முன்னோக்கு

ஈராக் மற்றும் சிரியா மீது பைடெனின் குண்டுவீச்சு: போரினை வழமையான ஒரு நிகழ்வாக்கல்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே நேரத்தில் இரு நாடுகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்த வாஷிங்டன் உத்தரவிட்டது. F-15 மற்றும் F-16 போர் விமானங்களை பயன்படுத்தி சிரியாவில் இரண்டு இலக்குகளிலும் ஈராக்கில் ஒரு இலக்கிலும் துல்லியமாக வழிநடத்தப்பட்ட ஆயுதங்களால் குண்டு மழை பொழியப்பட்டது.

ஜூன் 27 அன்று ஈராக்-சிரியா எல்லைக்கு அருகே “ஈரான் ஆதரவுடைய ஆயுதக்குழுக்கள்” பயன்படுத்திய நிலையங்கள் என்று கூறப்பட்டவற்றின் மீது அமெரிக்க இராணுவ வான்வழித் தாக்குதல்களின் காட்சிகள். (DVIDS via Storyful)

எல்லையின் ஈராக் பக்கத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும், ஒரு குழந்தை கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் சிரிய தரப்பில் காயமடைந்ததாகவும் அங்கிருந்தோர் தகவல்கள் தெரிவித்தனர்.

ஈராக்கின் பிரதமர் முஸ்தபா அல் கதேமி இந்த வான்வழித் தாக்குதலை "ஈராக் இறையாண்மையை அப்பட்டமாகவும் ஏற்றுக்கொள்ள முடியாத மீறல்" என்று கண்டித்தார். சிரியாவின் வெளியுறவு அமைச்சகம் உத்தியோகபூர்வ சனா செய்தி நிறுவனத்திடம், வான்வழித் தாக்குதல்கள் "அமெரிக்க கொள்கைகளின் பொறுப்பற்ற தன்மையையும், வாஷிங்டன் அதன் ஆக்கிரமிப்புப் படைகளைத் திரும்பப் பெற வேண்டியதன் அவசியத்தையும்" நிரூபித்துள்ளது என்று கூறினார்.

சிரியாவில் ஒரு அமெரிக்க தளத்தை ஒரு ஆயுதக்குழுக்கள் ஷெல்களால் தாக்கியும் மற்றும் அமெரிக்கப் படைகளுக்கு பதிலடி கொடுப்பதாக ஈராக் ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தல்களால் திங்களன்று இந்த தாக்குதல்களுக்கு பதிலளிக்கப்பட்டது.

ஜனாதிபதி ஜோ பைடெனின் ஜனநாயகக் கட்சி நிர்வாகம் ஜனவரி மாதம் பதவியேற்ற பின்னர் இது ஈராக்-சிரிய எல்லைப் பகுதிக்கு எதிராக பென்டகன் ஏவிய குண்டுவெடிப்புத் தாக்குதலில் இரண்டாவது முறையாகும். கிழக்கு சிரியாவில் ஒரு இலக்குக்கு எதிரான முதலாவது தாக்குதல் பைடென் வெள்ளை மாளிகையில் நுழைந்த ஒரு மாதத்திற்கு பின்னர் நிகழ்த்தப்பட்டது.

அந்த பெப்ரவரி வான்வழித் தாக்குதல் 2019 ஆம் ஆண்டின் இறுதிக்கு பின்னர் சிரியாவிற்குள் இதுபோன்ற முதல் அமெரிக்க குண்டுவெடிப்பைக் குறித்தது. புரட்சிகர காவல்படை தளபதி காசெம் சுலைமானி ட்ரோன் ஏவுகணை படுகொலை செய்ததன் மூலம் ட்ரம்ப் நிர்வாகம் இப்பகுதியையும், முழு உலகத்தையும் ஈரானிய போரின் விளிம்பிற்கு கொண்டு வந்தது. "அமெரிக்கா திரும்ப வந்துவிட்டது" என்ற பைடெனின் வெறுமையான முழக்கம் உண்மையில் எதைக் குறிக்கிறது என்பதை இது உலகிற்கு அடையாளம் காட்டியுள்ளது: அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியம் ஜனநாயகக் கட்சியினரின் கீழ் இன்னும் தீவிரமான வெளியுறவுக் கொள்கையை மேற்கொண்டு, பேரழிவுகரமான புதிய போர்களால் உலகை அச்சுறுத்துகிறது.

கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிரான ஈரானிய ஆதரவுடனான ஈராக் ஆயுதக்குழுக்களால் ஈராக்கிற்குள் அமெரிக்க தளங்கள் மீதான தாக்குதல் நடாத்தப்படுவதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திங்கள் மற்றும் பெப்ரவரி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. பெப்ரவரியில், பென்டகன் ஈராக்கிய குர்திஸ்தானின் தலைநகரான எர்பில் இல் உள்ள அமெரிக்க தளத்தின் மீது வீசப்பட்ட ஒரு ராக்கெட்டை மேற்கோள் காட்டியது. இரகசிய சிஐஏ முகாம் உட்பட பல இலக்குகளுக்கு எதிராக ட்ரோன்களைப் பயன்படுத்தி ஆயுதக்குழுக்களின் தாக்குதல்களுக்கு பதிலளிப்பதாக சமீபத்திய வான்வழித் தாக்குதல்கள் நியாயப்படுத்தப்பட்டன.

சமீபத்திய தாக்குதல்களின் குறிப்பிடத்தக்க குணாதிசயங்களில் ஒன்று, அமெரிக்க ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபனத்திற்குள்ளேயே இதுபற்றி எந்தவொரு குறிப்பிடத்தக்க பிரதிபலிப்பைபயும், பகுப்பாய்வையும் மற்றும் மிகக் குறைவான விமர்சனத்தைக்கூட பெறத் தவறியது. ஒரு அமெரிக்க ஜனாதிபதி ஒரே நாளில் இரு நாடுகளைத் தாக்கி, அமெரிக்க காங்கிரஸின் சட்டப்பூர்வ அங்கீகாரமின்றி சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறியது பற்றி அவை செய்திகளை வெளியிடவில்லை. முன்னணி ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருதரப்பினரும் இந்த நடவடிக்கையைப் பாராட்டினர். ஈரானுக்கு எதிரான மேலதிக மூர்க்கத்தனம் தேவை என்று சிலர் கருத்து தெரிவித்தனர்.

"பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய யுத்தம்" தொடங்கப்பட்டு இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இரத்தக்களரிமிக்க காலனித்துவ வகையிலான தலையீடுகள், உலகின் எந்தப் பகுதியிலும் எச்சரிக்கையின்றி அமெரிக்காவின் சட்டவிரோத இராணுவ நடவடிக்கைகள் முழுமையாக வழமையான நிகழ்வு என்றாக்கப்பட்டுள்ளன. ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, லிபியா, யேமன் மற்றும் சோமாலியா ஆகிய இந்த "உலகப் போரில்" "ஆறு அரங்குகள்" என ஒபாமா நிர்வாகம் ஒப்புக் கொண்டாலும், வாஷிங்டனால் குறிவைக்கப்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் முழு பட்டியல் பைடென் நிர்வாகத்தின் கீழ் மறைமுகமாக வைக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டனின் குண்டுவெடிப்பு மற்றும் ஈராக்கியர்களையும் சிரியர்களையும் கொன்றது “அதன் தற்பாதுகாப்பு உரிமையைப் பின்பற்றி” மற்றும் “அமெரிக்க பணியாளர்களை” பாதுகாக்க வடிவமைக்கப்பட்டதாக பென்டகனின் கூற்று எங்கும் கேள்விக்கு உள்ளாக்கப்படவில்லை. மிகவும் வெளிப்படையான கேள்வி என்னவென்றால், வாஷிங்டன் தனது பணியாளர்களைப் பாதுகாப்பதில் தீவிரமாக இருந்தால், அது ஏன் அவர்களைத் திரும்பப் பெறவில்லை?

சுலைமானியின் படுகொலையை அடுத்து, அனைத்து அமெரிக்க மற்றும் பிற வெளிநாட்டு ஆக்கிரமிப்பு சக்திகளையும் உடனடியாக திரும்பப் பெறுமாறு ஈராக் நாடாளுமன்றம் கோரியது. ஒன்றரை வருடம் கழித்து, 2,500 அமெரிக்க துருப்புக்கள் அங்கு இன்னும் உள்ளன. இதைவிட தெரியாத எண்ணிக்கையிலான இராணுவ ஒப்பந்தக்காரர்கள், சிஐஏ செயல்பாட்டாளர்கள் மற்றும் பிற பணியாளர்கள் அங்குள்ளனர். தெரியாத எண்ணிக்கையிலான ஒப்பந்தக்காரர்களின் ஆதரவுடன் சுமார் 900 சீருடை அணிந்த துருப்புக்களை கொண்ட ஒரு படை நாட்டின் இறையாண்மையை அப்பட்டமாக மீறுவதுடன், ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்காவினால் திட்டமிடப்பட்ட போரினால் நாசமாக்கியுள்ள நாட்டை ஒரு தசாப்த காலத்திற்குப் பின்னர் அதன் புனரமைப்புக்கு தேவையான எண்ணெய் இருப்புக்களை அணுக டமாஸ்கஸில் அரசாங்கத்தை வெளிப்படையாக மறுக்கிறது.

