கோவிட்-19 இந்தியாவில் மில்லியன் கணக்கானவர்களை கொன்றுள்ளதாகக் காட்டும் ஆய்வை மோடி அரசாங்கம் கோபத்துடன் நிராகரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 8, 2021, சனிக்கிழமை, இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரின், ஸ்ரீநகரில் ஒரு சுகாதார ஊழியர் ஒரு காஷ்மீரி சிறுவனுக்கு கோவிட்-19 பரிசோதனை செய்ய வாய் துடைப்பு மாதிரி எடுக்கிறார் (AP Photo/Dar Yasin)

இந்தியாவின் கோவிட்-19 இறப்புக்களின் உண்மையான எண்ணிக்கை, தற்போதைய உத்தியோகபூர்வ எண்ணிக்கை 419,000 ஐ விட 10 மடங்குகள் அதிகம் என்பதை நிரூபிக்கும் ஒரு விஞ்ஞானபூர்வ ஆய்வை இந்தியாவின் தீவிர வலதுசாரி பாரதிய ஜனதாக் கட்சி (BJP) அரசாங்கம் கோபத்துடன் நிராகரிக்கிறது.

வியாழக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில், நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம், அமெரிக்காவை தளமாகக் கொண்ட உலகளாவிய அபிவிருத்தி மையத்தின் (Center for Global Development) ஆய்வு “உண்மைகளின் அடிப்படையில் இல்லாமல்” “முற்றிலும் தவறாகவுள்ளன” என்று கோபத்துடன் நிராகரித்துவிட்டது.

உண்மையில், இந்தியாவின் கோவிட்-19 இறப்புக்களின் எண்ணிக்கை உத்தியோகபூர்வ எண்ணிக்கையை விட அதிவேகமாக அதிகரித்துக் கொண்டிருப்பதை நிரூபிப்பதில், ஜூலை 20 ஆய்வு, தொற்றுநோயியல் நிபுணர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பிற ஆராய்ச்சியாளர்களின் முன்னைய பல விசாரணைகளின் கண்டுபிடிப்புக்களை மட்டுமே உறுதிப்படுத்துகிறது.

பல தரவு தொகுப்புக்களின் விரிவான மதிப்பாய்வின் அடிப்படையில், ஏப்ரல் 2020 மற்றும் மார்ச் 2021 மாதங்களுக்கு இடைப்பட்ட நோய்தொற்றின் “முதல் அலை” காலத்தின் போது 1.5 முதல் 3.4 மில்லியன் வரை “அதிகப்படியான இறப்புக்கள்” நிகழ்ந்துள்ளதாக இந்த ஆய்வு மதிப்பிடுகிறது. கடந்த அக்டோபரில் இந்தியாவில் முதன் முதலில் அடையாளம் காணப்பட்ட டெல்டா திரிபு வகையினால் தூண்டப்பட்ட, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இன்னும் மிகுந்த பேரழிவுகரமான இரண்டாவது அலையின் போது, அநேகமாக 1.4 முதல் 2.4 மில்லியன் மக்களை கோவிட்-19 கொன்றுவிட்டது. ஆக மொத்தத்தில், வெறும் 15 மாதங்களில், 3.4 முதல் 4.7 மில்லியன் இந்தியர்கள் வைரஸால் இறந்துள்ளனர்.

“உண்மையான இறப்புக்கள்,” “பல மில்லியன்களாக இருக்குமே தவிர நூறாயிரங்களாக இருக்காது என்பது, பிரிவினைக்கும் சுதந்திரத்திற்கும் பின்னர் இந்தியாவில் ஏற்பட்ட மிக மோசமான மனித துயரமாகும்” என்று ஆய்வு முடிக்கிறது.

