இங்கிலாந்து பள்ளிகளில் கோவிட் நோய்தொற்றுகள் அதிகரிக்கின்றன: அக்டோபர் 1 ஆம் தேதி பள்ளி வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிப்பீர்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரிட்டிஷ் பெற்றோர் லீசா டியஸ், அக்டோபர் 1, வெள்ளிக்கிழமை பள்ளி வேலைநிறுத்தத்திற்கான தனது முன்மொழிவை ஆதரித்து சனிக்கிழமை மற்றொரு காணொளியை வெளியிட்டார். கடந்த வெள்ளிக்கிழமை, இரண்டு குழந்தைகளின் தாயான லீசா, இரண்டு காணொளிகளை பதிவிட்டு, அக்டோபர் 1 அன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்கவும், வேலைநிறுத்த நாளில் முகக்கவசத்துடன் குழந்தைகளின் பள்ளி சீருடையின் படத்தை சமூக ஊடகங்களில் வெளியிடவும் அழைப்பு விடுத்துள்ளார்.

இவரது மூன்று காணொளிகளும் மொத்தத்தில் 100,000 முறை பார்க்கப்பட்டுள்ளது.

லீசாவின் சனிக்கிழமை காணொளியில், அவர் “நாடு முழுவதும் ஆரம்ப பள்ளி வயது குழந்தைகளில் 43 பேரில் ஒருவருக்கும் மற்றும் இடைநிலை பள்ளி வயது குழந்தைகளில் 35 பேரில் ஒருவருக்கும் தற்போது கோவிட் பாதிப்புள்ளதை புள்ளிவிபர அலுவலகத்தின் தற்போதைய தரவு காட்டுவதாக” கூறுகிறார்.

செப்டம்பர் 6, 2021, திங்கட்கிழமை இங்கிலாந்தின் போர்ன்மவுத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு தொடக்கப் பள்ளி மாணவர்கள் திரும்புகிறார்கள் (உலக சோசலிச வலைத் தள ஊடகம்)

செப்டம்பர் 16 வரையிலான நோய்தொற்று பாதிப்பு பற்றி கல்வித் துறை கடந்த வாரம் வெளியிட்ட தரவு குறிப்பிட்ட அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதைக் காட்டுகிறது, இது அப்போது 100 இடைநிலை பள்ளி குழந்தைகளில் ஒருவருக்கு நோய்தொற்று உள்ளதாகக் காட்டியது. காணொளியில் லீசா இந்த கேள்விகளை எழுப்புகிறார், “எங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க அரசாங்கம் என்ன செய்கிறது… இது நடைகூடங்கள் மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் மட்டும் முகக்கவச பயன்பாட்டை மீண்டும் கொண்டு வருகிறது. எப்படியோ வகுப்பறைகள் அல்லாமல் நடைகூடங்கள் தான் நோய்தொற்றும் பகுதியாக உள்ளன… மேலும் அது செய்யும் மற்ற விடயங்கள் என்னவென்றால், கோவிட் ஐ தடுக்க அதிக PCR பரிசோதனைகளைச் செய்கிறது. இது எவருக்கும் கோவிட் நோய்தொற்று ஏற்படுவதை எவ்வாறு தடுக்கும்? இது எங்களுக்கு கோவிட் தொற்று இருப்பதாக சொல்லப் போகிறது, அதாவது குதிரை ஏற்கனவே நுழைந்துவிட்ட பின்னர் வாசல் கதவை மூடுவது போல் உள்ளது.

“எங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க அரசாங்கம் எதையும் செய்யாததால், விஷயங்களை நாமே சொந்தமாக கையாள வேண்டும்… நமக்கு கூட்டு நடவடிக்கை தேவை, நாம் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் ஏனென்றால் நமது அரசாங்கம் எதையும் கவனிக்காது” என்கிறார்.

கடந்த வாரம், இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் விட்டியும், அவரது துணை அதிகாரி ஜோனாத்தன் வான்-டாம் உம், 15 மற்றும் 17 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளில் பாதிப் பேருக்கு ஏற்கனவே வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது, மேலும் எஞ்சியோருக்கும் “கிட்டத்தட்ட நிச்சயமாக” நோய் தொற்று ஏற்படும் என்று கூறினர். செப்டம்பர் 1 அன்று, இங்கிலாந்தின் குழந்தைகள் ஆணையர், Dame Rachel de Souza, “பள்ளிகள் மீண்டும் மூடப்படுவதை காண நான் விரும்பவில்லை” என்று கூறினார்.

