பொருளாதாரம் நிலைகுலைந்து, கோவிட்-19 தொற்றுநோய் மோசமடைந்து வருகையில் கியூபா பல தசாப்தங்களின் பின்னர் மிகப்பெரிய போராட்டங்களைக் காண்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

1994 முதல் தீவில் மிகப்பெரிய எதிர்ப்பு அலைகளில் ஆயிரக்கணக்கான கியூபர்கள் ஞாயிற்றுக்கிழமை ஹவானா மற்றும் நாடு முழுவதும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். 1954 புரட்சியின் பின்னர் 1994 இடம்பெற்ற முந்தைய ஆர்ப்பாட்டங்களை குறிக்கும் மாலேகோனசோ (Maleconazo) எழுச்சியை போலவே, தற்போதைய எதிர்ப்பு அலைகளும் பல ஆண்டுகால பொருளாதார கஷ்டங்களுடன் இணைந்து கியூப அரசாங்கத்தின் குட்டி முதலாளித்துவ தேசியவாத முன்னோக்கின் அழுகிய அஸ்திவாரங்களை அம்பலப்படுத்தும் தூண்டுதல் நிகழ்வாக செயல்படும் கோவிட்-19 தொற்றுநோய்களால் உந்தப்பட்டுள்ளன.

2021. கியூபாவின் ஹவானாவில் 2021 ஜூலை 11 ஞாயிற்றுக்கிழமை அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்றனர்.(AP Photo/Eliana Aponte, file)

தலைநகரின் தென்மேற்கே உள்ள நகராட்சியான சான் அன்டோனியோ டி லாஸ் பானோஸில் (San Antonio de los Baños) போராட்டங்கள் தொடங்கியதாகத் தெரிகிறது. எவ்வாறாயினும், இதுபற்றிய ஒளிப்பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவியதால், அவை விரைவாக ஹவானா உட்பட பிற இடங்களிலும், நாட்டின் முக்கிய நகரங்களான சாண்டியாகோ டி கியூபா, சாண்டா கிளாரா, மாடான்சாஸ், சியென்ஃபுகோஸ் மற்றும் ஹோல்குவான் மற்றும் பால்மா சொரியானோ போன்ற பல சிறிய நகரங்களிலும் பரவின.

சில எதிர்ப்பாளர்கள் 'சுதந்திரம்' மற்றும் 'சர்வாதிகாரத்திற்கு முடிவு' உள்ளிட்ட முழக்கங்களை முன்வைத்தனர். ஏனையவர்கள் பசி மற்றும் உணவு பற்றாக்குறையை அதிகரிப்பது பற்றி கவனம் செலுத்தினர், மேலும் சில சந்தர்ப்பங்களில் டெல்டா மாறுபாடு தொற்று விரிவடைகையில் கோவிட்-19 தடுப்பூசிகள் மற்றும் பிற மருத்துவ பொருட்களை கோரினர். எதிர்ப்பாளர்கள் சில 'டாலர் கடைகளை' சூறையாடினர். இந்த கடைகள் சமத்துவமின்மையின் அடையாளங்களாக பரவலாக வெறுக்கப்படுகின்றது. அங்கு டாலர்களை வைத்திருப்பவர்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை உயர்த்தப்பட்ட விலையில் வாங்க முடியும்.

அதிகாரிகள் போராட்டக்காரர்களைக் கைதுசெய்து கண்ணீர்ப்புகை மற்றும் பிற அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டதால், போலீசாருடன் ஏராளமான மோதல்கள் ஏற்பட்டன. சில சந்தர்ப்பங்களில் எதிர்ப்பாளர்கள் பொலிஸ் கார்களை கவிழ்க்க அல்லது அவற்றின் மீது கற்கள் மற்றும் கான்கிரீட்களை வீசினர். ஆர்ப்பாட்டங்களை முடிவிற்கு கொண்டுவருதற்கான முயற்சியில், அரசாங்கம் இடைவிடாமல் இணையத்தளங்களுக்கான அணுகலை துண்டித்து வருகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் பிராங்க் கார்சியா ஹெர்னாண்டஸ் மற்றும் 'கம்யூனிஸ்டாஸுடன்' (“Comunistas”) தொடர்புடைய மற்றவர்களும் அடங்குவர். கார்சியா ஹெர்னாண்டஸ் மே 2019 இல் “லியோன் ட்ரொட்ஸ்கி சர்வதேச கல்வி நிகழ்வின்” மாநாட்டு அமைப்பாளராக இருந்தார். மேலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு (ICFI) இம்மாநாட்டில் பங்கேற்பதைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகித்தவராவார். இம்மாநாட்டில் பப்லோவாதிகள் மற்றும் பிற போலி-இடது பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

