முன்னோக்கு

ஆப்கானிஸ்தான் பற்றிய பைடெனின் உரை: ஒரு மோசமான தோல்வியின் ஒப்புதல் வாக்குமூலம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகால அமெரிக்க போர் முடித்துக் கொள்ளப்பட்டதாக அறிவித்து செவ்வாய்கிழமை மதியம் ஓர் உரை வழங்கினார்.

ஒரு சி-17 இராணுவ போக்குவரத்து விமானம் கடைசி அமெரிக்க துருப்புக்களையும் ஏற்றிக் கொண்டு காபூலில் இருந்து புறப்பட்டதற்கு மறுநாள், அமெரிக்க ஆக்கிரமிப்பு முடிந்து விட்டதற்காக ஆப்கானிஸ்தான் வீதிகளில் நடந்த கொண்டாட்டங்களுக்கு மத்தியில், பைடெனின் உரை வெள்ளை மாளிகையில் இருந்து இது வரை கேட்டிராத அறிக்கைகளை உள்ளடக்கி இருந்தது, ஓர் அவமானகரமான தோல்வியில் முடிந்த ஒரு போருக்கு நாசகரமாக விலை கொடுக்கப்பட்டதை அந்த உரை ஒப்புக்கொண்டது.

President Joe Biden speaks about the end of the war in Afghanistan from the State Dining Room of the White House, Tuesday, Aug. 31, 2021, in Washington. (AP Photo/Evan Vucci)

தலிபான் கிளர்ச்சியின் கைகளில் அமெரிக்கா சந்தித்த தோல்வி ஆப்கானிஸ்தானில் பின்பற்றப்பட்ட கொள்கைகளின் தோல்வியை மட்டுமல்ல, பல தசாப்தங்களாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமெரிக்க ஏகாதிபத்திய நடவடிக்கைகளை வழிநடத்திய மொத்த மூலோபாய தோல்வியையும் அம்பலப்படுத்துகிறது.

தலிபானால் அந்நாடு கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டிருந்த குழப்பமான 17 நாள் வெளியேற்றத்தைப் பைடென் நிர்வாகம் கையாண்ட விதம், காபூல் கைப்பாவை ஆட்சி மற்றும் அமெரிக்கா பயிற்றுவித்த அதன் பாதுகாப்பு படைகளின் மிகப்பெரும் பொறிவு ஆகியவை மீதான கடுமையான விமர்சனத்திலிருந்து அவர் நிர்வாகத்தைப் பாதுகாத்துக் கொள்வதே பைடென் உரையின் உடனடி அரசியல் நோக்கமாக இருந்தது. அந்த நடவடிக்கைகளில் 13 அமெரிக்க இராணுவத்தினர் உயிரிழந்தனர், மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல்கள் குடியரசுக் கட்சியினரிடமிருந்து மட்டுமல்ல, ஜனநாயகக் கட்சி நிர்வாகிகளின் பரந்த அடுக்கில் இருந்தும் வருகின்றன. அமெரிக்க இராணுவத்திற்குள் தன்னை 'உட்பொதிந்து' கொண்டு, அமெரிக்கப் போர்களுக்குத் தளராது உற்சாகமூட்டி சேவையாற்றும் ஊடகங்கள், குறிப்பாக கடும் கோபத்துடன் விடையிறுத்துள்ளன.

செவ்வாயன்று வெளியான வாஷிங்டன் போஸ்ட் தலையங்கம் காபூல் வெளியேற்றத்தை 'ஒரு தார்மீக பேரழிவு, இதற்கு காபூலின் இராணுவ மற்றும் இராஜாங்க உறவு அதிகாரிகளின் நடவடிக்கைகள் காரணம் அல்ல... மாறாக திரு. பைடென் மற்றும் அவரது நிர்வாகத்தின் தவறுகளும், மூலோபாய மற்றும் தந்திரோபாயங்களுமே' காரணம் என்று விவரித்தது. அதனுடன் சேர்ந்து, ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் முன்னாள் மூத்த உதவியாளரும் அவருக்கு உரை எழுதி வழங்குபவருமான மைக்கேல் கெர்சனின் ஒரு கட்டுரையை அது வெளியிட்டது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கின் குற்றவியல் போர்களுக்கான அரசியல் பொறுப்பில் இவருக்கும் பங்குண்டு என்கின்ற நிலையில், 'பைடென் நிர்வாகம் பீதியுடன், கவனக்குறைவாக அவசரகதியில் ஆப்கானிஸ்தானில் இருந்து அவமானகரமாக வெளியேறியது — அது தலிபானின் தயவைச் சார்ந்திருந்தது, குழப்பம் மற்றும் காட்டிக்கொடுப்பின் அழிக்கவியலா காட்சிகளால் நினைவு கூரப்படும்' என்று அக்கட்டுரை கண்டனம் செய்தது.

