முன்னோக்கு

சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு கூட்டணியை அமையுங்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகளாவிய தொற்றுநோயின் நிலைமைகளின் கீழ், சர்வதேச தொழிலாள வர்க்க ஐக்கியத்திற்கான நாள் நடைபெறும் இரண்டாவது ஆண்டை மே 2021 குறித்து நிற்கிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இந்த நாளை, இணையவழி பேரணியுடன் வரவேற்கிறது. சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு கூட்டணியை (International Workers Alliance of Rank-and-File Committees - IWA-RFC) அமைப்பதற்கான அழைப்பை அது வெளியிடும்.

உலகளாவிய பேரழிவிற்கு காரணமான முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தால் கட்டுப்படுத்தப்படும் அரசாங்கங்களின் படுகொலை கொள்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய எதிர்ப்பைத் தொடங்குவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் மற்றும் அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளும் இந்த முயற்சியை முன்னெடுத்து வருகின்றன.

IWA-RFC இன் உருவாக்கம் என்பது, மனித வாழ்க்கையில் ஒரு பயங்கரமான எண்ணிக்கையை பறித்துள்ள உலகளாவிய நெருக்கடிக்கு மிகவும் அவசியமான ஒரு பதிலாகும். 2020 ஆம் ஆண்டில் மே தினம் அனுசரிக்கப்பட்டபோது, உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 250,000 க்கும் குறைவாகவே இருந்தது. இப்போது அந்த எண்ணிக்கையை விட 12 மடங்காக அதிகரித்து 3,000,000 க்கும் அதிகமாக உள்ளது.

தனித்தனி நாடுகளிலும் பிராந்தியங்களிலும் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டுகிறது. அமெரிக்காவில் 583,000 க்கும் மெக்ஸிகோவில் 213,000 க்கும் அதிகமானோர் உட்பட வட அமெரிக்காவில் 850,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். தென் அமெரிக்காவில் 640,000 பேர் இறந்துள்ளனர். அதில் பிரேசிலில் பாதிக்கும் மேற்பட்டவர்களான 350,000 பேர் இறந்துள்ளனர்.

இங்கிலாந்தில் 130,000, இத்தாலியில் 120,000, ரஷ்யாவில் 110,000, பிரான்சில் 100,000 மற்றும் ஜேர்மனியில் 80,000 உட்பட ஐரோப்பாவில் ஒரு மில்லியன் உயிர்களை இழந்துள்ளன. ஆசியாவில், இறப்பு எண்ணிக்கை 500,000 ஐ நெருங்குகிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட 200,000 பேர், ஈரானில் 70,000 பேர், இந்தோனேசியாவில் 44,000 பேர் மற்றும் துருக்கியில் 37,000 பேர் இறந்துள்ளனர்.

120,000 க்கும் அதிகமானோர் ஆபிரிக்காவில் இறந்துள்ளனர். இறந்தவர்களில் கிட்டத்தட்ட பாதி தென்னாபிரிக்காவில் உள்ளனர். உடனடி இறப்பு எண்ணிக்கையைத் தாண்டி, உயிர் பிழைத்தவர்களுக்கு இதன் நீண்டகால விளைவுகள் மோசமானவை. உலகளவில் கிட்டத்தட்ட 150 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மில்லியன் கணக்கானவர்கள் பெயரளவில் குணமடைந்த பின்னர் நீண்ட அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சமீபத்திய ஆய்வின்படி, தொற்றுநோயால் பாதிக்கப்பட்டாதவர்களை விட அடுத்த ஆறு மாதங்களுக்குள் நோய்த்தொற்று ஏற்பட்டு, ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாதவர்கள் இறப்பதற்கு 60 சதவீதம் அதிக ஆபத்து உள்ளது.

தொற்றுநோய் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக இருக்கையில், இந்த வைரஸ் உலகம் முழுவதும் பெருகி வருகிறது. வைரஸின் புதிய மற்றும் அதிக தொற்றும் தன்மை கொண்ட விகாரங்கள் பரவுவதால், உலகளவில் புதிய தொற்றுக்களின் சராசரி எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது.

