அமெரிக்க-சீனப் போரில் தைவான் ஏன் வெடிப்பார்ந்த புள்ளியாக அமைகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பைடென் நிர்வாகம் சீனாவுடனான அதன் ஆக்கிரோஷமான மோதலை முடுக்கி விட்டு வருவதால், அணுஆயுதமேந்திய அவ்விரு உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களுக்கு இடையிலான போருக்கு தைவான் மிக உடனடியான மற்றும் ஆபத்தான வெடிப்புப் புள்ளியாக மிக வேகமாக மாறி கொண்டிருக்கிறது.

தைவானின் நிலை நீண்ட காலமாக மிகவும் சர்ச்சைக்குரியதாகவும் வெடிக்க சாத்தியக்கூறு கொண்டதாகவும் இருந்துள்ளது. ஆனால், 1979இல் அமெரிக்க மற்றும் சீன இராஜாங்க உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதற்குப் பின்னர், கடந்த நான்கு தசாப்தங்களாக, தைவான் மீதான பதட்டங்கள் பெரும்பாலும் சுமூகமான சமநிலைப்பட்ட உடன்பாட்டின் கட்டமைப்பிற்குள் பெருமளவில் சமாளிக்கப்பட்டும் கட்டுப்படுத்தப்பட்டும் நிர்வகிக்கப்பட்டன.

ட்ரம்ப் நிர்வாகத்தில் ஆரம்பித்து, அந்த உடன்படிக்கைகளும், இராஜாங்க நெறிமுறைகளும் மற்றும் பின்புல புரிந்துணர்வுகளும் அதிகரித்தளவில் கிழித்தெறியப்பட்டு உள்ளன. இந்தவொரு நிகழ்ச்சிப்போக்கை பைடென் இன்னும் முடுக்கி விட்டு வருகிறார். அமெரிக்க சிறப்புப்படை பிரிவுகள், ஓராண்டுக்கும் அதிகமாக தைவான் பயிற்சி துருப்புகளுடன் உள்ளன என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வழியாக இம்மாதம் வெளியான ஆத்திரமூட்டும் தகவல்தான், இது வரையிலான நடவடிக்கைகளிலேயே மிகவும் அதிர்ச்சியூட்டும் நடவடிக்கையாக உள்ளது.

1979 இல், சீனாவுடனான அதன் ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, அமெரிக்கா, தைவானில் இருந்து அதன் இராணுவப் படைகள் அனைத்தையும் விலக்கிக் கொண்டு, அதன் உடனான இராஜாங்க உறவுகளை முறித்துக் கொண்டு, தைபே உடனான அதன் அதன் இராணுவ உடன்படிக்கையையும் முடிவுக்குக் கொண்டு வந்தது. தைவானில் அமெரிக்கத் துருப்புக்களை நிலைநிறுத்துவது என்பது பல தசாப்தங்களாக உள்ளது உள்ளவாறே வைத்திருக்கும் நடைமுறை மீதான ஒரு வெளிப்படையான மீறல் என்பதோடு, அது அமெரிக்க-சீன இராஜாங்க உறவுகளுக்கான அடிப்படையையே கேள்விக்குள்ளாக்குகிறது.

வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் பைடென் நிர்வாகத்தின் நடவடிக்கைகளால் முன்னிறுத்தப்படும் மாபெரும் ஆபத்துக்களைப் புரிந்து கொள்ள, வரலாற்று பின்னணியை ஆராய்வது அவசியமாகும். அமெரிக்கா இப்பிராந்தியத்தில் அது வைத்திருக்கும் மிரட்டும் இராணுவக் கட்டமைப்பையும் மற்றும் இந்த முக்கிய வெடிப்புப் புள்ளியை அது எரியூட்டுவதையும் நியாயப்படுத்த, அதிகரித்து வரும் சீன ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கும் ஒரு வளர்ந்து வரும் ஜனநாயகமாக அது தைவானைச் சித்தரிக்கிறது.

