தாலிபான், அமெரிக்கா மற்றும் மத்திய ஆசியாவின் மூலவளங்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஆப்கானிஸ்தானின் இன்றைய அரசியல் நிலைமைகள் காரணமாக, 2001 இல் உலக சோசலிச வலைத் தளத்தால் வெளியிடப்பட்ட தாலிபான்களின் தோற்றம் மற்றும் அங்கு ஏகாதிபத்திய நாடுகளின் தலையீட்டின் பின்னால் உள்ள நோக்கங்கள் பற்றிய ஆய்வினை மறுபதிப்பு செய்கின்றோம்.

ஆப்கானிஸ்தானில் சமீபத்திய அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பின் இலக்காக தாலிபான் உள்ளது. எவ்வாறாயினும், இந்த இஸ்லாமிய தீவிரவாத அமைப்பின் தோற்றம், அதன் சமூக மற்றும் கருத்தியல் தளம் மற்றும் அதிகாரத்திற்கான அதன் உயர்வு பற்றிய ஒத்திசைவான விளக்கத்தினை 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' பற்றிய ஊடகங்களின் விரிவான விபரணங்களில் ஒருவர் எதையும் காணமுடியாதுள்ளது. இத்தகவல்கள் விடுபடுவது தற்செயலானது அல்ல. காபூலில் தற்போதைய மதவாத ஆட்சியை வளர்ப்பதில் வாஷிங்டனின் குற்றம்மிக்க பாத்திரத்தை தாலிபான்கள் பற்றிய எந்தவொரு கவனம்மிக்க ஆய்வும் வெளிப்படுத்துகிறது.

இஸ்லாமிய தீவிரவாதி ஒசாமா பின் லேடனுக்கும் அவரது அல் கொய்தா அமைப்பிற்கும் புகலிடம் அளித்ததற்காக தாலிபான்களை புஷ் நிர்வாகம் தண்டிக்கிறது. ஆனால் 1980 களில், சோவியத் ஒன்றியத்தை வீழ்த்துவதற்காக, காபூலில் மாஸ்கோ ஆதரவு ஆட்சிக்கு எதிராக இஸ்லாமிய புனிதப் போருக்கு அல்லது ஜிஹாத்துக்குக்கான முஜாஹிதீன்களுக்கு (Mujaheddin) பில்லியன் கணக்கான டாலர்களை அடுத்தடுத்து பதவிக்குவந்த அமெரிக்க நிர்வாகங்கள் செலவிட்டன. மேலும், 1990 களின் பிற்பகுதி வரை, அமெரிக்கா இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் தாலிபான்களின் பிற்போக்குத்தனமான சமூக கொள்கைகளை பற்றிக் கண்மூடித்தனமாக இருந்தது. தாலிபான்கள் இப்பிராந்தியத்தில் வாஷிங்டனின் நெருங்கிய நட்பு நாடுகளான சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தானால் ஆதரிக்கப்பட்டு நிதியளிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் வாஷிங்டனின் நோக்குநிலையின் திடீர்திருப்பங்களை தீர்மானிப்பதில் முதன்மையான காரணி இஸ்லாமிய தீவிரவாதத்தின் அச்சுறுத்தலாக இருக்கவில்லை. மாறாக 1991 இல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து மத்திய ஆசியாவில் திறக்கப்பட்ட புதிய வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றியதாகும். கடந்த தசாப்தத்திலிருந்து, ரஷ்யா, சீனா, ஐரோப்பிய சக்திகள் மற்றும் ஜப்பானுடன் இந்த முக்கிய மூலோபாய பிராந்தியத்தில் அரசியல் செல்வாக்குக்காகவும், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் போன்ற புதிதாக உருவாக்கப்பட்ட மத்திய ஆசிய குடியரசுகளில் உலகின் மிகப்பெரிய கையகப்படுத்தப்படாத எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்களை சுரண்டும் உரிமைக்காகவும் அமெரிக்கா போட்டியிடுகிறது.

மத்திய ஆசியாவில் மிகப்பெரிய சாத்தியமான இலாபங்களுக்கான திறவுகோல் இந்த தனிமைப்படுத்தப்பட்ட, பின்தங்கிய மற்றும் நிலப்பகுதியிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை உலகின் முக்கிய எரிபொருள் சந்தைகளுக்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பதில் தங்கியிருக்கும். ரஷ்யா ஊடாக பழைய சோவியத் விநியோக வலைப்பின்னல்கள் மட்டுமே இப்போதுள்ள குழாய்களாக இருந்தன. இப்பகுதியில் மூலவளங்களுக்கான போராட்டம் தீவிரமடைந்ததால், அமெரிக்காவின் நோக்கங்கள் தெளிவாக இருந்தன. இது ரஷ்யாவின் பொருளாதார ஏகபோகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த விரும்பியதுடன், அதேநேரத்தில் மற்ற போட்டியாளர்கள் இப்போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவதை உறுதிசெய்தது. எனவே சீனா மற்றும் ஈரானை தவிர்த்து, அமெரிக்கா கணிசமான அரசியல் செல்வாக்கை செலுத்தக்கூடிய நாடுகளின் வழியாக குழாய்கள் செல்ல வேண்டியிருந்தது.

மத்திய ஆசிய குடியரசுகள் முன்பு சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்ததுடன் மற்றும் சீனா, ஈரான் ஆகிய இரு நாடுகளுடனும் நீண்ட எல்லைகளைக் கொண்டிருந்தன. எனவே ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் தவிர்த்த ஒரு குழாய்வழி இரண்டு மாற்றுகளை திறந்துவிட்டிருந்தது. ஒன்று காஸ்பியன் கடலின் கீழ், காகசஸ் வழியாக அஜர்பைஜான் மற்றும் ஜோர்ஜியா வழியாகவும், பின்னர் துருக்கி ஊடான ஒரு வளைந்த பாதையாகும். மற்றையது, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியாக இரண்டாவது ஒரு குறுகிய பாதையாக இருந்தபோதிலும் உடனடியாக கடினமான அரசியல் கேள்விகளை எழுப்பியது. அதாவது ஆப்கானிஸ்தானில் யாருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் மற்றும் குழாய் அமைப்பதற்கும் பராமரிப்பதற்கும் தேவையான அரசியல் ஸ்திரத்தன்மைக்கு எவ்வாறு உத்தரவாதம் அளிக்க முடியும்?

1992 இல் முகமது நஜிபுல்லாவின் சோவியத் ஆதரவு ஆட்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, காபூல் போட்டியிடும் முஜாஹிதீன் கிளர்ச்சியாளர்களால் போர்க்களமாக மாற்றப்பட்டது. அரசாங்கத்தின் பெயரளவிலான தலைவராக பேராசிரியர் புர்ஹானுதீன் ரப்பானி (Burhanuddin Rabbani) பதவியிலிருந்தார். அவர் மிகவும் ஸ்திரமற்ற மற்றும் மாறும் கூட்டணிக்கு தலைமை தாங்கினார். முக்கியமாக வடக்கு ஆப்கானிஸ்தானை சேர்ந்த தாஜிக்குகள் மற்றும் உஸ்பெக்குகள் இனத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தார். போட்டியாளரான ஹிஸ்ப்-இ-இஸ்லாமி (Hizb-e-Islami) கிளர்ச்சியாளர்கள், தெற்கு ஆப்கானிஸ்தானில் பஷ்தூன் (Pashtun) பெரும்பான்மையிலிருந்து அணிதிரட்டப்படிருந்தனர். இவர்கள் காபூலின் புறநகர்ப் பகுதியிலும் வேரூன்றியுள்ளனர். இது குல்புதீன் ஹிக்மெத்யார் (Gulbuddin Hikmetyar) தலைமையில், தலைநகரில் உள்ள அரசு நிலைகளை பாரிய ராக்கெட் மழைக்கு மத்தியில் கைப்பற்றியது.

இருபிரிவினரின் மோதலுக்கு மத்தியில் தலைநகர் இடிபாடுகளாக மாற்றப்பட்டு அகதிகளின் அலைகளை உருவாக்கி, நாட்டின் எண்ணற்ற இன, மதப் பிரிவுகளை பிரதிபலிக்கும் பிற கிளர்ச்சி குழுக்கள் தோன்றின. இம்மோதல்கள் உள்ளூர் விரோதங்களை மட்டுமல்ல, அவற்றிற்கு ஆதரவளிக்கும் பல்வேறு நாடுகளின் நலன்களையும் பிரதிபலிக்கின்றன. அவை ஒவ்வொன்றும் அதன் சொந்த மேலாதிக்கத்தை நிறுவ முயன்றன. பாகிஸ்தான் ஹிக்மெத்யாரை ஆதரித்தது, ஈரான் ஷியா ஹசாராக்களை ஆதரித்தது, மற்றும் சவூதி அரேபியா, குறிப்பாக அதன் மார்க்கமான இஸ்லாமிய-வஹாபிஸத்திற்கு அனுதாபம் கொண்ட பல குழுக்களுக்கு நிதியளித்தது. மத்திய ஆசிய குடியரசுகள் வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள இனக்குழுக்களுடன் தொடர்புகளைக் கொண்டிருக்கின்றன. பின்னணியில், இந்தியா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய அனைத்தும் ஆப்கானிய அரசியல் விவகாரங்களில் கைகளை வைத்திருக்கின்றன.

