இந்த கோடையில் இங்கிலாந்து மில்லியன் கணக்கான கோவிட்-19 நோய்தொற்றுக்களை எதிர்கொள்ளும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

போரிஸ் ஜோன்சனின் கன்சர்வேடிவ் கட்சி அரசாங்கம் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை வெளிப்படையாக பின்பற்றுவதோடல்லாமல், பாரியளவில் நோய்தொற்று, நோய் மற்றும் இறப்புக்கான வாய்ப்புகள் இருப்பதை அலட்சியப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறது.

ஜூலை 19 முதல் அனைத்து வணிகங்களும் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்பதோடு, பெரியளவில் நிகழ்ச்சிகளை நடத்துவதும் அங்கீகரிக்கப்படும். முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி ஆகிய கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும். சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் (Sajid Javid) புதன்கிழமையன்று, ஆகஸ்ட் 16 முதல், இரண்டு அளவு தடுப்பூசிகள் போடப்பட்ட வயது வந்த நபர்களும் மற்றும் 18 வயதிற்குட்பட்ட அனைவரும், கோவிட்-19 நோய்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருந்தால், அவர்கள் இனி தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை என்று அறிவித்தார். பள்ளிகளில் அவ்வப்போது நடக்கும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் கூட கோடைக்கால முடிவில் நீக்கப்படும்.

ஜூலை 5, 2021 அன்று, டவுனிங் வீதியில் நடைபெற்ற திங்கட்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் விட்டி பேசுகிறார் (ஆதாரம்: ஆண்ட்ரூ பார்சன்ஸ் எடுத்த படம்/எண் 10 டவுனிங் வீதி/பிளிக்கர்)

மேலும், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட வயது வந்தவர்கள் தனிமைப்படுத்தப்படாமல் மஞ்சள் பட்டியல் நாடுகளுக்குச் செல்ல விரைவில் அனுமதிக்கப்படுவார்கள், அதேபோல தடுப்பூசி போடப்படாத குழந்தைகளும் அவர்களது குடும்பத்துடன் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் (Grant Shapps) அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய கால்பந்து கோப்பை போட்டியின் இங்கிலாந்து-டென்மார்க் அரையிறுதியைக் காண நேற்று மாலை, 60,000 கால்பந்து ரசிகர்கள் இலண்டனின் வெம்ப்லி மைதானத்திற்கு செல்ல ஊக்குவிக்கப்பட்டனர். இந்த விளையாட்டு போட்டி தொற்றுநோயை “பெரிதும் பரப்பும்” நிகழ்வாக மாறக்கூடும் என்பது பற்றி அக்கறைப்பட்டாரா என்று வணிகச் செயலாளர் குவாசி குவார்டெங் (Kwasi Kwarteng) இடம் புதனன்று காலை கேட்கப்பட்டதற்கு, “வாழ்க்கையில் எப்போதும் ஆபத்து உள்ளது… என்ன நடக்கப்போகிறது என்பதை வெறுமனே நாம் பார்க்க வேண்டியது தான்” என்று பதிலிறுத்தார்.

புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை நாளாந்தம் 50,000 அளவிற்கு உயரும் என்பதால் இங்கிலாந்து “அதிக இறப்புக்களுக்கு [தன்னை] பழகிக் கொள்ள வேண்டும்” என்று ஜோன்சன் வெளிப்படையாகக் கூறியுள்ளார். ஜாவித், மக்களை “கோவிட் நோய்தொற்றுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியதுடன், கோடை முடிவதற்கு முன்னர் மொத்த நாளாந்த நோய்தொற்றுக்கள் 100,000 ஐ எட்டக்கூடும் என்பதை ஒப்புக்கொண்டார். தொற்றுநோயியல் நிபுணரும் அரசாங்கத்தின் முன்மாதிரியாளருமான பேராசிரியர் நீல் பெர்குசன் (Neil Fergusson), “இங்கிலாந்தில் மிக அதிக எண்ணிக்கையில், அதாவது நாளாந்தம் 150,000 முதல் 200,000 வரை நோய்தொற்றுக்கள் பரவ வாய்ப்புள்ளது” என்று எச்சரித்தார்.

