பிரிட்டிஷ் பெற்றோர்கள் அக்டோபர் 1 பள்ளி வேலைநிறுத்தத்திற்கு திட்டமிடுகின்றனர்

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒரு முன்னோக்கிய படி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஆளும் வர்க்கத்தின் கொலைகார தொற்றுநோய் கொள்கைகளுக்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் எதிர்ப்பை பிரதிபலிக்கும் வகையில், வெள்ளிக்கிழமையன்று பிரிட்டிஷ் பெற்றோர் லீசா டியஸ் அக்டோபர் 1ம் தேதி இங்கிலாந்தில் தேசியளவிலான பள்ளி வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்து ட்விட்டரில் ஒரு காணொளி அறிக்கையை வெளியிட்டிருந்தார். பள்ளிகள் மீளத்திறக்கப்பட்ட முதல் இரண்டு வாரங்களில் 59,000 க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் குழந்தைகள் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்ட நிலையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்கவும், அவர்களை வைரஸிலிருந்து பாதுகாக்கவும் சுயாதீனமான முன்முயற்சி எடுக்க ஊக்குவித்தார். இந்த காணொளி இப்போது 75,000 முறை பார்க்கப்பட்டுள்ளது, 2,350 முறை விருப்பம் தெரிவிக்கப்பட்டு, 1,340 முறை மற்றவர்களுட்ன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

லீசா அனைவருக்கும் பாதுகாப்பான கல்வி குழுவின் உறுப்பினர் (SafeEdForAll). இங்கிலாந்து சாமானிய கல்வியாளர்கள் பாதுகாப்புக் குழுவுடன் இணைந்து செயற்படுகின்றார். போரிஸ் ஜோன்சன் நிர்வாகத்தின் பள்ளிகளை மீளத்திறக்கும் குற்றவியல் கொள்கைகளை கண்டித்து பதிவிட்டிருந்த காணொளிகளுக்கு ஏராளமானவர்கள் ட்விட்டரில் பதிலளித்துள்ளனர். மக்கள் தொகையில் வைரஸ் விரைந்து பரவுவதை அனுமதிக்கும் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை” செயல்படுத்தி, இங்கிலாந்து முழுவதும் உள்ள பள்ளிகளில் என்ன நடந்தாலும் அக்கறை கொள்ளாமல் தணிப்பு நடவடிக்கைகளையும் கைவிட்டுள்ளன. வெள்ளிக்கிழமை லீசா தனது காணொளியில், “நாங்கள் முட்டாள்தனங்களால் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்கள் உணர்வுகளை கேள்விக்குள்ளாக்குகிறீர்கள். குழந்தைகளுக்கு பள்ளிகளில் நோய் தொற்றவில்லை, மாறாக பேருந்துகளில் தான் நோய் தொற்றிக் கொள்கிறது என்பது போன்ற அபத்தமான விஷயங்களைச் சொல்ல நீங்கள் விஞ்ஞானிகளுக்கு பணம் கொடுப்பது எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது. இது திருப்திகரமானதல்ல. நாங்கள் இது எதையும் இனி கேட்கப்போவதில்லை” என்று பதிவிட்டிருந்தார்.

லீசா டியஸ் மற்றும் அவரது மகள் (Credit @Sandyboots2020 on Twitter)

இங்கிலாந்து பள்ளி வேலைநிறுத்த அழைப்பு, வளர்ந்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பின் ஒரு பகுதியாகும், இது வர்க்கப் போராட்டத்தில் ஒரு புதிய கட்டத்தில் நுழைகிறது. இதற்கு ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்களின் ஆதரவு தேவைப்படுகிறது மற்றும் சர்வதேச அளவில் இதேபோன்ற வேலைநிறுத்தங்கள் மற்றும் பணியிட நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த வளர்ச்சி உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடியிலிருந்து எழுகிறது, இது கொரோனா வைரஸ் தொற்றுநோயினால் மேலும் மோசமடைந்துள்ளது. ஜனவரி 2020 முதல், உத்தியோகபூர்வ அறிக்கைகளின்படி கோவிட்-19 ஆல் அதிர்ச்சியூட்டும் வகையில் 4.76 மில்லியன் பேர் இறந்துள்ளனர், இருப்பினும் உலகளவிலான உண்மையான இறப்பு எண்ணிக்கை 15 மில்லியனுக்கு அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஒவ்வொரு நாளும் தோராயமாக 466,000 மக்களுக்கு கோவிட்-19 உறுதிசெய்யப்படுவதுடன், நாளாந்தம் வைரஸால் கிட்டத்தட்ட 8,000 பேர் இறப்பதாக உத்தியோகபூர்வமாக பதிவாகிறது.

