பைடெனின் ஆப்கானிஸ்தான் உரை: அமெரிக்காவின் குற்றகரமான போர் தோல்வியில் முடிகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திங்கட்கிழமை மதியம், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க-ஆதரவிலான கைப்பாவை அரசின் பொறிவுக்கு விடையிறுத்து தேசியளவில் தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஏற்பட்ட பேரழிவுகரமான வரலாற்று தாக்கத்தின் அளவு, இது பல விதங்களில் அதன் வியட்நாம் போர் தோல்விகளையே விஞ்சுகிறது என்கின்ற நிலையில், அந்த உரையிலும் வெளிப்பாட்டைக் கண்டது, அனேகமாக இதுவே ஓர் அரை நூற்றாண்டில் அமெரிக்க ஜனாதிபதி ஒருவரின் மிகவும் அப்பட்டமாக தோல்வியை ஏற்றுக் கொள்ளும் ஓர் உரையாக இருக்கலாம்.

பைடென் அமெரிக்க போரின் முட்டுச் சந்தை ஒப்புக் கொண்டார், நான்கு அமெரிக்க ஜனாதிபதிகள் அந்த மோதலை மேற்பார்வை செய்திருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், ஐந்தாவது ஜனாதிபதிக்கு அதைக் கொண்டு செல்ல மறுத்தார். இன்னும் எத்தனை அமெரிக்கர்களை ஆப்கானிஸ்தானில் உயிரிழப்பதற்கு அனுப்புவது என்றவர் வினவி, அந்த போர் மக்களிடையே ஆழமாக மதிப்பிழந்திருந்ததை அவர் நன்கு அறிந்திருந்தார் என்பதை எடுத்துக்காட்டினார்.

பைடென் அந்த உரையின் போக்கில், அமெரிக்கா எந்த சாக்குபோக்குகளின் கீழ் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்ததோ அவை பொய்களை என்பதை ஏறத்தாழ முழுமையாக ஒப்புக் கொண்டார். ஜனநாயகத்தை ஊக்குவிப்பதும் ஆப்கான் மக்களின் நல்வாழ்வுமே அமெரிக்க படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பின் மத்திய நோக்கம் என்று புஷ் நிர்வாகமும் ஒட்டுமொத்த ஊடகமும் வாதிட்டிருந்த நிலையில், அமெரிக்காவுக்கு அக்கறை இல்லை என்றவர் அறிவித்தார்.

“ஆப்கானிஸ்தானில் நமது செயல்திட்டம் ஒருபோதும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக இருக்கவில்லை,” என்றார். “அது ஒருபோதும் ஓர் ஒருங்கிணைந்த மத்தியமயப்படுத்தப்பட்ட ஜனநாயகத்தை உருவாக்குவதற்காக இருக்கவில்லை. ஆப்கானிஸ்தானில் நமது ஒரே முக்கிய தேசிய நலன் எப்போதும் என்னவாக இருந்துள்ளதோ இன்றும் அதுதான் இருக்கிறது, அமெரிக்க பெருநிலத்தின் மீது ஒரு பயங்கரவாத தாக்குதலைத் தடுப்பது.”

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், “பட்டினியில் இருந்து மக்களை' காப்பாற்றவும், “காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையிலிருந்து ஒரு தேசத்தை விடுவிக்கவும்' விரும்புவதாக கூறி ஆப்கானிஸ்தானில் போர் தொடங்கிய ஜோர்ஜ் டபிள்யு. புஷ்ஷின் வாதம் ஒரு பொய்யாகும்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தோல்விக்காக யார் மீதேனும் பழி சுமத்துவதானால், அது ஆப்கான் மக்கள் மீது தான் சுமத்தப்பட வேண்டும், அவர்கள் தான் அமெரிக்க இராணுவத்திற்கு நன்றி காட்டவில்லை என்றவர் வலியுறுத்தினார், அங்கே அது இரண்டு தசாப்தங்களாக படுகொலை செய்வதிலும், சித்திரவதை மற்றும் அவர்கள் மீது குண்டுவீசுவதிலும் செலவிட்டிருந்தது.

