டெல்டா வைரஸ் மாறுபாடு நாடு முழுவதும் மக்களை காவுகொள்ளும் போது இலங்கை அரசாங்கம் பாடசாலைகளை மீண்டும் திறக்க தயாராகி வருகின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என செப்டெம்பர் 16 அன்று சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். பள்ளிகள் திறப்பதற்கான முறைகளும் திகதியும் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 வைரஸின் டெல்டா மாறுபாடு நாடு முழுவதும் பரவி வரும் நேரத்தில் மேற்கொள்ப்படும் இந்த நடவடிக்கை, சிறுவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக இருப்பதோடு நிச்சயமாக தொற்றுநோய் மேலும் பரவுவதற்கு பங்களிப்பு செய்யும்.

10 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ தலைமையில் கோவிட் தடுப்பு செயலணியின் கூட்டத்திற்குப் பின்னரே பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்த கலந்துரையாடல்கள் முடுக்கிவிடப்பட்டன. மட்டுப்படுத்தப்பட்ட பயண கட்டுப்பாடுகளை நீக்கி, நாட்டை மீண்டும் முழுமையாக திறப்பது பற்றி அரசாங்க தொடர்ச்சியாக முன்னெடுக்கும் கலந்துரையாடல்களின் ஒரு பகுதியாக, மேற் கூறிய கூட்டத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கவும், அதற்காக 'பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டுதல்களை' வெளியிடுவதற்கும் முடிவு செய்யப்பட்டது.

நெரிசல் நிறைந்த சிறிய வகுப்பறைகளில் சமூக இடவெளியை பேண முடியாது. கண்டியில் ஒரு பாடசாலை வகுப்பறை [credit: WSWS]

அங்கு 'சுகாதார வழிகாட்டுதல்களை' வரைவதற்கு, சுகாதார ஆணையாளர் நாயகத்தின் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. அந்த குழுவை சுற்றி அணிதிரண்டுள்ள அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினதும் மற்றும் இலங்கை குழந்தை மருத்துவ நிபுணர்களின் கற்கை நிறுவனத்தின் மருத்துவர்களும், பாடசாலைகளைத் திறப்பதன் மூலம் ஏற்படக் கூடிய ஆபத்துகளை மூடிமறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ஹிரு தொலைக் காட்சியில் “சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குதலும் பாடசாலைகள் திறத்தலும்” என்ற தலைப்பில் “பலய” என்ற நேரடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரச வைத்திய அதிகாரிகளின் சங்க தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனிய, வைத்தியர் சுனந்த பெரேரா, வைத்தியர் ஷமன் ராஜீந்திரஜித் ஆகியோர், பாடசாலைகள் முடியிருப்பதால் சிறுவர்கள் பல்வேறு மனநோய்களால் பாதிக்கப்படுவதாகவும், கணனி .விளையாட்டுகளுக்கு அடிமையாவதாகவும், சமூக தொடர்பு இழப்பு மற்றும் மோசமான உணவு பழக்கங்களுக்கு அடிபணிதல் போன்ற காரணங்களை மேற்கோள் காட்டி பாடசாலைகளை திறப்பதை நியாயப்படுத்தினர்.

ஒரு முழுமையான பொது முடக்கத்தை எப்போதும் செயல்படுத்த முடியாது என்றும், பொருளாதார நடவடிக்கைகளைப் பராமரிக்கும் அதே வேளை நோயையும் கட்டுப்படுத்தும் 'புதிய வழமையை' எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறிய பாதெனிய, இது தொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்துக்கு பரிந்துரைகளைச் செய்துள்ளதாகவும் கூறினார். உறுதிப்படுத்தப்படாத சர்வதேச ஆராய்ச்சியை மேற்கோள் காட்டி, பாடசாலைகளை திறப்பதால் நோய் பரவாது என்று அவர் வாதிட்டார்.