கோவிட்-19 என்பது ஒரு இயற்கையான நோய்க்கிருமி, ஆனால் இந்தியாவில் ஏற்பட்ட பேரழிவுகர உயிரிழப்பு என்பது மாநிலக் கொள்கையினால் ஏற்பட்ட விளைவாகும், அத்துடன் மனிதகுலத்திற்கு எதிரான ஒரு உண்மையான குற்றமாகும். இந்தியாவின் முதலாளித்துவ உயரடுக்கின் உத்தரவின் பேரில், வெளிப்படையாக எதிர்க்கட்சி தலைமையிலானவையும் உட்பட, தேசிய மற்றும் மாநில அரசாங்கங்கள், மனித உயிர்களைக் காப்பாற்றுவதை விட முதலீட்டாளர் செல்வத்தையும் பெருநிறுவன இலாபத்தையும் முறையாக பாதுகாப்பதில் மும்முரமாக இருந்து வருகின்றன. வைரஸை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான ஆதாரங்களை ஒன்றுதிரட்ட அவை மறுத்துவிட்டதுடன், அநேகமாக கடந்த 15 மாதங்கள் முழுவதுமாக அத்தியாவசியமல்லாத வணிகங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன.

மோடியால் முன்னெப்போதும் விதிக்கப்படாத “முழு அடைப்பு” மார்ச் 2020 பிற்பகுதியில் எதிர்பாராத வகையில் நான்கு மணி நேரத்திற்கும் குறைவான கால அவகாசத்தில் அமல்படுத்தப்பட்டது, அப்போது முறையான பாரிய பரிசோதனை மற்றும் தொடர்பு தடமறிதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள எந்த திட்டமும் இல்லை என்பதுடன், ஒரே இரவில் அனாதரவாக கைவிடப்படும் மில்லியன் கணக்கான இந்தியர்களுக்காக முன்னேற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. இந்தியாவில் கோவிட்-19 நோய்தொற்றுக்கள் அதிகரித்துக் கொண்டிருந்தும், நாளாந்த நோய்தொற்றுக்களின் வீதம் செப்டம்பர் நடுப்பகுதியில் தொடர்ந்து கூர்மையாக மேல்நோக்கி அதிகரிக்கும் என்று அறிந்திருந்தும், பாஜக அரசாங்கம் ஒரே மாதத்திற்குள் அத்தியாவசியமல்லாத உற்பத்திகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை பெரிதும் குறைக்கத் தொடங்கியதுடன், ஜூன் மாத தொடக்கத்திலேயே இந்தியாவில் “முழு அடைப்பு,” இல்லை எனவும் அறிவித்தது.

இதேபோல, இந்த ஆண்டு பிப்ரவரி நடுப்பகுதி முதல் இரண்டாவது அலை தோன்றுவதை அதிகாரிகள் அப்பட்டமாக புறக்கணித்தனர். அடுத்து ஏப்ரலில், முன்நிகழ்ந்திராக வகையில் நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் சுனாமியால் இந்தியாவின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறை நிலைகுலைந்துபோன நிலையில், மோடி தனது அரசாங்கத்தின் நோக்கம் “இந்தியாவை முழு அடைப்பிலிருந்து காப்பாற்றுவதே,” தவிர வைரஸிலிருந்து அல்ல என ஒளிபரப்புக்களில் அறிவித்தார்.

இந்த தொற்றுநோய் இந்தியாவின் முதலாளித்துவ “எழுச்சியின்,” யதார்த்தத்தை வெறுமனே வெளிப்படுத்தியுள்ளது, எனவே மேற்கத்திய ஊடகங்களில் அடிக்கடி கொண்டாடப்படுகிறது. கோவிட்-19 ஆல் மில்லியன் கணக்கான இந்தியர்கள் இறந்துவிட்டனர், பல மில்லியன் பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர், மேலும் 230 மில்லியன் மக்கள் தீவிர வறுமைக்கு ஆளாகி, ஒரு நாளைக்கு 375 ரூபாய்க்கும் (5 அமெரிக்க டாலர்) குறைந்த வருமானத்துடன் வாழப் போராடுகிறார்கள் என்றாலும் கூட, இந்தியாவின் கோடீஸ்வரர்கள் 2020 ஆம் ஆண்டில் அவர்களது ஒட்டுமொத்த செல்வம் 597 பில்லியன் டாலர்களாக கிட்டத்தட்ட இரட்டிப்பாவதைக் கண்டனர்.

