ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்தம் செய்யும் இலங்கை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஒரு வேலைத் திட்டம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இலங்கை, அரசாங்க பாடசாலை ஆசிரியர்களின் “இணையவழி கற்பித்தல்” வேலைநிறுத்தம் இப்போது அதன் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. ஆசிரியர்கள் தற்போதுள்ள “சம்பள முரண்பாடுகளை” அகற்றி, தங்களுக்குரிய சம்பள உயர்வு கோருவதோடு கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்தை (கே.என்.டி.யு.ஏ) இரத்துச் செய்ய வேண்டும் என்று கோருகின்றனர்.

இலங்கை ஆசிரியர் சங்கம் (இ.ஆ.ச.), இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் (இ.ஆ.சே.ச), ஐக்கிய ஆசிரியர் சங்கம் (ஐ.ஆ.ச.) மற்றும் பல தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள இந்த வேலைநிறுத்தத்தில் நாடு முழுவதும் சுமார் 200,000 ஆசிரியர்கள் பங்குபற்றுகின்றனர்.

ஜூலை 8 அன்று கொத்தலாவல பல்கலைக்கழக சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை பொலிசார் கொடூரமாக அடக்கிய பின்னர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இந்த 'இணையவழி கற்பித்தல்' நிறுத்தத்துக்கு அழைப்புவிடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டன. இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட பல ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு விமானப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.

ஜூலை 23 அன்று ஆசிரியர்கள் கொழும்பு செயலகத்திற்கு வெளியே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் [WSWS Media]

கே.என்.டி.யூ.ஏ. பாதுகாப்பு அமைச்சினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, ஆகஸ்ட் தொடக்கத்தில் விவாதிக்கப்படும். அது நிறைவேற்றப்பட்டால், இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள கே.என்.டி.யுவுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் உள்ள ஏனைய பல்கலைக்கழகங்களைப் போலவே அதிகாரங்கள் கிடைக்கும். அத்துடன் அது கட்டணம் செலுத்தும் படிப்புகள் மற்றும் பீடங்களை நிறுவ அனுமதிக்கப்படும்.

பொலிஸ் ஒடுக்குமுறை தொடர்பாக பரவலான எதிர்ப்பு வெளிப்பட்ட நிலையில், ஆசிரியர் தொழிற்சங்க அதிகாரிகளும் மற்றவர்களும் விடுவிக்கப்பட்டதுடன் ஆசிரியர்கள் தங்களது நீண்டகால கோரிக்கைகளை வெல்வதில் உறுதியாக இருப்பதால் தொழிற்சங்கங்கள் தேசிய வேலைநிறுத்தத்தைத் தொடர நிர்பந்திக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்புக் குழு (ஆ.மா.பெ.பா.கு.) மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க), ஆசிரியர்களின் தேசிய வேலைநிறுத்தம் ஒரு தீர்க்கமான திருப்புமுனையில் இருப்பதாக எச்சரிக்கிறது. இராஜபக்ஷ அரசாங்கம் வேலைநிறுத்தத்தை நிறுத்துவதற்கு உறுதியாக இருப்பதால், தொழிற்சங்கங்கள் தொழில்துறை நடவடிக்கையை மட்டுப்படுத்துவதோடு, ஆசிரியர்களால் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்று வலியுறுத்துவதுடன் போராட்டத்திற்கு முடிவுகட்டவும் கூட முயற்சிக்கின்றன.

ஜூலை 22 அன்று, 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மத்திய கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு பேரணியாக சென்றனர். சிரேஷ்ட அதிகாரிகளுடனான சந்திப்புக்கு ஆசிரியர் சங்கத் தலைவர்கள் வரவழைக்கப்பட்டனர். அதில் கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தொலைபேசி மூலம் பங்கேற்றார்.

இந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஸ்டாலின், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் தங்களது கோரிக்கைகள் சம்பந்தமான 'அமைச்சரவை பத்திரம்' குறித்து செவ்வாய்க்கிழமை கலந்துரையாடப்படும் என்று ஆசிரியர்களிடம் கூறினார். இதைத் தொடர்ந்து ஜூலை 30 அன்று ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவுடன் கலந்துரையாடல் நடைபெறும்.

