கொரோனா வைரஸின் டெல்டா திரிபு வகை ஐரோப்பாவில் நோய்தொற்றுக்களின் கடுமையான அதிகரிப்புக்கு எரியூட்டுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐரோப்பா கண்டம் முழுவதுமாக அதிக தொற்றும் தன்மை கொண்ட டெல்டா திரிபு வகை வைரஸின் அதிகரித்தளவிலான ஆதிக்கத்தினால் கொரோனா வைரஸ் நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் கூட, அரசாங்கங்கள் சமூக இடைவெளி கட்டுப்பாடுகளை கைவிடுகின்றன. இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா திரிபு வகை வைரஸ் இங்கிலாந்தில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஆல்பா திரிபு வகை வைரஸை விட 60 சதவீதம் அதிக தொற்றும் தன்மையை கொண்டிருக்கும் எனவும், அதேபோல மருத்துவமனை சேர்க்கைகளையும் இது நான்கு மடங்கு அதிகரிக்கும் எனவும் கருதப்படுகிறது.

கண்டத்திலேயே மிக மோசமான நிலைமையை இங்கிலாந்து எதிர்கொள்கிறது. வயதுவந்த மக்களில் அநேகமாக 60 சதவீதம் பேருக்கு இரண்டு அளவு (dose) தடுப்பூசிகளையும் வழங்கி, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளை விட அதிகளவு தடுப்பூசி விகிதத்தை பிரிட்டன் கொண்டிருந்தாலும், உலகின் ஏனைய பகுதிகளை விட மிக ஆரம்பத்திலேயே இங்கு டெல்டா வைரஸ் பரவத் தொடங்கியதே இதற்கு காரணமாகும்.

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிக் கொண்டிருக்கையில், ஸ்பெயினின் மாட்ரிட்டில் உள்ள லாஸ் வென்டாஸ் எருதுச்சண்டை மையத்தில் ஜூன் 26, 2021 அன்று நடைபெறும் ஒரு எருதுச்சண்டை காட்சி (AP Photo/Manu Fernandez)

செவ்வாய்க்கிழமை, இங்கிலாந்தில் மேலும் 20,479 புதிய நோய்தொற்றுக்கள் பதிவானது, அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளிலும் 20,000 க்கு அதிகமாக நோய்தொற்றுக்கள் பதிவான நிலையில், கடந்த ஏழு நாட்களில் பதிவான மொத்த புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை 123,566 ஆக அதிகரித்தது. இதே காலகட்டத்தில் கோவிட்-19 காரணமாக 108 இறப்புக்கள் நிகழ்ந்துள்ளன, ஒப்பீட்டளவில் தடுப்பூசித் திட்டத்தினால் மட்டுமே இந்த எண்ணிக்கை இவ்வளவு குறைந்துள்ளது.

டெல்டா திரிபு வகை வைரஸால் நோய்தொற்று தீவிரமாக மறுஎழுச்சி கண்டு, கோவிட்-19 காரணமான இறப்புக்களும் 152,000 க்கு அதிகமாகியுள்ள போதிலும், இங்கிலாந்து சுகாதாரச் செயலாளர் சஜித் ஜாவித் பாராளுமன்றத்தில் தனது முதல் உரையில், பாதுகாப்பு கட்டுப்பாடுகளுக்கு ஜூலை 19 ஆம் தேதி “இறுதிக் கெடுவாக” இருக்கும் என்று வலியுறுத்தினார்.

அதாவது “ஜூலை 19 ஐ தாண்டி ஒரு தேதியை தேர்ந்தெடுக்க நம்மிடம் எந்தவொரு காரணமும் இல்லை, ஏனென்றால் ஆபத்து இல்லாத நாளை நாம் தேர்ந்தெடுக்க முடியாது என்பதுடன், அவ்வளவு எளிதில் நோய்தொற்றை முற்றிலும் அழித்துவிட முடியாது என்பதும் நமக்குத் தெரியும். எனவே, நாம் அதனுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும்,” என்றார். ஜாவித் தனது முக்கிய அக்கறை பெருவணிகத்தை பாதுகாப்பது தான் என்பதை காட்டிக் கொள்ளாமல் இவ்வாறு கூறினார்: “மக்களுக்கும் வணிகங்களுக்கும் நிச்சயத்தன்மை தேவை என்பதையும் நாம் அறிவோம். எனவே ஒவ்வொரு அடியும் மாற்ற முடியாததாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். தவறு எதுவும் செய்யாதீர்கள், நமது சுதந்திரத்திற்கான கட்டுப்பாடுகள் முடிவுக்கு வர வேண்டும்.”

