ஆப்கானிஸ்தான் தோல்விக்குப் பின்னர், பேர்லினும் புரூசெல்ஸூம் சுதந்திரமான ஐரோப்பிய போர் கொள்கையைத் தொடர்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆப்கானிஸ்தான் தோல்விக்குப் பின்னர் ஒரு சுதந்திரமான ஐரோப்பிய போர் கொள்கைக்கான அவற்றின் முன்னெடுப்பை அதிகரித்து வருகின்றன. சுலோவேனியாவின் கிரான்ஜில் நடத்தப்பட்ட ஓர் அதிகாரபூர்வமற்ற கூட்டத்தில், ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் அமெரிக்க இராணுவத்தில் இருந்து சுதந்திரமாக செயல்படும் ஓர் அதிரடி பதிலடிப் படையை நிறுவுவது குறித்து வியாழக்கிழமை விவாதித்தனர்.

ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர்கள் 2 செப்டம்பர் 2021 சுலோவேனியா, கிரான்ஜில் உள்ள பிர்டோ காங்கிரஸ் மையத்தின் முன் குழுவாக புகைப்படம் எடுக்கின்றனர் (AP Photo/Darko Bandic)

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா பின்வாங்கியமை ஐரோப்பிய ஒன்றியம் அதன் சொந்த நிரந்தரப் படையை ஸ்தாபிக்கத் தூண்டும் என்று வெளியுறவு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய உயர் மட்ட பிரதிநிதி ஜோசப் போரெல் அக்கூட்டத்திற்குப் பின்னர் தெரிவித்தார்.

'ஆப்கானிஸ்தான் சம்பவங்களுக்குப் பின்னர், கூடுதல் ஐரோப்பிய பாதுகாதுப்புக்கான தேவை இன்றைய அளவுக்கு வெளிப்படையாக ஒருபோதும் இருந்ததில்லை,” என்று போரெல் தெரிவித்தார். “”சம்பவங்கள், வரலாற்றுக்கு வினையூக்கிகளாக உள்ளன. சில நேரங்களில் வரலாற்றை முன்நகர்த்தும் சில சம்பவங்கள் நிகழ்கின்றன, அது ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துகிறது, இந்த கோடையில் நடந்த ஆப்கானிஸ்தான் சம்பவங்களை அதுபோன்ற நிகழ்வுகளில் ஒன்றாக நான் பார்க்கிறேன்,” என்றார்.

அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டதற்கும் காபூலில் மேற்கத்திய சார்பு கைப்பாவை ஆட்சி வேகமாக பொறிந்ததன் மீதும் ஆரம்பத்தில் ஐரோப்பிய சக்திகள் ஏமாற்றம் மற்றும் சீற்றம் என கலவையுடன் எதிர்வினையாற்றின. எதிர்காலத்தில் வாஷிங்டனின் ஆதரவு இல்லாமலேயே ஆப்கானிஸ்தானில் செய்யப்பட்டதைப் போன்ற இராணுவ நடவடிக்கைகளை அவர்களும் மேற்கொள்ளும் வகையில் இப்போது அவைத் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முற்படுகின்றன.

ஐரோப்பிய பாதுகாப்புக் கொள்கை 'நமது எல்லைகளுக்கு வெளியே சிக்கலான இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்க முடிந்தால் மட்டுமே நம்பகமானதாக இருக்கும்,' என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்நாட்டுச் சந்தை மற்றும் தொழில்துறை கொள்கைக்களுக்கான தற்காலிக ஆணையர் தியரி பிரெட்டன் Süddeutsche Zeitung க்குத் தெரிவித்தார். 'தளவாடங்கள் நகர்வு, தயாரிப்புகள் வேலைகள் மற்றும் கட்டளையக கட்டமைப்புகள் விஷயங்களை உள்ளடக்கிய எல்லாவற்றுடன்—மற்றும் ஐரோப்பாவிற்காக நிலைநிறுத்தப்படும் அந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் அபாயங்கள் மீதான ஒரு பார்வையோடு' இதற்காக வேகமாக அணித்திரட்டக் கூடிய ஓர் ஐரோப்பிய ஒன்றிய தலையீட்டுப் படை தேவைப்படும்.