கோடைகாலத்தின் மீதமூள்ள ஆறு வாரங்களில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமாக நோய்தொற்றுக்கள் பரவக்கூடும் என்று கார்டியன் செய்தியிதழ் தெரிவிக்கிறது. ஆனால் இது இப்போதிருந்து ஜூலை 19 தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 35,000 நோய்தொற்றுக்கள் பரவும், பின்னர் அதிலிருந்து ஆகஸ்ட் 16 தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 60,000 நோய்தொற்றுக்கள் பரவும் என்ற மிகுந்த பழமைவாத மதிப்பீட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது.

பொது சுகாதார விளைவின் கடைசி அடையாளங்களை கிழித்தெறிய அழுத்தம் கொடுக்கப்படும் பிரிட்டனின் தலைமை குழு அறைகளையும் மற்றும் இதழாசிரியருக்குரிய அலுவலகங்களையும் ஒரு தீவிர இரத்தவெறி பற்றிக் கொண்டுள்ளது. சுய தனிமைப்படுத்தல் தேவைகளை முடிவுக்குக் கொண்டு வரும் தேதி மிகவும் தாமதிக்கப்பட்டது, அதாவது மில்லியன் கணக்கானவர்கள் வீட்டில் தங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள் என்ற நிலையில் அது முதலாளிமாருக்கு “குழப்பத்தை” ஏற்படுத்தும் என்ற புகார்களால் நேற்று செய்தியிதழ்களின் முதல் பக்கங்கள் நிரம்பியிருந்தன.

டெய்லி மெயில், இதை “தனிமைப்படுத்தல் பைத்தியக்காரத்தனம்” என அறிவித்தது, “திரு ஜாவித், இப்போது உங்கள் மனநிலையை நீங்கள் இழக்க முடியாது” என்று எச்சரித்து, 'உடனடியாக' கட்டுப்பாடுகளை நீக்க அவரை வலியுறுத்தியது, மேலும் “செவிலியரை விடுவிக்க வேண்டிய நேரம் இது” என்று தேசத்திற்கு தெரிவித்தது. டெய்லி டெலிகிராஃப், தனிமைப்படுத்தல் விதிகள் “சுதந்திரத்திற்கான தடைகளைக் குறைக்கின்றன” என்று அறிவித்து, டோரி வலதுசாரி மற்றும் முன்னாள் கட்சித் தலைவர்கள் சர் ஐயன் டங்கன் ஸ்மித்தை (Sir Iain Duncan Smith) மேற்கோள் காட்டி, அரசாங்கத்தின் திட்டம் “சுதந்திர தினத்தை” “கேலி செய்கிறது” என்று கூறுகிறது. இதன் தலையங்கம், சுய தனிமைப்படுத்தலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு “ஏன் காத்திருக்க வேண்டும்? …இந்த நாடு முன்னேறிச் செல்ல வேண்டும்” என்று கூறியது.

இங்கிலாந்தின் விருந்தோம்பல் தலைவர் கேட் நிக்கோல்ஸ் (Kate Nicholls), சுய தனிமைப்படுத்தல் வணிகங்களுக்கு “கடும் நாசத்தை” விளைவித்தது என்றும், அதை நீக்குவதற்கான திட்டம் “செயல்படுத்தப்படும் வேகம் போதுமானதாக இல்லை” என்றும் புகார் செய்தார்.

தொழிற் கட்சியின் கருத்தை சர் கெய்ர் ஸ்டார்மர் ஜோன்சனுடன் கேள்வி நேரத்தில் பகிர்ந்து கொண்டார்: “ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் இழப்பு காரணமாக கடுமையாக நசிந்துவிடும் என்று ஏற்கனவே எச்சரிக்கபட்டுள்ள வணிகங்களுக்கு இது சுதந்திர தினமாக இருக்காது” என்று கூறியது. தொழிற் கட்சி, அரசாங்கம் “பொறுப்பற்ற” வகையில் வணிகங்களை மீளத் திறப்பதாக குற்றம்சாட்டுகிறது, என்றாலும் “அடிப்படை பாதுகாப்புகளுக்கான” மேம்ப்போக்கான கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு மட்டும் அழைப்பு விடுக்கிறது.