மிகப்பெரிய மருந்து நிறுவனங்களின் இலாப நலன்களுக்கும் ஏகாதிபத்தியத்தின் புவிசார் அரசியலுக்கும் தடுப்பூசி உற்பத்தியும் விநியோகமும் கீழ்படிவதால், உலகளவில் 32.6 சதவீத மக்களுக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது, அதிலும் உலகின் 10 பெரும் பணக்கார நாடுகளின் பெரும்பான்மை மக்களுக்கே போடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆளும் வர்க்கத்தின் சில பிரிவுகள் மற்றும் தொழிற்சங்கங்கள் கூறுவதற்கு மாறாக, தடுப்பூசிகள், வரையறுக்கப்பட்ட பொது சுகாதார நடவடிக்கைகள் அல்லது இரண்டின் குழப்பமான கலவையால் மட்டும் தொற்றுநோயை கட்டுப்படுத்த முடியாது.

ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளும் உட்பட பல நாடுகளில், முகக்கவச பயன்பாடு மற்றும் ஏனைய தணிப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகள் முழுமையாக மீளத்திறக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் இன்னும் விரைந்து பரவிக் கொண்டிருக்கிறது. நியூயோர்க், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பல இடங்கள் உட்பட, தணிப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளில் குழந்தைகள் கற்கும் நேரத்தை அதிகரிப்பதற்காக அவை விரைந்து அகற்றப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக பள்ளிகள் மீளத்திறக்கப்படுவதற்கான காரணம், பெருநிறுவன இலாபங்களை தாங்கிப் பிடிப்பதற்கும் நிதிய உயரடுக்கை மேலும் செழிப்படைய வைப்பதற்கும் பெற்றோர்களை மீண்டும் வேலைக்கு திரும்பச் செய்வதாகும். தொற்றுநோய் காலத்தின் முதல் 18 மாதங்களில் மட்டும், அமெரிக்காவின் கோடீஸ்வரர்கள் 1.8 டிரில்லியன் டாலர்களை குவித்துள்ளனர், இது அவர்களது கூட்டுச் செல்வத்தில் 62 சதவீத அதிகரிப்பாகும்.

ஒவ்வொரு நாட்டிலுள்ள ஆசிரியர் சங்கங்களும் பள்ளிகளை மீண்டும் திறக்க உதவி செய்துள்ளன, இதனால் கடந்த ஆண்டில் உலகம் முழுவதுமாக ஆயிரக்கணக்கான குழந்தைகள், கல்வியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இறக்கும் நிலை உருவானது. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிற்சங்கங்கள் பள்ளிகள் மீளத்திறக்கப்படுவதை எதிர்க்க எதையும் செய்யவில்லை அல்லது அதை எதிர்ப்பதில் தீவிரமாக ஈடுபடவில்லை. கோவிட்-19 ஆல் பெரும் எண்ணிக்கைகளில் குழந்தைகள் பாதிக்கப்பட்ட மற்றும் இறந்துபோன அமெரிக்காவில், அமெரிக்க ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவரான ராண்டி வைன்கார்டன், முழுமையாக நேரடி வகுப்புக்களை நடத்த வலியுறுத்த ஆகஸ்டில் “அனைவரும் பள்ளிக்கு திரும்ப வேண்டும்” (Back to School for All) பிரச்சாரத்திற்காக 20 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தார்.

அக்டோபர் 1 ஆம் தேதி இங்கிலாந்து பள்ளி வேலைநிறுத்தத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், இது தொழிற்சங்கங்கள், முதலாளித்துவ அரசியல் கட்சிகளிலிருந்து சுயாதீனமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மற்றும் அது உலகெங்கிலும் உள்ள பெற்றோர்கள் மற்றும் தொழிலாளர்களிடமிருந்து சக்திவாய்ந்த பதிலைப் பெற்றுள்ளது. தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் என்பது அதிகரித்தளவில் தொழிலாள வர்க்கம் கையிலெடுக்கும் சமூக போராட்டங்களாக உருவெடுத்துக் கொண்டிருப்பதை இது தெளிவாகக் காட்டுகிறது, மேலும் இது சுயாதீனமான சாமானிய தொழிலாளர் குழுக்கள் மூலம் நனவாக ஒழுங்கமைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

