முன்னோக்கு

வூஹான் ஆய்வக அவதூறு: வாஷிங்டன் போஸ்ட் அமெரிக்காவுக்கு வெறுப்பைப் போதிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திங்கட்கிழமை வாஷிங்டன் போஸ்ட் பிரசுரித்த ஒரு தலையங்கத்தில், டாக்டர் ஆண்டனி பௌஸி (Anthony Fauci) தலைமையின் கீழ் இருந்த தேசிய சுகாதார அமைப்புகள் நிதியுதவியுடன், உலகின் முன்னணி கொரோனா வைரஸ் ஆராய்ச்சியாளர்கள் ஷி ஜெங்லி மற்றும் டாக்டர் பீட்டர் டாஸ்ஸாக் ஆல் சீனாவில் கோவிட்-19 வைரஸ் உயிரியியல்ரீதியில் வடிவமைக்கப்பட்டது என்ற மதிப்பிழந்த வாதத்திற்கு அது புத்துயிரூட்டி இருந்தது.

இந்த அவதூறின்படி, மரபணுரீதியில் வடிவமைக்கப்பட்ட அந்த வைரஸ் தற்செயலாக வூஹான் நுண்கிருமியியல் ஆய்வகத்திலிருந்து வெளிப்பட்டதாகவும், அந்த சம்பவம் மதிப்பார்ந்த எல்லா விஞ்ஞான அமைப்புகளாலும் மற்றும் சீன அரசாங்கத்தினாலும் ஒரு சதி மூலமாக மூடிமறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது, இந்த விஞ்ஞான அமைப்புகள் ஆய்வக கசிவு 'தத்துவத்தை' நிராகரிக்க கூட்டுச்சதியில் ஈடுபடுபவையாக குற்றஞ்சாட்டப்படுகின்றன.

A view of the P4 lab inside the Wuhan Institute of Virology is seen after a visit by the World Health Organization team in Wuhan in China's Hubei province on Wednesday, Feb. 3, 2021. (AP Photo/Ng Han Guan)

“அடுத்த பெருந்தொற்றைத் தடுக்க, நாம் கோவிட்-19 இன் மூலாதாரத்தைக் கண்டறிய வேண்டும். சீனா முட்டுக்கட்டையாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது' என்ற அந்த தலையங்கத்தில், விஞ்ஞானிகள், சர்வதேச அமைப்புகள் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தாலும் கூட மீண்டும் மீண்டும் மறுக்கப்பட்டுள்ளதைக் குறித்து ஒரேயொரு வார்த்தையும் இல்லை.

இந்த வூஹான் ஆய்வகப் பொய் விஞ்ஞானரீதியாக அல்ல, புவிசார் அரசியல் காரணங்களுக்காக முன்வைக்கப்படுகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தும், தைவான் சம்பந்தமாக சீனாவுடன் ஓர் இராணுவ பலப்பரீட்சையைத் தூண்ட நகர்ந்து வரும் நிலையில், சீனா மற்றும் சீன மக்களை அரக்கத்தனமாக சித்தரிப்பதும், ஒரு மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களைக் கொன்றுள்ள ஒரு நோய்க்கு அவர்களைப் பலிக்கடா ஆக்குவதுமே இந்த பொய்களின் பேரலையின் நோக்கமாகும்.

போஸ்ட் இன் அவதூறான இந்த பிதற்றல் அதை எழுதிய ஆசிரியர்களின் பெயர்களில் வெளியிடப்பட்டால் அவர்களுக்கு ஏற்படும் அவமானத்திலிருந்து காப்பாற்றவே தலையங்கக் குழுவின் பெயரில் ஒப்புதல் வழங்கப்பட்டது என்ற சந்தேகத்தை ஒருவரால் அசைக்க முடியாது.

