புதிய கோவிட்-19 எழுச்சி வலுப்பெற்றுள்ள நிலையில், ஜெனரல் மோட்டார்ஸ் இரண்டாவது காலாண்டில் பாரிய இலாபங்களை அறிவிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இராட்சத வாகன உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் இரண்டாவது நிதியக் காலாண்டில் 2.8 பில்லியன் டாலர் அளவிற்கு இலாபமீட்டியுள்ளதாக புதனன்று அறிவித்தது. ஆய்வாளர்களின் எதிர்பார்ப்புக்களை தகர்த்த இந்த முடிவுகளைப் போல, போட்டி நிறுவனங்களான ஃபோர்ட் (Ford) கடந்த காலாண்டில் 1.1 பில்லியன் டாலர் அளவிற்கும், மேலும் ஸ்டெல்லாண்டிஸ் (Stellantis) முதல் அரையாண்டில் 7 பில்லியன் டாலர் அளவிற்கும் பெரும் இலாபங்கள் கிடைத்திருப்பதாக அறிவித்தன.

ஆர்லிங்டன், டெக்சாஸ் ஆலையில் பணிபுரியும் ஜெனரல் மோட்டார்ஸ் தொழிலாளர்கள் (ஆதாரம்: ஜெனரல் மோட்டார்ஸ் ஊடகம்)

இந்த நிதி முடிவுகள் அமெரிக்க முதலாளித்துவத்தின் தொடர்ந்து இலாபமீட்டும் வெறியை மேலும் நிரூபிக்கின்றன, இது எஞ்சியிருந்த அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டுவந்து 2020 இல் ஏற்பட்ட இழப்பை பெரிதும் மாற்றியமைத்தது, மேலும் மனித வாழ்க்கையை பாதித்தாலும், பொருளாதாரத்தை மீண்டும் திறக்கிறது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாம் காலாண்டின் போது, 3.2 மில்லியன் அமெரிக்கர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்தொற்று ஏற்பட்டது, மேலும் 50,000 பேர் அதற்கு பலியாகினர்.

வாகன உற்பத்தி நிறுவனங்களும் ஐக்கிய வாகனத்துறை தொழிற்சங்கமும் (United Auto Workers - UAW) ஆலைகளில் ஏற்படும் கோவிட்-19 தொடர்புபட்ட பாதிப்பின் அளவை மறைப்பதால், துல்லியமான எண்ணிக்கைகள் பொதுவாகத் தெரியவரவில்லை என்றாலும், வாகனத் தொழிலாளர்களிடையே ஏற்பட்ட நோய்தொற்றுக்கள் பல்லாயிரக்கணக்கில் அல்லாமல் ஆயிரங்களிலும், இறப்புக்கள் டஜன்களிலும் காட்டப்படுகின்றன.

அதே நேரத்தில், UAW இன் முழு உடந்தையுடன் ஜெனரல் மோட்டார்ஸும், ஏனைய வாகன உற்பத்தி நிறுவனங்களும், தொழிலாளர்களை அதிகப்படியான நேரம் வேலை செய்ய வைப்பதற்கான கொடூர நிலைமைகளை திணிப்பதோடு, உடல்நல பாதுகாப்பு அல்லது குழந்தை பராமரிப்புக்காக அதிக நேரம் செலவிடத் தேவையுள்ள தொழிலாளர்களுக்கு பதிலாக ஆயிரக்கணக்கான குறைந்த ஊதியம் பெறும் தற்காலிக தொழிலாளர்களை நியமிக்கின்றன.

