அமெரிக்க – அனுசரணையிலான ஐ.நா மனித உரிமை பேரவை தீர்மானத்தை ஆதரிப்பது பற்றி இலங்கை தமிழ் கட்சிகள் கலந்துரையாடுகின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) இலங்கை மீது கொண்டுவரப்படும் அமெரிக்க – அனுசரணையிலான தீர்மானத்துக்கு ஆதரவளிப்பது மற்றும் கொழும்பு அரசாங்கத்துடன் ஒரு அதிகாரப் – பகிர்வு உடன்படிக்கைக்கு மத்தியஸ்த்தம் வகிப்பது சம்பந்தமாக, இலங்கை தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்காக ஆகஸ்ட் 22 அன்று சந்தித்து, ஒரு கலந்துரையாடலை நடத்தின.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 30 வருடகால இனவாத யுத்த காலத்தில் நடத்தப்பட்ட, மனித உரிமை மீறல்கள் பற்றி ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும், என கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மானம் கோருகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு (த.தே.கூ) தலைமை தாங்கும் இலங்கை தமிழரசுக் கட்சி கடந்த மாதம் நடந்த கூட்டத்துக்கு தலமையேற்றிருந்தது. தமிழ் கூட்டமைப்பின் பங்காளியான தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ தேசியக் கட்சி ஆகியன இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டன.

2009 ஜனவரியில் போரிலிருந்து தப்பியோடிய தமிழ் குடும்பங்கள் [Source: Wikimedia]

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல்; அரசியல் கைதிகளை விடுதலை செய்தல்; வடக்கு மற்றும் கிழக்கில் நிலங்களைக் கையகப்படுத்துவதை நிறுத்துதல்; அத்தோடு, கொழும்பு மற்றும் புதுடில்லி அரசுகள் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தினை நடைமுறைப்படுத்துதல் போன்ற நான்கு விடயங்களில் இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பங்குபற்றிய கட்சிகள் உடன்பட்டன.

தொழிலாள வர்க்கம் மற்றும் கொழும்பு அரசாங்கத்தின் ஏனைய எதிர்ப்பாளர்களையும் சேர்த்து, தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட தமிழ் ஆயுத இயக்கங்களையும் ஒடுக்குவதற்காகவே இந்த பயங்கரவாத தடைச் சட்டம் 1979 இல் அமுல்படுத்தப்பட்டது. டசின் கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் இந்த கொடூர பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இன்னமும் சிறையில் இருக்கின்றார்கள். இதேபோல், பல முஸ்லிம் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களும் அண்மைய மாதங்களில் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

புலிகளின் ஆயுதங்களைக் களைவதற்காகவும் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் உயரடுக்கினருக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரத்தினைப் பகிர்வதற்காகவும், 1987 ஜூலையில் இந்திய–இலங்கை ஒப்பந்தின் ஊடாக, 13வது திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்கள், தமிழ் முதலாளித்துவத்துடனான அதிகாரப் பரவலாக்கலுக்கு எதிராக இருந்ததோடு, 13வது திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக நடைமுறைப்படுத்தவில்லை.

யுத்த காலத்திலும் மற்றும் 2009 இல் விடுதலைப் புலிகளின் தோல்வியை அடுத்து வந்த தசாப்தத்திலும் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த சொத்துக்களில் சில, இராணுவத்தின் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் மற்றும் இராணுவ முகாம்களுக்காகவும் உபயோகப்படுத்தப்படுகின்றன. தமிழ் மக்கள் வாழும் இந்த பிரதேசங்களில் பௌத்த கோயில்கள் ஆத்திரமூட்டும் வகையில் நிறுவப்படுகின்றன.

பல தசாப்தங்களாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஆக்கிரமித்திருக்கும் இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் இந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிரான பரந்த கோபம், தமிழ் மக்கள் மத்தியில் கொதிநிலையில் உள்ளது.

தொடர்ச்சியான கொழும்பு ஆட்சிகளைப் போலவே, ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ அரசாங்கமும், தமிழ் உயரடுக்கினருக்கு எந்தவொரு சலுகைகளையும் வழங்குவதை எதிர்க்கும் இராணுவம் மற்றும் சிங்கள-பௌத்த இனவாத குழுக்களில் தங்கியுள்ளது. அதேநேரம் அது, தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக தமிழர்–விரோத பிரச்சாரத்தை பயன்படுத்துகின்றது.

கொழும்பு அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுத்து, தங்களின் அரசியல் சலுகைகளளைப் பெற்றுக் கொள்வதற்கே யு.என்.எச்.ஆர்.சி. தீர்மானத்தை தமிழ் உயரடுக்கு கபடத்தனமாக பயன்படுத்திக்கொள்றனவே ஒழிய, தமிழ் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக அல்ல. மனித உரிமை மீறல்கள் மற்றும் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளை தங்கள் பூகோள அரசியல் நலனுக்காக சுரண்டிக் கொள்ளும் அமெரிக்கா மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு, தமிழ் கட்சிகள் தங்கள் அரசியல் உதவிகளை வழங்குகின்றன.

