சீனாவுக்கு எதிரான முக்கிய இராணுவ ஒப்பந்தத்தை அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகியவை அறிவித்தன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சீனாவுக்கு எதிரான அமெரிக்க தலைமையிலான போர் முனைப்பை பெரிதும் விஸ்தரிக்கும் விதமாக, பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோருடன் இணைந்து ஜனாதிபதி பைடென் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய இராணுவ கூட்டணிக்கு அறிவித்துள்ளார். பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும், புதிய AUKUS ஒப்பந்தத்தின் முதன்மை இலக்கு சீனா தான் என்பது வெளிப்படையானதே.

இந்த ஒப்பந்தம் “ஒரு அடிப்படை முடிவாகும், இது ஆஸ்திரேலியாவை அமெரிக்கா மற்றும் கிரேட் பிரிட்டனுடன் பல தலைமுறைகளுக்கு தீர்க்கமாக பிணைக்கிறது” என்று ஒரு உயர்மட்ட அமெரிக்க அதிகாரி ஊடகங்களுக்கு சுருக்கமாக விவரித்தார். இது பசிபிக் பகுதியில் இரண்டாம் உலகப் போரின் போதான போர்க்கால கூட்டணி மறுசீரமைக்கப்படுவதைக் குறிக்கிறது, இக்கூட்டணியில் அந்த நேரத்தில் ஜப்பானுக்கு எதிராக, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளின் செயல்பாடுகளுக்கான முக்கிய தளமாக ஆஸ்திரேலியா இருந்தது.

ஜூன் 2021 இல் ஜி7 கூட்டத்தில் கலந்து கொண்ட போரிஸ் ஜோன்சன், ஸ்காட் மோரிசன் மற்றும் ஜோ பைடென்

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை பொறுத்தவரை, இந்த ஒப்பந்தம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தென்கிழக்கு ஆசியா மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளிலிருந்து அதன் இராணுவ தளங்களை திரும்பப் பெற்றபோது ஆசியாவில் கைவிடப்பட்ட அதன் இராணுவ பிரசன்னத்தை மீளக் கொண்டுவருவதைக் குறிக்கிறது. ஏப்ரல் மாதத்தில், பிரிட்டிஷ் கடற்படை இந்தியப் பெருங்கடல் மற்றும் பரபரப்பான தென் சீனக் கடல் பகுதிகளுக்கு பயிற்சிக்காக ஒரு விமானந்தாங்கிக் கப்பல் தாக்குதல் குழுவை அனுப்பியது, இது 1982 இல் தெற்கு அட்லாண்டிக்கில் பால்க்லேண்ட்ஸ் போருக்குப் பின்னர் பிரிட்டிஷ் கடற்படை அனுப்பிய மிகப்பெரிய படையாகும்.

அமெரிக்காவை பொறுத்தவரை அதன் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள சீனாவுக்கு எதிராக இந்தோ-பசிபிக் பகுதியில் பைடென் நிர்வாகம் கூட்டணிகளை உருவாக்குவதானது, பேரழிவுகர புதிய உலகப் போருக்கான தவறான பாதைகளை விரைந்து தோற்றுவிக்கின்றது. பெய்ஜிங் உடனான பதட்டங்களை தணிப்பதற்கு மாறாக, ஒவ்வொரு முனையிலும் சீனாவுடனான அமெரிக்காவின் மோதலை பைடென் அதிகப்படுத்தியுள்ளார், அதாவது “மனித உரிமைகள்” பேரிலான அமெரிக்காவின் போலித்தனமான கண்டனங்கள் மற்றும் வர்த்தகப் போர் நடவடிக்கைகளை எடுக்க வூஹான் ஆய்வக பொய்யை தூண்டியது முதல், தென் சீன மற்றும் கிழக்கு சீன கடல்களில் நிகழ்த்திய கடற்படை ஆத்திரமூட்டல்கள் மற்றும் தைவானுக்கு எதிரான சீனாவின் அச்சுறுத்தல்கள் பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வெளியிட்டது வரையிலான அமெரிக்காவின் நடவடிக்கைகளை குறிப்பிடலாம்.

அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் நான்குமுனை இராணுவ கூட்டணி தொடர்புபட்ட நாற்கர பாதுகாப்பு உரையாடல் அல்லது “Quad” ஐ முன்னிட்டு அடுத்த வாரம் நடைபெறவுள்ள தலைவர்களின் நேரடி சந்திப்புக்கு முன்னதாக, AUKUS அறிவிப்பு முதன்முதலாக வெளிவருகிறது. இது, “சுதந்திரமான, வெளிப்படையான விதிகளின் அடிப்படையிலான உத்தரவு”க்காக பற்றுறுதியுடன் உறுதியளித்து மார்ச் மாதத்தில் பைடென் முதன்முதலில் நடத்திய தலைவர்களின் நேரடி கூட்டத்தையடுத்து நடக்கிறது. இந்த பொதுவான சொற்றொடர், உலகளாவிய விதிகளை வகுத்து அமெரிக்கா மேலாதிக்கம் செய்ததான இரண்டாம் உலகப் போருக்குப் பின்னைய ஏகாதிபத்திய ஒழுங்கிற்கு அது கொண்டுள்ள கடமைப்பாட்டை குறிக்கிறது.

காபூலில் வாஷிங்டனின் கைப்பாவை ஆட்சி அவமானகரமாக வீழ்ச்சி கண்டதில் அதன் இரண்டு தசாப்த கால குற்றவியல் மற்றும் இரத்தக்களரியான நவ காலனித்துவ ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் அது தோல்வியடைந்ததன் பின்னர் உடனடியாக இந்த அறிவிப்பு வெளியாகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவது என்பது, “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்பதில் இருந்து திரும்பி “பெரும் சக்தி மோதல்” மீது, முக்கியமாக சீனாவுக்கு எதிராக கவனம் குவிக்க பென்டகன் ஆவணங்களில் செய்யப்பட்ட ஒரு பரந்த மூலோபாய மாற்றத்தின் ஒரு பகுதியாகும்.

புதிய கூட்டணியின் ஆக்கிரமிப்பு மற்றும் இராணுவவாத தன்மை, ஆஸ்திரேலியா அதன் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் திறன்களை பெரிதும் விஸ்தரிக்கும் வகையில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அதற்கு வழங்குவது தொடர்புபட்ட முடிவால் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா பிரான்சில் இருந்து வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டதான டீசல் மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிராக அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள், மிக அதிக தொலைதூர மட்டத்திற்கு செயல்பட முடியும் என்பதுடன், நீண்ட காலத்திற்கு நீரில் மூழ்கியிருக்க முடியும் என்ற நிலையில், மூலோபாய தென் சீன மற்றும் கிழக்கு சீன கடல்களுக்கு அவற்றை அனுப்ப உதவும்.

அமெரிக்கா தனது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பத்தை சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனுடன் மட்டும் பகிர்ந்து கொண்டது. ஆறு நாடுகளில் மட்டுமே தற்போது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. அணுவாயுத பரவல் தடை ஒப்பந்தத்தை (Nuclear Non-Proliferation Treaty) மீறுவதாகும் என்பதால், ஆஸ்திரேலியா அணுவாயுதங்களை வாங்கவோ, அல்லது ஒரு சிவில் அணுசக்தி தொழிலை நிறுவவோ செய்யாது என பிரதமர் மோரிசன் வலியுறுத்த முனைந்தார்.

இருப்பினும், அந்த முடிவை எடுக்க ஒரு தர்க்கம் உள்ளது: அதாவது உலகின் மிகப்பெரிய யுரேனியம் இருப்பைக் கொண்ட நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியா அணுசக்தி தொழில் இல்லாமல், அதன் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு அணுசக்தி எரிபொருள் நிரப்ப அமெரிக்கா அல்லது இங்கிலாந்தை முழுமையாக சார்ந்திருக்கும். அதிகரித்து வரும் அமெரிக்க-சீன பதட்டங்களுக்கு மத்தியில் பல ஆஸ்திரேலிய மூலோபாய ஆய்வாளர்களால் சமீபத்திய ஆண்டுகளில் முன்மொழியப்பட்ட நடவடிக்கையின்படி, அணுசக்தி தொழில் வளர்ச்சியடைந்தவுடன், எரிபொருளை அணுவாயுதங்களை உருவாக்கவும் பயன்படுத்தலாம்.

