முன்னோக்கு

ஜனவரி 6 பாசிசவாத கிளர்ச்சிக்கு ஆறு மாதங்களுக்குப் பின்னர், அமெரிக்காவில் ஜூலை நான்காம் தினம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜூலை 4 சுதந்திரப் பிரகடனத்தின் இருநூற்று நாற்பத்தைந்தாவது நினைவு தினம் இந்தாண்டு அசாதாரண சூழ்நிலைகளின் கீழ் நடைபெறுகிறது.

John Trumball’s painting Declaration of Independence [Source: Wikimedia Commons] [Photo: John Trumbull ]

2020 தேர்தல்களின் முடிவுகளை மாற்றி ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்கும் நோக்கில் ஜனவரி 6 இல் ட்ரம்ப் ஒரு கும்பலைத் தூண்டிவிட்டார், அதற்குப் பிந்தைய முதலாவது ஜூலை நான்காம் தினம் இதுவாகும். அந்த அரசியல் சதிக்கு, தேர்தல் 'களவாடப்பட்டது' என்ற பொய்யை ஊக்குவித்த குடியரசுக் கட்சியின் ஆதரவு இருந்தது. அந்த சம்பவங்கள் கட்டவிழ்ந்த போது தலைமை செயலகத்தில் பொலிஸ் படைகள் ஒதுங்கி நிற்பதை, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அரசு எந்திரத்தினது ஒரு குறிப்பிடத்தக்க பிரிவின் ஆதரவையும் அது பெற்றிருந்தது.

அரசியலமைப்பைக் கவிழ்ப்பதற்கான ட்ரம்பின் முயற்சிகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட ஒரு வருடத்தில், ஜனநாயகக் கட்சியும் அதன் துணை அமைப்புகளும் வரலாற்றை இனவாதரீதியில் மாற்றி எழுதுவதன் மூலமாக அமெரிக்க புரட்சியின் பாரம்பரியத்தை அழிக்கும் ஒரு முயற்சியில் ஈடுபட்டுள்ளன. நியூ யோர்க் டைம்ஸ் அதன் '1619 திட்டத்தை' தொடங்கி, அது அமெரிக்கப் புரட்சியை 'அடிமைகளின் எஜமானர்களது கலகம்' (slaveholders’ rebellion) என்று அறிவித்தது, அமெரிக்காவில் அடிமைத்தனத்தை நிலைநிறுத்துவதே அதன் நோக்கமாக இருந்தது.

ஜூலை 4, 1776 சுதந்திரப் பிரகடனத்தை இரண்டாவது கான்டினென்டல் மாநாடு ஏற்றுக் கொண்டமை அதற்குப் பின்னர் வரவிருந்த அமெரிக்க வரலாற்றில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகிலும் ஒரு முக்கிய திருப்புமுனையைக் குறித்தது. அதற்கு ஓராண்டுக்கு முன்னர், 1775 ஏப்ரலில் தொடங்கிய, விடுதலைப் போர், 'ஐரோப்பிய நடுத்தர வர்க்கத்திற்கு எச்சரிக்கை மணியை ஒலித்தது,” என்று கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்டார், 1789 இல் தொடங்கிய பிரெஞ்சுப் புரட்சி உட்பட அந்த சகாப்தத்தின் மாபெரும் ஜனநாயகப் புரட்சிகளுக்கு அது உத்வேகம் அளித்தது.

