இங்கிலாந்து கல்வியாளர்கள் பாதுகாப்புக் குழுவின் அறிக்கை

பள்ளிகளை மீளத் திறப்பதை எதிர்க்கவும்: குழந்தைகள் மற்றும் கல்வியாளர்களின் வாழ்க்கை முக்கியம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரித்தானியா முழுவதும் பாதுகாப்பற்ற வகையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை எதிர்த்து கல்வியாளர்கள், பள்ளி ஊழியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்கள் அணிதிரள வேண்டும்.

செப்டம்பர் 1 முதல் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மில்லியன் கணக்கான குழந்தைகளும் நூறாயிரக்கணக்கான ஊழியர்களும் வகுப்பறைகளுக்குத் திரும்புகின்றனர். ஸ்காட்லாந்தில் உள்ள பள்ளிகள் ஏற்கனவே வாரக் கணக்கில் மீளத் திறக்கப்பட்டுள்ளன. இதன் விளைவால் குழந்தைகள், கல்வியாளர்கள் மற்றும் முழு தொழிலாள வர்க்கத்திற்கு மத்தியில் வைரஸ் வெடித்து பரவும், இறப்புக்கள் அதிகரிக்கும் மற்றும் அவர்களது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு மதிப்பிட முடியாத அளவிற்கு சேதமடையும் நிலை உருவாகும்.

பிரதமர் போரிஸ் ஜோன்சனின் கன்சர்வேடிவ் கட்சி அரசாங்கமும், ஹோலிரூட்டில் உள்ள ஸ்காட்டிஷ் தேசியக் கட்சியும், உண்மையில் அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கி கோவிட்-19 நோய்தொற்றை தடையின்றி பரவ அனுமதிக்கும் ஒரு குற்றவியல் கொள்கையையே பின்பற்றுகின்றன. அரசாங்கம் “பாரிய நோய்தொற்றை விளைவிக்கும் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை” பின்பற்றுவதானது, “மருத்துவ ரீதியாக பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் குறைந்த நோயெதிர்ப்பு சக்தியுள்ளவர்கள் உட்பட, (குழந்தைகள் உட்பட) இன்னும் முழுமையாக தடுப்பூசி போடப்படாத 48 சதவீத மக்களை ஏற்றுக்கொள்ள முடியாத ஆபத்திற்குள்ளாக்கும்” என்று லான்செட் மருத்துவ இதழில் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

செப்டம்பர் 3, 2020, வியாழக்கிழமை, இலண்டனில் உள்ள கிங்ஸ்டேல் அறக்கட்டளை பள்ளிக்கு முதல் நாள் வரும் ஏழாம் வகுப்பு மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வழிநடத்தப்படுகிறார்கள் (AP Photo/Kirsty Wigglesworth)

வெள்ளிக்கிழமை, அரசாங்கத்தின் அவசரநிலைகளுக்கான விஞ்ஞான ஆலோசனைக் குழுவின் (Scientific Advisory Group for Emergencies-SAGE) மாதிரியாளர்கள், “செப்டம்பர் 2021 இறுதிக்குள் பள்ளிகளுக்குள் [கோவிட்டின்] உச்சபட்ச பாதிப்பு நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம்” என்று எச்சரித்துள்ளனர். மேலும், “இது சமூகம் அல்லது பள்ளிகளுக்குள் நோய்தொற்று பரவுவதில் பிரதிபலிக்கக்கூடும் என்பதுடன், நோய்தொற்றை பரவலாக பரப்புவதில் பள்ளிகளின் பங்கை தொடர்ந்து நிச்சயமற்றதாக்கலாம்” என்றும் குறிப்பிட்டனர்.

ஆனால் அத்தகைய நிச்சயமற்ற தன்மை எதுவுமில்லை.

ஆகஸ்ட் தொடக்கத்தில் ஸ்காட்லாந்தில் பள்ளிகள் மீளத் திறக்கப்பட்டது முதல் அங்கு நாளாந்த நோய்தொற்றுக்கள் 1,567 இல் இருந்து 6,835 ஆக 300 சதவீதத்திற்கு அதிகமாக உயர்ந்துள்ளது. 19 வயதிற்குட்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு நோய்தொற்றுக்கள் பரவியிருந்ததும், 2 முதல் 17 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே நோய்தொற்று பரவும் வீதம் 19.9 சதவீதமாக இருந்ததும் உட்பட, கடந்த வாரத்தில் நோய்தொற்றுக்கள் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியிருந்தன. ஆகஸ்ட் 24 முதல், கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்ட 18 சதவீத மாணவர்களும் (2,496), சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ள 11,976 மாணவர்களும் உட்பட, அண்ணளவாக 15,000 மாணவர்கள் (14,914) கோவிட் பாதிப்பினால் பள்ளிக்கு வரவில்லை என்பதை ஸ்காட்லாந்து பொது சுகாதார அமைப்பு (Public Health Scotland-PHS) கண்டறிந்துள்ளது. கோவிட்-19 தொடர்புபட்ட காரணங்களால் 1,500 க்கும் மேற்பட்ட ஸ்காட்டிஷ் கல்வி ஊழியர்களும் பள்ளிக்கு வரவில்லை. இவர்களில் 266 ஆசிரியர்களுக்கும், 215 பள்ளி சார்ந்த ஊழியர்களுக்கும் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது அல்லது நோயறிகுறிகள் இருந்தன.

