காரைநகர் மக்கள் மீது இலங்கை பொலிஸ் கொடூரமான தாக்குதலை நடத்தியது

செப்டம்பர் 6 அன்று, காரைநகரில் உள்ள பிட்டியெல்லை மற்றும் ஊரி கிராமங்களுக்குள் புகுந்த சுமார் 25 பொலிசார், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட மக்கள் மீது கொடூரமான தாக்குதலை நடத்தினர். அத்துமீறி வீடுகளுக்குள் நுழைந்த பொலிசார், கிராமவாசிகளை பொல்லுகளால் அடித்து, சப்பாத்துக் கால்களால் உதைத்தனர். கைத்துப்பாக்கிகளைக் காட்டி மக்களை மிரட்டியதோடு வீதிகளில் சென்ற மக்களையும் கண்டபடி தாக்கினர். பொலிஸ் அதிகாரிகள் அனைவரும் மதுபோதையில் இருந்ததாக தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தெரிவித்தனர்.

பொலிசார், இரண்டு வான்களிலும் 10 மோட்டார் சைக்கிளிலும் வந்திருந்தனர். அவர்களில் 10 பேர் மட்டுமே சீருடையில் இருந்ததோடு ஏனையோர் சிவில் உடையில் இருந்தார்கள். அவர்களின் சீருடையில் பொலிசாருக்கான இலக்கங்கள் மற்றும் பெயர்கள் காணப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.

ஊரி கிராமத்தில் தாக்குதலின் போது பொல்லுடன் நிற்கும் பொலிசார்

அப்பாவிப் பொதுமக்கள் மீதான இந்த பொலிஸ் குண்டர் தாக்குதலை சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) வன்மையாக கண்டிக்கின்றன. இது மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான திட்டமிட்ட தாக்குதலாகும்.

இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். பொலிஸ் அச்சுறுத்தலுக்கு பயந்து அவர்கள் வைத்தியசாலைகளுக்கு செல்லவில்லை. ஒரு பாலூட்டும் தாயார் உட்பட 10 பேரை ஊர்காவற்றுறைப் பொலிஸ் கைது செய்து கொண்டு சென்றது.

முதல் நாள் இரவு, இந்தக் கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கும் மற்றும் ஒரு வர்த்தகருக்கும் இடையில் நடந்த ஒரு வீதி விபத்துச் சம்பவத்தினை தொடர்ந்து எழுந்த முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொண்டே, பொலிசார் இந்த தாக்குதலை மேற்கொண்டனர். ஒரு குழுவினருடன் காரில் வந்து கொண்டிருந்த வர்த்தகர், எம். விபூசணன் (29), பி. பானுஜன் (20) ஆகிய இளைஞர்கள் பயணம் செய்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினார். அந்த காரினுள்ளே சிவில் உடையில் சில பொலிசார் இருந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தினால் பொதுமக்களும் இளைஞர்களும் வீதியில் ஒன்று கூடியதுடன் சிலர் சண்டையிட்டுக் கொண்டிருந்த இரு தரப்பினரையும் சமாதானப்படுத்துவற்கு முயற்சி செய்தனர். இந்தச் சம்வத்தினை வீடியோவாக பதிவு செய்த அங்கிருந்த பொலிசார், மறுநாள் அதைப் பயன்படுத்தி இளைஞர்களைக் கைது செய்தனர்.

சம்பவ தினத்தன்று, விபூசணனையும், பானுஜனையும் பொலிசார் கைது செய்து, காரை உடைத்ததாக குற்றஞ்சாட்டி, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைத்தனர்.

மறுநாள் பிற்பகல், இந்தக் கிராமங்களுக்கு திடீரென புகுந்த பொலிசார், பொதுமக்களை தூசண வார்த்தைகளால் திட்டிக் கொண்டு காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை நடத்தினர். இதன்போது, ரி. தேனுஜன் (19), எஸ். விதுசன் (25), பி. பவதரன் (22), எம். டயன்சன் (21), எம். சிந்துஷன் (28), எஸ். விஜிதரன் (28), ரி. நிரஞ்சன் (35), மற்றும் ஒரு இளம் பெண் உட்பட எட்டுப் பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள், ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும் போது வழி நெடுகிலும் தாக்கப்பட்டார்கள்.