தற்போதைய நோய்தொற்று அலையின் பெரும்பகுதி இளைஞர்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகளின் நோய்தொற்று காரணமாக உருவாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை, கோவிட்-19 நோய்தொற்று பரவலின் காரணமாக கடந்த வாரம் இங்கிலாந்தில் 375,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்பதைக் காட்டும் புள்ளிவிபரங்களை கல்வித்துறை வெளியிட்டது. இது ஒரே வாரத்தில் 130,000 க்கு அதிகமாக நோய்தொற்றுக்கள் பரவியதை, அதாவது 66 சதவீதம் அதிகரித்து ஒட்டுமொத்த பள்ளிக்குழந்தைகளில் 5.1 சதவீதத்திற்கு சமமான பேருக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளதை குறிக்கிறது.

உத்தியோகபூர்வ வழிகாட்டுதலின் படி பள்ளிகளில் முகக்கவசம் அணிவது தற்போது தளர்த்தப்பட்டு, அரசாங்கத்தின் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை முழுமையாக உறுதிப்படுத்தப்படும் நிலையில், பள்ளிக்கு வராத மாணவர்களில் 15,000 பேருக்கு கோவிட்-19 நோய்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், மற்றொரு 24,000 பேருக்கு நோய்தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த டெல்டா திரிபு வகை ரஷ்யா மற்றும் போர்ச்சுகல் உட்பட ஏனைய பல நாடுகளிலும் நோய்தொற்றுக்கள் விரைந்து அதிகரிப்பதற்கு வழிவகுத்து வருகிறது. ரஷ்யாவில் நேற்று 20,600 புதிய நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை பிரிட்டனில் பதிவான எண்ணிக்கைக்கு சமமாக இருந்தபோதிலும், இங்கு ஏறக்குறைய 30 மடங்கு அதிகமாக இறப்புக்கள் நிகழ்ந்துள்ளன, அதாவது உத்தியோகபூர்வமாக 652 இறப்புக்கள் கணக்கிடப்பட்டுள்ளன. ரஷ்யாவில் தடுப்பூசி விகிதம் தற்போது 11 சதவீதமாக உள்ளது.

போர்ச்சுகலில் நேற்று 1,746 புதிய நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. போர்த்துகீசிய சுகாதார அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்ட ஒரு அறிக்கை, அந்நாட்டின் ஒட்டுமொத்த நோய்தொற்றுக்களில் பாதிக்கும் மேற்பட்டவை டெல்டா திரிபு வகையால் உருவாகியவை என்று தெரிவிக்கிறது. தலைநகர் லிஸ்பனில், தற்போது 70 சதவீதத்திற்கும் அதிகமான நோய்தொற்றுக்கள் டெல்டா திரிபு வகையால் ஏற்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை, ஜேர்மன் அரசாங்கம் டெல்டா திரிபு வகை பரவுவது குறித்த கவலையை குறிப்பிட்டு, ரஷ்யா மற்றும் போர்ச்சுகலில் இருந்து வரும் பயணிகளை இரண்டு வார காலம் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை எடுத்தது. மேலும் ஜேர்மனிய அரசாங்க அதிகாரிகள், இங்கிலாந்தை ஒரு “அக்கறைக்குரிய நாடாக” குறிப்பிட முற்படுவதாகவும், இங்கிலாந்து குடியிருப்பாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்பதையும் பொருட்படுத்தாமல் அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பயணிப்பதை தடைசெய்ய முற்படுவதாகவும் பிரிட்டிஷ் டைம்ஸ் செய்தியிதழ் திங்களன்று தெரிவித்தது.