கடந்த செப்டம்பரில், இங்கிலாந்தின் பள்ளிகள் முதலிலேயே முழுமையாக மீண்டும் திறக்கப்பட்டன. ஒருசில மாதங்களுக்குள் பள்ளிகள் வைரஸ் பரவலுக்கான முக்கிய மையங்களாக மாறின, அதாவது முதல் அலையில் இருந்து இறப்புக்கள் இருமடங்கு அதிகரித்து நாளாந்தம் 150,000 நோய்தொற்றுக்களும் பரவிய நிலையில், நோய்தொற்றின் மூன்றாவது அலை எழுவதற்கு இது வழிவகுத்தது. பணியிட சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளின் (Workplace Health and Safety Regulations) பிரிவு 44 இன் கீழ் பல்லாயிரக்கணக்கான கல்வியாளர்கள் வேலைக்குத் திரும்ப மறுத்துவிட்ட காரணத்தால் மட்டும் இந்த ஆண்டு ஜனவரியில் இரண்டாவது பூட்டுதல் விதிக்கப்பட்டது.

முகக்கவச கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, ஈஸ்டர் முடிவில் பள்ளிகள் மீண்டும் முழுமையாக திறக்கப்பட்டன. மீண்டும் ஒருமுறை, நோய்தொற்றுக்களின் அலை உருவானது. நோய்தொற்று உறுதிசெய்யப்பட்ட 39,000 குழந்தைகளும் நோய்தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட 35,000 குழந்தைகளும் உட்பட, கிட்டத்தட்ட 840,000 குழந்தைகள் (11.2 சதவீதம் பேர்) ஜூலை 8 அன்று இங்கிலாந்து அரசு பள்ளிகளுக்கு வரவில்லை.

இந்த முறையும் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்.

பள்ளிகள் திறக்கப்பட்டதைப் போல, ஜூலை 19 அன்று இங்கிலாந்தில் தேசியளவில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமை, ஏற்கனவே நாளொன்றுக்கு 100 க்கு மேற்பட்ட இறப்புக்களுடன், நாளாந்த நோய்தொற்றுக்களின் சராசரியை 30,000 க்கு அதிகமாக்கியிருந்தது, அதாவது கடந்த ஆண்டின் இதே நேரத்தின் நோய்தொற்றுக்களைப் போல 24 மடங்குகள் இது அதிகமாகும். மேலும், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட 7,000 ஐ எட்டிவிட்டது.

இந்த முறை முகக்கவச கட்டுப்பாடு இருக்காது, ஏன் நோய்தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த குழந்தைகள் மற்றும் இருமுறை தடுப்பூசி போடப்பட்ட ஊழியர்களை தனிமைப்படுத்துவது கூட இருக்காது. 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது. மேலும், மிகுந்த தொற்றும் தன்மை கொண்ட மற்றும் கொடிய டெல்டா மாறுபாட்டினால், மற்றும் புதிய மற்றும் இன்னும் மிகுந்த தொற்றும் தன்மையுள்ள மாறுபாடுகளால் ஏற்படும் பெரும்பாலான நோய்தொற்று வகைகள் தடுப்பூசிகளின் பாதுகாப்பைத் தவிர்த்து பரவ முடியும்.

குழந்தைகளிடையே ஏற்படும் பாரிய நோய்தொற்றுக்கள், குழந்தை இறப்புக்கள், மற்றும் லோங் கோவிட் ஆகியவற்றின் அச்சுறுத்தலால் மில்லியன் கணக்கான பெற்றோர்கள் பீதியில் உள்ளனர்.

