முன்னோக்கு

சிறைக் கம்பிகளுக்கு பின்னால் ஜூலியன் அசான்ஜூடன் கிரைக் முர்ரேயும் இணைகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

முன்னாள் பிரிட்டிஷ் இராஜதந்திரியும் இரகசிய செய்தி வெளியீட்டாளருமான கிரைக் முர்ரே, ஸ்காட்டிஷ் தேசியக் கட்சியின் (Scottish National Party-SNP) முன்னாள் தலைவர் அலெக்ஸ் சால்மண்டிற்கு எதிராக தோல்வியுற்ற பாலியல் வன்கொடுமை வழக்கில் சாட்சியங்கள் பற்றி அவர் கூறிய “முன்னுக்குப் பின் முரணான அடையாளங்கள்” குறித்து ஸ்காட்லாந்தில் எட்டு மாத கால சிறைத்தண்டனையை அனுபவிக்கத் தொடங்கியுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்தற்காக முர்ரே சிறையிலிடப்பட்டுள்ளமை, பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை அம்பலப்படுத்திய அவரது நீண்டகால நடவடிக்கைக்கான பதிலடியாகும்.

அவர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் எடின்பரோவில் உள்ள செயின்ட் லியோனார்ட் காவல் நிலையத்தில் தானாகவே சரணடைந்தார். உடல்நலக் காரணங்களுக்காக தண்டனையைக் குறைக்கக் கோரி செய்த முறையீடுகள் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து நீதிமன்றங்களால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட 62 வயதான அவர், ஆதரவாளர்கள் சூழ தனது மனைவி நதிரா மற்றும் அவர்களது இரண்டு இளம் குழந்தைகளை அப்போது தழுவிக் கொண்டார்.

மத்திய ஆசியா முதல் இலண்டனின் பெல்மார்ஷ் சிறைச்சாலை வரை நீடிக்கும் ஏகாதிபத்திய சக்திகளின் மனித உரிமை மீறல்களை முர்ரே அம்பலப்படுத்தியதற்காக 2002 இல் முதலில் பிரிட்டிஷ் அரசாங்கத்துனதும் அதன் உளவுத்துறை சேவைகளினதும் நீதித்துறையினதும் மற்றும் ஊடகங்களின் பகையை அவர் சம்பாதித்துள்ளார்.

2002 இல் உஸ்பெகிஸ்தானுக்கான பிரிட்டிஷ் தூதராக இருந்த முர்ரே, “பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்” ஒரு பகுதியான சித்திரவதையில் பிரிட்டிஷூம் அமெரிக்காவும் உடந்தையாக இருந்ததை அம்பலப்படுத்தினார். ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து ஓராண்டுக்குப் பின்னர், இஸ்லாம் கரிமோவின் (Islam Karimov) அமெரிக்க ஆதரவு ஆட்சியின் பரவலான சித்திரவதை நடவடிக்கைகளைப் பற்றிய இரகசியத்தை அவர் அம்பலப்படுத்தினார். இதில் “உடைந்த போத்தல்களைக் கொண்டு மிரட்டி கற்பழித்தல்; மூச்சுத் திணறடித்தல்; விரல் நகங்களை பிடுங்கி இழுத்தல்; மழுங்கிய பொருட்கள் கொண்டு கைகால்களை அடித்து நொறுக்குதல்; மற்றும் உடலை முழுவதுமாக மூழ்கடிப்பது உட்பட கொதிக்கும் திரவங்களை பயன்படுத்தித் தாக்குதல் ஆகியவை அடங்கும்.

செப்டம்பர் 11, 2001 பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னரான முர்ரேயின் அம்பலப்படுத்தல் நடைமுறையில் இருந்த நீண்டகால மூலோபாயத் திட்டங்களைக் குறுக்கறுத்தது. 9/11 தாக்குதல் வாரங்களுக்குள், உஸ்பெகிஸ்தான் பாதுகாப்புப் படைகளுக்கு அமெரிக்கா 79 மில்லியன் டாலர் நிதியளித்தது உட்பட, தெற்கு உஸ்பெகிஸ்தானில் அமெரிக்கா ஒரு இராணுவத் தளத்தை நிறுவ கரிமோவ் அனுமதித்தார். பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க உளவுத்துறைக்கு வழங்கப்பட்ட தகவல்கள் உட்பட, பொய்யான வாக்குமூலங்களைப் பெறவும், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான படையெடுப்பு மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும் சித்திரவதை பயன்படுத்தப்பட்டது.

