யூத எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய அச்சுறுத்தல் குறித்து கனேடிய அரசாங்க உச்சிமாநாடு: ஒரு அரசியல் மோசடி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த வாரம் இரண்டு நாட்களில், கனடாவின் கூட்டாட்சி லிபரல் அரசாங்கம் யூத எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய அச்சுறுத்தல் குறித்து இரண்டு தனித்தனி “அவசர உச்சிமாநாடுகளை” நடத்துகிறது. இந்த கூட்டங்கள் யூத எதிர்ப்பு அல்லது முஸ்லீம் எதிர்ப்பு விரோதத்தை அகற்ற எதுவும் செய்யாது. மாறாக, அவை வன்முறைமிக்க முஸ்லீம்-விரோத தாக்குதல்கள் மற்றும் யூதர்களைக் குறிவைக்கும் வெறுப்புமிக்க குற்றங்களில் சிக்கலான அதிகரிப்பின் பின்னணியில் உள்ள உண்மையான பிரச்சினைகளை மறைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குழப்பம்மிக்க அரசியல் போலி நடவடிக்கைகளும், கனேடிய ஏகாதிபத்தியத்தின் உள்நாட்டு மற்றும் உலகளாவிய நலன்களுக்கு ஏற்ப பொது விவாதத்தை வடிவமைத்தலுமாகும்.

இஸ்ரேலிய அரசினதும் மற்றும் சியோனிசத்தினதும் குற்றங்களுக்கான இடதுசாரி எதிர்ப்பை யூத-விரோதத்துடன் ஒன்றாக சமப்படுத்துவதற்கு அரசாங்கம் புதன்கிழமை 'யூத எதிர்ப்பு குறித்த தேசிய உச்சிமாநாட்டை' பயன்படுத்தியது. இன்று, கனேடிய வரலாற்றின் கடந்த இரண்டு தசாப்தங்களாக இவ்வாறு நடக்கவில்லை என்று அவர்கள் பாசாங்கு செய்வார்கள். முஸ்லிம்களை பலிக்கடா ஆக்குவதில் கனேடிய ஏகாதிபத்தியத்தின் உடந்தை, இஸ்ரேலிய அரசினால் தொடர்ச்சியான பாலஸ்தீன மக்களை வெளியேற்றுவதற்கும் ஒடுக்குவதற்கும் அதன் உறுதியான ஆதரவு, மற்றும் யூத மற்றும் முஸ்லிம்களுக்கு விரோதத்தை ஊக்குவிப்பவர்கள் உட்பட தீவிர வலதுசாரி சக்திகளுடனான அதன் கூட்டணிகள் அரசியல் ரீதியாக எப்போது வேண்டுமானாலும் இவ்வாறான வஞ்சக சொற்களால் மூடிமறைக்கப்படும். எல்லாமே 'இனவெறி' என்று வரையப்பட்டு, மேலும் 'அனைத்து மதங்களையும் சேர்ந்த கனேடியர்கள் ஒன்று சேர வேண்டும்' என்ற வெற்று முறையீடுகள் செய்யப்படும். ஆனால் உண்மை என்னவென்றால்: பாலஸ்தீனியர்கள், ஆப்கானியர்கள், லிபியர்கள், சிரியர்கள், யேமன்கள் மற்றும் ஈராக்கியர்களுக்கு எதிராக ஒரு 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டுள்ள கனேடிய அரசினால் சகித்துக்கொள்ளப்பட்டு மற்றும் நிகழ்த்தும் வன்முறை கனடாவில் உள்ள முஸ்லிம்கள் மீதான தீவிர வலதுசாரி தாக்குதல்கள் வரை பரவி வருகிறது.

கனடாவின் உக்ரேன் தூதர் ரோமன் வாஷுக், கியேவில் உக்ரேனிய தேசியவாதிகள் அமைப்பு மற்றும் உக்ரேனிய கிளர்ச்சி இராணுவத்தின் வீரர்களுக்காக ஒரு நினைவு கூட்டத்தில் உரையாற்றுகிறார். இவ்வமைப்பு நூறாயிரக்கணக்கான போலந்துநாட்டவர்கள் மற்றும் யூதர்களைக் கொன்றதில் நாஜிக்களுடன் ஒத்துழைத்தது. இரு அமைப்புகளின் உறுப்பினர்கள் பெரும்பாலும் ஜேர்மன் தலைமையின் கீழும் மற்றும் ஜேர்மன் சீருடையிலும் அணிவகுத்துச் சென்றனர். (Photo Credit: Coalition to Oppose the Arms Trade)

