முன்னோக்கு

பெற்றோர்களின் அக்டோபர் 1 வேலைநிறுத்தம்: இந்த பெருந்தொற்றுக்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்க போராட்டத்தில் ஒரு முக்கிய முன்னோக்கிய படி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இளைஞர்களின் உயிர்களை ஆபத்தில் நிறுத்தும் வகையில் பொறுப்பற்ற முறையில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு எதிரான ஒரு போராட்டமாக, இன்று குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்கும் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்ய பிரிட்டன் பெற்றோர்களுக்கு லிசா டயஸ் விடுத்துள்ள அழைப்பு தொழிலாள வர்க்கத்திடமிருந்து ஆழ்ந்த ஆதரவைத் தூண்டியுள்ளது.

பிரிட்டன் மற்றும் உலகெங்கிலுமான உழைக்கும் மக்களிடம் இருந்து ஆதரவு சேதிகள் வந்து கொண்டிருக்கின்றன. லிசா டயஸ் அவர் ட்விட்டர் கணக்கில் வெளியிட்ட காணொளிகளை நூறாயிரக்கணக்கானவர்கள் பார்த்துள்ளனர்.

இன்று தங்கள் குழந்தைகளை வீட்டில் நிறுத்தி வைக்கவிருக்கும் பெற்றோரின் சரியான எண்ணிக்கையை அறிய முடியாது. இந்த நடவடிக்கைக்கான அழைப்பை தேசிய ஊடகங்கள் அறிவிக்கவில்லை. ஆனால் ஓர் உலகளாவிய இணையவழி மறியல் நிலைப்பாடாக விவரிக்கப்படக்கூடிய ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், அது சர்வதேச தொழிலாள வர்க்க மக்களால் கௌரவிக்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பற்ற முறையில் பள்ளிகளை மீண்டும் திறப்பதை எதிர்ப்பதற்கான இந்த முக்கிய முன்முயற்சி, இந்த பெருந்தொற்று கட்டுப்பாட்டை மீறி, குறிப்பாக குழந்தைகள் மத்தியில் பரவி வரும் நிலையில் முன்னெடுக்கப்படுகிறது. இங்கிலாந்தில், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட முதல் இரண்டு வாரங்களிலேயே 59,000 குழந்தைகள் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டனர். அமெரிக்காவில், கடந்த ஐந்து வாரங்களில் ஒவ்வொரு வாரமும் 200,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குப் புதிய நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, இதில் பரந்த பெரும்பான்மை பள்ளிகளை முழுமையாக மீண்டும் திறந்து விட்டதன் நேரடி விளைவாகும்.

உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, ஏற்கனவே கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் பேர் உயிரிழந்துள்ள நிலையில், இப்போது ஒவ்வொரு நாளும் 500,000 க்கும் அதிகமான புதிய கோவிட்-19 நோயாளிகள் பதிவு செய்யப்படுகின்றனர், அத்துடன் 7,500 க்கும் அதிகமான உயிரிழப்புகளும் பதிவாகின்றன. இங்கிலாந்தில், மே மாதம் நாளொன்றுக்கு 2,000 ஆக இருந்த புதிய நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த மாதத்தில் நாளொன்றுக்கு அண்மித்து 35,000 ஆக அதிகரித்துள்ளது. கனடாவில், ஜூலையில் ஒரு நாளைக்கு 400 ஆக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை செப்டம்பர் மாதம் நாளொன்றுக்கு 4,000 க்கும் அதிகமாக பத்து மடங்கு அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் குழந்தை சிகிச்சை மையங்கள் உட்பட மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்ற நிலையில் ஒவ்வொரு நாளும் 1,600 க்கும் அதிகமானவர்கள் இறந்து கொண்டிருக்கின்றனர்.