2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை, இந்தியாவின் மும்பை அருகே விராரில் உள்ள விஜய் வல்லாப் கோவிட் -19 மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தின் பின்னர் சுகாதார ஊழியர்கள் ஒரு நோயாளியை சுமந்து செல்கின்றனர் (AP Photo/Rajanish Kakade)

இந்தியாவில், தினசரி புதிய தொற்றுக்கள் கால் மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு அதிகரித்துள்ளன. முக்கிய நகரங்களின் சுகாதார அமைப்புகள் உடைந்து வருகின்றன. மேலும் இறந்தவர்கள் குவிந்து கிடப்பதால் தகனக் கூடங்கள் நிரம்பிவழிகின்றன. பிரேசிலில், தினசரி புதிய தொற்றுக்கள் மற்றும் புதிய இறப்புகள் பாரிய மட்டத்தில் உள்ளன. தொற்றுநோயின் ஆரம்ப மையமான ஈரானில், வைரஸ் முதலில் தோன்றியதிலிருந்து எந்த நேரத்திலும் இல்லாத அளவுக்கு புதிய நோய்த்தொற்றுக்கள் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளன.

அனைத்து ஏகாதிபத்திய நாடுகளிலும் அமெரிக்கா மிகவும் செல்வம்மிக்க மற்றும் பலம்வாவாய்ந்த நாடாகும். ஆனால் அதன் செல்வம் மற்றும் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பங்களின் மீதான கட்டுப்பாடு இருந்தபோதிலும், தொற்றுநோய் அதன் அரசியல் மற்றும் சமூக அமைப்பின் பிற்போக்குத்தனமான பின்தங்கிய தன்மையை அம்பலப்படுத்தியுள்ளது. அதன் ஆரம்ப கட்டங்களிலிருந்து, தொற்றுநோய்க்கு அமெரிக்காவின் பதில் முதலும், முதன்மையானதாகவும் மற்றும் எப்போதும் ஆளும் தன்னலக்குழுவின் பொருளாதார நலன்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது.

முதலில் ட்ரம்பின் கீழும், இப்போது பைடெனின் கீழும் அரசாங்கக் கொள்கை கொரோனா வைரஸை ஒழிப்பதை நோக்கி அல்ல, மாறாக வோல் ஸ்ட்ரீட் ஏற்றம் நிலைத்திருப்பதற்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான உந்துதலின் முன்னோக்கி கொண்டு செல்வதை நோக்கியே இருந்தது.

சந்தை உந்துதலை அடிப்படையாக கொண்ட கொள்கைகளின் விளைவாக வருடாந்திர இறப்பு விகிதத்தில் ஒரு பாரிய உயர்வு உள்ளது. சந்தை உந்துதல் கொள்கைகளின் விளைவாக வருடாந்திர இறப்பு விகிதத்தில் ஒரு மகத்தான உயர்வு உள்ளது. 2020 ஆம் ஆண்டில் "அதிகப்படியான இறப்புகளின்" எண்ணிக்கை 1918 காய்ச்சல் தொற்றுநோய்களின் போது ஏற்பட்டதை விட அதிகமாகும். ஒரு நூற்றாண்டின் போது விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தில் அனைத்து முன்னேற்றங்களும் இருந்தபோதிலும், 1918-19 தொற்றுநோயைக் காட்டிலும் அதிகமான அமெரிக்கர்கள் கோவிட்-19 தொற்றுநோயால் இறப்பார்கள்.

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 600,000 பேர் இறந்த நிலையில், அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான மோதலான உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்ட படையினர்களின் எண்ணிக்கையை வைரஸின் எண்ணிக்கை வேகமாக நெருங்கி வருகிறது. ஒவ்வொரு நாளும் 70,000 க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள் பதிவாகின்றதுடன் கிட்டத்தட்ட 750 புதிய இறப்புகள் உள்ளன. பல மாநிலங்களில், குறிப்பாக தொழில்துறை மிட்வெஸ்டில், பள்ளிகள், குழந்தை பராமரிப்பு வசதிகள் மற்றும் தொழிற்சாலைகளை மையமாகக் கொண்ட வெடிப்புகள் அதிகரித்து வருகின்றன.

