ஜேர்மனியில் வெள்ள பேரழிவிற்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டம் தேவை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வாரம் ஜேர்மனிய மாநிலங்களான ரைன்லேண்ட்-பாலாட்டினேட் மற்றும் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா (NRW) மற்றும் பெல்ஜியம் ஆகிய பகுதிகளை தாக்கிய பயங்கர வெள்ளத்தால் 200 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டது வெறுமனே தவிர்க்க முடியாத இயற்கை பேரழிவல்ல.

ஜூலை 17, 2021 சனிக்கிழமையன்று ஜேர்மனியின் பாட் நொயூனாஹர்-ஆஹ்ர்வைலரில் ஆஹ்ர் ஆற்றின் மீது ஒரு பாலம் சேதமடைந்துள்ளது. (AP Photo/Michael Probst)

கடுமையான புயல்கள் மற்றும் பலத்த மழை பல உயிர்களைக் கொன்றது மற்றும் வீடுகள், சாலைகள், பாலங்கள் மற்றும் அனைத்து அடிப்படை உள்கட்டமைப்புகளுக்கும் பேரழிவு தரக்கூடிய சேதத்தை ஏற்படுத்தியதற்கு மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் பொறுப்பும் மற்றும் அவர்களின் முதலாளித்துவக் கொள்கையுமாகும். இக்கொள்கை, தொற்றுநோயை காலத்தில் போலவே உயிர்களை விட இலாபத்திற்கு முன்னுரிமை கொடுத்தது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு வழங்கும் உதவி தொடர்ந்து பேரழிவாக உள்ளது. ரைன்லேண்ட்-பலட்டினேட் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 20 மருத்துவர்களின் சிகிச்சை நிலையங்கள் செயல்படவில்லை என்று ரைன்லேண்ட்-பாலாட்டினேட் மற்றும் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவிற்கான மருத்துவர்களின் அமைப்பின் தலைவரான ஹான்ஸ்-ஆல்பர்ட் கெஹ்லே தெரிவித்துள்ளார்.

இலட்சக்கணக்கான மக்கள் மின்சாரம் மற்றும் குடிநீர் கிடைக்காது துண்டிக்கப்பட்ட நிலையில் பலர் இன்னும் அப்படியே இருக்கிறார்கள். கைத்தொலைபேசி வலைப்பின்னல்கள் இப்பகுதியின் சில பகுதிகளில் இன்னும் செயல்படவில்லை.

ரைன்லாண்ட்-பலட்டினேட்டில் ஆஹ்ர் ஆற்றின் குறுக்கே வெள்ளம் ஏற்பட்ட கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பின்னரும், சேதத்தை சமாளிப்பதற்கும் மக்களுக்கு உதவிவழங்குவதற்கு ஏற்பாடு செய்வதற்கும் ஒரு மத்திய ஒருங்கிணைந்த உதவித் திட்டத்தின் அறிகுறியையும் காணவில்லை என பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தெரிவிக்கின்றனர். மக்கள் பொதுவாக தங்களுக்கு அல்லது ஒருவருக்கொருவர் உதவுகிறார்கள், அல்லது ஜேர்மனியின் பிற பகுதிகளைச் சேர்ந்த தனிப்பட்ட தன்னார்வலர்களால் உதவி செய்யப்படுகிறார்கள்.

கடைசி நிமிடத்தில் மட்டுமே தங்கள் உயிரைக் காப்பாற்ற முடிந்த பலர், எல்லாவற்றையும் இழந்துவிட்டனர். குடியிருப்புகள், தொழிற்சாலைகள், பட்டறைகள், வணிகங்கள், மருத்துவர்களின் சிகிச்சை நிலையங்கள், உணவகங்கள் மற்றும் விடுதிகள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது கடுமையாக சேதமடைந்துள்ளன.

உலகெங்கிலும் உள்ள மக்கள் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவைப் பார்த்து திகிலடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், சமூக ஊடகங்களிலும், இதற்கு அரசியல் ரீதியாக பொறுப்புள்ளவர்கள் மீது கோபம் பெருகி வருகிறது. வானிலை ஆய்வாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளிடமிருந்து துல்லியமாக இதுபோன்ற விளைவு பற்றி எச்சரிக்கைகள் வந்திருந்தபோதிலும் அவர்கள் மக்களை எச்சரிக்கவும் மக்களை வெளியேற்றவும் தவறிவிட்டனர்.