காபூலின் நிலைமை ஒட்டுமொத்த நாட்டினது ஒரு நுண்ணிய பிரதிபலிப்பாகும். ரப்பானியின் அரசாங்கம் தனது உடனடி இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளுக்கு அப்பால் உண்மையான அதிகாரம் செலுத்தவில்லை. நாடு கிளர்ச்சியாளர்களுக்கிடையே சுற்றிவளைக்கப்பட்டு, பொருளாதாரமும் மற்றும் சமூக அமைப்பும் சிதைந்துபோயுள்ளது. 1980களில் சோவியத் ஆதரவு ஆட்சிக்கு எதிரான போரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்தனர் மற்றும் பலர் அகதிகளாகினர். 1990 களின் நடுப்பகுதியில், மக்களின் ஆயுட்காலம் வெறும் 43-44 ஆண்டுகள் மட்டுமே இருந்ததுடன் மற்றும் அனைத்து குழந்தைகளில் கால் பகுதியினர் ஐந்து வயதிற்கு முன்பே இறந்தனர். 29 சதவிகித மக்களுக்கு மட்டுமே சுகாதார வசதியும், வெறும் 12 சதவிகிதத்தினருக்கே சுத்தமான தண்ணீரும் கிடைக்கிறது.

1994 இல் தாலிபான்கள் தோன்றிய தெற்கில் உள்ள பஷ்தூன் பகுதிகள் மிகவும் குழப்பமானவை. நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கந்தஹார், மூன்று போட்டி போர்பிரபுக்களுக்கு இடையே பிரிக்கப்பட்டது. மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் டஜன் கணக்கான கிளர்ச்சியாளர்களின் தளபதிகளின் தன்னிச்சையான மற்றும் பெரும்பாலும் மிருகத்தனமான ஆட்சிக்கு உட்பட்டன. ஆப்கானிஸ்தானில் பொருளாதாரரீதியாக மிகவும் பின்தங்கிய மற்றும் சமூகரீதியாக பழமைவாதமாக இருந்த இப்பகுதியிலிருந்து பாரம்பரியமாக நாட்டின் அரசு ஆட்சியாளர்கள் உருவாகினர். காபூலின் புதிய தாஜிக் மற்றும் உஸ்பெக் தலைமையின் மீதான உள்ளூர் மனக்கசப்பு, தாங்கமுடியாத பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளால் உருவாக்கப்பட்ட விரக்தியுடன் பின்னிப் பிணைந்திருந்தது.

இருப்பினும், தெற்கு ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்கு பல முன்மொழியப்பட்ட குழாய்களுக்கான விருப்பமான பாதையாக இருந்தது. ஆர்ஜெண்டினா நிறுவனமான பிரீடாஸ் (Bridas) இந்த பந்தயத்தில் முதலில் நுழைந்தது. இந்நிறுவனம் 1992 மற்றும் 1993 இல் துர்க்மெனிஸ்தானில் நாட்டின் எரிவாயு துறைகளை ஆராய்ந்து சுரண்டுவதற்கான உரிமைகளைப் பெற்றது. மேலும் 1994 இல், எரிவாயு குழாய் அமைப்பது தொடர்பாக துர்க்மேனிய மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களுடன் கலந்துரையாடல்களைத் திறந்தது. இது சாத்தியக்கூறுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வழிவகுத்தது. எரிவாயு குழாய் அமைப்பது தொடர்பாக துர்க்மேன் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களுடன் விவாதங்களைத் திறந்தது, இது 1995 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு ஆய்வுக்கான சாத்தியக்கூறு பற்றிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வழிவகுத்தது. Bridas ஆரம்பத்தில் அமெரிக்க எரிசக்தி நிறுவனமான Unocal இனை இந்த திட்டத்தில் ஈடுபடுத்த முயன்றது. Unocal அதன் சொந்த திட்டங்களைக் கொண்டிருந்ததுடன் மற்றும் அந்த ஆண்டின் பிற்பகுதியில் ஒரு தனி குழாய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது, இரு நிறுவனங்களுக்கிடையில் கடுமையான போட்டி மற்றும் சட்டரீதியான மோதலைத் தூண்டியது.

முன்மொழியப்பட்ட பாதையில் இருந்த குழப்பமான சூழ்நிலைகளுக்கு முதலில் அரசியல் தீர்வு காண முடியும் என்று அனைத்து குழாய் திட்டங்களும் கருதின. ஏனைய அதிக முக்கியத்துவமற்ற வணிக நலன்களும் சிறிய போர்பிரபுக்கள் மற்றும் கிளர்ச்சியாளர்களை அழிக்க ஆர்வமாக இருந்தன. பாகிஸ்தானில் உள்ள குவெட்டாவிலிருந்து (Quetta) காந்தஹார் (Kandahar) மற்றும் ஹெராட் (Herat) வழியாக துர்க்மெனிஸ்தான் செல்லும் சாலை, மத்திய ஆசியாவிற்கு காபூல் வழியான வடக்கு சாலைக்கு ஒரே மாற்று போக்குவரத்து வழியை வழங்கியது. இலாபகரமான மத்திய ஆசிய வர்த்தகம் மற்றும் கடத்தல் மோசடிகளில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் கனரக வாகன உரிமையாளர்கள் ஒவ்வொரு இராணுவக் குழுக்களின் தளபதிகளுக்கு தமது வாகனங்கள் அவர்களது தரைப்பகுதியைக் கடக்கும்போது பெரிய கட்டணங்களை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதை அவர்கள் முடிவுகொண்டுவர விரும்பினர்.

தாலிபான்களின் மூலங்கள்

இந்த விவாதங்களுக்கு மத்தியில், தாலிபான் இயக்கம் ஒரு சாத்தியமான தீர்வாக தோன்றியது. இஸ்லாமிய பள்ளிகள் அல்லது 'மதரஸாக்கள்' மூலம் உருவாக்கப்பட்ட தாலிபான்கள் —மாணவர்கள் அல்லது 'தலிப்கள்'— வெறுமனே அரசாங்கங்கள் மற்றும் வணிக நலன்களின் உருவாக்கம் என்று சொல்ல முடியாது. 1994 இல் இந்த புதிய இயக்கத்தின் திடீர் தோற்றம் மற்றும் அதன் வளர்ச்சி மற்றும் வெற்றியின் துரிதத்தன்மை ஆகியவை இரண்டு காரணிகளின் விளைவுகளாகும். முதலாவதாக, சமூக மற்றும் அரசியல் குழப்பம் இதற்கான ஆட்களை உடனடியாக வினியோகிக்கும் நிலைமையை உருவாக்கியது. இரண்டாவதாக, பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் அனைத்து சாத்தியக்கூறுகளிலும் அமெரிக்காவிலிருந்தும் நிதி, ஆயுதங்கள் மற்றும் ஆலோசகர்கள் வடிவில் கிடைத்த வெளி உதவியாகும்.

பல தாலிபான் தலைவர்கள் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக அமெரிக்க ஆதரவுடனான 'ஜிஹாத்தில்' போராடியிருந்தாலும், இந்த இயக்கம், ஏனைய முஜாஹிதீன் பிரிவுகளிலிருந்து பிரிந்தவற்றிலிருந்தோ அல்லது அவற்றின் இணைப்பிலிருந்தோ தோன்றவில்லை. இது 1980களின் சண்டையில் நேரடியாக ஈடுபடாத ஒரு புதிய தலைமுறையை அடிப்படையாகக் கொண்டது. நஜிபுல்லாவின் வீழ்ச்சியால் சாதாரண ஆப்கானியர்களின் வாழ்க்கையில் துயரத்தைத் தவிர வேறொன்றையும் கொண்டுவராத குட்டி முஜாஹிதீன் சர்வாதிகாரிகளின் ஊழல் ஆட்சியாக கண்டதற்கு அவர்கள் விரோதமாக இருந்தனர். அவர்களின் சொந்த வாழ்க்கை, போரால் சிதைந்தது. அவர்களில் பலர் பாகிஸ்தானுக்குள் உள்ள அகதி முகாம்களில் வளர்ந்து பல்வேறு பாகிஸ்தான் இஸ்லாமிய தீவிரவாதக் கட்சிகளால் நடத்தப்படும் மதரஸாக்களில் அடிப்படை கல்வியைப் பெற்றனர்.