அரசாங்க கொள்கைகளின் தர்க்கம், ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை சுய தனிமைப்படுத்தலை தொடர்வதற்கு வழிவகுக்கிறது. கார்டியன் புள்ளிவிபரங்களின்படி, நோய்தொற்றுக்களின் கடும் எழுச்சியால் இந்த கோடையில் சுமார் 10 மில்லியன் பேர் சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவார்கள். பெரு வணிகங்கள் இலாபமீட்டுவதிலுள்ள இந்த இடையூறை தடுப்பதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். Whitehall ஆதாரத்தின் படி, i ஊடகத்திற்கு பேசுகையில், அதிகரித்து வரும் பொது தயக்கத்தின் காரணமாக, நிகழ்வுகள் மற்றும் விருந்தோம்பல் துறை 4 பில்லியன் பவுண்டுகளை இழக்க நேரிடும் என்று அவர்களுக்கு கூறப்பட்ட பின்னர் அரசாங்கம் கட்டாய முகக்கவச பயன்பாட்டை நீக்கியது.

பொது சுகாதார நடவடிக்கைகளை இவ்வாறு குற்றகரமாக கைவிடுவதன் விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும்.

தடுப்பூசிகள் கோவிட்-19 இலிருந்து இறப்பு விகிதத்தை கணிசமாகக் குறைத்துள்ளன, அதாவது பெரும்பாலான மதிப்பீடுகள் இங்கிலாந்தில் தற்போது ஒவ்வொரு ஆயிரம் நோய்தொற்றுக்களுக்கு ஒரு மரணம் வீதம் நிகழ்கிறது என்பதை ஒப்புக்கொள்கின்றன. இருப்பினும், இது இன்னும் சில வாரங்களில் ஒரு நாளைக்கு 100 முதல் 200 இறப்புக்களாக மாறக்கூடும். கடந்த ஆண்டு முதல் இப்போது வரை மோசமான நிலையில் இருக்கும் சுகாதார சேவை அமைப்புக்கு இன்னும் அதிக அழுத்தத்திற்கு வரும்.

அவசரகால நிலைகளுக்கான விஞ்ஞான ஆலோசனைக் குழுவின் (Scientific Advisory Group for Emergencies - SAGE) மாதிரி, ஜூலை பிற்பகுதி மற்றும் ஆகஸ்ட் முற்பகுதியில், நாளாந்த நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை 100,000 ஐ எட்டுமானால், ஒரு நாளைக்கு மருத்துவமனையில் சேர்க்கும் எண்ணிக்கை 1,300 ஆக இருக்கும் என்று உத்தேசிக்கிறது. கொரோனா வைரஸ் மருத்துவமனை சேர்க்கைகள் ஏற்கனவே அதிகரித்து வருகின்றன, ஜூலை 5 இல் தொடங்கிய வாரத்தில் இங்கிலாந்தில் இது 70 சதவீதம் அதிகரித்து, 416 ஆக அதிகரித்துள்ளது.

ஏராளமான மக்கள் பலவீனப்படுத்தும் நீண்டகால கோவிட்டால் (Long Covid) பாதிக்கப்படுவார்கள். பெரும்பாலும் 10,000 பேர் இந்த நிலைக்கு ஆளாவார்கள், இவர்களில் 20 சதவீதம் பேர் ஒரு வருட காலத்திற்கும் மேலாக வேலை செய்யவோ, படிக்கவோ அல்லது சாதாரண அன்றாட வேலைகளை செய்யவோ கூட முடியாத நிலைக்கு ஆளாவார்கள் என்று பிரிட்டிஷ் மருத்துவச் சங்கம் (British Medical Association-BMA) Independent பத்திரிகைக்கு தெரிவித்துள்ளது. இதுவரை லோங் கோவிட் நோய்தொற்றால் இரண்டு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 385,000 பேர் ஒரு வருடத்திற்கும் மேலாக இதனுடன் வாழ்ந்து வருகின்றனர், இவர்களில் 9 சதவீதம் பேர் மட்டுமே முதலில் பாதிக்கப்பட்டபோது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்தின் செய்தித் தொடர்பாளர், டாக்டர் டேவிட் ஸ்ட்ரெய்ன் (Dr. David Strain), தடுப்பூசிகளால் 10-17 சதவீத நோய்தொற்றுக்களை குறைக்க முடியும் என மதிப்பிப்பட்டது, லோங் கோவிட் நோய்தொற்று விடயத்திலும் இது நடக்கிறதா என்பதற்கு தற்போது எந்தவித ஆதாரமும் இல்லை என்று கூறினார்.

