கொலின் பௌல்: அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் விசுவாசமான ஊழியருக்கு இரங்கல் தெரிவிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியம் செய்த பல குற்றங்களுடன் தொடர்புபட்ட கொலின் பௌல் போன்ற எந்தவொரு தனிநபரும் அவ்வளவு நெருக்கமாக அடையாளம் காணப்படவில்லை. தேசிய பாதுகாப்பு எந்திரத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், கூட்டுப்படைகளின் தலைவர்களின் தலைமைத் தலைவர், அரசு வெளியுறவுசெயலர் போன்ற இவ்வளவு உயர் பதவிகளை யாரும் வகிக்கவில்லை.

இந்த பிப்ரவரி 5, 2003 புகைப்படத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் ஈராக்கிற்கு எதிரான போருக்கான ஆதாரமாக அது ஆந்த்ராக்ஸைக் வைத்திருக்கலாம் என்று ஒரு குப்பியை வெளியுறவு செயலாளர் கொலின் பௌல் காட்டுகின்றார்.(AP Photo/Elise Amendola, File)

இது கோவிட்-19 இன் சிக்கல்களால் திங்கள்கிழமை அதிகாலை அவர் இறந்தபோது, அமெரிக்க ஊடகங்கள் மற்றும் பெரும்பாலான உலக ஊடகங்கள், ஜனாதிபதிகள், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஊடக பண்டிதர்களிடமிருந்து புகழ்பெற்ற அறிக்கைகள் மற்றும் அஞ்சலிகளால் மூழ்கியது ஏன் என்பதை விளக்குகிறது.

ஜனாதிபதி ஜோ பைடென், அமெரிக்க கொடிகள் இந்த வாரத்தில் அரைக்கம்பத்தில் பறக்க உத்தரவிட்டார், அதே நேரத்தில் 'அமெரிக்க இராணுவத்தின் மிக உயர்ந்த பதவிக்கு உயர்ச்சிடைந்த மற்றும் நான்கு ஜனாதிபதிகளுக்கு அறிவுரை வழங்கிய' “நிகரற்ற மரியாதை மற்றும் கண்ணியத்தின் தேசபக்தர்' என்று பௌல் க்கு புகழாரம் சூட்டினார். 'நமது நாட்டை வலிமையாக்கும் ஜனநாயக விழுமியங்களுக்கான பௌலின் தனிப்பட்ட அர்ப்பணிப்பை' மேற்கோள் காட்டி, அதே நேரத்தில் அவர் 'இனரீதியான தடைகளை மீண்டும் மீண்டும் உடைத்தார்' என்றார்.

ஜனநாயகக் கட்சி ஒப்புதலின் பெரும்பகுதி, அமெரிக்க இராணுவ எந்திரத்தின் கட்டளையகத்தின் உயரத்திற்கு உயர்ந்த முதல் ஆபிரிக்க அமெரிக்கராக பௌலின் பங்கை மையமாகக் கொண்டிருந்தது. அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகளின் உறுப்பினரான காங்கிரஸ்காரர் ஜமால் போமான், 'ஒரு கறுப்பின மனிதனாக உலகை விளங்கிக்கொள்ள முயற்சித்தார், கொலின் பௌல் அவருக்கு ஒரு உத்வேகம்' என்று ட்வீட் செய்தார்.

எந்த கொலின் பௌல் அவருக்கு உத்வேகம் அளித்தார் என்பதை அவர் விவரிக்கவில்லை: ஈரான்-கொன்ட்ரா ஊழலில் ரொனால்ட் றேகனை மீட்க ஜெனரல் கொலின் பௌல் உதவினார், அல்லது கூட்டுத் தலைவர்களின் தலைவர் கொலின் பௌல் 1991 இல் ஈராக்கிய கட்டாய இராணுவத்தில் இணைக்கப்பட்டவர்களை எரிப்பதை மேற்பார்வையிட்டார், அல்லது வெளிவிவகார செயலாளர் கொலின் பௌல் 2003 இல் ஈராக்கில் வரவிருக்கும் அமெரிக்க படையெடுப்பை நியாயப்படுத்தினார். ஈராக் பேரழிவு ஆயுதங்களைக் கொண்டிருப்பதாகக் கூறி, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் அவர் ஆற்றிய உரை, 'பெரிய பொய்யிற்கான' ஒரு வழக்கசொல்லாக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