வர்க்க நிலைப்பாடு மிகத் தெளிவாக வெளிப்பட்டுள்ள நிலையில் தான் அக்டோபர் 1 நடவடிக்கை நடக்கிறது. உலகெங்கிலுமான அரசாங்கங்கள் மற்றும் பெருநிறுவனங்களால் ஏதோவொரு வடிவில் முன் தள்ளப்படும் பாரிய நோய்த்தொற்றை ஆதரிப்பவர்கள் ஒருபுறம் இருக்கிறார்கள். இந்த பெருந்தொற்றை நிறுத்தி உயிர்களைக் காப்பாற்ற அவசர நடவடிக்கைகள் எடுக்குமாறு கோரும் தொழிலாளர்கள் ஒருபுறம் இருக்கிறார்கள்.

இந்த பெருந்தொற்று தொடங்கியதில் இருந்தே 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கத்தை' ஊக்குவித்துள்ள இங்கிலாந்தின் ஜோன்சன் அரசாங்கம் ஆகட்டும், அல்லது தடுப்பூசியுடன் சேர்ந்து போதுமளவுக்கு இல்லாத தீவிரப் பரவலைத் தடுக்கும் நடைமுறைகளை கொண்டு இந்த பெருந்தொற்றை தடுக்கலாம் என்பதை ஊக்குவிக்கும் பைடென் நிர்வாகம் ஆகட்டும், எதுவாக இருந்தாலும் இறுதி முடிவு ஒரே மாதிரியாக தான் இருக்கிறது: அதாவது இந்த பெருந்தொற்று கட்டுப்பாட்டை மீறி அதிகரித்தாலும் பள்ளிகள் மற்றும் ஆலைகளை திறந்து வைக்கப்படும் என்பது. எல்லா இடங்களிலும் பள்ளிகளை மீண்டும் திறந்து விடும் நடவடிக்கை, பெருநிறுவன இலாபங்களை தக்க வைக்கவும், நிதிய உயரடுக்கை இன்னும் செல்வ செழிப்பாக்கவும் தொழிலாளர்களை தொழிலாளர்களைப் பணியில் வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தால் உந்தப்படுகிறது.

உலகெங்கிலும், ஆளும் வர்க்கங்கள் இன்னும் நடைமுறையில் என்னென்ன நடவடிக்கைகள் உள்ளதோ அவற்றையும் நீக்க வேண்டுமென கோரி வருகின்றன. வைரஸை அகற்றும் கொள்கையைப் பின்பற்றி வரும் ஒரு சில நாடுகளில் ஒன்றான நியூசிலாந்தில், எதிர்க்கட்சியான தேசியக் கட்சி 'கடுமையான ஒடுக்குமுறைக்கு' மாறுமாறு—அதாவது பொருளாதார கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறு கோரி வருகின்ற நிலையில், சமீபத்திய நாட்களில் நோயாளிகளின் எண்ணிக்கை கூர்மையாக அதிகரித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் வைரஸ் பரவுவதைத் தணிக்க முயற்சிக்கும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் 'பெரிய தவறுகளை' கண்டனம் செய்த 79 மிகப் பெரிய பெருநிறுவனங்களின் ஒரு பகிரங்க கடிதத்தை இந்த வாரம் பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டது. அந்த பத்திரிகையின் தகவல்படி, 'மற்ற பல நாடுகள் செய்ததைப் போல, இந்த நாடும் 'வைரஸுடன் வாழ' கற்றுக் கொள்ள வேண்டும்' என்று நிறுவனங்கள் தெரிவித்தன.

மெல்போர்னை மையமாக கொண்ட நிதி சொத்து மேலாண்மை நிறுவனமான La Trobe Financial நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி கிரெக் ஓ' நீல் பைனான்சியல் டைம்ஸில் கூறுகையில், 'பெருநிறுவன ஆஸ்திரேலியா அதன் தவிப்பு மற்றும் முணுமுணுப்புகளை ஒரு கர்ஜனையாக மாற்ற வேண்டிய நேரம் இது,' என்றார். 'இது தைரியம் மற்றும் நேர்மைக்கான நேரமிது,' என்றார்.

ஆளும் வர்க்கத்தின் 'தைரியம் மற்றும் நேர்மை' என்பது இன்னும் மில்லியன் கணக்கான மக்களுக்கு நோய்தொற்று ஏற்படுத்தி நூறாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்படும் விதத்தில் இந்த வைரஸைப் பரவ அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அர்த்தப்படுத்துகிறது.