AUKUS இன் உருவாக்கம் “பல தலைமுறைகளுக்கு ஆஸ்திரேலியா எடுத்த மிகப்பெரிய மூலோபாய நடவடிக்கை” என்று பைடென் நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரி ஊடகங்களுக்கு தெரிவித்தார். கூட்டணியும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கான முடிவும், ஒபாமா நிர்வாகத்தின் போது தொடங்கப்பட்டு ட்ரம்பின் கீழ் முடுக்கிவிடப்பட்ட சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் திட்டங்களில் ஆஸ்திரேலியாவின் மிக நெருக்கமான ஒருங்கிணைப்பின் உச்சமாக உள்ளது.

சீனாவுடன் அனைத்து வகை மோதலுக்கும் களம் அமைத்ததான தனது “ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு” (Pivot to Asia) திட்டத்தை நவம்பர் 2011 இல் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் நிகழ்த்திய ஒரு உரையின் போது அறிவிக்க ஒபாமா தேர்வு செய்திருந்தார். கான்பெர்ராவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் “பாதுகாக்கப்பட்ட ஆதாரங்களின்” உதவியுடன் உள்கட்சி சதித்திட்டத்தில் தொழிற் கட்சி பிரதமர் கெவின் ருட் (Kevin Rudd) வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கு அவர் விஜயம் செய்தார். ருட் செய்த “குற்றம்” அவர் அமெரிக்க-ஆஸ்திரேலிய கூட்டணியை எதிர்த்தது அல்ல, மாறாக ஒபாமா மோதலுக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில், சீனாவுடனான அமெரிக்காவின் சமரசத்தை அவர் ஆதரித்தார்.

ருட் க்கு பதிலாக ஆட்சிக்கு வந்த ஜூலியா கில்லார்ட், அமெரிக்க கடற்படை, போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களுக்கு அமெரிக்க இராணுவ தளங்களை திறக்க ஒபாமாவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அமெரிக்க போர் எந்திரத்துடன் ஆஸ்திரேலிய ஆயுதப் படைகள் மற்றும் இராணுவ தளங்களின் இன்னும் நெருக்கமான ஒருங்கிணைப்பு குறித்து அடிக்கோடிட்டுக் காட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதான வருடாந்திர AUSMIN பேச்சுவார்த்தையின் போது ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சரும் தங்களது அமெரிக்க சமதரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த தற்போது வாஷிங்டனில் உள்ளனர்.

AUKUS கூட்டணியை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான பேச்சுவார்த்தைகள் அநாமதேய ஆதாரங்களின்படி பல மாதங்களாக இரகசியமாக நடத்தப்பட்டு வருகின்றன. முழுமையான இரகசியமும், சீனாவுக்கு தெரியாமல் வைத்திருப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக அது வாஷிங்டன், இலண்டன் மற்றும் கான்பெர்ராவில் உள்ள ஆளும் வட்டங்களில் நிலவுவதான, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பரவலான, ஆனால் மறைந்திருக்கும் போர் எதிர்ப்பு உணர்வு வெடிக்கக்கூடும் என்ற அச்சத்தை பிரதிபலிக்கிறது.

சமீபத்திய அறிவிப்பு, சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் தயாரிப்புக்கள் மிகவும் முன்னேறியுள்ளதை தெளிவுபடுத்துகிறது. வேறு வழிகளில் பெய்ஜிங்கை அமெரிக்க நலன்களுக்குக் கீழ்ப்படுத்த முடியாவிட்டால், சீனா வென்று மேலெழுவதை தடுக்க அமெரிக்க ஆளும் வர்க்கம் போருக்குச் செல்லத் தயங்காது.

அணுவாயுத சக்திகளுக்கிடையேயான மோதலை நோக்கிய இந்த பேரழிவுகர முனைப்பை நிறுத்துவதற்கான ஒரே வழி, முதலாளித்துவ அமைப்புமுறையையும், மற்றும் உலகை பிற்போக்குத்தனமாக போட்டி தேசிய அரசுகளாக அது பிளவுபடுத்துவதையும் முடிவுக்குக் கொண்டுவர, ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச அளவிலான போர் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்குவதே.

Loading