பேர்லின்: பராமரிப்பு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தத்தின் ஒரு பரந்த அணிதிரட்டலுக்கு!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வியாழக்கிழமை, பேர்லினில் சரிட்டி மற்றும் விவான்டெஸ் நிர்வாகத்தால் நடத்தப்படும் மருத்துவமனைகளில் 2,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். வேலைநிறுத்தத்தின் விளைவாக இந்த வாரம் 30 வார்டுகள், மூன்று தீவிர சிகிச்சை நிலையங்கள் மற்றும் மொத்தம் 1,000 படுக்கைகள் பாவிப்பிற்கு இருக்காது என்று விவான்டஸின் பிரதிநிதி அறிவித்தார்.

வெட்டிங்கில் அமைந்துள்ள விவான்டெஸ் ஆய்வகத்தின் முன் பேரணி (Credit: WSWS Media)

வேலைநிறுத்தம் தொடங்கியதில் இருந்து, தொழிலாளர்கள் ஒரு தொடர் மறியல் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் பங்குகொண்டனர். கடந்த வியாழக்கிழமை 1,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேர்லின் சுகாதார சேவை நிர்வாகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் மற்றும் அணிவகுப்பில் பங்கேற்றனர். வெள்ளிக்கிழமை நூற்றுக்கணக்கானோர் வெட்டிங் பகுதியில் உள்ள விர்ச்சோ மருத்துவமனையில் கூடினர்.

போராட்டக்காரர்கள் வைத்திருந்த பதாகைகள் மற்றும் அறிவிப்பு அட்டைகளில் மருத்துவமனைகளில் வேகமாக சீரழிந்து வரும் நிலை குறித்து தகவல்களை அளித்தன. 'இறுதியாக எங்கள் வேலைகளில் உயிர்தப்புவதற்கு பதிலாக நாங்கள் மீண்டும் நோயாளிகளை பராமரிக்க விரும்புகிறோம்,' என்று ஒன்றில் எழுதியிருந்தது. மற்றொன்றில், 'பராமரிப்பு மாரடைப்பின் விளிம்பில் உள்ளது.' மற்றதில் இந்த பேரழிவுகரமான சூழ்நிலைகளுக்கு பேர்லின் செனட்டில் பொறுப்பானவர்களை நேரடியாக பெயரிட்டிருந்தது. ஒன்றில் பின்வருமாறு எழுதியிருந்தது: 'கொலாட்ஸ், மக்கள் எவ்வளவு பெறுமதியுள்ளவர்கள்?' என எழுதியிருந்தது. மத்தியாஸ் கொலாட்ஸ் விவான்டெஸ் மேற்பார்வை குழுவின் தலைவரும் மற்றும் பேர்லின் செனட்டை நிர்வகிக்கும் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) - இடது கட்சி - பசுமை கட்சி கூட்டணியில் சமூக ஜனநாயகக் கட்சியின் நிதித்துறை செனட்டராவார்.

செனட்டின் ஆதரவுடன் மருத்துவமனை நிர்வாகங்கள், வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர பாரிய அழுத்தங்களை பயன்படுத்துகின்றன. அடிப்படை நோயாளி பராமரிப்புக்கு உத்தரவாதம் அளிக்க இருபிரிவினரும் அவசர சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டனர். வேலைநிறுத்தம் தொடங்கியதும் விவான்டஸும் சரிட்டியும் அனைத்து உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்தனர். இந்த ஆக்ரோஷமான போக்கை மீறி, எதிர்வரும் நாட்களில் இன்னும் அதிகமான தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைநிறுத்தத்தின் விளைவுகள் ஏற்கனவே மருத்துவமனைகளின் அனைத்து பிரிவுகளிலும் தெளிவாக உணரப்பட்டு வருகின்றன. நூற்றுக்கணக்கான சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது இரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை திட்ட அட்டவணையில் வேலைநிறுத்தம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

துப்புரவு, போக்குவரத்து, சமையலறை மற்றும் பிற சேவைகளுக்கான விவான்டெஸ் துணை நிறுவனங்களின் ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். பொதுத்துறை ஊழியர்களுக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட முக்கிய ஒப்பந்தத்துடன் (TVöD) தங்கள் சம்பளத்தை சமப்படுத்த அவர்கள் போராடுகிறார்கள். தற்போது, துணை நிறுவனங்களில் பணிபுரியும் 2,500 தொழிலாளர்கள், அதே வேலையைச் செய்வதற்கு நிறுவனத்தால் நேரடியாகப் பணியமர்த்தப்பட்டவர்களை விட பல நூறு யூரோக்கள் குறைவாக சம்பாதிக்கின்றனர்.