இந்த இரட்டை உச்சிமாநாடுகள் பல சமீபத்திய நிகழ்வுகளுக்கான லிபரல் அரசாங்கத்தின் நடைமுறைரீதியிலான மற்றும் முன்கூட்டிய பதிலளிப்பாகும். நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்களின் உயிரைக் கொன்ற பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் சமீபத்திய இனப்படுகொலை வெடிப்பு கனேடிய நகரங்களில் பரவலான மக்கள் சீற்றத்தையும் பெரிய ஆர்ப்பாட்டங்களையும் தூண்டியது. ஒன்டாரியோவின் லண்டனில் ஜூன் 8 ம் தேதி நடந்த கொடூரமான தாக்குதல், முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்த அப்சால்ஸ் என்பவரின் நான்கு பேரை கொன்றது நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஜூன் 10 அன்று தாராளவாதிகள் மூன்று பசுமைக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஜெனிகா அட்வினை வேட்டையாடினர். இஸ்ரேல் ஒரு நிறவெறி நாடு என்று முத்திரை குத்தப்பட்ட ட்வீட்டுகள் உட்பட, ஒரு தீவிர சியோனிஸ்டான பசுமைக் கட்சித் தலைவர் அனாமி பௌல் உடன் அவர் மோதினார். மேலும் இஸ்ரேலிய அரசை இனவாத அரசாக விமர்சித்ததற்காக பசுமைக் கட்சி வேட்பாளராக தேர்வு செய்யப்படமாட்டார் என்று கூறப்பட்டு, பௌலின் உதவியாளர் நாதன் ஸாட்ஜ்மானால் அச்சுறுத்தப்பட்டார். ட்ரூடோவும் அவரது உயர் ஆலோசகர்களும் அட்வினின் விலக்கலை தேர்தலுக்கு முந்தைய சதி என்று கருதினர். ஆனால் பெருநிறுவன ஊடகங்கள், கன்சர்வேடிவ் எதிர்க்கட்சி மற்றும் லிபரல் சட்டமன்ற பிரிவுகளிலிருந்து 'ஹமாஸுக்கு ஆதரவானவரை' கட்டித்தழுவியதாக அரசாங்கத்தின் மீது உடனடியாக தாக்கப்பட்டது. லிபரல் கட்சித் தலைமை உடனடியாக அட்வினை பகிரங்கமாக தனது சொந்த தவறு என ஒத்துக்கொள்ளமாறு நிர்ப்பந்தித்தது. ஆனால் அதற்கு முன்பே, அரசியல் சேதத்தை கட்டுப்படுத்தும் அதே முயற்சியின் ஒரு பகுதியாக, நாட்டின் முன்னணி சியோனிச சார்பு அமைப்பான இஸ்ரேல் மற்றும் யூத விவகாரங்களுக்கான மையம் மற்றும் பினாய் பிரித் ஆகியவற்றின் கோரிக்கைகளின் பேரில் அவர்கள் செயல்பட முடிவு செய்தது யூத எதிர்ப்பு பற்றிய உச்சிமாநாட்டிற்கு அழைப்புவிட்டனர்.

இது நடந்து கொண்டிருந்தபோது, கனேடிய முஸ்லிம்களின் தேசிய அமைப்பின் அழைப்பை எடுத்துக் கொண்ட NDP, லண்டன் பயங்கரவாத அட்டூழியத்திற்கு பதிலளிக்கும் விதமாக இஸ்லாமிய அச்சுறுத்தல் குறித்த தேசிய உச்சிமாநாட்டிற்கு அழுத்தம் கொடுத்தது. ஆரம்பத்தில் ட்ரூடோ கருத்து தெரிவிக்க மறுத்திருந்தார். ஆனால் ஜூன் 11 அன்று, யூத-விரோதம் குறித்த தனது தேசிய உச்சிமாநாட்டை அரசாங்கம் அறிவித்த அதே நாளில், சட்டமன்றம் London-Fanshawe இற்கான NDP சட்டமன்ற உறுப்பினர் லிண்ட்சே மதிசென் இனால் முன்வைக்கப்பட்ட இஸ்லாமிய அச்சுறுத்தல் அவசர உச்சிமாநாட்டிற்கான கடமைப்படாத தீர்மானத்தை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.