கிரான்ஜில் அந்த கூட்டத்திற்கு முன்னரே கூட, போரெல் நியூ யோர்க் டைம்ஸில் ஒரு விருந்தினர் பக்க கட்டுரையை வெளியிட்டிருந்தார். 'ஐரோப்பா, உங்களை எழுப்ப ஆப்கானிஸ்தானில் மணி ஒலிக்கிறது' என்ற தலைப்பில் அவர் ஓர் ஐரோப்பிய இராணுவப் படையை நிறுவவும் ஐரோப்பிய பாதுகாப்பு செலவினங்களை மேலும் அதிகரிக்கவும் மன்றாடி கேட்டுக் கொண்டிருந்தார்.

“விமான ஓட்டம் மற்றும் எரிபொருள் நிரப்புதல், கட்டளை மற்றும் கட்டுப்பாடு, மூலோபாய உளவுபார்ப்பு மற்றும் விண்வெளி அடிப்படையிலான சொத்திருப்புகள் என அதிகரித்தளவில் முக்கிய முக்கிய இராணுவத் தகைமைகளுடன் சேர்ந்து, அதிக திறன் கொண்ட, அதிகமாக நிலைநிறுத்தக் கூடிய மற்றும் அதிகமாக செயல்படக்கூடிய படைகள் நமக்குத் தேவைப்படுகின்றன,' என்றவர் எழுதினார், 'ஆனால் நாம் இன்னும் வேகமாகவும் கூடுதலாகவும் முன்நகர வேண்டும். ஐரோப்பிய முகாமின் பாதுகாப்பு திறன்களை அதிகரிப்பதற்காக நிறுவப்பட்ட, ஐரோப்பிய பாதுகாப்பு நிதியம், அடுத்த ஆறு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 8 பில்லியன் யூரோக்கள் அல்லது 9.4 பில்லியன் டாலர்களைப் பெறும். அது கூட்டு ஆராய்ச்சி மற்றும் மிகவும் தேவையான பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு கணிசமாக உதவ பயன்படுத்தப்பட வேண்டும்,' என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் ஈராக்கில் அமெரிக்க தலைமையிலான இராணுவத் தலையீடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்ட பிரச்சாரமான 'மனித உரிமைகள்' அல்லது 'ஜனநாயகம்' பற்றி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எந்த கவலையும் இல்லை, மாறாக போரின் மூலம் ஏகாதிபத்திய நலன்களை முன்னெடுப்பதே முக்கியம் என்பதில் போரெல் எந்த சந்தேகத்தையும் விட்டு வைக்கவில்லை.

'மூலோபாய ரீதியாக இன்னும் கூடுதல் தன்னாட்சி மற்றும் இராணுவ ரீதியாக கூடுதல் திறன் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தால் தான் ஐரோப்பாவின் அண்டை பகுதிகளிலும் அதற்கு அப்பாலும் வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ள முடியும்', மற்றும் 'அதன் நலன்களைப் பாதுகாக்க முடியும்' என்று போரெல் டைம்ஸில் எழுதினார்.

ஐரோப்பிய ஒன்றியம் 'புதிய பயங்கரவாத தாக்குதல்கள்' மற்றும் 'ஒழுங்குமுறையற்ற இடம்பெயர்வு' போன்ற 'அச்சுறுத்தல்களை' எதிர்த்துப் போராட வேண்டி இருக்கும் என்பது மட்டுமின்றி, மற்ற சக்திகளுக்கு எதிராக திருப்பித் தாக்கி சண்டையிட வேண்டியிருக்கும். 'சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகியவை அப்பகுதியில் அதிக ஆதிக்கம் செலுத்தும், அதேவேளையில் பாகிஸ்தான், இந்தியா, துருக்கி மற்றும் வளைகுடா முடியாட்சிகள் அனைத்தும் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றி அமைத்துக் கொள்ளும்,' என்றவர் எச்சரித்தார். ஐரோப்பா 'மேற்கத்திய பின்வாங்கலுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானுடன் வெறும் பேச்சுவார்த்தையாளராக மட்டும் இருக்க அனுமதிக்க முடியாது', 'அமெரிக்காவுடன் சேர்ந்து, அதன் ஈடுபாட்டை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்,' என்றார்.