இங்கிலாந்தின் 88 குழந்தை கோவிட் இறப்புக்கள் ஜோன்சன் அரசாங்கத்திற்கு இணை சேதத்தை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது, அதாவது அவர்கள் பள்ளிகளை திறந்து வைத்திருக்க கோருகிறார்கள், ஏனென்றால் அப்போதுதான் பெற்றோர்கள் வேலைக்கு திரும்ப முடியும் மற்றும் பெருநிறுவனங்களுக்கு இலாபமீட்டித் தர முடியும் எனக் கருதுகிறது. லீசா உறுப்பினராகவுள்ள அனைவருக்கும் பாதுகாப்பான கல்வி (SafeEdForAll) என்ற பெற்றோர் வக்காலத்து குழு, தொற்று ஏற்பட்டு 12 மாதங்களுக்குப் பின்னர் 11,000 குழந்தைகள் லோங் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. இந்த சிக்கலான நோய் குழந்தைகளுக்கு அறிவாற்றல் குறைபாடு, இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்பு போன்ற நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தலாம்.

150 குழந்தைகளுக்கு ஒருவர் வீதம் மருத்துவமனையில் இறந்து போகும் குழந்தைகளில் 60 சதவீதம் பேர் அடிப்படை நோய் இல்லை. நோய்தொற்றின் மற்றொரு அச்சுறுத்தும் விளைவாக குழந்தைகளுக்கு பல-வகை அழற்சி நோயறிகுறி (Pediatric Inflammatory Multisystem Syndrome) ஏற்படலாம், இதனால் பிப்ரவரி வரை 720 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இங்கிலாந்தில் புதிய நோய்தொற்றுக்களில் சுமார் 34 சதவீதம் 10 மற்றும் 19 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளிடையேயும் மற்றும் கிட்டத்தட்ட 12.5 சதவீதம் 0 மற்றும் 9 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளிடையேயும் ஏற்படுகிறது. பேராசிரியர் கொலின் டேவிஸ், பொது சுகாதார இங்கிலாந்து (PHE) தரவை மேற்கோள் காட்டி, “10 மற்றும் 14 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளில் நோய்தொற்று பரவும் வீதம் ஒவ்வொரு நூறாயிரம் பேரில் ஆயிரம் பேருக்கு அதிகமாக உள்ளது. இது கட்டுப்பாட்டில் இல்லை, இந்த வயதினரிடையே ஒவ்வொரு 7 நாட்களுக்கு ஒருமுறை நோய்தொற்றுக்கள் இரட்டிப்பாகின்றன” என்று செப்டம்பர் 24 அன்று ட்வீட் செய்தார்.

திங்களன்று, Independent செய்தியிதழ், செப்டம்பர் 16 அன்று 100,000 க்கு அதிகமான குழந்தைகள் பள்ளிக்கு வரமாட்டார்கள் என முன்கணித்தது, அதாவது “நோய்தொற்றுக்களின் தற்போதைய அதிகரிப்பு வீதம் தொடருமானால், சில வாரங்களுக்கு முன்னதாக கோடைக்கால கல்வி நேரத்தில் கூட கோவிட் பாதிப்பால் இதே எண்ணிக்கையிலான குழந்தைகள் பள்ளிக்கு வரமாட்டார்கள், அந்த நேரத்தில் “bubble” முறை 1.1 மில்லியன் இளைஞர்களை தனிமைப்படுத்த நிர்ப்பந்தித்தது.” “குழந்தை நோய்தொற்றுக்களில் வாரத்திற்கு வாரம் நிகழ்ந்த 80 சதவீத அதிகரிப்பானது, 30 முதல் 49 வயதுக்குட்பட்ட மக்களிடையே நோய்தொற்றுக்களை அதிகரிக்கத் தூண்டியது, இது தற்போது 100,000 பேருக்கு 286 பேர் என்ற வீதத்தில் உள்ளது” என்று இது குறிப்பிட்டது.

பெற்றோரும், SafeEdForAll குழுவின் ஒரு ஸ்தாபகருமான டானியெல்லா மோடோஸ்-கட்டர் (Daniella Modos-Cutter) தொகுத்த தரவின்படி, செப்டம்பர் 20 இல் முடிந்த வாரத்தில் இங்கிலாந்தில் குறைந்தது 185 பள்ளி நோய்தொற்றுக்கள் ஏற்பட்டன.