தடுப்பூசியின் விநியோகமும், தொற்றுநோய்க்கு ஆளும் வர்க்கத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் போலவே ஒருங்கிணைக்கப்படாததாகவும், திட்டமிடப்படாததாகவும் இருக்கின்றது. பல முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் கூட, முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களின் சதவீதம் ஒற்றை இலக்கங்களில் உள்ளது. உலகின் பல பகுதிகளுக்கு ஒரு தடுப்பூசியானது, மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட பரவலாக கிடைக்காது. வைரஸின் கட்டுப்பாடற்ற பரவல் என்பது, புதிய மாறுபாடுகள் தொடர்ந்து உருவாகி வருவதற்கு காரணமாகி, எல்லா இடங்களிலும் தடுப்பூசி முயற்சிகளை செயலிழக்க செய்யும்.

தொற்றுநோய்க்கு ஆளும் வர்க்கத்தின் பதில்

வைரஸ் ஒரு உயிரியல் நிகழ்வு. ஆனால் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களின் பதில், அரசியல் கணக்கீடுகள் மற்றும் வர்க்க நலன்களால் தீர்மானிக்கப்படுகிறது. அதிகாரங்களை வைத்திருக்கும் அரசாங்கங்கள், அரசியல் கட்சிகள், வங்கிகள், நிறுவனங்கள், சந்தைகள் மற்றும் ஊடகங்கள் ஆகியவையே இதுவரை நடந்ததற்கான முழு பொறுப்பையும் சுமக்கின்றன.

தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து, ஆளும் வர்க்கம் அதன் பரவலைத் தடுக்க தேவையான பாரிய பரிசோதனை, தொடர்புத் தடமறிதல் மற்றும் அத்தியாவசியமற்ற உற்பத்தி பள்ளிகளை நிறுத்துதல், தொழிலாளர்களுக்கு முழு வருமானத்தை வழங்குதல் மற்றும் சிறு வணிகங்களுக்கு உண்மையான உதவி நடவடிக்கைகள் ஆகியவற்றை எடுக்க மறுத்துவிட்டது. அதன் கவலை, மில்லியன் கணக்கான மக்களின் ஆரோக்கியத்தில் தொற்றுநோய்களின் தாக்கம் அல்ல, மாறாக நிறுவனங்களின் இலாபங்கள் மற்றும் பணக்காரர்களின் செல்வத்தில் உயிர்களைக் காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளினால் ஏற்படும் நிதிய தாக்கம் பற்றியதாகவே இருந்தது.

மில்லியன் கணக்கான உயிர்கள் பறிபோயுள்ளன. ஆனால் பல பில்லியன் டாலர்கள் குவிக்கப்பட்டுள்ளன. தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்தவரை, தொற்றுநோய் ஒரு மனித துன்பியலாக இருந்து வருகிறது. ஆளும் உயரடுக்கைப் பொறுத்தவரை, இது ஒரு நிதிய நன்கொடையாக இருந்து வருகிறது.

உலகின் பில்லியனர்களின் கூட்டுச் செல்வம் கடந்த ஆண்டை விட 60 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இது 8 டிரில்லியன் டாலரிலிருந்து 13.1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாகும். தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டலை பெருமளவில் தீவிரப்படுத்துவதன் மூலமே கடனின் பாரிய அதிகரிப்பிற்கான பணம் செலுத்தப்படும்.

கடந்த 16 மாத காலப்பகுதியில், தொற்றுநோய்க்கு முதலாளித்துவ அரசாங்கங்களின் பிரதிபலிப்பு பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் அக்கறையினால் தீவிரமாகத் தீர்மானிக்கப்படுகிறது என்பது முற்றிலும் தெளிவாகியுள்ளது. தமது "மோசமான புறக்கணிப்பு" கொள்கைகளை நியாயப்படுத்துவதில், அமெரிக்க ஆளும் வர்க்கம் மற்றவர்களிடமிருந்து வேறுபடுவது, அதன் இழிந்த தன்மை மற்றும் வஞ்சகத்தின் அளவிற்கு மட்டுமே. அதன் குற்றவியல்ரீதியான அலட்சியத்தை ஒழுங்கமைப்பதில், அமெரிக்க அரசாங்கம் ஊடகங்களின் ஒத்துழைப்பை நம்பயிருக்கலாம்.