யதார்த்தத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியம் தைவானிலோ அல்லது அப்பிராந்தியத்தில் வேறெந்த இடத்திலோ ஜனநாயகம் பற்றி சிறிதும் அக்கறை கொண்டதில்லை. 1945 இல் ஜப்பானின் இரண்டாம் உலகப் போர் தோல்வியைத் தொடர்ந்து, சியாங் கேய்-ஷேக்கின் சர்வாதிகார கோமின்டாங் ஆட்சியை (KMT) சீன அரசாங்கமாக நிறுவ அமெரிக்கா உதவியது. 1895 சீன-ஜப்பானிய போரில் சீனாவின் தோல்வியைத் தொடர்ந்து அப்போது ஜப்பானிய காலனியாக இருந்த தைவானுக்கு, 1945 அக்டோபரில், அமெரிக்க கடற்படை கோமின்டாங் துருப்புகளை தைவானுக்கு ஏற்றிச் சென்றது.

அமெரிக்க ஆதரவிலான காட்டுமிராண்டித்தனமான கோமின்டாங் ஆட்சி

மோசமடைந்து வந்த பொருளாதார நெருக்கடி உள்ளூர் தைவானியருக்கும் பெருநிலத்திலிருந்து புதிதாக வந்த சீனர்களுக்கும் இடையிலான உறவுகளை மோசமாக்கியது, ஜெனரல் சென் யீ (Chen Yi) இன் ஆளுநர் பதவியின் கீழ் இருந்த கோமின்டாங் நிர்வாகம் தொடக்கத்தில் இருந்தே மிருகத்தனமானதாக இருந்தது. பெப்ரவரி 28, 1947 இல் ஒரு அப்பாவி பிரஜை சுட்டுக் கொல்லப்பட்டதால், அது அத்தீவு முழுவதும் அமைதியின்மையை தூண்டிவிட்டது, கோமின்டாங் இராணுவம் அதை வன்முறை கொண்டு நசுக்கி இருந்தது. அதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,000 முதல் 30,000 வரை இருக்குமென மதிப்பிடப்படுகிறது.

தைவானில் அந்த காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறை, ஊழலில் ஊறிப் போயிருந்த சியாங் கேய்-ஷேக் ஆட்சியின் பரந்த நெருக்கடியின் பகுதியாக இருந்தது. தொழிலாள வர்க்கத்தின் ஒரு வேலைநிறுத்த இயக்கம் மற்றும் 1947 இல் இருந்து சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு (CCP) எதிரான உள்நாட்டுப் போரையும் உள்ளடக்கிய, அதிகரித்து வந்த எதிர்ப்புக்கு எதிராக அது பொலிஸ்-அரசு நடவடிக்கைகளைப் பயன்படுத்தியது. 1949 இல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று மக்கள் சீனக் குடியரசு (People’s Republic of China) பிரகடனம் செய்யப்பட்டதை அடுத்து, கோமின்டாங் உம் அதன் ஆதரவாளர்களும் தைவானுக்குத் தப்பி ஓடினர்.

சியாங் கேய்-ஷேக் 1966 இல் துருப்புக்களின் அணிவகுப்பை பார்வையிடுகிறார் [ஆதாரம்: விக்கிமீடியா காமன்ஸ்].

பாரியளவில் வெளியேறிய சுமார் இரண்டு மில்லியன் பேரில், கோமின்டாங் தலைமையும், அதன் சிப்பாய்கள், அதிகாரிகள் மற்றும் செல்வந்த வணிக உயரடுக்குகளும் உள்ளடங்கும். சீனாவின் தங்கமும் வெளிநாட்டு செலாவணி கையிருப்புக்களும், அத்துடன் பல தேசிய கலாச்சார பொக்கிஷங்களும் தைவானுக்கு கொண்டு செல்லப்பட்டன. கோமின்டாங் அரசாங்கம் சீனக் குடியரசின் (Republic of China - ROC) தற்காலிகத் தலைநகரமாக தைபேயை பிரகடனப்படுத்தியதுடன், பெருநிலத்தைத் திரும்பக் கைப்பற்றும் அதன் நோக்கத்தையும் அறிவித்தது.