தனித்தனி 'அவசர உச்சிமாநாடுகளை' கூட்ட அரசாங்கம் தேர்ந்தெடுத்துள்ளது என்பதே அவற்றின் மதிப்பு குறித்து நன்கு எடுத்துக்காட்டுகின்றது. யூத-விரோதத்தையும் இஸ்லாமிய அச்சுறுத்தலையும் முற்றிலும் தனித்தனி நோய்களாகக் காட்ட இது விரும்புகிறது: ஒன்று, புற்றுநோய் போன்ற நோய் என்று கூறப்படுகின்றது, மற்றொன்று மனதின் உளநோய். உண்மையில், அவை ஒரு தீங்குமிக்க முதலாளித்துவ உடல் அரசியலின் இரண்டு அறிகுறிகளாகும். கனேடிய மற்றும் கியூபெக் “மதிப்புகளுக்கு” அச்சுறுத்தலாக புலம்பெயர்ந்தோரை இழிவுபடுத்துவதும், இராணுவவாதம் மற்றும் ஏகாதிபத்திய வன்முறையை ஊக்குவிப்பதற்கும் கனடாவிலும், சர்வதேச அளவிலும் வலதுபுறம் நோக்கிய ஸ்தாபக அரசியலின் கூர்மையான மாற்றத்தால் தீவிர வலதுசாரி கூறுகள் தைரியமாக உள்ளன.

கனடாவின் ஆளும் உயரடுக்கு வாஷிங்டனின் 'பயங்கரவாதத்திற்கு எதிரான போரை' முழுமையாக ஏற்றுக்கொண்டது. இது மத்திய கிழக்கிலும் உள்நாட்டிலும் முஸ்லிம்களை தீவிரவாதிகள் மற்றும் சாத்தியமான பயங்கரவாதிகள் என்று பேய்களாக காட்டியது. ஒன்றரை தசாப்த காலமாக 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' கனேடிய அரசியல் வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. இது வெளிநாட்டு ஆக்கிரமிப்பு மற்றும் போருக்கான சாக்குப்போக்காகவும், அதிகாரங்களை பெருமளவில் விரிவுபடுத்துவதற்கும், தேசிய பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவதற்கும் இது ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. எல்லா நேரங்களிலும், ஒட்டாவாவும் வாஷிங்டனும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுடனான ஒரு முழு கூலிப்படை உறவைக் கொண்டிருந்தனர். சில சமயங்களில் லிபியா மற்றும் சிரியாவைப் போலவே, அவர்களின் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளில் அவர்களை பினாமிகளாகப் பயன்படுத்தினர், மற்ற சமயங்களில் புதிய வெளிநாட்டு ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த அவர்களின் இருப்பை மேற்கோள் காட்டினர்.

கடந்த இரண்டு தசாப்தங்களாக கனேடிய ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசின் மிகக் கொடூரமான குற்றங்களுக்கு முஸ்லிம்கள் இலக்காகவும் மற்றும் பலியாகவும் உள்ளனர். இவை பின்வருமாறு:

