மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பெருந்தொற்றின் பேரழிவுகரமான மீளெழுச்சி மற்றும் பெருநிறுவன தொழிற்சங்கங்களின் பிடியிலிருந்து முறித்துக் கொள்ள தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் இயக்கம் என இந்த நிலைமைகளின் கீழ் அமெரிக்காவில் இன்று தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
2020 தொழிலாளர் தினத்தில், அமெரிக்காவில் கோவிட்-19 இறப்புக்களின் மொத்த எண்ணிக்கை 190,000 ஐ சற்று விஞ்சி இருந்தது. ஓராண்டுக்குப் பின்னர், அது 660,000 க்கு அதிகமாக உள்ளது, மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 40 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. டெல்டா வகை வைரஸின் பரவல் மற்றும் பைடென் நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்ட பள்ளிகளைத் திறந்து விடும் கொள்கை ஆகியவை காரணமாக, 17 முதல் அதற்கு குறைவான வயதுடைய குழந்தைகள் ஜூனில் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. ஜூலை 22 இருந்து இதுவரை குறைந்தது 76 குழந்தைகள் இந்த நோயால் இறந்துள்ளனர்.
பைடென் அவரின் உத்தியோகபூர்வ தொழிலாளர் தின சேதியில், 'அத்தியாவசிய துறைசார் தொழிலாளர்கள் ஓராண்டுக்கும் மேலாக அசாதாரணமான தியாகங்களை செய்து நம் தேசத்தை அவர்கள் முதுகில் சுமந்து சென்றுள்ள நிலையில், உழைக்கும் மக்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளுக்கு விடையிறுக்கும் ஒரு பொருளாதாரத்தை நாம் கட்டமைக்க வேண்டும் என்பதை இந்த தொழிலாளர் தினத்தில் நம்மால் முன்னெப்போதையும் விட அதிக தெளிவாக பார்க்க முடிகிறது,” என்றார்.
பாரிய உயிரிழப்புகளின் வடிவில் தொழிலாளர்களின் 'அசாதாரண தியாகங்கள்' என்பது பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக்குழுவின் கோரிக்கைகளுக்கு மில்லியன் கணக்கான உயிர்களை அடிபணியச் செய்ய, ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டின் ஆதரவுடன், வேண்டுமென்றே எடுக்கப்பட்ட முடிவின் விளைவாகும்.
வேலையற்ற மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கான பெடரல் வேலைவாய்ப்பின்மை சலுகைகள் இன்றிலிருந்து நீக்கப்படுவதை மேற்பார்வையிடுவதன் மூலமாக, பைடென் இப்போது அமெரிக்க தொழிலாளர்களைக் 'கௌரவப்படுத்தி' கொண்டிருக்கிறார். 7.5 மில்லியன் வேலையற்ற தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு 300 டாலர் பெடரல் உதவித்தொகை மற்றும் கூடுதலாக மூன்று மில்லியன் தொழிலாளர்களுக்கு மாநில அரசுகள் வழங்கும் இதே போன்ற சலுகைகள் ஆகியவை இதில் உள்ளடங்கும். வீடுகளில் இருந்து வெளியேற்றாமல் இருப்பதற்கு வழங்கப்பட்டிருந்த கடன் இடைநிறுத்தத்ததை உச்ச நீதிமன்றம் இரத்து செய்த பின்னர், இது வரவிருக்கும் மாதங்களில் ஏறக்குறைய 11 மில்லியன் குடும்பங்கள் அச்சுறுத்துகின்ற நிலையில், இந்த வெட்டுகள் வருகிறது.
பள்ளிகளை மீண்டும் திறப்பது, பட்டினி மற்றும் வீடற்ற நிலையை ஏற்படுத்துவது என இதன் நோக்கம் என்னவென்றால் பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பிணையெடுப்புக்கு நிதி வழங்க தேவைப்படும் இலாபங்களை உருவாக்க மில்லியன் கணக்கான தொழிலாளர்களை அபாயகரமான வேலையிடங்களுக்குள் தள்ளுவதாகும். பெடரல் ரிசர்வ், நிதியச் சந்தைகளில் மாதத்திற்கு 120 பில்லியன் டாலருக்கு மேல் தொடர்ந்து பாய்ச்சுகிறது, இது பங்குச் சந்தையின் வேகமான எழுச்சிக்கும், இந்த பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து அமெரிக்க பில்லியனர்களின் செல்வ வளம் 62 சதவீதம் அதிகரிப்பதற்கும் எரியூட்டியுள்ளது.