ஒரு ஆசிரியர் பின்வரும் விளக்கத்தை அளித்தார்: 'இந்த சிறுவர்கள் 1980களில் எனக்குத் தெரிந்த தங்கள் பழங்குடி மற்றும் குல பரம்பரைகளை விவரிக்கக்கூடிய, கைவிடப்பட்ட பண்ணைகள் மற்றும் பள்ளத்தாக்குகளை ஏக்கத்துடன் நினைவு கூர்ந்த மற்றும் புராணக்கதைகள் மற்றும் ஆப்கான் வரலாற்றின் பெருமைமிக்க கதைகளை கூறும் முஜாஹிதீன்களை விட வேறுபட்ட ஒரு உலகத்தை சேர்ந்தவர்கள். இந்த சிறுவர்கள் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பாளர்களுடனும் தனக்குள்ளும் போரில் ஈடுபடாத தங்கள் நாட்டை அமைதியான காலத்தில் பார்க்காத ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர்கள். ... அவர்கள் உண்மையில் போரின் அனாதைகள், வேரற்றவர்கள் மற்றும் அமைதியற்றவர்கள், வேலையில்லாதவர்கள் மற்றும் பொருளாதாரரீதியாக ஏழைகளும், சுய அறிவும் குறைந்தவர்கள்…

'கிராமத்து முல்லாக்களால் பறைசாற்றப்பட்ட ஒரு உலகத்தை மாற்றப்பிறந்த, தூய இஸ்லாம் மீதான அவர்களின் எளிய நம்பிக்கை, அவர்கள் பிடித்துக் கொள்ள வேண்டிய ஒரே ஊண்டுகோலாகவும் மற்றும் அவர்களின் வாழ்க்கைக்கு சில அர்த்தங்களையும் கொடுத்தது. அவர்களின் முன்னோர்களின் பாரம்பரிய தொழில்களான விவசாயம், கால்நடை வளர்ப்பு அல்லது கைவினைப்பொருட்கள் தயாரித்தல் போன்ற எதற்கும் இவர்கள் பயிற்சி பெறாதவர்கள். அவர்களைத் தான் கார்ல் மார்க்ஸ் ஆப்கானிஸ்தானின் உதிரிப் பாட்டாளி வர்க்கம் என்று அழைத்திருப்பார். [Taliban: Islam, Oil and the New Great Game in Central Asia, Ahmed Rashid, I.B Tauris, 2000, p.32].

தாலிபான்களின் சித்தாந்தம் இந்த சமூக அடுக்குகளை ஈர்க்கும் வகையில் உருவான யோசனைகளின் குழப்பமான ஒன்றாக இருந்தது. ஆரம்பத்திலிருந்தே, இவ் இயக்கம் மிகவும் பிற்போக்குத்தனமாக இருந்தது. தீர்க்கதரிசி முகமதுவின் கட்டளைகளை கண்டிப்பாக கடைபிடிக்கும் ஒரு புராணகால கடந்த காலத்தினை, அதன் சமூக தீர்வுகளுக்காக அது பின்னோக்கிப் பார்த்தது. காபூலில் “சோசலிசம்” என்ற கொடியின் கீழ் பிழையான பெயரில் அடுத்தடுத்து சோவியத் ஆதரவு பெற்ற ஆட்சிகளின் கொடூரம் மற்றும் அடக்குமுறையால் உருவாக்கப்பட்ட 'கம்யூனிச எதிர்ப்பில்' அது ஆழமாக ஊடுருவியிருந்தது.

கம்போடியாவில் உள்ள கெமர் ரூஜ் (Khmer Rouge) இயக்கம் போலவே, தாலிபான்களும் நகர்ப்புற வாழ்க்கை, கற்றல், கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்பம் மீதான ஒடுக்கப்பட்ட கிராமப்புற அடுக்குகளின் சந்தேகத்தையும் விரோதத்தையும் பிரதிபலித்தனர். அதன் தலைவர்களான அரைகுறையாக படித்த கிராம முல்லாக்கள், வேதங்கள் மற்றும் மத வர்ணனைகளில் தேர்ச்சி பெற்ற இஸ்லாமிய அறிஞர்கள் அல்ல. அவர்கள் மற்ற இஸ்லாமிய பிரிவுகளுக்கும், குறிப்பாக ஷியாக்களுக்கும், பஷ்தூன் அல்லாத இனத்தவர்களுக்கும் விரோதமாக இருந்தனர். தாலிபான்களின் பிற்போக்குத்தனமான சமூக அடையாளம், எந்த இஸ்லாமிய பாரம்பரியத்தைப் போலவே பஷ்தூன் பழங்குடிச் சட்டங்கள் அல்லது பஷ்தூன்வாலியிலிருந்து (Pashtunwali) பெறப்பட்டது. 19ம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க சீர்திருத்த இயக்கமான, தியோபாண்டிசம் (Deobandism) போன்று அதன் சித்தாந்தமும் இஸ்லாமியத்தை அடித்தளமாகக் கொண்டிருந்தபோதும், அதன் ஆகக்குறைந்த முற்போக்கான தன்மை எதுவும் அகற்றப்பட்டிருந்த ஒரு வடிவத்தை எடுத்திருந்தது.

போரால் அழிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஒருவகை மதவாத பாசிசமாக உருவெடுத்தனர். இது அடித்தளமற்ற, அவநம்பிக்கையுற்ற கிராமப்புற குட்டி முதலாளித்துவத்தின் பிரிவுகளான முல்லாக்களின் மகன்மாரினதும், குட்டி அதிகாரிகள், சிறு விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களின் விரக்தியையும் பிரதிபலித்தது. இப்பிரிவினர் ஒரு சர்வாதிகார இஸ்லாமிய ஆட்சியை திணிப்பதை தவிர ஆப்கானிஸ்தானில் பாரியளவில் காணப்படும் சமூகத் துயரங்களுக்கு எவ்வித மாற்றீட்டையும் காண முடியாதிருந்தனர்.

தலிபானின் சொந்த தோற்றம் பற்றிய விவரம், அதன் கோரிக்கை பற்றிய ஒரு உட்பார்வையை வழங்குகிறது. ஜூலை 1994 இல், ஒரு முன்னாள் கிராம முல்லாவான தாலிபானின் உயர்மட்டத் தலைவர் முகமது உமார், உள்ளூர் குடிப்படைக் குழுவின் தளபதியால் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இரண்டு சிறுமிகளை விடுவிக்க உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். முஜாஹிதீன் அமைப்புகளில் ஒன்றில் சண்டையிட்ட உமார், உள்ளூர் மதரஸாக்களின் குர்ரான் பாடசாலை மாணவர்களிடையே தனது ஆதரவாளர்களின் குழுவை ஒன்று திரட்டினார். ஒரு சில துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய குழு, சிறுமிகளை விடுவித்து தளபதியை கைதுசெய்து அவரின் டாங்கியின் சுடுகுழலில் தொங்கவிட்டது.

கதையின் உண்மை எதுவாக இருந்தாலும், தாலிபான்கள் தங்களை மத விழிப்புணர்வு கொண்டவர்களாக சித்தரித்து, சாதாரண மக்களுக்கு ஏற்படும் தவறுகளை சரிசெய்யும் நோக்கமுடையவர்களாக காட்டினர். அதன் தலைவர்கள் இந்த இயக்கம், முஜாஹிதீன் அமைப்புகளைப் போலல்லாமல், ஒரு அரசியல் கட்சி அல்ல மற்றும் அரசாங்கத்தில் பங்கெடுக்கும் நோக்கம் கொண்டதல்ல என்று வலியுறுத்தினர். அவர்கள் ஒரு உண்மையான இஸ்லாமிய நிர்வாகத்திற்கான வழியைத் தெளிவுபடுத்துவதாகக் கூறினர். அதனடிப்படையில், அணிதிரட்டியவர்களிடம் இருந்து பெரும் தியாகங்களைக் கோரினர். அவர்கள் ஆயுதங்கள் மற்றும் உணவை தவிர வேறேந்த ஊதியமும் பெறவில்லை.

பாகிஸ்தான் ஆதரவு

இருப்பினும், இவ்வாறான கதைகளுக்கும் உண்மைக்கும் இடையே எப்போதும் பெரிய இடைவெளி இருந்தது. தாலிபான்கள் தாக்கிவிட்டு ஓடும் கெரில்லா போரில் ஈடுபட்ட ஆயுதம்தரித்த மத ஆர்வலர்களின் குழுவாக இருப்பதை விட மேலான ஒன்றாக இருக்க வேண்டுமானால், இயக்கத்திற்கு அதிக அளவு பணம், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மற்றும் கணிசமான தொழில்நுட்ப மற்றும் இராணுவ நிபுணத்துவம் தேவை. இதில் எதுவுமே அதன் ஏழ்மையான பணியாளர்களிடமிருந்து வராது.