  • கனேடிய துருப்புக்களால் ஆப்கானிஸ்தானின் படையெடுப்பு மற்றும் தசாப்த கால ஆக்கிரமிப்பு, இதில் வீடு வீடாக தேடல்கள் மற்றும் கைதுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் கைதிகளை CIA ஆல் சித்திரவதை செய்ய கையளிப்பது போன்றவை எந்தவொரு விசாரணை செயல்முறையும் இல்லாமல் இடம்பெற்றது.
  • ஆயுதங்கள், கனேடிய கடற்படைக் கப்பல்கள், எரிபொருள் நிரப்புதல் மற்றும் உளவுத்துறை உள்ளிட்ட 2002 இல் ஈராக்கின் மீதான அமெரிக்க படையெடுப்பு மற்றும் அழிவுக்கு இரகசிய இராஜதந்திர மற்றும் இராணுவ ஆதரவை வழங்குதல். நூறாயிரக்கணக்கானோரின் மரணத்திற்கு வழிவகுத்த மற்றும் ஈராக்கிய சமுதாயத்தை அழித்த ஒரு போருக்கு கனடா ஆழ்ந்த உடந்தையாக இருந்தது.
  • 2011 நேட்டோ தலைமையிலான விமானப் போரின்போது லிபியாவை அழிப்பதில் கனேடிய இராணுவத்தின் பங்களிப்பு.
  • மஹர் அராரை சட்டத்திற்கு புறம்பான சித்திரவதை மற்றும் துன்புறுத்தல் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்த கனேடிய சிறுவர் சிப்பாய், ஒமார் காதரை இழிவுபடுத்துவதில் ஒட்டாவாவின் உடந்தையாக இருந்தது. அவர் குவாண்டனாமோ வளைகுடாவில் 10 ஆண்டுகள் சித்திரவதை செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார்.
  • 'காட்டுமிராண்டித்தனமான கலாச்சார நடைமுறைகள்' என்று கூறப்பட்டவைக்கு எதிரான ஹார்பர் அரசாங்கத்தின் பிரச்சாரம் முஸ்லிம்களுக்கு எதிரான விரோதத்தை தூண்ட முயன்றது.
  • கியூபெக்கின் ஆளும் உயரடுக்கு பேரினவாத பிரச்சாரம் புலம்பெயர்ந்தோரை, குறிப்பாக முஸ்லிம்களை கியூபெக் மதிப்புகளுக்கு அச்சுறுத்தலாக சித்தரிக்கிறது. இதன் விளைவாக மசோதா 21, ஹிஜாப் போன்ற மதச் சின்னங்களை ஆசிரியர்கள் மற்றும் பொது அதிகாரிகள் அதிகாரப் பதவிகளில் அணிவதைத் தடைசெய்தது. மேலும் நிகாப் அல்லது புர்கா அணிந்த முஸ்லீம் பெண்களுக்கு பொது சேவைகளை மறுக்கிறது.
  • கன்சர்வேடிவ் மற்றும் தாராளவாத அரசாங்கங்கள் நாட்டின் முஸ்லீம் சிறுபான்மையினரை முறையாக துன்புறுத்தும் இந்தியாவின் தீவிர வலதுசாரி, நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசாங்கத்தின் தீய செயல்களுக்கு உதவும் வரலாற்றையும் கொண்டுள்ளன. இதில் இந்தோ-கனேடியர்களிடையே பாரதிய ஜனதா கட்சி அனுதாபிகளிடையே தேர்தல் ஆதரவுக்கு அழைப்புவிடுவதில் கனடாவின் இரண்டு முக்கிய கட்சிகளும் ஈடுபட்டுள்ளதும் உள்ளடங்கும்.

ஒரு வலதுசாரி-பயங்கரவாதியால் அஃப்சால் குடும்பத்தின் கொலை மற்றும் எட்மண்டனில் முஸ்லீம் பெண்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களுக்கும் இந்த வருந்தத்தக்க வரலாற்றுக்கும் இடையே ஏதாவது தொடர்பு இருக்குமா? இந்த தொடர்புகளை மறைக்க இன்றைய மாநாட்டில் அனைத்து முயற்சியும் எடுக்கப்படும்.

இஸ்லாமிய எதிர்ப்பு குறித்த மாநாடு மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை அழிப்பதில் கனேடிய ஏகாதிபத்தியத்தின் கொடூரமான வரலாற்றை மூடிமறைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தால், யூத எதிர்ப்பு பற்றிய மாநாடு இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான இடதுசாரி எதிர்ப்பை குற்றவாமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தீவிர வலதுசாரி இஸ்ரேலிய அரசாங்கம் பாலஸ்தீன மக்களை மிருகத்தனமாக அடக்குவது பற்றிய அனைத்து விமர்சனங்களையும் யூத-விரோதம் என்று முத்திரை குத்துவதன் மூலம், ட்ரூடோ அரசாங்கமும் உச்சிமாநாட்டின் பிற ஆதரவாளர்களும் இஸ்ரேல் மீதான இடதுசாரி விமர்சனங்களை யூத எதிர்ப்பு என குறிவைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு சர்வதேச அவதூற்று பிரச்சாரத்திற்கு எரியூட்டுகின்றனர்.

