முன்னோக்கு

அமெரிக்க டெல்டா திரிபு வகை வைரஸின் எழுச்சியைத் தடுக்க அவசர நடவடிக்கை தேவை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஏற்கனவே 624,000 மக்களை பலி கொண்டுவிட்ட கோவிட்-19 பெருந்தொற்று நோயின் புதிய பெரும் எழுச்சியில் தற்போது அமெரிக்கா சிக்கியுள்ளது. கடந்த ஒரு மாதமாக, அங்கு நாளாந்த நோய்தொற்றுக்கள் 250 சதவீதம் அதிகரித்ததால் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை பெருகியதுடன், நாளாந்த இறப்பு வீதமும் கணிசமாக அதிகரித்துள்ளது.

“அமெரிக்காவில் டெல்டாவின் (4 வது) அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அது பரவத் தொடங்கியதும் ஏற்கனவே காட்டியுள்ளது” என Scripps ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலக்கூறு மருத்துவத்திற்கான பேராசிரியர் எரிக் தோபோல் (Eric Topol) முக்கிய பகிரலைகளில் (hotspots) குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி விகிதங்கள் மிகக் குறைவாகவுள்ள ஆர்கன்சாஸ், மிசிசிப்பி, மிசூரி, புளோரிடா மற்றும் நெவாடா உள்ளிட்ட நாட்டின் மிக வறிய பகுதிகளில் இந்த நோய்தொற்று எழுச்சி தீவிரப்பட்டுள்ளது. நாட்டின் மிகக் குறைந்த தடுப்பூசி வீதம் கொண்டதும், பத்தாவது வறிய மாநிலமுமான மிசூரியில், நோய்தொற்றின் எந்த கட்டத்திலும் மருத்துவமனைகளில் நோயாளிகளின் சேர்க்கை வீதம் உச்சபட்சமாகவே இருந்து வருகிறது. “யாராவது இறந்தால் மட்டுமே அடுத்தவருக்கு படுக்கைகள் கிடைக்கும் என்ற நிலை உள்ளது, இது ஒரு நாளைக்கு பல முறை நிகழ்கிறது,” என்று CoxHealth நிறுவனத்தின் முக்கிய பராமரிப்பு மருத்துவ இயக்குநர் டெரன்ஸ் கூல்டர் (Terrence Coulter) அட்லாண்டிக் ஊடகத்திற்கு தெரிவித்தார்.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) இயக்குநர் டாக்டர் ரோசெல் வாலென்ஸ்கி, மார்ச் 19, 2021, வெள்ளிக்கிழமை அன்று, அட்லாண்டாவில் உள்ள CDC தலைமையகத்தில் கோவிட்-19 சுருக்கக் கூட்டம் நடைபெறும் அறைக்கு ஜனாதிபதி ஜோ பைடெனை அழைத்துச் செல்கிறார். (AP Photo/Patrick Semansky)

நோய்தொற்றுக்களின் கடும் அதிகரிப்பு கோவிட்-19 இன் டெல்டா திரிபு வகை மிக வேகமாக பரவுவதால் மட்டும் ஏற்படவில்லை, மாறாக ஏற்கனவே நோய்தொற்று பாதிப்புள்ளவர்களுக்குள் அவை மிகுந்த ஆக்கிரோஷத்துடன் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த மாதம் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, டெல்டா திரிபு வகையினால் பாதிக்கப்பட்டவர்களின் உடலிலுள்ள வைரஸ் அளவு நோய்தொற்றின் ஆரம்பகட்ட வைரஸ் வகையால் பாதிக்கப்பட்டவர்களை போல 1,000 மடங்குகள் அதிகம் என குறிப்பிட்டுள்ளது.