உலகளாவிய அபிவிருத்தி மையத்தின் ஆய்வை மோடி அரசாங்கம் கடுமையாக கண்டித்தது, மற்றும் பெருநிறுவன ஊடகங்கள் அதை மிகக் குறைவாக பரப்பின, ஏனென்றால் இந்தியாவின் கோழைத்தனமான உயரடுக்கு வரவிருக்கும் கணக்கீடுகளுக்கு அஞ்சின. தொற்றுநோய் விவகாரத்தை அதிகாரிகள் கையாண்ட விதம் குறித்து உறுதியாக பொதுமக்கள் கோபம் வெடிக்கும் என்பதை இது நன்கு அறிந்திருந்தது. வாகனத் தொழிலாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், பொதுத்துறை ஊழியர்கள், விவசாயிகள் மற்றும் பலரும், மனித உயிர்களை பாதுகாப்பதை விட பெருநிறுவன இலாபங்களுக்கு முன்னுரிமை அளிப்பதை எதிர்க்கவும், மற்றும் அரசாங்கத்தின் பெருவணிக சார்பு சிக்கனக்கொள்கை மற்றும் கட்டுப்பாடுகளை நீக்கும் திட்டநிரலை எதிர்க்கவும் என சமீபத்திய மாதங்களில் வேலைநிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர்.

மோடி அரசாங்கமும் அதன் பாதுகாவலர்களும், வெளிப்படையான பொய்களைக் கூறுவது உட்பட, உலகளாவிய அபிவிருத்தி மையத்தை இழிவுபடுத்தும் அருவருப்பான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

“இந்தியாவின் உறுதியான மற்றும் சட்ட அடிப்படையிலான இறப்பு பதிவு முறையைப் பொறுத்தவரை, இறப்புகளைத் தவிர்ப்பது சாத்தியமில்லை,” என்று ஆய்வு குறித்த அரசாங்க அறிக்கை வலியுறுத்தியது. இது முட்டாள்தனம் என்று அனைவருக்கும் தெரியும். இரண்டாவது அலையின் உச்சத்தில், நாடெங்கிலுமான தகன மையங்களில் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கையை விட பல மடங்குகள் அதிக விகிதத்தில் சடலங்களுக்கு தகனம் செய்யப்பட்டன. நூற்றுக்கணக்கான சடலங்கள் கங்கை கரையில் தற்காலிக கல்லறைகளில் புதைக்கப்பட்டன, மேலும் மற்றவை கங்கையில் மிதக்கவிடப்பட்டன.