நிறுவனத்தையும் அதன் போட்டியாளர்களையும் அவற்றின் பல ஆலைகளை ஒரே நேரத்தில் வாரக்கணக்கில் இயங்காமல் வைத்திருக்க நிர்ப்பந்தித்த உலகளவிலான மைக்ரோசிப் பற்றாக்குறை ஒருபுறம் இருந்தாலும், இலாபங்களில் கூர்மையான அதிகரிப்பு நிகழ்ந்தது. இருப்பினும், அதிக இலாபகரமான வாகன மாதிரிகளை, குறிப்பாக விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் பிக்கப் லாரிகளை உற்பத்தி செய்யும் வகையில் ஆலைகளுக்கு எஞ்சியிருந்த சிப் விநியோகத்தை மாற்றியதன் மூலம் இந்த தொழில்துறை பெரும்பாலும் இதற்கு ஈடுகொடுத்தது. மேலும், புதிய வாகனங்களின் தற்போதைய பற்றாக்குறை காரணமாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலையில் ஏற்பட்ட கூர்மையான அதிகரிப்பால் நிறுவனத்தின் நிதிப் பிரிவு பயனடைந்தது.

டெட்ராய்டை தளமாகக் கொண்ட வாகன உற்பத்தி நிறுவனம் அதன் விற்பனையை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. 126 சதவீத விற்பனை அதிகரிப்பு கொண்ட GMC Yukon, 90 சதவீத விற்பனை அதிகரிப்பு கொண்ட Chevy Suburban, மற்றும் 120.3 சதவீத விற்பனை அதிகரிப்பு கொண்ட Cadillac Escalade போன்ற கார் வகைகள் உட்பட, டல்லாஸூக்கு அருகேயுள்ள தனது ஆர்லிங்டன் வாகன ஒருங்கிணைப்பு ஆலையில் தயாரிக்கப்பட்ட உயர்தர வகை கார் உற்பத்திகளால் ஜெனரல் மோட்டார்ஸில் மிகப்பெரிய இலாப எழுச்சி நிகழ்ந்தது. அதிகரித்தளவிலான விற்பனையும், இறுக்கப்பட்ட விநியோகமும், மொத்தமாக வாகனங்கள் விற்பனைக்கு வந்துசேர்ந்தவுடன் வியாபாரிகள் அவற்றை உடனடியாக விற்றுவிடும் சூழ்நிலைக்கு பங்களித்துள்ளன, இந்நிலையில் ஒரு வியாபாரி தனது “வருவாய் வீதம்” 12 நாட்களில் 112 சதவீதத்திலிருந்து 90 சதவீதமாக குறைந்துவிட்டது என Detroit Free Press செய்தியிதழுக்கு தெரிவித்தார்.

இருப்பினும், பல சந்தர்ப்பங்களில் வாகன நிறுவனங்கள் சிப்புகள் இல்லாமலேயே ஆலைகளில் உற்பத்தியைத் தொடர்ந்தன, இதனால் சிப்புகளுக்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான முடிக்கப்படாத வாகனங்கள் வியாபாரிகளுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் கையிருப்பில் உள்ளன. ஆர்லிங்டனில் மட்டும் 10,000 வாகனங்கள் இருப்பது உட்பட, நாடு முழுவதும் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் ஆலைகளுக்கு வெளியே பல்லாயிரக்கணக்கில் அத்தகைய வாகனங்கள் கிடப்பில் போடப்பட்டிருப்பதாக Detroit Free Press கணக்கிட்டுள்ளது. மே மாதத்தில் வெளியான ஒரு உள்ளூர் செய்தி அறிக்கை, ஃபோர்ட் நிறுவனம் கென்டக்கியின் லூயிஸ்வில்லில் உள்ள தனது இரண்டு வாகன ஆலைகளில் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வந்ததைக் கண்டறிந்தது, அதாவது ஆலைகளிலிருந்து இதுவரை 53 மைல்கள் தொலைவிற்கு வாகனங்கள் மொத்தமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

ஜெனரல் மோட்டார்ஸின் வருவாய்கள் அதன் முதலீட்டாளர்களிடையே ஒளிமயமான நம்பிக்கையை உருவாக்க காரணமாக இருந்திருக்கும் என ஒருவர் எதிர்பார்க்கலாம். இது அதன் ஆண்டு இறுதி வருவாய் கணிப்புக்களையும் அதிகரித்தது, மேலும் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி மேரி பார்ரா ஒரு அறிக்கையில், நான்காவது காலாண்டில் சிப் பற்றாக்குறை சரிசெய்யப்படும் என்று தான் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