'அனைவருக்குமான' ஒரு பொருளாதாரத்தைக் கட்டமைப்பது பற்றிய பைடெனின் வாய்வீச்சு எதுவாக இருந்தாலும், அமெரிக்க தொழிலாளர்கள் நீண்ட நேரம் உழைக்கிறார்கள், உண்மையான அர்த்தத்தில் 1979 இல் செய்ததை விட அவர்கள் அதிக உற்பத்தி செய்கிறார்கள் ஆனால் குறைவாக சம்பாதிக்கிறார்கள். நிகர உற்பத்தித் திறன் 1979-2019 இல் 59.7 சதவீதம் அதிகரித்திருந்ததாகவும், அதேவேளையில் வழக்கமாக தொழிலாளர்களுக்கு கிடைக்கும் பலாபலன் வெறும் 15.8 சதவீதம் மட்டுமே அதிகரித்திருந்ததாகவும் பொருளாதாரக் கொள்கை பயிலகம் தயாரித்த 2021 தொழிலாளர் தின அறிக்கை ஒன்று கண்டறிந்தது.
தொழிலாள வர்க்கத்தின் நிலைமை வரலாற்று ரீதியில் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரப்பட்டிருப்பது, AFL-CIO மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. நான்கு தசாப்தங்களாக வேலைநிறுத்த நடவடிக்கைகளை நசுக்கிய பின்னர், தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்த பெரிய வேலைநிறுத்தங்களின் எண்ணிக்கை கடந்தாண்டு எட்டாக குறைந்தன, இது 1947 க்குப் பின்னர் கடந்தாண்டின் மூன்றாவது மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.
பைடென் அவரின் தொழிலாளர் தின அறிக்கையில் குறிப்பிடுகையில், 'பல ஆண்டுகளாக, தொழிலாளர் இயக்கம் பல போராட்டங்களை ஜெயித்துள்ளது: 40 மணி நேர வேலை வாரத்தை ஸ்தாபித்தது, பணியிடங்களை ஒருங்கிணைத்தது, குழந்தைத் தொழிலாளர்களை அகற்றியது, தொழிலாளர்களுக்கு சுகாதாரமான மற்றும் தற்காப்பான பாதுகாப்புகளை ஏற்படுத்தி கொடுத்தது என இன்னும் பல வெற்றிகளைக் கண்டுள்ளது,' என்றார்.
தொழிற்சங்கங்களைப் பற்றிய பைடெனின் இந்த புராண விளக்கம் யதார்த்தத்துடன் முற்றிலும் முரண்படுகிறது, இது அவருக்கும் தெரியும். தொழிற்சங்கங்கள் நீண்ட காலத்திற்கு முன்னரே நாளொன்றுக்கு எட்டு மணி நேர வேலை நேரம், அடிப்படை சுகாதார மற்றும் பாதுகாப்பு மற்றும் பிற பாதுகாப்புகளைக் கை துறந்து விட்டன. ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கம், ஐக்கிய எஃகுத்துறை தொழிலாளர்கள் சங்கம் மற்றும் பிற சங்கங்களும் ஆலைகளின் வேலை நாட்களில் வழமையாக 10 இல் இருந்து 12 மணி நேரத்தை அமலாக்குகின்றன. வாகன உதிரிப் பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான டேனா, இன்க். அதன் ஆலையில் வாரத்திற்கு 86 மணி நேரம் வேலை செய்யுமாறு தொழிலாளர்களை மிகை நேர வேலைக்கு நிர்பந்திக்கிறது. அந்நிறுவனத்தின் கென்டக்கியின் ட்ரை ரிட்ஜ் ஆலையின் உற்பத்தியில் ஏற்பட்ட கோளாறில் சிக்கி 60 வயதான டேனி வாட்டர்ஸ் எனும் ஒரு தொழிலாளர் உயிரிழந்துள்ளார்.
தொழிலாளர்கள் கடுமையாக போராடி வென்ற ஒவ்வொரு ஆதாயத்தையும் அழிப்பதை ஏற்குமாறு தொழிற்சங்கங்கள் பல தசாப்தங்களாக தொழிலாளர்களை நிர்பந்தித்துள்ள அதேவேளையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவை இந்த பெருந்தொற்றுக்கு மத்தியில் பத்து மில்லியன் கணக்கானவர்களை வேலைக்குச் செல்ல நிர்பந்திப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தன.