பிரிட்டிஷ் முடியாட்சியில் இருந்து அவர்களின் மாற்றத்திற்கிடமில்லா முறிவை அறிவித்த போது, அந்த 'ஸ்தாபக தந்தைகள்' அந்த புரட்சியை சர்வவியாபக அறிவொளி கருத்துக்களின் மீது வைத்திருந்தனர், அந்த கருத்துருக்கள் அவர்களின் காலத்தில் முற்றிலும் முற்போக்காக இருந்தன. தோமஸ் ஜெபர்சன் எழுதிய அந்த பிரகடனம், “இந்த உண்மைகளை நாம் சுய-நிரூபணமாக ஏற்றுக் கொள்கிறோம்,” என்று அறிவித்ததுடன், “அனைவரும் சமமாக உருவாக்கப்படுகிறார்கள், அவர்களின் படைப்பாளரால் அவர்களுக்கு அந்நியப்படுத்த முடியாத சில உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது, வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியின் தேடலும் அவற்றில் உள்ளடங்கும்,” என்று அறிவித்தது. “அரசின் எந்த வடிவமாவது இதை அழிப்பதாக மாறினால்,” “அதை மாற்றுவதற்கும் அல்லது அதை ஒழிப்பதற்கும் மக்களுக்கு உரிமை உண்டு,” என்று அது தொடர்ந்து அறிவித்தது.

அனைத்து முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிகளையும் போலவே, சமத்துவத்திற்கான சர்வவியாபக இலட்சியங்களுக்கும் மற்றும் அந்த காலத்தில் மேலோங்கி இருந்த புறநிலைமைகளுக்கும் இடையே ஒரு மிகப்பெரும் இடைவெளி இருந்தது. குறிப்பாக, அமெரிக்க ஜனநாயகத்தின் அடிப்படை முரண்பாடான, வழிவழியாக வந்த பண்டைய அடிமைத்தனத்தின் இருப்பை, அமெரிக்கப் புரட்சியால் அந்தக் கட்டத்தில் தீர்க்க முடியவில்லை.

ஆனால், அந்த சுதந்திரப் பிரகடனத்திற்கு எண்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், அடிமைத்தனத்தை ஒழிப்பதில் உச்சக்கட்டத்தை அடைந்த இரண்டாம் அமெரிக்கப் புரட்சியான அமெரிக்க உள்நாட்டுப் போர் வெடிப்பிற்கு இட்டுச் செல்லவிருந்த சமூக மற்றும் அரசியல் செயல்முறைகளுக்கு அந்த புரட்சி உயிரூட்டியது. இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையிலான வர்க்கப் போராட்டத்தில் ஒரு புதிய கட்டத்திற்கு உள்நாட்டுப் போர் வழி வகுத்தது.

இன்று இந்த ஜனநாயக ஆட்சி வடிவங்களின் அதிர்ச்சியூட்டும் சீரழிவுக்கு அடியில் இருப்பது என்ன? முதலாவதாக, சமூக சமத்துவமின்மையின் அதீத வளர்ச்சி. நான்கு தசாப்தகால சமூக எதிர்ப்புரட்சியானது, பிரிட்டிஷ் பிரபுத்துவமே வெட்கப்படுமளவுக்கு மக்களின் ஒரு சிறிய சதவீதத்தினர் கரங்களில் செல்வவளத்தைக் குவித்து விட்டுள்ளது.

அமெரிக்க குடும்பங்களில் உயர்மட்ட ஒரு சதவீதம் இப்போது 34.2 ட்ரில்லியன் டாலர்களைக் கொண்டுள்ளது, அதாவது இது மக்கள்தொகையில் அடிமட்டத்திலுள்ள அரைவாசி மக்களின் செல்வத்தை விட 15 மடங்கு அதிகமாகும். இந்த பெருந்தொற்றின் போது, உலகின் பில்லியனர்கள் அவர்கள் செல்வவளத்தை 60 சதவீதத்திற்கும் அதிகமாக, 8 ட்ரில்லியன் டாலரில் இருந்து 13.1 ட்ரில்லியன் டாலராக அதிகரித்தனர். அமசனின் ஜெஃப் பெஸோஸ் அல்லது டெஸ்லாவின் எலோன் மஸ்க் போன்ற தனிநபர்கள், பில்லியன் கணக்கானவர்களின் வாழ்வின் மீது அளப்பரிய அதிகாரத்துடன், அவர்களின் சொந்த சமூக மற்றும் பொருளாதார சூழல்களைக் கொண்டுள்ளனர்.

இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஈரவிக்கமற்ற மற்றும் முடிவில்லா போர் முனைவுடன் இணைந்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில், ஆளும் உயரடுக்கு ஒரு கொலைபாதக கொள்கைக்குத் தலைமை வகித்துள்ளது, இது கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் அமெரிக்காவில் மட்டும் 600,000 க்கும் அதிகமானவர்கள் இறப்பதற்கு வழிவகுத்துள்ளது. இப்போது பைடெனின் கீழ், அதே ஆளும் வர்க்கம், நூறு மில்லியன் கணக்கானவர்கள் இல்லையென்றாலும் பத்து மில்லியன் கணக்கானவர்களின் உயிர்களை அச்சுறுத்தும் இராணுவவாதம் மற்றும் போர் கொள்கையைத் தீவிரப்படுத்தி வருகிறது.

சமூக சமத்துவமின்மை மற்றும் போரின் கொடூர விளைபொருள் சர்வாதிகாரத்திற்கான புறநிலை நிலைமைகளை உருவாக்குகிறது. இந்த நிகழ்ச்சிப்போக்கின் மிகவும் செறிவூட்டப்பட்ட வடிவத்தை ட்ரம்ப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஜனவரி 6 சம்பவங்கள் ஆறு மாதங்களுக்கு முன்னர் என்ன நடந்தது என்பதற்கு மட்டும் முக்கியமானதல்ல, மாறாக என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதிலும் முக்கியத்துவம் கொண்டுள்ளது. அரசைத் தூக்கியெறிந்து ஜனநாயக ஆட்சி வடிவங்களில் என்ன எஞ்சியுள்ளதோ அவற்றை இல்லாதொழிக்க செயலூக்கத்துடன் சூழ்ச்சி செய்து வரும் ஆளும் வர்க்கத்தின் ஒரு கன்னைக்காக ட்ரம்ப் பேசுகிறார்.

கடந்த வாரம் முழுவதும், ட்ரம்ப் குடியரசுக் கட்சியின் நடைமுறை தலைவராக அவர் இடத்தை மேற்கொண்டு உறுதிப்படுத்தும் விதத்தில், குடியரசுக் கட்சியின் 2022 இடைக்கால தேர்தல் பிரச்சாரத்தை உத்தியோகபூர்வமின்றி தொடங்கியதைப் போல, தேர்தல்-பாணியிலான பல கூட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். கடந்த வார இறுதியில் ஓஹியோவின் லோரைன் உள்ளாட்சியில் நடந்த ஒரு பேரணியில், ட்ரம்ப் 'தீவிர இடது ஜனநாயகக் கட்சியினருக்கு' எதிராக சீறினார், இவர்கள் புலம்பெயர்ந்தவர்களை நாட்டுக்குள் அனுமதித்தும் பொலிஸைப் பலவீனப்படுத்தியும் 'உங்கள் குடும்பத்தைப் பெரும் ஆபத்தில் ஆழ்த்த சாத்தியமான அனைத்தும் செய்து வருகிறார்கள்' என்றார்.

ஓஹியோவில் ட்ரம்பின் கருத்துக்களுக்கு முன்னதாக, ஓர் அப்பட்டமான பாசிசவாதியும் Qanon சதி கோட்பாட்டின் ஆதரவாளருமான காங்கிரஸ் சபை பெண் உறுப்பினர் Marjorie Taylor Greene ஓர் அறிக்கை வெளியிட்டார், அதில் அவர் 'நியூ யோர்க் நகரின் சிறிய கம்யூனிஸ்டுகளான AOC தலைமையிலான ஜிஹாத் படை' உட்பட 'தீவிர கொள்கையுடைய ஜனநாயக சோசலிஸ்ட்டுகளை' கைது செய்ய அழைப்பு விடுத்தார்.

