கல்வியை இராணுவமயமாக்கும் பல்கலைக்கழக சட்டத்தை நிறைவேற்றுவதை அரசாங்கம் துரிதப்படுத்துகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவினால் தீவிரமாக்கப்பட்டுள்ள இராணுவமயமாக்கல் வேலைத் திட்டங்களின் ஒரு குறிப்பிடத்தக்க படியாக, கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக (கே.என்.டி.யூ.) மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ளும் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுகின்றன. இந்த மசோதாவின் மூலம், கே.என்.டி.யூ.வை பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத்தால் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் மற்றும் 1978 பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் இருந்து வெளியிலும் மற்றும் சுயாதீனமாகவும் செயல்படும் பல்கலைக்கழகமாக மாற்ற முயல்கிறது.

இந்த மசோதா முதன்முதலில் பாராளுமன்றத்தில் 2018 இல் சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் வலுவான மக்கள் எதிர்ப்பை எதிர்கொண்ட காரணத்தால் தற்காலிகமாக கைவிட வேண்டியிருந்தது. இராஜபக்ஷ அரசாங்கம் இந்த மசோதாவை 2021 மார்ச் மாதம் மீண்டும் பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்தது. இது பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுவில் ஜூன் 22 அன்று கலந்துரையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஜெனரல் சேர் ஜோன் கொதலால பாதுகாப்பு பல்கலைக்கழகம் - பட்டதாரி கற்கைகள் பீடம்- [photo: kdu.ac.lk]

முப்படைகளின் உயர் பதவிகளில் இருப்பவர்களைப் பயிற்றுவிப்பதற்காக, கொத்தலாவல பாதுகாப்பு அகாடமி 1981 இல் நிறுவப்பட்டதுடன் 1986 இல் ஒரு பல்கலைக்கழகமாக மேம்படுத்தப்பட்டது. 2012 ஆம் ஆண்டு தொடங்கி, பொறியியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டம் உள்ளிட்ட பாடங்களை கட்டணம் செலுத்தி கற்றுக்கொள்வதற்காக குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களை இதில் சேர்க்கத் தொடங்கினர்.

புதிய மசோதாவின் மூலம் இது ஒரு பிரமாண்டமான அளவிலான பாடவிதானங்களை கற்பிக்கின்ற மற்றும் இராணுவ மாணவர்களுக்கு மேலதிகமாக கட்டணம் செலுத்தி படிப்பதற்கு பெருந்தொகையான சிவில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிறுவனமாக இந்தப் பல்கலைக்கழகம் மாற்றப்பட்டது. சட்டத்தின் படி, பல்கலைக்கழகத்திற்கு பின்வரும் அதிகாரங்கள் உள்ளன:

*பல்கலைக்கழகத்திற்குத் தேவையானவாறு கிளைகள், கல்லூரிகள், பீடங்கள், கல்வித் துறைகள், மையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற சிறப்பு நிறுவனங்களை நிறுவுதல் மற்றும் அதில் தொடங்கப்பட்ட படிப்புகளுக்கு பட்டங்களை வழங்குதல்.

*பல்கலைக்கழகத்தின் நோக்கங்களின்படி தேசிய மற்றும் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களின் துணை நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுதல்

*வழங்கப்படும் படிப்புகளுக்கு பல்கலைக்கழகத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை அறவிடுதல்.

இந்தச் சட்டத்தின்படி, '1978 பல்கலைக்கழகச் சட்டத்தில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல்' இந்தப் பல்கலைக்கழகத்தால் செயல்பட முடியும். 1978 பல்கலைக்கழகச் சட்டத்தின் படி, அனைத்து அரச பல்கலைக்கழகங்களும் உயர்கல்வி அமைச்சின் கீழ் இருக்க வேண்டும், அத்துடன் அந்தச் சட்டத்தின் விதிகளின்படி செயல்பட வேண்டும்.