யூத-விரோத மாநாடு தீவிர வலதுசாரிகளை அம்பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. இதுதான் யூத எதிர்ப்பு வெறுப்பு மற்றும் வன்முறையின் உண்மையான மூலஆதாரமாகவும் கனடாவில் அதிகரித்து வருகிறது. மாறாக, கனேடிய ஆளும் வர்க்கம் அதிகரித்தளவில் அரசியல்ரீதியாக இந்த கூறுகளுடன் ஒத்துப்போகிறது. இந்த விஷயத்தில் கனடாவின் பெருநிறுவன ஊடகங்கள் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் போன்ற நெருங்கிய சர்வதேச நட்பு நாடுகளின் மோசமான இஸ்லாமியவாத பிரச்சாரங்கள் மற்றும் ஜேர்மன் ஆளும் உயரடுக்கு இப்போது ஜேர்மன் பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக இருக்கும் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு மற்றும் யூத எதிர்ப்பு பாசிச ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சிக்கு (AfD), வழங்கிய ஆதரவு குறித்து கிட்டத்தட்ட மௌனமாக இருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மாறாக, அரசியல் ஸ்தாபகம் சமீபத்திய ஆண்டுகளில் இடதுசாரிகளிலிருந்து இஸ்ரேல் மீதான விமர்சனங்களை கண்டனம் செய்வதிலும் திறம்பட குற்றச்செயலாக்குவதிலும் கவனம் செலுத்துகிறது. மத்திய அரசு மற்றும் ஒன்டாரியோ மாகாண பாராளுமன்றம் ஆகியவை யூத-விரோதத்திற்கான சர்வதேச யூதப்படுகொலை நினைவு கூட்டணியின் வரையறையை ஏற்றுக்கொண்டன. இவ்வமைப்பு இஸ்ரேலிய அரசாங்கத்தின் மீதான விமர்சனத்தையும், பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதன் மூலம் ஒரு தனித்துவமான யூத அரசை உருவாக்கும் சியோனிச திட்டத்தையும் யூத-விரோதம் என ஒப்பீடு செய்கிறது. முன்னாள் தொழிற் கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் மற்றும் அவரது ஆதரவாளர்களை யூத-விரோத முத்திரை குத்துவதற்கு பிரிட்டிஷ் ஆளும் வர்க்கமும், தொழிற் கட்சிக்குள் பிளேயர் வாத ஆதரவாளர்கள் பயன்படுத்திய வரையறை இதுதான்.

உலக சோசலிச வலைத் தளம் முன்னர் கூறியபடி, இந்த கறைபூசும் பிரச்சாரத்தில் சம்பந்தப்பட்ட “சிடுமூஞ்சித்தனத்தின் அளவு” “நம்பமுடியாதளவாக” இருக்கின்றது. யூத-விரோதம், யூதர்களை நோக்கிய இன வெறுப்பு, வரலாற்று ரீதியாக தீவிர வலதுசாரிகளுடன், குறிப்பாக நாஜி ஜேர்மனியுடன் அடையாளம் காணப்பட்ட ஒன்றாகும். இருப்பினும் இது அரச குடும்பத்தினர் உட்பட பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்திற்குள் பல ஆதரவாளர்களைக் கொண்டிருந்தது.

ஜேர்மனிக்கான மாற்றீடு பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வ எதிர்க் கட்சியின் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளபோதும், பிரான்சில் மரின் லு பென்னின் தேசிய பேரணி உள்ளிட்ட ஒத்த அமைப்புகளும் ஐரோப்பா முழுவதும் ஆளும் உயரடுக்கால் வளர்க்கப்பட்டு வகையில், இப்போது இடதுசாரிகள் யூத-விரோதத்தின் மூலகாரணமாக இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய அரச குற்றங்களை சரியான பெயரிட்டு பகிரங்கமாக அழைப்பதற்கான பலரின் விருப்பம் ஆளும் வர்க்கத்தை தொந்தரவு செய்துள்ளது. கிழக்கு ஜெருசலேமின் தெருக்களில் வலதுசாரி இஸ்ரேலிய கும்பல்கள் 'அரேபியர்களுக்கு மரணம்!' என்று கத்தி இனப்படுகொலைக்கான ஒரு அழைப்பு இஸ்ரேலிய அரசாங்கத்தாலும் அதன் ஆதரவாளர்களாலும் திறம்பட ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு எதிராக கனேடிய நகரங்களில் பெரும் மக்களின் ஆர்ப்பாட்டங்கள் கட்டவிழ்ந்தன. இஸ்ரேலிய மற்றும் கனேடிய அதிகாரிகள் உடனடியாக இந்த ஆர்ப்பாட்டங்களை யூத-விரோதத்துடன் தொடர்புபடுத்த முயன்றனர். அதேபோல், இடதுசாரி அரசியல் பிரமுகர்களும் குறிவைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு போலி-இடது குழுக்களால் ஒரு 'சோசலிஸ்ட்' என்று மோசடியாக சித்தரிக்கப்படும் புதிய ஜனநாயகக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நிகி ஆஷ்டன், மார்ச் மாதத்தில் ஒரு இணையவழி கூட்டத்தில் கோர்பினுடன் பேச ஒப்புக்கொண்டதற்காக ஒரு மோசமான கறைபூசும் பிரச்சாரத்தின் பொருளானார். டொரொன்டோ ஆர்ப்பாட்டத்தில் பாலஸ்தீனிய ஆர்வலர்கள் யூத பாதுகாப்பு லீக்கின் உள்ளூர் தலைவரால் நடத்தப்பட்ட வன்முறை தாக்குதலுக்கு எதிராக தங்களை தற்காத்துக் கொண்டதை டொராண்டோ மேயர் ஜோன் டோரி 'யூத எதிர்ப்பு' என்று குற்றம் சாட்டினார்.