கோவிட்-19 வைரஸை உலகளாவியரீதியில் ஒழிப்பதற்கான விஞ்ஞான ரீதியாக வழிநடத்தப்பட்ட மற்றும் நடைமுறைப்படுத்தப்படக்கூடிய திட்டங்களை நிராகரித்த முதலாளித்துவ கொள்கை, தொற்றுநோயை ஒரு நிரந்தர நிபந்தனையாக ஏற்றுக்கொள்ள வேண்டும், தொழிலாள வர்க்கம் "அதனுடன் வாழ வேண்டும்" அல்லது இன்னும் துல்லியமாக, அதனால் இறக்க வேண்டும் என்ற ஏற்றுக்கொள்ளமுடியாத யதார்த்தத்தை முன்வைக்கின்றது. ஊடகங்களில், தினசரி இறப்புகள் மற்றும் புதிய தொற்றுக்களின் அதிகரிப்பு பற்றிய தகவல்கள் பின்னணிக்கு தள்ளப்பட்டுவிட்டன. மக்கள் பாரிய மரணம் மற்றும் மனித துயரங்கள் பற்றி உணர்மையற்றவர்ளாக இருக்கவேண்டும் மற்றும் செயலற்ற தன்மை மற்றும் விதிவசவாதத்தை ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதற்கு இட்டுச்செல்கிறது.

அதன் கொள்கை, தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை எதிர்கொள்ளும்போது, ஆளும் உயரடுக்கின் பதில் அடக்குமுறை மற்றும் வன்முறையை நாட வேண்டும் என்பதாக உள்ளது. வணிக நடவடிக்கைகளில் எந்தவொரு கட்டுப்பாட்டையும் எதிர்ப்பதற்கான பதாகையைச் சுற்றி வெளிப்படையான பாசிஸ்டுகள் மற்றும் நவநாஜிக்கள் அணிதிரட்டப்படுகிறார்கள். அமெரிக்காவில் ட்ரம்ப் மற்றும் பிரேசிலில் போல்சனாரோ என்பவை ஒரு சர்வதேச நிகழ்வின் அப்பட்டமான வெளிப்பாடுகளாகும். ஜனாதிபதி "ஹிட்லரைப் போலவே இருக்க வேண்டும்" என்று ஒரு இலங்கை அமைச்சரின் அறிவிப்பு ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் உயரடுக்கின் சர்வாதிகார போக்குகளை வெளிப்படுத்துகிறது.

பாரிய மரணம் மற்றும் சமூக துயரங்களுக்கு மத்தியிலும் கூட, அமெரிக்கா ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிரான பிரச்சாரத்தை தீவிரப்படுத்துகிறது. சமீபத்திய இராணுவ வரவு-செலவுத் திட்டம், வரலாற்றில் மிகப்பெரியளவாலான 1 டிரில்லியன் டாலரை நெருங்குகிறது. கடந்த ஆண்டு ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிரான ஏகாதிபத்திய ஆத்திரமூட்டல்கள் ஆபத்தான முறையில் அதிகரித்துள்ளதை காட்டுகின்றது. அமெரிக்க ஊடகங்கள், குறிப்பாக, "வூஹான் ஆய்வகத்தில்" தயாரிக்கப்பட்ட வைரஸால் தொற்றுநோய் ஏற்பட்டது என்று முற்றிலும் இட்டுக்கட்டப்பட்ட கூற்றுக்கள் மூலம் சீனாவிற்கு எதிராக மக்கள் வெறுப்பைத் தூண்ட முயற்சித்தன. இந்த பொய்க்கு, சீன அரசாங்கம் வீகர் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டிய ஒரு மோசமான பிரச்சாரத்துடன் மேலும் ஆதரவு சேர்க்கின்றது.

