மதர்சன் ஆலை தொழிலாளர்கள் தரமான உணவு மற்றும் சிறப்பான நிலைமைகளுக்காக காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மதர்சன் ஆட்டோமோட்டிவ் டெக்னாலஜிஸ் அண்ட் என்ஜினியரிங் (MATE) ஆலையில் 300 க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்களில் சுமார் 220 பேர் கடந்த வாரம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். அவர்கள் தரமான உணவு மற்றும் சரியான தேநீர் மற்றும் கழிப்பறை இடைவேளை உட்பட மேம்பட்ட பணி நிலைமைகள் வேண்டும் என்று கோருகின்றனர்.

இருங்காட்டுக்கோட்டையில் உள்ள உதவி தொழிலாளர் ஆணையர் (ACL) அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் மேட் நிர்வாகம் கொடுத்த போலி வாய்மொழி உத்தரவாதங்களை முன்னைய நாள் நிராகரித்த தொழிலாளர்கள் பிறகு ஆகஸ்ட் 3 ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் இறங்கினர்.

வேலைநிறுத்தம் செய்யும் மதர்சன் தொழிலாளர்கள் தங்கள் அவல நிலையை எடுத்துக்காட்டும் முகமாக உணவுக் கோப்பைகளை ஏந்தியபடி நிற்கின்றனர் (WSWS)

தற்போது சாப்பாட்டுக்கு பதிலாக தேநீர் மற்றும் பிஸ்கட் மட்டுமே வழங்கப்படுகிறது, இரவு நேர பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் உண்ணக்கூடிய, புழு இல்லாத உணவை வழங்கும்படி வேலைநிறுத்தம் செய்பவர்கள் கோருகின்றனர், இரவு நேர தொழிலாளர்களுக்கு சிறந்த தரமான உணவு மற்றும் வேலை தொடங்கி நான்கு மணி நேரத்திற்குப் பின்னர் 30 நிமிட இடைவேளை மற்றும் தேநீர் இடைவேளை ஆகிவற்றை வழங்கும்படி கோரிய தொழிலாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப் பெறும்படியும் அவர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

இந்தியாவின் கோவிட்-19 பேரழிவுக்கு பதிலளிக்கும் விதமாக, கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய விடுப்பு வழங்கும்படியும் தொழிலாளர்கள் போராடுகிறார்கள், சிகிச்சைக்கான முழுச் செலவையும் நிறுவனமே ஏற்க வேண்டும்; தொற்றுநோய் ஊரடங்கின் போது நிறுவன பேருந்துகள் மற்றும் பொது போக்குவரத்து இல்லாமல் வேலைக்கு வர முடியாத தொழிலாளர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் மற்றும் அரக்கோணம், வாலாஜா, செங்கல்பட்டு மற்றும் செய்யாறு போன்ற தொலைதூரங்களிலிருந்து பயணிக்கும் தொழிலாளர்களை அந்தந்த இடங்களிலிருந்து ஏற்றிக் கொள்ளும் பேருந்து வசதிகளையும் அவர்கள் கோருகின்றனர்.

MATE தொழிலாளர்களின் துணிச்சலான நிலைப்பாடு வர்க்கப் போராட்டத்தின் பூகோள ரீதியான எழுச்சியின் ஒரு பகுதியாகும், அவற்றில் வாகன தொழிலாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் பிற தொழில்துறை தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஊதிய வெட்டுக்கள், மோசமான வேலை நிலைமைகள் மற்றும் தொற்று அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டங்களை காண முடிந்தது. COVID-19. மே மாதத்தில், ஸ்ரீபெரும்புதூரிலும், தமிழ்நாட்டின் பிற தொழில்துறைப் பகுதிகளிலும் உள்ள பிற நகரங்களிலும், கொடிய வைரஸிலிருந்து பாதுகாப்பு இல்லாத நிலையில் ஹூண்டாய், ஃபோர்டு மற்றும் ரெனால்ட்-நிசான் போன்ற நாடுகடந்த வாகன நிறுவனங்களை சேர்ந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பு போராட்டங்களின் காரணமாக வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். வெர்ஜீனியாவில் உள்ள வொல்வோ கனரக நியூ ரிவர் வேலி ஆலையில் உள்ள தொழிலாளர்கள் தலைமையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள், ஊதியக் குறைப்பு, வேலை நேர அதிகரிப்பு மற்றும் அவர்களின் நலன்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்.