உண்மையான யூத-விரோத தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. அவை ஆளும் வர்க்கத்தின் தரப்பில் யூத மதத்துடன் இஸ்ரேல் அரசை வேண்டுமென்றே இணைப்பதன் மூலம் எளிதாக்கப்படுகின்றன. மே மாதத்தில் டொராண்டோவின் கென்சிங்டன் சந்தைக் கடையில் ஒரு கடை யூத எதிர்ப்பு கிறுக்குஎழுத்துக்களால் வரையப்பட்டிருந்தது. 'நிலையான முகவரி இல்லாத' ஒரு இளைஞன் கைது செய்யப்பட்டு வெறுப்பு குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டான்.

நேற்றைய உச்சிமாநாட்டில் 'இடதுசாரி யூத-விரோதத்தின்' மீது குற்றம்சாட்டிய இர்வின் கோட்லர், ஒரு 'மனித உரிமைகள்' வழக்கறிஞரும், முன்னாள் லிபரல் அமைச்சரவை மந்திரியும் மற்றும் ட்ரூடோ அரசாங்கத்தின் 'யூதப்படுகொலை ஞாபகார்த்தத்தை பாதுகாப்பதற்கும் யூத விரோதத்தை எதிர்ப்பதற்கான' சிறப்பு தூதர் ஆவார். யூத-விரோத நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய கோட்லர், 1980களில் சோவியத் யூனியனில் இருந்து இஸ்ரேலுக்கு குடிபெயரும் முயற்சியில் தீவிர வலதுசாரி ரஷ்ய அதிருப்தி / இஸ்ரேலிய அரசியல்வாதி நாதன் ஷரான்ஸ்கியைப் பாதுகாத்து தனது “மனித உரிமைகள்” சான்றுகளை பெற்றார். 20 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலிய அரசாங்கங்களில் பல அமைச்சரவை பதவிகளை வகித்த ஷரன்ஸ்கி, பாலஸ்தீனிய ஆக்கிரமிப்பு பிராந்தியங்களில் இஸ்ரேலிய விரிவாக்கத்தின் குரல் ஆதரவாளராகவும் கட்டிடக் கலைஞராகவும் இருந்தார். பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய அரசு குற்றங்களுக்கான அரசியல் எதிர்ப்பின் வெளிப்பாடுகளை 'யூத-விரோதத்துடன்' இணைத்து கோட்லர் ஒரு இலாபகரமான வாழ்க்கையை மேற்கொண்டுள்ளார். மேலும் சமீபத்திய ஆண்டுகளில் ஈரான் மற்றும் சீனாவுக்கு எதிரான ஆக்கிரமிப்புக்கு அழைப்பு விடுக்கும் கனேடிய ஆளும்பிரிவிலுள்ள மிகக் கடுமையான குரல் கொடுப்பவர்களில் ஒருவராவர்.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களில் இஸ்ரேலிய அரசு குற்றங்களுக்கான அரசியல் எதிர்ப்பை “யூத-விரோதத்திற்கு” ஒப்பானது என்று கூறுவது, யூத-விரோதத்தின் உண்மையான செயல்களுக்கு எதிரான போராட்டத்தைத் தடுக்கிறது. யூத-விரோதமானது ஒரு துன்பகரமானதும், மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் நிகழ்வுகள் நிரூபித்தபடி, தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு மரண அச்சுறுத்தலுமாகும்.