“சர்வதேச அழுத்தத்தில் இருந்து அரசாங்கம் தப்பித்துக் கொள்வதற்கு இடம்கொடுக்காமல் உறுதியாக இருக்க வேண்டும்” என கடந்த மாதக் கூட்டத்தில் தமிழ் கட்சிகள் தீர்மானித்துள்ளதாக, யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. அமெரிக்க இராஜதந்திரிகள், தமிழ் கூட்டமைப்பு தலைவர்களுடன் கொழும்பில் இரண்டு கூட்டங்களை நடத்தியதன் பின்னரே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

ஜூலை 16 அன்று, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்லிஸ், தமிழ் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனையும் ஏனைய கட்சி தலைவர்களையும் கொழும்பில் தனது இல்லத்தில் சந்தித்தார். 'தமிழ் மக்களின் குறைகளை' தீர்ப்பதில் கொழும்பு அரசாங்கங்களின் நேர்மையின்மை பற்றி தூதரிடம் புகார் அளித்ததாகவும் 'சர்வதேச சமூகம் நேரடியாக ஒரு தீர்வை வழங்க தலையிட வேண்டும்' என்றும் தாங்கள் வலியுறுத்தியதாகவும் சம்பந்தன் ஊடகங்களிடம் பேசும்போது தெரிவித்தார்.

ஆகஸ்ட் 15 அன்று நடைபெற்ற இரவு விருந்துபசாரத்தில், தமிழ் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனுடன், “அரசியல் நல்லிணக்கம்” பற்றி டெப்லிஸ் கலந்துரையாடினார். ஐந்து நாட்களுக்கு முன்னர் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட அமைச்சரவை அமைச்சர் ஜி,எல். பீரிசும் அங்கு அழைக்கப்பட்டிருந்தார்.

தமிழ் கூட்டமைப்பு தலைவர்களுடனான கலந்துரையாடல்கள் பற்றி அமெரிக்கா முழுமையாக இந்தியாவுக்கு அறிவித்து வருகின்றது. கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயை கூட்டமைப்பு தலைவர்கள் பல தடைவைகள் சந்தித்துள்ளனர். சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் இராணுவத் தயாரிப்புக்களுடன் இந்தியா அணிசேர்ந்துள்ளதுடன், அது தெற்காசியப் பிராந்தியத்தில் சீனாவின் நடவடிக்கைகளுக்கு விரோதமாக உள்ளது.

“தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு கொழும்பு ஒரு தீர்வினை முன்வைக்க வேண்டும்” மற்றும் அமெரிக்கா அந்த தீர்வுகளை “ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்குவதில்” ஒரு மத்தியஸ்தராக இருக்க வேண்டும் என, சுமந்திரன் ஆகஸ்ட் 30 அன்று கொழும்பில் ஊடகங்கங்களுக்கு தெரிவித்தார்.

அடுத்த யு.என்.எச்.ஆர்.சி. கூட்டம் இன்று ஆரம்பமாக உள்ளது. அதில், மனித உரிமைகள் மீறல் மீதான விசாரணை பற்றிய அதன் கோரிக்கையை “அமுல்படுத்தப்படுவதில் உள்ள முன்னேற்றம்” பற்றி ஆய்வு செய்யப்படும். சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதன் பேரில், யுத்தக் குற்ற ஆதாரங்களைத் திரட்டுமாறு அங்கத்துவ நாடுகளிடம் யு.என்.எச்.ஆர்.சி. ஆணையாளர் மிச்சேல் பச்லெட் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பின் யுத்தம், 2009 மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போது நடந்த தாக்குதல்களில் 40,000 தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐநா கணக்கெடுப்பு கூறுகின்றது. தாங்களாக சரணடைந்த நூற்றுக் கணக்கான புலி போராளிகள் காணாமல் ஆக்கப்பட்ட அதே வேளை, சரணடைந்த புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள்.

சர்வதேச ரீதியாக இடம்பெற்ற எண்ணுக்கணக்கற்ற யுத்தக் குற்றங்களுக்கு பொறுப்பாளிகளான அமெரிக்காவும் மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளுக்கும், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி எந்த அக்கறையும் கிடையாது. சீனாவுடன் கொண்டுள்ள உறவினைத் துண்டிக்குமாறு, இராஜபக்ஷ அரசாங்கத்தை “நெருக்குவதற்காகவே” வாஷிங்டன் இந்த யுத்தக் குற்றங்களைப் பயன்படுத்துகின்றது.

தொற்று நோய் பாதிப்பினால் ஆழமான பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து, நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கொழும்பு ஆட்சி, முதலீடுகளை ஈர்ப்பதற்கும் கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கும் சீனாவில் அதிகமாக தங்கியுள்ளது. கடந்த ஏப்ரலில் சீன நிதியுதவியுடனான கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை தொடங்கியது. இது 269 ஹெக்டேயர் பரப்புக் கொண்ட கடலோர பிரதேசமாக இருப்பதோடு இந்திய மற்றும் பசுபிக் சமுத்திரத்தில் அதன் வர்த்தகப் பாதையில் அமெரிக்காவினால் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான பெய்ஜிங்கின் பெல்ட் அன்ட் ரோட் திட்டத்தின் ஒரு முக்கியமான பகுதியுமாகும்.