கோவிட் குழந்தைகளை குறைவாகவே தாக்குகிறது மற்றும் அவர்கள் பள்ளிக்கு திரும்புவது அவர்களது நல்வாழ்வுக்கு அவசியம் என்ற உத்தியோகபூர்வ பொய்களுக்கு முரணாக, 25 பிரிட்டிஷ் குழந்தைகள் கோவிட் பாதிப்பால் இறந்துள்ளனர் என்பதுடன், 10,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தொற்றுநோயால் தங்களது முதன்மை அல்லது இரண்டாம் நிலை பராமரிப்பாளரை இழந்துள்ளனர். ஜூலை 4 அன்று தங்களுக்கு லோங் கோவிட் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சுயமாக பதிவு செய்த 945,000 மக்களில் (மக்கள்தொகையில் 1.5 சதவீதம் பேரில்) 2 முதல் 16 வயதுக்குட்பட்ட 34,000 குழந்தைகளும் அடங்குவர். லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் தலைமையிலான ஆராய்ச்சி, கோவிட்-19 பாதிப்புடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட 20 குழந்தைகளில் ஒருவருக்கு மூளை அல்லது நரம்பு தொடர்புபட்ட கோளாறு ஏற்படுவதாக கண்டறிந்துள்ளது, வயது வந்தோருக்கான இந்த வகை பாதிப்பு விகிதம் 0.9 உடன் ஒப்பிடுகையில் குழந்தைகளுக்கு 3.8 சதவீத பாதிப்பு ஏற்படுகிறது. இவை லோங் கோவிட் பாதிப்பின் ஒரு சில பயங்கரமான விளைவுகளாகும்.

இந்த கொலைகார திட்டநிரலை எதிர்த்துப் போராட பெற்றோர்கள் தயாராகவுள்ளனர். ஸ்காட்லாந்து பொது சுகாதார அமைப்பின் புள்ளிவிபரங்கள், கடந்த வாரம் பள்ளிகளுக்கு 399 மாணவர்கள் வரவில்லை என்பதை காட்டின, காரணம் அவர்களது பெற்றோர்கள் “பொது சுகாதார வழிகாட்டுதலுக்கு மாறாக, அவர்களை ஒதுக்கி வைப்பதை தேர்வு செய்கிறார்கள்.” ஆனாலும் கவலைப்படும் பெற்றோர்கள் குற்றவாளிகளாக நடத்தப்படுவதுடன், கடுமையான அபராதங்களையும் சிறை தண்டனைக்கான சாத்தியத்தையும் எதிர்கொள்கின்றனர். “அமலாக்க நடவடிக்கைகளை பயன்படுத்துவது” குறித்து கவுன்சில்களுக்கு அறிவுறுத்தும் “வருகை ஆலோசகர்களுக்கு” நாளொன்றுக்கு 500 பவுண்டுகள் வழங்கப்படுகிறது என ஒரு புதிய “கோவிட் தாக்குதல் தொடர்புபட்ட திடீர் ஆய்வுக் குழு” வுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேரழிவுகர நிலைமைக்கு, கன்சர்வேடிவ் கட்சி அரசாங்கமும் மற்றும் அவர்களது உண்மையான கூட்டணி பங்காளர்களான சர் கெய்ர் ஸ்டார்மரின் தொழிற்கட்சியும், மற்றும் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கும், மற்றும் வைரஸின் சுழற்சியைக் குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அகற்றுவதற்கும் எழுந்த எதிர்ப்பை முறையாகக் கலைத்த தொழிற்சங்கங்களும் கூட்டு பொறுப்பாளிகளாவர்.

தேசிய கல்விச் சங்கமும், ஏனைய அனைத்து கல்விச் சங்கங்களும் பள்ளிகளை மீண்டும் திறக்கவும் நேரடி கற்பித்தலுக்கு திரும்பவும் ஆதரவளிப்பதானது, ஒரு சில தணிப்பு நடவடிக்கைகள் மட்டுமே நடைமுறையில் இருக்க வழிவகுக்கின்றன. பள்ளிகளை மீளத் திறப்பது குறித்த NEU இன் செய்திக்குறிப்பு, C02 கண்காணிப்பு பொறிகளை வழங்க பள்ளிகளுக்கு 25 மில்லியன் பவுண்டு அற்ப நிதியை வழங்க அறிவித்ததற்காக ஜோன்சன் அரசாங்கத்தை பெரிதும் பாராட்டியதுடன், “நல்ல காற்றோட்ட வசதியை ஏற்படுத்த நிதி தேவை என்ற எங்களது வாதத்தை ஏற்றுக்கொள்வதற்கான இந்த முதல் படி வரவேற்கத்தக்கது” என்று கூறி அதற்கு அழைப்பு விடுத்தது.