கொத்தலாவல பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிராக கண்டியில் நடந்த மாணவர் எதிர்ப்பு போராட்டம் [Photo: Facebook]

புதிய சட்டம், கே.என்.டி.யூ. ஆனது பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படைகளை உள்ளடக்கிய ஒரு ஆளும் குழுவால் நிர்வகிக்கப்படும் என்றும், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மத்தியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட துணைவேந்தர் அதற்கு தலைவராக இருப்பார், என்றும் கூறுகிறது.

இந்த மசோதாவை மீண்டும் கொண்டுவருவதானது, ஜனாதிபதி இராஜபக்ஷவினால் துரிதப்படுத்தப்பட்டுள்ள தனியார்மயமாக்கல் மற்றும் இராணுவமயமாக்கலுடன் பிணைந்துள்ள ஒன்றாகும்.

கொரோனா தொற்றுநோயால் மோசமடைந்துள்ள இராஜபக்ஷ அரசாங்கத்தின் பொருளாதார நெருக்கடியின் மத்தியில், சர்வதேச நாணய நிதியத்தினால் தனியார்மயமாக்கலை துரிதப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறது. கட்டண அடிப்படையிலான, பல பட்டப்படிப்புகளை நடத்துவதற்கு சர்வதேச பீடங்கள் மற்றும் பிற நிறுவனங்களை கே.என்.டி.யூ. இன் கீழ் நாடு முழுவதும் அமைக்க இந்த சட்டம் அனுமதிக்கிறது. இது கல்வியை தனியார்மயமாக்குவது துரிதப்படுத்தப்படும் என்பதை சர்வதேச நாணய நிதியம் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதம் செய்வதாகும்.

அரசாங்கம் தனது நெருக்கடியின் சுமையை பல்வேறு சிக்கன நடவடிக்கைகளின் மூலம் தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சுமத்தி வருகின்ற நிலையில், அதற்கு எதிராக வேகமாக வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டத்தை கொடூரமாக நசுக்குவதற்காக, இராணுவத்தை அடிப்படையாகக் கொண்ட ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கு, இராஜபக்ஷ மேற்கொள்ளும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பிரதான பகுதியாக, ஒட்டு மொத்த சமூகமும் இராணுவமயப்படுத்தப்பட்டு வருவதோடு, கல்வியை இராணுவமயமாக்குவதும் அதனுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட மசோதாவின் கீழ், இந்த பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்கள், கிளைகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களில் இராணுவ ஒழுக்கம் தீவிரமாக நிறுவப்படும். இது ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. இராணுவ வலைத்தளத்தின் படி, கே.என்.டி.யூ.வின் சூரியவெவ கிளையில் 'அதன் இராணுவ வீரர்களின் நெருக்கமான மேற்பார்வை காரணமாக கடுமையான ஒழுக்கத்தின் கீழ் உள்ளது.'

இந்தச் சட்டம், மாணவர்களை இராணுவ ஒழுக்கத்திற்கு முற்றிலும் உட்படுத்தும் ஒரு சிறப்பு உட்பிரிவைக் கொண்டுள்ளது: 'பல்கலைக்கழகத்திற்குள் நிலவும் எந்தவொரு சூழ்நிலையும், தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லது தேசிய கொள்கைக்கு தீங்கு விளைவிக்கும் போக்கைக் கொண்டிருக்கக்கூடும்' அல்லது அந்த நிலைமையின் மூலம் பல்கலைக்கழகத்இதன் முறையான செயற்பாடுகள் குழம்பிப் போகும் போக்கை கொண்டிருக்கின்றது என்று அமைச்சர் கருதும் சந்தர்ப்பத்தில், 'நிலைமையைக் கட்டுப்படுத்த அவசியமானதாக அவர் கருதுகின்ற எத்தகையை நடவடிக்கையையும் மேற்கொள்ள அமைச்சர் நிறுவனத்தை வழிநடத்த முடியும்.'

அதன்படி, மாணவர்கள் அல்லது ஏனைய நிர்வாக ஊழியர்கள், தங்கள் உரிமைகளுக்காகப் போராடினால், 'பல்கலைக்கழகத்தின் முறையான செயல்பாட்டைக் குழப்பும் நோக்கம் உள்ளது' என்று குற்றம் சாட்டி, அவர்களை வேட்டையாடுவதற்கு பாதுகாப்பு அமைச்சருக்கு அதிகாரம் உண்டு.