ஆரம்பத்திலிருந்தே, தாலிபான்களின் மிக முக்கியமான ஆதரவாளர் பாகிஸ்தான் ஆகும். ஆப்கானிய அரசியலில் ஆழமாக பொதிந்திருந்த பாகிஸ்தானின் சக்திவாய்ந்த உளவுத்துறை Interservices Intelligence (ISI), 1980களில் முஜாஹிதீன் குழுக்களுக்கு அமெரிக்க பணம், ஆயுதங்கள் மற்றும் நிபுணத்துவத்திற்கான முக்கிய வழித்தடமாக இருந்தது. 1994 களில், பெனாசிர் பூட்டோவின் அரசாங்கம் ஆர்ஜென்டினா நிறுவனமான Bridas உடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் தெற்கு ஆப்கானிஸ்தான் வழியாக ஒரு பாதையை உருவாக்க அதனால் முடியவில்லை. பாகிஸ்தானின் முக்கிய கையாளான ஹிக்மெத்யார், காபூலில் நடந்த சண்டையில் சிக்கி இருந்ததால், ஒரு தீர்வை வழங்க வாய்ப்பில்லாமல் இருந்தது.

பூட்டோவின் உள்துறை அமைச்சர் நசீருல்லா பாபர், தாலிபான்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தைத் தொடங்கினார். செப்டம்பர் 1994 இல், அவர் காந்தஹார் மற்றும் ஹெராத் வழியாக துர்க்மெனிஸ்தான் செல்லும் சாலையை ஆய்வு செய்ய, நில அளவீட்டாளர்கள் மற்றும் ISI அதிகாரிகளின் குழுவை ஏற்பாடு செய்தார். அடுத்த மாதம், பூட்டோ துர்க்மெனிஸ்தானுக்கு பறந்தார். அங்கு அவர் இரண்டு முக்கிய போர்பிரபுக்களின் ஆதரவைப் பெற்றார். துர்க்மேனிஸ்தான் எல்லைக்கு அருகே ஆப்கானிஸ்தானின் பகுதிகளைக் கட்டுப்படுத்தும் ரஷீத் டொஸ்ரும் (Rashid Dostum), மற்றும் ஹெரத்தை ஆட்சி செய்த இஸ்மாயில் கான் (Ismail Khan) ஆகியோரை அவர்கள். சர்வதேச நிதி உதவியை ஈர்க்கும் முயற்சியில், பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தை தளமாகக் கொண்ட பல வெளிநாட்டு இராஜதந்திரிகளையும் கந்தஹார் மற்றும் ஹெராட்டுக்கு அனுப்பியது.

அவரது திட்டத்திற்கு ஆதரவு பெறும் வகையில், உள்துறை அமைச்சர் பாபர் பரிசோதிக்கும் முயற்சியாக 30 இராணுவ வாகனங்களின் அணியை ஏற்பாடு செய்தார். இது மூத்த ISI கள அதிகாரியின் தலைமையில் முன்னாள் இராணுவ சாரதிகளை கொண்டிருந்ததுடன், தாலிபான் கிளர்ச்சியாளர்களால் பாதுகாப்பளிக்கப்பட்டது. அக்டோபர் 29, 1994 அன்று வாகனங்கள் புறப்பட்டன. மேலும், பாதை தடைசெய்யப்பட்டபோது, தாலிபான்கள் அதற்கு பொறுப்பான குடிப்படை குழுக்களைக் கையாண்டனர். நவம்பர் 5 அளவில், தாலிபான்கள் சாலைத் தடையை அகற்றியதோடு மட்டுமல்லாமல், குறைந்தபட்ச சண்டையோடு கந்தஹாரின் கட்டுப்பாட்டையும் கைப்பற்றினர்.

அடுத்த மூன்று மாதங்களில், ஆப்கானிஸ்தானின் 31 மாகாணங்களில் 12 மாகாணங்களை தாலிபான் கைப்பற்றியது. அதன் 'வெற்றிகள்', குறைந்த பட்சம் உள்ளூர் குடிப்படைக் குழுக்களின் தளபதிகளுக்கு பெரிய இலஞ்சத்துடன் பாதுகாக்கப்பட்டன. 1995 ஆம் ஆண்டின் மத்தியில் இராணுவ பின்னடைவின் தலைகீழ் மாற்றங்களுக்குப் பின்னர், தாலிபான்கள் பாகிஸ்தான் உதவியுடன் மறுசீரமைக்கப்பட்டு மற்றும் செப்டம்பர் 1995 இல் ஹெராத்தில் நுழைந்து, பாகிஸ்தானிலிருந்து மத்திய ஆசியாவுக்கான பாதையை திறம்பட திறந்துவைத்தனர். அடுத்த மாதம், Unocal துர்க்மெனிஸ்தானுடன் அதன் எரிபொருள்குழாய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

தாலிபான்களுக்கான நேரடி ஆதரவை ஒப்புக்கொள்வதில் பாகிஸ்தான் எப்போதும் எச்சரிக்கையாக உள்ளது. ஆனால் தொடர்புகள் எப்போதும் திறந்திருந்தன. ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் தனது சொந்த மதரஸாக்களை நடத்திய பாகிஸ்தானை தளமாகக் கொண்ட இஸ்லாமிய தீவிரவாத கட்சியான ஜாமியத்-இ-உலமா இஸ்லாத்துடன் (Jamiat-e-Ulema Islam - JUI) தாலிபான்களுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. JUI தாலிபான்களுக்கு அதன் பள்ளிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான ஆட்களை வழங்கியதுடன், பாகிஸ்தான் இராணுவம் மற்றும் ISI இன் உயர் மட்டங்களுக்கு ஒரு தொடர்பு வழியையும் வழங்கியுள்ளது.

தாலிபான்களின் இராணுவ வெற்றிக்கு வெளிப்புற தலையீடு மிக முக்கியமான அடையாளமாகும். ஒரு வருடத்திற்குள், இது ஒரு சில மாணவர்களிலிருந்து நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவக்குழுவாக வளர்ந்து, அது 20,000 கிளர்ச்சியாளர்களை திரட்ட முடிந்தது. இது டாங்கிகள், பீரங்கிகள் மற்றும் வான்வெளி ஆதரவுடன் தெற்கு மற்றும் மேற்கு ஆப்கானிஸ்தானின் பெரிய பகுதிகளைக் கட்டுப்படுத்துகிறது.

ஒரு எழுத்தாளர் கவனித்தபடி: 'பெரும்பாலும் முன்னாள் கெரில்லாக்கள் மற்றும் உள்ளூர் மாணவர்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு படையாக, தாலிபான்கள் தங்கள் செயல்பாடுகளின் தொடக்கத்திலிருந்தே காட்டிய திறமை மற்றும் அமைப்புமுறையுடன் செயல்பட்டிருக்க முடியும் என்பதும் நினைத்துப் பார்க்க முடியாதது. சந்தேகத்திற்கு இடமின்றி ஆப்கானிய ஆயுதப்படைகளின் முன்னாள் உறுப்பினர்கள் அவர்களின் அணியில் இருந்தனர். அவர்களின் தாக்குதல்கள் நடத்தப்பட்ட வேகம் மற்றும் நுட்பம், மற்றும் அவர்களின் தகவல்தொடர்புகள், விமான ஆதரவு மற்றும் பீரங்கி குண்டுவீச்சு போன்ற கூறுகளின் தரம், அங்கு ஒரு பாகிஸ்தான் இராணுவ பிரசன்னம் அல்லது குறைந்தபட்சம் அதன் தொழில்சார் ஆதரவிற்கு அது கடன்பட்டிருகின்றது என்பதை காட்டுகின்றது.” [Afghanistan: A New History, Martin Ewers, Curzon, 2001, pp182-3].

பாகிஸ்தான் மட்டும் அதன் உதவிக்கான ஆதாரம் இல்லை. சவூதி அரேபியா கணிசமான நிதி மற்றும் பொருள் உதவிகளையும் வழங்கியது. தாலிபான்கள் கந்தஹாரைக் கட்டுப்படுத்திய சிறிது நேரத்திற்குப் பின்னர், JUI தலைவர் மௌலானா ஃபஸ்லூர் ரஹ்மான் சவூதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து உதவிக்கான 'வேட்டையாடல் பயணங்களை' ஏற்பாடு செய்யத் தொடங்கினார். 1996 நடுப்பகுதியில், சவூதி அரேபியா நிதி, வாகனங்கள் மற்றும் எரிபொருளை காபூலை நோக்கி தாலிபான்களை தள்ளுவதற்கு ஆதரவாக அனுப்பியது. இதற்கான காரணங்கள் இரண்டு மடங்காகும். அரசியல் தளத்தில், தாலிபான்களின் அடிப்படைவாத சித்தாந்தம் சவூதியின் சொந்த வஹாபிசத்திற்கு நெருக்கமாக இருந்தது. இது ஷியா பிரிவினருக்கும் அதனால் ரியாத்தின் முக்கிய பிராந்திய போட்டியாளரான ஈரானுக்கும் விரோதமாக இருந்தது. மிகவும் புத்திசாலித்தனமான மட்டத்தில், சவூதி எண்ணெய் நிறுவனமான Delta Oil, Unocal எண்ணெய் குழாய் திட்டத்தில் ஒரு பங்காளியாக இருந்தது. மற்றும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தாலிபானின் வெற்றியின் மீது நம்பிக்கை வைத்திருந்தது.