2020 ஜனவரியில் ஆசிரியர்கள் ஒரு நாள் சுகயீன விடுமுறை வேலைநிறுத்தத்தை நடத்தியபோதும் இதேபோன்ற 'அமைச்சரவை பத்திரம்' அமைச்சரால் தயாரிக்கப்பட்டது. தொழிற்சங்க அதிகாரத்துவம் இது ஒரு வெற்றி என்று பாராட்டிய போதிலும், ஆசிரியர்களின் ஊதியங்கள் அல்லது நிலைமைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்று பின்னர் ஒப்புக் கொண்டது.

ஆசிரியர்களின் ஊதியத்தை ஏனைய அரசாங்க ஊழியர்களின் சம்பளத்துடன் ஒப்பிட்டு, “சம்பள முரண்பாடுகளை நீக்க” வேண்டுமென தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. ஆனால், ஒழுக்கமான, வாழ்க்கைக்கு ஏற்ற ஊதியத்திற்கான பொதுவான போராட்டத்தில், அனைத்து தொழிலாளர்களையும் ஒன்றிணைப்பதற்கு பதிலாக, தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை பிளவுபடுத்துகின்றன. அதேபோல், ஆசிரியர்கள் மத்தியில் வெவ்வேறு தொழிற்சங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டு, ஆசிரியர்களைப் பிளவுபடுத்துவதோடு அவர்களின் தர வேறுபாடுகளைத் தூண்டி விடுகின்றன.

இந்த அமைப்புகள், ஆசிரியர்களின் சேவையை ஒரு தனி “மூடிய சேவையாக” வகைப்படுத்த வேண்டும் என்றும், இது ஊதியங்கள் மற்றும் நிலைமைகளை மேம்படுத்தும் என்றும் கூறுகின்றன. முந்தைய அரசாங்கங்கள் தபால் சேவை போன்ற ஏனைய அரச துறைகளில் “மூடிய சேவைகளை” நிறுவியிருந்தாலும், தொழிற்சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களை ஏனைய அராசங்கத்துறை ஊழியர்களிடமிருந்து பிளவுபடுத்த இதைப் பயன்படுத்தின.

இப்போது ஆசிரியர் தொழிற்சங்கங்களின் தலைமைத்துவமும், தொழிற்சங்கங்ங்களும் ஒருபோதும் இவ்வாறு 'ஐக்கியமாக' இருந்ததில்லை என்று பெருமை பேசுகின்றன. தாம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவும் கோரிக்கைகளை வென்றெடுக்கவும் சிறந்த நிலையில் இருப்பதாக கூறிக்கொள்கின்றன. 1997 இல் தொழிற்சங்கங்கள் முதன்முதலில் 'சம்பள முரண்பாடுகளை' ஒழிக்க அழைப்பு விடுத்ததிலிருந்து, கடந்த 24 ஆண்டுகளாக, ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டங்களின் போது இந்த வாய்ச்சவடால்களை கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

அதிகளவில் அழுத்தம் கொடுப்பது அரசாங்கத்தை அடிபணிய வைக்கும் என்ற தொழிற்சங்கங்களின் கூற்றுக்களை ஆசிரியர்கள் நிராகரிக்க வேண்டும். உண்மையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பெரிதும் ஆழமடைந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் இராஜபக்ஷ அரசாங்கம், தொழிலாள வர்க்கத்தின் மீது மேலும் பெரும் தாக்குதல்களை கட்டவிழ்த்து விடத் தயாராகி வருகிறது.

ஜூலை 24 அன்று, ஊடகங்களுடன் பேசிய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, அரசாங்கம் தனது வருவாயில் 86 சதவீதத்தை அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிடுகிறது என்றும் ஆசிரியர்களின் ஊதிய உயர்வு “தொற்றுநோயால் தூண்டப்பட்ட பொருளாதார நெருக்கடியின் ஆழத்தைப் பொறுத்தவரை சாத்தியமற்றது” என்றும் கூறினார்.

அரசாங்கம் ஆசிரியர்களின் சம்பளக் கோரிக்கையை வழங்கினால், அது வரிகளை அதிகரிக்க வேண்டும் மற்றும் மக்கள் மீது சுமையை திணிக்க வேண்டும், என அறிவிப்பதன் மூலம், ஏனைய தொழிலாளர்களையும் ஏழைகளையும் ஆசிரியர்களுக்கு எதிராகத் தூண்டி விட அவர் முயற்சித்தார்.

