அடுத்த மூன்று மாதங்களில் ஐரோப்பாவில் 236,000 கோவிட்-19 இறப்புக்கள் நிகழும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐரோப்பாவில், பள்ளிகளை மீளத் திறப்பதும் சமூக இடைவெளி கட்டுப்பாட்டை கைவிடுவதும் பேரழிவிற்கு வழிவகுக்கும் என்ற ஒரு அப்பட்டமான முன்கணிப்பை உலக சுகாதார அமைப்பு (WHO) திங்கட்கிழமை வெளியிட்டது. ஏற்கனவே, ஐரோப்பாவில் கோவிட்-19 ஆல் 1.3 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். அதிலும் டெல்டா மாறுபாடு பரவி வரும் நிலையில், இந்த இலையுதிர் காலம் தொற்றுநோய் காலத்தில் இதுவரை இல்லாத கொடிய பருவமாக இருக்கக்கூடும்.

“கடந்த வாரம், இந்த பிராந்தியத்தில் இறப்பு எண்ணிக்கை 11 சதவீதம் அதிகரித்தது; ஒரு நம்பகமான முன்கணிப்பு டிசம்பர் 1 க்குள் ஐரோப்பாவில் 236,000 இறப்புக்கள் நிகழக்கூடும் என எதிர்பார்க்கிறது,” என்று உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பாவிற்கான பிராந்திய இயக்குநர் ஹான்ஸ் க்ளூக் (Hans Kluge) எச்சரித்தார். 44.2 சதவீத ஐரோப்பிய மக்களுக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது, மேலும் கடந்த ஆறு வாரங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை 14 சதவீதம் குறைந்துள்ளதாகவும் க்ளூக் கூறினார். மேலும், தடுப்பூசி குறித்த நம்பிக்கையின்மை “எந்த நோக்கத்திற்கும் உதவாது என்பதுடன் எவருக்கும் நல்லதல்ல” என்றும் அவர் தெரிவித்தார்.

வடக்கு இத்தாலியின் க்ரெமோனா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் முன் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்திலிருந்து ஒரு துணை மருத்துவர் வெளியே வருகிறார் [Credit: Claudio Furlan/Lapresse via AP, file]

அமெரிக்கா, இந்தோனேசியா மற்றும் இந்தியாவில் கோவிட்-19 நோய்தொற்றால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இறக்கின்றனர் என்ற நிலையில், 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட க்ளூக் வேண்டுகோள் விடுக்கிறார், அதாவது பள்ளிகளில் குழந்தைகளுக்கும், பெரும்பாலும் தடுப்பூசி போடப்பட்ட இளையோர்களுக்கும் பாரியளவில் நோய்தொற்று ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதை மறைமுகமாக ஒப்புக்கொள்கிறார். இளையோர்களிடையே நோய்தொற்றுக்கள் பரவுவதற்கான அதிர்ச்சியூட்டும் சாத்தியம் இருப்பதற்கான அறிகுறியாக, செப்டம்பர் பிற்பகுதியில் பிரான்சில் மட்டும் நாளொன்றுக்கு குழந்தைகளிடையே 50,000 நோய்தொற்றுக்கள் வரை பரவும் என்பதாக Pasteur Institute இன் மதிப்பீடு உள்ளது.

இதன் பொருள் ஐரோப்பாவில் ஒவ்வொரு வாரமும் மில்லியன் கணக்கான குழந்தைகள் நோய்வாய்படுகின்றனர் என்பதே. ஜேர்மன் ஆசிரியர் சங்கத் தலைவர் ஹையின்ஸ்-பீட்டர் மைடின்கெர் (Heinz-Peter Meidinger) மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் குறித்து அமெரிக்காவில் இருந்து பெற்ற புள்ளிவிபரங்களை வெளிப்படுத்துகிறார்: “அதேவேளை ஜேர்மனியில் உள்ள மாணவர்களை மதிப்பீடு செய்தால், கிட்டத்தட்ட 11 மில்லியன் பேர் நோய்வாய்ப்படுவார்கள், அடுத்து [மருத்துவமனை அனுமதிப்புகள்] 200,000 மாணவர்களை சேர்க்கும் அளவிற்கு மோசமடையக்கூடும்.”

கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்ட 5 முதல் 10 சதவீத குழந்தைகள் லோங் கோவிட், அல்லது ஏனைய நீடித்த பாதிப்பை ஏற்படுத்தும் நோய்தொற்றுக்களால் பாதிக்கப்படுவார்களானால், நூறாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு பலவீனப்படுத்தும் நீண்ட கால உடல்நல பாதிப்புக்கள் ஏற்படும் என்பதுடன், ஆயிரக்கணக்கான குழந்தைகள் வைரஸால் இறந்து போவார்கள்.