அமெரிக்காவும் தாலிபான்களும்

பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியாவை போலவே, அமெரிக்காவும் தாலிபான்களுக்கு எந்த ஆதரவையும் மறுத்து வருகிறது. 1980 களில் பாகிஸ்தான் மற்றும் ISI உடன் CIA இன் நெருங்கிய ஈடுபாட்டைக் கருத்தில் கொண்டால், தாலிபான்களுக்கான பூட்டோ அரசாங்கத்தின் திட்டங்கள் வாஷிங்டனுக்குத் தெரியாது என்றும் மௌனமான ஒப்புதல் அளித்தது என்பதும் மிகவும் நம்பமுடியாதது. தாலிபான்களுக்கான பாகிஸ்தானின் ஆதரவு ஒரு வெளிப்படையான இரகசியமாக இருந்தது. ஆனால் 1990 களின் பிற்பகுதியில் தான், அமெரிக்கா இஸ்லாமாபாத் மீது அந்த ஆட்சியுடனான உறவுகள் தொடர்பாக அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது.

அமெரிக்க-தாலிபான் உறவுகளுக்கான மேலும் மறைமுக சான்றுகள், தாலிபான்கள் உருவானதிலிருந்து ஆப்கானிஸ்தான் தொடர்பான உத்தியோகபூர்வ அமெரிக்க ஆவணங்களை அணுகுவதற்காக, காங்கிரஸ் வெளிநாட்டு உறவுகள் குழுவின் உறுப்பினரான அமெரிக்க காங்கிரஸ்காரர் டானா ரோராபஹரின் (Dana Rohrabacher) முயற்சிகளிலிருந்து வருகிறது. ஆப்கானிய மன்னரின் ஆதரவாளரான ரோராபாஹர், கிளிண்டன் நிர்வாகத்துடன் நிச்சயமாக ஒரு கணக்கு தீர்க்க முயன்றிருந்தார். ஆனால் அவரது கோரிக்கைகளுக்கான பதில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இரண்டு வருட அழுத்தத்திற்குப் பின்னர், இறுதியாக 1996 க்குப் பிந்தைய காலப்பகுதியை உள்ளடக்கிய கிட்டத்தட்ட ஆயிரம் ஆவணங்களை வெளியுறவுத்துறை ஒப்படைத்தது. ஆனால் மிகமுக்கியமான முந்தைய காலகட்ட தகவல்களை கையளிப்பதை பிடிவாதத்துடன் மறுத்துவிட்டது.

தாலிபான்களுடனோ அல்லது பாகிஸ்தானிய கையாளுபவர்களுடனோ ஆரம்பகால அமெரிக்க தொடர்புகளின் சரியான விவரங்கள் கிடைக்கவில்லை என்றாலும், வாஷிங்டனின் அணுகுமுறை தெளிவாக இருந்தது. ஆசிரியர் அகமது ரஷீத் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: 'கிளிண்டன் நிர்வாகம் தாலிபான்களுக்கு தெளிவாக அனுதாபத்துடன் இருந்தது. ஏனெனில் அவர்கள் வாஷிங்டனின் ஈரான் எதிர்ப்பு கொள்கைக்கு இணங்கி இருந்தனர் மற்றும் ஈரானைத் தவிர்க்கும் மத்திய ஆசியாவிலிருந்து வரும் எந்த தெற்கு குழாய் திட்ட வெற்றிக்கும் முக்கியமானவர்களாக இருந்தனர். ஈரானை சீர்குலைக்க CIA க்கு அமெரிக்க காங்கிரஸ் 20 மில்லியன் டாலர்கள் நிதியுதவியை அங்கீகரித்தது. மேலும் இந்த நிதிகளில் சிலவற்றை வாஷிங்டன் தாலிபான்களுக்கு வழங்குவதாக தெஹ்ரான் குற்றம் சாட்டியது. இதனை வாஷிங்டன் எப்போதும் நிராகரித்துவந்துள்ளது. [Taliban: Islam, Oil and the New Great Game in Central Asia, p. 46].

உண்மையில், 1994 முதல் 1997 வரையிலான காலம் Unocal குழாய்க்கு ஆதரவைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்க இராஜதந்திர நடவடிக்கைகளின் பரபரப்புடன் ஒத்துப்போனது. மார்ச் 1996 இல், Unocal திட்டத்தின் ஆதரவாளரான அமெரிக்க செனட்டர் ஹாங்க் பிரவுண் (Hank Brown) காபூல் மற்றும் பிற ஆப்கானிஸ்தான் நகரங்களுக்கு விஜயம் செய்தார். அவர் தாலிபான்களைச் சந்தித்து, அமெரிக்காவில் ஆப்கானிஸ்தான் குறித்த Unocal நிதியுதவி மாநாட்டிற்கு பிரதிநிதிகளை அனுப்ப அவர்களை அழைத்தார். அதே மாதத்தில், Bridas உடனான ஏற்பாடுகளை கைவிடவும், அமெரிக்க நிறுவனத்திற்கு ஆதரவளிக்குமாறும் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது.

அடுத்த மாதம், தெற்காசியாவுக்கான அமெரிக்க உதவி வெளியுறவு அமைச்சர் ரொபின் ராஃபெல் (Robin Raphel) பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவுக்கு சென்று, தொடர்ந்து மோதலுக்கு அரசியல் தீர்வை வலியுறுத்தினார். 'அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க முடியாவிட்டால், இங்குள்ள பொருளாதார வாய்ப்புகள் இழக்கப்படும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம்,' என்று அவர் ஊடகங்களிடம் கூறினார். ராஃபெல் தாலிபான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை அல்லது உத்தியோகபூர்வ ஆதரவுக்கான வேறு எந்த குறிப்பையும் வழங்கவில்லை. ஆனால் 1990 களின் பிற்பகுதியில் இருந்த ஆட்சிக்கு அதன் இறுதி எச்சரிக்கையின் அடிப்படையாக இருந்த பெண்களின் உரிமைகள், போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதம் குறித்து தாலிபான்களை அமெரிக்கா கடுமையாக விமர்சிக்கவில்லை. ஒருவர் அவற்றை வேண்டுமென்றே புறக்கணிக்கவேண்டும் என்று கருதாவிட்டால், மூன்று பிரச்சினைகளுக்கும் ஏராளமான ஆதாரங்கள் இருந்தன.

* கந்தஹார் கைப்பற்றப்பட்டதிலிருந்து, தாலிபான்கள் மிக அடிப்படையான ஜனநாயக உரிமைகளைக் கூட பாதுகாக்க மாட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. பெண்கள் பள்ளிகளிலிருந்தும் பெண்கள் வேலை செய்வதிலிருந்தும் தடை செய்யப்பட்டனர். இது பெரும் கஷ்டங்களை உருவாக்கியது. ஆண்கள் மற்றும் பெண்கள் மீது கண்டிப்பான, அபத்தமான, ஆடைக் குறியீடு விதிக்கப்பட்டது மற்றும் ஒளிப்பதிவு மற்றும் தொலைக்காட்சி பார்ப்பது முதல் காத்தாடி பறப்பது வரை கிட்டத்தட்ட அனைத்து வகையான பொழுதுபோக்குகளும் தடை செய்யப்பட்டன. ஒரு மத காவல்துறை சமூகக் குறியீட்டை அமல்படுத்தி, குற்றவாளிகளுக்கு தெருவில் தன்னிச்சையான நீதியை வழங்கியது. விபச்சாரம் மற்றும் ஓரினச்சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக பொது மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. தாலிபான்களின் முல்லாக்களைத் தவிர வேறு யாரும் கருத்து சொல்லமுடியாத தாலிபான்களின் இறையாட்சி சர்வாதிகாரத்தை ஏற்றுக்கொள்ள மக்களை அச்சுறுத்துவதே முழு அடக்குமுறை அமைப்பின் நோக்கமாகும். அவர்களின் முடிவுகள் கூட, கந்தஹாரில் முல்லா உமார் தடை உத்தரவால் மீற முடியாததாக இருந்தது.