எட்டு இளைஞர்களும் ஒரு நாள்பூராவும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர், செப்டம்பர் 7 அன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, தலா 5000 ரூபா ஆள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இவர்களுக்கான வழக்கின் மறு விசாரணை அக்டோபர் 7 நடைபெறவுள்ளது. ஒரு நகர்த்தல் பத்திரத்தினை தாக்கல் செய்ததன் மூலம், விபூசணனும் பானுஜனும் அதே நாள் மாலை பிணையில் விடுதலையானார்கள்.

காரை சேதமாக்கியமை, திருடியமை மற்றும் கோவிட்–19 தடுப்புச் சட்டத்தினை மீறியமை போன்ற பொய் குற்றச்சாட்டுகளை அவர்கள் மீது சுமத்துவதற்கு முயற்சி செய்த பொலிஸ், மேலும் நான்கு பேரை கைது செய்யவுள்ளதாகவும் அச்சுறுத்தியது.

கைது செய்யப்பட்டவர்களை இந்தப் பொய் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிசார் சித்திரவதை செய்தனர். பாதிக்கப்பட்டவர்களின் படி, அவர்களின் கைகள் பின்புறமாக விலங்கிடப்பட்டு, யூரியா உரப் பையினால் தலைகள் மூடிக்கட்டப்பட்ட பின்னர், இரவு முழுதும் தாக்கப்பட்டுள்ளனர். பொலிசார் அவர்களுடைய கண்களுக்கு மிளகாய் தூள் தூவியதோடு, சனிடைஸர் தொற்று நீக்கியையையும் தெளித்துள்ளனர்.

எவ்வாறாயினும், நீதவான், பொலிசாரின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்த போதிலும், கொரோனா தடுப்புச் சட்டத்தை மீறியமை தொடர்பாக வழக்கை பதிவு செய்தார்.

நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதற்கு முன்னர், கைதிகளை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, தாங்கள் மேற்கொண்ட சித்தரவதைகள் பற்றி வைத்தியருக்கு கூறக் கூடாது என்று பொலிசார் மிரட்டினார்கள். “நீங்கள் உண்மையை கூறினால், நாங்கள் உங்கள் மீது சோடிக்கப்பட்ட பல வழக்குகளைப் பதிவு செய்வோம், பின்னர் நீங்கள் பல வருடங்களை சிறைச்சாலையில் கழிக்க வேண்டி வரும்,” என பொலிஸ் மிரட்டியதாக பாதிக்கப்பட்ட ஒருவர் கூறினார்.

தனது மனைவி, மகன் பவதரன், மகள் மற்றும் அவரது கணவர் நிரஞ்சன் ஆகியோர் பொலிசாரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டதாகவும், பின்னர் மகனையும், பாலூட்டும் தாயான மகளையும் அவரது கணவரையும் பொலிசார் கைது செய்து கொண்டு சென்றதாகவும், பிட்டியெல்லை கிராமத்தில் வசிக்கும் பாதிக்கப்பட்ட ஐயம்பிள்ளை பாலசிங்கம் மிகவும் கவலையுடன் உலக சோசலிச வலைத் தளத்துக்கு தெரிவித்தார்.

“திடீரென எமது வீட்டினைச் சுற்றி வளைத்த பொலிசார், வீட்டுக்குள் புகுந்து எனது மகனைக் கைது செய்தனர். நான்கு பொலிசார் அவரைச் சுற்றிவளைத்து தாக்கினார்கள். மகனைப் பாதுகாப்பதற்காக சென்ற எனது மனைவியையும் தாக்கி கீழே தள்ளிவிட்டனர்,” என அவர் கூறினார்.

அடுத்து, ஊரிக் கிராமத்தில் உள்ள சி. சுரேஷின் வீட்டுக்குள் புகுந்த அதே பொலிஸ் குழு, கைக்குழந்தை உட்பட முழுக் குடும்பத்தினரையும் காட்டுமிராண்டினமாக தாக்கி, சொத்துக்களை சேதமாக்கி, வீட்டு வேலியையும் நாசமாக்கியது. தங்களை வீடியோ எடுக்க முற்படுகின்றார்கள் என்று கூறி அவர்களது பெறுமதி வாய்ந்த மூன்று கைத்தொலைபேசிகளையும் பொலிசார் பறித்துச் சென்றனர். 30 நிமிடங்களுக்கு மேலாக நீடித்த இந்த தாக்குதலில் அவரது மகன் அஜித் விதையில் தாக்கப்பட்டு மயக்கமடைந்த உடன் பொலிசார் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர். பின்னர், அஜித்தும் அவரது சகோதரியும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள்.