எதிர்ப்பாளர்களிடையே பெரும் குழப்பம் இருந்தாலும், பெரும்பாலும் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அனைத்து இடங்களிலும் வீதிக்கு கொண்டு வரும் ஒரே காரணிகளான, பெருகிய முறையில் தாங்கமுடியாத வாழ்க்கை நிலைமைகள் மற்றும் அரசியல் அடக்குமுறையால் உந்தப்படுவதாகத் தெரிகிறது. கியூபா ஆர்ப்பாட்டங்களுக்கான உந்துதல்கள் கொலம்பியாவில் நீடித்த வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னால் இருந்தததைப் போலவே இருக்கின்றன. அவை மிகவும் கொடூரமாக அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டதுடன், ஆனால் அமெரிக்க ஊடகங்களினால் அதிகளவு கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

ஆழ்ந்த நெருக்கடியில் இருக்கும் வெனிசுலாவிலிருந்து கியூபாவிற்கு கிடைக்கும் மானியங்கள் கைவிடப்படுவதால் ஏற்கனவே கடினமாக உள்ளது. கடந்த ஆண்டு பொருளாதார நிலைமைகள் மேலும் மோசமடைந்துள்ளன. ஏனெனில் கோவிட் -19 தொற்றுநோய் சர்வதேச சுற்றுலாத்துறையை இல்லாதொழித்து, சர்க்கரை அறுவடையை கூட பாதித்தது. இது 1908 க்கு பின்னர் மிகவும் குறைந்த மட்டத்தை அடைந்தது. உத்தியோகபூர்வமாக, பொருளாதாரம் 11 சதவிகிதம் சுருங்கியது. இது 1993 க்குப் பின்னர் மிகப்பெரிய சுருக்கமாகும்.

அந்நிய நாணய வீழ்ச்சியின் விளைவாக, தீவுக்கான இறக்குமதி 40 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இது பொருட்களின் பரவலான பற்றாக்குறைக்கு இட்டுசெல்வதுடன் மற்றும் அடிப்படை பொருட்களைப் பெறுவதற்கு அவசியமாகிவிட்ட மணித்தியாலங்களாக தினசரி வரிசையில் நிற்பது பரவலான கோபத்திற்கு வழிவகுக்கிறது.

தொற்றுநோய்க்கு அரசாங்கத்தின் பிரதிபலிப்பு குறித்து இப்போது கோபம் அதிகரித்து வருகிறது. இதனால் ஒவ்வொருநாளும் பாரிய இறப்புக்கள் அதிகரிப்பதுடன் மற்றும் டெல்டா மாறுபாட்டின் பிடிக்குள் அகப்பட்டுபட்டுள்ளதால் மாடான்சாஸில் சுகாதார கட்டமைப்பு கிட்டத்தட்ட வீழ்ச்சியடைந்து காணப்படுகிறது. கியூபாவில் 6,422 புதிய தொற்றுக்கள் காணப்பட்டுகையில், தொற்றுநோயியல் தேசிய இயக்குனர் பிரான்சிஸ்கோ டுரான் வெள்ளிக்கிழமை இணையவழி மாநாட்டின் போது, “தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து கியூபாவுக்கு இது மிக மோசமான நாள் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.” என்றார்.

சில நாட்களுக்குப் பின்னர், 11.2 மில்லியனுக்கும் குறைவான கியூபாவில் ஞாயிற்றுக்கிழமை 6,923 தொற்றுக்களும், 47 இறப்புகளும் காணப்பட்டன. முந்தைய வாரத்தை விட தொற்றுக்கள் இரட்டிப்பாகின்றன. 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 12,200 தொற்றுக்கள் மட்டுமே காணப்பட்ட தீவில் இப்போது 2021 ஆம் ஆண்டில் 232,000 க்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் இறப்புகள் 146 இலிருந்து மொத்தம் 1,579 ஆக உயர்ந்துள்ளன. இப்போது நாட்டில் 32,000 க்கும் மேற்பட்ட தொற்றுக்கள் உள்ளன.