போஸ்ட் அதன் கதையாடலை மறுக்கும் ஒவ்வொரு தகவலையும் புறக்கணிக்கிறது, அதேவேளையில் ஆய்வகக் கசிவு புரளியை ஆதரித்து பாரியளவில் குவியும் நம்பிக்கையை ஏற்றுக் கொள்கிறது—ஏதோ நடந்திருக்கலாம் என்ற வாதம், அது நடந்ததற்கான ஆதாரமாக இவற்றில் முன்வைக்கப்படுகின்றன.

இதற்காக, போஸ்ட் குறிப்பிடுகையில், இந்த பெருந்தொற்றின் இயற்கையான தோற்றுவாய்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள் 'வெறுங்கையுடன்' வந்திருப்பதாக அறிவிக்கிறது. இது சமீபத்திய முன்னேற்றங்களால் மறுத்தளிக்கப்படுகின்றன, டெல்டா மாறுபாட்டை விட கோவிட்-19 இன் கொடூரமான வகைக்கு நெருக்கமாக இருக்கும் பின்னிப்பிணைந்த மரபணுக்களுடன் வௌவால் கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதும் இதில் உள்ளடங்கும்.

கோவிட்-19 இன் தோற்றுவாய்கள் பற்றி உலக சுகாதார அமைப்பு (WHO) நடத்திய விசாரணை, ஆய்வகக் கசிவு சொல்லாடலை 'மிகவும் சாத்தியமற்றதாக' பெப்ரவரியில் அறிவித்ததுடன், மேற்கொண்டு ஆராய்ச்சி செய்வதற்கும் அது தகுதியற்றது என்று குறிப்பிட்டது. அந்த 'கோட்பாட்டை' மறுபரிசீலனை செய்யுமாறு பைடென் வெள்ளை மாளிகை அமெரிக்க உளவுத்துறை முகமைகளுக்கு உத்தரவிட்ட பின்னர், அந்த கோவிட்-19 'மரபணுரீதியாக வடிவமைக்கப்படவில்லை' என்று ஐந்தில் நான்கு முகமைகள் முடிவு செய்தன.

இத்தகைய முடிவுகளைச் சர்வசாதாரணமாக நிராகரிக்கும் போஸ்ட், அந்த அறிக்கைகள் 'பதிலளிப்பதை விட அதிகமாக கேள்விகளை எழுப்புவதாக' அறிவிக்கிறது.

அந்த வெட்கங்கெட்ட, அவதூறு புரளிகள் மேலும் மேலும் செல்கின்றன. வெளியுறவுத்துறையின் ஓர் உள்அலுவலக ஆவணத்தைத் தவறாக சித்தரித்த ஜோஷ் ரோகினின் மதிப்பிழந்த ஏப்ரல் 14, 2020 கட்டுரையை போஸ்ட் மேற்கோளிடுவதுடன், அதற்கு இணைப்பும் வழங்குகிறது, அந்த ஆவணம் வெளியிடப்பட்ட போது போஸ்ட் அதுவே கூட, “ஆய்வகத்திலிருந்து தவறுதலாக அந்த வைரஸ் வெளிப்பட்டது என்ற வாதத்தை இந்த முழு ஆவணமும் பலப்படுத்துவதாக இல்லை' என்று அறிவித்திருந்தது.

போஸ்ட் அதன் உண்மையான நோக்கங்களை இறுதி பத்தியில் மட்டுமே சுட்டிக் காட்டுகிறது. 'சீனாவின் கதவுகள் மூடப்பட்டிருக்கும் வரை எந்த விசாரணையும் வெற்றி பெறாது,' என்று அந்த தலையங்கம் நிறைவடைகிறது.

இந்த குறியீட்டுச் செய்திகளின் குறியீட்டை நீக்குவதற்கான திறவுகோல், 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்திற்குப் பின்னர், “அமெரிக்க அரசாங்கம் எவ்வாறு தைவானில் சீனாவின் அச்சுறுத்தலைத் தடுக்க முடியும்,” என்று தலைப்பிட்டு போஸ்ட் பிரசுரித்த ஒரு தலையங்கத்தில் கொடுக்கப்படுகிறது.