* மிகப்பெரிய ஆப்கானிய ஹெராயின் (heroin) தொழிற்துறையின் விஷயத்தில், அமெரிக்கா அதன் விரிவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தது. 1980கள் முழுவதும், முஜாஹிதீன் குழுக்கள் மற்றும் அவர்களின் பாகிஸ்தான் கையாட்கள், ஆப்கானிஸ்தானுக்கு ஆயுதங்களை பெறுவதற்கு CIA உதவியுடன் அமைக்கப்பட்ட இரகசிய விநியோக வழிகளை பயன்படுத்தினர். இதனூடாக நாட்டிலிருந்து அதிக அளவில் அபின் கடத்தப்பட்டது. சோவியத் இராணுவத்திற்கு எதிரான போரைத் தொடுக்கும் நலன்களுக்காக CIA போதைப்பொருள் வர்த்தகத்தை கவனத்திற்கு எடுக்காதுவிட்டது. 1990களின் முற்பகுதியில், ஆப்கானிஸ்தான் உலகின் மிகப்பெரிய அபின் உற்பத்தியாளராக பர்மாவுடன் போட்டியிட்டது. ஆரம்பத்தில் அபின் உற்பத்திக்கு தடைவிதித்த தாலிபான்கள், ஆப்கானிஸ்தானின் பாழடைந்த பொருளாதாரத்திற்கு சில மாற்று வருமான ஆதாரங்கள் இல்லாததை உணர்ந்து அதன் மீதான தடையை எடுத்தது போலவே அமெரிக்காவும் அதே அணுகுமுறையை எடுத்தது. தாலிபான்கள் கந்தஹாரை கைப்பற்றிய பின்னர், சுற்றியுள்ள மாகாணத்தில் இருந்து அபின் உற்பத்தி 50 சதவீதம் அதிகரித்தது. அதன் படைகள் மேலும் வடக்கே நகர்ந்தபோது, நாட்டின் ஒட்டுமொத்தமாக மதிப்பிடப்பட்ட உற்பத்தி 1997 இல் 2,800 டன்னாக, 1995 இல் இருந்து குறைந்தபட்ஷம் 25 சதவிகிதத்தினால் அதிகரித்தது. இவை எதுவுமே வாஷிங்டனில் பொது கண்டனங்களைத் தூண்டவில்லை.

* இஸ்லாமிய தீவிரவாதத்தின் அச்சுறுத்தலுக்கான அமெரிக்க அணுகுமுறை பாசாங்குத்தனமானது. 1980 களில், அமெரிக்கா பொதுவாக முஜாஹிதீனுக்கு ஆதரவை வழங்கியது மட்டுமல்லாமல், 1986 ஆம் ஆண்டில், முழு முஸ்லீம் உலகமும் சோவியத் எதிர்ப்பு போரை ஆதரிப்பதாக எடுத்துக்காட்ட சர்வதேச அளவில் கிளர்ச்சியாளர்களை அணிதிரட்டுவதற்கான ஒரு பாகிஸ்தான் திட்டத்தை குறிப்பாக அங்கீகரித்தது. இத்திட்டத்தின் கீழ், மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, ஆபிரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 35,000 இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் ஆப்கானிஸ்தானில் போரிட பயிற்சி பெற்று ஆயுதம் ஏந்தியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அரபு ஆப்கானிஸ்தானியர்களில் முக்கியமானவர்களில், அவர்களால் பெயரிடப்பட்ட ஒசாமா பின்லேடன் ஆவார். இவர் ஒரு பணக்கார யேமன் கட்டுமான அதிபரின் மகன் ஆவார். அவர் 1980 முதல் பாகிஸ்தானில் முஜாஹிதீனுக்கான சாலைகள் மற்றும் தளங்களைக் கட்டினார். அவர் 1986 இல் CIA உடன் இணைந்து கோஸ்ட் சுரங்கப்பாதை வளாகத்தை ஆயுதக் கிடங்கு மற்றும் பயிற்சி நிலையமாக உருவாக்கினார். பின்னர் தனது சொந்த பயிற்சி முகாமைக் கட்டி மற்றும் 1989 இல் அரபு ஆப்கானியர்களுக்கு அல் கொய்தாவை (Base) நிறுவினார்.

காபூலின் வீழ்ச்சி

1990 களின் நடுப்பகுதியில் தாலிபான்கள் மீதான அமெரிக்க அணுகுமுறை, பின்லேடன் தொடர்பானதோ அல்லது போதைப்பொருள் மற்றும் ஜனநாயக உரிமைகளால் தீர்மானிக்கப்படவில்லை. அமெரிக்க அதிகாரி ரொபின் ராஃபெல் 1996 ஆம் ஆண்டின் மத்தியில் உத்தியோகபூர்வமாக தாலிபான்களைத் தழுவிக்கொள்வதில் தெளிவற்றவராக இருந்தது ஏனெனில், தாலிபான் தங்கள் எதிரிகளைத் தோற்கடித்து, Unocal திட்டத்திற்கு ஒரு ஸ்திரமான அரசியல் சூழலை வழங்குவார்கள் என்பதில் வாஷிங்டன் நிச்சயமில்லாதிருந்ததாலாகும்.

1995 இல் ஹெராட் கைப்பற்றப்பட்ட பின்னர், தாலிபான்கள் அதன் தாக்குதலின் கவனத்தை காபூலுக்கு மாற்றினார்கள். எதிர்பார்த்த மோதலுக்காக ஆப்கானிஸ்தானுக்குள் தங்கள் பினாமிகளை ஆயுதமாக்குவதில் அனைத்து தரப்பினரும் ஈடுபட்டனர். பாகிஸ்தானும் சவூதி அரேபியாவும் தாலிபான்களை வழங்கியது, கந்தஹார் விமான நிலையத்தை மேம்படுத்தியது மற்றும் ஒரு புதிய தொலைபேசி மற்றும் வானொலி வலைப்பின்னலை உருவாக்கியது. ரஷ்யாவும் ஈரானும் காபூலுக்கு வடக்கே பக்ராம் விமான தளம் வழியாக ரப்பானி ஆட்சி மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் எரிபொருள்களை அனுப்பின. ஆப்கானிஸ்தானின் தேசிய விமான சேவையை புதுப்பிக்க நிதி வழங்குவதன் மூலம் இந்தியா மறைமுகமாக ரப்பானிக்கு உதவியது.

ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் ரப்பானிக்கும் தாலிபான்களுக்கும் இடையேயான ஒப்பந்தத்தில் மத்தியஸ்தம் செய்ய மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. ஆகஸ்ட் 1996 இல், பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜலாலாபாத்தை தாலிபான் படையினர் கைப்பற்றி பின்னர் அடுத்த மாதம் காபூலில் இருந்து எதிர் படைகளை வெளியேறும்படி கட்டாயப்படுத்தினர். அதன் முதல் செயல்களில் ஒன்று, நஜிபுல்லா மற்றும் அவரது சகோதரரை கொடூரமாக சித்திரவதை செய்து கொன்றதாகும். அவர்கள் 1992 முதல் தலைநகரில் ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தின் இராஜதந்திர பாதுகாப்பின் கீழ் வாழ்ந்துவந்தனர். அவர்களின் சிதைக்கப்பட்ட உடல்களை வீதியில் கட்டித் தொங்கவிட்டனர். இதற்கான வாஷிங்டனின் எதிர்வினை பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது:

“காபூலை தாலிபான்கள் கைப்பற்றிய சில மணிநேரங்களுக்குள், அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு அதிகாரியை காபூலுக்கு அனுப்புவதன் மூலம் தலிபானுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதாக அறிவித்தது. இந்த ஒரு அறிவிப்பையும் அது விரைவாக திரும்பப் பெற்றது. இஸ்லாமிய சட்டத்தை திணிக்க தாலிபான்கள் எடுத்த நடவடிக்கைகளில் அமெரிக்கா 'ஆட்சேபனைக்குரியது எதுவுமில்லை' என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கிளின் டேவிஸ் கூறினார். அவர் தாலிபான்களின், மேற்கத்திய-எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு பதிலாக நவீனத்துவத்திற்கு-எதிரானது என்று விவரித்தார். அமெரிக்க காங்கிரஸ்காரர்கள் தாலிபான்களுக்கு ஆதரவாக இருந்தனர். ‘நடந்தவற்றில் நல்ல விடயம் என்னவென்றால், கடைசியாக ஒரு பிரிவினர் ஆப்கானிஸ்தானில் ஒரு அரசாங்கத்தை உருவாக்கும் திறனைக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது,’ என்று Unocal திட்டத்தின் ஆதரவாளரான செனட்டர் ஹாங்க் பிரவுன் கூறினார்” [ப .166].