ரஷ்ய எதிர்ப்பு மற்றும் சீன எதிர்ப்பு வெறுப்பை வேண்டுமென்றே தூண்டுவது என்பது உலகளாவிய ஏகாதிபத்திய நலன்களைப் பின்தொடர்வதில் போருக்கான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தயாரிப்புகளை நியாயப்படுத்துவதை நோக்கியதாகும். எவ்வாறாயினும், அத்தகைய பிரச்சாரம் மற்றும் அவை வழிநடத்தும் இராணுவ மோதல்கள், இன்னும் முக்கியமாக பின்வரும் நோக்கத்திற்கு உதவுகின்றன: அதிகரித்துவரும் உள்நாட்டு மக்கள் கோபத்தினை தேசிய அரசாங்கங்களிடமிருந்து விலக்கி, "வெளிநாட்டு எதிரிகளை" நோக்கி திசைதிருப்புவதாகும். பெருகிவரும் உள்நாட்டு சமூக எதிர்ப்பின் மீதான அரசியல் அடக்குமுறையை அதிகரிக்க அரசாங்கங்கள் போரின் ஆபத்தை தமக்கு சாதகமாக சுரண்டிக்கொள்ளும்.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு எதிர் தாக்குதலுக்கு!

தொற்றுநோய் என்பது ஒரு உலக வரலாற்று நிகழ்வாகும். இது எதிர்வரும் பல தசாப்தங்களிலும் எதிரொலிக்கும். அதன் தாக்கத்தினை பொறுத்தவரை தொற்றுநோயை முதலாம் உலகப் போருடன் ஒப்பிடலாம். ஜூலை 1914 இல் போர் வெடித்தபோது, ஆஸ்திரிய பேராயர் ஃபிரன்ஸ் பேர்டினாண்ட் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, படையினர்கள் நத்தார் பண்டிகைக்கு (Christmas) முன்னர் வீட்டிற்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் போர்க்களத்திற்குச் சென்றனர். ஆனால் போர் மாதக்கணக்காகவும், ஆண்டுக்கணக்காகவும் தொடர்ந்தது. இறப்பு எண்ணிக்கை ஆயிரக்கணக்கானவர்களிடமிருந்து பல்லாயிரக்கணக்கானவர்களுக்கும் பின்னர் மில்லியன் கணக்கானவர்களுக்கும் உயர்ந்தது. துன்பகரமான காட்டுமிராண்டித்தனம் இழுத்துச் செல்லப்பட்டது, ஏனெனில் அது முதலாளித்துவ சக்திகளின் புவிசார் அரசியல் நலன்களுக்கும், போர் இலாபக்காரர்களின் இலாப நலன்களுக்கும் சேவை செய்ததாலாகும். இது, 1917 ரஷ்ய புரட்சியில் உச்சக்கட்டத்தை அடைந்த தொழிலாள வர்க்கத்தின் தலையீட்டின் மூலம் மட்டுமே முடிவுக்கு வந்தது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது பாதுகாப்பான பணியாளர்கள் பிரச்சினைகள் தொடர்பாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட நியூ ரோசெல், N.Y. மான்டெபியோர் நியூ ரோசெல் மருத்துவமனையின் செவிலியர்கள். டிசம்பர் 1, 2020 செவ்வாய்க்கிழமை (AP Photo/Mark Lennihan)

போரைப் போலவே தொற்றுநோயும் உள்ளது. வைரஸிற்கான பிரதிபலிப்பிற்கான நிர்வாகத்தையும் மற்றும் வழிநடத்தவதையும் கட்டுப்படுத்துவதையும் முதலாளித்துவ ஆளும் உயரடுக்கினரிடமிருந்து அகற்றி அதன் சொந்தக் கைகளிலில் எடுப்பதற்கான தொழிலாள வர்க்கத்தின் நனவான மற்றும் சுயாதீனமான தலையீடு இருக்காத வரை இந்த தொற்று தொடரும்.