இரு நாடுகளிலும், ஈராக் மற்றும் சிரிய இஸ்லாமிய அரசை எதிர்த்துப் போராட அமெரிக்க துருப்புக்கள் உள்ளன என்ற பொய்யின் அடிப்படையில் வாஷிங்டன் தனது ஆக்கிரமிப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சிரியாவில் அல்கொய்தா படைகளுக்கு அமெரிக்க ஆதரவால் உருவாக்கப்பட்ட ISIS பேயானது, பெருமளவில் 2017 இல் ஈராக்கில் தீர்க்கரமாக தோற்கடிக்கப்பட்டது. பென்டகன் இப்போது தாக்கிக் கொண்டிருக்கும் ஆயுதக்குழுக்கள் 2019 மார்ச் மாதத்தில் சிரிய பிரதேசத்தின் மீதான கடைசி பிடியை இழந்தது.

பிராந்தியத்தில் தொடர்ச்சியான இராணுவ இருப்புக்கான உண்மையான காரணங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய மேலாதிக்கத்தின் வீழ்ச்சியை இராணுவவாதத்தின் மூலம் மாற்றியமைப்பதற்கான அவநம்பிக்கையான உந்துதலுடன் பிணைக்கப்பட்டுள்ளன. பைடென் நிர்வாகம், அதற்கு முன்னர் ஒபாமா மற்றும் டிரம்ப் நிர்வாகங்களைப் போலவே, வாஷிங்டனின் இராணுவ எந்திரத்தின் முழு சக்தியையும் அதன் "பெரும் சக்தி போட்டியாளர்களுக்கு" எதிராக முற்றும் முதலுமாக சீனாவிற்கு எதிராக திருப்பும் நோக்கத்துடன் பிராந்தியத்தில் "என்றென்றும் போர்களை" முடிவுக்குக் கொண்டுவருவதாக வார்த்தையாடல்களுடன் வாக்குறுதிகளை அளித்தது.

எவ்வாறாயினும், மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்க இராணுவத்தை வெளியேற்றுவது சாத்தியமற்றது என்று அவர்கள் அனைவரும் கண்டறிந்துள்ளனர். இது சீனாவுடனான மோதலில் ஒரு மூலோபாய போர்க்களமாக உள்ளது. இது பிராந்தியத்தின் முதலிட முதலீட்டாளராகவும் ஈராக், ஈரான் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கான முக்கிய வர்த்தக பங்காளியாகவும் உருவெடுத்துள்ளது.

இதை கடந்த வாரம் மத்திய கட்டளையகத்தின் (CENTCOM) தலைவர் Marine Corps ஜெனரல் கென்னத் மெக்கென்சி ஜூனியர் இது பற்றி மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் நடத்திய இணையவழி மாநாட்டில் பின்வருமாறு விவரித்தார்.

சீனா அதன் எரிசக்தி விநியோகத்தில் பாதிக்கு இப்பிராந்தியத்தை சார்ந்துள்ளது என்பதைக் குறிப்பிட்டு, ஜெனரல் மெக்கென்சி கூறினார்: “மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் சீனாவின் நலன்கள் எண்ணெய்க்கு அப்பாற்பட்டு நீண்டுள்ளன. உலகின் முக்கிய கப்பல் வழித்தடங்களில் சிக்கி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கான திருப்பத்தை நாங்கள் முடிவற்குகொண்டுவந்து நீண்ட காலத்திற்கு பின்னரும், இப்பகுதி புவிசார் மூலோபாய அர்த்தத்தில் முக்கிய நிலப்பரப்பாக இருக்கும். எனவே, இது மிகவும் மாறுபட்ட மதிப்புகளைக் கொண்ட இரண்டு அமைப்புகளுக்கு இடையிலான மூலோபாய போட்டிக்கான முக்கிய அரங்கங்களில் ஒன்றாகும் ... ”

மத்திய கிழக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பின் வெடிப்பு ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் உலகளாவிய விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகும். கடந்த வாரம் இங்கிலாந்தின் HMS Defender கிரிமியாவிலிருந்து ரஷ்யா உரிமை கோரிய கடல்பரப்பில் வேண்டுமென்றே நுழைந்த பின்னர் ரஷ்ய படைகள் பிரிட்டிஷ் போர்க்கப்பலின் பாதையில் எச்சரித்து சூடு நடாத்தி குண்டுகளை வீசின. இப்பதட்டங்களைத் தணிக்க முயலாமல், மாஸ்கோ மோதலுக்கு வழிவகுக்கும் என எச்சரித்த இரண்டு வார கால இராணுவப் பயிற்சியான Sea Breeze நடவடிக்கையை நேட்டோ இப்போது கருங்கடலில் தொடங்குகிறது.