பிரிட்டிஷ் மண்ணில் மாஸ்கோ “நோவிசோக்” விஷம் தயாரித்து பயன்படுத்தியுள்ளதாக நஞ்சூட்டப்பட்ட முன்னாள் ரஷ்ய இரட்டை முகவர்கள் சேர்ஜி ஸ்கிரிபாலும் மற்றும் அவரது மகள் யூலியாவும் வெளியிட்ட தெளிவற்ற கூற்றுக்களை பயன்படுத்தி ரஷ்யாவிற்கு எதிரான விரோதங்களை தீவிரப்படுத்த முனைந்த பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியத்தின் முயற்சிகளை அம்பலப்படுத்த முர்ரே தனது உளவுபார்ப்பு அறிவை 2018 இல் பயன்படுத்தினார்.

இடது, நீதிமன்ற அவமதிப்புக்காக சிறையிலிடப்பட்ட அதே நாளில் எடின்பரோவில் செயின்ட் லியோனார்ட் காவல் நிலையத்திற்கு வெளியே கிரைக் முர்ரேவும் அவரது குடும்பத்தினரும் நிற்கின்றனர். (Wikimedia Commons). வலது, ஜூலியன் அசான்ஜ்

ஆனால் 2019 ஆம் ஆண்டில் தான், துன்புறுத்தப்பட்ட விக்கிலீக்ஸ் ஸ்தாபகரும் ஊடகவியலாளருமான ஜூலியன் அசான்ஜை தனது வாதிடும் திறமையால் பாதுகாத்ததற்காக முர்ரே உலகளவில் முக்கியத்துவம் பெற்றார். ஏப்ரலில் இலண்டனில் உள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் இருந்து அசான்ஜ் ஒரு பொலிஸ் கைப்பற்றுதல் குழுவால் கைப்பற்றப்பட்டு, அமெரிக்க போர்க்குற்றங்களை அவர் அம்பலப்படுத்தியதற்காக உளவுச் சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றம்சாட்டப்பட்ட பின்னர், தனது நண்பரை பாதுகாப்பதற்கு முர்ரே இடையறாது பாடுபட்டார். CIA மேற்பார்வையிலான பிரிட்டிஷ் நீதித்துறை நடவடிக்கைகளின் பொய்கள், அழுக்கு மற்றும் பாசாங்குத்தனத்தை தகர்த்தெறிந்து, பெப்ரவரி மற்றும் செப்டம்பர் 2020 ஒப்படைப்பு விசாரணைகளின் போது அவர் வெளியிட்ட தினசரி அறிக்கைகள் மில்லியன் கணக்கானோரால் வாசிக்கப்பட்டன.

2020 ஆம் ஆண்டில், சால்மொண்டிற்கு எதிரான #MeToo பாணி நீதிமன்ற நடவடிக்கைகளை முர்ரே அம்பலப்படுத்தியமை, அவரை அமைதிப்படுத்தும் வாய்ப்பை ஆளும் வர்க்கத்திற்கு வழங்கியது. 2019 இல் ஸ்காட்டிஷ் அரசாங்கம் பொலிசாருக்கு அனுப்பிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் முன்னாள் SNP தலைவர் மீது கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. முர்ரே பின்னர், சால்மொண்ட் பாலியல் வன்கொடுமை செய்ததாக 2018 இல் ஸ்காட்லாந்து பத்திரிகைகளில் வெளியான செய்திகளுக்குப் பின்னணியில் முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜியோனின் (Nicola Sturgeon) தலைமை அதிகாரி லிஸ் லொயிட் (Liz Lloyd) இருப்பதாக “உச்சபட்ச உறுதியுடன்” அறிவித்தார்.

சுமார் 400 பொலிஸ் விசாரணைகள் உட்பட, சால்மொண்டிற்கு எதிராக சாட்சியமளிக்க பெண்களை ஊக்குவிக்க ஒரு பாரிய பொலிஸ் நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், நடுவர் மன்றம் அவரை விடுவித்தது. ஏனென்றால், சரிபார்க்க முடியாத, பெரும்பாலும் நம்பமுடியாத மற்றும் சில நேரங்களில் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாத கூற்றுக்களையே சாட்சியாளர்கள் முன்வைத்தனர். ஆனால் சால்மொண்ட் நிரபராதி என நிரூபிக்கப்பட்டாலும், சாட்சியங்கள் பற்றி முர்ரே “முன்னுக்குப் பின் முரணான அடையாளங்களை” கூறியதாக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர் அக்குற்றச்சாட்டை விரிவாக மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