இன்று சீனாவிலிருந்து பிரிந்திருக்கும், இன்றைய தைவான், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உருவாக்கமாகும். 1950 இல் கொரியப் போர் வெடித்ததைத் தொடர்ந்து, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் அத்தீவை அமெரிக்காவின் ஏழாவது கடற்படை பிரிவினது பாதுகாப்பின் கீழ் நிறுத்தினார். அமெரிக்காவின் ஆதரவு இருந்ததால் மட்டுமே மொத்த சீனாவுக்கும் பெருநிலத்திலிருந்து வெளியிலிருந்த ஓர் அரசாங்கமாக கோமின்டாங்கால் தன்னைக் காட்டிக் கொள்ள முடிந்தது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் சீனாவிற்கான ஆசனம், வாஷிங்டனின் ஆதரவுடன், சீனக் குடியரசுக்கு வழங்கப்பட்டதுடன், சீனாவின் தலைநகராக பெய்ஜிங் அல்ல, தைபே (Taipei) அங்கீகரிக்கப்பட்டது.

அது சர்வாதிகார மற்றும் எதேச்சதிகார ஆட்சிகளை ஆசியா முழுவதிலும் ஆதரித்தது போலவே, கோமின்டாங் சர்வாதிகாரத்திற்கும் அமெரிக்கா அதன் முழு ஆதரவை வழங்கியது, 1949 மே இல் கோமின்டாங் கொண்டு வந்த இராணுவ ஆட்சி அண்மித்து நான்கு தசாப்தங்களுக்கு 1987 வரை தொடர்ந்தது. வெள்ளை பயங்கரவாதம் (White Terror) என்று அறியப்பட்ட எல்லா அரசியல் எதிர்ப்பையும் கோமின்டாங் ஈவிரக்கமின்றி நசுக்கியது. ஒரு மதிப்பீட்டின்படி, கோமின்டாங்கிற்கு எதிரானதாக அல்லது கம்யூனிச உணர்வுகளுக்கு ஆதரவானதாக குற்றஞ்சாட்டப்பட்ட 140,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது தூக்கிலிடப்பட்டதும் அதில் உள்ளடங்கும்.

சீனக் கடற்கரை பகுதிகளை கடல்வழியிலும் வான்வழியிலும் முற்றுகை இட்டது உட்பட, அமெரிக்காவின் ஆதரவுடன், பெய்ஜிங்கிற்கு எதிராக கோமின்டாங்கின் ஆத்திரமூட்டல்கள், தொடர்ந்து பதட்டத்திற்கு மூலகாரணமாக இருந்தன. சீன பெருநிலப்பரப்பில் இருந்து வெகு சில கிலோமீட்டர் தொலைவில் மற்றும் முக்கிய சீன நகரங்களுக்கு அருகில் உள்ள பல கோட்டை அரண் போன்ற தீவுகளை தைபே கட்டுப்பாட்டில் வைத்திருந்தது, அந்த கட்டுப்பாடு இப்போதும் தொடர்கிறது.

1950 களில் இரண்டு பெரிய நெருக்கடிகள் வெடித்தன. 1954 ஆகஸ்டில், கோமின்டாங் பத்தாயிரக் கணக்கான துருப்புக்களை மட்சு (Matsu) மற்றும் கின்மென் (Kinmen) தீவுகளில் நிலைநிறுத்தி, இராணுவ தளங்களைக் கட்டமைக்க தொடங்கியது, இதற்கு மக்கள் விடுதலை இராணுவம் (PLA) கின்மென் தீவுப் பகுதிகள் மீது பீரங்கி குண்டுகள் வீசி விடையிறுத்தது. நெருக்கடியின் உச்சக்கட்டத்தில், அமெரிக்க காங்கிரஸ் சபை சீனாவுக்கு எதிராக இராணுவ பலத்தைப் பிரயோகிக்க அனுமதி வழங்கியதோடு, பென்டகன் அணுஆயுத தாக்குதல்களையும் ஆதரித்தது.