குறிப்பாக ஜேர்மன் ஏகாதிபத்தியம் ஆக்கிரோஷமாக செயல்பட்டு வருகிறது. ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி அன்னெகிரேட் கிரம்ப்-காரன்பவர் (CDU) வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் இருந்து மேற்கத்திய துருப்புக்களைத் திரும்பப் பெறுவதை ஐரோப்பியர்களால் தடுக்க முடியவில்லை என்று குறை கூறினார். 'ஐரோப்பியர்களான நம்மால் திரும்பப் பெறும் அமெரிக்க முடிவுக்கு எந்த எதிர்ப்பையும் வழங்க முடியவில்லை, ஏனென்றால் நம்மிடம் சொந்த திறன்கள் இல்லாததால் தான் அவ்வாறு செய்ய முடியவில்லை,' என்றவர் ட்விட்டரில் கூறை கூறியிருந்தார்.

விஷயம் சந்தேகத்திற்கிடமின்றி உள்ளது. அதாவது, பேர்லின் அதன் வழியைக் கொண்டிருந்தால், வளங்கள் நிறைந்த மற்றும் புவிசார் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அந்நாட்டின் மீது ஏகாதிபத்திய கட்டுப்பாட்டையும் சுரண்டலையும் மேற்கொள்வதில் நூறாயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்ட அந்த மிருகத்தனமான 20 ஆண்டு கால போர் முயற்சி தொடர்ந்திருக்கும். க்ரம்ப்-காரன்பவர் மற்றும் ஜேர்மனிய முதலாளித்துவ வர்க்கத்தைப் பொறுத்த வரை, ஆப்கானிஸ்தானில் இருந்து கிடைக்கும் மையப் பாடம் இன்னும் கூடுதலாக மறுஆயுதமயமாக்கல் மற்றும் போர் என்பதற்குக் குறைந்ததல்ல.

அந்த பாதுகாப்பு மந்திரியைப் பொறுத்த வரையில், “அமெரிக்காவின் காலடியை ஒற்றி அதேயளவுக்கு மேற்கத்திய கூட்டணியைப் பலப்படுத்துவதில் ஐரோப்பா இப்போது வலுவாக இருக்க வேண்டும்.' அவ்வாறு செய்வதன் மூலம், 'நமக்கு ஒரு 'ஐரோப்பிய தலையீட்டு படை' வேண்டுமா வேண்டாமா என்ற பிரச்சினையில்' ஒருவர் நின்று விடக்கூடாது. 'என்ன பயனுள்ள முடிவெடுக்கும் செயல்முறைகள், உண்மையான கூட்டு பயிற்சிகள் மற்றும் கூட்டுத் திட்டங்களை மேற்கொள்கிறோம் என்பதுடன் சேர்ந்து, இறுதியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் நமது இராணுவத் திறன்களை நாம் எவ்வாறு ஒன்றாகப் பயன்படுத்துகிறோம்!,' என்பது தான் எதிர்கால ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் தற்பாதுகாப்புக் கொள்கை சம்பந்தமான முக்கிய கேள்வியாக உள்ளது.

போர் திட்டங்களை நடைமுறைப்படுத்த, “அனைவரும் ஒரு கூட்டு முடிவை எடுத்த பின்னர், விருப்பமுள்ள கூட்டணிகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்னோக்கி நகர முடியும்.” போர்த் திட்டங்களை செயல்படுத்துவதற்காக, 'அனைவரும் ஒரு கூட்டு முடிவை எடுத்த பின்னர், வலியுறுத்தும் கூட்டணி (coalitions of the willing) ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்னோக்கி செல்லமுடியும்.' ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் 'பாதுகாப்புக்கான பிராந்திய பொறுப்புகளை நிறைவேற்றுகின்றனவா, சிறப்புப் படைகளுக்கு ஒன்றாக பயிற்சியளிக்கின்றனவா மற்றும் மூலோபாயரீதியில் விமானம் செலுத்துவது மற்றும் செயற்கைக்கோள் வேவுபார்ப்பு போன்ற முக்கிய திறன்களை கூட்டாக ஒழுங்கமைக்கின்றனவா' என்பதை ஆராய்வதும் அவசியமாகும். ஜேர்மனி ஏற்கனவே 'இந்த பிரச்சினைகள் குறித்து ஆர்வமுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் விவாதித்தில்' ஈடுபட்டிருந்தது.

கண்டம் முழுவதிலுமான தொழிலாளர்களும் இளைஞர்களும் இதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு உலகப் போர்களில் தோல்வியடைந்த பின்னர் ஒரு மிகப்பெரும் வெளியுறவுக் கொள்கை மற்றும் இராணுவ சக்தியாக தன்னை மறுகட்டமைப்பு செய்து கொள்வதற்காக, ஜேர்மனியில் ஆளும் வர்க்கம் நீண்ட காலமாக ஐரோப்பாவை அதன் தலைமையின் கீழ் ஒழுங்கமைக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஜேர்மனிய மறுஐக்கியம் மற்றும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர், அதன் முன்னணி அரசியல்வாதிகளும் இராணுவத் தலைவர்களும் ஐரோப்பாவிலும் உலகளவிலும் ஜேர்மனி ஒரு பலமான பாத்திரம் வகிப்பதற்காக தீவிரமாக முன்நகர்ந்து வருகிறார்கள்.

2014 மூனிச் பாதுகாப்பு மாநாட்டில், அப்போதைய கூட்டாட்சி ஜனாதிபதி ஜோஹாயிம் கௌவ்க் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியிலிருந்து அவருக்கு அடுத்து வந்த பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர், அவர்களுடன் ஐரோப்பிய ஆணையத்தின் தற்போதைய தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயன் (CDU) ஆகியோர் இறுதியாக ஜேர்மன் இராணுவவாதத்திற்குத் திரும்புவதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து ஜேர்மன் இராணுவம் பாரியளவில் மறுஆயுதமேந்தச் செய்யப்பட்டது, ரஷ்ய எல்லைக்கு அருகே ஜேர்மனிய போர் துருப்புக்கள் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டன, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் புதிய போர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கோவிட்-19 பெருந்தொற்றுக்கு மத்தியில், இப்போது அதன் ஆளும் வர்க்கம் அது தொடங்கியுள்ள தாக்குதலை முன்னெடுத்துச் செல்ல ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள படுதோல்வியைச் சுரண்டி வருகிறது.

பெடரல் அரசாங்கம் இந்தளவுக்கு ஆக்கிரோஷமாக மட்டுமே தெரிகிறது, ஏனென்றால் அதன் போக்கு பெயரளவுக்கு 'இடது' எதிர்க்கட்சிகளாலும் ஆதரிக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் கொசோவோவில் முதல் ஜேர்மனிய போர் திட்டத்தைத் தொடங்க பசுமைக் கட்சியினர் உதவியதற்கு இரண்டு தசாப்தங்களுக்கும் அதிக காலமாக, அவர்கள் ஜேர்மன்-ஐரோப்பிய போர் தாக்குதலில் முன்னணியில் இருந்து வருகின்றனர்.

தற்போதைய இந்த தேர்தல் பிரச்சாரத்தில், சான்சிலர் பதவிக்கான பசுமைக் கட்சி வேட்பாளர் அனலீனா பெயார்பொக் ஜேர்மன்-ஐரோப்பிய வல்லரசு கொள்கை சார்ந்து தொடர்ந்து இந்த மகா கூட்டணியை வலதிலிருந்து விமர்சித்துள்ளார். கடைசி தொலைக்காட்சி விவாதத்திலும் கூட, சர்வதேச அளவில் 'தட்டுத்தடுமாறி கொண்டிருப்பதாக' CDU/CSU மற்றும் SPD மீது குற்றஞ்சாட்டிய அப்பெண்மணி, “இன்னும் செயலூக்கமான ஜேர்மன் வெளியுறவுக் கொள்கைக்கு' அழைப்பு விடுத்தார்.