பைடென் நிர்வாகம் மில்லியன் கணக்கான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைக் கோவிட் நோய்தொற்று உள்ள பள்ளிகளுக்கு மீண்டும் அனுப்ப தற்போது அமெரிக்க ஆசிரியர் சம்மேளனத்தை (AFT) நம்பியிருக்கிறது. AFT தலைவர் ராண்டி வைன்கார்டன் அவருடைய தொழிலாளர் தின அறிக்கையில், AFT இன் 'அனைவருக்கும் பள்ளியைத் திறந்துவிடும் பிரச்சாரத்தை' உள்நுழைத்தார், 'நேரடி வகுப்புகளை ஆதரிக்க வாக்கு சேகரிக்கும் பாணியிலான பிரச்சாரம்' இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஆளும் வர்க்கத்திற்கு அவர் வழங்கும் சேவைகளுக்காக ஆண்டுக்கு 500,000 டாலர்கள் சம்பாதிக்கும் வைன்கார்டன், பள்ளிகள் மீண்டும் திறப்பதால், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளின் தலைவிதியைக் குறித்து அலட்சியத்தை வெளிப்படுத்தினார். டெல்டா வகை வைரஸ், 'நம்முடன் மட்டைப்பந்து விளையாடுகிறது,” என்றவர் எழுதினார். மட்டைப்பந்து! இந்த பெருந்தொற்றால் உயிரிழந்த மற்றும் உயிரிழந்து கொண்டிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் பிற தொழிலாளர்களின் எண்ணிக்கையை வைன்கார்டன் குறிப்பிடவும் கூட இல்லை, ஏனென்றால் அது ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்தின் குற்றகரமான கொள்கைகளை ஆதரிப்பதில் அவரின் சொந்த பங்கை மட்டுமே அம்பலப்படுத்தும்.
அவருக்காக சில புள்ளிவிவரங்களை வழங்குவோம்: ஜூலை 1, 2021 இல் இருந்து குறைந்தபட்சம் 181 பள்ளி பணியாளர்கள் உட்பட பணியிலுள்ள மற்றும் ஓய்வு பெற்ற குறைந்தபட்சம் 1,600 கே-12 கல்வியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கோவிட்-19 ஆல் உயிரிழந்துள்ளனர். சரியான புள்ளிவிவரங்களைப் பெறுவது கடினம் தான் என்றாலும், 3,500 க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் இறந்துள்ளனர், இறைச்சி பதப்படுத்தும் தொழிலாளர்கள் மற்றும் உணவு பொருட்கள் சில்லரை விற்பனைத் துறை தொழிலாளர்கள் 500 பேர், மற்றும் நூற்றுக் கணக்கான போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர், நியூ யோர்க்கில் மட்டுமே 156 பேர் உயிரிழந்திருப்பதும் இதில் உள்ளடங்கும்.
உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்களை 'தொழிலாளர் அமைப்புக்களாக' கூறுபவர்கள் வகிக்கும் பங்கை கடந்த 18 மாதங்கள் அம்பலப்படுத்தியதை விட படுமோசமாக எப்போதும் அம்பலப்படுத்த முடியாது. AFL-CIO ஐ அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளும் மற்றும் ஏனைய போலி-இடது அமைப்புக்களும் ஊக்குவிப்பதானது, வர்க்கப் போராட்டத்தை தனிமைப்படுத்தி நசுக்க உயர்மட்ட நடுத்தர வர்க்க நிர்வாகிகளை உள்ளடக்கிய ஒரு தொழிலாளர் பொலிஸ் படையைப் பலப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
ஆனால், கூடுதல் கூலிகள் மற்றும் மேம்பட்ட நிலைமைகளுக்காக மட்டும் போராடாமல் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக போராடும் தொழிலாள வர்க்கம், இந்த பெருநிறுவன அதிகாரக் குழுக்களுடன் நேரடியான மோதலுக்கு வந்து கொண்டிருக்கின்றது.
ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கமும் (UAW), அமெரிக்க எஃகுத்துறை தொழிலாளர்கள் சங்கமும் ஆதரித்து கொண்டு வந்த ஓர் ஒப்பந்த முன்மொழிவை கடந்த வாரம் ஆயிரக்கணக்கான டேனா ஆலை தொழிலாளர்கள் நிராகரித்தனர். பல ஆலைகளிலும் தொழிலாளர்கள் அந்த ஒப்பந்தத்தை 9 க்கு 1 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிராகரித்துள்ளனர், மேலும் ஓஹியோ டொலெடோ ஆலை தொழிலாளர்கள் அதை 435 க்கு 0 என்ற வித்தியாசத்தில் ஒருமனதாக தோற்கடித்தனர். UAW மற்றும் USW, அவற்றின் பங்குக்கு, ஒரு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க மறுத்துள்ளதுடன், நிறுவனத்திற்காக உதிரிப் பாகங்களைக் கையிருப்பில் வைக்க தொழிலாளர் தினத்திலும் வேலை செய்ய டேனா தொழிலாளர்களை நிர்பந்தித்து வருகின்றன.