ஐரோப்பிய கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக பிரிட்டிஷ் கால்பந்து மைதானங்களுக்கு ஏராளமான ஆதரவாளர்கள் வருவதை ஜேர்மன் உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் சீஹோஃபர் செவ்வாய்க்கிழமை விமர்சித்தார். மேலும் பிராந்திய செய்தித்தாளான Augsburger Allgemeine க்கு பேசுகையில், “மிகுந்த தொற்றும்தன்மை கொண்ட டெல்டா திரிபு வகை வைரஸால் ஆபத்தில் இருக்கும் நாடுகளில் குறிப்பிட்ட பகுதிக்குள் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடுவது பொறுப்பற்றது” என்று தெரிவித்தார். நேற்று மாலை நடந்த இங்கிலாந்து-ஜேர்மனி போட்டியில் விளையாட்டு அரங்கம் பாதியளவு நிரம்பும் வகையில் சுமார் 45,000 பேர் கலந்து கொண்டனர்.

இருப்பினும், ஜேர்மனியில் கூட, டெல்டா திரிபு வகை ஏற்கனவே பரவி வருவதுடன், ஆதிக்கம் செலுத்தும் திரிபு வகையாகவும் அது இருக்கலாம். ராபர்ட் கோச் நிறுவனத்தின் தலைவர் லோதர் வைலர் (Lothar Wieler) செவ்வாயன்று, தேசிய மரபணு வரிசைமுறை பகுப்பாய்வின் அடிப்படையில், மொத்த கொரோனா வைரஸ் நோய்தொற்றுக்களில் டெல்டா திரிபு வகை நோய்தொற்றுக்கள் ஜூன் 14-20 தேதிகளடங்கிய வாரத்தில் 36 சதவீதத்தை எட்டியது என்றும், இது முன்னைய வாரத்தின் பாதிப்பு விகிதமான 15 சதவீதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகியிருந்தது என்றும் அதிகாரிகளிடம் தெரிவித்தார். இந்த போக்கின் அடிப்படையில், மொத்த நோய்தொற்றுக்களில் பாதிக்கும் மேலானவற்றை டெல்டா திரிபு வகை உருவாக்கியுள்ளது என வைலர் மதிப்பிட்டார்.

என்றாலும் கூட, ஜேர்மனி மட்டுப்படுத்தப்பட்ட சமூக இடைவெளி நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதைத் தொடர்கிறது. கண்டம் முழுவதிலும் உள்ளதைப் போலவே, இதன் அக்கறையும் ஜேர்மன் நிறுவனங்கள் மீண்டும் வணிக நடவடிக்கைகளுக்கு திரும்புவது மற்றும் பெருநிறுவன இலாபங்களை பெருக்குவது பற்றியே உள்ளது. ஜேர்மனியில், தோராயமாக 54 சதவீத மக்களுக்கு முதல் அளவு (dose) தடுப்பூசி போடப்பட்டுள்ளது, மேலும் 35 சதவீதம் பேருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இத்தாலி மற்றும் பெல்ஜியத்தில், இந்த டெல்டா திரிபு வகை நோய்தொற்றுக்கள் முறையே குறைந்தது 20 சதவீதம் மற்றும் 16 சதவீதம் அளவிற்கு ஏற்கனவே உருவாகியுள்ளன.

செவ்வாயன்று, பிரெஞ்சு சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் (Olivier Veran), டெல்டா திரிபு வகை “பிரான்சில் புதிய நோய்தொற்றுக்களில் சுமார் 20 சதவீதத்தை உருவாக்கியுள்ளது,” என்றும் “படிப்படியாக ஆதிக்க வகையாக உருவெடுத்து வருகிறது” என்றும் கூறினார். ஸ்பெயினின் எல்லையிலுள்ள தென்மேற்கு பிரான்சின் லாண்ட் பகுதியில் டெல்டா திரிபு வகை ஏற்கனவே 70 சதவீத நோய்தொற்றுக்களை உருவாக்கியுள்ளது.

