போராட்டங்களை தடை செய்ய இலங்கை அரசாங்கம் கொரோனா வைரஸ் சட்டங்களைப் பயன்படுத்துகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஜூலை 6, அனைத்து போராட்டங்களுக்கும் கூட்டங்களுக்கும் தடை விதித்த இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, “கொவிட்-19 பரவுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை அவசியம்” என்று கூறிக்கொண்டார்.

தனியார்மயமாக்கல் எதிர்ப்பு போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரரை பொலிஸ் கைது செய்தபோது [Photo credit: Facebook] https://www.w

உண்மையில், இந்தத் தடையானது வளர்ந்து வரும் சமூக எதிர்ப்பு அலைகளை அடக்குவதற்காக இராஜபக்ஷ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு பெரிய தாக்குதலாகும். சமூக மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக சமீபத்திய வாரங்களில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் மீனவர்கள் சம்பந்தப்பட்ட வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு பதிலடியாகவே இது அறிவிக்கப்பட்டது.

தொற்றுநோயிலிருந்து மக்களைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்ற கூற்று பொய்யாகும். தொழிற்சாலைகளின் முழு செயல்பாட்டையும் அனுமதிக்கும் வகையில் இராஜபக்ஷ அரசாங்கம் மாதங்களுக்கு முன்பே பொருளாதாரத்தை மீண்டும் திறந்து விட்டுள்ளது. இந்த வேலைத் தளங்களில் சமூக இடைவெளி உட்பட குறைந்தபட்ச அல்லது எந்தவொரு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளும் செயல்படுத்தப்படுவது இல்லை. இதனால் தொழிலாளர்கள் நெரிசலான பேருந்துகள் மற்றும் ரயில்களில் வேலைக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதோடு இந்த நிலைமை வைரஸ் விரைவாக பரவுவதற்கு வழி வகுக்கிறது.

திங்களன்று கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் முன் உரையாற்றிய ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ, தற்போதுள்ள மட்டுப்படுத்தப்பட்ட சுகாதார கட்டுப்பாடுகளை கூட முற்றிலுமாக கைவிடப் போவதை சுட்டிக்காட்டினார்.

'கொவிட்-19 தொற்றுநோயை எதிர்கொள்ள உலகில் உள்ள ஒரே தீர்வு தடுப்பூசி தான்,' என்று அவர் கூறினார். 'செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டை முழுமையாக திறக்க முடியும். பொருளாதாரத்தை விரைவில் திறக்க முடியாவிட்டால், பொருளாதாரம் முன்னேற முடியாது,” என்று அவர் மேலும் தெரிவித்தார். ஆபத்தான டெல்டா மற்றும் லாம்ப்டா விகாரங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகையிலேயே அவரது கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பின்னர், பங்கேற்பாளர்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவதாக அறிவித்து, அனைத்து போராட்டங்களையும் நிறுத்துவதற்கு பொலிஸ் நடவடிக்கை எடுத்தது.

  • ஜூலை 7, கொழும்பில் உள்ள கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்திற்கு வெளியே, பொறியியல் கூட்டுத்தாபன உறுப்பினர்களின் கூட்டு ஊழியர் சங்கத்தின் ஒரு சிறிய ஆர்ப்பாட்டத்தை பொலிஸ் நிறுத்தியது. முன்நிலை சோசலிசக் கட்சியின் (மு.சோ.க.) தலைவர் துமிந்த நாகமுவ உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பல தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்தக் கோரியே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
  • அதே நாளில், கொழும்பு புறநகரில் உள்ள பமுனுகமவில் நடந்த பலமான 100 போராட்டங்கள் எனப்படுவதில், மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) கட்டுப்பாட்டில் உள்ள இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க மற்றும் மற்றொரு நபரையும் பொலிசார் கைது செய்தனர். முதுராஜவெ ஈரநிலங்களின் சுற்றுச்சூழல் அழிவை எதிர்ப்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
  • ஜூலை 8, தேசிய பாராளுமன்றத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள பத்தரமுல்லவில் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தை பொலிசார் வன்முறையில் அடக்கினர். இலவச கல்வியை தனியார்மயமாக்குவதையும் இராணுவமயமாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் (கே.என்.டி.யூ) சட்டத்தை எதிர்ப்பதற்காக இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (அ.ப.மா.ஒ.) தலைவர்கள் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட முப்பத்தொரு பேர் கைது செய்யப்பட்டனர்.
  • தெற்கு நகரமான அகுரெஸவில், எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு எதிராகவும், விவசாயிகளுக்கு உரங்களை கோரியும் நடந்த போராட்டத்தை பொலிசார் கலைத்தனர். இந்த பாய்ச்சலில் சில ஜே.வி.பி.இன் பிரதேச தலைவர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த இரண்டு நாட்களில் நடந்த சில அடக்குமுறை பொலிஸ் நடவடிக்கைகளே இவை. இந்த சம்பவங்கள் அனைத்திலும் பொலிசார் அதிகாரத்தைப் பயன்படுத்தினர். கைது செய்யப்பட்டவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள நீதிபதிகள் முன் கொண்டுவரப்பட்டு, பொலிசாரால் எதேச்சதிகாரமாக 14 நாட்களுக்கு பல்வேறு தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

