமிடங்கள் நீடித்தால் அவர்களை கண்டிக்கிறது. அவர்கள் இப்போது 1,000 ரூபாய் சம்பளம் பெறுவதற்கு, ஒரு நாளைக்கு 20 கிலோ தேயிலை கொழுந்து பறிக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால், ஊதியம் குறைக்கப்படுகிறது.

மஸ்கெலியாவில் உள்ள கிளனுஜி தோட்டத் தொழிலாளர்கள் ஏப்ரல் 23 அன்று நாளொன்றுக்கு 20 கிலோகிராம் தேயிலை கொழுந்து பறிக்க வேண்டும் என்ற நிர்வாகத்தின் கோரிக்கையினை எதிர்த்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அதே நாளில், தலவாக்கலை ட்ரூப் தோட்டம் மற்றும் கொரின் தோட்டத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூன்று மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 20 கிலோ தேயிலை கொழுந்தின்படி ஆறு நாட்களுக்கு பறிக்க வேண்டும் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 50 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என்ற நிர்வாகத்தின் கோரிக்கையை எதிர்த்தே போராட்டத்தில் ஈடுபட்டனர். பொகவந்தலாவாவில் உள்ள லொயினோன் தோட்டத் தொழிலாளர்களும் தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகே அதிகரித்த வேலை இலக்குகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மஸ்கெலியாவில் உள்ள ஓல்டன் தோட்டத்தில், 1,000 ரூபாய் தினசரி ஊதியத்திற்கு 18 கிலோ தேயிலை கொழுந்து பறிக்க வேண்டும். இருப்பினும், ஒரு தொழிலாளி அந்த இலக்கை அடையத் தவறினால், அவர்களுக்கு ஒன்பது கிலோவுக்கு 500 ரூபாயும், மேலதிக ஒரு கிலோவுக்கு 50 ரூபாயும் மட்டுமே வழங்கப்படுகிறது. அரசாங்கம் விதித்த புதிய ஊதியத் திட்டத்திற்குப் பின்பு கள மேற்பார்வையாளர்களுக்கான கூடுதல் நேர கொடுப்பனவுகளும் ஓல்டன் தோட்டத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதங்களில் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான மிருகத்தனமான ஜனநாயக விரோத தாக்குதல்களைத் தொடர்ந்து, ஒன்றின் பின் ஒன்றாக தோட்டங்களில் பணிச்சுமை மற்றும் செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. கொவிட்-19 இன் பொருளாதார தாக்கத்தையும், தேயிலை ஏற்றுமதி வீழ்ச்சியையும் தொழிலாளர்கள் மீது திணிப்பதற்கும் அவர்களின் அனைத்து எதிர்ப்பையும் நசுக்குவதற்கும் பெரும் தோட்ட நிறுவனங்கள் உறுதியாக உள்ளன.

1,000 ரூபாய் தினசரி ஊதியம் கோரி பெப்ரவரி 5 அன்று இ.தொ.கா. அழைப்பு விடுத்த ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஓல்டன் தோட்ட தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகமும் பொலிசும் சேர்ந்து வேலை நிறுத்தத்தை நாசமாக்க எடுத்த முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேலும் 47 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தோட்டத்தின் முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளரை சரீர ரீதியாக தாக்கியதாக இருபத்திநான்கு தொழிலாளர்கள் மற்றும் இரண்டு இளைஞர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. எந்தவொரு விசாரணையும் நடத்தப்படாமல், இப்போது நீதிமன்றத்தை எதிர்கொள்ளும் தொழிலாளர்கள் உட்பட முப்பத்தெட்டு தொழிலாளர்கள் அதே அடிப்படையில் வேலைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட வேண்டிய ஓல்டன் தொழிலாளர்கள் மற்றும் வேலையிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்களின் பெயர்களின் பட்டியலை தயாரித்தது உட்பட, பழிவாங்கலின் ஒவ்வொரு கட்டத்திலும் தோட்ட நிர்வாகம் மற்றும் பொலிசாருடன் இ.தொ.கா. ஒத்துழைத்தது. தோட்டத் தொழிலாளர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட தேசிய தொழிலாளர் சங்கம் (NUW), நிர்வாகத்தின் ஆத்திரமூட்டல்களை ஆதரித்ததுடன் வழக்குத் தொடரடப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவ மறுத்துவிட்டது.

கடந்த மாதம், கிழக்கு மாகாணத்தை சேர்ந்த திருகோணமலை, மட்டக்களப்பு சேர்ந்த ஆதரவாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்கள். ஏப்ரல் 30 அன்று, இந்த நிவாரணப் பணிகளைத் தொடங்கிய 10 தொழிலாளர்கள் மற்றும் ஒரு ஆசிரியரையும், ஹட்டன் பொலிஸ் அழைத்து விசாரித்தனர். அரசசார்பற்ற நிறுவனங்களுடான அவர்களின் தொடர்பு குறித்து அவர்களிடம் விசாரித்தனர். மேலும் பொலிஸ் அனுமதியின்றி எதிர்காலத்தில் இதுபோன்ற எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம் என்று கூறினர்.