மிகக் குறைந்த தடுப்பூசி விகிதங்கள் கொண்ட நாட்டின் பிரிவுகளில் காணப்படும் நோய்தொற்றின் எழுச்சியானது, தடுப்பூசி போடப்பட்ட மக்கள் மத்தியில் “வெடித்துப் பரவும்” நோய்தொற்றுக்களின் சிக்கலான வளர்ச்சியுடன் இணைந்து கொண்டுள்ளது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் (CDC) உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, அமெரிக்காவில் இதுவரை முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட 791 பேர் கோவிட்-19 நோய்தொற்றால் இறந்துள்ளனர், மேலும் 5,000 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் இறுதியில் டோக்கியோவில் ஒலிம்பிக் கிராமத்திற்குள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மூன்று விளையாட்டு வீரர்களுக்கும் மற்றும் ஒரு ஊழியருக்கும் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது, இது உலகின் முதன்மை விளையாட்டு நிகழ்வுகளில் புதிய தடைகளை ஏற்படுத்தும் அச்சுறுத்தலை அதிகரிக்கிறது. சமீபத்திய நாட்களில் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள டெக்சாஸ் சபை (Texas House) தூதுக்குழுவின் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மூன்று உறுப்பினர்கள் ஒரு தனியார் விமானத்தில் முகக்கவசம் அணியாமல் பயணம் செய்ததன் பின்னர் அவர்களுக்கு நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்காவில் மக்கள்தொகையில் பாதி பேருக்கு சற்று குறைவானவர்களுக்கே முழுமையாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இந்த உண்மை குறித்து ஊடகங்கள் மக்கள் தான் தடுப்பூசி எடுத்துக்கொள்ள விரும்பவில்லை என மக்களை குற்றம்சாட்டினாலும், தேவைப்படும் பொது கல்வி மற்றும் பாரிய தடுப்பூசி வழங்கல் திட்டங்களை ஒழுங்கமைக்க ஆளும் வர்க்கம் தான் விரும்பவில்லை.

சமீபத்திய நாட்களில், தென் மாநிலங்களில் ஏற்கனவே ஏற்பட்ட நோய்தொற்று எழுச்சி தான் நோய்தொற்றின் புதிய அலைக்கு முன்னோடியாக இருக்கும் என அமெரிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பது தெளிவாகியுள்ளது.

“இது மக்கள் மத்தியில் சாதாரணமாக பரவவிருக்கிறது,” என ட்ரம்பின் முன்னாள் FDA இயக்குநர் ஸ்காட் கோட்லீப் (Scott Gottlieb) வெள்ளியன்று CNBC க்கு தெரிவித்தார். “ஒரு அதிகரித்து வரும் தொற்றுநோயான, இந்த டெல்டா திரிபு வகையினால் எழும் நோய்தொற்று அலை அடுத்த இரண்டு மாதங்களில் மக்கள் மத்தியில் பரவும்” என்பதை காட்டும் உட்புற CDC மாதிரியை அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், “இந்த மாதிரிகளில் தொகுக்கப்பட்டுள்ள அனுமானங்களில் நோய் தணிப்பு பற்றியோ, முகக்கவச கட்டுப்பாடுகள் பற்றியோ, வணிகங்களை மூடுவது பற்றியோ எதுவும் இல்லை,” என்றும், “இது ஒரு விதிமுறையாக இருக்கக்கூடும் என்றே நான் நினைக்கிறேன்” என்றும் அவர் கூறினார்.

மிசோரியில் ஒரு COVID-19 நோயாளிக்கு சிகிச்சையளிக்கத் தயாராகும் போது ஒரு செவிலியர் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிகிறார். (AP Photo/Jeff Roberson)

கோட்லீப் விவரிப்பது என்னவென்றால், பத்தாயிரக்கணக்கான அல்லது நூறாயிரக்கணக்கானோருக்கும் மேற்பட்ட மக்களை பலி கொடுக்க அனுமதிப்பதாக, அமெரிக்க மக்களிடையே வேண்டுமென்றே பரவ விடப்பட்ட பெரும் தொற்றுநோயாக இது உள்ளது என்பதாகும். ட்ரம்பால் நியமிக்கப்பட்ட FDA இயக்குனர், வெளிப்படையான கோவிட்-19 மறுப்பாளரான ட்ரம்ப் இன்னும் ஆட்சியில் இருந்தால், அது இருக்கும் சில சிறந்த உலகத்தை விவரிக்கவில்லை, ஆனால் பைடென் நிர்வாகத்தின் உண்மையான கொள்கைகளும் அதுதான்.

பைடென் நிர்வாகத்தின் அழுத்தத்தின் கீழ், CDC, மே 13 அன்று, தடுப்புமருந்து பாதுகாப்பு பெற்ற மக்களை இனி முகக்கவசம் அணிவதற்கு அது பரிந்துரைக்கப் போவதில்லை என்று அறிவித்ததோடு, நாடு முழுவதும் வணிகங்கள், மாநிலங்கள் மற்றும் நகராட்சிகளால் பின்பற்றப்படும் அனைத்து சமூக இடைவெளி நடவடிக்கைகளை முற்றிலும் கைவிட தூண்டுதலளிக்கிறது.

உலக சோசலிச வலைத் தளம் (WSWS), உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் முன்னணி பொது சுகாதார நிபுணர்களின் கருத்துக்களுடன் ஒத்துப்போகும் உறுதியான நிலைப்பாட்டுடன், தொற்றுநோயின் புதிய மறுஎழுச்சிக்கு இது இட்டுச் செல்லும் என்று எச்சரித்து CDC இன் முடிவை எதிர்த்தது. இரண்டு மாதங்களுக்குள், இந்த எச்சரிக்கைகள் உறுதியாகிக் கொண்டிருக்கின்றன.