பல்கலைக்கழக கல்வியில் ஈடுபட்டுள்ள பல்வேறு தரப்பினரால் இந்த பிற்போக்கு மசோதாவுக்கு எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மசோதா 'தாம் உட்பட, கணிசமான எண்ணிக்கையிலான பிரதான பகுதியினரை முடிவெடுக்கும் செயல்முறையிலிருந்து விலக்குகிறது' என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் (ப.வி.ச.) ஒரு அறிக்கையில் கூறியுள்ளது. இந்த முடிவு 'சமூகம் மற்றும் வாழ்க்கை குறித்த மிகவும் பயனுள்ள இராணுவ பார்வையை பிரதிபலிக்கும்' என்றும், ஒரு பல்கலைக்கழகத்தின் விமர்சன கலாச்சாரத்தை 'கேள்விக்கு இடமின்றி உத்தரவுகளை நிறைவேற்ற முற்படும் இராணுவ கலாச்சாரத்தை' கொண்டு பதிலீடு செய்யும் என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி.) பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஹரினி அமரசுரிய, ஜனாதிபதி இராஜபக்ஷவுக்கு ஒரு கடிதம் எழுதி, குறித்த பல்கலைக்கழகத்தை உலகின் ஏனைய நாடுகளைப் போலவே 'இராணுவ' மற்றும் 'பாதுகாப்பு கற்கைகளுக்கு' மட்டும் மட்டுப்படுத்துமாறும், குறித்த மசோதாவை ரத்து செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியான தெற்காசிய தொழில்நுட்ப மற்றும் மருத்துவ நிறுவனம் (சைடம்) ஒழிப்பு என்ற பெயரில், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பரந்த சிவில் சமூக அமைப்புகளின் ஊடாக, ரத்து செய்யவும் போராட்டத்தின் மூலம் புதிய சட்டத்தை தோற்கடிக்க செயற்படுவதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (அ.ப.மா.ஒ.) கூறுகிறது..

எவ்வாறாயினும், இந்த அமைப்புகள் அனைத்தும், 'பரந்த முன்னணி' ஒன்றின் மூலம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் ஊடாக இந்த மசோதாவை தோற்கடிக்க முடியும் என்று கூறுகின்றன. சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம், 2018 இல் இதை முதன்முதலில் முன்வைத்தபோது, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து வெடித்த கடும் எதிர்ப்பை முகம் கொடுத்ததால், ஒரு சூழ்ச்சியாக அது தற்காலிகமாக கைவிடப்பட்டது. ஆனால், இந்த அமைப்புகள் அனைத்தும் இதை ஒரு 'வெற்றி' என்று பாராட்டின.

இது ஒரு 'வெற்றி' அல்ல என்பதை சுட்டிக்காட்டி, கல்வி உட்பட சமூக உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களைத் தோற்கடிக்கும் தொழிலாள வர்க்க சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைத்தது (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பு மட்டுமே.

“இலங்கையின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்தை எதிர்ப்போம்! கல்வி தனியார்மயமாக்கல் வேண்டாம்!” என்ற தலைப்பில் மே 8, 2018 அன்று ஐ.வை.எஸ்.எஸ்.இ வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு குறிப்பிட்டது: “முதலாளித்துவத்தின் அழுத்தம் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தால் நிர்ணயிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைகள், எந்தவொரு அழுத்தத்தினாலும் மாற்றமடையாது.” அரசாங்கத்தின் தாக்குதல்களைத் தோற்கடிக்க, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் போராட்டத்தின் அவசியத்தை இந்த அறிக்கை வலியுறுத்தியது.