எவ்வாறாயினும், பெரிய வணிகங்களுக்கு பெரும் வரி சலுகைகளையும் மலிவான மூலதனத்தையும் வழங்கும் அதே வேளை, இராஜபக்ஷ அரசாங்கம் ஏற்கனவே மக்கள் மீது பல்வேறு வரிகளை விதித்துள்ளது.

கடந்த வாரம், புதிதாக நியமிக்கப்பட்ட நிதியமைச்சரான பசில் ராஜபக்ஷ, அரச துறை செலவினங்களை வெட்டித்தள்ளவும், புதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டாம் எனவும் அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கொழும்பானது பிரமாண்டமான வெளிநாட்டு கடன்களை திருப்பிச்செலுத்தவும் அந்நிய செலாவணியை சம்பாதிப்பதற்குமான தீவிர முயற்சியில், இறக்குமதியைக் குறைத்து, தொழிலாளர்களை ஆபத்தான தொற்றுநோய்க்கு மத்தியில் வேலை செய்ய கட்டாயப்படுத்தியுள்ளது.

2019 இல் 166 பில்லியன் ரூபாயாக இருந்த கல்விக்கான பாதீட்டு ஒதுக்கீடு, இந்த ஆண்டு 126 பில்லியன் ரூபாயாக (630 மில்லியன் அமெரிக்க டாலர்களாக) குறைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த இலங்கை அரசாங்கங்கள் இப்போது மொத்த உள்நாட்டு வருமானத்தில் சுமார் 1.2 சதவீதத்தை மட்டுமே ஆண்டு கல்விச் செலவுக்கு ஒதுக்குகின்றன.

சமீபத்திய மாதங்களில், ஆயிரக்கணக்கான சுகாதார, தபால் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகள் மீதான அரசாங்கத்தினதும் பெருவணிகத்தினதும் தாக்குதல்களுக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை எடுத்துள்ளனர். ஏழை விவசாயிகள் மற்றும் மீனவர்கள் உட்பட மக்களின் ஏனைய பிரிவினர், அரசாங்கத்திடம் நிதி உதவி கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இந்த போராட்டங்கள் சர்வதேச அளவில் விரிவடையும் தொழிலாள வர்க்கத்தின் போராட்ட அலையின் ஒரு பகுதியாகும். அதன் சர்வதேச சகாக்களைப் போலவே, இராஜபக்ஷ நிர்வாகமும் அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பிற்கு ஜனநாயக விரோத நடவடிக்கைகளுடனும் ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வுடனும் எதிர்வினையாற்றுகிறது.

தொழிலாளர்கள் போராட்டத்திற்கு வருவதைத் தடுக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வதன் மூலம் தொழிற்சங்கங்கள் வெகுஜன எதிர்ப்பிற்கு பிரதிபலித்துள்ளன. தொழில்துறை நடவடிக்கைக்கு அழைக்க நிர்ப்பந்திக்கப்பட்ட போது, அவை அதைக் கட்டுப்படுத்தவும் பின்னர் அதைத் கவிழ்க்கவும் துரோகத்தனமாக செயற்பட்டு தங்கள் உறுப்பினர்களின் கோரிக்கைகளை காட்டிக்கொடுக்கின்றன.

இந்த அமைப்புகள், தொற்றுநோய்களுக்கு மத்தியில், தொழிலாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் பேராபத்துக்குள் தள்ளும் வகையில், பொருளாதாரத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்ற இராஜபக்ஷவின் கோரிக்கையை முழுமையாக ஆதரித்தன. ஆசிரியர் சங்கங்களும் இதேபோல், பாதுகாப்பற்ற நிலையில் பாடசாலைகளை மீண்டும் திறக்க ஆதரவளித்துள்ளன.

மே 27 மற்றும் ஜூன் 2 ஆகிய திகதிகளில், ஜனாதிபதி இராஜபக்ஷ அத்தியாவசிய பொது சேவைச் சட்டத்தை விதித்தார். இது 12 அரசாங்க நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களின் எந்தவொரு வேலைநிறுத்த நடவடிக்கையையும் எதிர்ப்புக்களையும் தடை செய்கிறது. இந்த அடக்குமுறை நடவடிக்கையை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அரசாங்கம் தொடர்ந்து புதுப்பித்து வந்த போதிலும், ஆசிரியர் சங்கங்கள் உட்பட எந்தவொரு தொழிற்சங்கமும் இதை எதிர்க்கவில்லை.