ஆனால் வோல் ஸ்ட்ரீட்டைப் பொறுத்தவரை, ஃபெடரல் ரிசர்விலிருந்து டிரில்லியன் கணக்கில் பணம் செலுத்தி உந்தப்பட்ட வரலாற்றிலேயே மிகப்பெரிய வாகன கையிருப்பு நிகழ்ந்துள்ள போதிலும், ஜெனரல் மோட்டார்ஸின் காலாண்டு சாதனை போதுமானதாக இல்லை. Barron ஐ பொறுத்தவரை, “ஜெனரல் மோட்டார்ஸின் வருவாய்கள் எதிர்பார்ப்புக்களை அழித்துவிட்டன. இதன் கையிருப்பு கல் போல வீழ்ச்சி காண்கிறது,” என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு, வாகன உற்பத்தியாளர் “10.5 பில்லியன் டாலர் நடுப்பகுதியிலிருந்து 12.5 பில்லியன் டாலர் நடுப்பகுதி வரை ஒரு முழு ஆண்டு இயக்க இலாப வழிகாட்டுதலையும் அதிகரித்தது, இது ஆண்டின் இரண்டாம் பாதியில் 4 பில்லியன் டாலர் வருவாய் நிகழ்ந்ததைக் குறிக்கிறது. இருந்தாலும், முதலீட்டாளர்கள் இன்னும் விரும்பினர்” என்று தெரிவித்தது.

வோல் ஸ்ட்ரீட் அதன் பங்குகளை 8 சதவீதத்திற்கும் அதிகமாகத் தேக்கி வைப்பதன் மூலம் நிறுவனத்தை தண்டித்தது, Barron இன் கருத்துப்படி, இது கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் ஒரு வருவாய் அறிக்கைக்கு கிடைத்த மோசமான பதிலடியாகும்.

முதலீட்டாளர்கள், தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டலை அதிகரிப்பதன் மூலம் இலாபங்களை அதிகரிப்பதில் எந்தவித தளர்வையும் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்ற செய்தியை அனுப்புகின்றனர். பைடென் நிர்வாகத்தால் மற்றும் மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களால், இலையுதிர் காலத்தில் நேரடி கற்பித்தலுக்காக பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டது உட்பட, எஞ்சியிருந்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் நீக்கப்பட்டதற்கு பின்னணியில் இது தான் முக்கிய கருத்தாக உள்ளது. டெட்ராய்டில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறிப்பாக தொழில்துறையினரை, அதிலும் குறிப்பாக தாய்மார்களை ஆலைகளுக்கு மீண்டும் வேலைக்குத் திரும்புமாறு கட்டாயப்படுத்துவது வாகனத் தொழில்துறைக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

தொழிலாளர்களைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டில் அவர்கள் எதிர்கொண்ட சமூக பேரழிவின் தொடர்ச்சியாகவே கடந்த மூன்று மாதங்களும் இருந்தன. வாகன நிறுவனங்களும் UAW உம், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) வழிகாட்டுதலை பின்பற்றி, வெப்பநிலை பரிசோதனைகள், சுத்தம் செய்து கொள்வதற்கான இடைவேளைகள், மாற்றுப் பணி நேரத்தின் போது சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் உலகளாவிய முகக்கவச பயன்பாட்டு தேவை போன்ற எஞ்சிய அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டுவர அறிவித்தன. எவ்வாறாயினும், நோய்தொற்றுக்களின் சமீபத்திய எழுச்சி UAW மற்றும் நிறுவனங்களை இந்த கடைசி நடவடிக்கையிலிருந்து பின்வாங்க நிர்ப்பந்தித்தது, முதலில், அதிகபட்ச நோய்தொற்று விகிதங்களைக் கொண்ட மாநிலங்களில் உள்ள தனி ஆலைகளில், பின்னர் இந்த வார தொடக்கத்தில் தேசியளவில் என இந்த நடவடிக்கை பின்வாங்கப்பட்டது.