மேலும், இந்தியா பல ஆண்டுகளாக இறப்புக்களை குறைத்துக் காட்டுவதில் இழிவாக நடந்துள்ளது. தொற்றுநோய்க்கு முன்னைய “சாதாரண” காலங்களில் கூட, மொத்த இறப்புக்களில் வெறும் 22 சதவீதம் மட்டுமே இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களில், இந்த விகிதம் 10 சதவீதத்திற்கும் குறைந்தது. 2019 ஆம் ஆண்டில் இறப்பு காரணத்திற்கான மருத்துவ சான்றிதழ் (MCCD) குறித்த அறிக்கையின் கண்டுபிடிப்புக்களை மேற்கோள் காட்டி, முன்னைய 27 ஆண்டுகளில், இறப்பு சான்றிதழ் வழங்கும் செயல்முறையில் முன்னேற்றம் மெதுவாக உள்ளது, அதாவது இந்த முன்னேற்றம் குறையும் வீதம் 12.7 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகியது என Times of India நாளிதழ் குறிப்பிட்டது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரையிலான சிவில் பதிவு முறையின் தரவுகளின்படி, மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திரா மாநிலங்கள் கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் முறையே 42 மடங்கு மற்றும் 34 மடங்கு அதிக இறப்புக்களை பதிவு செய்துள்ளன. ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் மே 2021 வரை தமிழ்நாடு 6.2 மடங்கு அதிகமான இறப்புக்களையும், கர்நாடகா 2021 ஆம் ஆண்டில் 5 மடங்கு அதிகமான இறப்புக்களையும் பதிவு செய்துள்ளன,” என்று ஹிந்து நாளிதழ் எழுதியது. மேலும், “2021 ஆம் ஆண்டில் முதல் ஐந்து மாதங்களில் நான்கு பெரிய மாநிலங்களில் பதிவான கோவிட்-19 இறப்புக்கள் சுமார் 46,000 என்பதற்கு மாறாக, 0.5 மில்லியனைத் தாண்டிவிட்டது,” என கட்டுரை தொடர்ந்து தெரிவித்தது.

இந்த மரணங்கள் அனைத்தும் கோவிட்-19 உடன் நேரடியாக தொடர்புடையவை அல்ல என்றாலும், அவை சட்டபூர்வமாக தொற்றுநோய் தொடர்புபட்ட மரணங்களாக விவரிக்கப்படலாம். அகமதாபாத்தில் உள்ள மேலாண்மைக்கான இந்திய நிறுவனத்தின் (Indian Institute of Management-IIM) உதவி பேராசிரியரும், The Age of Pandemics புத்தகத்தின் ஆசிரியருமான சின்மாய் தும்பே (Chinmay Tumbe), “அவை தொற்றுநோய் தொடர்புபட்ட (இறப்புக்கள்) தான், தொற்றுநோய் சுற்றிலும் இல்லாவிட்டால் அவற்றை நாம் அப்படி பார்க்க மாட்டோம்,” என்று விவரித்தார். (இந்திய மக்கள்தொகையில் 21 சதவீதத்தை உள்ளடக்கிய) இந்த நான்கு மாநிலங்களின் குறைத்து காட்டப்படுவதற்கான காரணிகளை கணக்கிட்டால் அது 10 க்கு அதிகமாகும், இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் ஒட்டுமொத்த இந்தியாவின் அதிகப்படியான இறப்புக்கள் 1.5 மில்லியனாக இருந்தது என பேராசிரியர் மதிப்பிட்டார்.

இறப்புக்கள் குறைத்து கணக்கிடப்படுவது குறித்து பொதுமக்கள் கோபம் வெடித்த பின்னர், கடந்த மாதம் சில கோவிட்-19 இறப்புக்களை சேர்த்துக்கொள்ள பல மாநிலங்கள் கட்டாயப்படுத்தப்பட்டன. ஒரு விவகாரத்தில், பீகார் ஜூன் முற்பகுதியில் நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் அதன் இறப்பு எண்ணிக்கையை ஒரே நாளில் சுமார் 4,000 ஆக அதிகரித்தது.

மோடி அரசாங்கம், அதன் மிகுந்த அருவருப்பான பொய்களில் ஒன்றாக, இந்தியாவின் சுகாதார அமைப்புக்களின் ஆக்சிஜன் பற்றாக்குறை தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது கோவிட்-19 இறப்புக்களுக்கு வழிவகுத்தது என்பதை மறுக்க இந்த வாரம் முனைந்தது. ஆக்சிஜன் தொடர்புபட்ட மரணங்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், இளைய சுகாதார அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், “ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்தவொரு இறப்பும் மாநிலங்களால் குறிப்பாக பதிவு செய்யப்படவில்லை,” என்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். உண்மையில், நோயாளிகள் குறித்த கிட்டத்தட்ட தினசரி அறிக்கைகள் வெளிவந்த நிலையில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உலகம் திகிலுடன் கண்காணித்து வந்தது, சில நேரங்களின் டஜன் கணக்கானவர்கள் இறக்கும் தறுவாயில் மூச்சுதிணறினர், ஏனென்றால், நாட்டின் இரண்டு பெரிய நகரங்களான டெல்லி மற்றும் மும்பையில் உள்ள முக்கிய மருத்துவமனைகள் உட்பட, ஆக்சிஜன் விநியோகம் நின்றுபோனது.