'பாடசாலைகளை திறப்பதன் மூலம் சிறுவர்களின் வாழ்க்கையை அழிக்கும் நடவடிக்கை அல்லவா நடக்கப் போகின்றது' என்று, ஒரு பாடசாலை மாணவனின் தந்தை நிகழ்ச்சியின் போது கேட்டார். கலந்து கொண்ட கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா, “அவநம்பிக்கை கொள்ளாதீர்கள், எல்லாவற்றையும் செய்ய ஒரு நல்ல கல்வி வேண்டும் அல்லவே. ஆபத்தான நடவடிக்கையை எடுக்கின்றோம் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், நல்லெண்ணத்துடன் சிந்தியுங்கள். நோய் என்பது உருவாகும். உலகம் முழுதும் தொற்று நோய் நம்மை சுவற்றின் மீது சாத்தி வைத்துள்ளது' என கொடூரமாக கூறினார்.

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான அரசாங்கத்தின் உந்துதல், சிறுவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் பற்றிய எந்தவொரு அக்கறையிலிருந்தும் தோன்றவில்லை. அமெரிக்காவின் பைடென், பிரிட்டனின் ஜோன்சன், பிரேசிலின் பொல்ல்சனாரோ மற்றும் இந்தியாவின் மோடி உட்பட உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ ஆட்சியாளர்கள் முன்னெடுத்துவரும், மனித உயிரை விட ஒரு சில முதலாளிகளின் இலாபத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் குற்றவியல் கொள்கையையே இராஜபக்ஷ அரசாங்கமும் பின்பற்றுகிறது.

இரண்டு வருடங்களை அண்மிக்கும் தொற்றுநோய், இதுவரை 4.8 மில்லியன் உயிர்களைக் காவுகொண்டு, 220 மில்லியனுக்கும் அதிகமான மக்களை தொற்றாளர்களாக ஆக்கியுள்ளது. இந்த உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள், பெரிதும் குறைத்து மதிப்பிடப்படுவதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையில் இன்னமும் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 2,000 தொற்றாளர்கள் பதிவாகின்ற அதே வேளை, அவற்றில் 95 சதவீதம் துரதமாக தொற்றும் டெல்டா மாறுபாடு பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 5,000 அளவில் இருந்த பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை, தினசரி பரிசோதனைகளை வேண்டுமென்றே குறைப்பதன் காரணமாக இந்தளவு குறைத்து காட்டப்படுகிறது.

இத்தகைய ஆபத்தான சூழ்நிலை குறித்தே, பெற்றோர்கள் 'நல்லெண்ணத்துடன்' சிந்திக்க வேண்டும் என்று, கல்வி அமைச்சின் செயலாளர் கேட்டுக்கொள்கிறார்.

தொற்று நோயின் ஆரம்பத்திலிருந்தே, மருத்துவ விஞ்ஞனிகள் வலியுறுத்தி வந்த பொது சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளான, அத்தியாவசியமற்ற பொருள் உற்பத்தியை நிறுத்துதல் மற்றும் பாடசாலைகளை மூடுவது, தொற்றாளர்களை அடையாளம் காணுவதற்கு பரிசோதனைகளின் அதிகரிப்பது, சரியான தனிமைப்படுத்தல் செய்தல் மற்றும் பொது சுகாதாரத்தின் தரம் மற்றும் அளவை மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை உலகம் முழுதும் உள்ள ஆளும் வர்ககங்கள் முழுமையாக நிராகரித்து வந்துள்ளன.

அத்தியாவசியமற்ற உற்பத்திகளை மூடுவதானது, பெரிய வணிகங்களின் இலாபத்திற்கு இடையூறாக இருப்பதைக் கண்ட அவர்கள், தொழிலாளர்களை விரைவாக வேலைக்குத் தள்ளியதுடன், தொழிலாளர்கள் வேலைக்கு தள்ளுவதை எளிதாக்குவதன் பேரில், சிறுவர்களை வீட்டில் இருந்து வெளியேற்றுவதற்காக பாடசாலைகளை திறக்க விரைந்தனர்.

பூகோள தொற்றுநோயை அடியோடு ஒழிக்க, சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்க இயலாமையின் விளைவு, தடுப்பூசிக்கு கூட அடிபணியாத வைரசின் மாறுபாடுகள் தோன்றுவதே ஆகும்.