Chevrolet Colorado மற்றும் GMC Canyon நடுத்தர அளவிலான லாரிகளை உற்பத்தி செய்யும் மிசோரியின் செயின்ட் லூயிஸ் நகருக்கு அருகிலுள்ள Wentzville வாகன ஒருங்கிணைப்பு ஆலை பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே உத்தியோகபூர்வமாக மீளச்செயல்படுத்திய ஆலைகளில் ஒன்றாகும். ஜெனரல் மோட்டார்ஸ் ஜூலை 12 அன்று ஆலையை மீண்டும் திறந்தது, அப்போது மாநிலத்தில் கொரோனா வைரஸின் புதிய எழுச்சி வெடிக்கும் என்பதில் ஏற்கனவே அது தெளிவாக இருந்தது, சமீபத்திய வாரங்களில் நிகழ்ந்த கடும் பாதிப்புகளில் இது அடங்கும். நிறுவனமும் UAW உம் ஜூலை 19 அன்று முகக்கவச பயன்பாட்டை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் ஒரு வாரம் காத்திருந்தன.

எவ்வாறாயினும், நடைமுறையில் பெரும்பாலும் அனைத்து கோவிட் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் புறக்கணிக்கப்பட்டதாக ஆலையிலுள்ள ஒரு தொழிலாளி உலக சோசலிச வலைத் தளத்தின் வாகனத் தொழிலாளர் செய்திமடலுக்கு (WSWS Autoworker Newsletter) தெரிவித்தார். “இது அபத்தமானது. ஆலை முழுவதும் எங்களிடம் இனிமேல் சுத்திகரிப்பான் இருக்காது. முகக்கவசத்தைப் பெற அனைவரும் ஒரே துடைப்பான் வழங்கும் பொறியைத் (napkin dispenser) தொடுகிறார்கள், கையுறைகள் கிடையாது, உங்களது பணியிடம் சுத்தப்படுத்தப்படமாட்டாது, வெப்பநிலை பரிசோதனை கிடையாது. இதுவொரு குழப்பமான சூழலே” என்று தெரிவித்தார்.

முகக்கவச பயன்பாடு பெயரளவில் தான் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். “நேற்று, நான் சிற்றுண்டி வாங்குவதற்குச் சென்றேன், அங்கு ஒரு இளைஞன் பொருட்களை நிரப்புகிறான்: அங்கு எவரும் முகக்கவசம் அணியவில்லை. வெளிப்புற ஒப்பந்தக்காரர்கள் இன்னும் இங்கு வேலை செய்கிறார்கள்: அவர்களும் முகக்கவசம் பயன்படுத்தவில்லை. இது குழப்பமாக உள்ளது. எவரேனும் உண்மையில் நோய்வாய்பட்டால் அல்லது இறந்தால் என்ன செய்வது? அதற்கு ஜெனரல் மோட்டார்ஸ் பொறுப்பாகுமா?” என்றும் கேட்டார்.

“தொழிலாளர்கள் வெளியேறும்போது முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய ஆலை மேலாளர் வாயிலில் நிற்பார் என்று அவர்கள் இன்று கூறினார்கள். மூன்று வாயில்களிலும் மேலாளர் எப்படி நிற்கப்போகிறார்? மாற்று பணி நேரத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதே இல்லை. அப்போது அவர்கள் கால்நடை மந்தைபோல் வெளியேறுகின்றனர்.”

நிறுவனமோ அல்லது UAW வோ ஆலையில் எந்தளவிற்கு உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்பட்ட கோவிட்-19 புதிய நோய்தொற்றுக்கள் இருக்கின்றன என்பது பற்றிய தகவல்கள் எதையும் வெளியிடுவதில்லை என்றும், “எங்கள் ஊமைக் குழு உறுப்பினர்கள் எதையும் கூறவில்லை” என்றும் அவர் கூறினார்.