வினியோகங்களுக்கு பொறுப்பான துணை நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் உலக WSWS உடன் சுகாதார நிர்வாகத்தின் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினார்கள். டிர்க் பின்வருமாறு விளக்கினார், “நாங்கள் எங்கள் ஊதியத்தை தாய் நிறுவனத்தின் முக்கிய ஒப்பந்தத்துடன் சமப்படுத்த போராடுகிறோம். ஒரே வேலையைச் செய்வதற்கு ஒரே ஊதியம் வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் மீண்டும் இந்த ஒப்பந்தத்தினுள் ஒருங்கிணைக்கப்படுவோம் என்று எங்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது, ஆனால் எதுவும் நடக்கவில்லை; நிறுவனத்தின் வாக்குறுதிகள் பயனற்றவை.'

டிர்க்(வலது) உம் வினியோகத்துறையில் பணிபுரியும் அவரது சகதொழிலாளியும் (Credit: WSWS Media)

பராமரிப்பு மற்றும் பொதுத்துறை தொழிற்சங்கமான வேர்டி வேண்டுமென்றே துணைநிறுவனத் தொழிலாளர்களை வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. இதனை துணைநிறுவனத் தொழிலாளர்கள் மற்றும் நிரந்தர தொழிலாளர்களால் புரிந்துகொள்ள முடியாமல் இருந்ததுடன், அவர்களின் நிராகரிப்பையும் சந்தித்தது.

சரிட்டி மற்றும் விவான்டெஸ் மருத்துவமனைகளில் சம்பள செலவுகளை கடுமையாக குறைப்பதற்காக சமீபத்திய ஆண்டுகளில் மருத்துவ மற்றும் பராமரிப்பு சேவைகள் வெளி நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, ஊழியர்கள் பெருகிய முறையில் ஆபத்தான வேலை நிலைமைகளுக்கு உட்பட்டுள்ளனர்.

'நான் பணிபுரியும் பகுதியில் ஒரு சிலர் பொதுத்துறை ஊழியர்களுக்கான உடன்படிக்கையின் இன்னும் சம்பளம் பெறுகிறார்கள்' என்று டிர்க் விளக்கினார். கூடுதலாக, பல தற்காலிக தொழிலாளர்கள் மிகவும் மோசமாக ஊதியம் பெறுகின்றனர் என்றார் அவர். 'விவான்டெஸ் துணை நிறுவனமான VSG இன் தொழிலாளர்கள், அதே வேலையைச் செய்வதற்காக தாய் நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டவர்களைக் காட்டிலும் சுமார் 500 யூரோக்கள் [மாதத்திற்கு] குறைவாகப் பெறுகின்றனர்.

எங்கள் துறை தனியார்மயமாக்கப்பட்டபோது, 10 வருடங்கள் அங்கு இருந்தவர்கள் மட்டுமே பொதுத்துறை ஊழியர்களுக்கான உடன்படிக்கையின் விகிதத்தைப் பெற அனுமதிக்கப்பட்டனர். மற்றைய அனைவரும் தரமிறக்கப்பட்டனர்.”

சரிட்டி மற்றும் விவாண்டஸில் வேலைநிறுத்தத்தில் உள்ள பராமரிப்பு ஊழியர்களின் முக்கிய பிரச்சினை தற்போதுள்ள பேரழிவு தரும் வேலை நிலைமைகளை அவசியமாக மேம்படுத்த வேண்டும் என்பதாகும்.

விவாண்டஸில் கதிரியக்கவியல் துறையில் பணிபுரியும் மைக்கேல், தனது மிக அதிகமான பணிச்சுமையை பற்றி பின்வருமாறு விவரித்தார். 'கட்டிலில் படுக்கையாக உள்ள நோயாளிகளை கட்டிலில் இருந்து படமெடுக்கும் மேசைக்கு தனியை இழுத்து பின்னர் கட்டிலுக்கு நகரத்தவேண்டிய சூழ்நிலைகள் உள்ளன. வயதான சகாக்கள் இவ்வாறு தனியாக செய்வதில் சிரமம் அல்லது முதுகுவலியால் அவதிப்படுகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை சுமையை குறைக்கவேண்டும். அதனால் நாங்கள் நன்றாக வேலை செய்ய முடியும். 'வழக்கமான வேலை நேரத்தில் நேரம் போதாததால், எழுத்து வேலைகளை வழமையான வேலைநேரங்களுக்குப் பின்னர் செய்யப்பட வேண்டியுள்ளது. இந்த வேலைக்கு கூடுதல் ஊதியம் இல்லை என்று மைக்கேல் கூறினார்.

