முன்னோக்கு

மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்: கோவிட்-19 இந்தியாவில் சுமார் நான்கு மில்லியன் மக்களை கொன்றுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவை தளமாகக் கொண்ட உலகளாவிய மேம்பாட்டு மையத்தின் (Center for Global Development) புதிய ஆய்வின்படி, இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய்க்கு பலியானவர்களின் உண்மையான எண்ணிக்கை மூன்று முதல் ஐந்து மில்லியன் ஆகும், இது உத்தியோகபூர்வ எண்ணிக்கையை விட பத்து மடங்கு அதிகமாகும். “உண்மையான இறப்புக்கள் பல மில்லியன்களாக இருக்குமே தவிர, நூராயிரங்களாக இருக்காது,” என அறிக்கை குறிப்பிடுவது, 'இது பிரிவினைக்கும் சுதந்திரத்திற்கும் பின்னர் இந்தியாவில் ஏற்பட்ட மிக மோசமான மனித துயரமாகும்.'

இந்த பாரிய இறப்பு எண்ணிக்கை மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாகும், இதில் முழு ஏகாதிபத்திய உலக ஒழுங்கும் சம்பந்தப்பட்டிருக்கிறது, அது இந்தியாவின் ஆளும் வர்க்கத்தை விடக் குறைவானது அல்ல. மேலும், இந்தியாவில் நோய்தொற்றுக்களும் இறப்புக்களும் மிகவும் குறைத்துக் காட்டப்படுவது பிற நாடுகளிலும் பிரதிபலிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. இதன் அர்த்தம், உலகளவில் தொற்றுநோய்க்கு பலியானவர்களின் உண்மையான எண்ணிக்கை, உத்தியோகபூர்வமாக 4.13 மில்லியன் என இருந்தாலும், அது 10 மில்லியனுக்கு அதிகமாக மற்றும் மிக அதிகமாக இருக்கும்.

ஏப்ரல் 24, 2021, இந்தியாவின் புது டெல்லியில் கோவிட்-19 ஆல் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் நடந்த காட்சி (AP Photo/Altaf Qadri)

செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ஆய்வு, ஏப்ரல் 2020 மற்றும் மார்ச் 2021 மாதங்களுக்கு இடையில் தொற்றுநோயின் “முதல் அலை”யின் போது இந்தியாவில் 1.5 மற்றும் 3.4 மில்லியன்களுக்கு இடைப்பட்ட எண்ணிக்கையில் “அதிகப்படியான இறப்புக்கள்” ஏற்பட்டிருக்கும் என மதிப்பிடுகிறது. நோய்தொற்றுக்களின் சுனாமியை எதிர்கொண்ட இந்திய மருத்துவமனைகள் நிலைகுலைந்து போன நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் “இரண்டாவது அலை”யின் போது நாளாந்த இறப்புக்களும் உச்சபட்சமாக இருந்தது. இந்த மூன்று மாதங்களில் அநேகமாக 1.4 முதல் 2.4 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர் என்ற நிலையில், இறப்பு விகிதம் முன்னைய காலத்தை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

கொரோனா வைரஸ் நோயறிகுறிகளை எதிர்த்துப் போராடுவதற்கான அடிப்படை மற்றும் தேவைப்படும் உபகரணங்களான ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் (Remdesivir) போன்றவை இருந்தும் கிடைக்கவில்லை. நோயாளிகளின் குடும்பத்தினர் இதுபோன்ற பொருட்களை அவர்களே கறுப்புச் சந்தையிலிருந்து வாங்குவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர், மேலும் பெரும்பாலும் தம்மைத் தாமே கவனித்துக் கொள்ளவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். மருத்துவமனைகளுக்கு வெளியே மக்கள் தங்கள் அன்புக்குரியவர்கள் இறந்து கொண்டிருக்கும்போது கூட உதவிக்காக அழும் படங்களும் வீடியோக்களும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் மனதில் நெருப்பாக பதியப்பட்டுள்ளன.