வீடுகளிலோ, நிலக்கீழ் அடித்தள அறைகளிலோ, அல்லது தெருவிலோ ஏராளமான நீரால் அடித்துச் செல்லப்பட்ட மக்களின் உடல்கள் தொடர்ந்து மீட்கப்படுகின்றன. வெள்ளத்தால் எத்தனை பேர் கொண்டு செல்லப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் செய்த மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் பிரதிநிதிகள் வெள்ளத்தால் மக்கள் எவ்வளவு ஆழமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை பாசாங்குத்தனமாக கூறுகின்றனர். நிகழ்வுகளுக்கான எந்தவொரு பொறுப்பையும் அவர்கள் கைகளை கழுவ முற்பட்டு, இதுபோன்ற பேரழிவை யாரும் முன்னறிவித்திருக்க முடியாது என்று வலியுறுத்துகின்றனர். இந்த கூற்றுக்கள் சர்வதேச புகழ்பெற்ற விஞ்ஞானிகளால் பொய்கள் என அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

கடுமையான வெள்ளம் பற்றிய எச்சரிக்கைகள் பொறுப்புள்ள அரசாங்கங்கள், அதிகாரிகள் மற்றும் ஊடகங்களால் மக்களுக்கு வழங்கப்படவில்லை. உண்மையில் இதனைக் குறைப்பதற்கோ அல்லது தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மேலும் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்படவில்லை.

அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் குற்றவியல் செயலற்ற தன்மையின் நேரடி தயாரிப்பு ஆகும். நேரத்திற்கு முன்பே அவர்களுக்கு இதுபற்றி எச்சரிக்கப்பட்டிருந்தாலும், மக்களை எச்சரிக்கவும், உயிர்களைக் காப்பாற்றவும் அவர்கள் எதுவும் செய்யவில்லை.

வெள்ளம் பேரழிவு முதலாளித்துவ அமைப்பையும் அதன் அரசியல் பிரதிநிதிகளையும் பல வழிகளில் அம்பலப்படுத்துகிறது.

முதலாவதாக, இது முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பால் ஏற்பட்ட காலநிலை நெருக்கடியின் நேரடி விளைவாகும். இது விஞ்ஞானிகள் பல தசாப்தங்களாக எச்சரித்துள்ள அதிக எண்ணிக்கையிலான தீவிர மாற்றமடைந்த வானிலை நிகழ்வுகளை உருவாக்குகிறது.

காலநிலை மாற்றத்தின் விளைவுகள் நீண்ட காலமாக நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. பல ஆய்வுகள் புவி வெப்பமடைதல், வெள்ளம் மற்றும் வறட்சியின் நிகழ்தகவை அதிகரிக்கிறது. மேலும் இறுதியில் இது நமது கிரகத்தினதும் மற்றும் மனிதகுலத்தினதும் உயிர்வாழ்வை அச்சுறுத்துகிறது. ஆனால் ஆளும் வர்க்கம் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க இயலாது மற்றும் விரும்பவில்லை, ஏனெனில் இது இலாபத்திற்கான அதன் உந்துதலையும் அதன் புவிசார் மூலோபாய நலன்களையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.

இரண்டாவதாக, காலநிலை மாற்றத்தின் கொடிய விளைவுகள் பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்ட மற்றும் உடைந்த உள்கட்டமைப்பின் விளைவாகும். இதில் வெள்ள எச்சரிக்கை அமைப்புமுறை, நன்கு தயாரிக்கப்பட்ட மற்றும் பயனுள்ள பேரழிவு பாதுகாப்பு பிரிவு மற்றும் தேவையான வெள்ள பாதுகாப்பு அமைப்பு முறைகள் ஆகியவை அடங்கும்.