ஆனால், “தணித்தல்” கொள்கை மட்டும் வேலை செய்யாது என்ற கசப்பான அனுபவத்தை நிருபித்துள்ளது. சர்வதேச அளவில் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான பில்லியன் கணக்கான மக்களின் விருப்பத்திற்கும், தொழிலாள வர்க்கத்தின் மீது சுமையை ஏற்றி பெருநிறுவன இலாபத்தை எந்தவிதத்திலும் குறைக்க அனுமதிக்காத ஆளும் வர்க்கத்திற்கும் இடையேயான ஒரு கொடூரமான பேரம்பேசுதலை இது உள்ளடக்கியது.

முகக்கவச பயன்பாடு, சமூக இடைவெளி, பரிசோதனை, தொடர்பு தடமறிதல், நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல், செயற்கை சுவாச வசதி ஆகியவற்றைத் தாண்டி, தடுப்பூசி போட்டுக்கொள்வது மட்டுமே கூட நோய்தொற்று ஏற்படுத்தும் அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவரும் என்ற அனைத்து கூற்றுக்களையும் டெல்டா மாறுபாட்டின் பரவல் தகர்த்துவிட்டது. மாறாக, இத்தகைய நடவடிக்கைகளின் பல்வேறு வகைகள் அடங்கிய வக்காலத்து, “வைரஸூடன் வாழ கற்றுக்கொள்வது” அதாவது பாரிய நோய் பரவல் மற்றும் இறப்புக்களை ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்வது என்ற கொள்கையை நியாயப்படுத்த தவறாமல் பயன்படுத்தப்படுகிறது.

வைரஸை முற்றிலும் ஒழிப்பதற்கான ஒரே சாத்தியமான உத்தியாக, தொற்றுநோய் காலம் முழுவதும் முன்னணி தொற்றுநோயியல் நிபுணர்கள், வைரலாஜிஸ்டுகள் மற்றும் பிற விஞ்ஞானிகளால் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையிலான Zero Covid கொள்கை மட்டுமே உள்ளது.

வைரஸை முற்றிலும் நிரந்தரமாக ஒழிப்பது என்பது கோவிட்-19 ஐ எதிர்த்து போராடக் கூடிய நடவடிக்கைகள் அனைத்திலும் உலகளவிலான ஒவ்வொரு வழிமுறையையும் உள்ளடக்கியது. இது உலகளவிலான நடவடிக்கையாக இருக்க வேண்டும். தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து இங்கிலாந்தில் 6.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், அதாவது மக்கள்தொகையில் பத்தில் ஒரு பங்கினர் கோவிட் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 156,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். ஆனால் இந்த துயரமான புள்ளிவிபரங்கள் உலகம் முழுவதும் மீண்டும் மீண்டும் பதிவாகி வருகின்றன, அதாவது, ஜோன்சனின் பள்ளிகளை மீளத் திறக்கும் திட்டநிரலை ஒத்த பெரும்பாலும் ஒவ்வொரு அரசாங்கமும் நடைமுறைப்படுத்திய கொள்கைகளின் விளைவாக, உலகளவில் 217 மில்லியன் உத்தியோகபூர்வ நோய்தொற்றுக்கள் இருப்பதுடன், 4.5 மில்லியன் இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன, என்றாலும் இவை பெரிதும் குறைத்து மதிப்பிடப்பட்டவையே.

கல்வியாளர்கள் பாதுகாப்புக் குழு (Educators Rank-and-File Committee), தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட சர்வதேச தாக்குதலின் ஒரு பகுதியாக, பிரிட்டன் முழுவதிலுமான பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை எதிர்க்குமாறு வலியுறுத்துகின்றது. நோய்தொற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளான உலகளாவிய பரிசோதனை, தொடர்பு தடமறிதல், நோய்தொற்று பாதிப்புள்ளவர்களை தனிமைப்படுத்துதல், முகக்கவசம் அணிதல் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் போன்றவை, வைரஸ் பரவல் சங்கிலியை துண்டிக்க பள்ளிகளும் அத்தியாவசியமற்ற பணியிடங்களும் பரந்தளவில் மூடப்படுவதன் ஒரு பகுதியாக செயல்படுத்தப்பட வேண்டும். உலகளவில் செயல்படுத்தப்படும் இத்தகைய நடவடிக்கைகளால் ஒரு சில மாதங்களில் தொற்றுநோயை முழுமையாக கட்டுப்படுத்தி ஒழிக்க முடியும்.

இந்த வாழ்வா சாவா போராட்டத்தை கையிலெடுக்க, கல்வியாளர்கள் பாதுகாப்புக் குழுவில் இன்றே இணைந்து, எங்களது கூட்டங்களில் கலந்துகொள்ளவும், உங்கள் பணியிடத்தில் ஒரு பாதுகாப்புக் குழுவை உருவாக்கவும் கேட்டுக் கொள்கிறோம்.

Loading