இந்தியாவின் மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் படுமோசமான சமூக நிலைமைகளால் இந்த பாரிய மரணம் எளிதாக்கப்பட்டது. இவர்கள் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக இருப்பதுடன், சுத்தமான தண்ணீர் கிடைக்காத மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாத நெருக்கடியான குடியிருப்புக்களில் வாழ்கின்றனர். இந்த நிலைமைகள் இருந்தாலும், தொற்றுநோய் முதலில் தோன்றியபோது, அதை கட்டுப்படுத்த தேவையான அனைத்து வளங்களையும் அரசாங்கம் ஒன்றுதிரட்டுவது மிக முக்கியமானதாக இருந்தது.

இந்த பேரழிவிற்கு மோடி அரசாங்கம் தான் பொறுப்பாகும். இதன் நடவடிக்கை, நிதிய உயரடுக்கின் செல்வத்தையும் சலுகையையும் பாதுகாக்கும் ஒரே நோக்கத்துடன் ஒவ்வொரு கட்டத்திலும் வழிநடத்தப்பட்டது. மார்ச் 24 அன்று தேசியளவிலான முழு அடைப்புக்கு திடீரென அழைப்பு விடுக்கும் வரை தொற்றுநோயை கட்டுப்படுத்த இது எதையும் செய்யவில்லை, வெறும் நான்கு மணி நேர அவகாசத்தில் இதற்கு உத்தரவிட்டது, மேலும் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு முன்னரே இது நீக்கப்பட்டது.

தனக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் உணவளிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட நூற்றுக்கணக்கான மில்லியன் முறைசாரா தொழிலாளர்களுக்கு பொருளாதார உதவி எதுவும் வழங்கப்படவில்லை, இது பெருமளவில் தொழிலாளர்களை கிராமப்புறங்களுக்கு இடம்பெயர தூண்டியதால், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் வைரஸ் பரவ ஏதுவானது.

கொரோனா வைரஸ் நோய்தொற்றுக்களும் இறப்புக்களும் அதிகரித்தபோதும், ஒரு ஆபத்தான மற்றும் கடுமையான தொற்றுநோயை பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளிலிருந்து நாட்டை “காப்பாற்ற” வேண்டும் என்று அறிவித்து, வணிகங்களை மீளத்திறந்து முன்னோக்கிச் செல்ல மோடி அழுத்தம் கொடுத்தார். இந்திய ஆளும் உயரடுக்கிற்காக பரிந்து பேசும் அவர், ஏப்ரல் 20 அன்று ஒரு தேசிய ஒளிபரப்பின் போது “இன்றைய சூழ்நிலையில், நாட்டை முழு முடக்கத்திலிருந்து நாம் காப்பாற்ற வேண்டும்!” என்று இழிவாக அறிவித்தார்.

இந்த பயங்கரமான இறப்பு எண்ணிக்கை இந்த அறிவிப்பின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது. உலகம் முழுவதிலுமான கோவிட்-19 இன் மிகப்பெரிய எழுச்சிக்கு மத்தியில், நோயை கட்டுப்படுத்த தேவையான அடிப்படை நடவடிக்கைகளிலிருந்து நாடு “காப்பாற்றப்பட்டது”, ஆனால் அதற்கு மில்லியன் கணக்கான உயிர்கள் விலைகொடுக்கப்பட்டது. Forbes பத்திரிகையின் படி, 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் கோடீஸ்வரர்களின் செல்வம் 596 பில்லியன் டாலராக கிட்டத்தட்ட இரட்டிப்பானது. அதே காலகட்டத்தில், அநேகமாக 230 மில்லியன் இந்தியர்களின் வாழ்வாதாரம் சூறையாடப்பட்டு, ஒரு நாளைக்கு 375 ரூபாய் (5 அமெரிக்க டாலர்) வருமானத்தைக் குறிக்கும் தேசிய வறுமைக் கோட்டிற்குக் கீழே அவர்கள் தள்ளப்பட்டனர்.