நான்கு தசாப்தங்களாக கொலின் பௌல் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்காத அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பின் ஒரு முக்கிய நிகழ்வு கூட இல்லை. நியூ யோர்க் நகரக் கல்லூரியில் ROTC (சேமப்படை அதிகாரிகள் பயிற்சிப் படையில்) சேர்ந்த பின்னர், பௌல் அமெரிக்க இராணுவத்தில் இரண்டாவது லெப்டினன்டாக நுழைந்து மற்றும் வியட்நாமிற்கு அனுப்பப்பட்டார். முதலில் 1963 இல் தெற்கு வியட்நாமிய படைப்பிரிவின் 'ஆலோசகராக', பின்னர் டெட் தாக்குதலைத் தொடர்ந்து 1968 இல் ஒரு செயல்பாட்டு அதிகாரி ஒரு அமெரிக்கப் பிரிவில் கடமையாற்றினார்.

பென்டகனுக்குத் திரும்பி MBA பள்ளிக்குச் சென்ற பின்னர், அவர் நிக்சன் வெள்ளை மாளிகையால் திறமைசாலியாகக் கண்டுபிடிக்கப்பட்டு, நிர்வாக மற்றும் வரவு-செலவுத் திட்ட அலுவலகத்தில் வெள்ளை மாளிகை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு அவர் நிக்சன் உதவியாளர்களான காஸ்பர் வையின்பேர்கர் மற்றும் ஃபிராங்க் கார்லூசியை சந்தித்தார். 1981 இல் குடியரசுக் கட்சியின் ரொனால்ட் றேகனின் கீழ் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது அவரை அவர்கள் உயர் பதவிகளுக்கு கொண்டு வந்தார்கள். வெயின்பேர்கர் பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது, அப்போது பிரிகேடியர் ஜெனரலலாக இருந்த பௌலை 1983 இல் அவரது தலைமை இராணுவ உதவியாளராக நியமித்தார்.

ஈரான்-கொன்ட்ரா ஊழலின்போது பௌல் முதலில் பொது கவனத்திற்கு வந்தார். WSWS இன் அமெரிக்க முன்னோடியான புல்லட்டின் அந்த நேரத்தில் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் ஆலிவர் நோர்தின் சாட்சியத்தை பின்வருமாறு அறிக்கை செய்தது போல்: 'நோர்த் குறைந்தது நான்கு பென்டகன் அதிகாரிகளுடன் ஈரானுக்கு இரகசிய ஆயுதங்கள் அனுப்புவது பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறினார். பாதுகாப்பு செயலாளர் காஸ்பர் வையின்பேர்கர், அவரது உதவியாளர் ஜெனரல் கொலின் பௌல், சிறப்பு நடவடிக்கைகளுக்கான பென்டகன் தலைவர் நொயல் கோச் மற்றும் [பாதுகாப்பு உதவி செயலாளர் ரிச்சர்ட்] ஆர்மிடேஜ் ஆகியோரே அவர்களாகும். அதிலிருந்து தேசிய பாதுகாப்பு சபையில் பௌல் 2ஆம் தர பதவிக்கு உயர்த்தப்பட்டார்”.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நிகரகுவாவின் கொன்ட்ராஸின் சட்டவிரோத ஆயுதங்களுக்கு ஈரானுக்கு இரகசிய ஆயுத விற்பனையை வெளிப்படுத்திய பின்னர், பௌல், ஆலிவர் நோர்தின் இடத்தை எடுத்தார். ஒரு வருடத்திற்குள், இந்த ஊழல் சட்டவிரோத நடவடிக்கையை மேற்பார்வையிட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அட்மிரல். ஜோன் பொயின்டெக்ஸரை பதவிவிலக நிர்ப்பந்தித்தது. பௌல் அவருக்கு பதிலாக றேகனின் கடைசி தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவி உயர்வு பெற்றார்.

ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ்ஷின் உள்வரும் நிர்வாகம் இந்த அரசியல் சேவைக்காக நன்றியற்றதாக இருக்கவில்லை. ஆகஸ்ட் 1989 இல், புஷ் மேலும் 14 மூத்த தளபதிகளை தாண்டி அமெரிக்க இராணுவத்தில் சீருடை அணிந்த உயர்மட்ட பணியாளர்களின் கூட்டுத் தலைவர்களின் தலைவராக பௌலை நியமித்தார். அந்த வகையில், பௌல் பனாமா மீதான அமெரிக்க படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பின் போது டிசம்பர் 1989 இல் ஜனாதிபதியின் தலைமை இராணுவ ஆலோசகராக இருந்தார். இதில் அமெரிக்கப் படைகள் சிறிய நாட்டை விரைவாக முறியடித்து இரத்தம் தோய்ந்த இராணுவ ஆட்சியாளரும் நீண்டகால அமெரிக்க புலனாய்வுத்துறையின் கையாளாக இருந்து பின்னர் வாஷிங்டனை எதிர்த்த அதன் தலைவர் மானுவல் நோரிகாவையும் கைப்பற்றின.

இப்போரானது மிகப்பெரிய மற்றும் பாரிய பின்விளைவுகளை கொண்ட ஆக்கிரமிப்புக்கான ஒரு முதல் ஒத்திகையாக இருந்தது. ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுசைன் குவைத்தை கைப்பற்றப்பட்டதற்கு பதிலளிக்கும் விதமாக பாரசீக வளைகுடா போரில் அமெரிக்க இராணுவம் 500,000 துருப்புக்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பியது. சதாம் ஹுசைனுக்கு தனது நடவடிக்கைக்கு அமெரிக்க ஒப்புதல் இருப்பதாக நம்பச்செய்யப்பட்டது. பௌல் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ரிச்சார்ட் சென்னி ஆகியோர் அமெரிக்க இராணுவம் ஒரு மோசமான பயிற்சி பெற்ற மற்றும் மோசமான ஆயுதங்களைக்கொண்ட ஈராக்கிய இராணுவத்தின் மீதான படுகொலையை ஒழுங்கமைப்பதில் முக்கிய பங்கு வகித்தனர். அந்த இராணுவம் ஒரு முழுமையான வான்வழி குண்டுத்தாக்குதலுக்கு எதிராக தன்னை தற்காத்துக் கொள்ளும் திறனைக் கொண்டிருக்கவில்லை. இதனை தொடர்ந்து மிக நவீன ஆயுதங்களுடன் ஒரு முழு அளவிலான தரைப்போர் நடாத்தப்பட்டது.

இந்த ஒருதலைப்பட்ச இரத்தசிந்தலின் போது பௌல் பின்வருமாறு அறிவித்தார், “இந்த இராணுவத்திற்கு எதிரான எங்கள் மூலோபாயம் மிகவும் எளிது. முதலில், நாங்கள் அதற்கான தொடர்புகளை வெட்டப் போகிறோம், பின்னர் நாங்கள் அதைக் கொல்லப் போகிறோம்'. பாரிய கொலைக்கான அவரது அப்பட்டமான வாதம் 'பௌல் கோட்பாடு' மற்றும் வியட்நாமின் சிறப்பியல்பு என்று கூறப்படும் படிப்படியான போருக்கு எதிர்மாறானதாகும். அதிக சக்தியைப் பயன்படுத்துங்கள், எதிரிகளை விரைவாக அழித்து, பின் வெளியேற்றவும்.