இத்தகைய கொடூரமான சூழ்நிலை குறித்து தவிர்க்க முடியாதது எதுவுமில்லை. கோவிட்-19 நோய்தொற்று பரவுவதைத் தடுத்து வைரஸை முற்றிலும் ஒழிக்க விஞ்ஞான ரீதியான கொள்கைகள் பின்பற்றப்படுவது நிருபிக்கப்பட்டால், நூறாயிரக்கணக்கான இறப்புக்களும் மில்லியன் கணக்கான நோய்தொற்றுக்களும் ஏற்படுவதற்கு சாத்தியமில்லை. இருப்பினும், தொழிலாளர்களின் உயிர்களை விட பெருநிறுவன இலாபங்களையும் பெரும் செல்வந்தர்களின் செல்வ குவிப்பையும் முதன்மைப்படுத்தும் ஐரோப்பிய அரசியல் ஸ்தாபகம் முழுவதிலும் இத்தகைய கொள்கைகளுக்கு உறுதியான எதிர்ப்பு உள்ளது.

உயிர்களை காப்பாற்ற போராடும் தொழிலாளர்கள் ஆளும் உயரடுக்கின் கொள்கைகளையும், வைரஸை முற்றிலும் ஒழிப்பதற்கு ஒரு சுயாதீனமான, விஞ்ஞான ரீதியிலான கொள்கைக்காக போராட வேண்டிய அவசியத்தையும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

ஆளும் உயரடுக்கின் ஒரு பிரிவு “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை” வெளிப்படையாக ஆதரிக்கிறது, அதாவது உயிர்களின் மதிப்பு என்னவாயினும், வைரஸ் பரவுவதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என்பதே. உலக நிதிய பிரபுத்துவத்தின் கையாளும், இலண்டன் நகரிலுள்ள வங்கிகளுக்கான முழு பின்புலமாகவும் உள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன், இத்தகைய குற்றவியல் கொள்கையின் மிக வெளிப்படையான ஆதரவாளராவார்.

பிரிட்டனில், கோவிட்-19 நோயாளி ஒருவரை காப்பாற்ற 30,000 பவுண்டுகளுக்கு அதிகமாக செலவிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்ற பாசிச கருத்தின் அடிப்படையில், வாரத்திற்கு 1,000, அல்லது வருடத்திற்கு 52,000 கோவிட்-19 இறப்புக்கள் ஏற்படுவதாக வாதிடும் “செலவு மிச்சப்படுத்தும் பகுப்பாய்வு” (“cost-benefit”) பகுப்பாய்வை ஜோன்சன் ஏற்றுக்கொண்டுள்ளார். கடந்த ஆண்டு, பாரிய இறப்புக்களுக்கு மத்தியில் ஒரு பயனற்ற, பகுதியளவிலான பூட்டுதலை விதிக்க கட்டாயப்படுத்தப்படுவதற்கு முன்பு, ஜோன்சன் அவரது அமைச்சர்களிடம் “வீணான பூட்டுதல்கள் கிடையாது! உடல்கள் ஆயிரக்கணக்கில் குவியட்டும்” என்று கூறி அப்பட்டமாக இந்த முன்னோக்கை வெளியிட்டார்.

மற்றொரு பிரிவு, வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு அல்லாமல், மெதுவாக்க நோக்கம் கொண்டு நோய் “தணிப்பு,” நடவடிக்கைக்கு முன்மொழிகிறது. இதை ஆதரிக்கும் இத்தாலி, ஸ்பெயின், ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளின் அரசாங்கங்களும் பூட்டுதல்களை நிராகரித்ததுடன், பள்ளிகளையும் வணிகங்களையும் மீளத் திறக்க கோருகின்றன, ஆனால் தடுப்பூசி வழங்கல் மற்றும் ஏனைய தடுப்பு நடவடிக்கைகளுடன் இதைச் செயல்படுத்த நினைக்கின்றன. என்றாலும் விளைவுகள் இதேபோல் பேரழிவுகரமானதே. குறைவான காற்றோட்ட வசதியுள்ள நெரிசல் மிக்க வகுப்பறைகள் கொண்ட பாதுகாப்பற்ற பள்ளிகளுக்கு குழந்தைகள் திரும்புவார்களானால், அதன் விளைவு குழந்தைகள் முகக்கவசம் அணிந்திருந்தாலும், காற்று வழியாக வைரஸ் விரைந்து பரவும் நிலையை உருவாக்கும்.