இத்தகைய சூடான வாய்வீச்சுக்கள், ஆப்கானிஸ்தான் தோல்வி தொடர்பாக அமெரிக்க ஆளும் ஸ்தாபகம் மற்றும் அதன் இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரத்திற்குள் நிலவும் கடுமையான பிளவுகள் மற்றும் குற்றச்சாட்டுக்களைப் பிரதிபலிக்கின்றன.

முரண்பாடுகள், மழுப்பல்கள் மற்றும் வரலாற்று பொய்மைப்படுத்தல்கள் நிறைந்திருந்த அதேவேளையில், பைடெனின் உரை குறைந்தபட்சம் பகுதியாக அமெரிக்க மக்களிடையே நிலவும் பரந்த போர்-எதிர்ப்பு உணர்வுகளுக்கு அழைப்பு விடுப்பதை நோக்கி திரும்பி இருந்தது.

'அமெரிக்க மக்களிடம் மீண்டும் நேர்மையாக இருக்க வேண்டிய நேரம் இது,' என்று கூறிய அவர், ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் பிற இடங்களில் போர்கள் நடத்துவதற்கான காரணங்கள் மற்றும் நடத்தை பற்றி அமெரிக்க மக்களிடம் அமெரிக்க ஆளும் வர்க்கம் திட்டமிட்டு பொய் கூறியதை சூசகமாக ஒப்புக் கொண்டார்.

ஆப்கானிஸ்தான் போருக்கு அமெரிக்கா 'இரண்டு தசாப்தங்களாக நாளொன்றுக்கு 300 மில்லியன் டாலர்களை' செலவிட்டிருப்பதாக என்று கூறிய அவர், 'ஆமாம், அமெரிக்க மக்கள் இதை காது கொடுத்துக் கேட்டுத்தான் ஆக வேண்டும்'… வாய்ப்புகளின் அடிப்படையில் ஏற்பட்ட ஒரு விளைவாக நாம் இதை இழந்துள்ளோம்.'

உயிர்கள் இழந்து அங்கங்கள் ஊனமடைந்து ஏற்பட்ட கடுமையான இழப்புகளை அவர் வலியுறுத்தினார், 2,461 துருப்புகள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் இதற்கு கூடுதலாக 20,744 பேர் காயமடைந்தனர்.

'நம் இராணுவத்தினர் நிறைய பேர் நரக வேதனை அடைந்துள்ளனர்,' என்று கூறிய அவர், 'அடுத்தடுத்து நிலைநிறுத்தல்கள். பல மாதங்கள் ஆண்டுகளாக அவர்களின் குடும்பங்களை பிரிந்து இருந்தார்கள் … நிதிய போராட்டங்கள், விவாகரத்துக்கள், உடல் அங்கம் இழப்பு, அதிர்ச்சிகளால் மூளையில் ஏற்பட்ட காயங்கள், அதிர்ச்சிக்குப் பிந்தைய மனஅழுத்தம். அவர்கள் வீடுகளுக்கு திரும்பியபோது அந்த போராட்டங்களில் பலவற்றை நாம் பார்க்கிறோம். … அவர்களுடன் கொண்டு வரும் போருக்கான விலை அவர்கள் வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் இருக்கும்,” என்றார்.

'போர் எப்போதும் தரத்தில் குறைந்ததாக, ஆபத்தில் குறைந்ததாக அல்லது செலவு குறைந்ததாக இருக்க முடியும் என்று நினைக்கும் எவரையும் ஒரு நிமிடம் சிந்திக்கச் செய்யும் அதிர்ச்சியூட்டும் மற்றும் திகிலூட்டும் புள்ளிவிபரங்களை” பைடென் மேற்கோளிட்டார்: அதாவது, “அமெரிக்காவில் சராசரியாக 18 இராணுவ அனுபவஸ்தர்கள் ஒவ்வொரு நாளும் தற்கொலை செய்து கொள்கிறார்கள் — எங்கேயோ ஒரு தொலைதூர இடத்தில் இல்லை, மாறாக இங்கே அமெரிக்காவில் நடக்கிறது,” என்றார்.

போரில் ஒரு நாடு நிரந்தரமாக சமூக ரீதியில் கொடுத்த விலைகளை அவர் சுற்றி வளைத்து குறிப்பிட்டார்: 'நீங்கள் இன்று 20 வயதில் இருந்தால், உங்களுக்கு ஒருபோதும் அமைதியான அமெரிக்காவைப் பற்றி தெரியாது.'