காட்டில் இயங்கும் அதிக உத்வேகம் கொண்ட வியட்நாமிய விடுதலைப் போராளிகளை விட பாலைவனத்தில் சிக்கிய சதாம் ஹுசைனின் இராணுவத்திற்கு எதிராக இதைப் பயன்படுத்துவது எளிதானது, ஆனால் இராணுவ வெற்றி பௌலின் மேதைக்கு சான்றாக அறிவிக்கப்பட்டது. புஷ் நிர்வாகத்தின் கீழ் 1992 ஆம் ஆண்டு சோமாலியா மீதான அமெரிக்க படையெடுப்பின் கீழ் ஒரு இறுதியான ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்பார்வையிட்ட பின்னர், அவர் உயர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என்று இரு முதலாளித்துவ கட்சிகளிடமிருந்தும் ஊடகப்பாராட்டுகள் மற்றும் வேண்டுகோள்களுக்கு மத்தியில் ஓய்வு பெற்றார். பௌல் தன்னை ஒரு குடியரசுக் கட்சிக்காரர் என்று பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் அடுத்த குடியரசுக் கட்சித் தலைவர் வரை தனது நேரத்தை ஒதுக்க விரும்பி, ஒரு உயர் பதவிக்கான போட்டியிலிருந்து விலகியிருந்தார்.

ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பௌலை தனது வெளிவிவகாரச் செயலாளராகப் பெயரிட்டார். அது ஒரு முக்கியமான நேரத்தில் வந்தது. அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதன் இழிபுகழ்பெற்ற புஷ் எதிர் கோர் முடிவுக்குப் பின்னர், புளோரிடாவில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி, மாநிலத்தின் தேர்தல் வாக்குகளை குடியரசுத் தலைவர் வேட்பாளர் புஷ் க்கு வழங்கியது. அதனுடன் கோர் அதனை ஒப்புக்கொண்டு, இராணுவத்தின் விருப்பப்படி ஜனாதிபதியாக முடியாது என்று ஆலோசகர்களிடம் கூறினார். புஷ் தனது முதல் நியமனமாக முன்னாள் ஜெனரலைத் தேர்ந்தெடுத்தமை, அமெரிக்க அரசியல் நெருக்கடியில் இராணுவத்தின் தீர்க்கமான பங்கிற்கான ஒரு மேலதிக அறிகுறியாகும்.

9/11 தாக்குதல்கள், ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க படையெடுப்பு மற்றும் ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய புஷ்ஷின் முதல் பதவிக் காலம் முழுவதும் பௌல் வெளியுறவு செயலாளராக இருந்தார். ஒரு சிப்பாயும் அதீத பலத்தை பயன்படுத்துவதற்கு ஆதரவான பௌல், ஆக்கிரமிப்பு மற்றும் இராணுவ வெற்றியை அதன் வெளிநாட்டு கொள்கைகளின் அச்சாகக் கொண்ட ஒரு நிர்வாகத்தில் இராஜதந்திரத்தின் கடைசி வக்கீலாக முடிவடைந்தார் என்பது அமெரிக்க ஆளும் வர்க்கம் வலதுபுறம் நோக்கிய கடுமையான திருப்பத்தைப் பற்றி கூறுகிறது.

புஷ் நிர்வாகத்திற்குள் நடக்கும் சச்சரவுகள் 'நல்ல போலீஸ்காரருக்கும், கெட்ட போலீஸ்காரருக்கும்' இடையிலானது என வழக்கம் போல் தோன்றியது. பௌல் சில சமயங்களில் பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பீல்டுடனும், மற்ற சமயங்களில் துணை ஜனாதிபதி டிக் சென்னியுடனும் மோதினார். ஏறக்குறைய இது இறுதியில் ஒரு வலதுசாரி இராணுவவாத கொள்கையுடன் சென்று முடிந்தது. சில சமயங்களில், பௌல் கொஞ்சம் இராஜதந்திர நுட்பம் இருக்கும் தனது வழியைக் கொண்டிருந்தாலும் அடிக்கடி புஷ் வெட்கக்கேடான ஆணவமிக்க வழியைத் தேர்ந்தெடுத்தார்.