அண்மையில் பாதிக்கும் மேற்பட்ட தொற்றுக்கள் மாதன்சாஸ் மாகாணத்தில் நிகழ்ந்துள்ளன. அதன் பிரபலமான வரடெரோ கடற்கரை உல்லாச தங்குமிடம் கடந்த ஆண்டு நவம்பரில் சர்வதேச சுற்றுலாவுக்கு மீண்டும் திறக்கப்பட்டது. அமெரிக்கா உட்பட பிற இடங்களில் இருந்ததைப் போலவே, பொது சுகாதாரக் கொள்கையும் பொருளாதார நலன்களை ஒட்டி தீர்மானிக்கப்படுகின்றன. தொற்றுக்கள் எண்ணிக்கையில் அதிகரிப்புடன், மாகாண மருத்துவமனை படுக்கைகள் இல்லாமல் போய்விட்டதால், நோயாளிகளை வீட்டிலேயே 'பராமரிக்க' அரசாங்கம் வழிவகுக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சியில் தோன்றிய கியூபாவின் ஜனாதிபதி மிகுவல் தியாஸ்-கேனல் இந்த சிக்கல்களைக் குறிப்பிட்டு, “இப்போது, பல கியூப மாகாணங்களின் மருத்துவமனையில் போதுமான திறன்களைக் கொண்டிருக்கவில்லை என்பதால், நாங்கள் வீடுகளில் பராமரிப்பதை நடைமுறைப்படுத்தவேண்டியுள்ளது” என்று ஒப்புக் கொண்டார். மேலும் கியூபர்களை “இன்னும் நேரடியான, பொறுப்பான பங்கேற்பை இதில் கொண்டிருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

கியூபாவின் தடுப்பூசி முயற்சிகள் மிகமெதுவாக இருந்தன. சுமார் 3 மில்லியன் கியூபர்கள் மட்டுமே குறைந்தது ஒரு தடவை தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் மற்றும் 15 சதவிகிதம் மட்டுமே பூரணமான தடுப்பூசி போடப்பட்டனர். வெளிநாட்டிலிருந்து தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு பதிலாக, கியூபா பழைய தடுப்பூசி மேம்பாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தனது சொந்த தடுப்பூசிகளான சோபெரானா-02 மற்றும் அப்தலா என்பவற்றை உருவாக்கியுள்ளது. இவற்றிற்கு ஒன்றிற்குமேற்பட்ட தடவை மருந்துகள் ஏற்றப்படுவது தேவைப்படும். ஒரு கியூபா ஆய்வு அப்தலா தடுப்பூசி இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை 3 தடவை ஏற்றுவது தேவைப்படுவதாகவும், ஆனால் அப்தலா தடுப்பூசி 92 சதவிகிதம் பயனுள்ளதாக இருப்பதைக் குறிக்கிறது. ஆனால் இந்த ஆய்வு வெளியிடப்படவில்லை. அத்துடன் இது டெல்டா மாறுபாட்டின் ஆதிக்கத்திற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டது.

1994 இல் ஆர்ப்பாட்டங்களை நிறுத்துமாறு விடுத்த பிடல் காஸ்ட்ரோவின் தனிப்பட்ட வேண்டுகோளை எதிரொலிக்கும் முயற்சியில், டியாஸ்-கேனல் ஞாயிற்றுக்கிழமை சான் அன்டோனியோ டி லாஸ் பானோஸுக்கு விஜயம் செய்தார். மற்றும் குடியிருப்பாளர்களிடமிருந்து கேள்விகளை பெற்றுக்கொள்ள பல வீடுகளுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் பலர் பரவலான மின் தடைகளால் சோர்வடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க ஆதரவுடைய, 'ஜனநாயக சார்பு' நபர்களிலிருந்து சுயாதீனமாக செயல்படும் மக்கள்தொகையின் பிரிவினரால் நியாயமான குறைகளை முன்கொண்டுவரப்படுவதை அரசாங்கம் புரிந்துகொள்வதாக கூறப்பட்டாலும், ஆனால் அவை இந்த சக்திகளால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கையாளப்படுவதாகக் கூறினார். 'ஒருவர் அதிருப்தி அடைய முடியும், அது நியாயமானது, ஆனால் நாங்கள் கையாளப்படும்போது அதை தெளிவாகக் காண முடியும் என்பதை நாங்கள் எங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்,' என்று அவர் கூறினார்.

தியாஸ்-கேனல் கூறுகையில், ஏனைய இடங்களைப்போலவே “உலகெங்கிலும் தொற்றுநோய்கள் ஏற்படாதது போல, கியூப-அமெரிக்க மாஃபியா, சமூக வலைப்பின்னல்களில் செல்வாக்கு செலுத்துபவர்களுக்கும் யூடியூபர்களுக்கும் மிகச் சிறப்பாக பணம் செலுத்தி, ஒரு முழு பிரச்சாரத்தையும் உருவாக்கி, நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ”ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து, தியாஸ்-கேனல் அரசாங்கத்திற்கு ஆதரவாக 'தெருக்களுக்கு புரட்சியாளர்களை' அழைத்தார். மேலும் 'போரிடுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது' என்றும், மேலும் சிலவேளை அச்சுறுத்தும் விதத்தில் 'நாங்கள் எதையும் செய்யத் தயாராக உள்ளோம்' என்றும் கூறினார்.