எல்லா இடங்களிலும் இருப்பது போல, இந்த நெருக்கடியை மாநில அரசாங்கம் முற்றிலும் புறக்கணித்து வருவதாக அவர் கூறினார். மேலும், “எங்களது ஆளுநர் மிசோரி மாநில கண்காட்சியை நடத்துவதில் பெரிதும் அக்கறை காட்டுகிறார், இது மற்றொரு பாரிய நோய் பரப்புதல் நிகழ்வாக இருக்கும். அவரிடம் உள்ள ஆடுமாடுகள் மற்றும் பிற பிராணிகளை விற்பதற்கு அவர் முயலுகிறார். மேலும் [சிகாகோவின் திறந்தவெளி இசை நிகழ்ச்சியான] Lollapalooza நடந்ததும் பைத்தியக்காரத்தனமாக இருந்தது. 100,000 பேர் வருகையில் ஒவ்வொருவரும் தடுப்பூசி போடப்பட்டவர்களா அல்லது அவர்களுக்கு நோய்தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவர்களா என்பதைக் கண்காணிக்க அவர்களால் முடியவில்லை” என்றும் தெரிவித்தார்.

இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலத்தில் சமூக மற்றும் பொது சுகாதார பேரழிவு நிலவுகிறது. ஒரே மாதத்திற்குப் பின்னர் தொற்றுநோய் முடிந்துவிட்டது என அறிவித்து மக்கள் “[அவர்களது] முகக்கவசத்தை கழற்ற,” பைடென் அழைப்பு விடுத்தார், அப்போது புதிய கொரோனா வைரஸ் நோய்தொற்றுக்கள் நாளாந்தம் 100,000 க்கும் அதிகமாக கூர்மையாக அதிகரித்துக் கொண்டிந்தது குறிப்பிடத்தக்கது. இதனுடன் பைடென் ஒரு குறுகியகால நீட்டிப்பை வழங்கியிருந்ததான, கூட்டாட்சியின் மக்கள் வெளியேற்றத் தடை போன்ற தற்காலிக சமூக உதவியை முடிவுக்குக் கொண்டு வந்ததும் சேர்ந்து கொண்டது. இத்தகைய நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமின்றி வாகனத் தொழிலாளர்களை பெரிதும் பாதிக்கும், காரணம் இவர்களில் பலர் தொற்றுநோய்க்கு முன்னதாகவே வாழ்க்கையை சமாளிக்க இரண்டு அல்லது மூன்று வேலைகளைச் செய்து வந்தனர்.

உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், நாடு முழுவதும் உள்ள ஆலைகளில் ஏற்கனவே புதிய நோய்தொற்றுக்களின் வெடிப்பு நிகழ்ந்து வருகின்றன. மிசோரி, டென்னிசி மற்றும் டெக்சாஸ் போன்ற கணிசமான வாகன உற்பத்தி நடைபெறும் தென் மாநிலங்களில் நோய்தொற்றுக்களின் கூர்மையான அதிகரிப்பு இருந்து வருகிறது, மிச்சிகனும் இதில் பின்தங்கியிருக்கவில்லை. நேற்று, UAW லோக்கல் 1264 டெட்ராய்டின் வடக்கே ஸ்டெல்லாண்டிஸின் Sterling Stamping ஆலைக்குள் ஒரு புதிய கோவிட்-19 நோய்தொற்று இருப்பது பற்றி தொழிலாளர்களுக்கு பல மாதங்களில் முதல் முறையாக ஒரு குறுஞ்செய்தி எச்சரிக்கை அனுப்பியது.