கொழும்பில் கல்வியை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய வயதான பெண்களை பொலிசார் கொடூரமாக கைது செய்கிறார்கள் [Photo credit: Facebook]

தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டவர்களில் எவருக்கும் பி.சி.ஆர். அல்லது அன்டிஜன் பரிசோதனைகள் நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. பத்தரமுல்லவில் கைது செய்யப்பட்ட 31 பேர், 300 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள தீவின் வடக்கு மாகாணம், முல்லைத்தீவில் உள்ள ஒரு தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பப்பட்டனர்.

அடக்குமுறையை நியாயப்படுத்தி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, 'தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி எதிர்ப்பு தெரிவிக்கும் எவரையும் தொடர்ந்து கைது செய்வோம்' என்று நேற்று பாராளுமன்றத்தில் கூறினார்.

தீவில் அனைத்து ஆர்ப்பாட்டங்களையும் தடை செய்வதற்கான முடிவு 'அரசியல்வாதிகளால் எடுக்கப்படவில்லை' என்று வீரசேகர கூறினார். எவ்வாறாயினும், இத்தகைய கடுமையான கட்டளைகள், கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய மையத்தின் தலைவரும் ஜனாதிபதியும் இராணுவத் தளபதியும் அடங்கிய மிக உயர்ந்த மட்டங்களிலிருந்து மட்டுமே வர முடியும்.

அனைத்து எதிர்ப்புகளுக்கும் எதிரான தேசிய பாய்ச்சல் இராஜபக்ஷ அரசாங்கத்தால் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் சமீபத்தியதாகும்.

மே 27 மற்றும் ஜூன் 2, ஜனாதிபதி இராஜபக்ஷ, அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் கீழ், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஊழியர்களை உள்ளடக்கிய, கிட்டத்தட்ட அனைத்து அரச நிறுவனங்களிலும், வேலைநிறுத்தங்களை தடைசெய்தார். எந்தவொரு மீறலுக்கும் இரண்டு முதல் ஐந்து ஆண்டு வரை சிறைத்தண்டனை மற்றும் / அல்லது 2,000 முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

சமூக ஊடகங்களில் தணிக்கை செய்வதையும் அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ளது. ஜூன் 8, சமூக ஊடகங்களில் 'போலி செய்திகளை' வெளியிட்ட, பகிர்ந்து கொண்ட, பரப்பிய அல்லது உதவி செய்ததாகக் கண்டறியப்பட்ட எந்தவொரு நபரும் பினை இல்லாமல் கைது செய்யப்பட்டு தண்டனைச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார் என்று பொலிஸ் அறிவித்துள்ளது.

இராஜபக்ஷ அரசாங்கமும் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும் நாடு முழுவதும் அதிகரித்து வரும் வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஏனைய வகையான எதிர்ப்புகளுக்கு அஞ்சுகின்றன. சுகாதாரத் துறை, மின்சாரம் மற்றும் நீர் வழங்கள், கல்வி மற்றும் புகையிரத சேவையிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்ட போராட்டங்கள் சமீபத்திய வாரங்களில் வெடித்துள்ள அதேவேளை, பல்லாயிரக்கணக்கான செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக எதிர்ப்பு வேலைநிறுத்தங்களை நடத்தியுள்ளனர்.

தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் சம்பளப் பற்றாக்குறை, வேலைச் சுமை அதிகரிப்பு குறித்து அமைதியின்மை உருவாகி வருவதுடன் ஆடைத் தொழிற்துறைகளில் ஊழியர்கள் கொவிட்-19 தொற்றில் இருந்து பாதுகாப்பற்ற நிலைமைகளில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியாவில் உள்ள லங்கா தோட்டத் தொழிலாளர்கள் வேலை சுமைகளை அதிகரிப்பதைக் கண்டித்து நடத்திய போராட்டம் [Photo credit: Facebook/Malayaga Kuruvi]

இராஜபக்ஷ ஆட்சி உலகளாவிய தொற்றுநோயால் தீவிரமாக்கப்படும் பொருளாதாரச் சுமையை இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சுமத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

ஜூன் 28 அன்று, இலங்கையின் மத்திய வங்கி, மூன்று நாட்களுக்கு முன்னர் 23 பில்லியன் ரூபாயை அச்சிட்ட பின்னர், 208 பில்லியன் ரூபாயை (சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்) அச்சிட்டது. அதன் பாதீட்டு பற்றாக்குறையை நிரப்ப போதுமான வருமானம் அரசாங்கத்திற்கு இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதேபோன்ற பணவீக்க நடவடிக்கைகள் சமீபத்திய மாதங்களில் எடுக்கப்பட்டுள்ளன.

உரங்கள் உட்பட பல 'அத்தியாவசியமற்ற' பொருட்களின் இறக்குமதியை மத்திய வங்கியும் அரசாங்கமும் தடைசெய்துள்ளன; வெளிநாட்டு இருப்புக்களைப் பாதுகாக்கும் முயற்சியாக, பெட்ரோல் விலையை அதிகரித்ததுடன் வெளிப்புற கடன்களில் தவணைத் தவரலைத் தவிர்ப்பதற்காக அதிக கடன்களை வாங்கி வருகிறது. உர இறக்குமதி தடை மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பும் இலட்சக்கணக்கான விவசாயிகளை பெரிதும் பாதித்துள்ளது.

கடந்த வார இறுதியில் சண்டே டைம்ஸ் பத்திரிகை ஆளும் உயரடுக்கின் கவலைகளை வெளிப்படுத்தியது: 'பொருத்தமற்ற பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் விளைபயனற்ற நிர்வாகமும் வருமானங்களைத் தாழ்த்தி, அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகள் அதிகரிக்கச் செய்துள்ளதுடன் உணவு இருப்பு மற்றும் கிடைப்பதயும் குறைத்துள்ளதோடு வறுமை மற்றும் பட்டினியை தீவிரமாக்கியுள்ளது.'

வியாழக்கிழமை, பிரதான பாராளுமன்ற எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), எதிர்ப்புக்கள் மற்றும் கூட்டங்களுக்கு அரசாங்கம் விதித்த தடைக்கு எதிராக பாராளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. நேற்று, இது போராட்டக்காரர்கள் தனிமைப்படுத்தல் மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது சம்பந்தமாக நாட்டின் உயர் நீதிமன்றத்தில் ஒரு அடிப்படை உரிமை மீறல் வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

ஐ.ம.ச., அரசாங்கத்திற்கு விரோதமாக அதிகரித்து வரும் எதிர்ப்பை சுரண்டிக்கொள்ளவும் திசை திருப்பிவிடவும் முயற்சிக்கிறது. வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்த ஒரு பிரிவினரால் உருவாக்கப்பட்ட ஐ.ம.ச., தொற்றுநோயை 'தீர்க்க' உதவுவதன் பேரில் ஜனாதிபதியுடன் ஒரு அனைத்து கட்சி மாநாட்டிற்கு பலமுறை அழைப்பு விடுத்து, இராஜபக்ஷ அரசாங்கத்தின் கைகளை வலுப்படுத்த செயற்பட்டுள்ளது..

ஜே.வி.பி., போலி-இடது முன்நிலை சோசலிசக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களும், இதேபோல் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிடும் அதே அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றன. இந்த அமைப்புகள் முதலாளித்துவ முறைமையை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளன. வியாழக்கிழமை கே.என்.டி.யூ. மசோதாவுக்கு எதிராக மு.சோ.க., அ.ப.மா.ஒ. மற்றும் தொழிற்சங்கங்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் நோக்கம், அதற்கு எதிராக வாக்களிக்குமாறு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுப்பதே ஆகும்.

இலங்கையில் முதலாளித்துவ முறைமையை பேணிக்கொண்டு ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க முடியாது. சோசலிசத்திற்காக சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் முன்னெடுக்கும் அரசியல் போராட்டத்தின் ஒரு பகுதியாக மட்டுமே அவற்றைப் பாதுகாக்க முடியும். இந்த முன்நோக்குக்காகவே சோசலிச சமத்துவக் கட்சி போராடி வருகின்றது.

Loading