ஏற்கனவே, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள வாகனத் தொழிலாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள், பிரேசிலில் எண்ணெய் மற்றும் இரயில்வே தொழிலாளர்கள், இந்தியாவில் பொதுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வரை தொழிலாளர்கள் போராடத் தொடங்கியுள்ளனர். பூட்டுதல் மற்றும் பள்ளி மூடல்கள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகள் இல்லாமல் தொற்றுநோய் நிறுத்தப்படாது என்பது தொழிலாள வர்க்கத்தில் மத்தியில் அதிகரித்தளவில் புரிந்துகொள்ளப்படுகின்றது.

எவ்வாறாயினும், ஆளும் உயரடுக்கின் கொள்கைகளை எதிர்ப்பதற்கான தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு முயற்சியும், அரசின் அனைத்து அமைப்புமுறைகளுடனும் உத்தியோகபூர்வ அரசியலின் முழு கட்டமைப்புடனும் முரண்படுகிறது. வெளிப்படையாக வலதுசாரி அல்லது பெயரளவில் "இடது" என்றாலும், ஒவ்வொரு பெரிய முதலாளித்துவ நாட்டிலும் உள்ள உத்தியோகபூர்வ கட்சிகளும் அரசியல் அமைப்புகளும் தொற்றுநோயை தடுக்க விஞ்ஞானிகள் மற்றும் பொது சுகாதாரசேவை அதிகாரிகளும் கோரிய நடவடிக்கைகளை நிராகரித்தன.

உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்களைப் பொறுத்தவரை, ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளுக்கான எதிர்ப்பை ஒழுங்கமைப்பதைத் தவிர்த்து, அவற்றைச் செயல்படுத்த அவை உதவியுள்ளன. இந்த அமைப்புகள் பெயரில் மட்டுமே "தொழிற்சங்கங்களாக" உள்ளன. உண்மையான நடைமுறையில், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்பதை அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே கைவிட்டு, இப்போது பெருநிறுவன மேலாண்மை மற்றும் அரசின் இணை சதிகாரர்களாக செயல்படுகிறார்கள்.

தொழிற்சங்கங்களின் கூட்டுழைப்புவாத சீரழிவு, தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் அரசின் கட்டமைப்பில் அவற்றின் முழுமையான ஒருங்கிணைப்பு அமெரிக்காவில் மிகவும் மோசமானதாக இருந்தாலும், ஒவ்வொரு நாட்டிலும் இதே நிலைமைகள் நிலவுகின்றன. "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம்" என்ற ஆளும் வர்க்கத்தின் கொள்கைக்கு எதிராகவோ அல்லது பணக்காரர்களுக்கான பாரிய செல்வ கையளிப்புக்கு எதிராகவோ தொழிற்சங்கங்கள் ஒரு போராட்டம் கூட நடத்தவில்லை.

சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு கூட்டணி

தொழிலாள வர்க்கம் மீண்டும் போராட, ஆளும் வர்க்கம் மற்றும் பெருநிறுவன சார்பு தொழிற்சங்கங்களுக்கு எதிராக வெவ்வேறு தொழிற்சாலைகள், தொழிற்துறைகள் மற்றும் நாடுகளில் அதன் போராட்டங்களை ஒருங்கிணைக்க ஒரு பாதை உருவாக்கப்பட வேண்டும். இந்த நோக்கத்திற்காக, நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவும் அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளும் சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு கூட்டணியை (IWA-RFC) உருவாக்குவதை முன்னெடுக்கின்றன.