“அவர்கள் தொழிலாளர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை,” என்று கென்டக்கியின் லூயிஸ்வில்லில் உள்ள ஃபோர்ட் ஆலை தொழிலாளி ஒருவர் வாகன உற்பத்தி நிறுவனங்கள் இலாபத்தில் புரளுவது பற்றி Autoworker Newsletter க்கு தெரிவித்தார். மேலும், “அப்படியிருக்குமானால், நிறுவனங்கள் அந்த இலாபங்களில் ஒரு பகுதியை தொழிலாளர்களின் உணவு, வாடகை மற்றும் பிற தேவைகளுக்காக கூடுதல் உதவியாக பகிர்ந்தளிக்கலாம். ஆனால் இது அபத்தமானதே” என்றும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், வாகனத் தொழில்துறை இலாபங்களில் UAW முக்கிய பங்கு வகித்துள்ளது, ஏனென்றால் இதன் உதவியில்லாமல் டெட்ராய்ட் வாகன உற்பத்தியாளர்கள் அத்தகைய முடிவுகளை வெளியிட்டிருக்க முடியாது. கூட்டு கோவிட்-19 பணிக்குழு போன்ற பெருநிறுவன அமைப்புகளின் உதவியுடன் உண்மையில் ஆலைகளில் கோவிட் நோய்தொற்று பரவுவது பற்றிய தகவல்களை மறைக்கும் அதேவேளை, UAW வாகனத் தொழில்துறையில் வர்க்கப் போராட்டத்தின் வெடிப்புகளை ஒடுக்கவும் தனிமைப்படுத்தவும் வேலை செய்துள்ளது.

ஒரு மாதத்திற்கும் மேலாக, வேர்ஜீனியாவில் நடக்கும் வொல்வோ டிரக் தொழிலாளர்களின் சக்திவாய்ந்த வேலைநிறுத்தப் போராட்டம் பற்றிய தகவல்கள் தொழிற்சங்கத்தால் முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டன, அதாவது வேலைநிறுத்தம் பற்றி மற்ற ஆலைகளில் உள்ள அதன் உறுப்பினர்களுக்குக் கூட தெரிவிக்கவில்லை. இருப்பினும், உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) மூலம் வேலைநிறுத்தம் பற்றி தெரியவந்தபோது, வொல்வோ தொழிலாளர்களுடனான கூட்டுப் போராட்டத்திற்கு வாகனத் தொழிலாளர்கள் உடனடியாக தங்கள் பெரும் ஆதரவை தெரிவித்தனர். உண்மையில், வேர்ஜீனியாவின் வேலைநிறுத்தம் பற்றிய செய்திகள் சில நாட்களுக்குப் பின்னர் தான் பெல்ஜியத்தில் உள்ள வொல்வோ வாகன ஆலைக்கு WSWS பிரச்சாரக் குழுவின் மூலம் தெரியவந்தது, பின்னர் ஆலையில் உள்ள வாகனத் தொழிலாளர்கள் தங்கள் வேலை வாரத்தை நீட்டிக்க நிறுவனமும் தொழிற்சங்கமும் வகுத்த ஒப்பந்தத்திற்கு எதிராக திடீர் வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டனர்.

UAW, தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்கு முன்னதாக நிராகரித்த ஒப்பந்தத்தின் மீது மீண்டும் அவர்களை வாக்களிக்க வைக்க கட்டாயப்படுத்துவதன் மூலம் வொல்வோ டிரக்ஸ் வேலைநிறுத்தத்தை இறுதியில் முடிவுக்குக் கொண்டுவந்தது, மறுவாக்குப்பதிவு 17 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

மார்ச் 2020 இல், மிச்சிகன், இந்தியானா மற்றும் ஒஹியோ மாநிலங்களில் உள்ள வாகனத் தொழிலாளர்கள் UAW ஐ மீறி திடீர் வேலைநிறுத்தங்களை நடத்தினர், இது ஏராளமான உயிர்களைக் காப்பாற்றும் வகையில் வாகனத் தொழிலின் தற்காலிக பணிநிறுத்தத்திற்கு வழிவகுத்தது. ஒவ்வொரு தொழிற்சாலையிலும் சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களின் வலையமைப்பை உருவாக்குவதன் மூலம் UAW இன் துரோகங்களுக்கு எதிராக ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பை வாகனத் தொழிலாளர்கள் தொடர்ந்து வளர்த்துக் கொள்ளாத வரை, வாகன நிறுவனங்களின் இலாபங்களுக்கு மனித உயிர்களை கீழ்ப்படுத்தும் நிலை தொடரும்.

Loading