செப்டம்பர் 16 அன்று, கோவிட் தொடர்புபட்ட காரணங்களால் 122,000 குழந்தைகள் பள்ளிக்கு வரவில்லை. ஊழியர்களும் மாணவர்களும் எப்போது தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அளவுகோல்களை அரசாங்கம் தளர்த்தியதால் இது நிகழ்ந்தது. நோய் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த 18 வயதுக்குட்பட்டவர்களை இனி தனிமைப்படுத்த வேண்டாம், மாறாக PCR பரிசோதனை செய்துகொள்ள மட்டும் அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஒரு அநாமதேய தலைமை ஆசிரியர் i செய்தியிதழுடன் பேசுகையில், “PCR பரிசோதனை மெதுவாக நடப்பதை நாங்கள் கண்டறிந்தோம், இந்நிலையில் பரிசோதனை முடிவுகளுக்கு காத்திருக்கையில் மாணவர்களை சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ள பள்ளிகள் கூறவில்லை. இதன் பொருள், பள்ளிகளில் கோவிட் பாதிப்புள்ள மாணவர்கள் இருந்தனர், அவர்களால் அதிக நோய்தொற்றுக்கள் உருவாகின என்பதே. அதனால் நாங்கள் எங்கள் சொந்த பரிசோதனை மற்றும் தொடர்பு தடமறிதல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம், அதன்மூலம் நோய்தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை நாங்கள் அடையாளம் காண்கிறோம், மற்றும் PCR பரிசோதனையில் நோய்தொற்று இல்லை என உறுதிசெய்யப்படும் வரை அந்த மாணவர்களை வீட்டில் தனித்திருக்க கேட்டுக் கொள்கிறோம்…” என்று கூறினார்.

வேல்ஸில், தொற்றுநோய் தொடக்கத்திலிருந்து 10 வயதுக்குட்பட்டவர்களில் ஏற்பட்டிருந்த 19,916 நோய்தொற்றுக்களில் 5,639 நோய்தொற்றுக்கள் செப்டம்பரில் உருவாகியிருந்தன. இந்த மாத தொடக்கத்தில், 40 சதவீத மாணவர்களுக்கும் மற்றும் 50 சதவீத ஊழியர்களுக்கும் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்ட பின்னர் Cradoc தொடக்கப் பள்ளி மூடப்பட்டது. செப்டம்பர் 1-19 தேதிகளுக்கு இடையில், 77 பிளின்ஷையர் பள்ளிகளில் 570 பள்ளி குழந்தைகளுக்கு நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அருகிலுள்ள டென்பிஷையரிலும் இதையொத்த எண்ணிக்கையில் நோய்தொற்றுக்கள் உள்ளன.

இங்கிலாந்திலும் இதுபோன்ற கொடூர நிலைமை உள்ளது. அதற்கு உள்ளூர் ஊடகங்களின் சில உதாரணங்களை மேற்கோள் காட்டலாம்:

5 மற்றும் 11 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளை தொடர்ந்து, 12 மற்றும் 18 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளிடையே உச்சபட்ச நோய்தொற்றுக்கள் பரவியதன் பின்னர் கும்ப்ரியா கவுண்டி கவுன்சில் தங்கள் பள்ளிகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை அறிவித்தது. நோய்தொற்றாளர்களின் உடன்பிறந்தவர்களை சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளவும், PCR பரிசோதனை செய்து கொள்ளவும் கூறப்பட்டது. வொர்செஸ்டர்ஷையரில், கோவிட் நோய்தொற்று, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகிய உடல் உபாதைகள் குழந்தைகளுக்கு ஏற்பட்டதால் Bewdly தொடக்கப் பள்ளி மூடப்பட்டது. 4 மற்றும் 6 ஆம் ஆண்டு மாணவர்கள் செப்டம்பர் 30 வரை இணையவழி கற்றலைத் தொடர்கின்றனர். கேம்பிரிட்ஜ்ஷையரில், கடந்த வாரம் 133 கல்வி அமைப்புகளைச் சேர்ந்த 521 க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டது. வார்விக்ஷையரில், குழந்தைகள் மத்தியில் ஒரே வாரத்தில் 200 நோய்தொற்றுக்கள் அதிகரித்து, தற்போது 700 குழந்தை நோய்தொற்றாளர்கள் உள்ளனர்.

