லியோன் ட்ரொட்ஸ்கியும் மார்க்சிசத்தின் வளர்ச்சியும் துருக்கிய மொழி பதிப்பின் முன்னுரை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ரொம் ஹீனஹனின் அரசியல் படுகொலையின் ஐந்தாம் ஆண்டு நினைவாக 1982 இல் எழுதப்பட்ட அவரது கட்டுரையான லியோன் ட்ரொட்ஸ்கியும் மார்க்சிசத்தின் வளர்ச்சியும் என்பதன் துருக்கிய மொழி பதிப்பிற்கு டேவிட் நோர்த் எழுதிய முன்னுரை இங்கே பதிவிடப்படுகின்றது. நோர்த் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவராகவும் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசியத் தலைவராகவும் உள்ளார்.

இக்கட்டுரை மெஹ்ரிங் புக்ஸில் ஆங்கிலத்தில் கிடைக்கிறது. மெஹ்ரிங் புக்ஸில் ஹீனஹனின் படுகொலையின் 20 வது ஆண்டு நினைவு தினத்தில் டேவிட் நோர்த், “ரொம் ஹீனஹனுக்கு ஒரு அஞ்சலி: 1951 முதல் 1977 வரை” என்ற தலைப்பில் வழங்கப்பட்ட உரைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

***

ஒரு விடயத்தை எழுதும்போது, ஆசிரியர்கள் பெரும்பாலும் அவர்கள் ஆரம்பத்தில் நினைத்திருக்காத ஒரு திசையில் இட்டுச் செல்லப்படுகிறார்கள். லியோன் ட்ரொட்ஸ்கியும் மார்க்சிசத்தின் வளர்ச்சியும் என்ற கட்டுரையிலும் இதே போல்தான் நிகழ்ந்துள்ளது. Sosyalist Eşitlik தோழர்களால் துருக்கியில் இது மொழிபெயர்க்கப்பட்டதை நான் மனதார வரவேற்கிறேன்.

1982 இலையுதிர்காலத்தில் இந்த கட்டுரையை, வேர்க்கர்ஸ் லீக்கின் (அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி அமைப்பு) முன்னணி உறுப்பினரான ரொம் ஹீனஹனின் அரசியல் படுகொலையின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்திற்க்காக நான் எழுதினேன்.

அக்டோபர் 16, 1977 அன்று, நியூயோர்க் நகரில் வேர்க்கர்ஸ் லீக்கின் இளைஞர் அமைப்பான இளம் சோசலிஸ்டுகளின் ஆதரவோடு ஒரு சமூக நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியபோது தோழர் ஹீனஹன் இரண்டு துப்பாக்கிதாரிகளால் கொல்லப்பட்டார். இத் தாக்குதல் முற்றிலும் ஆத்திரமூட்டப்படாத ஒரு நிகழ்வாகும். தாக்குதல் நடத்திய இருவர் சமூக நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குள் புகுந்து வேண்டுமென்றே பரபரப்பை ஏற்படுத்தினர். என்ன நடக்கிறது என்பதை அறிய ஹீனஹன் சமூக நிலையத்தின் நுழைவாயிலை அணுகியபோது, அவரை ஒரு தாக்குதல்தாரி ஐந்து முறை சுட்டுக் கொன்றார். வேர்க்கர்ஸ் லீக்கின் மற்றொரு உறுப்பினரான ஜாக் வீலட், ரொம்மின் உதவிக்கு விரைந்தபோது இரண்டாவது தாக்குதல்தாரியால் சுடப்பட்டார். பின்னர் இரண்டு துப்பாக்கிதாரிகளும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

அவருக்கு பலத்த காயங்கள் இருந்தபோதிலும், இன்னும் நினைவுடனிருந்த ஹீனஹனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு வீலட் கொண்டுசென்றார். ரொம் அவசர சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும், கலந்துரையாடிய மருத்துவர்கள், ஒருபோதும் விளக்கப்படாத காரணங்களுக்காக, அவரது உள் இரத்தப்போக்கை நிறுத்த அறுவை சிகிச்சை செய்யவில்லை. ரொம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு 90 நிமிடங்களுக்கு பின்னர் அவசர சிகிச்சை அறையில் இறந்தார். அவருக்கு அப்போது 26 வயதாகியிருந்தது.

1976நியூயோர்க் நகரத்தில் வேலையின்மைக்கு எதிரான இளம் சோசலிஸ்டுகளின் ஆர்ப்பாட்டத்திற்கு ரொம் ஹீனஹன் தலைமை தாங்குகிறார் (WSWS Media)

ரொம் ஹீனஹனின் கொலை ஒரு அரசியல் குற்றமாகும். இதனால் அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் ஒரு தன்னலமற்றதும், அர்ப்பணிப்பும் மற்றும் மகத்தான தகமைகளை கொண்ட போராளியை இழந்தது. அவர் நான்கரை ஆண்டுகள் மட்டுமே இயக்கத்தில் இருந்தபோதிலும், ரொம் வேர்க்கர்ஸ் லீக்கிலும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலும் இருந்த அவரது தோழர்களால் மதிக்கப்பட்டார். மார்ச் 16, 1951 இல் விஸ்கான்சினில் பிறந்து மிச்சிகனில் வளர்ந்த அவர், நியூயோர்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோது 1973 வசந்த காலத்தில் வேர்க்கர்ஸ் லீக்கில் சேர்ந்தார். மாணவர்களின் தீவிரவாத அலை ஓய்ந்த பின்னரும் மற்றும் பணக்கார நடுத்தர வர்க்க இளைஞர்கள் எதிர்ப்பு அரசியலில் ஈடுபட்டு பின்னர் தமது தொழில் மற்றும் சுயதேவை வாழ்க்கை முறை மற்றும் அடையாள அரசியலை நோக்கி திரும்பியவேளையில் ரொம் வேர்க்கர்ஸ் லீக்கில் இணைய முடிவு எடுத்தார்.

ஆனால் ரொம் ஹீனஹன் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நோக்குநிலை மற்றும் 1920 களில் இருந்து உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றுப் போராட்டங்களின் மூலங்களுக்கு கட்சி கொடுத்த முக்கியத்துவத்தால் ஈர்க்கப்பட்டார். வேர்க்கர்ஸ் லீக் அதன் சொந்த அரசியல் வளர்ச்சியில் ஒரு முக்கியமான காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கையில், அவர் தன்னை ஒரு மார்க்சிசவாதியாக பயிற்றுவித்துக்கொண்டதும் நடந்தது. 1974 ஆம் ஆண்டில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலிருந்து சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) உடைவிற்கு எதிராக வேர்க்கர்ஸ் லீக்கை நிறுவிய ரிம் வோல்ஃபோர்த், கடந்த 14 ஆண்டுகளாக அவர் பாதுகாத்த கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டத்தை நிராகரித்து மீண்டும் சோசலிச தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். 1963 இல் பப்லோவின் ஐக்கிய செயலகத்துடன் மீண்டும் ஒன்றிணைந்ததன் மூலம் எடுத்துக்காட்டப்பட்டவாறு, சோசலிச தொழிலாளர் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை கைவிடுவதற்கு எதிராக அனைத்துலக் குழுவின் எதிர்ப்பின் அடிப்படையில் கல்வியூட்டப்பட்ட வேர்க்கர்ஸ் லீக்கின் இளம் அங்கத்தவர்கள் மத்தியில் வொல்ஃபோர்த்தின் நிராகரிப்பிற்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை.

வொல்ஃபோர்த்தின் காட்டிக்கொடுப்பிற்கு, நான்காம் அகிலத்தின் வரலாறு பற்றிய ஆய்வை தீவிரப்படுத்துவதன் மூலமும், பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான நீடித்த போராட்டத்தில் எழுப்பப்பட்ட தத்துவார்த்த மற்றும் அரசியல் விடயங்களை உள்ளீர்த்துக்கொண்டதன் மூலமும் வேர்க்கர்ஸ் லீக் பதிலளித்தது.

தோழர் ஹீனஹனின் படுகொலையின் ஐந்தாவது ஆண்டு நிறைவை நெருங்குகையில், அவருடைய அரசியல் பணிகளில் கவனம் செலுத்துவதோடு, வேர்க்கர்ஸ் லீக்கை கட்டியெழுப்பும் அவரது சிறந்த பங்களிப்புக்கு அஞ்சலி செலுத்துவதும் எனது நோக்கமாக இருந்தது. இருப்பினும், ரொம்மின் வாழ்க்கையின் மீளாய்வு, முக்கியமான கேள்விகளை எழுப்பியது: ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் சேருபவர்கள் எப்படி கல்வியூட்டப்படுகின்றார்கள்? எந்த செயல்முறையின் மூலம் ஒரு மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச காரியாளர்கள் வளர்த்தெடுக்கப்படுகின்றனர்? புரட்சிகர கட்சியின் நாளாந்த நடவடிக்கைகளுக்கும் நான்காம் அகிலத்தின் வரலாற்றிற்கும் உள்ள தொடர்பு என்ன?

லியோன் ட்ரொட்ஸ்கி பிரிங்கிபோவில் உள்ள அவரது மேசையில்

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் அதிகரித்துவரும் நெருக்கடியின் சூழலில் இந்தக் கேள்விகள் விதிவிலக்கான முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன. ரொம்மின் படுகொலை ஆண்டு நிறைவை நினைவுகூரும் கட்டுரை வரைவதற்கு முந்தைய வாரங்களில், அந்த நேரத்தில் அனைத்துலகக் குழுவின் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் முன்னணிப் பிரிவான தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) பப்லோவாத அரசியல் சந்தர்ப்பவாதத்தை நோக்கி திரும்புவதை பற்றிய விரிவான விமர்சனத்தை பற்றி நான் வேலை செய்யத் தொடங்கினேன். 1970 களின் நடுப்பகுதியில் தொடங்கி, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் தொடர்ச்சியான முதலாளித்துவ தேசிய இயக்கங்கள் மற்றும் ஆட்சிகளுடன் தொழிலாளர் புரட்சிக் கட்சி உருவாக்கிய உறவுகள், ட்ரொட்ஸ்கி தனது நிரந்தர புரட்சி தத்துவத்தில் வரையறுக்கப்பட்ட மூலோபாய நோக்குநிலையுடன் ஒரு அடிப்படை முறிவை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், பிரிட்டனுக்குள் தொழிலாளர் புரட்சிக் கட்சி பின்பற்றும் கொள்கைகள் ஒரு அப்பட்டமான சந்தர்ப்பவாத தன்மையை எடுத்துக்கொண்டன. தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் துரோகங்களுக்கு முகஸ்துதியான மன்னிப்புகள் கட்சியின் வெளியீடான News Line இல் அதிகளவில் வெளியிடப்பட்டது.

1950 மற்றும் 1960 களில் ஸ்ராலினிசம் மற்றும் பப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நிறுவுவதை பாதுகாக்கும் ட்ரொட்ஸ்கிச மூலோபாயத்திலிருந்து, அதன் முக்கிய தலைவர்களான ஜெர்ரி ஹீலி, மைக்கல் பண்டா மற்றும் கிளிவ் சுலோட்டர் ஆகியோருடன் தொழிலாளர் புரட்சிக் கட்சி பின்வாங்கியமை இயங்கியல் சடவாதத்தின் ஏமாற்றும் கண்டுபிடிப்புகளால் மூடிமறைக்கப்பட்டது. ஹீலி 'அறிகைக்கான பயிற்சி' (“practice of cognition”) என்று அழைத்தது அகநிலைரீதியான பதிவுவாதம் மற்றும் கட்டுப்பாடற்ற நடைமுறைவாதம் ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட கலவையாகும். இதற்கு போலி-ஹேகலிய வார்த்தைகளை பாசாங்குத்தனமாக பயன்படுத்துவதன் மூலம் ஆழ்ந்த முக்கியத்துவத்தை வழங்க முயற்சிக்கப்பட்டது. மேலும், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைவர்கள் அரசியல் பகுப்பாய்வுடன் முற்றிலும் தொடர்பில்லாததும் மற்றும் மார்க்சிசத்துடன் எந்த தொடர்பும் இல்லாத 'மெய்யியல் வழிமுறை' மீது கவனம் செலுத்துகின்றார்கள். இதனூடாக நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் பாரம்பரியத்தை உள்ளடக்கிய ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்கள் மற்றும் முக்கியமான ஆவணங்களை கற்றுக்கொள்வதை குறைமதிப்பிற்கு உட்படுத்தினர்.

13 மார்ச், 1983 தொழிலாளர் புரட்சிக் கட்சியின் கூட்டத்தின் மேடையில் ஜெர்ரி ஹீலி, மைக்கல் பண்டா மற்றும் கிளிவ் சுலோட்டர் (WSWS Media)

ஹீனஹனுக்கான அஞ்சலி வரைவு ஆரம்பித்தவுடன், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் வளரும் விமர்சனத்தில் நான் முனைப்புடன் இருந்த தத்துவார்த்த மற்றும் அரசியல் பிரச்சினைகள் வெளிப்பாட்டைக் காண்பது தவிர்க்க முடியாதிருந்தது. அவரது மரணத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், ரொம் ஹீனஹனுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு, ஒரு புரட்சிகர காரியாளராக தன்னை பயிற்றுவித்துக்கொள்வதற்கு அவர் அடித்தளமாக கொண்டிருந்த கோட்பாடுகள், வேலைத்திட்டம் மற்றும் உண்மையான மார்க்சிச வழிமுறையைப் பாதுகாக்க வேண்டியிருந்தது. இவ்வாறு, ரொம்மின் வாழ்க்கையை கௌரவிப்பது, தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை காட்டிக்கொடுப்பது பற்றிய ஒரு விமர்சனத்தின் ஆரம்ப விரிவாக்கத்தின் வடிவத்தை எடுத்துக் கொண்டது. கட்டுரைகள் குறிப்பாக தொழிலாளர் புரட்சிக் கட்சியை குறிப்பிடவில்லை. ஆனால் ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் நிச்சயமாக ரொம் ஹீனஹனுக்கான எனது அஞ்சலியின் அரசியல் தாக்கங்களைக் கவனிக்கத் தவறவில்லை. இது அவர்களின் மார்க்சிச தத்துவத்தின் சந்தர்ப்பவாத பொய்மைப்படுத்தலுக்கு எதிராக தெளிவாக இயக்கப்பட்டிருந்தது. பின்வரும் அவதானிப்புகளால் அவர்கள் குறிப்பாக அவமதிக்கப்பட்டிருப்பதை கண்டிருப்பார்கள்:

அனைத்து வகையான திருத்தல்வாதிகளும் அரசியல் வார்த்தையாடிகளும் தங்கள் அரசியலையும் கொள்கைகளையும் அக்காலத்தின் மிக உடனடி மற்றும் நடைமுறைத் தேவைகளையே எப்போதும் அடிப்படையாகக் கொண்டுள்ளனர். கொள்கைரீதியான விடயங்களான அதாவது, சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் வரலாறு மற்றும் ஒரு விதியால் ஆளப்படும் செயல்முறையாக அதன் அபிவிருத்தியை அறிந்துகொள்ளல் மற்றும் அதிலிருந்து எழும் அதன் புறநிலை அனுபவங்களின் தொடர்ச்சியான விமர்சனரீதியான மறுஆய்வு, இந்த நடைமுறைவாதிகளுக்கு முற்றிலும் அந்நியமானது. அரசியலில் அவர்களின் குறிக்கோள் 'எதுவாக இருந்தாலும் அது ஓரளவு வெற்றியைக் கொடுக்கும் வரை' என்பதாகும். அவர்கள் வரலாற்றில் ஆர்வத்தை வெளிப்படுத்துவார்களானால், அது உள்ளடக்கத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஒரு மேற்கோளை பயன்படுத்துவதிலும் மற்றும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அல்லது, பெரும்பாலும் ட்ரொட்ஸ்கியை ஒரு தனிமனிதனாக கடந்தகால சாதனைகளை ஏதாவது நிகழ்ச்சிகளில் வெற்றிகள் பற்றிய குறிப்புகளை எடுத்துக்காட்டுவதன் மூலம் அவர்களின் தற்போதைய சந்தர்ப்பவாதத்தை மூடிமறைப்பதற்காகவாகும்.

தொழிலாளர் புரட்சிக் கட்சி வழிமுறையை பொய்மைப்படுத்துவதில் அதன் இரண்டு முக்கிய காரணகர்த்தாக்களான ஹீலியும், சுலோட்டரும் பின்வரும் அறிக்கையினால் மகிழ்ச்சியடைந்திருக்கவில்லை:

ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்று வளர்ச்சி பற்றிய உண்மையான அறிவு இல்லாமல், இயங்கியல் சடவாதம் பற்றிய குறிப்புகள் வெறுமையானவை மட்டுமல்லாது, இத்தகைய வெற்று குறிப்புகள் இயங்கியல் வழிமுறையின் உண்மையான சிதைவுக்கு வழி வகுக்கின்றன. தத்துவத்திற்கான மூலாதாரம் சிந்தனையில் அல்ல, புறநிலை உலகில் உள்ளது. இவ்வாறு ட்ரொட்ஸ்கிசத்தின் வளர்ச்சி நமது இயக்கத்தின் வரலாற்றுரீதியாக பெறப்பட்ட முழு அறிவினை ஆதாரமாக கொண்டு வர்க்கப் போராட்டத்தின் புதிய அனுபவங்களிலிருந்து எழுகின்றது.

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் இயங்கியல் பொய்மைப்படுத்தல் மற்றும் திரிபுகளுக்கு எதிராக எனது விமர்சனம் முன்வைக்கப்பட்டிருந்தாலும், இயங்கியலை மதிப்பிழக்க செய்யவும் மற்றும் மார்க்சிச அரசியலின் மெய்யியல் அடித்தளங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் அனைத்துலகக் குழுவின் எதிர்ப்பாளர்களால் எனது விமர்சனம் தவறாக சித்தரிக்கப்பட்டு அரசியல் கெட்ட நம்பிக்கையை தமக்கு சார்பாக சுரண்டும் அபாயத்தை நான் கவனிக்காமல் இருக்கவில்லை. எனவே, வரலாறு தொடர்பான சடவாத கருத்தாக்கத்தினால் பயன்படுத்தப்படும் இயங்கியல் வழிமுறைக்கும், லியோன் ட்ரொட்ஸ்கியின் படைப்புகளுக்கும் இடையிலான முக்கிய தொடர்பை நான் வலியுறுத்தினேன்.

வேர்க்கர்ஸ் லீக்கிலும் மற்றும் அனைத்துலகக் குழுவிலும் உள்ள ஒவ்வொரு காரியாளரின் தத்துவார்த்த வளர்ச்சிக்கு அவசியமான லியோன் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களை தீவிரமாக மற்றும் முறையாகப் படிப்பவர்கள், இந்த இயங்கியல் வழிமுறையின் மகத்தான செழுமையைக் கண்டுபிடிப்பார்கள். ஸ்ராலினிசத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கி நடத்திய போராட்டத்தின் முழு உள்ளடக்கத்தையும் இந்த வரலாற்றுரீதியான போராட்டத்தில் எடுத்துக்காட்டப்பட்டுக் கொண்டிருக்கும் சமூக சக்திகளின் நலன்களை சுயாதீனமாக ஆராயாமல் மாறாநிலைவாதத்திற்கு எதிரான இயங்கியலுக்கு இடையிலான கேள்வியாக சிந்தனையற்ற முறையில் குறைப்பது நிச்சயமாக தவறானதாகும். எவ்வாறாயினும், ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் அதிகாரத்துவத்தின் அகநிலை கருத்துவாத மாறாநிலைவாதத்திற்கு எதிரான இயங்கியல் சடவாத முறையை ஆழப்படுத்த வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்கமுடியாது. மெய்யியல் பக்கசார்பற்றது, ஆனால் தத்துவம் ஒரு வர்க்க கேள்வியாகும். பாட்டாளி வர்க்கத்திற்கு விரோதமான சமூக சக்திகளின் அழுத்தங்களுக்கு அவரை ஆரம்பத்தில் எளிதில் பாதிக்ககூடியதாகச் செய்த ஸ்ராலினின் தேர்ந்தெடுக்கப்பட்ட கோட்பாடுகள் உலக நெருக்கடியின் வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சோவியத் அதிகாரத்துவத்தின் பொருளாதாய நலன்களுக்காக, இதனூடாக உலக ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காக நங்கூரமிடப்பட்டது.

1917 அக்டோபர் புரட்சியின் பின்னர் நிறுவப்பட்ட போல்ஷிவிக் கட்சி மற்றும் கம்யூனிச அகிலத்தின் பணிக்கும் சடவாத இயங்கியலுக்கும் இடையிலான தொடர்பை நான் தெளிவுபடுத்த முயன்றேன்:

கவுட்ஸ்கி மற்றும் பெரும்பான்மையான சமூக ஜனநாயகத் தலைவர்களால் 'இறந்த நாயாக' நடத்தப்பட்ட இயங்கியல் வழிமுறை, லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழ் மார்க்சிச மூலோபாயத்திற்கும், அரசியல் முன்னோக்கிற்கும் மற்றும் புரட்சிகர நடவடிக்கைக்குமான விஞ்ஞானமாக புதுப்பிக்கப்பட்டு, செறிவூட்டப்பட்டு மற்றும் வழிமுறைரீதியான அடித்தளமாக கம்யூனிச அகிலத்தில் அதன் சரியான இடத்தில் மீண்டும் இருத்தப்பட்டது. உள்நாட்டுப் போர்களின் சகாப்தத்தில், அரசியல் சூழ்நிலையில் திடீர் 'ஒரே இரவிலான' மாற்றங்கள், உலக அளவில் வர்க்க சக்திகளுக்கு இடையிலான உறவுகளில் நாளுக்கு நாள் மாற்றங்கள், அரசியல் போர்க்களத்தில் இடதிலிருந்து வலதுபுறமாகவும், வலதிலிருந்து இருந்து இடதுபுறமாகவும் திடீர் அசைவுகளுக்கு மத்தியில் இயங்கியல் வழிமுறை மட்டுமே பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்று பணிக்கு சமமானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மார்க்ஸ் எழுதியிருப்பார்: இயங்கியல் என்பது கல்விப்புலமை விவாதத்திற்கான கூரிய கத்தியல்ல, ஆனால் வர்க்கப் போரின் ஆயுதமாகும். இது சிந்தனையின் பேரார்வம் அல்ல; இது புரட்சிகர பேரார்வத்தின் சிந்தனையாகும். இந்த உந்துதலுடன்தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இன்று உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் காரியாளர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.

ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் சோவியத் ஒன்றியத்தில் லெனினுடன் ட்ரொட்ஸ்கி

லியோன் ட்ரொட்ஸ்கியும் மார்க்சிசத்தின் வளர்ச்சியினதும் முதல் இரண்டு பகுதிகளும் 1982 அக்டோபர் 15 மற்றும் 19, தேதியிட்ட வேர்க்கர்ஸ் லீக்கின் வாரத்திற்கு இரண்டு முறை வெளியிடப்படும் புல்லட்டின் வெளியீடுகளில் வெளியிடப்பட்டன. வெள்ளிக்கிழமை, அக்டோபர் 22, 1982, மார்க்சிச வழிமுறையின் அவரது இலட்சியவாத பொய்மைப்படுத்தலுக்கான எனது எதிர்ப்பினை ஹீலிக்கு நான் தனிப்பட்ட முறையில் தெரிவித்தேன். உடனடியாக அதனையடுத்து ஹீலியுடனான தொடர்ச்சியான வெடிக்கும் கூட்டங்கள் தொடர்ந்தன.

அமெரிக்காவுக்கு நான் திரும்பிய பின்னர், கட்டுரையின் மூன்றாவது மற்றும் நான்காவது பகுதிகளை எழுதினேன். அவை 1982 நவம்பர் 23 மற்றும் டிசம்பர் 14, புல்லட்டின் இதழ்களில் வெளியிடப்பட்டன. இந்த கட்டத்தில் கட்டுரையின் தத்துவார்த்த மற்றும் அரசியல் தாக்கங்கள், அதாவது நான்காம் அகிலத்தின் பாரம்பரியத்தை தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சந்தர்ப்பவாத மறுப்பு பற்றிய அதன் அடிப்படை விமர்சனம், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைவர்களால் தெளிவாக புரிந்து கொள்ளப்பட்டது. டிசம்பர் 18, 1982 அன்று இலண்டனில் நடந்த ஒரு கூட்டத்தில், அக்டோபரில் ஹீலியின் 'அறிகைக்கான பயிற்சி' பற்றிய எனது விமர்சனங்களுடன் உடன்பாட்டை வெளிப்படுத்திய சுலோட்டர், திடீரென போக்கை மாற்றி என்னை ஒரு அமெரிக்க நடைமுறைவாதி என்று கண்டனம் செய்தார்.

பதிலுக்கு, நான்வழிமுறை பற்றி கவனம் செலுத்திய லியோன் ட்ரொட்ஸ்கியும் மார்க்சிசத்தின் வளர்ச்சியும் என்பதிலிருந்து பல பகுதிகளை மேற்கோள் காட்டி, அவர்கள் நடைமுறைவாதத்திற்கு எவ்வாறு அனுதாபத்தை வெளிப்படுத்தினார்கள் என்பதை துல்லியமாக விளக்குமாறு சுலோட்டரிடம் கேட்டேன். அவர் சவாலை ஏற்க விரும்பவில்லை.

கட்டுரை News Line இல் வெளியிடப்படவில்லை. தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சந்தர்ப்பவாத சீரழிவு தீவிரமடைந்து, அமைப்பின் அரசியல் சிதைவு மற்றும் பிப்ரவரி 1986 இல் அனைத்துலகக் குழு மற்றும் ட்ரொட்ஸ்கிசத்துடன் முறிவடைந்ததுடன் அதன் உச்சகட்டத்தை அடைந்தது. இந்த உடைவிற்கு பின்னர், அனைத்துலக் குழுவின் அனைத்துப் பிரிவுகளிலும் பரவலாக வினியோகிக்கப்பட்டு மற்றும் அதன் அனைத்துப் பிரிவுகளின் பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டது.

சோசலிசத்திற்கான போராட்டத்திற்கான ஒரு புதிய தலைமுறையின் முயற்சியால் இந்த அஞ்சலியானது துருக்கிய மொழியில் வெளிவருவதன் ஊடாக ரொம்முடன் இணைந்து இயங்கிய மற்றும் அவரது நினைவை பொக்கிஷமாக வைத்திருக்கும் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அனைத்துலகக் குழுவில் உள்ள முதிர்ந்த தலைமுறை தோழர்களுடன் எனது திருப்தியைப் பகிர்ந்துகொள்வேன். உலகெங்கிலும் வளர்ந்து வரும் ட்ரொட்ஸ்கிச புரட்சியாளர்களின் தலைமுறை ரொம் ஹீனஹனின் உதாரணத்திலிருந்து உத்வேகம் பெறுவர். இந்த புதிய பதிப்பு, ரொம்பாதுகாக்கதனது உயிரை கொடுத்த தனது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டத்தின் வளர்ந்து வரும் உலகளாவிய செல்வாக்கிற்கு சாட்சியமளிக்கிறது.

David North

October 5, 2021

Loading