புஷ் நிர்வாகம் ஜனநாயகத்தை கட்டியெழுப்பவும் ஆப்கானிஸ்தான் மக்களுக்குச் செழிப்பை கொண்டு வரவும் முயல்வதாக பொய் கூறியதை பைடென் ஏறக்குறைய முழுமையாக ஒப்புக்கொண்ட போதினும், 9/11 தாக்குதல்களை அடுத்து பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்காக அமெரிக்க போர் தொடங்கப்பட்டது என்ற மற்றொரு பொய்யை அவர் இரு மடங்கு குறைத்துக் காட்டினார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தலையீடு, அந்நாட்டு மக்களுக்கு இந்தளவுக்குப் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ள அது, 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்படவில்லை, மாறாக 1978 இல் ஜிம்மி கார்ட்டர் ஜனாதிபதியாக இருந்த போது தொடங்கப்பட்டது. காபூலில் சோவியத் ஆதரவு அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சியாளர்களை அணிதிரட்டுவதன் மூலம் உள்நாட்டுப் போரை தூண்டிவிடும் முயற்சியாகவும், கார்ட்டரின் தலைமை மூலோபாயவாதி Zbigniew Brzezinski இன் வார்த்தைகளில் கூறினால் மாஸ்கோவுக்கு 'அதன் சொந்த வியட்நாமை' வழங்கவும் அது தொடங்கப்பட்டது.

இந்த கொள்கை ரீகன் நிர்வாகத்தின் கீழ் ஆக்ரோஷமாக முன்னெடுக்கப்பட்டது, இதன் சிஐஏ இயக்குனர் வில்லியம் கேய்சி அந்த சண்டையில் ஒட்டுமொத்த மத்திய கிழக்கில் இருந்தும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை நியமித்து ஆயுதமேந்த செய்ய சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தானை ஊக்குவித்தார், இது அல் கொய்தா மற்றும் ஒசாமா பின் லேடனின் வளர்ச்சிக்கு வழி வகுத்தது.

ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் பின்வாங்கியதும் மற்றும் சோவியத் ஒன்றியத்திற்குப் பின்னர், அதே நடைமுறைகளின் அடுத்த கட்டத்திலிருந்து தாலிபான் உருவானது. பாகிஸ்தான் அரசுடன் செயல்பட்டு, கிளிண்டன் நிர்வாகம் அந்த இஸ்லாமிய இயக்கத்தை ஸ்திரப்பாட்டுக்கான ஒரு படைபலமாகவும், மத்திய ஆசிய எண்ணெய் வளங்களை அமெரிக்கா அணுகுவதற்கு சாத்தியமான ஒரு வாகனமாகவும் ஊக்குவித்தது.

பைடென் இந்த முந்தைய வரலாறை வெளிப்படுத்தவில்லை என்றாலும், கடந்த இரண்டு தசாப்தகளில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஈடுபாடு குறித்து அவர் கூறியவை நான்கு நிர்வாகங்களது கொள்கைகளின் சுய-அம்பலப்படுத்தலுக்கு நிகராக இருந்தது.

அவர் அறிவித்தார், “நான் உங்களிடம் வெளிப்படையாக இருப்பேன் என்று அமெரிக்க மக்களுக்கு நான் எப்போதும் வாக்களித்திருந்தேன்.” இது, 2001 படையெடுப்புக்கான காரணங்கள் உள்ளடங்கலாக அந்த போர் குறித்து அமெரிக்க அரசு கூறியுள்ள ஒவ்வொன்றும் பொய் என்பதை அலட்சியத்துடன் சர்வசாதாரணமாக ஒப்புக் கொள்வதாகும்.

குறிப்பாக இந்த உரை ஒபாமா நிர்வாகம் மீது மறைமுகமாக மெல்லிய விமர்சனம் வைப்பதாக இருந்தது, அதே நிர்வாகத்தில் தான் பைடென் துணை ஜனாதிபதியாக இருந்தார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புகளின் அதிகரிப்புக்கு 2009 இல் அவரது சொந்த எதிர்ப்பை பைடென் மேற்கோளிட்டார், அது மொத்த அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கையை 100,000 ஆக உயர்த்தியதுடன், குறிப்பாக அப்பாவி ஆப்கான் மக்கள் பாதிக்கப்படுவதை அதிகரித்தது. அது அமெரிக்க சிப்பாய்கள் காயமடையும் எண்ணிக்கையையும் முன்னில்லாதளவில் அதிகரிக்க வழி வகுத்தது.