இந்த பகுதிகளில் உள்ள குறைபாடுகள் பல தசாப்தங்களாக சிக்கனக் கொள்கையின் நேரடி தயாரிப்பும், உள்கட்டமைப்பை புறக்கணித்தலும் ஆகும். அபாய எச்சரிக்கைகள் அகற்றப்பட்டன அல்லது குறைக்கப்பட்டன. அத்துடன் அவசரகாலத்தில் மக்களைப் பாதுகாப்பதற்கும் வழங்குவதற்கும் தேவையான பல நடவடிக்கைகள் குறைக்கப்பட்டன.

அனைத்து கட்சிகளின் அரசியல்வாதிகளின் செயலற்ற தன்மையும், அத்தகைய பேரழிவை முன்னறிவிக்க முடியாது என்ற அவர்களின் கூற்றும் ஆளும் உயரடுக்கின் உழைக்கும் மக்கள் மீதான அலட்சியம், ஆணவம் மற்றும் விரோதப் போக்கைக் காட்டுகிறது. இது முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறையின் திவால்தன்மையின் வெளிப்பாடாகும்.

உலகெங்கிலும் 4 மில்லியனுக்கும் அதிகமானோர் மற்றும் ஜேர்மனியில் 91,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்த தொற்றுநோயைப் போலவே, அரசாங்கங்களும் 'வாழ்க்கையை விட இலாபத்திற்கு முன்னுரிமை கொடுத்தல்' என்ற முழக்கத்தை பின்பற்றுகின்றன. வங்கிகளுக்கும் பெரு நிறுவனங்களுக்கும் நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்கள் பிணை எடுப்புக்கு வழங்கப்படுவதுடன், இராணுவம் பல்லாயிரக்கணக்கான பில்லியன்கள் கூடுதல் நிதி உதவியை பெறுகிறது. சமூக தேவைகளுக்கும் சமூகத்தின் பெரும்பான்மையினரான தொழிலாள வர்க்கத்தின் ஆரோக்கியம் மற்றும் உயிர்களின் பாதுகாப்பிற்கும் பணம் இல்லை என்று கூறப்படுகிறது.

மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களால் முன்மொழியப்பட்ட 400 மில்லியன் யூரோ அவசர உதவி வெள்ளத்தால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் உயிர்வாழ்வையும் விநியோகத்தையும் பாதுகாக்க மிகக் குறைவு. வங்கிகளையும் பெரிய நிறுவனங்களையும் 'காப்பாற்றும்' போது அல்லது ஜேர்மன் இராணுவத்தை மறுசீரமைக்கும் போது அரசு திரட்டிய நிதியில் இது ஒரு சிறுபகுதி கூட இல்லை.

சோசலிச சமத்துவக் கட்சி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக ஆதரவளிக்க பில்லியன் கணக்கான யூரோக்களைக் கோருகிறது. இதனால் அவர்கள் அழிக்கப்பட்ட வீடுகளையும் வணிகங்களையும் மீண்டும் கட்டியெழுப்ப முடியும். பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்கள் மற்றும் தொழிலாளர்கள், அத்துடன் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் முழுமையாக ஈடுசெய்யப்பட வேண்டும்.

அழிக்கப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளை நவீனமயமாக்குதல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றில் கூடுதல் பில்லியன்கள் முதலீடு செய்யப்பட வேண்டும். நீர் மற்றும் மின்சார விநியோகங்களை உடனடியாக மீண்டும் நிறுவ தேவையான ஆதாரங்கள் கிடைக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை செயல்படுத்துவதற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட வேண்டும். தொற்றுநோய்களின் போது இன்னும் பணக்காரர்களாக மாறியுள்ள பெரிய நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பெரும் செல்வந்தர்கள் இழப்பீடு இல்லாமல் பறிமுதல் செய்யப்பட வேண்டும். எனவே இந்த பில்லியன் கணக்கான செல்வங்கள் மக்களின் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் காலநிலை மாற்றத்தை கையாள்வதற்கும் பயன்படுத்தப்படலாம்.

சமுதாயத்தின் சோசலிச மாற்றத்தின் மூலம் மட்டுமே காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தையும் பாதுகாப்பான மற்றும் நியாயமான வாழ்க்கையையும் வெல்ல முடியும்.

Loading