கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு இலங்கை ஆளும் உயரடுக்கின் கொலைகார பிரதிபலிப்பை எதிர்த்துப் போராட நடவடிக்கை குழுக்களை உருவாக்குங்கள்!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ, வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயையும் அதன் கொடிய டெல்டா மாறுபாட்டையும் எதிர்த்துப் போராடுவதற்காக தேசிய முடக்கம் மற்றும் ஏனைய இன்றியமையாத நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுயாதீன மருத்துவ நிபுணர்கள் விடுத்த வேண்டுகோள்களை கடந்த வாரம் மீண்டும் நிராகரித்தார்.

இராஜபக்ஷ ஆட்சியும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், இந்தியா மற்றும் இன்னும் பிற நாடுகளில் உள்ள அதன் உலகளாவிய சமதரப்பினரைப் போல், மனித வாழ்க்கையை விட முதலாளித்துவ பொருளாதாரத்தை பராமரிப்பதற்கும் பெரும் வணிகங்களின் இலாபங்களை அதிகரிக்கச் செய்வதற்கும் முன்னுரிமை கொடுக்கின்ற அதே கொள்கையை பின்பற்றுகிறது.

ஆகஸ்ட் 14, 2021, சனிக்கிழமை, கொழும்பில் ஒரு வயதான முஸ்லீம் பெண்ணுக்கு அவரது வீட்டில் கொவிட்-19 க்கான தடுப்பூசியை இலங்கை இராணுவத்தின் மருத்துவப் படையினர் வழங்குகின்றனர். (A AP Photo/Eranga Jayawardena)

கடந்த வாரம், உலக சுகாதார அமைப்பு (WHO) அனுசரணையிலான மருத்துவ நிபுணர்களின் குழு, அரசாங்கத்திற்கு ஒரு அறிக்கையை சமர்ப்பித்து, அதன் பொருத்தமற்ற குறைந்தபட்ச கட்டுப்பாடுகள் காரணமாக 2022 ஜனவரிக்குள் ஒட்டுமொத்தமாக சுமார் 30,000 மரணங்களை ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.

'உயிர்களைக் காப்பாற்றுவதற்கே உடனடி முன்னுரிமை கொடுக்க வேண்டும்,' என்று கூறிய நிபுணர் குழு, 'அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து, மாவட்டங்களுக்கு இடையேயான பயணம் உட்பட நடமாட்டக் கட்டுப்பாட்டை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்' என்றும் 'குறுகிய காலத்திற்கு ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவதோடு' ஏனைய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள பரிந்துரைத்துள்ளது. இந்த திட்டங்கள், 2022 ஜனவரிக்குள் 18,000 உயிர்களைக் காப்பாற்ற உதவும் என்று அவர்கள் கூறினர். இதை அமுல்படுத்த தவறினால், அதிக சுமையை எதிர்கொள்ளும் நாட்டின் சுகாதார கட்டமைப்பு வீழ்ச்சியடைந்து பிரச்சினைகளை இன்னும் மோசமாக்கும் என்று அது எச்சரித்துள்ளது.

தொடர்ச்சியான வேண்டுகோள்கள் மற்றும் பெருகி வரும் வெகுஜன கோபங்களுக்கு மத்தியில், இராஜபக்ஷ அரசாங்கம் நேற்று முதல் சில மட்டுப்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளுடன் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கை விதித்துள்ளது. இது ஒரு முகத்தை காப்பாற்றிக்கொள்ளும் நடவடிக்கை மட்டுமே. இது பெரும் வணிகங்களின் நடவடிக்கைகளை பாதிக்காது.

கொவிட்-19 சம்பந்தமான மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் கூட, வரவிருக்கும் பேரழிவை சுட்டிக்காட்டுகின்றன. அதிகாரப்பூர்வ மரண எண்ணிக்கை ஆகஸ்ட் 1 முதல் 1,700 ஆல் அதிகரித்து 6,263 ஆகியுள்ளதுடன் அதே காலத்தில் நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை 50,000 ஆல் அதிகரித்து 362,074 வரை உயர்ந்துள்ளது.

