முன்னோக்கு

அமெரிக்கா: டேனா நிறுவனம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக ஆட்டோ தொழிலாளர்கள் கிளர்ச்சி செய்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்கா எங்கிலும் டேனா (Dana) வாகன உதிரிப்பாகங்கள் உற்பத்தி ஆலையின் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள், ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கமும் (UAW) மற்றும் ஐக்கிய எஃகுத்துறை தொழிலாளர்கள் சங்கமும் (USW) திணிக்க முயன்று வரும் ஐந்தாண்டு கால மலிவுக்கூலி உடன்படிக்கையை நிராகரிக்க வாக்களித்து வருகின்றனர்.

பென்சில்வேனியாவின் போட்ஸ்டவுன்; இண்டியானாவின் போர்ட் வேய்ன்; டென்னஸியின் பாரீஸ்; மிச்சிகன், வாரென்; மற்றும் கென்டக்கி டான்வில் உட்பட பிரதான ஆலைகள் ஏற்கனவே பெருவாரியான வித்தியாசத்தில் 'வேண்டாம்' என்று வாக்களித்துள்ளன.

டேனா ஆலை, UAW சங்கம் மற்றும் USW சங்கத்திற்கு எதிரான இந்த கிளர்ச்சி, டேனா ஆலை தொழிலாளர்களுக்கும் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு சக்தி வாய்ந்த முன்னோக்கிய படியாகும். அமெரிக்காவில் 650,000 பேர் மற்றும் சர்வதேச அளவில் 4 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள ஒரு பெருந்தொற்றின் 18 மாத காலத்திற்குப் பின்னர், “வேண்டாம்' என்ற இந்த வாக்குகள், பாரியளவிலான சமூக சமத்துவமின்மையை சகித்துக் கொள்ள முடியாது, ஏதாவது செய்தாக வேண்டும் என்று தொழிலாள வர்க்கத்திடையே அதிகரித்து வரும் உணர்வின் ஓர் அறிகுறியாகும்.

டேனா ஆலையின் யதார்த்தம், தொழிற்சங்கங்களை 'தொழிலாளர்களின் அமைப்புகளாக' பொய்யாக சித்தரிக்கும் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) போன்ற குழுக்கள், ஜாகோபின் மற்றும் இடது குரல் (Left Voice) போன்ற பிரசுரங்களின் வாதங்களை வெடித்துச் சிதறடிக்கின்றன.

முன்மொழியப்பட்ட ஐந்தாண்டு ஒப்பந்தம் பற்றி விவாதிக்க ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட உத்தியோகபூர்வமற்ற கூட்டங்களில், அதிக வேலைச் சுமையால் சோர்வுற்ற தொழிலாளர்கள் UAW மற்றும் USW நிர்வாகிகளுக்கு எதிராக வெடித்தெழுந்தனர், இந்த சங்கங்கள் முழு ஒப்பந்தத்தை தொழிலாளர்கள் பார்ப்பதற்கும் கூட மறுத்ததுடன், ஒரு வேலைநிறுத்தம் நடத்தப்பட்டால் நிறுவன கையிருப்புகளை தேக்கி வைக்க உதவியாக மிகைநேர வேலைகளைக் கோரியதன் மூலமாக நிர்வாகத்துடன் ஒத்துழைத்து வருகின்றன. UAW மற்றும் USW வாக்கு மோசடியில் ஈடுபடும் என்ற கவலையில், பல ஆலை தொழிலாளர்களும் வாக்கு எண்ணிக்கையைக் கண்காணிக்க சாமானிய தொழிலாளர்களின் பிரதிநிதிகளை அனுப்பும் சுயாதீனமான நடவடிக்கையை மேற்கொண்டனர்.

ஜேக்கப் ரீஸ் (Jacob Riis) போன்ற 20-ஆம் நூற்றாண்டின் சீர்திருத்தவாத பத்திரிகையாளர்களின் புகைப்படங்களை அல்லது எழுத்தாளர் அப்டன் சின்க்ளேர் (Upton Sinclair) இன் படைப்புகளை நினைவுக்குக் கொண்டு வரும் நிலைமைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர். சின்க்ளேரின் 1906 நாவலான தி ஜங்கிள், இன்று டேனா தொழிலாளர்களுக்கு மிகவும் பரிச்சயமான இருக்கக்கூடிய சிகாகோவின் பின்புற இறைச்சி வெட்டப்படும் மாவட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொண்டிருந்த பாதுப்பாற்ற, சுகாதாரமற்ற மற்றும் இரத்தத்தை உறிஞ்சும் நிலைமைகளை விவரித்தது. 2021 இல் நிலைமைகள் தொழில்துறை சங்கங்கள் வளர்வதற்கு முன்னர் இருந்ததை விட வாதிடக்கூடிய அளவுக்கு மோசமாக உள்ளன என்ற உண்மை AFL-CIO உம் மற்றும் ஒவ்வொரு இடத்திலும் தொழிற்சங்கங்கள் நடத்திய தசாப்த கால காட்டிக் கொடுப்புகளின் விளைவாகும்.

இந்த 'தொழிற்சங்கக் கடையில்', டேனா தொழிலாளர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே ஊதியம் பெறாத ஒரு நாள் விடுப்பைப் பெறுகிறார்கள். அவர்கள் வழக்கமாக ஓய்வின்றி தொடர்ந்து 20, 40 அல்லது 60 நாட்களுக்கும் கூட, 12 மணி நேரம் வரையிலான ஷிப்ட்களில், தொடர்ந்து வேலை செய்கிறார்கள். தொழிலாளர்கள் உடல் வெப்பச் சோர்வில் இறந்துவிடுவதுடன், மாரடைப்புக்கும் ஆளாகிறார்கள், மனித உயிர்கள் விலை கொடுக்கப்படுவதைப் பற்றி கவலைப்படாமல் USW மற்றும் UAW தொடர்ந்து உற்பத்திக்கு முட்டுக்கொடுக்கும் அதேவேளையில் தொழிலாளர்கள் தொழிலிடத்தில் கோவிட்-19 நோய்தொற்றுக்கு உள்ளாகிறார்கள்.

நிறுவனமும் தொழிற்சங்கமும் தொழிலாளர்களை மிருகங்களை விட மோசமாக நடத்துகின்றன. கென்டக்கியின் டிரை ரிட்ஜ் டேனா ஆலை தொழிலாளர் டேனி வால்டர்ஸ் வேலையின் போதே மூளை பாதிப்பு அடைந்த போது, நிறுவனமோ அல்லது UAW சங்கமோ அவர் மனைவிக்குக் கூட தெரிவிக்கவில்லை. அவர் இறந்த சில மணிநேரங்களுக்குப் பின்னர், அடுத்த நாள் வேலைக்கு வரும்படி கட்டளையிடப்பட்டதாகத் தெரிவிக்கும் ஒரு அறிவிப்பை அந்த தொழிலாளி பெற்றார். டேனா தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் அவர்கள் தொடர்ந்து முகங்கொடுக்கும் பல அடுக்கு அநீதியின் ஓர் அடையாளமாக வால்டரின் அகால மரணத்தைப் பார்க்கிறார்கள், மேலும் அவர்களின் போராட்டத்தை அவர் பெயரில் முன்னெடுக்கவும் உறுதி எடுத்துள்ளனர்.