ஜூன் 24 அன்று, நோய் தடுப்பு மற்று கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையத்தின் தலைவர் ஆண்ட்ரியா அம்மோன் (Andrea Ammon), கோடைகாலத்தில் கண்டம் முழுவதும் டெல்டா திரிபு வகை “பரவலாக” பரவுவதற்கு “மிகுந்த சாத்தியம்” இருக்கிறது என்று கூறினார். “இது மிகவும் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு நோய்தொற்றை உருவாக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்பதுடன், அவர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்படாதவர்களாக இருந்தால் அவர்களுக்கு கடுமையான நோய் தாக்கம் மற்றும் மரணம் ஏற்படக்கூடும்,” என்றும் கூறினார்.

“கடுமையாக கோவிட்-19 நோய்தொற்று பாதிப்புக்குள்ளாகக் கூடிய பலர் இன்னும் உள்ளனர், அவர்களை விரைவில் நாம் பாதுகாக்க வேண்டும்,” என்று அம்மோன் கூறினார். சமூக இடைவெளி நடவடிக்கைகளை கைவிடுவதை மறைமுகமாக விமர்சித்து அவர் இவ்வாறு கூறினார்: “பாதிக்கப்படக்கூடிய நபர்களில் பெரும்பாலானோரை பாதுகாக்கும் வரை, பிற வைரஸ் வகைகளின் தாக்கத்தை கட்டுப்படுத்த வேலை செய்த பொது சுகாதார நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைப்பிடிப்பதன் மூலம் டெல்டா [திரிபு வகை] பரவலை நாம் கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.”

எவ்வாறாயினும், ஐரோப்பிய அரசாங்கங்களின் அறிவிக்கப்பட்ட கொள்கைகள், வைரஸ் பரவுவதை தணிக்க தடுப்பூசி வழங்கலை மட்டும் நம்புவதாகும், அதேவேளை பெருநிறுவன நடவடிக்கைகளை பாதிக்கும் சமூக இடைவெளி நடவடிக்கைகளை நிராகரிப்பதாகும். கண்டத்தின் வயதுவந்தோரில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மட்டுமே தற்போது முழுமையாக நோய்த்தடுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஒரு பெரியளவிலான, பகுதியளவிலான தடுப்பூசி போடப்பட்ட மக்களிடையே வைரஸை பரவ அனுமதிக்கும் கொள்கை புதிய மற்றும் இன்னும் மிகக்கொடிய வைரஸின் பரவலுக்கான நிலைமைகளை உருவாக்கும் என்றும், இது ஏற்கனவே உள்ள தடுப்பூசி பாதுகாப்புகளை இன்னும் எதிர்க்கும் திறனை கொண்டிருக்கும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

புதிய திரிபு வகைகள் உருவாகவும் ஆதிக்கம் செலுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது ஒரு தவிர்க்க முடியாத, முற்றிலும் உயிரியல் நூதனம் சார்ந்த நிகழ்வு அல்ல என்பதே உண்மை. மாறாக, இது ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் பிற பகுதிகளின் முதலாளித்துவ அரசாங்கங்கள் பின்பற்றிய கொள்கைகளின் விளைவாகும். கடந்த ஆண்டு கடுமையான பூட்டுதல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர், அனைத்து பகுதிகளிலும் பெருநிறுவன உயரடுக்கின் நிதிய நலன்களைப் பாதுகாக்க வைரஸை பரவ அனுமதிக்கும் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையையே அவர்கள் பின்பற்றி வந்துள்ளனர்.

இதன் விளைவாக ஐரோப்பாவில் 1.1 மில்லியன் கோவிட்-19 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதே ஆண்டில், ஐரோப்பிய கோடீஸ்வரர்களின் செல்வம் 1 டிரில்லியன் டாலர் அதிகரித்து, சுமார் 3 டிரில்லியன் டாலராக உயர்ந்து, வெறும் 628 மக்களிடையே பிரிக்கப்பட்டுள்ளது.

Loading