எவ்வாறாயினும், அரசாங்கம் வேண்டுமென்றே பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கையை தேவையான அளவை விட குறைவாகவே முன்னெடுப்பதால், இந்த புள்ளிவிவரங்கள் உண்மையான சூழ்நிலையை துல்லியமாக வெளிப்படுத்துபவை அல்ல. சில மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் உத்தியோகப்பூர்வ புள்ளிவிவரங்களில் சேர்க்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்தே, ஒவ்வொரு முதலாளித்துவக் கட்சியும், அவற்றுக்கு வக்காலத்து வாங்கும் ஊடகங்களும், இலங்கையில் உள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-இடது குழுக்களுடன் இணைந்து, பொருளாதாரத்தை மீண்டும் திறப்பது உட்பட, கொரோனா வைரசுக்கான இராஜபக்ஷ அரசின் பிற்போக்கு பிரதிபலிப்பை ஆதரித்துள்ளன. இந்த அமைப்புகள், இப்போது சுகாதார துறையை குற்றவியல்தனமாக கையாள்வது சம்பந்த்தாக தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் நிலவும் கோபத்தை தணிப்பதன் பேரில் அரசாங்கத்தின் மீது கோழைத்தனமான விமர்சனங்களை முன்வைக்கின்றன.

அதன் சர்வதேச சமதரப்பினரைப் போலவே, இராஜபக்ஷ அரசாங்கமும் 'பொருளாதாரம் புதிய இயல்பு நிலையில் செயல்பட வேண்டும்' என்றும் மக்கள் 'வைரசுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்' என்றும் அறிவிக்கிறது. ஏப்ரல் மாதம், ஜனாதிபதி இராஜபக்ஷ, 'வளர்ந்துவரும் நாடுகளால் பொதுமுடக்கத்தை தாங்கிக்கொள்ள முடியாது' என்று அறிவித்தார்.

பொருளாதாரத்தில் தொற்றுநோயின் உலகளாவிய தாக்கம் இலங்கையை பாதிப்பதையிட்டு அரசாங்கம் பிரதானமாக கவலைகொண்டுள்ளது. ஏற்றுமதியும் வெளிநாட்டுப் பண வருகையும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன், சுற்றுலாத்துறை சரிந்துபோயுள்ளதோடு பொருளாதார வளர்ச்சி சீரழிந்துபோயுள்ளது.

இராஜபக்ஷ ஆட்சி மலிவான கடன் மற்றும் வரிச் சலுகைகளை வழங்கி பெரு வணிகர்களைப் பாதுகாக்க பில்லியன் கணக்கான ரூபாய்களை உட்செலுத்தியுள்ளது. கடன் தவணைத் தவறலின் விளிம்பில் தொங்கிக்கொண்டுள்ள கொழும்பு, தற்போதுள்ள கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக அதிக வெளிநாட்டு கடன்களைப் பெற்றுள்ள அதே நேரம், நெருக்கடியின் பொருளாதாரச் சுமையை மக்களின் முதுகில் சுமத்தி வருகின்றது.

ஒரு மாதகால பொதுமுடக்கத்துக்குப் பின்னர், கடந்த மார்ச் மாத நடுப்பகுதியில், ஏற்றுமதி உற்பத்தி செய்யும் ஆலைகளை, குறிப்பாக ஆடைத் தொழிற்சாலைகளை திறக்க அனுமதித்து, தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப நிர்ப்பந்தித்தனர். இந்த வேலைத் தளங்களில் குறைந்தபட்சம் அல்லது சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படாத காரணத்தால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டனர்.

இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில், அரசாங்கம் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட போதிலும், ஜூலை 5 அன்று அதை நீக்கியது. புதிதாக வளர்ந்து வருகின்ற, தொற்றின் ஆகத் தீவிரமாக பரவக்கூடிய டெல்டா மாறுபாடு பற்றிய எச்சரிக்கைகளை புறக்கணித்து, வீட்டில் இருந்து வேலை செய்யும் அனைத்து அரச ஊழியர்களையும் தங்கள் பணியிடங்களுக்குத் திரும்பும்படி ஜூலை 28 அன்று அது உத்தரவிட்டது.