பெருநிறுவன கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்கள் உலகளாவிய அபிவிருத்தி மையத்தின் ஆய்வை பெரிதும் இருட்டடிப்பு செய்வதன் மூலம் மோடி அரசாங்கத்தின் உதவியை நாடின. Times of India நாளிதழ், அதன் பங்கிற்கு, “கோவிட்-19 இறப்புக்கள் மீதான விவாதத்தை “அரசியலாக்குவது” குறித்து வருந்தும் ஒரு தலையங்கத்தை வெளியிட்டதுடன், இந்த விவகாரம் பற்றி மேலும் ஆய்வு செய்ய ஒரு உடனடி முறையீட்டை முன்வைத்தது. Times நாளிதழ், முழு அடைப்பு, மற்றும் பெருவணிக செயல்பாடுகள் மீதான எந்தவித கட்டுப்பாடுகளுக்கும் எதிராக குரல் கொடுப்பதில் முன்னணி வகித்தது. மீண்டும் மீண்டும், பொருளாதாரத்தை தொடர்ந்து “திறந்து வைத்திருக்க” வலியுறுத்த, இந்திய ஆளும் உயரடுக்கு மற்றும் அதன் அரசாங்கங்களால், தம்மைத் தாமே பாதுகாத்துக்கொள்ள கைவிடப்பட்ட நூற்றுக்கணக்கான மில்லியன் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களின் மோசமான அவலநிலை இழிவாக பயன்படுத்தப்பட்டது.

இருந்தாலும், உலகளாவிய அபிவிருத்தி மையத்தின் ஆய்வு, இந்தியாவின் கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை மில்லியன் கணக்கில் அதிகரிப்பது குறித்த ஆதாரங்களை ஆரம்பத்திலிருந்தே சரியாக வழங்கவில்லை. இது இரண்டு காரணங்களுக்காக குறிப்பாக குறிப்பிடத்தக்கது மற்றும் அபாயகரமானது.

முதலாவது, அதன் விரிவான தன்மை காரணமாகும். இரண்டாவது, அதன் மூன்று இணை ஆசிரியர்களில் ஒருவரான அரவிந்த் சுப்பிரமணியன் 2014-2018 காலத்திலிருந்து மோடி அரசாங்கத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராவார் என்பதுடன், அதன் முதலீட்டாளர் சார்பு கொள்கைகளை எப்போதும் ஆதரிப்பவராவார்.

தொற்றுநோய் காலத்தின் போதான அதிகரித்து வரும் இறப்புக்கள் தொடர்புபட்ட தகவல்களை தொகுப்பதற்கு இந்த ஆய்வு மூன்று வேறுபட்ட அணுகுமுறைகளை பயன்படுத்தியது. முதலாவதாக, இது ஊடகவியலாளர்களும் பிற ஆராய்ச்சியாளர்களும் இறப்புக்கள் குறித்து தகன மையங்கள் மற்றும் கல்லறை தளங்களில் சேகரித்த தகவல்களுடன் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தது. இரண்டாவதாக, ஆசிரியர்கள் நோய்தொற்று இறப்பு விகிதங்கள் குறித்த உலக தரவுகளுடன் இந்தியாவின் சீரம் நோய்தாக்கம் தொடர்புபட்ட ஏராளமான ஆய்வுகளை ஒப்பிட்டுப் பார்த்தனர். மூன்றாவதாக, இறப்புக்கள் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய, இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (Center for Monitoring of the Indian Economy) மேற்கொண்ட தேசிய அளவிலான நேர்காணல்களை ஆராய்ச்சியாளர்கள் மதிப்பாய்வு செய்தனர். குறிப்பிடத்தக்க வகையில், மூன்று அணுகுமுறைகளுமே, மில்லியன்கள் கணக்கில் ஏராளமான கோவிட்-19 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளது என்ற ஒரே அடிப்படையான முடிவை நிரூபிக்கும் ஆதாரங்களைக் கண்டறிந்தன.