டேனா ஆலையில் இந்த தொழிற்சங்க ஆதரவு ஒப்பந்தங்கள் பெரும்பான்மையில் நிராகரிக்கப்படுவதற்கு முன்னர், ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கத்திற்கு எதிரான கிளர்ச்சியும் மற்றும் வேர்ஜீனியாவின் டப்ளினில் வொல்வோ டிரக் தொழிலாளர்களின் ஆறு வார கால வேலைநிறுத்தமும் இருந்தது. அதற்கு முன்னதாக இந்தாண்டு தொடக்கத்தில் அலபாமாவின் வாரியர் மெட் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் ஐக்கிய சுரங்கத்துறை தொழிலாளர் சங்க ஒப்பந்தத்திற்கு எதிராக 1,006 க்கு 45 என்ற வித்தியாசத்தில் வாக்களித்திருந்தனர், மேலும் மாசசூசெட்ஸின் வொர்செஸ்டரில் செவிலியர்களின் உறுதியான எதிர்ப்புடன் ஆறு மாதங்கள் வேலைநிறுத்தமும் இருந்தன.
தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான, சாமானிய தொழிலாளர் குழுக்களைத் தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் உண்மையான அமைப்புக்களாக ஸ்தாபிக்க, தொழிலாளர்களின் இயக்கம் அதிகரித்து வருகிறது.
மிச்சிகன், ஓஹியோ, கென்டக்கி, மிசோரி மற்றும் பிற மாநிலங்களில் உள்ள டேனா ஆலை தொழிலாளர்கள் அவர்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்கவும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளின் ஆதரவை வென்றெடுக்கவும் டேனா ஆலை சாமானிய தொழிலாளர் குழுவை உருவாக்கி உள்ளனர். வொல்வோ ஆலையில் அந்த போராட்டம், உலக சோசலிச வலைத் தளத்தின் உதவியுடன் நிறுவப்பட்ட ஒரு சாமானிய தொழிலாளர் குழுவால் வழிநடத்தப்பட்டு நீடித்தது.
இந்த வடிவத்தில் தான் வர்க்கப் போராட்டம் வளர வேண்டும், வளரும். இந்த நிலைமைகள் அமெரிக்காவுக்கு மட்டுமே தனித்துவமானவை அல்ல. இந்தியா மற்றும் இங்கிலாந்தின் இரயில்வே தொழிலாளர்கள், வாகனத்துறை தொழிலாளர்கள், அயர்லாந்தில் பேருந்து தொழிலாளர்கள், சிலியில் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகள் மத்தியில் அதிகரித்து வரும் இந்த இயக்கம், தேசியவாத மற்றும் முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களின் தளைகளை உடைத்து சுதந்திரமடைய முயன்று வருகிறது.
உயிரிழப்புகள், சமத்துவமின்மை மற்றும் சுரண்டலுக்கான ஆளும் வர்க்க கொள்கைக்கு எதிரான ஒரு பொதுவான தாக்குதலில் தங்கள் போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதே அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள சவாலாக உள்ளது. மே மாதம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), சாமானிய குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) உருவாக்கத் தொடங்கியது. உலகெங்கிலுமான தொழிலாளர்கள் IWA-RFC ஐ கட்டியெழுப்பி விரிவாக்கும் அவசர பணியை அவசரமாக முன்னெடுக்க வேண்டும்!
மேலும் படிக்க
- விற்றுத் தள்ளப்பட்ட தொழிற்சங்க-ஆதரவு உடன்படிக்கை பாரிய தோல்வியை நோக்கி நகர்கையில், டேனா வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்தி ஆலை தொழிலாளர்களிடையே எதிர்ப்பு அதிகரிக்கிறது
- அமெரிக்க ஆசிரியர் சங்கங்கள் கோவிட் ஏற்பட்ட பள்ளிகளைத் திறக்க பிரச்சாரம் செய்கின்றன
- ஜேர்மனி: இரயில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் போராட்டத்திற்கு ஆதரவளியுங்கள்! சுயாதீன நடவடிக்கை குழுக்களை உருவாக்குங்கள்!