மட்சு மற்றும் கின்மென் மீதான பீரங்கி குண்டுவீச்சு தாக்குதல்கள் மற்றும் டோம்டிங் தீவுக்கு அருகில் கோமின்டாங் மற்றும் மக்கள் விடுதலை இராணுவத்திற்கு இடையே நடந்த மோதல்களுக்குப் பின்னர், ஆகஸ்ட் 1958 இல் வெடித்த இரண்டாவது தைவான் ஜலசந்தி நெருக்கடி வெடித்தது. வான்வழி மற்றும் கடல்வழி தாக்குதல்களும் பீரங்கி குண்டுவீச்சுகளும் மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்தன, அதில் இரண்டு தரப்பிலும் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தார்கள். அமெரிக்கா கோமின்டாங் இராணுவத்தை மீளப்பலப்படுத்தியதுடன், சுற்றி வளைக்கப்பட்ட கோமின்டாங் கடற்படை கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கியது. பென்டகனோ அணுஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை மீண்டும் முன்வைத்தது.

சீனாவுக்கும் அமெரிக்காவினால் இராணுவரீதியில் ஆதரிக்கப்பட்டிருந்த தைவானில் இருந்த கோமின்டாங் ஆட்சிக்கும் இடையிலான குரோதமான விட்டுக்கொடுப்பற்ற தன்மை, 1960 கள் நெடுகிலும் தொடர்ந்தது.

பெய்ஜிங் உடனான வாஷிங்டனின் சமரசம்

1972 பெப்ரவரியில் அமெரிக்க ஜனாதிபதி நிக்சனின் சீன விஜயம் புவிசார் அரசியல் உறவுகளில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தைக் குறித்தது. நிக்சனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிஸ்ஸிங்கர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுடன் நடத்திய இரகசிய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், அதற்கு ஓராண்டுக்கு முன்னரே இந்த பயணம் அறிவிக்கப்பட்டது. நிக்சனும் கிஸ்ஸிங்கரும், சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக சீனாவுடன் ஓர் அரைகுறை கூட்டணியை உருவாக்குவதற்காக, 1960 களின் தொடக்கத்தில் ஏற்பட்டிருந்த சீன-சோவியத் பிளவையும் மற்றும் எல்லை மோதல்கள் உட்பட மாஸ்கோவுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான கூர்மையான பதட்டங்களையும் தமக்கு சாதகமாக்கிக் கொள்ள முடியுமென கணக்கிட்டனர்.

சீனத் தலைவர் மாவோ சேதுங்கை நிக்சன் சந்தித்தமையும், ஷாங்காய் கூட்டறிக்கை வெளியிடப்பட்டமையும் இராஜாங்க உறவுகளை ஸ்தாபிப்பதற்கான வழியை வகுத்தன. அது ஒரு பிற்போக்குத்தனமான பங்காண்மையாக இருந்தது, அதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி, சிலியின் பினோசே சர்வாதிகாரம் மற்றும் ஷா முகம்மது ரேசா பஹ்லாவியின் (Shah Mohammad Reza Pahlavi) ஈரானிய ஒடுக்குமுறை ஆட்சி போன்ற வலதுசாரி அமெரிக்க கூட்டாளிகளை ஆதரித்தது. அந்த உடன்படிக்கை சீனாவை உலக முதலாளித்துவ சந்தையில் ஒரு மலிவு உழைப்பு தளமாக மீள ஒருங்கிணைப்பதற்கும் கதவைத் திறந்து விட்டது.

1972 ல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சனுடன் மாவோ சேதுங் [ஆதாரம்: விக்கிமீடியா].

தைவானில் இருந்த கோமின்டாங் சர்வாதிகாரத்திடம் இருந்து வாஷிங்டன் திடீரென முகத்தைத் திருப்பிக் கொண்டமை நீண்ட கால விளைவுகளைக் கொண்டிருந்தது. நீண்ட பேச்சுவார்த்தைகளில் தைவான் பற்றிய நிலைப்பாடு ஒரு முக்கிய பிரச்சினையாக இருந்தது, முடிவாக இது 1979 இல் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே முறையான இராஜாங்க உறவுகளுக்கு வழிவகுத்தது. சீனாவின் ஒரு பகுதியாக தைவானைச் சேர்த்து 'ஒரே சீனா' என்ற கொள்கையை அமெரிக்கா அங்கீகரித்து. தைபே உடனான அதன் இராணுவ மற்றும் இராஜாங்க உறவுகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று CCP வலியுறுத்தியது.