அக்டோபர் 1 பிரிட்டன் பள்ளி வேலைநிறுத்தம் பல அம்சங்களில் முக்கியத்துவமானது.

முதலாவதாக இலாபத்திற்காக அல்லாமல் உயிர்களைக் காப்பாற்றுவதை அடிப்படையாகக் கொண்ட ஒரு கொள்கைக்கான தொழிலாள வர்க்கத்தின் விருப்பங்களை அது வெளிப்படுத்துகிறது. அந்த வைரஸை அகற்ற மற்றும் ஒழிக்க முன்னணி விஞ்ஞானிகளும் தொற்றுநோய் நிபுணர்களும் வலியுறுத்தும் அவசிய நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கான கோரிக்கையை அது அடிப்படையாகக் கொண்டது: அதாவது, பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற உற்பத்தியை மூட வேண்டும், பாரியளவில் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும், அனைவருக்கும் பரிசோதனை மற்றும் நோயின் தடம் அறிதல் செய்யப்பட வேண்டும், பாதிக்கப்படும் எல்லா தொழிலாளர்களுக்கும் மற்றும் சிறு வணிகங்களுக்கும் முழுமையான வருமானம் வழங்கப்பட வேண்டும்.

இரண்டாவதாக, இந்த நடவடிக்கை தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது, தொழிற்சங்கங்கள் ஒவ்வொரு கட்டத்திலும் ஆளும் வர்க்கத்தின் கொலைபாதகக் கொள்கைகளைச் செயல்படுத்தவே வேலை செய்துள்ளன. இங்கிலாந்தில், தொழிற்சங்க காங்கிரஸ் கட்டாய தடுப்பூசி ஆணைகளை எதிர்த்துள்ள அதேவேளையில், மிகக் குறைந்த தணிப்பு நடவடிக்கைகள் கூட இல்லாமல் பள்ளிகளை மீண்டும் திறப்பதை ஏற்றுக் கொள்கிறது.

அமெரிக்காவில், ஆசிரியர்கள், குழந்தைகள் மற்றும் பரந்த சமூகத்தின் உயிரை அச்சுறுத்தும் வகையில், ஆசிரியர் சங்கங்கள் பள்ளிகளை மீண்டும் திறக்க ஆக்கிரோஷமாக பிரச்சாரம் செய்துள்ளன.

அக்டோபர் 1 வேலைநிறுத்தத்திற்கு முதல் நாள் செப்டம்பர் 30 இல், அமெரிக்க ஆசிரியர் கூட்டமைப்பு அதிவலது பெற்றோர் குழுவான Open Schools USA உடன் ஒரு விவாதக் கூட்டம் நடத்தியது. 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கத்தை' எட்டுவதற்கான ஒரு வழிமுறையாக பாரியளவில் வெகுஜன மக்களுக்குத் நோய்தொற்று ஏற்படுவதை ஊக்குவிக்க நோக்கம் கொண்ட ட்ரம்ப் வெள்ளை மாளிகையுடன் கலந்தாலோசித்து வரையப்பட்ட ஆவணமான கிரேட் பாரிங்டன் பிரகடனத்தை எழுதியவர்களில் ஒருவரான ஜே பட்டாச்சார்யாவும் அந்த விவாதக் குழுவில் ஒருவராக இருந்தார்.

மூன்றாவதாக இந்த முன்முயற்சி ஒரு சர்வதேச இயக்கமாக வளர்ந்து வருகிறது. பெற்றோர்களின் வேலைநிறுத்தத்திற்கான அழைப்பு இங்கிலாந்தில் தொடங்கிய போதிலும், அது உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் ஆதரவை ஈர்த்துள்ளது. தனிநபர்களின் ஆதரவு அறிக்கைகளுக்கு கூடுதலாக, இந்த நடவடிக்கையை பல நாடுகளின் ஆசிரியர் குழுக்களும் மற்றும் சாமானிய தொழிலாளர் கமிட்டிகளும் அங்கீகரித்துள்ளன.