எவ்வாறாயினும், மனிதகுலத்திற்கு எதிரான இந்த குற்றத்திற்கான நேரடி பொறுப்பு ஒவ்வொரு முதலாளித்துவ அரசாங்கத்திற்கும், அதிலும் குறிப்பாக, அமெரிக்கா மற்றும் முக்கிய ஏகாதிபத்திய சக்திகளுக்கும் விரிவடைகிறது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த பாரிய நோய்தொற்றுக்கு, தொற்றுநோய் முதலில் தோன்றியபோது அதைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகளை நிராகரிக்க எடுத்த முடிவு தான் காரணமாகும், ஏனென்றால் இந்த நடவடிக்கைகள் பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கின் இலாப நலன்களுக்கு இடையூறாக இருந்தன.

பிப்ரவரி 28, 2020 அன்று, இந்தியாவில் மூன்று கோவிட்-19 நோய்தொற்றுக்கள் மட்டுமே இருந்தபோது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) நோய்தொற்றை கட்டுப்படுத்த உலகளவில் ஒருங்கிணைந்த அவசரகால நடவடிக்கைக்கு அவசர அழைப்பு விடுத்தது. “கொரோனா வைரஸூக்கான பதிலிறுப்பை ஒரு தேசம் தேசியளவில் ஒருங்கிணைக்க முடியாது,” என்றும் “வைரஸ் எல்லைகள் அல்லது விசா குடியேற்ற கட்டுப்பாடுகளுக்கு மட்டுப்படாது. உலகளாவிய போக்குவரத்து வலையமைப்பும் பொருளாதார ஒருங்கிணைப்பும் வைரஸை உலகளாவிய பிரச்சினையாக மாற்றியுள்ளது” என்றும் ICFI எழுதியது.

எவ்வாறாயினும், அமெரிக்க தலைமையிலான முக்கிய முதலாளித்துவ சக்திகள், அவசர நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, நிதியச் சந்தைகள் மற்றும் பணக்காரர்களின் பாரிய பிணையெடுப்புக்கு ஏற்பாடு செய்ய நெருக்கடியைப் பயன்படுத்தின. இதைத் தொடர்ந்து, தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்பச் செய்வது மற்றும் வைரஸை மேலும் பரவ விடாமல் தடுக்கும் அனைத்து தேவையான நடவடிக்கைகளை நீக்குவது குறித்த பிரச்சாரம் நடந்தது.

இதன் விளைவுகள் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, அமெரிக்காவில், 625,000 க்கு அதிகமானோர் இறந்துள்ளனர், என்றாலும் உண்மையான எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கு அதிகமாக இருக்கலாம். தொற்றுநோயை அதன் ஆரம்ப கட்டத்திலேயே ஒழிக்கத் தவறியது, இந்தியா உட்பட உலகம் முழுவதும் அது வேகமாக பரவுவதை உறுதி செய்தது.

மேலும், இந்த பெருமளவிலான உயிரிழப்பை முக்கிய முதலாளித்துவ அரசாங்கங்கள் தடுப்பூசிகளை பதுக்கி வைத்தமையால் உருவான “தடுப்பூசி தேசியவாத,” கொள்கை மேலும் தீவிரப்படுத்தியது. உலகின் முன்னணி மருந்து தயாரிப்பாளர்களில் ஒன்றான இந்தியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் தடுப்பூசி விகிதத்தில் பத்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. ராய்ட்டர்ஸ் இன் கோவிட்-19 தடுப்பூசி வழங்கல் கண்காணிப்பு பிரிவின் கருத்துப்படி, நாட்டின் 6.3 சதவீதம் பேருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது, இதன் பொருள் சுமார் 1.3 பில்லியன் மக்கள் புதிய மற்றும் மிகக் கொடிய திரிபு வகை வைரஸ்களால் இன்னும் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர்.