லூயிசா மற்றும் அன்னா-லேனா ஆகியோரும் ஊழியர்கள் மீது பெரும் அழுத்தத்தை உறுதி செய்தனர். இது நோயாளிகளாலும் தவிர்க்க முடியாமல் உணரப்படுவத்தாக குறிப்பிட்டனர். இருவரும் மருத்துவதாதிகளாக இருக்க பயிற்சி பெறுகிறார்கள் மற்றும் அவர்களின் தேர்வுகளை எடுக்க உள்ளனர். நோயாளிகளைப் பராமரிக்க அதிக நேரம் வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். 'நாங்கள் பெண்களை சுயமாக கவனிக்கத் தொடங்குகிறோம். எங்களுக்கு ஏற்கனவே ஒரு பெரிய பணிச்சுமை உள்ளது. இது பள்ளியில் நாங்கள் கற்றுக்கொண்ட எல்லாவற்றிற்கும் முரணானது' என்று லூயிசா கூறினார்.

சுகாதார நிர்வாகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமும் மற்றும் அணிவகுப்பும் (Credit: WSWS Media)

அன்னா-லேனா 'மாணவர்கள் ஏற்கனவே முழுநேர ஊழியர்களாக, நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டுள்ளனர்' என்று குறிப்பிட்டார். உதாரணமாக ஒரு மருத்துவதாதி உடல்நலக்குறைவு காரணமாக இல்லாதிருந்தால், மாணவர்கள் ஏற்கெனவே உள்ள வேலைகளில் அடிக்கடி மூழ்கியிருந்தாலும் இந்த வேலையையும் செய்ய வேண்டும். 'சட்டப்படி, அது சரியானதல்ல, அது நோயாளிக்கு நியாயமானதல்ல' என்று மாணவர் மேலும் கூறினார்.

தொற்றுநோய்களின் போது மருத்துவமனைகளின் வேலை நிலைமைகள் அடிப்படையில் தவறான கொள்கையினால் மேலும் மோசமடைந்துள்ளது என்பதை வேலைநிறுத்தக்காரர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

'முழு சுகாதார அமைப்பையும் தனியார்மயமாக்குதல் மற்றும் செலவுகளைக் குறைப்பதன் மூலம் தற்போதைய நிலைமையை உருவாக்குதல் ஆகியவை வேறு எதற்கு வழிவகுக்கும்?' என டிர்க் கேட்டார். மைக்கேலின் கருத்துப்படி, தனியார்மயமாக்கல்தான் செய்திருக்கக்கூடியதில் மிகப்பெரிய தவறு. 'இது பன்றிகளைக் கொழுக்க வைக்கும் ஒரு பண்ணை அல்ல. அதனால் அவற்றை இலாபத்திற்காக விற்கலாம். இங்கு சேமிப்பு எப்போதும் இலாபம் ஈட்டுவதற்காக நோயாளிகள், சாதாரண மக்களின் இழப்பில் செய்யப்படுகிறது” என்றார்.

வெள்ளிக்கிழமை பேர்லினின் வெட்டிங் பிரதேசத்தில் உள்ள விர்ச்சோ- மருத்துவமனையில் நடந்த பேரணியில் பங்கேற்ற சரிட்டி மருத்துவமனையின் செவிலியரான சோஃபி உம் அதே கருத்தை கொண்டிருந்தார்: 'மருத்துவமனைகளை தனியார்மயமாக்குவது ஒரு பிரச்சனை, ஆனால் சேர்க்கப்படும் நோயாளிக்காக வழங்கப்படும் குறிப்பிட்ட விகிதங்களும் ஒரு பிரச்சனையாகும். (ஜேர்மனியின் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களால் மருத்துவமனைகளுக்கு செலுத்தப்படும் கட்டணம்). முதலாளித்துவ அமைப்பு அழுத்தத்தை கொடுப்பதுடன் மற்றும் போட்டியை அதிகரிக்கிறது. அது நிச்சயமாக பொது சுகாதார அமைப்புக்கு பொருந்தாது.'