நோய்தொற்றின் உச்சபட்ச பாதிப்பு விகிதங்கள், பகுதியளவு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மற்றும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், இளைஞர்கள் மற்றும் குறிப்பாக குழந்தைகள் மத்தியில் ஏற்படும். கல்வித்துறை புள்ளிவிபரங்களின்படி, ஜூலை 1 அன்று, 640,000 குழந்தைகள் பள்ளிக்கு வரவில்லை, மேலும் 560,000 குழந்தைகள் கோவிட் காரணமாக சுய தனிமைப்படுத்தலில் இருந்தனர், இது முன்னைய வாரத்தை விட 66 சதவீத அதிகரிப்பாகும். இதில் நோய்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 28,000 குழந்தைகளும், நோய்தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட 34,000 குழந்தைகளும் அடங்குவர்.

முன்பு போலவே, தொழிலாள வர்க்கமும் இந்த நிலைமைக்கு முக்கிய பலியாக இருக்கும். செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஒரு சுகாதார அறக்கட்டளை அறிக்கை, 65 வயதிற்குட்பட்டவர்களைப் பொறுத்தவரை, மிகவும் பின்தங்கிய 10 சதவீத பகுதிகளில் உள்ளவர்கள் மிகுந்த வசதியான 10 சதவீத பகுதிகளில் உள்ளவர்களை விட 3.7 மடங்குகள் அதிகமாக கோவிட் இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளனர் என்பதைக் கண்டறிந்தது. 5வது மிகவும் பின்தங்கிய பகுதியில் உள்ளவர்கள் முதலாவது மிகவும் பின்தங்கிய பகுதியில் இறப்பவர்களைப் போல இரு மடங்கிற்கு அதிகமான இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளனர்.

இவை அனைத்தும் ஆளும் வர்க்கத்திற்கு ஒரு பொருட்டல்ல, அது எந்தவொரு பாசாங்கு காட்டுவதிலிருந்தும் விடுவிக்கப்பட்டதாக உணர்கிறது. வணிகங்களை மீளத்திறக்கும் மூலோபாயம் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை வெளிப்படையாக பின்பற்றுவதன் அடிப்படையில் ஆதரிக்கப்படுகிறது, பெரியளவிலான நோய்தொற்றால் கணிசமான பகுதிகள் இன்னும் கூட பாதிப்படைய முடியும். “எங்களது நடவடிக்கைகளில் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையின் ஒரு கூறு உள்ளது… சில மக்கள் நோய்தொற்றின் மூலம் நோயெதிர்ப்பு சக்தியைப் பெற இருப்பது தவிர்க்க முடியாத பகுதியாக உள்ளது” என்று ஒரு அரசாங்க ஆதாரம் கூறியதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டது.

குழந்தைகள் மீண்டும் பள்ளிக்குத் திரும்பும் மற்றும் தேசிய சுகாதார சேவை அதிக நெருக்கடிக்குள்ளாகும் குளிர்காலத்தின் பிற்பகுதியில், சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையின் விளைவு நோய்தொற்று தீவிரமாக பரவுவதை தடுக்கலாம் என்ற உறுதியை தற்போது அடிப்படையாக வைத்து விரைந்து கட்டுப்பாடுகளை நீக்குவது பற்றி பகுத்தாராய அரசாங்கம் முயல்கிறது. செவ்வாயன்று டவுனிங் தெரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் விட்டி, 'ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் நீங்கள் மருத்துவமனையில் சேருதல் மற்றும் இறப்புகளைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, அவற்றை தாமதப்படுத்துகிறீர்கள் ... கோடையில் இந்த செயல்முறையைத் தொடங்குவது சில நன்மைகளை வழங்குகிறது' என்று கூறினார்.