அந்த தலையங்கம் பெயரளவுக்கு டொனால்ட் ட்ரம்பை எதிர்க்கும் எந்தவொரு பத்திரிகையும் இன்று வரை அழைப்பு விடுத்திருப்பதை விட மிகவும் பகிரங்கமாக சீனாவுடனான ஒரு இராணுவ மோதலுக்குப் அழைப்பு விடுக்கிறது. ட்ரம்பின் கீழ் பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களுக்கும் கூடுதலாக, அமெரிக்க இராணுவத்தைப் பாரியளவில் கட்டமைப்பதற்கு அழைப்பு விடுத்து, 'இராணுவத் தடுப்புமுறையைப் பொறுத்த வரையில்' தைவான் சம்பந்தமாக சீனாவுக்கு எதிரான அதன் அச்சுறுத்தல்களை அமெரிக்கா ஆதரிக்க வேண்டும் என்று அது அறிவிக்கிறது.

'அமெரிக்கா 750 மில்லியன் டாலர் மதிப்பிலான பீரங்கிகளைத் தைவானுக்கு விற்றுள்ளதுடன், அத்தீவில் கடற்படை பயிற்சியாளர்களை நிலைநிறுத்தும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கீழ் தொடங்கப்பட்ட நடவடிக்கை தொடர்கிறது,” என்ற உண்மையை போஸ்ட் பாராட்டுகிறது.

போஸ்ட் பாராட்டிய அந்த நகர்வுகள் கிழக்கு ஆசியாவைப் போரின் விளிம்புக்குக் கொண்டு வந்துள்ளன, அவை தைவான் அரசாங்கத்தைச் சீனாவில் இருந்து முறையான சுதந்திரத்தை நோக்கி நகர தள்ளியுள்ளதால், பெய்ஜிங்கை இராணுவ மோதலுக்குத் தூண்டியுள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் ஆக்கிரோஷமான ஸ்திரமின்மை முற்றிலும் வாஷிங்டனின் வேலையாகும், போஸ்ட் இதை அடைகாத்து வருகிறது. அது தொடர்கிறது, 'கிழக்கு ஆசியாவில் அதன் கடமைப்பாடுகளை ஆதரிக்கத் தேவையான பலமான கனரக தளவாடங்களில் —குறிப்பாக கடற்படைகளில்— அமெரிக்காவே இன்னும் பலமாக முதலீடு செய்ய வேண்டியிருக்கிறது,” என்று அது தொடர்கிறது.

பைடென் நிர்வாகம் கோரிய இராணுவ வரவு-செலவுத் திட்டக்கணக்கு —வரலாற்றிலேயே மிகப் பெரிய இராணுவ வரவுசெலவுத் திட்டக் கணக்கான இது— முற்றிலும் போதுமானதில்லை என்று அந்த தலையங்கம் கண்டிக்கிறது, “மிகவும் கடுமையான வார்த்தைகளை விட, புதிய கப்பல்கள் … சீனாவை அதிகமாக கவரக் கூடும்,” என்றது அறிவிக்கிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு மில்லியன் அமெரிக்கர்களைக் கொன்ற ஒரு கொடிய பெருந்தொற்றுக்குச் சீனா தான் பொறுப்பு என்று பொய்யாக வாதிட்டு வரும் போஸ்ட், சீனாவுடன் ஒரு போரை எதிர்த்துப் போராட அமெரிக்கா தயாராக வேண்டும் என்றும் பகிரங்கமாக அறிவுறுத்துகிறது.

ஒரு போரை நியாயப்படுத்த பயன்படுத்தக்கூடிய ஒரு பொய்யை ஊக்குவிப்பதன் மூலம், மக்களிடையே வெறுப்பை மூட்ட, மக்களின் பொதுக் கருத்தைச் சீரழிப்பதே போஸ்டின் நோக்கமாக உள்ளது.

சீனாவுக்கு எதிரான இராணுவ மற்றும் அரசியல் பிரச்சாரம் இரண்டு காரணிகளால் உந்தப்படுகிறது. முதலாவதாக, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அதன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவிசார் அரசியல் நிர்பந்தங்களால் ஆகும். அமெரிக்க ஆளும் வர்க்கம் சீனாவை அதன் பூகோள மேலாதிக்கத்திற்கு ஒரு முக்கிய அச்சுறுத்தலாக பார்க்கிறது.

இரண்டாவதாக, ஒரு வெளிப்புற எதிரியை உருவாக்குவதன் மூலம், அதாவது ஒரு செயற்கையான 'தேசிய நல்லிணக்க' இராணுவ ஆக்ரோஷத்தை உற்பத்தி செய்வதற்காக, இது தவிர்க்க முடியாமல் உள்நாட்டு ஒடுக்குமுறையையே பின்தொடரும் என்கின்ற நிலையில், ஆளும் உயரடுக்கு அதிகரித்து வரும் உள்நாட்டு நெருக்கடியைப் பெரும்பிரயத்தனத்துடன் கட்டுப்படுத்த முயன்று வருகிறது.

நியூ யோர்க் டைம்ஸ் போலவே வாஷிங்டன் போஸ்டும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஓர் அங்கமாகும். அதன் பக்கங்களில் என்ன வெளிவருகிறதோ அவை அமெரிக்க உளவுத்துறை முகமைகளால் நேரடியாக எழுதப்படாவிட்டாலும் அவற்றால் கவனமாக மதிப்பாய்வு செய்யப்பட்டு, ஒருங்கிணைந்து வெளியிடப்படுகின்றன. போரை விற்பது தான் அவர்களின் வேலை.

அந்த பத்திரிகையின் உரிமையாளர் ஜெஃப் பெஸோஸ் உள்ளடங்கலாக, போஸ்ட் யாருக்காக பேசுகிறதோ அந்த நிதிய தன்னலக்குழு, நிதி, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளால் ஆழமாக நோக்குநிலை பிறழ்ந்துள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு ஒரு போர் தான் தீர்வு என்ற விரக்தியடைந்த யோசனையால் அவர்கள் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

சம்பவங்களின் வழமையான போக்கில் பார்த்தால், இத்தகைய பேரழிவுகரமான நடவடிக்கைகளை எடுக்கும் ஆளும் வர்க்கங்களை, வரலாறு, புரட்சிகளைக் கொண்டு தண்டிக்கிறது.

ஆனால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒரு போர் இரு தரப்பிலும் அணு ஆயுதங்களைக் கொண்டு போரிடப்படும் முதலாவது உலகப் போராக இருக்கும். அந்தப் போரை நிறுத்துவதற்கு தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்படுவதற்கு முன்னரே, இறப்பு எண்ணிக்கை மில்லியன் கணக்கில் இருக்கலாம் என்ற மிகப் பெரும் ஆபத்து உள்ளது.

இப்போதே அவசர நடவடிக்கை தேவைப்படுகிறது. அமெரிக்க தொழிலாளர்கள் பல தசாப்தங்களில் இல்லாத வகையில் மிகவும் குறிப்பிடத்தக்க வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் அலைக்குள் இறங்கி வருகின்றனர். கண்ணியமான கூலிகள் மற்றும் பாதுகாப்பான வேலை நிலைமைகளுக்கான கோரிக்கையை மட்டும் தொழிலாளர்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது, மாறாக பகட்டாராவாரம், தேசியவாதம் மற்றும் வெளிநாட்டவர் விரோத மனோபாவம் ஆகியவற்றின் எல்லா வடிவங்களுக்கு எதிராகவும், போர் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்காகவும் ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.

Loading