பௌல் நான்கு ஆண்டுகளாக வெளியுறவுத் துறைக்கு தலைமை தாங்கிய மிகவும் மோசமான நிகழ்வு, பிப்ரவரி 2003 இல் வந்தது, சதாம் ஹுசைன் 'பேரழிவு ஆயுதங்கள்' வைத்திருந்ததாகவும், அவர் அல் கொய்தாவுடன் இரகசியமாக நட்பு வைத்திருப்பதாகவும் புஷ் நிர்வாகத்தின் வழக்கை வாதிட பௌல் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பப்பட்டார். அதனால் இறுதியில் 9/11 தாக்குதல்களுக்கு ஹுசைன் பொறுப்பேற்க வைக்கப்பட்டார். பௌல் இந்த வழக்கை முன்னெடுக்க விரும்பபியிருந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில் அவர் நிர்வாகத்தின் 'நியாயமான' முகமாக அல்லது ஒரு “புறாவாக” கூட ஊடகத்தால் கட்டியெழுப்பட்டதாலாகும். சென்னி மற்றும் செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட்டின் இரத்தக் கொதிப்பு வார்த்தைகளை மறுத்தவராக காட்டப்பட்டார்.

'இன்று பாதுகாப்பு சபையிடம் நான் முன்வைக்கும் ஒவ்வொரு அறிக்கையும்' ஆதாரங்கள், திடமான ஆதாரங்களால் ஆதரிக்கப்படுகிறது. இவை கருதுகொள்கள் அல்ல. உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில் உண்மைகளையும் முடிவுகளையும் நாங்கள் உங்களுக்கு தருகிறோம். சில மாதங்களில் நிரூபிக்கப்பட்டதுபோல், அமெரிக்க படையெடுப்பு மற்றும் ஈராக் மீதான வெற்றிக்குப் பின்னர், 'உண்மைகள்' மற்றும் 'சான்றுகள்' என்பவை பொய்களின் தொகுப்பாகும். பேரழிவுகரமான ஆயுதங்கள் எதுவும் இருக்கவில்லை. அல்கொய்தா பாக்தாத்தில் மதச்சார்பற்ற பாத்திஸ்ட் ஆட்சியின் கடுமையான எதிரியே, நட்பானது அல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்நாட்டையும் மற்றும் மத்திய கிழக்கை ஒட்டுமொத்தமாக, போர், பாரிய துன்பம் மற்றும் சமூகம் முழுவதும் அழிவு ஆகியவற்றில் மூழ்கடித்தது. கொலின் பௌல் இதை தூண்டிவிட்டவர்களில் முக்கியமான ஒருவராவார்.

பௌலின் பேச்சு முதன்மையாக அமெரிக்காவில் பொதுமக்களின் கருத்தை அச்சுறுத்துவதை நோக்கமாகக் கொண்டது. அந்த நேரத்தில் உலக சோசலிச வலைத் தளம் சுட்டிக்காட்டியபடி, செனட் வெளிநாட்டு உறவுகள் குழுவில் முதல்தரவரிசை ஜனநாயகவாதியான டெலாவேரின் செனட்டர் ஜோ பைடென் உட்பட, போரை ஆதரிக்க ஜனநாயகக் கட்சி உடனடியாகத் தாவியது.

இருப்பினும், பௌலைப் பொறுத்தவரை, அது புஷ் போர் அமைச்சரவைக்கு அவரது அரசியல் பணிகளின் முடிவின் ஆரம்பமாக இருந்தது. புஷ் மறுதேர்தலில் வெற்றிபெறும் வரை அவர் பதவியில் நீடித்தார். பின்னர் புஷ்ஷின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொண்டோலீசா ரைஸால் மாற்றப்பட்டார். அவர் தொடர்ந்து ஈராக் போரைப் பாதுகாத்தார், 2012 இல் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம், 'நாங்கள் நிறைய வெற்றிகளைப் பெற்றோம் என்று நினைக்கிறேன்', ஈராக்கின் பயங்கரமான சர்வாதிகாரி போய்விட்டார்' என்று கூறினார். மேலும் ஒரு மில்லியன் ஈராக்கியர்களும், 5,000 அமெரிக்க படையினரும், மேலும் நூறாயிரக்கணக்கானோர் காயமடைந்தும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர்.

அதன் பின்னர், பௌல் முதலாளித்துவ அரசியலில் சில அலைகளை உருவாக்கி, குடியரசுக் கட்சியை உடைத்து 2008 இல் பராக் ஒபாமாவை ஜனாதிபதியாக ஒப்புதல் அளித்தார். பின்னர் பைடென் மற்றும் கமலா ஹாரிஸ் சார்பாக ஆகஸ்ட் 2020 இல் சிறப்பு பேச்சாளராக ஜனநாயக தேசிய மாநாட்டில் தோன்றினார்.

பௌலின் எழுச்சியின் மிக முக்கியமான குணாதிசயம் எதிர்காலத்திற்கான மிக மோசமான அறிகுறியாகும். அவர் அரசியல் தளபதியின் முன்மாதிரியாக இருந்தார். எவ்வளவிற்கு இருண்டதாக இருந்தாலும் போரில் வெற்றி பெற்றதால் அல்ல ஆனால் பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகைக்குள் உள்ள பின்னறை மோதல்களின் வெற்றியின் காரணமாக தனது தொழில்வாழ்க்கையை மேற்கொண்டார். அவர் வியட்நாமில் அமெரிக்க தோல்வியால் அவமானத்தை அனுபவிக்கும் அளவுக்கு மேல்மட்டத்தில் இருக்கவில்லை. அதன்பிறகு, வையின்பேர்கர், கார்லூசி மற்றும் ஜோர்ஜ் எச்.ட்பிள்யூ. புஷ் ஆகியோரின் ஆதரவால் இலாபமடைந்தவராகும். அவர்களின் முதலீடு இரு தரப்புக்கும் அதிக இலாபத்தை அளித்தது.

இன்று, இத்தகைய இராணுவ-அரசியல் பிரமுகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். டேவிட் பெட்ரேயஸ் போன்ற சிலர் வெளியேறினர். மார்க் மில்லியைப் போன்ற மற்றவர்கள் ஊடகப் புகழைப் பெற்றுள்ளனர் மற்றும் பாசிச ஆட்சிக்கு ட்ரம்பின் உந்துதலை எதிர்ப்பதற்காக ஜனநாயகத்தின் மீட்பர்களாகப் போற்றப்படுகிறார்கள். உலக சோசலிச வலைத் தளம் சுட்டிக்காட்டியபடி, உயர்மட்ட தளபதிகளால் சகித்துக்கொள்ளப்படும் ஒரு ஜனநாயகம் உண்மையில் ஒரு ஜனநாயகம் அல்ல: அது 'பொருத்தமான' சர்வாதிகாரிக்காக காத்திருக்கிறது. மிகவும் நயவஞ்சகமாக, கீழ்நிலை இராணுவ அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை முகவர்கள் இப்போது காங்கிரஸ் ஜனநாயகக் கட்சியின் கணிசமான பகுதியை உள்ளடக்கியுள்ளனர். மற்றும் இவர்கள் பைடென் நிர்வாகத்தின் கொள்கைகளின் மீது ஒரு உண்மையான தடுப்பதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனர்.

அமெரிக்க ஜனநாயகத்தின் சிதைவை அழகுபடுத்தி சிறுபான்மை இளைஞர்களுக்கு அவரது வாழ்க்கையை ஒரு முன்மாதிரியாக காட்டுவதற்கு அமெரிக்க ஆளும் உயரடுக்கு கொலின் பௌலின் மரணத்தினால் ஒரு கடைசி சேவையை இழந்திருக்கின்றது. அடையாள அரசியலின் வார்த்தையாடலைப் பயன்படுத்தி, அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் கொள்ளையடிக்கும் தன்மையை மறைக்க முயல்கிறது.

Loading