இடது கட்சியும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் முகாமில் முழுமையாக கால்வைத்துள்ளது. தேர்தல்களில், அது சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சியுடனான ஓர் அரசாங்கக் கூட்டணி மீது கண் வைத்துள்ளதுடன், ஆளும் கட்சியாக அது வெளிநாடுகளில் நேட்டோ மற்றும் ஜேர்மனிய திட்டங்களை ஆதரிக்கும் என்பதை நீண்ட காலத்திற்கு முன்பே தெளிவுபடுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 25 இல், இடதுசாரிகள் 'ஆப்கானிஸ்தானில் இருந்து இராணுவ வெளியேற்றத்திற்காக ஆயுதமேந்திய ஜேர்மனிய படைகளை நிலைநிறுத்த' ஒப்புதல் அளித்தனர். நாடாளுமன்றக் குழுவில் பெரும்பான்மையினர் வாக்களிக்கவில்லை என்றாலும், பாதுகாப்புக் கொள்கைக்கான அதன் செய்தித் தொடர்பாளர் Matthias Höhn உட்பட அதன் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த நிலைநிறுத்தல்களுக்குப் பகிரங்கமாக வாக்களித்தனர்.

ஒரு முன்னணி தலையீட்டு சக்தியாக அமெரிக்காவைப் பிரதியீடு செய்ய அதன் ஆளும் வர்க்கத்தின் திட்டங்களைக் குறித்து தற்பெருமை பீற்றும் கருத்துக்கள் உலா வருகின்றன. ஆனால் அவற்றை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இறுதியில், அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் பின்னணியில் இருந்த, மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து பின்வாங்கிய பின்னர், அதிகரித்தளவில் ரஷ்யா மற்றும் சீனாவுடனான அணு ஆயுதப் போர் அபாயத்தை அதிகரித்தளவில் நேரடியாக கண்முன் கொண்டு வரும், முதலாளித்துவத்தின் அதே அடிப்படை முரண்பாடுகள் தான், ஜேர்மன்-ஐரோப்பிய இராணுவத் தாக்குதலுக்கும் எரியூட்டி வருகின்றன.

இதன் விளைவாக இது ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலேயே—ஐரோப்பாவுக்கு உள்ளேயே கூட மோதல்களில் தீவிரமடைகிறது.

பேரழிவுகரமான மூன்றாம் உலகப் போரை தடுப்பதற்கான ஒரே வழி சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டமைப்பதாகும். இதற்கான புறநிலைமைகள் வேகமாக முதிர்ந்து வருகின்றன. ஆப்கானிஸ்தான் படுதோல்வி பற்றிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனின் சமீபத்திய உரை பற்றிய முன்னோக்கில், உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எழுதியது:

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்த அவமானகரமான பின்வாங்கல், ஒரு நாட்டில் அமெரிக்க கொள்கையின் தோல்வியை மட்டும் அடையாளம் காட்டவில்லை, மாறாக 30 ஆண்டுகளாக நீடித்துள்ள உலக மேலாதிக்க மற்றும் உள்நாட்டு பிற்போக்குத்தனத் திட்டம் மற்றும் உலகப் பார்வையின் தோல்வியை அடையாளம் காட்டுகிறது. அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மை மற்றும் கோவிட்-19 க்கு விடையிறுப்பதில் உலகின் ஆளும் வர்க்கங்களது இலாபத்தால் உந்தப்பட்ட கொலைபாதக கொள்கைகளால் ஏற்பட்ட பாதிப்பின் கீழ் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தீவிரமடைந்து வரும் வர்க்கப் போராட்டத்துடன் இந்த தோல்வி குறுக்கிடுவது ஆழ்ந்த புரட்சிகர தாக்கங்களைக் கொண்டுள்ளது.

போர் அபிவிருத்திகளைத் தடுக்கவும் அதன் மூலக்காரணமான முதலாளித்துவ அமைப்புமுறையை இல்லாதொழிக்கவும், ஜேர்மனியில் இரயில் ஓட்டுனர்கள், செவிலியர்கள் மற்றும் விநியோகத் தொழிலாளர்களின் முக்கிய வேலைநிறுத்தங்கள் உட்பட தொழிலாளர்களின் வளர்ந்து வரும் போராட்டங்களை ஒரு சோசலிச சர்வதேசியவாத முன்னோக்கைக் கொண்டு ஆயுதபாணியாக்க ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei – SGP) போராடி வருகிறது.

Loading