Unocal இன் பதிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தது. நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ் டாகெர்ட் தலிபானின் வெற்றியை வரவேற்று இப்போது அதன் குழாய் திட்டத்தை முடிக்க எளிதாக இருக்கும் என்று விளக்கினார். பின்னர் அறிக்கையை விரைவாக திரும்பப் பெற்றார். அர்த்தம் தெளிவாக இருந்தது. Unocal திட்டத்திற்கு தேவையான ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான சிறந்த வழிமுறையாக தாலிபான்களை அமெரிக்கா பார்த்தது. ஆனால் அதன் கட்டுப்பாடு சவால் செய்யப்படாதிருக்கும் வரை புதிய ஆட்சியை வெளிப்படையாக ஆதரிக்க தயாராக இல்லை.

நவம்பர் 1996 இல் ஒரு மூடிய கதவுக்குள் ஐ.நா அமர்வில் பேசுகையில், ரஃபேல் வெளிப்படையாக விளக்கினார்: 'தாலிபான்கள் நாட்டின் மூன்றில் இரண்டு பங்குக்கும் மேல் கட்டுப்பாட்டை கொண்டுள்ளனர். அவர்கள் ஆப்கானியர்கள், அவர்கள் பூர்வீக குடிகள் மற்றும் அவர்கள் அதிகாரத்திலிருப்பதற்கான பலத்தை நிரூபித்துள்ளனர். அவர்களின் வெற்றியின் உண்மையான ஆதாரம் பல ஆப்கானியர்கள் குறிப்பாக பஷ்தூன்கள், கடுமையான சமூகக் கட்டுப்பாடுகளுடன் கூட, அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக ஒரு முடிவில்லாத சண்டையையும் மற்றும் குழப்பத்தையும் மறைமுகமாக நிறுத்த விரும்புவதாகும். ஆப்கானியர்களுக்காக அல்லது இங்குள்ள எங்களின் நலன்களுக்காக தாலிபான்கள் தனிமைப்படுத்தப்படவேண்டியதில்லை.

Unocal வாஷிங்டனின் ஆதரவுடன் மிகவும் இலாபகரமான ஒப்பந்தத்தைப் பெறும் முயற்சியில், Bridasக்கு எதிராக அமெரிக்க நிறுவனத்தை பயன்படுத்தும் தாலிபான் தலைவர்களை தொடர்ந்து தீவிரமாக ஈர்க்க முயன்றது. தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள கந்தஹாரில் ஒரு உதவித் திட்டத்தின் முன்னணியாக ஓமாஹா பல்கலைக்கழகத்தில் ஆப்கானிஸ்தான் படிப்பு மையத்தை அமைக்க Unocal கிட்டத்தட்ட 1 மில்லியன் டாலர்களை வழங்கியது. நிறுவனத்தின் 'உதவி'யின் முக்கிய நோக்கம் அதன் குழாய்வழிகளை உருவாக்க தேவையான குழாய்கள் பொருத்துனர்கள், மின்சார தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் தச்சு வேலையாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் பள்ளி ஆகும். நவம்பர் 1997 இல், டெக்சாஸின் ஹூஸ்டனில் Unocal தாலிபான் பிரதிநிதிகளுக்கு விருந்தளித்ததுடன் மற்றும் அவ்வருகையின் போது வெளியுறவுத்துறை அதிகாரிகளைச் சந்தித்தனர்.

வாஷிங்டனின் அரசியல் திருப்பம்

ஆனால் அரசியல் காற்று ஏற்கனவே முன்கணிக்கமுடியாத வகையில் திரும்பிக் கொண்டிருந்தது. முக்கிய திருப்புமுனை மே 1997 இல் தாலிபான்கள் முக்கிய வடக்கு நகரான மசார்-இ-ஷெரீப்பை (Mazar-e-Sharif) கைப்பற்றி, உஸ்பெக்ஸ், தாஜிக் மற்றும் ஷியா ஹசாராக்களின் விரோத மற்றும் சந்தேகத்திற்கிடமான மக்கள் மீது தங்கள் மத மற்றும் சமூக கட்டுப்பாடுகளை விதிக்க முயன்றனர். அவர்களின் நடவடிக்கைகள் கிளர்ச்சியை தூண்டின. இதில் நகரத்தில் தீவிர சண்டையில் சுமார் 600 தாலிபான் துருப்புக்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் தப்பிக்க முயன்றபோது குறைந்தது 1,000 பேர் பிடிபட்டு படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்த இரண்டு மாதங்களில், தாலிபான்கள் வடக்கு முனைகளில் மீண்டும் விரட்டப்பட்டனர். இது அவர்களின் மிக மோசமான இராணுவ தோல்வியாக மாறியது. 10 வார சண்டையில், 3,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு மற்றும் காயமடைந்தனர். மேலும் 3,600 பேர் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

மசார்-இ-ஷெரீப் வெறுமனே ஒரு இராணுவ பின்னடைவு மட்டுமல்ல. தாலிபான்கள் மீண்டும் ஒழுங்கமைக்கப்பட்டு, ஆகஸ்ட் 1998 இல் மீண்டும் நகரைக் கைப்பற்றி, ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான ஷியைட் ஹசாராக்களைக் கொன்றனர். மற்றும் 11 ஈரானிய அதிகாரிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளரைக் கொன்றமை ஈரானுடன் போரைத் தூண்டியது. இருப்பினும், மே 1997 நிகழ்வுகள், தாலிபான்கள் மீதான பஷ்தூன் அல்லாதவர்களிடையே ஆழ்ந்த விரோதத்தை வெளிப்படுத்தின. உள்நாட்டுப் போர் தவிர்க்க முடியாமல் ஒரு நீடித்த போராக இருக்கும் என்பதையும், வடக்கில் எதிர்க்கட்சிகளின் கோட்டைகளை கைப்பற்றுவதில் தாலிபான்கள் வெற்றி பெற்றாலும், கிளர்ச்சிகள் மற்றும் மேலும் அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக இருந்தது.

மஜர்-இ-ஷெரீப் தோல்விக்குப் பின்னர், வாஷிங்டனில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. ஜூலை 1997 இல், திடீர் கொள்கை மாற்றத்தில் கிளின்டன் நிர்வாகம் ஈரான் ஊடாக இயங்கும் துர்க்மெனிஸ்தான்-துருக்கி எரிவாயு குழாய் வழிக்கு அதன் எதிர்ப்பை முடிவுக்குக் கொண்டுவந்தது. அதற்கு அடுத்த மாதம், Royal Dutch Shell உட்பட ஐரோப்பிய நிறுவனங்களின் கூட்டமைப்பு அத்தகைய ஒரு திட்டத்தினை அறிவித்தது. ஆஸ்திரேலியாவின் BHP Petroleum ஏற்படுத்திய ஒரு தனி ஒப்பந்தத்தில் ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்கும் அல்லது இந்தியாவுக்கும் மற்றொரு எரிவாயு குழாய் திட்டத்தை முன்மொழிந்தது.

அதே காலகட்டத்தில், அமெரிக்காவும் துருக்கியும் கூட்டாக 'போக்குவரத்து பாதை' என்ற யோசனைக்கு ஆதரவளித்தன. இது அஜர்பைஜானின் பாக்குவிலிருந்து ஜோர்ஜியா வழியாக மத்தியதரைக் கடலில் உள்ள துருக்கியின் செஹான் துறைமுகத்திற்கு ஒரு பெரிய எண்ணெய்க் குழாய் திட்டமாகும். வாஷிங்டன் துர்க்மெனிஸ்தான் மற்றும் கஜகஸ்தானை காஸ்பியன் கடலின் கீழ், அதே பாதையின் ஊடாக எரிவாயு மற்றும் எண்ணெய் குழாய்களை அமைக்கும் திட்டத்தில் பங்கேற்க வலியுறுத்தத் தொடங்கியது.

துர்க்மெனிஸ்தானில் இருந்து எரிவாயு குழாய்க்கான Unocal இன் திட்டம் இப்போது போட்டியை எதிர்கொண்டது. மேலும், இந்த போட்டி முன்மொழிவுகள் குறைந்தபட்சம் குறுகிய காலத்திற்கு, அரசியல்ரீதியாக நிலையானதாக இருக்கும் என்று உறுதியளிக்கப்பட்ட பாதைகளில் இருந்தன. Bridas மற்றும் Unocal இரண்டும் தெற்கு ஆப்கானிஸ்தானில் தங்கள் திட்டங்களை முன்னெடுத்தன. ஆனால் அதற்கான வாய்ப்புகள் பெருகிய முறையில் தொலைவில் இருந்தன. 1997 இன் பிற்பகுதியில், Unocal துணைத் தலைவர் மார்ட்டி மில்லர் பின்வருமாறு தெரிவித்தார்: “இந்தத் திட்டம் எப்போது தொடங்கும் என்பது நிச்சயமற்றது. இது ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் நாம் இணைந்து பணியாற்றக்கூடிய ஒரு அரசாங்கத்தைப் பொறுத்தது. அது இந்த வருடத்தின் முடிவாக இருக்கலாம், அடுத்த வருடம் அல்லது மூன்று வருடங்கள் ஆகலாம் அல்லது சண்டை தொடர்ந்தால் இது தோல்வியுற்றதாகவும் இருக்கலாம்”.