இத்தகைய கொடூரமான சம்பவங்கள் டேனா ஆலைகளில் பொதுவாக நடக்கின்றன என்பதோடு, அவற்றை தொழிலாளர்கள் 'அடிமை கப்பல்கள்,' 'சிறைசாலைகள்' மற்றும் 'மலிவுழைப்புக் கூடங்கள்' என்று குறிப்பிடுகிறார்கள். நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், ட்ரம்ப் ஆதரவாளருமான ஜேம்ஸ் காம்சிடாஸ் 2020 இல் 10 மில்லியனுக்கும் அதிகமான டாலர்கள் சம்பாதித்த நிலையில், தொழிலாளர்களுக்கு எதுவும் கொடுக்கப்படுவதில்லை, அதேவேளையில் அந்நிறுவனம் பணக்கார பங்குதாரர்களுக்குப் பல மில்லியன்களில் பங்காதய கொடுப்பனவுகளை வாரி வழங்குகிறது. இந்த பெருந்தொற்று காலம் நெடுகிலும் அங்கே உற்பத்தி தொடரப்பட்ட நிலையிலும், அந்நிறுவனம் CARES சட்டம் என்று அழைக்கப்படும் இருகட்சியின் சம்மதத்துடன் நிறைவேற்றப்பட்ட பெருநிறுவன பிணையெடுப்பு நிதியிலிருந்து 9 மில்லியன் டாலர்களை பெற்றது.

தொழிலாளர்கள் ஒரு ஈவிரக்கமற்ற நிறுவனத்தை மட்டும் எதிர்கொள்ளவில்லை, மாறாக முழு முதலாளித்துவ அமைப்புமுறையையும் எதிர்கொள்கின்றனர். டேனா தொழிலாளர்கள் மீதான தீவிர சுரண்டல் என்பது முதலாளித்துவத்தின் கீழ் தனித்த சம்பவம் அல்ல, மாறாக விதியாக செயல்படுத்தப்படுகிறது. இந்த பெருந்தொற்றில் இருந்து தடுத்திருக்கக்கூடிய மரணங்களால் மில்லியன் கணக்கானவர்கள் உயிரிழந்து கொண்டிருக்கையில், உயிராபத்தான டெல்டா வகை வைரஸ் பரவி வருவதற்கு மத்தியிலும் கூட, இந்த முதலாளித்துவ சுரண்டல் விதி இலாபத்திற்காக பெற்றோர்களைச் சுரண்ட அவர்களை வேலைக்கு இழுக்கும் நோக்கில் மாணவர்களைப் பள்ளித் திரும்ப நிர்பந்தித்து, BMJ இதழ் (முன்னதாக பிரிட்டிஷ் மெடிக்கல் ஜேர்னல்) விவரித்த 'சமூக படுகொலை' கொள்கைகளை நிறைவேற்ற, உலகெங்கிலுமான அரசாங்கங்களை முடுக்கி விட்டுள்ளது.

எத்தனை மில்லியன் பேர் இறந்தாலும், பெருநிறுவன இலாபத்திற்கு உத்தரவாதம் அளிப்பதும் மற்றும் உலகளாவிய பங்குச் சந்தைகளை வானளவுக்கு வளர்க்க எரியூட்டுவதும் தான் ஆளும் வர்க்கத்தின் கொள்கையாகும்.

நாடெங்கிலும் உள்ள முக்கிய ஆலைகளின் டேனா தொழிலாளர்கள் நிறுவிய ஒரு குழுவைச் சுற்றி டேனா தொழிலாளர்கள் ஒன்றிணையத் தொடங்கியுள்ளனர். டேனா தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு (DWRFC) நாளொன்றுக்கு 8 மணி நேர வேலை நேரம் மற்றும் வாரத்திற்கு 40 மணி நேரத்திற்கும், அத்துடன் 75 சதவீத சம்பள உயர்வு மற்றும் இந்த பெருந்தொற்றின் போது ஆலை பாதுகாப்பு மீது தொழிலாளர்களின் கட்டுப்பாட்டை ஏற்படுத்துதல் ஆகிய கோரிக்கையை உயர்த்தியதன் மூலம் பரந்த ஆதரவை வென்றுள்ளனர்.