அமெரிக்காவில், கடந்த ஐந்து வாரங்களில் உத்தியோகபூர்வமாக 1 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர், மற்றும் ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று குழந்தைகள் மற்றும் குறைந்தது மூன்று கல்வியாளர்கள் வைரஸால் இறந்தனர். சிகாகோ, நியூயோர்க் நகரம், டெட்ராய்ட், கலிபோர்னியா, டெக்சாஸ், டென்னிசி, பென்சில்வேனியா, வாஷிங்டன் மற்றும் ஏனைய மாநிலங்களின் பெற்றோர்களும் கல்வியாளர்களும், இங்கிலாந்து பள்ளி வேலைநிறுத்தத்திற்கான அழைப்பை அங்கீகரித்ததுடன், இத்தகைய போராட்டங்களை அவர்களது பள்ளி மாவட்டங்களில் நடத்த திட்டமிட்டுள்ளனர். கலிபோர்னியா, வாஷிங்டன், டெக்சாஸ், மற்றும் டென்னிசி மாநிலங்களின் கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களின் சாமானிய பாதுகாப்புக் குழுக்கள் கடந்த வார இறுதியில் சந்தித்ததுடன், இந்த வாரம் இங்கிலாந்து பள்ளி வேலைநிறுத்தத்திற்கு தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தி அறிக்கை வெளியிடவுள்ளன.

கல்வியாளர்களைத் தவிர, வாஷிங்டனின் சியாட்டிலில் பல தசாப்தங்களாக சலுகை ஒப்பந்தங்களை திணித்த தச்சர்களின் ஐக்கிய சகோதரத்துவ (UBC) தொழிற்சங்கத்தை மீறி, 2,000 க்கும் மேற்பட்ட தச்சு தொழிலாளர்கள் சமீபத்தில் வேலைநிறுத்தம் செய்தனர். அமெரிக்கா முழுவதிலும் உள்ள வாகனத் தொழிலாளர்கள், கோவிட்-19 இன் வேகமெடுத்த பரவலுக்கு மத்தியில் உற்பத்தியை நிறுத்துவது உட்பட, மேம்பட்ட வாழ்க்கைத் தரங்கள் மற்றும் வேலை நிலைமைகளுக்காக போராட, பெருநிறுவன சார்பு ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கத்திலிருந்து (UAW) சுயாதீனமான சாமானிய தொழிலாளர்கள் குழுக்களை உருவாக்கியுள்ளனர்.

ஜேர்மனியில், போக்குவரத்து தொழிலாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், விமானப் பணியாளர்கள், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினர் மத்தியில் சமீபத்திய மாதங்களில் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பள்ளிகள் முழுமையாக மீண்டும் திறக்கப்பட்டதற்கு மத்தியில் கோவிட்-19 நோய்தொற்றுக்கள் மீண்டும் வெடித்துப் பரவுவதால், ஜேர்மனியில் உள்ள பல பெற்றோர்களும் கல்வியாளர்களும் அக்டோபர் 1 பள்ளி வேலைநிறுத்தத்திற்கான அழைப்பை அங்கீகரித்துள்ளனர். வயது வந்த கடுமையாக ஊனமுற்ற மகன் மற்றும் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட பள்ளி வயது குழந்தை ஆகிய இருவரது தாயான பெக்கி, “இது மிகவும் முக்கியம்! 01.10.2021#பெற்றோர் போராட்டத்தில் நாம் நமது குழந்தைகளின் பாதுகாப்புக்காக கலந்துகொள்ள வேண்டும்!” என்று உலக சோசலிச வலைத் தளத்திடம் தெரிவித்தார்.

கடந்த வாரம், சுமார் 30,000 இலங்கை சுகாதாரப் பணியாளர்கள், இத்தகைய நடவடிக்கைகளை தடை செய்யும் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத சட்டங்களை மீறி, கோவிட்-19 க்கு எதிராக சிறந்த பணியிடப் பாதுகாப்புகளைக் கோரி நாடு தழுவிய பேராட்டத்தை நடத்தினர். இவர்கள் ஊதிய உயர்வு கோரி இரண்டு மாதங்களுக்கும் மேலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை முழுவதும் உள்ள சுமார் 250,000 ஆசிரியர்களுடன் இணைந்து கொண்டனர்.

கனடாவில், பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டு தொற்றுநோயின் நான்காவது அலையை அது எதிர்கொண்டுள்ள நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பெற்றோர்கள் இந்த வெள்ளிக்கிழமை இங்கிலாந்து பள்ளி வேலைநிறுத்தத்திற்கு ஒத்துழைக்கும் போராட்டங்களுக்கு தயார் செய்து வருகின்றனர். 6,964 செயலிலுள்ள நோய்தொற்றுக்கள் கொண்ட, நாட்டிலேயே கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியான ஆல்பர்ட்டாவில், மருத்துவமனைகள் 87 சதவீத எழுச்சி திறனை கொண்டுள்ளதோடு, முன்கூட்டியே பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ளன. ஆல்பர்ட்டாவில் உள்ள மருத்துவர்களும் விஞ்ஞானிகளும், ட்விட்டரில் தற்போது பிரபலமாகி வரும் #FireBreakAB மற்றும் #GeneralStrikeAB போன்ற ஹேஸ்டாக் பதிவுகளுடன் “கடுமையான” பூட்டுதலுக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