முர்ரே சிறையிலிடப்பட்டுள்ளது ஜனநாயகத்தின் வீழ்ச்சியில் ஒரு அடுத்த மைல்கல்லாகும். சாலமொண்ட் விசாரணைக்கு தலைமை தாங்கி, பின்னர் முர்ரேவுக்கு தண்டனை விதித்த லேடி லியோனா டோரியன் (Lady Leeona Dorrian), பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நடுவர் மன்ற விசாரணைகளை இரத்து செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். மேலும், “எனது சிறைவாசம் நிரூபித்தது போல, எந்தவொரு தகவலும் ‘முன்னுக்குப் பின் முரணான அடையாளத்திற்கு’ பங்களிக்கும் பட்சத்தில் பிரதிவாதி தரப்பு தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத ஒரு சூழ்நிலையை பின்னர் நாம் எதிர்கொள்வோம் என்பதுடன், தீர்ப்பு முற்றிலும் நீதிபதி எவ்வாறு அதனை பார்க்கின்றார் என்பதையே சார்ந்திருக்கும்…” என்று முர்ரே ஞாயிற்றுக்கிழமை எழுதியது போல நிகழும்.

“கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு நடுவர் மன்றம் தீர்ப்பு அளிப்பதில் உள்ள உண்மைகளை ஆய்வு செய்யக் கோரும் உரிமை நமது மனிதநாகரிகத்தின் பெருமையாகும். இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் தயாரிப்பாகும். இதை அவ்வளவு எளிதில் தூக்கியெறிந்துவிட்டு, தன்னிச்சையான அரசு அதிகாரத்தின் ஒரு பாரிய விரிவுபடுத்ததால் பதிலீடு செய்ய முடியாது. இந்த நகர்வு நிச்சயமாக, பாதிக்கப்பட்டவரை எப்போதும் நம்ப வேண்டும் என்ற தற்போதைய நாகரீகமாக இருக்கும் அரசியல் கோட்பாட்டால் தூண்டப்படுகிறது. பொலிஸூம் முதல்நிலை பதிலளிப்பவர்களும் குற்றச்சாட்டுக்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆரம்பகட்ட அர்த்தத்திலிருந்து இந்த கூற்று உருவானது, கோட்பாட்டின் படி குற்றச்சாட்டே நிரூபணமாக உள்ளது என்பதுடன், ஆதாரங்கள் குறித்து கேள்வி எழுப்புவது கூட தவறு. அதாவது இது பொய்யான குற்றச்சாட்டுக்களை மறுப்பதற்கான சாத்தியத்தை நிச்சயமாக மறுக்கும்.”

சுவீடனில் அரசாங்கத்தால் புனையப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கள் மூலம் இலக்கு வைக்கப்பட்ட அசான்ஜை போல, அடிப்படை ஜனநாயக உரிமைகளை நசுக்க அரசாங்கம் பாலின அரசியலை பயன்படுத்தியதால் முர்ரே பாதிக்கப்பட்டவராவார். எல்லாவற்றிற்கும் மேலாக ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை அம்பலப்படுத்துபவர்களை மௌனமாக்குவதை இது நோக்கமாகக் கொண்டது.

சுயாதீனமான ஊடகங்களை இலக்கில் வைத்து முர்ரேவுக்கு தண்டனை வழங்கப்படுவது, அனைத்திற்கும் மேலாக ஒரு ஆபத்தான முன்மாதிரியை உருவாக்கியுள்ளது. நீதிபதிகளின் ஜூன் 8 நீதிமன்றத் தீர்ப்பு, “ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் விண்ணப்பதாரராக ஒருவர் எப்படி எழுதக்கூடாது என்பதில் நடைமுறை விதிகளையும் நெறிமுறைகளையும் கடைப்பிடிக்கும் பிரதான செய்தி ஊடகங்களிலிருந்து [முர்ரேயின்] நிலையை வேறுபடுத்துவது பொருத்தமானது” என்று வலியுறுத்தியது.

இது மோசமான பாசாங்குத்தனமாகும். ஒரு மில்லியன் பேரின் மரணத்திற்கு வழிவகுக்கும் வகையில் ஒடுக்கப்பட்ட நாட்டின் மீது சட்டவிரோதமாக போர் தொடுத்து, ஆக்கிரமிக்கவும் அழிக்கவும் பொய்களை பயன்படுத்தியதான ஈராக்கின் “பேரழிவுகர ஆயுதங்கள்” பற்றிய அரசாங்கத்தின் பிரச்சாரத்தை மறுசுழற்சி செய்கையில் பிரதான ஊடகங்கள் என்னவிதமான “நடைமுறை விதிகளையும்” “நெறிமுறைகளையும்” பின்பற்றின?

முர்ரேவின் சிறைவாசம் உளவுச் சட்டத்தின் கீழ் அசான்ஜ் குற்றவாளியாக்கப்பட்ட முன்மாதிரியை நீட்டித்துள்ளது. உலக முதலாளித்துவ ஒழுங்கின் வரலாற்று நிலைமுறிவைத் தூண்டிய ஒரு தொற்றுநோய்க்கு மத்தியில், ஆளும் வர்க்கம், மோசமான சமூக சமத்துவமின்மை, சிக்கனம், பொலிஸ் வன்முறை மற்றும் சர்வாதிகாரம், மற்றும் அதிகரித்து வரும் போர் முனைப்பு ஆகியவற்றுக்கு எதிராக பெரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பு வெடிக்குமோ என அஞ்சுகிறது.