பெய்ஜிங் உடனான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் நெருக்கமான உறவுகளை வாஷிங்டன் எதிர்த்தது. இராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு சீனா நிதி மற்றும் இராணுவத் தளபாட உதவிகளை வழங்கியது. பெய்ஜிங் உடனான கொழும்பின் உறவுகளை துண்டித்துக் கொள்வதற்கு நெருக்குவதன் ஒரு பாகமாக, வாஷிங்டன் “மனித உரிமைகள்” மற்றும் “யுத்தக் குற்றங்கள” சம்பந்தமான தீர்மானங்களை தொட்ர்ந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்தது.

இது தோல்வியடைந்தபோது, வாஷிங்டன் ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையை திட்டமிட்டு, மஹிந்த இராஜபக்ஷவை வெளியேற்றி அவருக்குப் பதிலாக, அமெரிக்க–சார்பு மைத்திரபால சிறிசேனவை ஜனாதிபதியாக ஆக்கியது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் கட்சிகள், அமெரிக்கா ஆரம்பித்துவைத்த மனித உரிமைகள் தீர்மானத்தினையும் மற்றும் அதன் ஆட்சி மாற்ற நடவடிக்கையையும் ஆதரித்தன.

ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் இந்தியாவுடன் இணைந்த சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் கூட, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் ஜனாதிபதி கோட்டபாய இராஜபக்ஷவை சந்திப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தனர். ஆகஸ்ட் 23 அன்று, சுமந்திரன், இராஜபக்ஷ வுடன் மூடிய கதவுக்குள் ஒரு கலந்துரையாடலை நடத்தியதாக தமிழ் காலைக்கதிர் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. ஆனாலும் அதன் விபரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய தமிழ் கட்சிகளும் அமெரிக்காவுக்கும் மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளுக்கும் எவ்விதமான உதவிகளும் வழங்குவதற்கான தயாரிப்புக்களில் ஈடுபட்டுள்ளதையே, கடந்த இரண்டு மாதங்களிலான அபிவிருத்திகள் உறுதிப்படுத்துகின்றன. அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் சீனாவுக்கு எதிரான யுத்த தயாரிப்புக்களில் அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கின்றார்கள்.

கொழும்பில் உள்ள தமது சமதரப்பினரைப் போலவே, தமிழ் உயரடுக்கும், இனம் மற்றும் மத வேறுபாடுகளைக் கடந்து வளர்ச்சியடைந்து வரும் இலங்கைத் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்கள் பற்றி பீதியடைந்துள்ளன. அவர்கள், வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்று என்ற தங்கள் முந்தைய கோரிக்கைகளை நீண்டகாலத்துக்கு முன்னரே கைவிட்டுவிட்டனர். இராஜபக்ஷவின் ஒடுக்குமுறைகள், அரசாங்க ஊழியர்களின் வேலை நிறுத்தங்களை தடைசெய்தல் மற்றும் ஏனைய ஜனாநாயக விரோத நடவடிக்கைகள் பற்றி அவர்கள் எதுவும் பேசுவதில்லை.

தமிழ் கட்சிகள் ஏகாதிபத்தியத்தின் பக்கம் திரும்புவதை எதிர்த்து, தங்கள் ஜனநாயக உரிமைகள் மற்று சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, தமிழ் தொழிலாள வர்க்கம் இலங்கை பூராவும் மற்றும் சர்வதேச ரீதியிலும் உள்ள தொழிலாளர்களுடன் ஐக்கியப்பட வேண்டும். தீவு பூராவும் அபிவிருத்தியடைந்துவரும் வர்க்கப் போராட்டங்கள் அத்தகைய ஐக்கியத்துக்கான அடித்தளத்தை உருவாக்கியுள்ளன.

ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டமானது, முதலாளித்துவ ஆட்சியையும் மற்றும் 1948 இல் இலங்கையின் உத்தியோகபூர்வ சுதந்திரத்தில் பொதிந்துள்ள இனவாத பாகுபாடுகளையும் தூக்கி வீசுவதற்கான போராட்டத்துடன் பிணைந்துள்ள ஒன்றாகும். ஒரு ஜனாதிபதி சர்வாதிகார ஆட்சியை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் இராஜபக்ஷ ஆட்சி, இனவாத ரீதியில் தொழிலாளர்களைப் பிரிப்பதற்கான முயற்சியில் முன்சென்று கொண்டிருக்கின்றது.

தெற்காசியாவிலும் உலகம் முழுதும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் ஒரு பாகமாக, ஸ்ரீ லங்கா–ஈழம் சோசலிசக் குடியரசுக்காகப் போராடுவதற்கு, சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. இது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் முன்னெடுக்கப்டும் ஒரு சர்வதேச போர்–எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதில் இருந்து பிரிக்க முடியாதது ஆகும்.

Loading