MATE என்பது மதர்சன் சுமி சிஸ்டம்ஸ் லிமிடெட் (MSSL) இன் பாலிமர் பிரிவு. இது சம்வர்தனா மதர்சன் குரூப் (எஸ்எம்ஜி) மற்றும் ஜப்பானை தளமாகக் கொண்ட சுமிதோமோ வயரிங் சிஸ்டம்ஸ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக 1986 இல் நிறுவப்பட்டது. இது இந்தியாவிற்கு வெளியே 42 நாடுகளில் இயங்குகிறது மற்றும் 135,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். 2018 இல், இது 11.7 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் எடுத்தது. லைவ்மிண்ட்டின் படி, மதர்சன் 7.14 பில்லியன் ரூபாய் ($ 96 மில்லியன்) ஒருங்கிணைந்த நிகர லாபத்தை மார்ச் 31, 2021 உடன் முடிவடைந்த காலாண்டில் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 290 சதவீதம் அதிகமாக பெற்றுக்கொண்டது.

ஆலையில் செயல்படும் மாவோயிச இடது தொழிற்சங்க மையம் (எல்.டி.யு.சி), சாமானிய தொழிலாளர்கள் மத்தியில் நம்பகத்தன்மையை தக்கவைப்பதற்காக நிரந்தர தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு ஒப்புதல் அளிக்க கடமைப்பட்டது. 2019 இல், நான்கு மாதங்களுக்கும் மேலாக நீட்டித்த ஒரு போர்க்குணம் மிக்க வேலைநிறுத்தத்தை எல்.டி.யு.சி காட்டிக் கொடுத்தது, தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளில் ஒன்றைக்கூட வென்றெடுக்காத நிலையில் வேலைக்குத் திரும்பிச் செல்லும்படி உத்தரவிட்டது. அது நிர்வாகத்திற்கு அடிபணிந்ததன் ஒரு பகுதியாக, 51 தொழிலாளர்களை மீண்டும் வேலையில் வைக்கும்படி வலியுறுத்த எல்.டி.யு.சி மறுத்தது, பின்னர் அவர்கள் ஒரு மோசடியான விசாரணையைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

மதர்சன் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின் முதல் நாளான ஆகஸ்ட் 3 இல் உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் போராட்டம். (WSWS)

இன்று, வேலைநிறுத்தம் செய்யும் மதர்சன் தொழிலாளர்கள் இரண்டு முனைகளில் ஒரு போரை எதிர்கொண்டுள்ளனர். ஒருபுறம், அவர்கள் மேட் நிர்வாகத்தை எதிர்கொள்கிறார்கள், அது ஆலையில் அதன் மிருகத்தனமான வேலை முறையை பராமரிப்பதில் உறுதியாக உள்ளது. இதில், தமிழ்நாட்டின் புதிய ஆட்சியமைத்த திராவிட முன்னேற்றக் கழக (திமுக) மாநில அரசின் முழு ஆதரவும் மேட் நிர்வாகத்துக்கு உள்ளது, இது பிரதானமான ஸ்டாலினிசக் கட்சிகளின் ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்றது மேலும் மாநிலத்தில் உள்ள வாகனத்துறை, சர்வதேச முதலீட்டாளர்களுக்கு 'போட்டியாக' இருப்பதை உறுதி செய்துள்ளது.

மறுபுறம், மதர்சன் தொழிலாளர்கள் எல்.டி.யு.சி.யின் தலைமைக்கு எதிராக தாங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை காண்கின்றனர். ஸ்ராலினிஸ்ட் சிபிஎம் மற்றும் சிபிஐ தலைமையிலான தொழிற்சங்கங்களை விட மாவோவாதிகள் தலைமையிலான எல்டியுசி மிகவும் போர்க்குணமிக்கதாகக் கூறிக்கொண்டாலும், போராட்டத்தை விரிவுபடுத்துவது குறித்த விஷயத்தில் அவர்களின் அதே கடுமையான எதிர்ப்பைப் பகிர்ந்துகொண்டுள்ளது மற்றும் அவர்களைப் போலவே, அரசாங்கம் மற்றும் தொழிலாளர் துறையின் ஆதரவை கேட்டு தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுக்கும்படி வீணான முயற்சிகளில் திசை திருப்ப முயல்கிறது.