இந்தியாவில் நோய்தொற்றின் “இரண்டாவது அலை” உருவாக்கிய சமூக துயரத்தின் அளவு, எந்தவொரு பகுத்தறிவு சமூகத்திலும், ஒரு மிகப்பெரிய அளவிலான, உலகளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கு தூண்டியிருக்கும். இந்தியாவின் மாபெரும் உற்பத்தி திறன் நோயை எதிர்த்துப் போராடுவதற்கான உபகரணங்களையும் மருந்துகளையும் தயாரிப்பதற்கு திரும்பியிருக்க வேண்டும் என்பதுடன், நோயாளிகளை கவனித்துக் கொள்ள அவசரகால மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், பரிசோதிப்பவர்கள் மற்றும் தொடர்புத் தடமறிபவர்களின் ஒரு படை திரட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன், கடுமையான மற்றும் கொடிய நோயிலிருந்து தங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்க தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தவர்களுக்கு நிதி ஆதாரங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், அத்தியாவசியமல்லாத உற்பத்திகள் நிறுத்தப்பட்டு, தொழிலாளர்களுக்கும் பாதிக்கப்பட்ட சிறு வணிகங்களுக்கும் முழு பண இழப்பீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

படுகொலைகளை தடுக்க உலக சமுதாயத்தின் கூட்டு வளங்கள் திரட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக, ஏகாதிபத்திய அரசாங்கங்கள் அற்பமான நிதியுதவிகளையே வழங்கின. இராணுவ தளவாடங்கள் மற்றும் அணுவாயுதங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் டிரில்லியன்கள் செலவிடப்பட்டு வருகின்றன, அதேவேளை மில்லியன் கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்ற அநேகமாக எதுவும் வழங்கப்படவில்லை. மேலும் பன்னாட்டு நிறுவனங்கள், இலாபங்களை பிழிந்தெடுக்க உற்பத்தியைத் தொடர வலியுறுத்தின.

முதலாளித்துவ தன்னலக்குழுக்களைப் பொறுத்தவரை, மில்லியன் கணக்கான மக்களின் மரணம் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க தியாகமாக கருதப்பட்டது, மேலும் கருதப்படுகிறது.

சமூக படுகொலை குறித்த இந்த கொள்கைக்கு ஒரு கணக்கீடு இருக்கும். இந்த தொற்றுநோய், கணக்கிலடங்காத மில்லியன் கணக்கான மக்களின் மரணங்கள் மூலம், சமூக பொருளாதார வாழ்க்கையின் அனைத்து அம்சங்களும் இறுதியில் இலாபத்திற்கு கீழ்ப்படிந்தவை தான் என்பதை வெளிப்படுத்தியுள்ளது, மேலும் சுற்றுச்சூழல் பேரழிவு, உலகளாவிய தொற்றுநோய்கள் மற்றும் அணுவாயுதப் போர் ஆகியவை இருப்பிற்கான அச்சுறுத்தல்களுடன் வறுமை, பசி மற்றும் நோய் போன்ற சமூக துயரங்களையும் உருவாக்குகிறது.

எல்லா இடங்களிலும் தொழிலாளர்களின் நலன்கள் என்பது ஒரே மாதிரியானவையே என்ற உண்மையையும், அவர்களது நலன்களுக்காகவும், வாழ்க்கைக்காகவும் போராட, முதலாளித்துவ அமைப்பிற்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டம் தேவைப்படுகிறது என்பதையும் இது வெளிப்படுத்தியுள்ளது.

முதலாளித்துவத்தின் கீழ் எந்த முன்னேற்றத்தையும் காண முடியாத நிலையில், உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க விஞ்ஞான அடிப்படையிலான திட்டத்தை செயல்படுத்துவதற்கு, ஒரு சர்வதேச சமூக சக்தியாக அணிதிரட்டப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் தலையீடு தேவைப்படுகிறது. அதே நேரத்தில் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் என்பது, ஒரு சோசலிச முன்னோக்கால் உயிரூட்டப்பட வேண்டும், மேலும் தொற்றுநோய் மற்றும் தொற்றுநோய்க்கான பேரழிவுகர பதிலுக்கு பொறுப்புடைய சமூக ஒழுங்கு இரண்டையும் முடிவுக்கு கொண்டு வருவதற்கான போராட்டத்தில், இந்தியாவிலும் மற்றும் உலகெங்கிலுமாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை கட்டமைப்பதன் மூலம் அது முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.

Loading