கருங்கடலில் பிரிட்டிஷ் கப்பல் ஆத்திரமூட்டப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிக்கும் USS Curtis Wilbur தைவான் நீரிணை வழியாக அனுப்பப்பட்டது. இது பெய்ஜிங்கின் எதிர்ப்பைத் தூண்டியது. ஜனவரி 20 ம் தேதி பைடென் பதவியேற்றதிலிருந்து தைவான் நீரிணை வழியாக அனுப்பப்பட்ட ஆறாவது அமெரிக்க போர்க்கப்பல் இதுவாகும். இது அமெரிக்க-சீனா இராணுவ மோதலுக்கு ஒரு முக்கிய புள்ளியாக மாறும் நீர்வழி பாதையில் அச்சுறுத்தலை அதிகரிக்கின்றது.

இதற்கிடையில், ஜப்பானை தளமாகக் கொண்ட USS Ronald Reagan விமானம் தாங்கி தாக்குதல் குழு முதன்முறையாக வட அரேபிய கடலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பாரசீக வளைகுடாவுக்கு அருகே நிலைநிறுத்தப்படுவது ஆப்கானிஸ்தானில் இருந்து விலகும் அமெரிக்க துருப்புக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதாக பென்டகன் கூறியுள்ள நிலையில், அமெரிக்க வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் அதன் வருகை வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல, ஈரானுக்கு எதிரான பரந்த இராணுவ நடவடிக்கைக்கான தயாரிப்பு என்பதையே காட்டுகின்றது.

இந்த பிராந்தியங்களில் ஏதேனும் ஒன்று ஒரு உலகளாவிய இராணுவ மோதலுக்கு தீப்பொறியாக மாற முடியும்.

கோவிட்-19 தொற்றுநோயின் மற்றொரு அலை ஏற்கனவே 4 மில்லியன் உயிர்களின் இழப்பாக உள்ள உத்தியோகபூர்வ எண்ணிக்கையை அதிகரிக்கும் போதும், போரினை ஒரு வழமையான நிகழ்வாக்குவது, உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள் மனித உயிர்களைப் பாதுகாப்பதை இலாப நோக்கத்திற்காக அடிபணியச் செய்துள்ள பாரிய மரணத்தை வழமையான நிகழ்வாக்குவதுடன் ஒன்றிணைகின்றது.

1938 ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப் போர் வெடித்ததற்கு முன்னதாக, லியோன் ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணமான இடைமருவு வேலைத்திட்டத்தில் பின்வருமாறு எழுதினார்:

"ஏகாதிபத்திய போர் என்பது முதலாளித்துவத்தின் கொள்ளையடிக்கும் அரசியலின் தொடர்ச்சியும் கூர்மைப்படுத்தலும் ஆகும். போருக்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் போராட்டமும் அதன் வர்க்கப் போராட்டத்தின் தொடர்ச்சியும் கூர்மைப்படுத்தலும் ஆகும்.”

தொற்றுநோய்களின் போது மில்லியன் கணக்கான உயிர்களின் இழப்பில் இலாபத்தை கொலைகாரத்தனமாக பின்தொடர்வது முதலாளித்துவ அமைப்பிற்கும் மனிதகுலத்தின் தேவைகளுக்கும் இடையிலான முக்கிய முரண்பாட்டை அம்பலப்படுத்தியுள்ளதுடன் மற்றும் சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டத்தின் வெடிக்கும் வளர்ச்சியைத் தூண்டியுள்ளது.

உலக தொழிலாள வர்க்கத்தின் இந்த போராட்டம்தான் அமெரிக்கா மற்றும் உலக ஏகாதிபத்தியத்தின் போர் இயக்கத்தை எதிர்ப்பதற்கான ஒரே உண்மையான அடித்தளத்தை வழங்குகிறது. முக்கியமான கேள்வி என்னவென்றால், இந்த போராட்டத்திற்கு ஒரு சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கைக் கொடுக்கக்கூடிய ஒரு புரட்சிகர தலைமை தேவையாகும். இதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு கட்டியெழுப்பப்பட வேண்டும்.

Loading