தனது அழைப்புக்கான சர்வதேச அளவிலான பதிலிறுப்பு பற்றி உலக சோசலிச வலை தளத்திடம் பேசுகையில் லீசா டியஸ், “உலகம் முழுவதிலுமுள்ள பெற்றோர்கள் மற்றும் தொழிலாளர்களிடமிருந்து நான் நம்பமுடியாத ஆதரவைப் பெற்றுள்ளேன்! நான் தனியாக இல்லை என்பதை அறிவது அற்புதம், மாறாக, எவ்வாறாயினும் கோவிட் குழந்தைகளுக்கு தீங்கற்ற நோயாகும், அது அவர்களுக்கு வருவது இயல்பானது என்று அவர்களது அரசாங்கங்களும் ஊடகங்களும் பொய்களை அவிழ்த்து விடுவதை பார்க்கும் ஏனைய பெற்றோர்களும் என்னுடன் நிற்கிறார்கள் என்பதை அறிவது அற்புதமாக உள்ளது. எப்படியிருந்தாலும், இது இங்கிலாந்தில் நிலைத்திருக்கும் பொய்” என்று கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது, '‘கோவிட் உடன் வாழ்வது’ என்று எதுவும் இல்லை, ஏனென்றால் மில்லியன் கணக்கான மக்கள் இறுதியில் இறந்துவிடுவார்கள். கோவிட் இன் பலவீனமான அறிகுறிகளுடன் இன்னும் பல மில்லியன் மக்கள் வாழ்வார்கள். இந்த வைரஸுடன் நாங்கள் கொடுக்கல் வாங்கல் செய்ய முடியாது. நாம் அதை அறவே அழிக்க வேண்டும். இது ஒரு நீண்ட கனவு அல்ல. இது செய்யக்கூடியது. எங்களுக்கு அரசியல் விருப்பம் மட்டுமே தேவை. எங்களுக்கு பூஜ்ஜிய கோவிட் மூலோபாயம் தேவை. இதற்கு நடுவழி எதுவும் கிடையாது” என்றும் தெரிவித்தார்.

உண்மையில், சீனா, நியூசிலாந்து மற்றும் பிற நாடுகளில் நடந்தது போல, எந்தவொரு புவியியல் பகுதியிலும் கோவிட்-19 ஐ அகற்ற முடியும் என்பதுடன், இறுதியில் உலகளவில் முற்றிலும் ஒழிக்க முடியும். எவ்வாறாயினும், தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளிலிருந்து சுயாதீனமான சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்கள் மூலம் ஒழுங்கமைக்கப்பட்டு தொழிலாள வர்க்கத்தை பாரியளவில் அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே தேவையான நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்.

கோவிட்-19 பரவிக் கொண்டிருக்கும் இடங்களில், அனைத்து பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற பணியிடங்களை மூடுதல், உலகளவில் முகக்கவச பயன்பாட்டை விதித்தல், பரிசோதனை செய்தல், தொடர்பு தடமறிதல், நோய்தொற்று பாதிப்புள்ளவர்களை பாதுகாப்பாக தனிமைப்படுத்துதல், வைரஸ் பரவல் சங்கிலியை துண்டிக்க ஏனைய அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் செயல்படுத்துதல் ஆகியவற்றுக்காக இந்த குழுக்கள் போராட வேண்டும். பூட்டுதல்களால் பாதிப்புக்குள்ளான தொழிலாளர்களுக்கு முழு வருமான பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும், அதாவது இந்த இழப்பீட்டை தொற்றுநோய் காலத்தில் பணக்காரர்களால் திரட்டப்பட்ட பாரிய இலாபங்களிலிருந்து வழங்க வேண்டும்.

2021 மே தினத்தன்று ஸ்தாபிக்கப்பட்ட சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC), தொழில்கள் மற்றும் தேசிய எல்லைகள் கடந்து அனைத்து தொழிலாளர்களின் வளர்ந்து வரும் போராட்டங்களை ஒருங்கிணைக்க போராடுகிறது. அக்டோபர் 1 பிரிட்டிஷ் பள்ளி வேலைநிறுத்தத்திற்கான அழைப்பு, கோவிட்-19 ஐ ஒழிக்கும் போராட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முதல் படியாகும், இதிலிருந்து தொழிலாளர்கள் உத்வேகம் பெறுவார்கள். இதேபோன்ற செயல்கள் ஒவ்வொரு தொழிற்துறையிலும் ஒவ்வொரு நாட்டிலும் தயாரிக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய ஒருங்கிணைந்த போராட்டத்தின் பாகமாகும்.

Loading