லாஸ் ஏஞ்சல்ஸ் துறைமுக ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில்

தொழிற்சாலைகள், பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் உள்ள தொழிலாளர்களின் புதிய, சுயாதீன, ஜனநாயக மற்றும் போர்க்குணமிக்க நிறுவனங்களுக்கான கட்டமைப்பை சர்வதேச அளவில் உருவாக்க, சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு கூட்டணி (IWA-RFC) செயல்படும். தொழிலாள வர்க்கம் போராட தயாராக உள்ளது. ஆனால் எதிர்ப்பின் ஒவ்வொரு வெளிப்பாட்டையும் அடக்கும் பிற்போக்குத்தனமான அதிகாரத்துவ அமைப்புகளால் இது கட்டுப்படுத்தப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கோருவதற்கும், பாதுகாப்பற்ற தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்துதல் மற்றும் வைரஸ் பரவுவதை தடுக்க தேவையான பிற அவசர நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கோருவதற்கான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை ஏற்பாடு செய்வதற்கான ஒரு வழிமுறையாக இது இருக்கும்.

இந்த கூட்டணியை உலக அளவில் உருவாக்குவதை நான்காம் அகிலத்தின் அனைத்துலக்குழு முன்னெடுக்கின்றது. இதுதான் தொற்றுநோயை எதிர்த்துப் போராட ஒரே வழி. நான்காம் அகிலம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சிகளின் அரசியல் உதவியுடன், சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு கூட்டணி உலகளாவிய பொதுவான போராட்டத்தில் தொழிலாளர்களை ஒன்றிணைக்க போராடும். இது முதலாளித்துவ அரசாங்கங்களையும் தேசிய, இன, பேரினவாத மற்றும் அடையாள அரசியல் போன்ற எண்ணற்ற பிற்போக்கு கருத்தியல்களால் தொழிலாளர்களை எதிரெதிரான முகாம்களில் நிறுத்த முயலும் அதன் ஆதரவாளர்களின் ஒவ்வொரு முயற்சியையும் எதிர்க்கிறது.

இயல்பாகவே, தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நிலைமைகள், பிராந்தியத்திற்கு பிராந்தியத்தியமும், நாட்டிற்கு நாடும் வேறுபடுகின்றன. ஆனால் இவை எவ்வாறான தந்திரோபாயங்களை தேர்ந்தெடுப்பதில் என்பதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் எல்லா நாடுகளிலும், தற்போதுள்ள தொழிற்சங்கங்க அதிகாரத்துவங்கள், ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட பொலிஸ் படையாக செயல்படுகின்றன என்பதும், ஆளும் உயரடுக்கினதும் மற்றும் அவர்களின் அரசாங்கங்களின் பெருநிறுவன மற்றும் நிதிய நலன்களால் பெருகிவரும் மக்கள் எதிர்ப்பிற்கு எதிராக பாதுகாக்க உறுதியாக உள்ளது என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

வெகுஜன போராட்டத்திற்கான புதிய பாதைகளை உருவாக்க வேண்டும். 80 ஆண்டுகளுக்கு முன்னர், வரலாற்றில் ஒரு கட்டத்தில், தற்போதுள்ள தொழிற்சங்க அமைப்புகளின் சீரழிவு இன்றைய காலத்தை விட மிகவும் குறைவாக இருந்தபோது, உலக சோசலிசப் புரட்சியின் மிகப் பெரிய மூலோபாயவாதியான லியோன் ட்ரொட்ஸ்கி, நான்காம் அகிலத்தின் பணி, “சாத்தியமான அனைத்து நிகழ்வுகளிலும், முதலாளித்துவ சமுதாயத்திற்கு எதிரான வெகுஜன போராட்டத்தின் பணிகளுக்கு மிகவும் நெருக்கமாக பொருத்தமான சுயாதீனமான போர்க்குணமிக்க அமைப்புகளை உருவாக்குவதே. இது தொழிற்சங்கங்களின் பழைமைவாத அமைப்புகளுடன் ஒரு நேரடியான உடைவிற்கு இட்டுச்சென்றாலும் அதுபற்றி பின்னடிக்கக்கூடாது” என்று எழுதினார்.

உலகளவில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சாமானிய தொழிலாளர் குழுக்களின் வலையமைப்பை உருவாக்குவதற்கான போராட்டமானது, தொழிற்சங்கங்கள், பள்ளிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இருக்கும் பணியிடங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. உண்மையில், இன்றைய வேலைத்தலங்களில் பெரும்பாலானவை தொழிற்சங்கப்படுத்தப்படவில்லை. இந்த சமூக உண்மை என்னவென்றால், எண்ணுக்கணக்கற்ற வேலைத்தலங்களில் நடைமுறைரீதியான அமைப்பின் ஆரம்ப மற்றும் தனித்தொரு வடிவமாகவே சாமானிய தொழிலாளர் குழுக்கள் எழும்.