ஒபாமா ஆப்கானிஸ்தான் போரை ஆதரித்த அதேவேளையில், அவர் எல்லா போர்களையும் எதிர்க்கவில்லை என்றும், ஈராக் போர் போன்ற 'முட்டாள்தனமானதை' மட்டுமே எதிர்ப்பதாகவும் கூறி, 2008 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். தேர்ந்தெடுக்கப்பட்டதும், அவர் தனது போர்-எதிர்ப்பு பாசாங்குத்தனத்தை எல்லாம் கழற்றி எறிந்ததுடன், அவர் நிர்வாகம் அமெரிக்க வரலாற்றிலேயே முதல்முறையாக முழுமையாக இரண்டு பதவி காலங்களிலும் தொடர்ந்து போரில் இருந்த நிர்வாகமாக ஆனது.

பெருநிறுவன ஊடங்களோ சற்றே மூடிமறைத்த கோபத்துடன் பைடென் உரைக்கு விடையிறுத்தன. ஆப்கானிஸ்தான் தலையீட்டை பயங்கரவாதத்திற்கு எதிராக போராட, ஜனநாயகத்தைக் கட்டியெழுப்ப, பெண்களின் அந்தஸ்தை உயர்த்துவதற்கான ஒரு நடைமுறையாக ஊக்குவித்துள்ள ஊடகங்களே நீண்டகாலமாக மூடிமறைத்த உண்மைகளை அவர் அப்பட்டமாக ஒப்புக் கொண்டு விட்டார் என்பதன் மீது ஊடக பண்டிதர்களுக்குச் சங்கடம் உள்ளது.

நிச்சயமாக, ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா, யேமன் அல்லது சோமாலியாவில் அமெரிக்க குண்டுவீச்சுக்கள் மற்றும் டிரோன் ஏவுகணைகளால் எரித்து சாம்பலாக்கப்பட்ட பெண்களின் நிலைமை குறித்தோ அல்லது சவூதி அரேபியா மற்றும் வளைகுடா ஷேக் முடியாட்சிகள் போன்ற அமெரிக்க கூட்டாளிகளால் அவர்கள் கொடூரமாக நடத்தப்படுவதைக் குறித்து என்ன கூறுவது.

தலிபான் முன்னேறி வருவதிலிருந்து தப்பி ஓடிய ஆப்கானிய மொழிபெயர்ப்பாளர்கள், தூதரக பணியாளர்கள், அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு ஒத்துழைத்தவர்கள் மற்றும் இன்னும் ஏனையவர்களின் கதி குறித்து கடந்த வாரம் பெரும் ஆரவாரம் இருந்த நிலையில், ஆப்கான் கைப்பாவை ஆட்சியால் சிறையில் அடைக்கப்பட்டு சிஐஏ அல்லது அதன் கைக்கூலிகளின் சித்திரவதைக்கு உள்ளான பத்தாயிரக் கணக்கானவர்கள் குறித்து என்ன கூறுவது? ஒவ்வொரு மாகாண தலைநகரிலும் இருண்ட சிறையறைகளைத் தாலிபான் திறந்துவிட்டதே சமீபத்திய வாரங்களில் அது வேகமாக முன்னேறி வருவதில் முக்கிய அம்சமாகும், பக்ராம் விமானத் தளத்தில் அடைக்கப்பட்டிருந்த 5,000 கைதிகள் மற்றும் மத்திய காபூல் சிறையான Pul-e-Charkhi இல் 5,000க்கும் அதிகமானவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தான் பேரிடரின் அளவு தெளிவாகி வருகையில், ஞாயிற்றுக்கிழமை நியூ யோர்க் டைம்ஸ் பிரசுரித்த ஒரு தலையங்கம், பெண்களின் கதி மற்றும் அமெரிக்க ஆக்கிரமிப்பு ஆட்சியுடன் சேர்ந்து வேலை செய்தவர்களின் கதி என இரண்டு சாக்குபோக்குகளை வலியுறுத்தியது. டைம்ஸ் எப்போதும் செய்வதைப் போல, இத்தகைய மனிதாபிமான அக்கறைகளாக கூறப்படுவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இற்றுப் போன 'ஜனநாயக' பாசாங்குத்தனங்களுக்கு முட்டுகொடுக்கப் பயன்படுத்தப்பட்டன.