ஆலையில் உற்பத்தியை முற்றுமுழுதாக நிறுத்துவதற்காக ஆலையில் உள்ள மொத்த பணியாளர்களையும் அணிதிரட்ட LTUC தலைவர்கள் மறுத்துவிட்டனர். நிர்வாகம், நன்றாக தொழிலாளர்களை சுரண்டுவதற்காக தொழிலாளர்களிடையே பிளவை உருவாக்க பல இந்திய முதலாளிகளைப் போலவே மேட் நிர்வாகமும் பயன்படுத்திவரும் நிலையற்ற ஒப்பந்தத் தொழிலாளர் அமைப்புக்கு அவ்வாறான ஒரு அணிதிரட்டல் சவாலாக அமையும்.

அதற்கு பதிலாக, தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்தை நிரந்தர தொழிலாளர்கள் வரையில் மட்டுப்படுத்தியுள்ளது, இதன் மூலம் MATE நிர்வாகம் சுமார் 1,200 ஒப்பந்த மற்றும் பயிற்சி தொழிலாளர்களைப் பயன்படுத்தி ஆலையை தொடர்ந்து இயக்க அனுமதித்துள்ளது.

மதர்சன் தொழிலாளர்களின் போராட்டத்தை தொழிற்சங்கம் நாசப்படுத்துவதில் வேலைக்கு மீண்டும் சீக்கிரமாக திரும்புவதற்கான அதன் அழுத்தமும் உள்ளடங்கியுள்ளது, இது வேலைநிறுத்தத்தை பெரும் ஆபத்தில் ஆழ்த்துகிறது. வெற்றிக்கான வாய்ப்பில் நம்பிக்கைக இழந்த பல டஜன் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு வேலைக்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 8 அன்று, ஸ்ரீபெரும்புதூரில் 'ஒருமைப்பாடு மன்றத்தை' எல்.டி.யு.சி ஏற்பாடு செய்தது, அதாவது வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒருமைப்பாடு நடவடிக்கைகளை சங்கம் ஏற்பாடு செய்வது போன்ற பதிவை உருவாக்க முயற்சிக்கிறது. இது ஒரு பொய். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூட்டு நடவடிக்கை எடுக்கும்படியாக எல்.டி.யு.சி எந்த வேண்டுகோளும் விடுக்கவில்லை, இந்தியா முழுவதும் இதேபோன்ற கடுமையான வேலை நிலைமைகளை எதிர்கொள்ளும் பல கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கும் கூட அழைப்பு விடவில்லை என்பது ஒரு புறம் உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்றத்தில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் பல்வேறு உள்ளூர் ஸ்ராலினிச மற்றும் மாவோயிச தலைமையிலான தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள். சில தொழிலாளர்களும் பங்கேற்றனர், ஆனால் LTUC மற்றும் அவர்களின் ஸ்ராலினிச கூட்டாளிகள் அந்த நிகழ்வுக்கு வெகுஜன தொழிலாளர் ஆதரவை திரட்ட எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

தொழிலாளர் உதவி ஆணையர் (ACL) மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு பலனற்ற முறையீடுகளை செய்யும்படி மதர்சன் போராளி தொழிலாளர்களுக்கு மாவோயிச LTUC தலைமை அறிவுறுத்தியது. மேட் நிர்வாகத்திற்கு எதிராக வேலைநிறுத்தத்தில் தலையிடுமாறு தமிழக திமுக அரசாங்கத்தையும் அதன் தொழிலாளர் துறையையும் அழைக்கிறது. இருப்பினும், திமுக அரசாங்கம் அதன் முன்னோடியான அஇஅதிமுக வின் அதே தொழிலாளர் விரோத வலதுசாரி கொள்கைகளைத் தொடர்கிறது, அதில் தொற்றுநோய்களின் போது அத்தியாவசியமற்ற உற்பத்தி முழு அளவில் தொடர வேண்டும் என்று வலியுறுத்தும் உள்ளடங்கும்.

பணிநீக்கம் செய்யப்பட்ட 51 நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் 28 பயிற்சியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த எல்.டி.யு.சி மறுக்கிறது. நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் வறுமை நிலை ஊதியத்தில் இருந்து குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வுக்கு அழைப்பு விடுக்கவும் தொழிற்சங்கம் தவறிவிட்டது.

2019 இல் போலல்லாமல், அனைத்து பயிற்சியாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் நிரந்தர வேலைகள் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதற்கான அழைப்பை விடுவதாக எல்டியுசி காட்டிக் கொண்டது. எனினும், இது வெற்று சொல்லாடல் தான. இப்படியான முக்கிய கோரிக்கைகளுக்காக போராடுவதற்கு அனைத்து வகை தொழிலாளர்களையும் அணி திரட்ட தொழிற்சங்கம் எதுவும் செய்யவில்லை.