வெள்ளை மாளிகை கொள்கைகளின் பேரழிவுகர விளைவை எதிர்கொள்ளும், பைடெனின் CDC இயக்குநர் டாக்டர் ரோசெல் வாலென்ஸ்கியிடம், “பள்ளிகளை மீளத்திறக்கும் முடிவை நீங்களே விரும்பி மாற்றிக் கொள்ளும் ஏதேனும் சூழ்நிலையோ, மறுபரிசீலனையோ உள்ளதா?” என்று கடந்த வாரம் கேட்கப்பட்டது.

வாலென்ஸ்கி அதற்கு, “இலையுதிர் காலத்தில் நமது பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அவை முழுமையாகவும், நேரடி கற்பித்தலாகவும் இருக்க வேண்டும்” என்று பதிலளித்தார். மேலும், “முழுமையாக தடுப்புமருந்து பெற்றுக் கொண்டவர்களை முகக்கவசம் அணிய CDC பரிந்துரைக்கவில்லையா?” என்று மீண்டும் கேட்டதற்கு, “நாங்கள் பரிந்துரைக்கவில்லை” என்று பதிலளித்தார்.

முகக்கவச பயன்பாட்டை வெளிப்படையாக எதிர்க்கும் மற்றும் அனைத்து சமூக இடைவெளி நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டுவரும் பைடென் நிர்வாகத்தின் கொள்கைகள், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளிலிருந்து பிரித்தறிய முடியாதவையே, பைடெனின் வெற்றிக்கு கோவிட்-19 தொற்றுநோய் விவகாரத்தை பேரழிவுகரமான முறையில் இவர் கையாண்டது ஒரு காரணியாக இருந்தது.

“220,000 அமெரிக்கர்கள் இறந்துவிட்டனர்,” என்று பைடென் இரண்டாவது ஜனாதிபதி விவாதத்தில் தனது தொடக்க உரையின் போது கூறினார். “இந்த பல இறப்புகளுக்கு தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி மட்டுமே பொறுப்பாளி அல்ல” என்றும் “இதை நான் கவனித்துக் கொள்கிறேன், இதை முடிவுக்குக் கொண்டு வருவேன்” என்றும் கூறினார்.

ஆனால் அவரது பதவியேற்புக்குப் பின்னர், மேலும் 196,000 பேர் கோவிட்-19 ஆல் இறந்துள்ளனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இத்தகைய பாரிய மரணங்களுக்கு “பொறுப்பான எவரும்” ஜனாதிபதியாக இருக்கும் உரிமையை இழந்துவிட்டதாக அறிவித்ததன் பின்பு, ஏற்கெனவே இறந்து போனவர்களைப் போல பைடென் நிர்வாகத்தின் கீழும் ஏராளமான அமெரிக்கர்கள் இறந்துவிட்டனர்.

“விஞ்ஞானத்தை பின்பற்ற” உறுதியளித்த ஜனாதிபதி இப்போது விஞ்ஞானிகளின் கோரிக்கைகளை நிராகரிக்கிறார், முகக்கவச பயன்பாட்டை தளர்த்துகிறார், மேலும் குழந்தைகளுக்கு கோவிட்-19 நோய்தொற்று ஏற்படாது என்றும் பள்ளிகள் நோய் பரப்பும் மையங்கள் அல்ல என்றும் போலி-விஞ்ஞான கருத்துக்களையும் பரப்புகிறார்.

தொற்றுநோயை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என்ற நம்பிக்கையில் தான் பல மில்லியன் மக்கள் பைடெனுக்கு வாக்களித்தனர். ஆனால் இந்த வாக்குறுதிகள் அனைத்தும் வெற்று வாக்குறுதிகளே, ஏனென்றால் ட்ரம்பை போல பைடெனும், நூறாயிரக்கணக்கானோர் இழப்பில் தம்மை பெரிதும் வளப்படுத்திக் கொண்ட நிதிய தன்னலக்குழுவின் நலன்களையே பரிந்துரைக்கிறார்.