கடந்த மாதம் பள்ளிகள் மீளத் திறக்கப்பட்டதிலிருந்து ஜேர்மன் மாநிலங்களான வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மற்றும் பேர்லினில் நிகழ்வு விகிதங்கள் மும்மடங்காகியுள்ளன, மேலும் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் அரசாங்கம், நிகழ்வு விகிதங்கள் இனிமேல் சமூக இடைவெளி கொள்கைகளை அடிப்படையாக எடுத்துக் கொள்ளாது என்று நேற்று அறிவித்து இதற்கு பதிலிறுத்தது. பிரெஞ்சு அரசாங்கம் இலவச கோவிட்-19 பரிசோதனையை முடிவுக்குக் கொண்டுவந்தது. இத்தகைய கொள்கைகள் மோசமாக நிராகரிக்கப்படுவது உலக சுகாதார அமைப்பு முன்கணித்த கிலியூட்டும் இறப்பு எண்ணிக்கைக்கு களம் அமைக்கிறது.

கொலைகார நோய்தொற்று கொள்கைகள் குறித்த ஆளும் ஸ்தாபகத்தின் ஒற்றுமை நிதிய பிரபுத்துவத்தின் பொருள் சார்ந்த நலன்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. நிதிய பிரபுத்துவம் கடந்த ஆண்டு வங்கி மற்றும் பெருநிறுவன பிணையெடுப்புகளுக்காக டிரில்லியன் கணக்கான யூரோக்களையும் பவுண்டுகளையும் தங்களுக்கு அனுமதித்திருந்தாலும், இளைஞர்கள் பள்ளிகளுக்கு செல்ல வேண்டுமென அவர்கள் கோருகிறார்கள், ஏனென்றால் அதனால் அவர்களது பெற்றோர்கள் வேலையை தொடர முடியும், வங்கிகளுக்கு இலாபங்களை வாரியிறைக்க முடியும். இவ்வாறாக ஐரோப்பாவின் கோடீஸ்வரர்கள் தொற்றுநோய் காலத்தின் போது அவர்களின் நிகர சொத்து மதிப்பை 1 டிரில்லியன் டாலர் அளவிற்கு குவிக்க முடிந்தது.

நூறாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டுமானால், முதலாளித்துவ அமைப்புமுறைக்கு மற்றும், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் போலி இடது கட்சிகள் உள்ளிட்ட அதன் அரசியல் கூட்டாளிகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக இதில் தலையிட வேண்டும். பிராந்திய ஜேர்மன் அரசாங்கங்களின் இடது கட்சி போல, ஸ்பானிய தேசிய அரசாங்கத்தின் பொடெமோஸ் கட்சியும், தொற்றுநோய் குறித்த வங்கிகளின் உத்தரவை நேரடியாக செயல்படுத்தியது. ஜோன் லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் கட்சி தடுப்பூசி மற்றும் அது தொடர்புபட்ட உத்தரவுகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதில் நவ பாசிச கட்சிகளுடன் இணைந்து கொண்டுள்ளது.

இந்த போராட்டத்தை முன்னெடுக்க, தொழிலாளர்கள் விஞ்ஞான மற்றும் அரசியல் புரிதலுடன் ஆயுதமேந்த வேண்டும். நோய்தொற்றை முடிவுக்குக் கொண்டுவர தடுப்பூசி வழங்கல், தொடர்புத் தடமறிதல் மற்றும் நோய்தொற்று பாதிப்புள்ளவர்களை தனிமைப்படுத்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளுடன் கடுமையான பூட்டுதல்களை செயல்படுத்துவதும் அவசியமாகும், அதாவது 20 ஆம் நூற்றாண்டில் பெரியம்மை அல்லது போலியோ ஒழிக்கப்பட்டது போல், கோவிட்-19 ஒழிக்கப்படும் வரை இது செயல்படுத்தப்பட வேண்டும். உலக சோசலிச வலைத் தளம், “கோவிட்-19 ஐ முழுமையாக ஒழிப்பது தான் இந்த பெருந்தொற்றை நிறுத்துவதற்கான ஒரே வழி,” என்ற அதன் சமீபத்திய அறிக்கையில் பின்வருமாறு விளக்கியது:

நோய்தொற்றை ஒழிப்பதற்கான உத்தியை செயல்படுத்த சர்வதேச அளவில் ஐக்கியப்பட்ட சக்திவாய்ந்த பாரிய இயக்கத்தின் வளர்ச்சி தேவைப்படுகிறது. அதாவது, இலாப நோக்கத்தால் இயக்கப்படாத மற்றும் தனிப்பட்டவர்களது செல்வ நலனுக்கான வெறித்தனமான நோக்கத்திற்காக தூண்டப்படாத ஒரு பாரிய இயக்கம் மட்டுமே கொள்கை மாற்றத்திற்கு கட்டாயப்படுத்த தேவையான சமூக சக்தியை உருவாக்க முடியும்.