இது, மேற்கு அரைக்கோள விவகாரங்களுக்கான பணியகத்தின் அமெரிக்க உதவி செயலாளர் ஜூலி சுங்கிடமினால் கண்டனத்தைப் பெற்றது. அவர் “நாங்கள் ‘போரிடுவதற்கான அழைப்புகளால்’ ஆழ்ந்த கவலைப்படுகிறோம். அமைதியாக ஒன்றுகூடுவதற்கான கியூப மக்களின் உரிமைக்கு நாங்கள் துணை நிற்கிறோம். நாங்கள் அமைதிக்கு அழைப்புவிடுவதுடன், எந்தவொரு வன்முறையையும் கண்டிக்கிறோம்' என ட்வீட் செய்ததார்.

மியாமி மேயர் பிரான்சிஸ் சுவாரஸ், 'கியூப மக்களை இரத்தக்களரியிலிருந்து பாதுகாக்க' அமெரிக்க இராணுவத் தலையீட்டிற்கு அழைப்பு விடுத்தார். அதே நேரத்தில் பைடென் நிர்வாகம் கியூப அரசாங்கத்தின் 'கியூப மக்களின் அமைதியான எதிர்ப்பு உரிமை மற்றும் தங்கள் எதிர்காலத்தை சுதந்திரமாக தீர்மானிக்கும் உரிமையை மதிக்க கியூப அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கும் அதிர்ச்சியூட்டும் பாசாங்குத்தனமான உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டது. 'மற்றும் தங்களை வளப்படுத்திக் கொள்வதை விட இந்த முக்கிய தருணத்தில் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுமாறு' கேட்டுக்கொண்டது.

மருந்து மற்றும் பொருட்களுக்காக ஒரு 'மனிதாபிமான பாதையை' திறப்பதே மிகவும் இழிந்த அழைப்புகளில் ஒன்றாகும். இது #SOSCubaபயன்படுத்தி சமூக ஊடகங்களில் ஆதரிக்கப்பட்டுள்ளது. இந்த வழியில் மனிதாபிமான உதவிக்கான அழைப்பு, கொலம்பியாவையும் வெனிசுலாவையும் இணைக்கும் பிரான்சிஸ்கோ டி பவுலா சாண்டாண்டர் பாலத்தின் குறுக்கே 2019 இல் ஒரு “மனிதாபிமான உதவிப்படையை” தள்ளும் முயற்சியை நினைவுபடுத்துகிறது. அமெரிக்க கைப்பாவை ஜுவான் கைடோ மற்றும் வெனிசுலாவில் வலதுசாரி எதிர்க்கட்சிகள் சிஐஏ உடன் தொடர்புடைய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான அமைப்பு (USAID) வழங்கிய பொருட்கள் ஏற்றப்பட்ட கனரகவாகனங்கள் வெனிசுலா இராணுவத்தில் இருந்து பெருமளவில் வெளியேற்றங்களைத் தூண்டும் மற்றும் மதுரோவை வெளியேற்றுவதற்கான மக்கள் ஆதரவுக்கு வழிவகுக்கும் என்று நம்பினர்.

கியூப தொழிலாளர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிகளை நிராகரிக்க வேண்டும் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து ஆர்ப்பாட்டக்காரர்களையும் விடுவிக்க அழைப்புவிடவேண்டும். அனைத்து நாடுகளையும் போலவே, தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கும், மிக அடிப்படையான சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் ஒரே வழி தொழிலாளர்கள் சமுதாயத்தின் தலைவிதியை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதுதான். கியூப தொழிலாள வர்க்கத்தின் முன்னுள்ள ஒரே வழி, கியூப புரட்சியின் படிப்பினைகளையும், நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் பகுப்பாய்வில் இருந்து அபிவிருத்திசெய்யப்பட்ட காஸ்ட்ரோயிசம் பற்றிய முழு அனுபவத்தையும் விரிவாகக் கற்பதும், கியூபாவில் அனைத்துலக் குழுவின் ஒரு பகுதியை நிறுவுவதற்கான பணிகளும் ஆகும்.

Loading