2010 ஆம் ஆண்டில், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள், சித்திரவதை மற்றும் அரசு ஊழல் பற்றிய விக்கிலீக்ஸின் அம்பலப்படுத்தல்கள், தொழிலாள வர்க்கத்தினதும் ஒடுக்கப்பட்டவர்களினதும் பரந்த எதிர்ப்பு இயக்கங்களைத் தூண்டியதுடன், துனிசியாவில் அரபு வசந்த புரட்சிக்கு இட்டுச்சென்றது. ஆளும் வர்க்கம் அசான்ஜை ஒரு “உயர் தொழில்நுட்ப பயங்கரவாதி” என முத்திரைகுத்தி பதிலிறுத்தது, மேலும் முன்னாள் CIA இயக்குநர் லியோன் பனெட்டாவுடன் இணைந்து ஜோ பைடென், “மற்றவர்கள் இதைச் செய்ய வேண்டாம் என்ற ஒரு செய்தியை வழங்கவே” அசான்ஜ் இலக்கு வைக்கப்பட்டார் என்று ஜேர்மன் பொது ஒளிபரப்பு நிறுவனம் ARD க்கு தெரிவித்தார்.

“சித்திரவதைக்கு கூட்டுச் சதி செய்த பாதுகாப்பு சேவை குறித்து நான் இரகசிய செய்தி வெளியிட்டது மற்றும் விக்கிலீக்ஸ் மற்றும் ஏனைய இரகசிய செய்தி வெளியீட்டாளர்களுடன் எனது நீண்டகால ஒத்துழைப்பு ஆகியவை குறித்த அரசாங்கத்தின் நீண்ட கால பழிவாங்கல் தான் இது என்று நான் நம்புகிறேன். துரதிருஷ்டவசமாக முக்கியமான பேச்சு சுதந்திர விவகாரங்களுக்கும் ஒரு கூட்டுசேதத்தை விளைவிக்கும்” என்று கடந்த வியாழக்கிழமை முர்ரே வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கை பிரதான ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்டது.

ஜனவரி 2018 இல், உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) சர்வதேச ஆசிரியர் குழு (International Editorial Board) இணைய தணிக்கைக்கு எதிராக போராட ஒரு சர்வதேச இயக்கத்தை உருவாக்க அழைப்பு விடுத்தது. உலகம் முழுவதும் சோசலிசம் மற்றும் போர் எதிர்ப்பு செய்தித் தளங்களை அணுக விடாமல் தடுப்பதற்கான கூகுள், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களின் முயற்சிகளை விவரித்து, “21 ஆம் நூற்றாண்டின் முதலாளித்துவ பொலிஸ் அரசின் தொழில்நுட்ப சாரக்கட்டு அமைக்கப்பட்டு வருகிறது” என்று WSWS எச்சரித்தது.

மென்பொருள் வழிமுறைகள் (algorithms) மற்றும் தணிக்கை குழுவின் மூலம் கூகுள் வேண்டுமென்றே தேடல் முடிவுகளை நசுக்குவது போன்ற பெருநிறுவன தணிக்கையின் மைய இலக்காக WSWS இருந்தது. ஏப்ரல் 2017 க்கு முன்னர் WSWS ஐ அணுகுவதற்கான வழிமுறைகளை உருவாக்கும் 150 சிறந்த கூகுள் தேடல் சொற்கள் இருந்தன. அந்த ஆண்டின் கோடை காலம் முதல் எங்கள் வலைத் தளத்தின் 145 தேடல் சொற்களில் ஒன்றின் தேடல் முடிவைக் கூட பெற முடியவில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்புக்களால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (SGP) 2018 இல் அரசியலமைப்பு பாதுகாப்புக்கான கூட்டாட்சி அலுவலகத்தால் (BfV) ஒரு தீவிரவாத அமைப்பாக வரையறுக்கப்பட்டது.

ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள், முதலாளித்துவ அரசுக்கு எதிராகவும் மற்றும் அதன் அனைத்து அரசியல் பாதுகாவலர்களிடமிருந்து சுயாதீனமாகவும் தொழிலாள வர்க்கத்தால் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று WSWS வலியுறுத்தியுள்ளது. ஏகாதிபத்திய போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தின் முன்னோடியாக முர்ரே மற்றும் அசான்ஜை உடனடியாக விடுவிக்க கோரிக்கை எழுப்புமாறு உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

Loading