இந்த ஜனநாயக விரோத தாக்குதலுக்கு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முன்நிலை சோசலிசக் கட்சி போன்ற போலி இடது குழுக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே இதை எதிர்த்ததுடன் அதைத் தோற்கடிப்பதற்கான போராட்டத்திற்குத் தயாராகுமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தது.

கொத்தலாவலை பல்கலைக்கழக சட்டம் தொடர்பான ஆசிரியர் தொழிற்சங்கங்களின் இராணுவ எதிர்ப்பு தோரணை பாசாங்குத்தனமானதாகும். ஆசிரியர் தொழிற்சங்கங்கள், தீவு முழுவதிலும் உள்ள தங்கள் சகாக்களைப் போலவே, அடுத்தடுத்த அரசாங்கத்தின் இராணுவவாத நிகழ்ச்சி நிரலுக்கும், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான பல தசாப்த கால யுத்தத்திற்கும் சளைக்காது ஆதரவை வழங்கியுள்ளன.

கொழும்பின் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்துக்கும் வாழ்க்கை மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அரசாங்கத்திற்கும் முழு முதலாளித்துவ அமைப்பிற்கும் எதிரான ஒரு நனவான அரசியல் போராட்டம் அவசியமாகும். தொழிற்சங்கங்கள் அத்தகைய போராட்டத்திற்கு முற்றிலும் விரோதமானவை.

ஆசிரியர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டில் இருக்க அனுமதிக்க முடியாது. அவர்கள் தங்கள் போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினரையும், ஒடுக்கப்பட்டவர்களையும் பின்வரும் கோரிக்கைகளுடன் இலவச கல்வியைப் பாதுகாக்க அணிதிரட்டுவதற்காக ஒவ்வொரு பாடசாலையிலும் ஆசிரியர், மாணவர்-பெற்றோர் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்க ஆசிரியர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்:

  • வாழ்க்கைச் செலவுப் புள்ளிக்கு ஏற்ப ஆசிரியர்களின் குறைந்தபட்ச மாத ஊதியத்தை 60,000 ரூபாயாக உயர்த்து!
  • அனைத்து ஆசிரியர்களுக்கும் முழு ஓய்வூதியம்!
  • மொத்த உள்நாட்டு வறுமானத்தில் 10 சதவீதத்தை பொதுக் கல்விக்கு ஒதுக்கு!
  • அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இலவச கணினிகள் மற்றும் இணைய வசதிகள் வழங்கப்பட வேண்டும்!
  • பாதுகாப்பற்ற தொற்றுநோய் நிலைமையின் கீழ் பாடசாலைகளை மீண்டும் திறக்க வேண்டாம்!
  • குறைந்த வட்டி விகிதங்களுடன் போதுமான வீட்டு-கடன் வசதிகளை கொடு!

இந்த இன்றியமையாத கோரிக்கைகளை முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறையின் கீழ் பூர்த்தி செய்ய முடியாது. மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான பில்லியன் கணக்கான ரூபாய்களை, வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்த மறுத்து, பெரிய நிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் வங்கிகளை தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குவதன் மூலம் பெற முடியும். இந்தக் கொள்கைகளைச் செயல்படுத்த ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும். இந்த போராட்டத்தை சர்வதேச சோசலிசத்தின் ஒரு பகுதியாக மட்டுமே முன்னெடுக்க முடியும்.

தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியை கட்டியெழுப்புவதற்கான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுக்கும் போராட்டத்தின் பகுதியாகவே இலங்கையில் சோ.ச.க. இந்த வேலைத் திட்டத்தை முன்வைக்கின்றது.

ஜூலை 30 வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு, ஆசிரியர்களின் போராட்டத்திற்கான வேலைத் திட்டம் குறித்து ஒரு இணையவழி பகிரங்க கூட்டத்தை ஆசிரியர், மாணவர் மற்றும் பெற்றோர் பாதுகாப்பு குழு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்திலும் கலந்துரையாடலிலும் பங்கேற்குமாறு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை கேட்டுக்கொள்கிறோம்.

கூட்டத்திற்கு இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்.

Loading