கடந்த 18 மாதங்களில் சுற்றுலாத் துறையில் சுமார் அரை மில்லியன் தொழில்கள் அழிக்கப்பட்டுள்ளன. முறைசாரா தொழில்களிலும் இதே போன்ற எண்ணிக்கையிலான வேலைகள் இல்லாமல் போயுள்ளன. அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் ஆதரவுடன், பெரும் வணிகங்கள், தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களை மீறி, பல தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்து, ஊதியத்தை குறைத்துள்ளதுடன் வேலை நேரத்தை நீடித்துள்ளன.

இலங்கையின் மருத்துவமனைகள் மற்றும் அவ்வப்போது உருவாக்கப்பட்ட இடைநிலை கொரோனா வைரஸ் மையங்கள் ஏற்கனவே நிரம்பிவிட்டன. ஆயிரக்கணக்கான கொவிட்-19 நோயாளிகள் முறையான மருத்துவ பராமரிப்பு இல்லாமல் வீட்டிலேயே நடத்தப்படும் சிகிச்சையில் இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட மருத்துவமனை வார்டுகள் நரகமாகி வருகின்றன. நோயாளர்கள் தரையிலும் நடைபாதையிலும் படுத்திருப்பதோடு தூய்மையற்ற கழிப்பறைகளைப் பயன்படுத்துகின்றனர். அரச வைத்தியசாலைகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அதிக வார்டுகளை உருவாக்க வேண்டி இருப்பதால், வேறு நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் மரண ஆபத்தை எதிர்கொள்கின்றனர். மருத்துவ ஒக்ஸிஜன் பற்றாக்குறையாக உள்ளமை இன்னும் அதிகமான மரணங்களுக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது.

கொழும்பின் பிரதான சிறுவர் வைத்தியசாலையான சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளால் நிரம்பியுள்ளது. 'லேசாக' பாதிக்கப்பட்ட பிள்ளைகளை 'வீட்டு பராமரிப்பில்' வைத்திருக்க பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிள்ளைகள் இப்போது பல உடல் உறுப்புக்கள் வீக்கமடைகின்றமை (Multisystem Inflammatory Syndrome/MiS-C) போன்ற வேறு மரணகரமான நோய்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்பதே இதன் அர்த்தமாகும். தற்போது 34 பிள்ளைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுவதுடன் ஒருவர் இறந்துவிட்டார்.

கடந்த நான்கு தசாப்தங்களாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் திறந்த சந்தை கொள்கைகள் காரணமாக சீரழிந்து போயுள்ள நாட்டின் மட்டுப்படுத்தப்பட்ட பொது சுகாதார கட்டமைப்பு வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது. அதிக வேலை செய்யும் சுகாதார ஊழியர்கள் பாதுகாப்பான பணி நிலைமைகள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் போதுமான முகக்கவசங்களுக்காகக் கூட போராடுகிறார்கள். சுமார் 2,000 துணை சுகாதார பணியாளர்கள், 1,000 செவிலியர்கள், 600 குடும்ப சுகாதார பணியாளர்கள் மற்றும் பல வைத்தியர்களும் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சில மரணங்களும் பதிவாகியுள்ளன.

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல மருத்துவமனைகள், அவற்றின் பிரேத அறைகள் நிரம்பியுள்ளதாகவும், சடலங்களை வெளிப்புற உறைவிப்பான் பெட்டிகளில் சேமித்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளன. பல தகன சாலைகள் 24 மணி நேரமும் இயங்குகின்றன.

தொற்றுநோய்க்கான 'தீர்வு' 'தடுப்பூசியே' என்று ஜனாதிபதி இராஜபக்ஷ வலியுறுத்துகிறார். தொற்றுநோயை எதிர்ப்பதில் தடுப்பூசிகள் தீர்க்கமானவை என்றாலும், இராஜபக்ஷ 'தடுப்பூசி' மந்திரத்தை தொடர்ச்சியாக உச்சரிப்பது மக்கள் மீதான அனுதாபத்தினால் அல்ல. மாறாக, பொருளாதாரமும் இலாபம் ஈட்டும் செயற்பாடுகளும் தொடர்வதை உறுதி செய்வதற்காகவே ஆகும். இதுவரை, சுகாதார அதிகாரிகளால் மக்கள்தொகையில் 20 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட முடிந்துள்ளது.

மக்கள் தொகையில் பாதிபேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளிலும், டெல்டா மாறுபாடு உட்பட நோய்த்தொற்றுகள் வேகமாக பரவுவதோடு மரண எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை இராஜபக்ஷ அரசாங்கம் வேண்டுமென்றே புறக்கணித்து வருகிறது.