வியாழக்கிழமை மதியம் வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில் லிசா டயஸ், அதிகளவில் வரவேற்பு இருப்பதாக குறிப்பிட்டதுடன், ட்வீட்டரில் அவரின் ஆரம்ப அழைப்பு பதிவு கனடா, அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானில் மறுபதிவு செய்யப்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டினார். “நாம் உலகின் வெவ்வேறு மூலைகளில் இருந்தாலும், நம் போராட்டம் இப்போது ஒரே மாதிரியாக இருக்கிறது என்பதை நிஜமாகவே இது எடுத்துக் காட்டுகிறது. எங்கள் குழந்தைகள் பள்ளியில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை தான் நாங்கள் விரும்புகிறோம்.”

உலகெங்கிலுமான பெற்றோர்களும் தொழிலாளர்களும் #SchoolStrike2021, #SittingDucks மற்றும் #October1st என்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் அவர்களின் ஆதரவு காணொளிகள் மற்றும் ஆதரவு செய்திகளை வெளியிடுமாறு லிசா அழைப்பு விடுத்தார். உலக சோசலிச வலைத் தளம் இந்த நடவடிக்கையை ஆமோதிப்பதுடன், ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடகத் தளங்களில் ஆதரவு செய்திகளை வெளியிடுவதன் மூலம் இந்த இணையவழி மறியலில் இணைய அதன் வாசகர்களை ஊக்குவிக்கிறது.

தொழிலாள வர்க்கம் வகிக்கும் புரட்சிகர பாத்திரம், வர்க்கப் போராட்டத்தின் சர்வதேச தன்மை, தொழிலாளர்கள் மற்றும் பெருநிறுவன தொழிற்சங்கங்களது நலன்களுக்கு இடையே நிலவும் சமரசத்திற்கு இடமில்லாத மோதல் என இந்த அக்டோபர் 1 வேலைநிறுத்தமானது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) முன்னோக்கின் சில முக்கிய அம்சங்களை உறுதிப்படுத்தி உள்ளது.

இந்த பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு சர்வதேச அளவில் ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் உண்மையான சாமானிய தொழிலாளர்களின் ஒரு கிளர்ச்சி தேவைப்படுகிறது என்ற அடிப்படையில் ICFI, இந்தாண்டு மே மாதம், சாமானிய தொழிலாளர் கமிட்டிகளின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) நிறுவியது.

இந்த பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தைச் சமத்துவமின்மை மற்றும் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக உலகெங்கிலும் அதிகரித்து வரும் தொழிலாளர்களின் போராட்டங்களுடன் ஐக்கியப்படுத்தி, தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவிலும் சுயாதீனகுழுக்களைக் கட்டமைப்பதன் மூலம் இந்த அக்டோபர் 1 வேலைநிறுத்த முன்முயற்சி முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.

இந்த அபிவிருத்தியை நாம் ஊக்குவித்து வளர்ப்பதால், ICFI உம் மற்றும் அதன் தேசிய பிரிவுகளும், இந்த போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மிகவும் அடிப்படையான அரசியல் தீர்மானங்களைக் கொண்டிருக்க வேண்டிய அவசியத்தை எழுப்புகின்றன. இந்த பெருந்தொற்றுக்கு எதிரான, போர், சமத்துவமின்மை, சுரண்டல் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான இந்த போராட்டம், இந்த ஒட்டுமொத்த முதலாளித்துவ சமூக மற்றும் பொருளாதார அமைப்புக்கு எதிரான போராட்டமாகும். இது, எல்லா நாடுகளின் தொழிலாளர்களும் அதிகாரத்தைக் கையிலெடுத்து, ஆளும் உயரடுக்குகளைப் பறிமுதல் செய்து, பகுத்தறிவார்ந்த, விஞ்ஞானபூர்வ, ஜனநாயகக் கட்டுப்பாட்டிலான உற்பத்தியின் அடிப்படையில் அமைந்த ஒரு சமூகத்தை ஸ்தாபிக்க வேண்டிய அவசியத்தை உயர்த்துகிறது.

Loading