போதுமான ஊதியம் மற்றும் பொருத்தமான நோயாளி பராமரிப்புக்கான தொழிலாளர்களின் போராட்டம் மற்ற சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மக்களிடையே பரந்த ஆதரவைப் பெறுகிறது. மாறாக, வேலைநிறுத்தத்தை விரிவுபடுத்துவதை தவிர்க்க தொழிற்சங்கமான வேர்டி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறது. செனட்டில் சமூக ஜனநாயகக் கட்சி, இடது மற்றும் பசுமை கட்சிகளுடன் தொழிற்சங்கம் நெருக்கமாக வேலை செய்கிறது. அவர்கள்தான் மருத்துவமனைகளின் அவல நிலைக்கு பொறுப்பாகும்.

வெள்ளிக்கிழமை பிற்பகல், விவான்டெஸ் தொழிற்சங்கத்திடம் துணைநிறுவனங்களின் ஊழியர்களுக்கான ஒரு புதிய சலுகையை வழங்கியது. இது ஒரு ஆத்திரமூட்டல் என்று மட்டுமே விவரிக்க முடியும். மூன்று வருடகால ஒப்பந்தத்தின் அடிப்படையில், முன்மொழியப்பட்ட ஊதிய விகிதம் ஆகஸ்டில் முன்மொழியப்பட்ட சலுகையிலிருந்து அடிப்படையில் மாறாமல் உள்ளது. திங்கட்கிழமை வேலை நிறுத்தத்தை இடைநிறுத்துவதே இந்த சலுகையின் நோக்கமாகும்.

தொழிலாளர்களிடையே பெரும் அதிருப்தியின் வெளிச்சத்தில், வேர்டி இந்த புதிய சலுகையை நிராகரிக்க கடமைப்பட்டதாக உணர்ந்தது. அதே நேரத்தில், தொழிற்சங்கம் பேச்சுவார்த்தைக்கான விருப்பத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது. கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விவான்டெஸ் துணைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் பின்னணியில் இதுதான் இருந்தது.

அதே நேரத்தில், ஒரு சமரச தீர்வு பற்றி விவாதிக்கப்பட உள்ளது. பத்திரிகை அறிக்கைகளின்படி, வெள்ளிக்கிழமை காலை விவான்டெஸ் மருத்துவமனை நிர்வாகம் செனட்டில் இருந்து அரசியல்வாதிகளை சந்தித்து வேலைநிறுத்தம் பற்றி விவாதிக்க முடிவு செய்யப்பட்டது. விவான்டெஸ் ஒரு தீர்வு பற்றிய உடன்பாட்டிற்குத் தயாராக இருந்தது என ஒரு செய்தித் தொடர்பாளர் rbb Fernsehen தொலைக்காட்சி நிலையத்திடம் கூறினார். மேலும் வேர்டியும் இந்த திட்டத்திற்கு உடனடியாக பதிலளித்தது. வேர்டி செய்தித் தொடர்பாளர் அண்ட்ரியாஸ் ஸ்பிளானமான் Rbb Fernsehen இடம் தொழிற்சங்கம் நடுவர்மன்றத்திற்கு ஒப்புக்கொள்ளத் தயாராக இருப்பதாக கூறினார். முன்மொழிவுகள் செய்யப்பட்டால், தொழிற்சங்கம் அவற்றை ஆய்வு செய்யும்.

சரிட்டியை சேர்ந்த மோரிட்ஸும் சோஃபியும் ஆரப்பாட்டத்தில் (Credit: WSWS Media)

இந்த சமீபத்திய நிகழ்வுகள் தொழிற்சங்கம், நிர்வாகம் மற்றும் செனட் உடன் நெருக்கமான ஒத்துழைப்புடன், வேலைநிறுத்தம் பரவலைத் தடுக்க அதனை விரைவாக முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கின்றன என்பதை உறுதிப்படுத்துகிறது. பல ஆண்டுகளாக வேர்டி வகிக்கும் பங்கு இதுதான்.

சோசலிச சமத்துவக் கட்சியின் (SGP) ஆதரவாளர்கள் தொழிற்சங்கத்திலிருந்து சுயாதீனமாக செயல்படும் போராட்டக் குழுக்களை அமைத்து போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்து பிரசுரங்களை விநியோகித்தனர். இத்தகைய குழுக்கள் உடனடியாக உலகெங்கிலும் உள்ள சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பிற தொழிலாளர்களுடன் இணைப்புகளை ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக, போலந்தில் வேலைநிறுத்தம் செய்யும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஜேர்மனியில் ரயில் சாரதிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தவேண்டும்.

Loading