2019 வேலைநிறுத்தத்தின் போது, உற்பத்தியை நிறுத்தவும் வேலைநிறுத்தத்தை வலுப்படுத்தவும் தொழிற்சாலையில் முழு தொழிலாளர்களையும் அணிதிரட்ட மறுத்ததை உலக சோசலிச வலைத் தளம் (WSWS) விமர்சனம் செய்ததை LTUC கடுமையாக எதிர்த்தது. தொழிற்சங்க நிர்வாகிகள் இத்தகைய நடவடிக்கை ஒப்பந்த தொழிலாளர்களின் வேலைகளை 'ஆபத்தில் ஆழ்த்தும்' என்று கூறினர். WSWS அந்த நேரத்தில் விளக்கமளித்தது, 'உண்மையில், வேலைநிறுத்தம் செய்யும் நிரந்தர தொழிலாளர்களை தனிமைப்படுத்துவது மட்டுமல்லாமல், தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பல தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த இப்போது பயன்படுத்தப்படும் ஒப்பந்த வேலை முறையை தொழிற்சங்கம் ஏற்றுக்கொள்கிறது.'

தற்போதைய வேலைநிறுத்தம் குறித்து தகவல் சேகரிக்க ஸ்ரீபெரும்புதூருக்கு விஜயம் செய்த WSWS நிருபர்களிடம் மாவோயிச LTUC நிர்வாகிகள் மிகவும் விரோதமாக நடந்து கொண்டனர். அவர்கள் எங்கள் நிருபர்களை வேலைநிறுத்தம் செய்தவர்களிடம் நேர்காணல் செய்யவிடாமலும் போராட்டங்களை படம் எடுக்க விடாமலும் தடுத்தனர்.

தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் WSWS இடம் கூறியதாவது, தொழிலாளர்களுக்கு தரமான உணவை வழங்க நிர்வாகம் ஒப்புக் கொண்டால் வேலைநிறுத்தத்தை முடித்துக் கொள்வோம், இது தான் அவர்களின் முக்கிய கோரிக்கை என்று கூறினார். அப்போது பல தொழிலாளர்கள் குறுக்கிட்டு, இன்னும் பல கோரிக்கைகளுக்காக தாங்கள் போராடுவதாக WSWS இடம் கூறினர்.

பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளி ஒருவர் WSWS இடம் கூறினார்: 'முந்தைய வேலைநிறுத்தத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளாமல், இப்போது மற்றொரு பேரழிவுக்கு தொழிற்சங்கம் நம்மை இட்டுச் செல்கிறது. இந்த வேலைநிறுத்தத்தில் இன்னும் எத்தனை தொழிலாளர்கள் நிறுவனத்தால் பழிவாங்கப்படுவார்கள் என்று நான் தொழிற்சங்க நிரிவாகி ஒருவரிடம் கேட்டேன். நாங்கள் ஏற்கனவே 51 தொழிலாளர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்டோம்.

'தொழிற்சாலைக்குள் பணிபுரியும் தொழிலாளர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் மேலும் மேலும் தாங்க முடியாத நிலைமை குறித்து தொழிற்சங்கத் தலைவர் எஸ்.குமாரசாமியிடம் புகார் அளித்தனர்' என்று கூறிய தொழிலாளி மேலும் தொடர்ந்தார். 'தொழிலாளர்களின் மத்தியில் அதிகரித்து வரும் கோபத்தை உணர்ந்த தொழிற்சங்கத் தலைவர் தொழிலாளர்களிடம், 'நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடலாமா?' என்று கேட்டார். அதற்கு உடனடியாக தொழிலாளர்கள் ‘’ஆம்” என்று பதில் அளித்தனர்,

'எஸ். குமாரசாமி மற்றும் பாரதி போன்ற முக்கிய [LTUC] தலைவர்கள் வேலைநிறுத்தத்தின் முதல் நாளில் இங்கு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.'

எல்.டி.யு.சி என்பது அகில இந்திய மத்திய தொழிற்சங்க கவுன்சிலிலிருந்து (AICCTU) இருந்து பிரிந்த அமைப்பு. இது இந்திய மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை அல்லது சிபிஐ-எம்எல் -விடுதலையின் தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகும். AICCTU இலிருந்து பிளவு மற்றும் LTUC இன் உருவாக்கம் மாவோயிஸ்ட்-ஸ்ராலினிச அமைப்புகளை மேலும் வலதுபுறம் தள்ளியுள்ளது.