இந்த உரையில் விவரிக்கப்பட்ட சித்திரம் அமெரிக்க ஆளும் ஸ்தாபகம் மற்றும் அதன் இரண்டு அரசியல் கட்சிகள் மீது பழிசுமத்தும் ஒரு குற்றப்பத்திரிகையாக உள்ளது, அவ்விரு அரசியல் கட்சிகளும் சொல்லொணா துயரங்களைத் திணித்த போர்களை நீடித்து நடத்தி உள்ளன என்பதோடு, பரந்த வளங்களைக் கொண்ட சமூகத்தைக் கொள்ளையடித்து, ஓர் ஒட்டுமொத்த தலைமுறையையும் தடையில்லா வன்முறை மற்றும் பயங்கரத்திற்கு உள்ளாக்கி உள்ளன.

ஆனால் அமெரிக்கப் போர் மற்றும் ஆக்கிரமிப்பிற்காக மிகப் பெரியளவில் கொடுக்கப்பட்ட விலையைக் குறித்து அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிடவே இல்லை, அதுவாவது: சுமார் 170,000 முதல் கால் மில்லியன் ஆப்கானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், நூறாயிரக் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர் மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

ஆப்கானிய போருக்கு பைடெனால் ஒரு பகுத்தறிவார்ந்த விளக்கத்தை வழங்க இயலவில்லை, நியூ யோர்க் நகரம் மற்றும் வாஷிங்டன் டி.சி மீது இன்று வரையில் விளக்கமின்றி உள்ள செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்கு விடையிறுப்பாக அந்த போர் தொடங்கப்பட்டதாக அவர் வாதிடுகிறார், அந்த சம்பவத்தில் 19 விமானக் கடத்தல்காரர்களில் 15 பேர் சவூதியர்கள், யாருமே ஆப்கானியர்கள் கிடையாது.

அமெரிக்கப் போர் ஆப்கானிஸ்தானில் அல் கொய்தாவை 'அழித்து விட்டது' என்று பெருமையடித்துக் கொண்ட அவர், அதேவேளையில் 'பயங்கரவாத அச்சுறுத்தல் உலகெங்கிலும், ஆப்கானிஸ்தானுக்கு அப்பால், உருமாறி பரவியிருப்பதை ஒப்புக்கொண்டார், சிரியா, ஈராக், சோமாலியா, அரேபிய தீபகற்பம் மற்றும் 'ஆபிரிக்கா மற்றும் ஆசியா முழுவதும்' அல் கொய்தாவுடன் தொடர்புடைய கூறுபாடுகளை அவர் மேற்கோளிட்டார். உண்மையில், ஆப்கானிஸ்தானுக்கு உள்ளேயே, காபூல் விமான நிலையத்தில் தற்கொலை குண்டுவெடிப்புக்கு பொறுப்பான இஸ்லாமிய அரசு – கொரன் (ISIS-K) இயக்கத்தின் சுமார் 2,000 போராளிள் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை மதிப்பிடுகிறது, ஆனால் 2001 இல் ஆப்கானிஸ்தானில் சில நூறு அல் கொய்தா உறுப்பினர்களே இருந்தனர்.

இந்த சக்திகளின் வளர்ச்சி ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்பு போர்களின் நேரடி விளைவு என்பதோடு, லிபியா மற்றும் சிரியா இரண்டிலும் வாஷிங்டன் அதன் ஆட்சி மாற்றப் போர்களில் அல்கொய்தாவுடன் இணைந்த போராளிகளைப் பினாமி தரைப்படைகளாக பயன்படுத்தியதன் விளைவும் ஆகும்.

ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டால், பைடெனின் உரை, பயங்கர செலவில் பொய்கள் மற்றும் கட்டுக்கதைகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட அமெரிக்கப் போர்களைப் பேரழிவுகரமாக அம்பலப்படுத்துவதாக உள்ளது. இவ்விதத்தில், ஆப்கானிஸ்தானை ஈராக், லிபியா, சிரியா மற்றும் பிற இடங்களில் இருந்து பிரிக்க முடியாது.

இதெல்லாம் எதற்காக? ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் வீணடிக்கப்பட்டதையும் நூறாயிரக்கணக்கான உயிர்கள் கொல்லப்பட்டதையும் எது நியாயப்படுத்தியது? இந்த குற்றங்களுக்காக, அரசாங்கத்திற்குள்ளும், பிரதான கட்சிகள், இராணுவ உயர் கட்டளையகம், அமெரிக்க பெருநிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் இந்தப் போர்களை ஊக்குவித்த மற்றும் நியாயப்படுத்திய கல்விசார் பிரமுகர்களுக்கும் இருப்பவர்களில் யார் யாரை இதற்காக கணக்கில் கொண்டு வருவது?