ஆனால் அந்த அச்சுறுத்தலின் மூலத்தை மறைக்க கனேடிய அரசாங்கம் உறுதியாக உள்ளது. இந்த வலதுசாரிகள் இஸ்ரேலிய அரசு மற்றும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களின் குற்றங்களுக்கு கொள்கை ரீதியான அரசியல் எதிர்ப்பை காட்டாது மட்டுமல்லாது கனடாவின் சொந்த இராணுவ மற்றும் பொலிஸ் அணிகளுக்குள் சுதந்திரமாக செயல்படும் அரசியல் தீவிர வலதுசாரிகளும் பாசிச வலைப்பின்னல்களுமாகும். கடந்த ஆண்டு தான், இந்த கூறுகளால் ஈர்க்கப்பட்ட ஒரு நபர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை படுகொலை செய்ய முயன்றார்! ஜனவரி 6 ம் தேதி அமெரிக்க ஜனநாயகத்தை அகற்ற முயற்சித்த அதே அரசியல் கூறுகள் கனடாவில் தீவிரமாக செயல்படுவதுடன், யூத எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய அச்சுறுத்தல் ஆகியவற்றை தமது கையிருப்பாக கொண்டுள்ளன. கனேடிய அரசாங்கம் அதன் நெருங்கிய அரசியல் கூட்டாளியின் தலைநகரில் ஒரு பாசிச சதி வெற்றிபெற்றிருந்தால், எந்த 'நிலைப்பாட்டை' நோக்கி வளைந்திருக்கும் என்பதை ஒருவர் கற்பனை செய்து பார்க்க முடியும்.

உக்ரேனில் இதற்கான ஒரு ஆதாரத்தை காணலாம். அங்கு நாஜிக்களுடன் மற்றும் யூதபடுகொலையில் ஒத்துழைத்த தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதிகளை கொண்டாடும் கட்சிகளின் தலைமையிலான தீவிர வலதுசாரி ஆட்சியுடன் கனேடிய அரசு தன்னை இணைத்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது. கனடாவின் துணைப் பிரதம மந்திரி கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட், இரண்டாம் உலகப் போரின் போது நாஜி சார்பு செய்தித்தாளின் வெளியீட்டாளராக உக்ரேனில் தனது சொந்த தாத்தாவின் கடந்த காலத்தை மறைக்க ஒரு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதை “யூத-விரோதத்தை எதிர்த்துப் போராடுவதுடன்” எப்படி ஒத்துப்போக செய்வது?

இந்த வார கனேடிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உச்சிமாநாடுகள் எதையும் தீர்க்காது. மேலும் கனேடிய அரசு அது மிகவும் சீற்றம் அடைவதாகக் கூறும் குற்றங்களுக்கு உதவுவதையும் மன்னிப்பதையும், காணும் பெருகிய எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு அவர்களின் முற்றிலும் மோசடி தன்மை தெளிவாகத் தெரியும்.

உலகத் தொழிலாள வர்க்கத்தின் முக்கியமான கேள்விகளான இஸ்லாமிய விரோத எதிர்ப்பு மற்றும் யூத-விரோதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு வரலாற்று உண்மைக்கு கொள்கை ரீதியான அர்ப்பணிப்பு தேவைப்படுகின்றது. கனேடிய அரசாங்கத்தால் செய்ய முடியாத ஒரு விஷயம் என்னவென்றால், அஃப்ஸால் குடும்பத்தின் கொலைக்கும், யூதர்கள் உட்பட பல்வேறு இன மற்றும் மத குழுக்களை தீவிர வலதுசாரிகளுக்கு தண்டனையின்றி பலிகொடுக்கும் சூழலுக்கும் அதன் சொந்த நடவடிக்கைகள் எவ்வாறு நேரடியாக பங்களித்தன என்பதற்கான வரலாற்று விசாரணையை மேற்கொள்வதுதான்.

அந்தப் பணி புரட்சிகர சோசலிச இயக்கத்தின் மீது விழுகின்றது.

Loading