நோய் மற்றும் இறப்பிற்கான இரத்த விலைகொடுப்பு தொற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்காது. டெல்டாவின் அதிகரித்தளவிலான பரவும் தன்மை, தடுப்பூசிகள் வழங்கும் நோய்தொற்றுக்கு எதிரான பாதுகாப்பை விட தீவிரமானது என்பதால், சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை உண்மையில் “பின்பற்ற முடியாதது” என்று பேராசிரியர் பால் ஹண்டர் (Paul Hunter) i க்கு தெரிவித்தார்.

மேலும், குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடுவதற்கான எந்தவொரு திட்டத்தையும் அரசாங்கம் அறிவிக்கவில்லை, இதனால் நோய்தொற்றுக்குள்ளாகும் வகையில் பெரும் பகுதி மக்கள் கைவிடப்படுகின்றனர். இதன் விளைவாக கோவிட்-19 இன் தொடர்ச்சியான அலைகள், குறிப்பாக குளிர்கால மாதங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். கார்டியனின் விஞ்ஞான ஆசிரியர் Ian Sample திங்களன்று விளக்கமளித்தபடி, “சுகாதார சேவையைப் பொறுத்தவரை, கொரோனா வைரஸூடன் வாழ்வது என்பது, ஒவ்வொரு குளிர்காலத்திலும் கொரோனா வைரஸூம் மற்றும் ஃப்ளூ காய்ச்சலும் ஒரே நேரத்தில் தாக்கும் இரட்டை நோய் அலைகளை தாங்குவதற்கு கற்றுக்கொள்வதாகும்.” மேலும் புதன்கிழமை, விட்டி, “இது இன்னும் கடினமான குளிர்காலமாக இருக்கும், அதிலும் குறிப்பாக தேசிய சுகாதார சேவைக்கு (NHS) இது கடினமானதாக இருக்கும்” என்று உள்ளூராட்சி அரசாங்க மன்றத்திற்கு தெரிவித்தார்.

அரசாங்கம் உண்மையில், வைரஸின் புதிய, அதிக தடுப்பூசி எதிர்ப்பு திறன் கொண்ட மற்றும் மிகுந்த ஆபத்தான திரிபு வகையின் வளர்ச்சிக்கான நிலைமைகளை உருவாக்குகிறது, அதாவது நோய்தொற்றுக்களின் கடும் அதிகரிப்புக்கு தயார்செய்வதன் மூலம் பிறழ்வுகளை உருவாக்க ஏராளமான வாய்ப்புக்கள் வழங்கப்படும்.

இங்கிலாந்து இப்போது முழு உலகிற்கும் ஒரு முன்னோடியாக உள்ளது, இதில் தடுப்பூசி விகிதங்கள் கணிசமாகக் குறைவாக இருப்பதால் ஏராளமான மக்கள் இன்னும் அழிவுகரமான சூழ்நிலைக்கு ஆளாகின்றனர். அனைத்து பொது சுகாதார கட்டுப்பாடுகளையும் நீக்க உலகளவில் அரசாங்கங்கள் விரைந்து முன்வரும் நிலையில், தவிர்க்க முடியாமல் தொடரும் தொற்றுநோய்களின் பிரளயத்தை பிரிட்டன் காட்டுகிறது. உதாரணமாக சர்வதேச தொழிலாள வர்க்கம், தொற்றுநோய்க்கான பதிலிறுப்பை தனது சொந்த கைகளில் எடுத்து செயல்படுத்த வேண்டும் என்ற எச்சரிக்கையை எடுத்துக்கொள்ள வேண்டும், அதாவது ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வைரஸை முற்றிலுமாக ஒழிப்பதற்கு உலகளவில் ஒருங்கிணைந்த பொது சுகாதார திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இது டிரில்லியன் கணக்கான டாலர்களை ஒதுக்கும்.

Loading