நினைவிழந்த அஜித்தை ஊரார் வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது

பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நிறுத்துமாறு கேட்டபோது, தானும் கண்டபடி தாக்கப்பட்டதாக, காரைநகர் இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவரான சி. எடிசன் தெரிவித்தார். “பெண்களை வீதியல் வைத்து பொலிசார் கடுமையாக தாக்கியதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன்,” என அவர் தெரிவித்தார்.

தனது மகனை விடுவிப்பதற்காக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்துக்கு சென்ற பெண்ணொருவர், பொலிசார் இளைஞர்களை மேல்மாடியில் வைத்து சித்திரவதை செய்ததை கண்டதாக கூறினார்.

“நாங்கள் ஏழைகளாக இருப்பதாலேயே பொலிஸ் எங்கள் மீது ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விடுகின்றது. அரசாங்கமும் அரசியல்வாதிகளும் எங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவர்கள் எங்களை தேர்தல் நேரத்தில் ஒரு வாக்கு வங்கியாகவே பாவிக்கின்றார்கள்,” என்று இன்னொரு பெண் தெரிவித்தார்.

காரைநகர், யாழ்ப்பாண மாநகரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. பிட்டியெல்லை மற்றும் ஊரி கிராமங்களில் மீனவர்களே அதிகம் வாழ்கின்றனர். மேசன், தச்சுவேலை, மற்றும் மின்னிணைப்பாளர்கள் போன்ற தற்காலிக வேலைகளிலேயே இளைஞர்கள் ஈடுபட்டுள்ளார்கள். பல இளைஞர்கள் வேலையற்றவர்களாக பெற்றோரின் வருமானத்தில் தங்கி வாழ்கின்றார்கள்.

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் இத்தகைய பொலிஸ் மற்றும் இராணுவ தாக்குதல்கள் அடிக்கடி நடக்கின்றன. செப்டம்பர் 5 அன்று, கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பின் வவுணதீவில் இரண்டு சகோதரர்கள் பெற்றோல் நிரப்பிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வரும்போது வீதியில் வைத்து பொலிசாரால் தாக்கப்பட்டார்கள். முகத்திலும் மற்றும் கண்களிலும் காயமடைந்த அவர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆகஸ்ட் 5, யாழ்ப்பாணம் பொன்னாலைக் கிராமத்திற்குள் நள்ளிரவில் நுழைந்த இராணுவத்தினர், வீடுகளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து பொதுமக்களைத் தாக்கினர். பொன்னாலையும், காரைநகரைப் போன்ற ஒரு பின்தங்கிய கிராமமாகும். வடமராட்சி பருத்தித்துறையில் அமைந்துள்ள துன்னாலைக் கிராமமும் அடிக்கடி பொலிஸ் தாக்குதலுக்கு முகம்கொடுத்து வருகின்றது.

அடுத்தடுத்து ஆட்சி செய்த கொழும்பு அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட நீண்ட 30 வருடகால கொடூர யுத்தம் முடிவடைந்து 12 வருடங்களின் பின்னரும் கூட, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளன. இன்னமும் பொதுமக்கள் யுத்தத்தினால் ஏற்பட்ட பேரழிவுகளை எதிர்கொண்டு வருகின்றனர். கோவிட்–19 தொற்றுநோய் அவர்களுடைய வாழ்க்கை நிலமைகளை கடுமையாக பாதித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன்ற சகல தமிழ் கட்சிகள் மற்றும் யாழ்ப்பாணத்தினை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஊடகங்களும், காரைநகர் தாக்குதல் பற்றி மட்டுமல்ல இராணுவத்தினராலும் மற்றும் பொலிசாரினாலும் அடிக்கடி நடத்தப்படும் இத்தகைய ஏனைய தாக்கதல் பற்றியும் முழு மௌனத்தைக் கடைப்பிடிக்கின்றன.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கம் ஒரு ஜனாதிபதி சர்வாதிகார ஆட்சிக்கான தயாரிப்புக்களில் ஈடுபட்டு வரும் நிலைமையிலேயே இத்தகைய கொடூரமான தாக்கதல்கள் நடக்கின்றன. ஜனாதிபதி இராஜபக்ஷ ஒரு ஒடுக்குமுறையான தேசிய “அவசரகால நிலையை” ஆகஸ்ட் 30 அன்று அறிவித்ததுடன், முதலில் மே 27 அன்று அமுல்படுத்தப்பட்ட “அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தை”யும் புதுப்பித்தார். இந்த சர்வாதிகார தயாரிப்புக்கள் ஒடுக்குமுறை அரச படைகளை வலுப்படுத்துகின்றன.

Loading