நோய்தொற்று ஒழிப்பு உத்தியை வழிநடத்தும் அடிப்படை கொள்கைகள் விஞ்ஞானத்தையும், உலகளவில் கோவிட்-19 ஐ ஒழிக்க செலவு வரம்பு எதுவும் இருக்க முடியாது என்ற வலியுறுத்தலையும் அடிப்படையாகக் கொண்டது. உலகளாவிய மக்களின் சமூக நலன்கள் விஞ்ஞான உண்மையுடன் சக்திவாய்ந்த முறையில் தொடர்பில் உள்ளன.

உலகளவில் வைரஸை முற்றிலும் ஒழிக்க முடியும். “தொற்றுநோயை நிறுத்தி உயிர்களைக் காப்பாற்றுவதற்கான உலகளாவிய மூலோபாயத்திற்கு,” என்ற தலைப்பிலான உலக சோசலிச வலைத் தளத்தின் இணையவழி கலந்துரையாடலில், கல்கரி பல்கலைக்கழகத்தின் டாக்டர் மால்கோர்சாடா காஸ்பெரோவிச் (Malgorzata Gasperowicz) வழங்கிய மாதிரித் தரவு (modeling data), பூட்டுதல் மற்றும் தொடர்புத் தடமறிதல் கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்தி 37 நாட்களில் புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கையை பூஜ்ஜியமாக குறைக்க முடியும் என்பதைக் காட்டுகிறது.

Eradication policies in China have kept the COVID-19 death toll to below 5,000, or a staggering 250 times less than in Europe. To end the pandemic, however, such measures must be implemented worldwide by a conscious, international political movement of the working class.

சீனாவின் ஒழிப்புக் கொள்கைகள் கோவிட்-19 இறப்பு எண்ணிக்கையை 5,000 க்கு குறைவாக, அல்லது ஐரோப்பாவை விட 250 மடங்குகள் குறைவாக தக்கவைத்துக் கொண்டுள்ளது. எவ்வாறாயினும், நோய்தொற்றை முடிவுக்குக் கொண்டுவர, இத்தகைய நடவடிக்கைகள் தொழிலாள வர்க்கத்தின் ஒரு நனவான, சர்வதேச அளவிலான அரசியல் இயக்கத்தால் உலகளவில் செயல்படுத்தப்பட வேண்டும்.

மனிதாபிமான சுகாதாரக் கொள்கைக்காக ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் சர்வதேச அளவிலான போராட்டங்களை ஏற்கனவே முன்னெடுத்துள்ளன. இது, மில்லியன் கணக்கான உயிர்களை காப்பாற்றும் வகையில் 2020 வசந்த காலத்தில் ஆரம்பகட்ட பூட்டுதல்களை விதித்த இத்தாலி மற்றும் ஐரோப்பா எங்கிலுமாக வாகனம், எந்திரம் மற்றும் உணவு பதப்படுத்துதல் தொடர்புபட்ட முக்கிய ஆலைகளில் தன்னியக்க வேலைநிறத்தங்களின் அலையாக எழுச்சி கண்டது. எவ்வாறாயினும், தொழிற்சங்க அதிகாரத்துவமும், அரசியல் ஸ்தாபகமும் இணைந்து செயல்பட்டு தொழிலாளர்களை வேலைக்குத் திரும்பச் செய்ததுடன், பூட்டுதல்கள் அதிகம் செலவுக்குரியவை மற்றும் நடைமுறைக்கு சாத்தியமற்றவை என்று கண்டனம் செய்தன.

ஜேர்மனியில் உள்ள இரயில் ஓட்டுநர்கள், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் விநியோக ஊழியர்கள், பிரிட்டனில் உள்ள லாரி ஓட்டுநர்கள் மற்றும் பிரான்சில் உள்ள பள்ளி சிற்றுண்டி தொழிலாளர்கள் ஆகியோரை வேலைநிறுத்தங்களுக்கு ஒருங்கிணைத்து அல்லது அழைப்பு விடுத்து ஐரோப்பா முழுவதுமான தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் தற்போது போராட்டத்தில் இறங்குகிறார்கள்.

தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் கட்டுப்பாட்டை மீறி இத்தகைய போராட்டங்களை தொழிலாளர்கள் கையிலெடுத்து அவற்றை பெரும் செல்வந்தர்களின் மனிதாபிமானமற்ற நோய்தொற்று கொள்கைக்கு எதிரான போராட்டத்திற்கு திசைதிருப்புவதில் தான் பல உயிர்களின் பாதுகாப்பு உள்ளது. இது, தொற்றுநோய் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான சர்வதேச அளவிலான, சோசலிச போராட்டத்தின் ஒரு பகுதியாக, பள்ளிகளையும் அத்தியாவசியமற்ற தொழிற்சாலைகளையும் மூடுவதற்கு கட்டாயப்படுத்தும் வகையில் சாமானிய பணியிட பாதுகாப்புக் குழுக்களை கட்டமைப்பதை உள்ளடக்கியது.

Loading