அந்நிறுவனம் குறித்த தகவல் மற்றும் வழிகாட்டுதலை வழங்கியும் அத்துடன் கடந்தகால போராட்ட அனுபவம் சம்பந்தமான தகவல்களை வழங்கியும் உலக சோசலிச வலைத் தளம் அவர்களின் போராட்டத்தில் ஒரு விலைமதிப்பில்லா கருவியாக இருப்பதாக பல டேனா தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். வேர்ஜீனியா வொல்வோ நிறுவனத்திற்கு எதிராகவும் UAW சங்கத்திற்கு எதிராகவும் அவர்கள் நடத்திய போராட்டத்தில் போது அவர்கள் நிறுவிய வொல்வோ தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழுவின் படிப்பினைகளையும், மெக்சிகோ மத்தாமோரொஸில் வாகனத்துறை உதிரி பாகங்கள் உற்பத்தி ஆலை தொழிலாளர்களின் 2019 தன்னியல்பான வேலைநிறுத்தத்தின் படிப்பினைகளையும் டேனா தொழிலாளர்கள் படித்து வருகின்றனர்.

டேனா ஆலை போராட்டம் உலகெங்கிலும் அதிகரித்து வரும் தொழிலாளர்களின் சர்வதேச கிளர்ச்சியின் பாகமாகும். கடந்த வாரம் வெளியிடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை ஒன்று, உலகம் வர்க்கப் போராட்டத்தின் பாரிய வெடிப்பின் மத்தியில் இருப்பதாக எச்சரித்தது. அரபு வசந்த ஆண்டான 2011 மற்றும் 2019 க்கு இடையில் பொது வேலைநிறுத்தங்கள் மற்றும் வெகுஜன எதிர்ப்புக்களின் எண்ணிக்கை 'அதிர்ச்சியூட்டும் அளவுக்கு 244 சதவீதம்' உயர்ந்திருந்ததாக அந்த அறிக்கை கூறுகிறது. குறிப்பாக 'பொது வேலைநிறுத்தங்களின் எண்ணிக்கை 821 சதவீதம் அதிகரித்தது,' என்பதே நிதிய பிரபுத்துவத்தின் கவலையாக உள்ளது.

2021 சர்வதேச தொழிலாளர் தினத்தில் (மே தினத்தில்), நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர்கள் கூட்டணியை (IWA-RFC) உருவாக்க அழைப்பு விடுத்தது. ICFI பின்வருமாறு எழுதியது:

சர்வதேச அளவில் தொழிற்சாலைகள், பள்ளிகள் மற்றும் வேலையிடங்களில் தொழிலாளர்களின் சுயாதீனமான, ஜனநாயகரீதியான, போர்குணம் கொண்ட சாமானிய தொழிலாளர் அமைப்புகளின் புதிய வடிவங்களுக்கான கட்டமைப்பை அபிவிருத்தி செய்ய IWA-RFC பணியாற்றும். தொழிலாள வர்க்கம் போராட தயாராக உள்ளது. ஆனால் அது எதிர்ப்பின் ஒவ்வொரு வடிவத்தையும் நசுக்கும் பிற்போக்குத்தனமான அதிகாரத்துவ அமைப்புகளால் நிலைகுலைய செய்யப்பட்டுள்ளது.

அதுவொரு கருவியாக இருக்கும், அதன் மூலமாக தொழிலாளர்களின் பாதுகாப்பைக் கோரவும், இந்த வைரஸ் பரவலை நிறுத்த பாதுகாப்பற்ற ஆலைகள் மற்றும் அத்தியாவசியமற்ற உற்பத்திகள், அவசியமான ஏனைய அவசர நடவடிக்கைகளையும் மூட உலகெங்கிலுமான தொழிலாளர்கள் ஓர் ஒருங்கிணைந்த போராட்டத்தை ஒழுங்கமைக்கவும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

டேனா ஆலை கிளர்ச்சி, தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தை வழிநடத்த குழுக்களின் ஒரு சர்வதேச கூட்டணியை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவையை உறுதிப்படுத்துகிறது. அமெரிக்காவிலும் உலகெங்கிலும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் ஒரு வலையமைப்பை நிறுவி கட்டமைப்பதில் டேனா தொழிலாளர்களுக்கும் எல்லா தொழிலாளர்களுக்கும் உதவ சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் பொறுப்பேற்றுள்ளன.

மேலும் படிக்க

Loading