வாஷிங்டனின் அரசியல் வார்த்தையாடல்களில் ஒரு இணையான மாற்றமும் நடக்கத் தொடங்கியது. நவம்பர் 1997 இல், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மடலீன் ஆல்பிரைட் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தபோது புதிய குரலை வெளிப்படுத்தினார். பெண்களுக்கு எதிரான தலிபானின் கொள்கைகளை 'இழிவானது' என்று கண்டனம் செய்வதற்கும், பாகிஸ்தானை சர்வதேசரீதியாக தனிமைப்படுத்தும் அபாயம் இருப்பதை சுட்டிக்காட்டவும் அவர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தினார். ஹெராயின் வர்த்தகத்தில் தாலிபான்களின் ஈடுபாடு மற்றும் 'இஸ்லாமிய பயங்கரவாதத்தின்' ஆபத்துகள் குறித்து வாஷிங்டன் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது.

ஆகஸ்ட் 1998 இல் கென்யா மற்றும் தான்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, கிளிண்டன் நிர்வாகம் ஒசாமா பின்லேடனின் ஆப்கானிஸ்தானின் கோஸ்டில் (Khost) உள்ள பயிற்சி முகாம்களுக்கு எதிராக குரூஸ் ஏவுகணைகளை ஏவியபோது, அமெரிக்க கொள்கையில் முழுமாற்றம் ஏற்பட்டது. பின்லேடன் ஆறு வருடங்களுக்குப் பின்னர் மே 1996 இல் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பினார். அந்த சமயத்தில் அவர் பாரசீக வளைகுடா மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் பங்கு தொடர்பாக கசப்புடையவராக மாறினார். ஆகஸ்ட் 1996 இல் அவர் அமெரிக்காவிற்கு எதிராக ஜிஹாத்துக்கு பகிரங்க அழைப்பு விடுக்கத் தொடங்கினார். ஆபிரிக்க குண்டுவெடிப்புகளுக்கு பின்னர்தான், வாஷிங்டன் பின்லேடன் சம்பந்தப்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் அளிக்காமல் அவரை ஒப்படைக்குமாறு தலிபானை கோர ஆரம்பித்தது.

Unocal தனது குழாய் திட்டத்தை நிறுத்தி, அதன் அனைத்து ஊழியர்களையும் கந்தஹார் மற்றும் இஸ்லாமாபாத்தில் இருந்து வெளியேற்றியது. எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 25 டாலரில் இருந்து 13 டாலர் வரை பாதியாகக் குறைந்தபோது சவப்பெட்டியின் இறுதி ஆணி 1998 ஆம் ஆண்டின் இறுதியில் அடிக்கப்பட்டது. குறைந்தபட்சம் குறுகிய காலத்திற்கு Unocal இன் குழாய் திட்டத்தை இலாபகரமற்றதாக்கியது. அதே நேரத்தில், பின் லேடனை ஒப்படைக்க வேண்டும், அத்துடன் போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் மனித உரிமைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிளின்டன் நிர்வாகத்தின் கோரிக்கைகள், ஐ.நா. சபையினால் 1999 இல் தாலிபான்கள் மீது விதிக்கப்பட்ட தொடர்ச்சியான தண்டனைகளுக்கு அடித்தளமானதுடன், இவை இந்த ஆண்டு இன்னும் இறுக்கமாக்கப்பட்டன.

தாலிபான்கள் மற்றும் பாகிஸ்தான் மீது கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்ட போதிலும், அமெரிக்காவின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. 1998 மற்றும் 1999 இல், தாலிபான்கள் புதிய இராணுவத் தாக்குதல்களைத் தொடங்கி மற்றும் அதன் கட்டுப்பாட்டை விரிவுபடுத்தினர். அதன் எதிரிகளை வடகிழக்கு பகுதிகளில் உள்ள மறைவிடங்களுக்குள் தள்ளினார்கள். ஆனால் உள்நாட்டுப் போர் எந்த முடிவை அடைவதற்கும் நெருக்கமாக இருக்கவில்லை. ரஷ்யா மற்றும் ஈரான் தலிபானின் எதிரிகளுக்கு ஆயுதங்களை வழங்குவதை தொடர்ந்தன. ஐ.நா.வின் தடைகள், வாஷிங்டனின் போட்டியாளர்கள் ஆப்கானிஸ்தானில் சாதகமான நிலையை அடைவதைத் தடுக்கும் விளைவைக் கொண்டிருந்தாலும், இப்பிராந்தியத்தில் ஒரு உறுதியான அடித்தளத்தை நிறுவுவதற்கு அமெரிக்காவால் முடியவில்லை.

அமெரிக்க நிர்வாகம் இப்போது நியூ யோர்க் மற்றும் வாஷிங்டன் மீதான செப்டம்பர் 11 தாக்குதல்களை மத்திய ஆசியாவின் நீண்டகாலமாக வடிவமைக்கப்பட்ட திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு பற்றிக்கொண்டது. எந்த ஆதாரத்தையும் அளிக்காமல், புஷ் உடனடியாக அமெரிக்காவின் பேரழிவுக்கு பின் லேடனை பொறுப்பேற்க வைத்து, தாலிபான் ஆட்சிக்கு தொடர்ச்சியான இறுதி எச்சரிக்கைகளை வெளியிட்டார்: பின் லேடனை ஒப்படைக்கவும், அல்-கொய்தா அமைப்புகளை மூடிவிட்டு அனைத்து 'பயங்கரவாத பயிற்சி முகாம்களுக்கும்' அமெரிக்கா அணுகுவதற்கு அனுமதிக்க கோரினார். தாலிபான்கள் அவரது முடிவேயில்லாத கோரிக்கைகளை நிராகரித்தபோது, அரசாங்கத்தை பதவியிலிருந்து இறக்க, புஷ் தனது தளபதிகளுக்கு ஆயிரக்கணக்கான குண்டுகள் மற்றும் கப்பலில் இருந்து ஏவும் ஏவுகணைகளை ஆப்கானிஸ்தானில் கட்டவிழ்த்துவிட பகிரங்கமாக சைகை கொடுத்தார்.

புஷ் நிர்வாகம் மற்றும் சர்வதேச ஊடகங்களை ஒருவர் நம்பினால், உலகின் மிகவும் பின்தங்கிய நாடுகளில் ஒன்றின் மீது வாஷிங்டனின் விரிவான மற்றும் செலவுமிக்க போரின் ஒரே நோக்கம் பின் லேடனைப் பிடித்து அவரது அல் கொய்தா வலைப்பின்னலை உடைப்பதுதான் என்று நம்புவார்கள். ஆனால் இந்த வரலாற்று மீள்பார்வை நிரூபிப்பது போல், ஆப்கானிஸ்தானில் வாஷிங்டனின் நோக்கங்கள் பயங்கரவாதம் பற்றிய பயத்தாலோ அல்லது மனித உரிமைகள் குறித்த கவலைகளாலோ தீர்மானிக்கப்படவில்லை. உஸ்பெகிஸ்தானில் துருப்புகளுடன் மத்திய ஆசிய குடியரசுகளில் அமெரிக்கா முதன்முறையாக ஒரு இராணுவ பிரசன்னத்தை நிறுவியுள்ளதுடன் மற்றும் அதன் இராணுவ பிரச்சாரம் ஆப்கானிஸ்தானில் தாலிபானுக்கு பிந்தைய ஒரு ஆட்சிக்கான விதிமுறைகளை ஆணையிடுவதை உறுதி செய்கிறது. நாளை பின் லேடன் கொல்லப்பட்டாலும், அவரது அமைப்பு அழிக்கப்பட்டாலும், இந்த முக்கிய மூலோபாய பிராந்தியத்தின் ஆதிக்கம் மற்றும் அதன் பரந்த மூலவள இருப்புக்கான இந்த முதல் படிகளில் இருந்து பின்வாங்கும் எண்ணம் வாஷிங்டனுக்கு இல்லை.

பிற்குறிப்புகள்:

1.Taliban: Islam, Oil and the New Great Game in Central Asia, Ahmed Rashid, I.B Tauris, 2000
2.Afghanistan: A New History, Martin Ewers, Curzon, 2001
3.Reaping the Whirlwind: The Taliban Movement in Afghanistan, Michael Griffin, Pluto Press, 2001

Loading