LTUC பல்வேறு தமிழ் தேசிய அமைப்புகளின் தலைமையிலான பேரினவாத 'வெல்க தமிழ்' (Rise up Tamil) பிரச்சாரங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டது. மாவோயிச தொழிற்சங்கத் தலைவர்கள், மதர்சன் வாகன உதிரிப் பாக தொழிலாளர்களை இந்தியா முழுவதிலுமுள்ள சக தொழிலாளர்களிடமிருந்து பிரிப்பதற்காக திட்டமிட்ட முயற்சியில், 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தமிழ் தேசியவாத போராட்டங்களில் பங்கேற்குமாறு வேலைநிறுத்தக்காரர்களுக்கு அறிவுறுத்தினர்.

AICCTU மற்றும் LTUC இன் பிற்போக்கு கொள்கைகள் CPIML விடுதலையின் தேசியவாத மற்றும் முதலாளித்துவ சார்பு திட்டத்திலிருந்து எழுகின்றன. சிபிஐ-எம்எல்- விடுதலை என்பது இரண்டு முக்கிய ஸ்ராலினிச பாராளுமன்றக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் -கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகியவற்றின் 'நீட்டிக்கப்பட்ட இடது முன்னணி' கூட்டணி ஆகும். அது 2019 இந்திய பாராளுமன்ற தேர்தலுக்காக பெரு வணிக திமுக தலைமையில் தமிழ் நாட்டில் ஒரு தேர்தல் கூட்டணியில் சேர்ந்தது.

இன்று, 2019 ல் போலவே, மூன்று ஸ்ராலினிசக் கட்சிகளான சிபிஎம், சிபிஐ மற்றும் சிபிஐ –எம்எல்- விடுதலை ஆகியவை தீவிர வலதுசாரி பாரதிய ஜனதா தேசிய அரசாங்கத்தை தோற்கடிக்கும் பெயரில், காங்கிரஸ் தலைமையிலான மாற்று வலதுசாரி ஆட்சியை ஆதரிப்பதில் பகிரங்கமாக உறுதிபூண்டுள்ளன. காங்கிரஸ் கட்சி, சமீப காலம் வரை இந்திய முதலாளித்துவத்திற்கு விருப்பமான அரசாங்கக் கட்சியாக இருந்து வந்துள்ளது. சிபிஎம் தலைமையிலான இடது முன்னணியைச் சுற்றியுள்ள ஏஐசிசிடியு, அதன் பிளவு குழு, எல்டியுசி மற்றும் சிபிஐ-எம்எல்-விடுதலை ஆகியவை அனைத்தும் தொழிலாளர்களின் அடிப்படை நலன்களை வாகன தொழில் துறையின் இலாபங்களுக்கு கீழ்ப்படிய செய்வதை ஏற்றுக்கொள்கின்றன. அதன் காரணமாக மதர்சன் தொழிலாளர்களுக்கு ஆதரவாக எந்தவொரு பிரச்சார இயக்கத்தையும் முன்னெடுத்து அதனை தொழிலாள வர்க்க எதிர்த்தாக்குதலின் ஒரு ஈட்டி முனையாக மாற்ற மாட்டாது.

MATE தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் மற்றும் அது தொழிற்சங்கங்களினால் காட்டிக் கொடுக்கப்பட்டது குறித்த முக்கியமான படிப்பினை என்னவென்றால் நிரந்தர வேலைகள், சிறப்பான ஊதியம், மேம்பட்ட பணி நிலைமைகள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கான வாகன தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதும் மற்றும் இந்தியா முழுவதும் சுயாதீன தொழில்துறை மற்றும் அரசியல் போராட்டத்திற்கான அணிதிரட்டல் தேவைப்படுகிறது. இந்திய வாகன தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களை சர்வதேச அளவில் அதே நாடுகடந்த நிறுவனங்களுக்கு எதிராக போராடுகின்ற அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகள் பக்கமாக திரும்ப வேண்டும்.

ஸ்ராலினிச-மாவோயிச கட்டுப்பாட்டில் உள்ள, முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களிலிருந்து வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் அரசியல் மற்றும் அமைப்பு ரீதியாக முறித்துக் கொள்ள தொடங்க வேண்டும். தங்களின் போராட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல, மதர்சன் தொழிலாளர்கள் சாமானிய தொழிலாளர் குழுவை அமைக்க வேண்டும் அது அவர்களது போராட்டத்தை விரிவுபடுத்துவதுடன் அதனை ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் மூலம் வலுப்படுத்தும்.

Loading