“ஆப்கானிஸ்தான் மீதான இந்த முடிவு வெறுமனே ஆப்கானிஸ்தானுக்கு உரியது மட்டுமல்ல. இது மற்ற நாடுகளின் மறுஉருவாக்கத்திற்காக செய்யப்பட்ட முக்கிய இராணுவ நடவடிக்கைகளின் சகாப்தம் முடிவுக்குக் கொண்டு வரப்படுவதைப் பற்றியது,” என்று பைடென் அவர் உரையில் உறுதியளித்தார்.

உண்மையில், இந்தளவிலான ஒரு மிகப்பெரிய தோல்வி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய மேலாதிக்கம் முன்னோக்கி நகர முடியாமல் இருப்பதை இராணுவ படைபலத்தைப் பயன்படுத்தி கடந்து செல்லும் அடிப்படையில் பின்பற்றப்பட்ட ஒட்டுமொத்த மூலோபாயமும் தகர்ந்து நொறுங்கிய ஒரு சகாப்தம் முடிவுறுவதைச் சமிக்ஞை செய்கிறது.

1980 களில் இருந்து, வாஷிங்டன் “வியட்நாம் அடையாளத்தை அழிக்க”, அதாவது புதிய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு போர்களைத் தொடங்க வியட்நாமில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஏற்பட்ட தோல்வியின் அரசியல் விளைவுகளை மாற்றுவதற்குத் தீர்மானகரமாக இருந்தது.

மாஸ்கோ ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் கரங்களில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட நிலையில், பாரசீக வளைகுடாவில் முதலாம் அமெரிக்க போரிலும் அதைத் தொடர்ந்து பால்கன்களில் அமெரிக்க தலையீடுகளிலும் எதிர்நோக்கப்பட்டவாறு, இந்த கொள்கை முன்னெடுக்கப்பட்டது. உலகம் ஓர் “ஒருதுருவ தருணத்தை” எட்டியிருப்பதாகவும், இதில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகளாவிய மேலாதிக்கம் மற்றும் உலகளாவிய எதிர்புரட்சியை தடையின்றி பின்தொடரலாம் என்ற இந்த கருத்துருவை வாஷிங்டன் தழுவியது.

இது நாள் வரையில் உண்மையில் விளங்கப்படுத்தப்படாத, புரியாத புதிரான செப்டம்பர் 11, 2001 சம்பவங்கள், பின்னர் வெளிநாடுகளில் ஆக்கிரமிப்பு போர்களையும், சித்திரவதைகளையும் நியாயப்படுத்தவும் மற்றும் அமெரிக்காவுக்கு உள்ளேயே கூட ஒரு பொலிஸ் அரசைக் கட்டமைக்கவும் சுரண்டிக் கொள்ளப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அவமானகரமான இந்த பின்வாங்கல், வெறுமனே ஒரு நாட்டில் அமெரிக்க கொள்கையின் தோல்வியை அல்ல, மாறாக 30 ஆண்டுகளாக நீடித்திருந்த ஒட்டுமொத்த மூலோபாயமும், உலக கண்ணோட்டமும் மற்றும் உலகளாவிய மேலாதிக்கத்தின் மற்றும் உள்நாட்டு பிற்போக்குத்தன திட்டத்தினது தோல்வியைச் சமிக்ஞை செய்கிறது.

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு விடையிறுப்பதில் உலகின் ஆளும் வர்க்கங்களது இலாபத்தால் உந்தப்பட்ட மனிதப்படுகொலை கொள்கைகள் மற்றும் அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மை ஆகிய பாதிப்புகளின் கீழ் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தீவிரமடைந்து வரும் வர்க்க போராட்டத்துடன் குறுக்கிடும் இந்த தோல்வி, ஆழ்ந்த பிற்போக்குத்தனமான தாக்கங்களைக் கொண்டுள்ளது.

இது போர் அபாயத்தைச் சிறிதும் குறைத்து விடவில்லை. உண்மையில் ஆப்கானிஸ்தான் மீதும் அல்லது உலகின் வேறெந்த நாட்டின் மீதும் “எதிர்வரவிருக்கும் காலத்தில்” படுகொலை தாக்குதல்களைத் தொடர்வதற்கும், அதேவேளையில் அணுஆயுத சக்திகளான சீனா மற்றும் ரஷ்யாவுடன் இன்னும் அதிக அபாயகரமான மோதல்களை நோக்கி அதன் இராணுவ பலத்தைத் திருப்பவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இருக்கும் ஆற்றலை வலியுறுத்த பைடென் அவர் உரையைப் பயன்படுத்தினார்.

போருக்கும் மற்றும் அதற்கு ஆதாரமான இந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் முடிவு கட்ட வளர்ந்து வரும் தொழிலாள வர்க்க இயக்கத்தை ஒரு சோசலிச மற்றும் சர்வதேசியவாத முன்னோக்கு கொண்டு ஆயுதபாணியாக்குவதே தீர்க்கமான கேள்வியாகும்.

Loading