இலங்கையும் ஏனைய ஏழை நாடுகளும் மற்றொரு சிக்கலை எதிர்கொள்கின்றன: அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள இலாப வேட்கை கொண்ட மருந்து நிறுவனங்கள், இந்த வளர்ச்சியடையாத நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதை மட்டுப்படுத்துகின்றன.

ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புமாக இலங்கையின் பாராளுமன்ற 'எதிர்க் கட்சிகள்', கட்டவிழ்ந்து வரும் நெருக்கடியையிட்டு விழிப்படைந்து, கடந்த ஆண்டு பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவினால் அழைக்கப்பட்ட அனைத்துக் கட்சி மாநாடுக்குச் சென்று தங்களின் ஆதரவை வெளிப்படுத்தின. முன்கூட்டியே பொருளாதாரத்தை மீண்டும் திறந்து விடும் இராஜபக்ஷவின் அபாயகரமான நடவடிக்கையை அவர்கள் ஆதரித்தனர்.

கடந்த இரண்டு வாரங்களாக ஐ.ம.ச., ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி.யும் தேசிய முடக்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இது அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட போது, ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி. இப்போது மக்களை தனிமைப்படுத்திக்கொள்ள அழைப்பு விடுக்கின்றன. அனைத்து கட்சிகள், அனைத்து மதங்களைச் சேர்ந்த குருமார்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் கூட்டுப் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு இராஜபக்ஷவிடம் ஐ.தே.க. வேண்டுகோள் விடுக்கிறது. அத்தியாவசியமற்ற தொழிற்சாலைகளை மூட அவர்கள் முன்மொழியவில்லை. இந்த கட்சிகள் அனைத்தும் கட்டவிழ்ந்து வரும் சுகாதார மற்றும் சமூக நெருக்கடிகள் ஒரு சமூக வெடிப்புக்கு வழிவகுக்கும் என்று பீதியடைந்துள்ளன.

அதே நேரம், இராணுவம் மற்றும் அதிதீவிர வலதுசாரி சிங்கள பௌத்த அமைப்புகளை அடிப்படையாகக் கொண்ட ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கி இராஜபக்ஷ அரசாங்கம் வேகமாக நகர்கிறது. அரச துறையின் பெரும்பாலான தொழிலாளளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களுக்கு தடை விதிக்கும் கடுமையான அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டங்களை அரசாங்கம் விதித்துள்ள அதேவேளை, ஏப்ரல் முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நகர்வுகளை எதிர்க்கட்சிகள் எதுவும் எதிர்க்கவில்லை.

போலி-இடது முன்நிலை சோசலிசக் கட்சியானது பொதுமுடக்கத்தை விதிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. அதே நேரம், அது பெரும் நிறுவனங்களுக்கு 1 சதவீத வரி விதிக்கவும், தொற்றுநோயை சமாளிக்க ஒத்துழைப்பதற்காக கிராம மட்டத்திலான குழுக்களை உருவாக்கவும் கோரியுள்ளது. நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீன தலையீட்டையும் தடுப்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.

மனித உயிர்களை விட இலாபத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசாங்கத்தின் கொள்கைகளையும் அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுக்க எதிர்க்கட்சிகள் எடுக்கும் தீவிர முயற்சிகளையும் தொழிலாள வர்க்கம் தீர்க்கமாக நிராகரிக்க வேண்டும்.

ஒவ்வொரு வேலைத் தளத்திலும் தொழிற்சாலையிலும் உள்ள ஊழியர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்ப வேண்டும். குறித்த தொழிற்சாலைகளில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு இழப்பீட்டுடன், நாட்டின் அத்தியாவசியமற்ற அனைத்து உற்பத்திகளையும் நிறுத்தி, தேசிய பூட்டுதலை அவர்கள் கோர வேண்டும். அத்தியாவசிய வேலைகளில் ஈடுபடும் அனைத்து தொழிலாளர்களுக்கும் முறையான ஆரோக்கிய மற்றும் பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட வேண்டும்.

சுயதொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு போதுமானளவு வாழ்க்கைக்கு ஏற்ற உதவித்தொகையும் பிற தேவையான ஆதரவும் வழங்கப்பட வேண்டும். சுயதொழில் செய்யும் சிறு வணிகர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கும் போதுமான சமூக ஆதரவு வழங்கப்பட வேண்டும்.

புதிய உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை வழங்குவதன் மூலம் சுகாதாரத் துறையில் பாரியளவிலும் அவசரமாகவும் தேவைப்படும் திருத்த வேலைகளுக்கு பில்லியன் கணக்கான ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

சமீபத்திய வாரங்களில் சுகாதாரம், பெருந்தோட்டங்கள், ரயில் போக்குவரத்து மற்றும் கல்வித் துறைகளில் வேலைநிறுத்தங்கள், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பங்குபற்றும் 'இணையவழி கற்பித்தல்' வேலைநிறுத்தம் இப்போது அதன் இரண்டாவது மாதத்தில் நுழைந்துள்ளது. பல தசாப்தங்களாக திரண்டுவந்த சமூகப் பிரச்சனைகள் தொற்றுநோயால் மோசமடைந்துள்ள நிலையிலேயே இந்தப் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்தப் போராட்டங்களில் தொழிலாளர்கள் தங்கள் சமூக சக்தியை வெளிப்படுத்தி இருந்தாலும், அவர்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளிடம் இருந்து விலகி, இளைஞர்கள் மற்றும் ஏழைகளை மேற்குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளுக்காகப் போராடுவதன் பேரில் அணிதிரட்டுவதற்காக சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பி, அரசியல் முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

முதலாளித்துவ வர்க்கமும் அதன் அரசாங்கமும் இலாபத்தை அதிகரிக்கவும் வெளிநாட்டு கடன்களை திருப்பிச் செலுத்தவும் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வந்தாலும், பணம் இல்லை என்று கூறுகின்றன. கடந்த ஆண்டு, இலங்கையின் மிகப்பெரிய ஒன்பது நிறுவனங்கள் 80 பில்லியன் ரூபாய்களை (400 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) இலாபமாக சம்பாதித்துள்ள அதே நேரம், தொழிலாளர்கள் பேரழிவுகரமான சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றர். ஒவ்வொரு நாளும், பெரும் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் சேமித்துள்ள பெரும் இலாபங்களைப் பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. பணம் இருக்கின்றது.

பெரும் வணிகம் தடித்துப் பெருப்பதற்காக வழங்கப்படும் அனைத்து நிதிகளும் அவசர சுகாதார வசதிகளை கட்டியெழுப்பவும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு சமூக ஆதரவை வழங்கவும் திருப்பப்பட வேண்டும். வெளிநாட்டு கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சியானது (சோ.ச.க.) இந்த போராட்டங்கள் சோசலிச கொள்கைகளுக்கான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. பெரிய தோட்டங்கள், நிறுவனங்கள் மற்றும் வங்கிகளும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கப்பட வேண்டும். ஒரு சிலரின் இலாபத்திற்காக அன்றி, பெரும்பான்மையினருக்காக பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்கான ஒரே வழிமுறை இதுவே ஆகும். அத்தகைய வேலைத்திட்டத்திற்கு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராடுவது அவசியமாகும்.

இது ஒரு சர்வதேச போராட்டம் என்பதை சோ.ச.க. எப்போதும் விளக்கியுள்ளது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் தொற்றுநோய் என்பது உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியை ஆழப்படுத்திய ஒரு தூண்டுதல் நிகழ்வு என்று சுட்டிக்காட்டி வந்துள்ளன.

தொற்றுநோயை ஒழிப்பதற்கான போராட்டத்தில் விஞ்ஞான அறிவையும் வளங்களையும் திரட்டவதற்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த முயற்சி அவசியமாகும்.

அதனால்தான் ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியை உருவாக்க நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அழைப்பு விடுத்துள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி இலங்கையிலும் தெற்காசியாவிலும் இந்தத் வேலைத் திட்டத்திற்காகப் போராடுகிறது.

இந்த வேலைத் திட்டத்தைப் பற்றி கலந்துரையாடவும், தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுவை அமைக்கவும், இந்த சர்வதேச பிரச்சாரத்தை மேற்கள்ள முன்வருமாறும் சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.

Loading