“ஆப்கானிஸ்தான் துயரம்' என்ற தலைப்பின் கீழ், அந்த பதிப்பாசிரியர்கள் போரின் விளைவை எண்ணிப் புலம்பினார்கள் ஏனென்றால் 'மக்கள் உரிமைகள், பெண்களை முன்னேற்றுவது மற்றும் மத சகிப்புத்தன்மை ஆட்சி என இந்த மதிப்புகளை' ஊக்குவிப்பதே அமெரிக்க விருப்பங்கள் என்பது 'சர்வசாதாரணமாக ஒரு கனவாகி விட்டது.” “அமெரிக்க படைகளுடன் இணைந்து செயல்பட்ட ஆப்கானியர்களின்' கதியைக் குறித்து வருந்திய அந்த தலையங்கம், “குறிப்பாக சமத்துவ முறைகளை ஏற்றிருந்த பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் கனவு கலைந்து போனது' குறித்தும் புலம்பியது.

அந்த போர் 9/11 தாக்குதலுக்கு விடையிறுப்பாக தொடங்கப்பட்டது என்றும் பின்னர் 'இரண்டு தசாப்த காலமாக அந்த தேசத்தைக் கட்டியெழுப்பும் திட்டமாக பரிணமித்ததாக' கூறும் வாதத்தை அந்த தலையங்கம் மீண்டும் பலமாக வலியுறுத்த சென்றது, இதை அது 'கவனமாக கர்வத்துடன் நடத்தப்பட்ட திட்டத்தின் கதை என்றாலும் சுதந்திரம் மற்றும் ஜனநாயக மதிப்புகளில் அமெரிக்கா வைத்துள்ள நம்பிக்கையை விரிவுபடுத்துவதாகவும்' இருந்ததாக குறிப்பிட்டது.

சொல்லப் போனால், 20 ஆண்டு கால போரின் போது 2 ட்ரில்லியன் டாலரை வீணடித்தமை, இராணுவ படைப் பலத்தைக் கொண்டு உலகைக் கைவரப் பெறுவதற்கான அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் 'நிரந்தர' பொறுப்புறுதிக்கு ஒரு சாட்சியாக இருந்தது. சமீபத்திய நாட்களில் ஆப்கான் ஆட்சியில் நிலவிய ஊழல் குறித்து முடிவின்றி செய்திகள் வண்ணம் இருந்தன —இப்போது அது பொறிந்து விட்டது— என்றாலும் இந்த போர் ஒரு பெரும் வெகுமதியாக இருந்த அமெரிக்க ஒப்பந்ததாரர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் இன்னும் அதிகமான ஊழலைக் குறித்து அங்கே குறைவாகவே செய்திகள் இருந்தன.

உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, இந்த போரில் 100,000க்கும் அதிகமான ஆப்கானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆனால் சந்தேகத்திற்கிடமின்றி இது பரந்த குறைமதிப்பீடாகும். அமெரிக்க இந்த போரை 'கிளர்ச்சி தடுப்பு' அணுகுமுறைகள் மூலமாக நடத்தியது, அதாவது, திருமண விழாக்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது குண்டுவீசுதல், டிரோன் படுகொலைகள், ஆட்கடத்தல்கள் மற்றும் சித்திரவதை என பயங்கரவாதத்தின் மூலமாக நடத்தியது. இந்த போரின் தலையாய அட்டூழியங்களில் ஒன்றாக, 2015 இல், அமெரிக்க போர் விமானம் ஆப்கானிஸ்தான் குண்டூஸில் உள்ள எல்லைகளற்ற மருத்துவர்களது மருத்துவமனை மீது அரை மணி நேரம் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது, அதில் 42 பேர் கொல்லப்பட்டனர்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்க அந்த போரில் தோற்றுவிட்டது என்ற உண்மை ஆப்கானிஸ்தான் துயரமல்ல, மாறாக வரலாற்றுரீதியில் ஒடுக்கப்பட்ட இந்த நாடு அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் கடுந்துயரங்களை எதிர்கொண்டது என்பதே ஆப்கானிஸ்தான் துயரமாகும்.

Loading