அந்த வேலைத் திட்டத்திற்கு மாறாக, 'சைட்டம் ஒழிப்பதற்கான போராட்டம்' போன்ற ஒரு போராட்டத்தின் மூலம் கே.என்.டி.யூ. மசோதாவை தோற்கடிக்க முடியும் என்று அ.ப.மா.ஒ. தொடர்ந்து எக்காளமிட்டது. போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியின் (மு.சோ.க.) கட்டுப்பாட்டில் உள்ள அ.ப.மா.ஒ., தனியார்மயமாக்கலுக்கு விரோதமான மாணவர்களின் எதிர்ப்பை வெறுமனே 'சைட்டம் ஒழிப்பு போராட்டத்துக்குள்' சிறைப்படுத்தியது. சைட்டம் இரத்து செய்யப்பட்டாலும், தனியார்மயமாக்கல் தொடர்ந்து இடம்பெறுகின்றது. 2018 இல் “தோற்கடிக்கப்பட்ட” மசோதா இப்போது திரும்பவும் வந்துவிட்டது என்று அ.ப.மா.ஒ. கூறிக்கொள்கின்றது.

பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கமும், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் அதன் கொள்கைகளை மாற்ற முடியும் என்ற மாயையையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. 2012 ஆம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்விக்கு ஒதுக்குமாறு அப்போதைய மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தி அவர்கள் ஒரு நீண்ட பிரச்சாரத்தைத் தொடங்கினர். எவ்வாறாயினும், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் கல்விச் செலவுகளை மேலும் குறைப்பதன் மூலம், தனியார்மயமாக்கலை தீவிரப்படுத்தின. இன்று, அரசாங்க கல்விச் செலவு மொத்த தேசிய வருமானத்தில் 2 சதவீதத்துக்கும் கீழ் குறைக்கப்பட்டுள்ளது.

இனவாத போரின் தீவிர ஆதரவாளராக இருந்த, இராணுவமயமாக்கலுக்கு முழுமையாக ஆதரவளித்த ஜே.வி.பி. உடன் ஒரே கோப்பையில் சாப்பிடும் அமரசூரிய, இராணுவமயமாக்கலுக்கு எதிராக விடுக்கும் கோரிக்கைகள் முற்றிலும் பாசாங்குத்தனமானவை ஆகும்.

மேலே உள்ள ஐ.வை.எஸ்.எஸ்.இ. அறிக்கையில் கூறியது போல், “முதலாளித்துவ முறைமைக்கு கட்டுண்டுள்ள, அந்த முறைமையினுள் தீர்வு காணும் அ.ப.மா.ஒ., மு.சோ.க. மற்றும் ஏனைய போலி-இடது குழுக்களும் தொழிற்சங்கங்களும் அத்தகைய போராட்டத்தைத் தடுக்க முயல்கின்றன. முதலாளித்துவத்தின் இந்த ஏஜன்டுகளை மாணவர்கள் நிராகரிக்க வேண்டும்.'

இராணுவமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கலைத் தோற்கடித்து, அனைவருக்கும் தரமான முறையில் அபிவிருத்தி செய்யப்பட்ட கல்வியை வழங்குவதற்கான ஒரே வழி, தன்னைச் சூழ ஏழைகளையும் இளைஞர்களையும் அணிதிரட்டிக்கொண்டுள்ள தொழிலாள வர்க்கத்தால் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்காக போராடுவதே ஆகும். அந்த அரசாங்கத்தின் கீழ், வங்கிகள், பெரும் நிறுவனங்கள் மற்றும் பெரிய தோட்டங்களின் செல்வத்தைப் கைப்பற்றுவதன் மூலம், மேலும் வெளிநாட்டுக் கடன்களை நிராகரிப்பதன் மூலம், அத்தகைய தரமான கல்விக்குத் தேவையான பில்லியன் கணக்கான டாலர்களை திரட்ட முடியும் என்று ஐ.வை.எஸ்.எஸ்.இ. அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2018 இல் முன்வைக்கப்பட்ட இந்த வேலைத் திட்டத்தின் துல்லியம் இன்று மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களும் ஏனைய ஒடுக்கப்பட்டவர்களும் அதன் அடிப்படையில் போராடுவதற்கு தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்ப வேண்டும். போராட்டத்தை முன் கொண்டு செல்வதற்கு அவசியமான அமைப்பு வடிவமாக பல்கலைக்கழகங்கள், வேலைத் தளங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுயாதீன தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் முன்வர வேண்டும் என்று சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. வலியுறுத்துகின்றன.

Loading