குறிப்பிடத்தக்க வகையில், இந்த மாத வேலை நிறுத்தங்களும் போராட்டங்களும் தோட்ட தொழிற்சங்கங்களிலில் இருந்து சுயாதீனமாக ஏற்பாடு செய்யப்பட்டன. வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளிப்பதற்கு பதிலாக, தொழிற்சங்கங்கள் நிர்வாகத்திடம் வேலைசுமை மற்றும் ஊதிய வெட்டுக்கள் குறித்து பேச்சுவார்த்தைக்காக வேண்டுகோள் விடுத்தன.

எவ்வாறாயினும், தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் மோசமான நிலைமைகள், தோட்டங்களிலும் ஏனைய வேலைத் தளங்களிலும் அதிகரித்து வரும் கோவிட்-19 நோய்த் தொற்றுகளால் மோசமடையும்.

இன்ஜெஸ்ரி தோட்டத்தில் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஹட்டனுக்கு அருகிலுள்ள போடைஸ் தோட்டம் தனிமைப்படுத்தப்பட்டு, முடக்கத்தில் வைக்கப்பட்டது. பரிசோதனையின் பின் தொழிலாளர்களில் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதால், மஸ்கெலியாவில் உள்ள நோர்வுட் பேஷன் வேயர் ஆடை தொழிற்சாலையும் மூடப்பட்டது.

நோர்வுட் ஃபெஷன் ஆடைத் தொழிற்சாலை  [Credit: K. Kishanthan]

போடைஸ் தோட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிவடைந்த போது, தொழிலாளர்கள் தோட்டத்தின் தேயிலைத் தொழிற்சாலைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கவில்லை என்று அரசாங்கத்தையும் தோட்ட நிர்வாகத்தையும் கண்டித்தனர். படையினரும் பொலிசாரும் உடனடியாக அங்கு தலையிட்டு போராட்டத்தை நிறுத்தினர்.

இலங்கையின் மத்திய மலை நாட்டில் உள்ள பரந்த தோட்டப் பகுதியில் முறையான சுகாதார வசதிகள் இல்லை. நெரிசலான தொடர் லயன் அறைகளில் வசிக்கும் இலட்சக் கணக்கான தோட்டத் தொழிலாளர்களுக்கு சமூக இடைவெளியை பேணுவது சாத்தியமில்லை. முறையான பரிசோதனையும் இல்லை. தோட்டக் கம்பனிகளின் இலாபங்களை பாதுகாப்பதற்கும், அரசாங்கம் பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கும் தொழிற்சங்கங்கள் உதவுகின்றன..

பாதிக்கப்பட்ட ஓல்டன் தோட்ட தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்திற்கு ஆதரவளித்த பல தொழிலாளர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுக்க ஒரு நடவடிக்கைக் குழுவை அமைத்தனர்.

தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனய பிரிவினர் மத்தியில் அதிகரித்து வரும் வேலை நிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள், தொழிலாளர்கள் தங்கள் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை நிறுவுவதற்கான அவசியத்தை எடுத்துக் காட்டுகின்றன.

நிர்வாகத்தின் புதிய உற்பத்தித்திறன் கோரிக்கைகள் குறித்து பிறவுன்ஸ்விக் தோட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் தொழிலாளி இந்த வாரம் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசினார். 'இந்த ஊதிய உயர்வுக்குப் பின்னர், எமது மேலதிக கொழுந்துக்கு பணம் செலுத்துவதை நிர்வாகம் நிறுத்தியது,' என்று அவர் கூறினார்.

அறுவடைகாலமான, ஜனவரி முதல் மே வரை, நாம் அதிக அறுவடை செய்யலாம், அதனால் வழமையான சம்பளத்திற்கு மேலதிகமாக பெறலாம். இது அவசியம், ஏனென்றால் வறண்ட காலங்களில் எங்களால் நாளாந்த இலக்குகளை கூட அடைய முடியாது, அதனால் எங்கள் வருமானம் குறைவாக இருக்கும். இந்த காலங்களில், எங்கள் அன்றாட செலவுகளை ஈடுசெய்ய நாங்கள் கடன் வாங்க வேண்டும்.'

அரசாங்கம் உத்தரவிட்ட சம்பள அதிகரிப்பை ஒரு வெற்றியாக கொண்டாடிய இ.தோ,கா.வின் கூற்றுக்களை தொழிலாளர்கள் கண்டித்தனர். “நாங்கள் இப்போது இழந்து வருகின்றோம். தொழிற்சங்கங்கள் எப்போதும் எங்களை ஏமாற்றுகின்றன,” என அவர்கள் கூறினர்.

சோ.ச.க. மற்றும் எபோட்சலி தொழிலாளர் நடவடிக்கைக் குழுவால் 2019இல் ஹட்டனில் ஏற்பாடு செய்யப்பட்ட மகாநாட்டைப் பற்றி அவர் குறிப்பிட்டார், “தொழிற்சங்கங்களின் துரோகம் குறித்து நீங்கள் மகாநாட்டில் விளக்கினீர்கள். இது ஒவ்வொரு நாளும் உறுதிப்படுத்தப்படுகின்றது.' என்றார்.

Loading