முதல் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ள, 200க்கும் குறைவான மாணவர்களுடன் கூடிய பாடசாலைகளை தொடங்குவதே அரசாங்கத்தின் இலக்கு ஆகும். வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கை 20க்கும் குறைவாக இருந்தால், அந்த மாணவர்களை ஒவ்வொரு நாளும் பாடசாலைகளை அழைத்து வரவும், 30 மற்றும் 40 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட வகுப்புகளில் உள்ள மாணவர்களை குழு குழுவாக அழைக்கவும் கபில பெரேரா பரிந்துரைக்கின்றார். ஆனால், உண்மையில், சமூக இடைவெளியை பராமரிப்பது மற்றும் முக கவசங்களை ஒழுங்காக அணிவது போன்ற தீவிர நடத்தைகள் சிறு பிள்ளைகளிடம் எந்தவகையிலும் எதிர்பார்க்க முடியாது.

நாட்டில் 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட கிட்டத்தட்ட 5,000 பாடசாலைகள் நாட்டில் உள்ளன. இந்தப் பாடசாலைகளை முதல் கட்டமாகத் திறந்தாலும், ஒட்டு மொத்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையில் நூற்றுக்கும் 20 சதவிகிதத்திற்கும் மேலே அல்லது ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் சமூகமயப்படுத்தல் இதன் மூலம் இடம்பெற உள்ளது. தனியார் பாடசாலை போக்குவரத்து மற்றும் பொது போக்குவரத்து நெரிசலை கவணத்தில் கொள்ளும் போது, இந்த நிலைமையானது தொற்றுநோய் பரவுவதற்கு ஒரு பாரதூரமான காரணியாக இருக்கும்.

மறுபுறம், உலகெங்கிலும் உள்ள ஒரே மாதிரியான ஆளும் வர்க்கங்களால் பின்பற்றப்படும், 'தொற்றுநோய்க்கு தடுப்பூசி போடுவதே ஒரே தீர்வு' என்ற விஞ்ஞானப்பூர்வமற்ற வாதத்தை இராஜபக்ஷ அரசாங்கம் ஊதிப் பெரிதாக்கி வருகின்றது. அதன்படி, பாடசாலை ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை உணவக ஊழியர்கள் மற்றும் பாடசாலை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற சாக்குப் போக்கே பாடசாலைகளை திறப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது. அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து, 12 முதல் 19 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்குவதாகவும் அரசாங்கம் கூறிக்கொள்கிறது.

அரசாங்கம் தனது தடுப்பூசி போடும் பிரச்சாரத்தை தூக்கிப் பிடித்து, பொதுமக்களை ஏமாற்றுவதற்காக, 'தொற்று நோய் முடிந்து வசந்த காலம் விடிவது உண்மை' என்று, இந்தவார இறுதியில் ஒரு விசேட வேலைத்திட்டத்தையும் ஆரம்பித்தது.

'தொற்றுநோய்க்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு' என்ற அரசாங்கத்தின் வாதத்திற்கு எதிராக, உலக புகழ்பெற்ற விஞ்ஞானிகள், தடுப்பூசிக்கு இணையாக இன்றியமையாத பொது சுகாதார கட்டுப்பாட்டு, அதாவது அத்தியாவசியமற்ற உற்பத்திகளையும் பாடசாலைகளையும் மூடுதல் உட்பட, கடுமையான பயண கட்டுப்பாடுகள் போன்ற நடவடிக்கைகள் தொற்று நோயை கட்டுப்படுத்த கட்டாயமாக அவசியம் என வலியுறுத்துகின்றனர்.

தடுப்பூசி ஏற்றப்பட்டவர்கள் கூட, டெல்டா போன்ற மாறுபாடுகளால் பாதிக்கப்பட்டு பாரதூரமான சிக்கல்களுக்கும் மரணத்திற்கும் உள்ளாகின்றமை இலங்கையிலும் சர்வதேச அளவிலுமான அனுபவமாகும். ஜூன் 4 அன்று, அமெரிக்காவில் நடந்த சுதந்திர தின விழாவில், “இந்த கொடிய வைரஸிலிருந்து விடுதலை பெற்றதை அறிவிக்கும் நாளை அண்மித்துள்ளோம். எங்கள் சிறுவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதும், பொருளாதாரம் வழமைக்கு திரும்புவதும் நிகழும்,” என ஜோ பைடன் அறிவித்து, ஒருவாரம் செல்வதற்கு முன்னரே, அந்நாட்டில் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கையும் மரணமும் பாரியளவில் அதிகரித்தன. இது டெல்டா மாறுபாட்டின் ஆக்கிரமிப்பின் பின்னரே நடந்தது.