தொற்றுநோய் தொடங்கி இந்த ஒன்றரை ஆண்டுகளின் படிப்பினைகளை எடுத்துக்கொள்ள வேண்டியது உடனடித் தேவையாகவுள்ளது. “சமூக நோயெதிர்ப்பு சக்தி,” என்ற பதாகையின் கீழ், உலகம் முழுவதுமான முதலாளித்துவ அரசாங்கங்கள், மில்லியன் கணக்கான உயிர்களை தியாகம் செய்வதற்கான கணக்கிடப்பட்ட முடிவை எடுத்தன, ஏனென்றால் அவர்களைப் பாதுகாப்பது நிதிய தன்னலக்குழுவின் இலாப நலன்களுக்குத் தடையாக இருந்திருக்கும்.

நான்கு மில்லியனுக்கும் அதிகமான இறப்புக்கள் ஏற்பட்டு கூட, இந்த பெரும் மனிதகுலம் மார்ச் மாதத்தில் இருந்ததை விட தொற்றுநோயை முற்றிலும் ஒழிப்பதற்கு நெருக்கமாக இல்லை. மாறாக, நோயின் கட்டுப்பாடற்று பரவும் தன்மை முன்நிகழ்ந்திராத வகையில் அபாயகரமான வைரஸ் திரிபு வகைகளின் அபிவிருத்திக்கு வழிவகுத்துள்ளது.

தொற்றுநோயை தடுப்பதற்கு ஒரு தீவிரமாக வேறுபட்ட அணுகுமுறை தேவைப்படுகிறது. இதன் பொருள், எந்தவொரு ஊதியத்தையோ அல்லது சிறு வணிக வருமானத்தையோ இழக்கும் அனைவருக்கும் முழு இழப்பீட்டை வழங்கி, பள்ளிகளையும் அத்தியாவசியமற்ற வணிகங்களையும் மூடுவதாகும். ஒவ்வொரு கோவிட்-19 நோயாளியும் உன்னிப்பாக கண்காணிக்கப்படுவதையும், மேலும் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் இனி தொற்றுநோய் பாதிப்பு இருக்காது என்ற நேரம் வரும் வரை அவர்களுக்கு முழு நிதி இழப்பீடு வழங்கி அவர்களை தனிமைப்படுத்த ஒரு பாதுகாப்பான மற்றும் வசதியான இடம் ஒதுக்கப்படுவதையும் உறுதிசெய்ய பரந்த சமூக வளங்களின் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

கோவிட்-19 ஐ கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் குறித்து விஞ்ஞானிகளின் ஒருமித்த கருத்து இருந்தாலும், அமெரிக்காவில் அத்தியாவசியமல்லாத உற்பத்தியை நிறுத்த ஒரே ஒரு அரசியல் கட்சி மட்டும் தான் அழைப்பு விடுக்கிறது என்பது ஒரு அடிப்படை உண்மையாகும்: அது உலக சோசலிச வலைத் தளத்தை (WSWS) பிரசுரிக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் (ICFI) இணைந்த சோசலிச சமத்துவக் கட்சியாகும் (SEP). ஏனென்றால், சோசலிச சமத்துவக் கட்சி முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார தனியுரிமைகளை ஏற்கவில்லை.

கோவிட்-19 கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டுமானால், நிதிய தன்னலக்குழுவின் செல்வத்திற்கு என்ன விலை கொடுத்தும் தொற்றுநோயை தடுக்க அவசர நடவடிக்கைகளை எடுக்கக் கோருவது என்பது தொழிலாள வர்க்கத்தின் பாரிய அணிதிரட்டலால் மட்டுமே நடக்கும். நூறாயிரக்கணக்கானவர்கள் இறந்தாலும் அமெரிக்காவின் கோடீஸ்வரர்கள் சம்பாதித்த மோசமான இலாபங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தொற்றுநோயை தடுக்க தேவையான நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க அது பயன்படுத்தப்பட வேண்டும்.

தொற்றுநோய் பணியிடங்களில் தீவிரமாக பரவுவதால், அத்தியாவசியமல்லாத உற்பத்தியை நிறுத்தவும், முக்கிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை அமல்படுத்தவும் கோரிக்கை விடுக்க சாமானிய தொழிலாளர்கள் குழுவை தொழிலாளர்கள் உருவாக்குவார்கள். மேலும், தொற்றுநோய் இன்னும் பரவி வரும் சூழ்நிலையில், வகுப்பறை கற்றலுக்காக பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளை ஆசிரியர்கள் எதிர்க்க வேண்டும்.

கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதை தடுக்க முடியாத முதலாளித்துவ அமைப்பின் இயலாமை, சமூகத்தின் சமூகத் தேவைகளுடனான முதலாளித்துவத்தின் பொருந்தாத தன்மையை தெளிவுபடுத்தியுள்ளது. தொற்றுநோய்களிலிருந்து மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கான போராட்டம் என்பது சோசலிசத்திற்கான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாததாகும்.

Loading