SafeEdForAll இன் இந்த ட்வீட்டில் ஒரு பள்ளியின் அவல நிலை விவரிக்கப்பட்டுள்ளது: “PCR பரிசோதனையில் 182 நோய்தொற்றுக்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. 79 கூடுதல் பக்கவாட்டு பரிசோதனைகளை [lateral flow test-Ifts] செய்ய PCR முடிவுகளுக்கு காத்திருக்கிறோம். பள்ளியில் 700 மாணவர்களும், 8 ஊழியர்களும் உள்ளனர். PHE உம் DEF உம் [Department of Education], மாணவர்களின் வருகையைப் பொறுத்து பள்ளியை மூட முடியாது, அதேவேளை கற்பிக்க போதுமான ஆசிரியர்கள் இல்லையானால் பள்ளியை மூடலாம் என்று தலைமை ஆசிரியருக்கு [Head Teacher-HT] தெரிவித்துள்ளன. இதுபற்றி ஊடகங்களில் தெரிவிக்கப்படவில்லை.”

மற்றொரு ட்வீட், “இதனால்தான் எங்களுக்கு #SchoolStrike2021 தேவைப்படுகிறது. NHS சேவைகளை பாதுகாக்கவும் மற்றும் இது நடப்பதைத் தடுக்கவும் தேவைப்படுகிறது. பள்ளி பரவல் என்பது நோய்வாய்ப்பட்டவர்கள் வாகன நிறுத்துமிடங்களில் காத்திருக்கும் அளவிற்கு சமூக பரவலை ஏற்படுத்தும் என்பதாகும். இது உங்கள் குழந்தையாக கூட இருக்கலாம் என்பதுடன், அவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவரும், படுக்கை வசதியும் இல்லை. இது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.”

சனிக்கிழமை, மான்செஸ்டர் மத்திய நூலகத்திற்கு வெளியே சோசலிச சமத்துவக் கட்சி (SEP) உறுப்பினர்கள் பின்வரும் WSWS அறிக்கைகளை விநியோகித்தனர்: “கோவிட்-19 ஐ ஒழிப்பது தான் இந்த பெருந்தொற்றை நிறுத்துவதற்கான ஒரே வழி” மற்றும் “இங்கிலாந்து பெற்றோர் லீசா டியஸ் அக்டோபர் 1 ஆம் தேதி பள்ளி வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறார்.”

பிரிட்டனில் மூன்று ஆண்டுகளாக பணிபுரியும் பிரேசில் நாட்டைச் சேர்ந்த இசபெல், “நான் பள்ளி வேலைநிறுத்தத்தை ஆதரிக்கிறேன், என்றாலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வீட்டிலேயே இருக்க அரசாங்கம் அவர்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும். பெற்றோர்களுக்கு தங்கள் குடும்பத்தை ஆதரிக்க ஒரு வழி இருக்க வேண்டும். எனது நிறுவனம் அனைவரையும் வேலைக்குத் திரும்பச் செய்கிறது, வீட்டில் இருந்தபடி கூட நாம் எதையாவது செய்ய முடியும்” என்று கூறினார்.

மான்செஸ்டரில் உள்ள SEP விற்பனை அரங்கில் இசபெல் வலதுபுறம் இருக்கிறார் (உலக சோசலிச வலைத் தள ஊடகம்)

நூற்றுக்கணக்கானவர்களை கொன்ற “கோவிட்-19 மருந்து பொதிகள்” உடன் பிரேசில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் காட்டுமிராண்டித்தனமான பரிசோதனை பற்றி அவர் குறிப்பிட்டு, “[ஜெய்ர்] போல்சொனாரோ, கோவிட் ஐ தடுக்க உங்களுக்கு முன் சிகிச்சையளிக்க முடியும் என்பதை நிரூபிக்க முயன்று பணம் செலுத்தியதைத் தாண்டி ஊடகங்களால் அவர் கண்டனம் செய்யப்பட்டார்” என்று கூறினார்.

“பிரேசிலில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஐரோப்பாவில் தடுப்பூசி வழங்கல் மிகுந்த முன்னேற்றம் கண்டுள்ளது, வைரஸ் புதிய மாறுபாடுகளை உருவாக்குவதால் மற்ற நாடுகளில் மக்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை. நாம் தொடர்ந்து புதிய மாறுபாடுகளை உருவாக்கினால், அவையும் நம்மை தொற்றிக் கொள்ளும். உலகில் தடுப்பூசி வாங்க முடிந்தவர்கள் மட்டுமல்லாது, அனைவருக்கும் தடுப்பூசி போட நாம் உத்தரவாதம் வழங்க வேண்டும்.

“இது ஆரம்பம் தான். வயதானவர்களை மட்டும் தான் வைரஸ் பாதிக்கும் என்று அவர்கள் வழமையாக கூறுகின்றனர், ஆனால் புதிய மாறுபாடு இளையோரையே பெரிதும் பாதிக்கிறது.”

Loading