அந்த சூழ்நிலையில், அமெரிக்காவில் வேலைத்தளங்களும் பாடசாலைகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 9 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் மட்டும், அமெரிக்காவில் 243,373 சிறுவர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குழந்தை மருத்துவ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வாரத்தில் ஒன்பது குழந்தைகள் இறந்துள்ளதுடன், கடந்த மாதம் 89 சிறுவர்கள் இறந்துள்ளனர். ஐரோப்பாவின் நிலை இதில் இருந்து வேறுபட்டதல்ல.

நோய் குணமாகிய போதிலும் சிறுவர்கள் நீண்டகால கோவிட் நிலைமைக்கு உள்ளாவதோடு அவர்களின் அறிவு வளர்ச்சியில் அரைவாசி சீரழிந்து போகும் அபாயமும் உள்ளது. உலகில் அதிகளவான சிறுவர்கள் தொற்றுக்கு உள்ளாகிய மரணித்த, பிரேசிலில் உள்ள சர்வதேச அங்கீகாரம் பெற்ற அமசோனிய பரிசோதனை பற்றி தேசிய நிறுவனத்தின் ஆய்வாளர் லூகஸ் ஃபிரண்ட், 'எங்கள் வருங்கால தலைமுறையினர் எங்களுக்கு தெரிந்த மற்றும் தெரியாத சிக்கல்களுடன் கூடிய நிலைமைகளுக்கு இரையாகி உள்ளனர்,' என்று கடந்த வாரம் உலக சோசலிச வலைத் தளத்திடம் (WSWS) கூறினார். தடுப்பூசிக்கு முழுமையாக அடிபணியாத மற்றும் குழந்தைகளுக்கு மேலும் சிக்கல்களை தோற்றுவிக்கின்ற, வைரஸின் புதிய விகாரங்கள் உருவாக்கும் அபாயத்தை அவர் மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டினார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் போலவே, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்களும் இந்த ஆபத்துகள் தொடர்பாக ஆசிரியர்களை இருளில் வைத்து பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு ஆதரவளித்து வருகின்றன.

இலங்கையில் பாடசாலைகளை திறப்பதன் பின்னணியில் உள்ள மற்றொரு மறைமுக நோக்கம், இப்போது ஆன்லைன் கற்பித்தலில் இருந்து விலகி, சம்பள “முரண்பாடுகளை” அகற்றுமாறு கோரி 70 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்-அதிபர்களின் போராட்டத்தை நாசப்படுத்துவதாகும்.

அரசாங்கம் கடந்த 30 அன்று, கட்டம் கட்டமாக வழங்குவத்றகு வாக்குறுதி வழங்கிய அற்ப சம்பள உயர்வினை ஒரே தடவையில் வழங்கக்கோரி, போராட்டத்தை காட்டிக் கொடுக்க முயலும் ஆசிரியர்-அதிபர் சங்கங்கள், பாடசாலைகளை மீண்டும் திறக்க தங்கள் ஆதரவை வழங்குவதாக சமிக்ஞை செய்துள்ளன. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், “பாடசாலைகளை திறப்பதற்கு முன்' சம்பள கோரிக்கைகள் சம்பந்தமாக ஒரு பதிலை எதிர்பார்ப்பதாக” கூறியுள்ளார்.

முதலாளித்துவ அமைப்புமுறையோடு நெருக்கமாக பிணைந்திருக்கும் தொழிற்சங்கங்களில் இருந்து விடுபட்டு, ஒவ்வொரு பாடசாலையிலும், குடியிருப்பு பகுதியிலும் மற்றும் வேலைத் தளங்களிலும், சொந்த சுயாதீன நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பி, தொற்று நோயை முழுமையாக ஒழிக்கவும், சம்பள உரிமையை வென்றெடுக்கவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவசியமான இணைய மற்றும் கணினி வசதிகளை இலவசமாக வழங்குவதற்கும், தரமான இணையவழி கல்வியையும் பெற்றுக்கொள்வதற்குமான போராட்டத்தை தங்களது கையில் எடுத்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் இப்போது ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னால் உள்ளது.

Loading