இந்தியாவின் உத்தியோகபூர்வ புதிய கோவிட்-19 நோய்தொற்றுக்களின் நாளாந்த எண்ணிக்கை மே மாத தொடக்கத்தில் 400,000 க்கு அதிகமாக இருந்தது சுமார் 40,000 ஆகக் குறைந்துள்ளது. ஆனால் பல வாரங்களாக நோய்தொற்று விகிதங்கள் இந்த மட்டத்தில் நீடித்ததாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பொது சுகாதாரத்திற்கான பிரவுன் பல்கலைக்கழக பள்ளியின் (Brown University School of Public Health) பேராசிரியர் ஆஷிஷ் ஜா, The Wire செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், இதற்கு இந்தியா பொருளாதாரத்தை “மீண்டும் திறப்பதும்” “வணிகங்கள் திறந்து வைக்கப்பட்டிருப்பதும்” தான் காரணம் என்று விவரித்தார். இது நோய்தொற்று “பரவுவதை தீவிரப்படுத்தும்,” என்ற நிலையில் “மூன்றாவது அலை” உருவெடுப்பதற்கான அடிப்படை சூழ்நிலையை அமைக்கும் என்றும் கூறினார். மேலும், சில மாவட்டங்களில் கோவிட்-19 பரிசோதனை 10 சதவீத நேர்மறை விகிதத்தை கொண்டிருப்பது, நோய்தொற்றுக்கள் மேலும் அதிகரிக்கும் என்பதற்கான அறிகுறியாகும் என்பதை ஜா சுட்டிக்காட்டினார்

ஜூலை 22 அன்று வெளியிடப்பட்ட சமீபத்திய தேசிய அளவிலான சீரோ கணக்கெடுப்பு தரவுகளின்படி, இந்தியாவின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் கொரோனா வைரஸூக்கு எதிரான நோயெதிர்ப்பிகளை (antibodies) கொண்டுள்ளனர். சில அரசாங்க ஆதரவாளர்கள் இது “சமூக நோயெதிர்ப்பு சக்தி” பெருக்கும் கொள்கையை இந்தியா சிறப்பாக செயல்படுத்துவதை சுட்டிக்காட்டுவதாக கூறுகின்றனர். இது, அரசாங்கத்தின் படுகொலை கொள்கைகளை முற்றிலும் பின்பற்றுவதால் சர்ச்சைக்குரியது. கணக்கெடுப்பு துல்லியமானது என ஒருவர் ஏற்றுக்கொண்டாலும், முற்றிலும் தேவையற்ற அனுமானங்களாக, டெல்டா மற்றும் பிற கடுமையான மற்றும் கொடிய திரிபு வகைகளை தடுப்பதற்கு நோயெதிர்ப்பிகள் திறன் வாய்ந்தவை என நிரூபிக்கும், இது அமெரிக்காவை விட மிக அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவின் 1.37 பில்லியன் மக்களில் 400 மில்லியனுக்கு அதிகமான மக்களுக்கு கோவிட்-19 நோய்தொற்று ஏற்படும் மற்றும் இறக்கும் அபாயம் உள்ளது என்பதைக் குறிக்கும்.

இன்றுவரை, ஒட்டுமொத்த இந்தியர்களில் 7 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே கோவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading