சீன கம்யூனிஸ்ட் கட்சி அதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகையில

பெய்ஜிங் வாஷிங்டனின் ஆக்கிரோஷமான நிலைப்பாட்டிற்கு எதிராக ஒரு இராஜதந்திர எதிர் தாக்குதலை முன்னெடுக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பெய்ஜிங்கின் சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) ஆட்சி, அதன் ஸ்தாபித நாளான ஜூலை 1 அன்று அதன் உத்தியோகபூர்வ 100 வது ஆண்டு விழாவை பயன்படுத்தி, ஒரு இராணுவ மோதலைக் கருத்தில் கொண்டு சீனாவை அரக்கத்தனமிக்கதாக சித்தரிக்கவும், தனிமைப்படுத்தவும் மற்றும் சுற்றிவளைக்கவும் அமெரிக்கா முன்னெடுக்கும் அதிகரித்தளவிலான ஆக்கிரோஷமான முயற்சிகளுக்கு எதிராக ஒரு இராஜதந்திர எதிர் தாக்குதலை தொடங்கியுள்ளது.

ஜூலை 6 ஆம் தேதி, ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஒரு இணையவழி உலகளாவிய கூட்டத்தில் உரையாற்றினார், சீன வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, இக்கூட்டத்தில் 160 க்கும் மேற்பட்ட நாடுகளின் 500 க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களிலிருந்து ஆயிரக்கணக்கான தலைவர்களும் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். நூற்றாண்டு கொண்டாட்டங்களை அடுத்து மேடை அரசியல் களியாட்டம் 10,000 பங்கேற்பாளர்களுடன் சீனாவின் பல இடங்களில் நடந்தது.

ஜூன் 28, 2021, திங்கட்கிழமை, பெய்ஜிங்கில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடந்த ஒரு கண்காட்சி நிகழ்ச்சியில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் திரையில் தோன்றுகிறார் [Credit: AP Photo/Ng Han Guan]

20 தலைவர்களின் உரைகள் CCP ஐ வாழ்த்தியதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது, மேலும் அரசியல் கட்சிகள் “மக்களுக்கு மகிழ்ச்சியை வழங்க வேண்டும்” என்று அவர்கள் ஒப்புக்கொண்டதோடு, “ஒரு சிறந்த உலகத்தை உருவாக்க CCP உடன் இணைந்து பணியாற்றுவதற்கும்” அவர்கள் விரும்புவதாகக் கூறுகிறது. பேச்சாளர்களில், ஆர்ஜென்டினா, பிலிப்பைன்ஸ், சிம்பாப்வே, கியூபா, கஜகஸ்தான், மொசாம்பிக், நமீபியா மற்றும் சேர்பியா நாடுகளின் ஜனாதிபதிகளும், அத்துடன் முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் (Dmitry Medvedev) மற்றும் இலங்கை, கம்போடியா மற்றும் மொராக்கோ நாடுகளின் பிரதமர்களும் அடங்குவர்.

CCP க்கு ஆதரவான இந்த மென்மையான அறிக்கைகள், சமூக சமத்துவமின்மை மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் முதல் காலநிலை மாற்றம், போர் மற்றும் பஞ்சம் வரையிலான ஒவ்வொரு பிரச்சினையையும் சரிசெய்ய உலகளாவிய ஒத்துழைப்பைக் கோரிய ஜி இன் வெற்றுத்தனமான, வலி தணிக்கும் கருத்துக்களுடன் ஒத்துப்போயின. ஜி உட்பட, தங்கள் சொந்த தேசிய முதலாளித்துவ வர்க்கங்களின் குறுகிய நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் அதற்காகப் போராடும் அனைத்து பங்கேற்பாளர்களும், உண்மையில் இந்த பிரச்சினைகளில் எதையும் தீர்க்க உறுதியளிக்கவில்லை.

இந்த நிகழ்வை வியாபிக்கச் செய்த ஆழ்ந்த இழிந்த தன்மையின் அடையாளமாக, சோசலிசம், கம்யூனிசம் அல்லது மார்க்சிசம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. மோசமான ஸ்ராலினிச பதிப்பாக இருந்தாலும் கூட, CCP இன் நூறாவது ஆண்டைக் குறிக்கும் இந்த கூட்டத்தில் அதன் நூறாண்டுகால வரலாற்றைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை.

ஜி உரையின் மைய நோக்கமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டாளிகளின் மேலாதிக்க பங்கைப் பற்றி வெளிப்படையாக மூடிமறைக்கப்பட்ட விமர்சனம் இருந்தது, அதாவது அமெரிக்காவின் ஆதிக்கம் செலுத்தும் உலகளாவிய ஒழுங்கை எதிர்ப்பது போல, “பலதரப்பு” ஆதரவுக்கான அவரது முறையீட்டில் இது சுருக்கி கூறப்பட்டது. 'விதிகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கிற்கு' சீனா கட்டுப்பட வேண்டும் என்ற வாஷிங்டனின் தொடர்ச்சியான பல்லவிக்கு தெளிவாக பதிலளித்த அவர், 'சர்வதேச விதிகள் என்பது, ஒரு சிலரின் விதிகளை விட உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தரங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும்.'

மேலும் அமெரிக்காவிற்கு எதிரான கருத்துக்களிலும், ஜி, 'ஒரு சிலரின் பிரத்யேக சலுகையை விட, வளர்ச்சி என்பது அனைத்து நாடுகளின் உரிமையாகும்' என்று கூறினார். சீனா மற்றும் பிற நாடுகள் மீது வாஷிங்டன் ஒருதலைப்பட்ச பொருளாதாரத் தடைகள் மற்றும் தொழில்நுட்ப தடைகளை விதிப்பதை குறிப்பிட்டு, “தொழில்நுட்ப முற்றுகைகளுக்கு முனையும் நடைமுறையை கூட்டாக எதிர்க்க” ஒரு கூட்டத்தை நடத்த அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த கருத்துக்கள், அமெரிக்காவால் இலக்கு வைக்கப்பட்டுள்ள ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகளின் பல பங்கேற்பாளர்களாலும் வரவேற்கப்படும். சீன அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் செய்தியிதழ் தனது அறிக்கையில், இந்த நிகழ்வு, “CCP மீதான மேற்கத்திய உலகின் தொடர்ச்சியான சேறடிப்புக்கு ஒரு சக்திவாய்ந்த பதிலடியாக” உள்ளது என்று பாராட்டியது.

ஜி உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு ஒரு பரந்த வாய்ப்பை உருவாக்கி, “சீர்திருத்தத்தை ஆழப்படுத்துவதற்கும் வணிகங்களை திறப்பதற்கும் விரிவான நடவடிக்கைகளை எடுப்பதற்கும்” உறுதியளித்தார், அதாவது, சீனாவில் வெளிநாட்டு முதலீடுகள் மீதான கட்டுப்பாடுகளை மேலும் நீக்கி, உலகளாவிய முதலாளித்துவத்துக்குள் அதனை ஒருங்கிணைப்பதாகும். தற்போது பைடென் நிர்வாகத்தின் கீழும் தொடரப்படும் சீனாவுக்கு எதிரான ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தகப் போர் நடவடிக்கைகள் போன்ற “கணிசமான சிக்கல்களை எதிர்கொண்டாலும், பொருளாதார பூகோளமயமாக்கல்” மீதான தனது நம்பிக்கையை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும், சீனாவின் இராஜதந்திர எதிர்ப்பு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக பெய்ஜிங்கின் பொருளாதார ரீதியிலான பெரியளவு அல்லது பரஸ்பர ஆதரவை நாடும் கட்சிகளின் அரசியல் காட்சிக்கு மட்டுப்படுத்தப்படவில்லை.

அதிகளவு ஐரோப்பிய ஒத்துழைப்பைப் பெறுவதற்கான முயற்சியில் கடந்த வாரம் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மற்றும் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் ஆகியோருடன் ஜி ஒரு கூட்டு தொலைபேசி உரையாடல் நடத்தினார். குறிப்பாக, பெய்ஜிங் மீதான அதன் வீகர் சிறுபான்மையினர் தொடர்புபட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து சீனா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா அழுத்தம் கொடுத்ததற்கு ஐரோப்பிய ஒன்றியம் கீழ்படிந்த பின்னர் நிறுத்தப்பட்டதான ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் சீனாவிற்கும் இடையிலான முதலீட்டு ஒப்பந்தத்தை புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்டது. மக்ரோனும் மேர்க்கெலும் இந்த விவகாரம் பற்றி விவாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டாலும், இது தொடர்பாக எந்தவித உறுதியளிப்பையும் அவர்கள் வழங்கவில்லை.

குறிப்பிடத்தக்க வகையில், சீனா கடந்த வெள்ளியன்று மற்றொரு நினைவுக் கூட்டத்தை நடத்தியது, இது CCP இன் நூறாம் ஆண்டு நிறைவுக்கானதல்ல, மாறாக 1971 ஆம் ஆண்டில் முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிஸ்ஸிங்கர் பெய்ஜிங்கிற்கு இரகசிய விஜயம் செய்ததன் 50 ஆம் ஆண்டு நிறைவை குறித்தது. கிஸ்ஸிங்கரின் இரகசிய இராஜதந்திரம் 1972 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சனின் சீன விஜயத்திற்கு வழிவகுத்தது, அவர் சீனத் தலைவர் மாவோ சேதுங்கை சந்தித்து ஒரு உண்மையான சோவியத் எதிர்ப்பு கூட்டணிக்கு முத்திரையிட்டார். நிக்சனின் விஜயம் 1979 ல் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை இயல்பாக்குவதற்கு வழி வகுத்தது.

கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்வில், கிஸ்ஸிங்கர் கலந்து கொண்டார். இது, அமெரிக்க மோதல் தங்களது நலன்களுக்கு விரோதமானது எனக் கருதும் அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் சில பிரிவுகளையும், வணிக உயரடுக்கினரையும் அணுகுவதற்காக செய்யும் முயற்சியாகும்.

கிஸ்ஸிங்கர் இரு நாடுகளுக்கும் இடையிலான “தீவிர பேச்சுவார்த்தைகளை” விரைவில் மீண்டும் தொடங்குவதற்கு அழைப்பு விடுத்தார். மோதலின் வளர்ந்து வரும் ஆபத்தை நன்கு அறிந்த அவர் கூறினார்: “எல்லா பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வு கிடைக்காது என்பதை நாங்கள் இரு தரப்பிலும் மனதில் வைத்திருப்போம், நம் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் என்பது ஒரு சொல்லமுடியாத அளவிலான பேரழிவாக இருக்கும், அதை வெல்ல முடியாது என்ற அடிப்படையில் இருந்து பேச்சுவார்த்தைகளை நாம் தொடங்க வேண்டும் என்பதை நம் இருதரப்பும் கருத்தில் கொள்வோம்.”

எவ்வாறாயினும், அமெரிக்காவின் போர் முனைப்பு தவறான புரிதல்கள் அல்லது தவறான கொள்கையின் அடிப்படையிலானது அல்ல, மாறாக ஆழ்ந்த பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் மாற்றங்களையே அது பிரதிபலிக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மாவோவின் அணுகல் ஒரு ஆழமான பொருளாதார நெருக்கடி மற்றும் சோவியத் யூனியனுடனான மோதலின் ஆபத்து ஆகியவற்றின் விளைவாகும். 1978 ஆம் ஆண்டில் டெங் ஜியாவோபிங் (Deng Xiaoping) தலைமையிலான “சீர்திருத்தம் மற்றும் திறப்பு” எனும் சந்தை சார்பு கொள்கைகளின் அடிப்படையில் உலகளாவிய முதலாளித்துவத்திற்குள் சீனாவின் மறுஒருங்கிணைப்புக்கு இது உதவியது.

1989 ஆம் ஆண்டு தியானன்மென் சதுக்க ஆர்ப்பாட்டங்களை CCP ஆட்சி மிருக்கத்தனமாக ஒடுக்கியது மற்றும் உலக வர்த்தக அமைப்புக்குள் (World Trade Organization) சீனா நுழைந்தது ஆகியவற்றுக்குப் பின்னர், முதலாளித்துவ மீட்டெடுப்பும், வெளிநாட்டு முதலீடு மற்றும் தொழில்நுட்பத்தின் பெரும் உட்புகுதலும் துரிதப்படுத்தப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின் ஆதரவில் சீனத் தொழிலாளர்களின் மலிவு உழைப்பை சுரண்டி அமெரிக்க பெருநிறுவனங்கள் பெரும் இலாபங்களை ஈட்டினாலும் கூட, சீனா உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது.

அமெரிக்கா தனது உலகளாவிய மேலாதிக்கத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகக் கருதும் சீனாவை எதிர்க்க, கடந்த தசாப்தம் முழுவதுமாக, முதலில் ஒபாமா, பின்னர் ட்ரம்ப், இப்போது பைடெனின் கீழ், இராஜதந்திர, பொருளாதார மற்றும் மூலோபாய ரீதிகளில் என அனைத்து முனைகளிலும் தாக்குதல்களை நடத்தியுள்ளது. கிஸ்ஸிங்கர் ஒத்துழைப்புக்கும் பேச்சுவார்த்தைக்கும் முறையிடுகையில், அமெரிக்க ஆளும் வட்டாரங்களில் ஒரு பரந்த ஏற்புத் தன்மையை பிரதிபலிக்கும் வகையிலான ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இருகட்சிகளின் ஒருமித்த கருத்து, சீனாவை அமெரிக்க நலன்களுக்கு அடிபணிய வைப்பதற்கு இராணுவம் உட்பட அனைத்து வழிகளையும் பயன்படுத்த உறுதியாக உள்ளது.

சீனாவின் இராஜதந்திர முயற்சிகள் ஊடான இந்த நடவடிக்கை, சீன பொருளாதாரத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மேலும் திறப்பதன் அடிப்படையில் ஒரு புதிய சமரசத்தை எட்டுவதற்கு அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுப்பதாகும். எவ்வாறாயினும், அமெரிக்காவைப் பொறுத்தவரை, உலக தலைவனாக அதன் உயர்ந்த நிலையையும் மற்றும் அது அதிகரித்தளவில் போருக்கு தயாராகி வருவதையும் கீழறுக்கும் என்பதால் “வெற்றி-வெற்றி” ஒத்துழைப்பு (“win-win” collaboration) என அழைக்கப்படுவதில் அமெரிக்கா ஆர்வம் காட்டவில்லை.

அணுவாயுத சக்திகளுக்கு இடையிலான ஒரு பேரழிவுகரமான போர் அச்சுறுத்தலுக்கு, ஜி மற்றும் CCP இடம் எந்த முற்போக்கான பதில் இல்லை. சோசலிச சர்வதேசியவாதத்திற்கான போராட்டத்தை வெகு காலத்திற்கு முன்னரே கைவிட்ட CCP, போர் உந்துதலை தடுத்து நிறுத்தக்கூடிய ஒரே சமூக சக்தியாகவுள்ள சர்வதேச தொழிலாள வர்க்கத்திடம் எந்தவொரு முறையீட்டையும் முன்வைக்க திறனற்றதாக உள்ளது.

Loading