வியாழக்கிழமை, அரிசோனா மாநில வாக்குப்பதிவு மீதான கட்டுப்பாடுகளை நிலைநிறுத்த உச்ச நீதிமன்றம் 6-3 என்ற கணக்கில் வாக்களித்தது. வாக்குரிமைகள் சட்டத்தில் எஞ்சியுள்ளவற்றையும் நீக்கும் இந்த முடிவு, வாக்குரிமைக்குக் குழிபறிக்கும் கூடுதல் நடவடிக்கைகளை நிறைவேற்ற நாடெங்கிலுமான மாநிலங்களுக்கு ஒரு சமிக்ஞையாகும். இந்த தேர்தல்கள் 'களவாடப்பட்டன' என்ற குடியரசுக் கட்சியினரின் மோசடியான கூற்றுக்களை வலுப்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆனால் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க அங்கே ஆளும் வர்க்கத்தின் எந்தப் பிரிவும் பொறுப்பேற்றிருக்கவில்லை. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு மற்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் அபாயத்தின் முக்கியத்துவத்தை மூடி மறைப்பதும் மற்றும் குறைத்துக் காட்டுவதுமே ஜனநாயகக் கட்சியின் விடையிறுப்பாக உள்ளது. குடியரசுக் கட்சியில் ட்ரம்ப் உதவியாளர்களுடன் 'நல்லிணக்கம்' மற்றும் 'இருகட்சியின் ஒருமனதான சம்மதம்' இவற்றுக்கு அழைப்பு விடுத்து பைடென் ஆறு மாதங்களுக்கு முன்னர் அதிகாரத்திற்கு வந்தார்.

பின்னர் ஜனநாயகக் கட்சியினர் முற்றிலும் பிற்போக்குத்தனமான திட்டத்தை முன்னெடுத்தனர், அமெரிக்க புரட்சியை மட்டுமல்ல மாறாக உள்நாட்டு போரையும் வெறுமனே முடிவின்றி நீடித்த இனவாத போராட்டத்தின் அத்தியாயங்கள் என்றும், அதில் கறுப்பின அமெரிக்கர்கள் வெள்ளையின தொற்றுக்கு எதிரான ஒரு தனிப்பட்ட போராட்டத்தைத் தொடுத்திருந்தனர் என்றும் சித்தரித்து, வரலாற்றைத் திருத்தி எழுத முற்பட்டனர்.

அமெரிக்காவின் புரட்சிகர மரபுகளை இழிவுபடுத்தியதன் மிகவும் பிற்போக்குத்தனமான விளைவுகளில் ஒன்று என்னவென்றால், அமெரிக்க புரட்சியின் விளைபொருளான அரசியலமைப்பையும் ஜனநாயக உரிமைகளையும் தூக்கியெறிய ட்ரம்ப் சதி செய்கின்ற அதேவேளையில், அவர் தன்னை அமெரிக்க புரட்சியின் பாரம்பரியத்தின் பாதுகாவலராக அபத்தமாக காட்டிக்கொள்ள அது அவரை அனுமதித்துள்ளது.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தீவிரமயமாதல் பற்றிய ஆழ்ந்த அச்சமே ஆளும் வர்க்கத்தின் இரண்டு கன்னைகளும் பொதுவாக உள்ளது. ட்ரம்ப் அவரின் பாசிசவாத ஆவேச உரைகளில், முதலாளித்துவத்தைக் காப்பாற்றவும் மற்றும் சோசலிசம் மீதான அச்சத்தைப் போக்கவும் நிதியியல் செல்வந்த தட்டுக்கு சிறந்த இயங்குமுறையாக தன்னைக் காட்டிக் கொள்கிறார். ஜனநாயகக் கட்சியினர் இன மோதலை ஊக்குவிப்பது தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்கான ஒரு பொறிமுறையாக உள்ளது. உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த், நியூ யோர்க் டைம்ஸின் 1619 திட்டமும் வரலாற்றை இனவாதரீதியில் பொய்மைப்படுத்தலும் என்பதன் முன்னுரையில் பின்வருமாறு எழுதினார்:

கல்வித்துறையிலும் ஜனநாயகக் கட்சியின் அரசியல் திட்டநிரலிலும் பல தசாப்தங்களாக அபிவிருத்தி செய்யப்பட்டுவரும் இந்த இனவாத சித்தாந்தத்தின் இடைக்கணிப்பு திட்டம் தான் 1619 திட்டத்தின் பின்னால் இருக்கும் உந்துசக்தியாகும். குறிப்பாக அதீத சமூக துருவமுனைப்படல் நிலைமைகளின் கீழ், அத்தகைய நிலைமைகளில் சோசலிசத்திற்கான ஆதரவும் அதன் மீதான ஆர்வமும் வளர்ந்து வருகின்ற நிலையில், முதலாளித்துவ வர்க்கத்தின் ஓர் அரசியல் கருவியான ஜனநாயகக் கட்சி சமூக சமத்துவமின்மை மற்றும் வர்க்க மோதலின் பேராபத்தை அதிகரிக்கும் பிரச்சினைகளில் இருந்து அரசியல் விவாதத்தின் ஒருமுனைப்பைத் திசைதிருப்புவதற்கு ஆர்வமாக உள்ளது. இது தான், அதன் சொல்லாடல்களின் மையத்தில் இனத்தை நிலைநிறுத்தி வரலாற்றுக்கு மறுவிளக்கம் அளிக்கும் செயல்பாடாக உள்ளது.

இரண்டு அமெரிக்கப் புரட்சிகளுக்குமான முறையான பாதுகாப்பை உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP) மட்டுமே ஒழுங்கமைத்தன என்பது அளப்பரிய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தலையீட்டுக்கு அப்பாற்பட்டு, 1619 திட்டத்திற்கான ஒரே எதிர்ப்பு வலதிலிருந்து மட்டுமே வந்திருக்கும்.

இது, அமெரிக்காவில் மட்டுமல்ல சர்வதேச அளவில் ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு என்பது சோசலிசத்திற்காக தொழிலாள வர்க்கத்தைச் சுயாதீனமாக அணிதிரட்டுவதைச் சார்ந்துள்ளது என்ற இன்னும் ஆழமான உண்மையை அடிக்கோடிடுகிறது.

'வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியின் தேடல்' இவற்றை அழிப்பதாக மாறும் எந்தவொரு அரசையும் 'மாற்றவும் அல்லது ஒழிக்கவும்' “உரிமை' மற்றும் 'கடமை' இருப்பதாக சுதந்திர பிரகடனம் அறிவித்தது. மாற்றப்பட வேண்டியவை மாற்றப்பட வேண்டும், இந்த வார்த்தைகள் இன்று ஆளும் வர்க்கத்தின் மீதும் அது தலைமை தாங்கும் இந்த ஒட்டுமொத்த சமூக மற்றும் பொருளாதார அமைப்புமுறை மீதும் ஒரு குற்றப்பத்திரிகையை வாசிக்கிறது, இது கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கொடூரமான வடிவங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

செல்வந்தர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதன் மூலமும் உற்பத்தி கருவிகள் மீதான தனியுரிமைகளை இல்லாதொழிப்பதன் மூலமும், மற்றும் உண்மையான சமத்துவத்தின் அடிப்படையில் ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டமைப்பதன் மூலமும், ஜனநாயகத்தை பொருளாதாரம் வரை விரிவுபடுத்த, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களின் ஓர் அரசை ஸ்தாபிக்க போராடாமால், பாசிசம், சர்வாதிகாரம் மற்றும் எதேச்சதிகாரத்தை எதிர்ப்பதென்பது சாத்தியமே இல்லை.

Loading