இந்த குழுக்களின் வளர்ச்சி இளைஞர்கள் மற்றும் வேலையற்றோர் உட்பட தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளின் ஆதரவை தவிர்க்க முடியாமல் ஈர்க்கும்.

இது ஒரு சர்வதேசப் போராட்டமாகும். தொற்றுநோய் பரவுகையிலும், தடுப்பூசிகளை எதிர்க்கக்கூடிய புதிய வகைகளின் தோற்றமும், உலகளவில் ஒழிக்கப்படாவிட்டால் எந்தவொரு நாட்டிலும் தொற்றுநோயை ஒழிக்க முடியாது என்பதை நிரூபிக்கிறது. முதலாளித்துவ சக்திகளுக்கு இடையிலான தேசிய போட்டியானது தொற்றுநோய்க்கான உலகளவில் ஒருங்கிணைந்த பிரதிபலிப்பைத் தடுத்துள்ளது. இப்போது உயிர்காக்கும் தடுப்பூசி ஆதிக்கம் செலுத்தும் முதலாளித்துவ நாடுகளால் பதுக்கி வைக்கப்பட்டு, அவர்களின் புவிசார் அரசியல் சூழ்ச்சிகளில் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.

சோசலிசத்திற்கான போராட்டம்

நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு உலக சோசலிசப் புரட்சியின் முன்னோக்கின் கட்டமைப்பிற்குள் சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு கூட்டணியை உருவாக்குவதற்கான திட்டத்தை முன்வைக்கிறது.

தொழிலாளர் குழுக்களின் வலையமைப்பின் வளர்ச்சி முற்றிலும் அவசியம். எவ்வாறாயினும், இது புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்கு ஒரு மாற்றீடாக இருக்காது. நடவடிக்கை தேவை, ஆனால் முக்கியமான நடவடிக்கை வேலைத்திட்டம் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். சுயாதீன அமைப்புகளின் வலையமைப்பை நிலைநிறுத்துவதற்கும் வளர்ப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் ஒரு சோசலிச தலைமையின் வளர்ச்சி தேவைப்படுகிறது.

தொற்றுநோயின் பரவலானது நிதிய தன்னலக்குழுவின் செல்வச் செறிவூட்டலில் இருந்து பிரிக்க முடியாதது போலவே, தொற்றுநோயின் முடிவும் தன்னலக்குழுக்களின் அபகரிப்பிலிருந்து பிரிக்க முடியாதது. நிதி உயரடுக்கால் குவிக்கப்பட்ட பரந்த செல்வம் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்ற அவசர நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க பயன்படுத்தப்பட வேண்டும்.

தொற்றுநோய்க்கு, போருக்கு, சமத்துவமின்மைக்கு, சுரண்டலுக்கு, சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டமானது, முழு முதலாளித்துவ சமூக, பொருளாதார ஒழுங்கிற்கு எதிரான போராட்டமாகும். அனைத்து நாடுகளின் தொழிலாளர்களும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும், தன்னலக்குழுக்களை பறிமுதல் செய்வதற்கும், தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சமூக தேவைக்கு சேவை செய்யும் நோக்கத்திற்காக உற்பத்தியின் பகுத்தறிவு, விஞ்ஞான மற்றும் ஜனநாயக கட்டுப்பாட்டின் அடிப்படையில் ஒரு சோசலிச சமுதாயத்தை நிறுவுவதற்கும் ஒரு பொதுவான அரசியல் போராட்டத்தில் ஐக்கியப்பட வேண்டும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களை இந்த போராட்டத்தை முன்னெடுக்க அழைக்கிறது: ஒவ்வொரு தொழிற்சாலை மற்றும் பணியிடத்திலும் சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குங்கள்!

Loading