ஷாங்காய் கூட்டறிக்கையில் அமெரிக்கா பின்வருமாறு ஒப்புக் கொண்டது: 'தைவான் ஜலசந்தியின் இருபுறமும் [மொ]த்த சீனர்களும் ஒரே சீனாவைப் பேணுகிறார்கள், தைவான் சீனாவின் ஒரு பகுதியாக உள்ளது. அமெரிக்க அரசு அந்த நிலைப்பாட்டை சவால் செய்யவில்லை. தைவான் பிரச்சினைக்கு சீனர்கள் அவர்களே அமைதியான முறையில் தீர்வு காணும் அதன் ஆர்வத்தை அமெரிக்கா மீண்டும் உறுதிப்படுத்துகிறது.' இதற்கும் கூடுதலாக, 'தைவானில் இருந்து மொத்த அமெரிக்கப் படைகள் மற்றும் இராணுவ நிறுவல்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்ற இறுதி நோக்கத்தை' அது உறுதிப்படுத்தியது.

1979 இல், இராஜாங்க உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட போது, வாஷிங்டன் தைபே உடனான இராஜாங்க உறவுகளை முறித்துக் கொண்டு, அதன் படைகளை விலக்கி கொண்டதுடன், அதன் இராணுவ உடன்படிக்கையை —முறையாக இல்லாவிட்டாலும்— இரத்து செய்தது, பெய்ஜிங்கின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியுடன் 'ஒரே சீனாவை' சட்டபூர்வ அரசாங்கமாக அது ஒப்புக் கொண்டது. 1971 இல் பெய்ஜிங் ஐ.நா பாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுப்பினராக அந்தஸ்தை ஏற்றபோது, தைபே ஏற்கனவே ஐ.நா. சபையில் அதன் இடத்தை இழந்திருந்தது, இந்த நகர்வை அமெரிக்கா தடுக்கவில்லை.

அதே நேரத்தில், அமெரிக்க காங்கிரஸ் சபை தைவான் உறவுகள் சட்டத்தை நிறைவேற்றியது, அது தைவானை பலவந்தமாக பெய்ஜிங் மீண்டும் இணைக்கும் எந்த முயற்சியையும் எதிர்த்ததுடன், தைவானுக்குத் 'தற்காப்பு' இராணுவ ஆயுதங்களை விற்பதற்கு அங்கீகாரம் அளித்தது மற்றும் உத்தியோகபூர்வமற்ற உறவுகளைப் பராமரிக்க கூடிய வகையில் தைவான் அமெரிக்க அமைப்பை (American Institute in Taiwan) நிறுவியது. சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான ஒரு மோதலை நோக்கி வாஷிங்டன் ஒரு 'குழப்பமான மூலோபாய' நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டது. அதாவது, அது தலையிடுமா தலையிடாதா என்பதற்கு அது ஓர் உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை. சீன ஆக்கிரமிப்பு மற்றும் தைவானின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் இரண்டையும் தடுப்பதே இதன் நோக்கமாக இருந்தது.

கோமின்டாங் சர்வாதிகாரத்தின் முடிவு

1960 கள் மற்றும் 1970 கள் முழுவதிலும், அமெரிக்கா தைவானுக்கு நிதியுதவிகளுடன் பொருளாதார ரீதியாகவும், முதலீடுகளுக்கும் மற்றும் அமெரிக்க சந்தையை அணுகுவதற்கும் உதவியது. அது அதன் அரசு ஆதரவு கொண்ட தொழில்மயமாக்கலுக்கு உதவியது. 1970 களின் போது, தைவான் தான் ஜப்பானை அடுத்து ஆசியாவிலேயே மிக வேகமாக வளர்ந்து வந்த பொருளாதாரமாக இருந்தது. 1970 களின் பிற்பகுதியில் இருந்து பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்திக்குத் திரும்பிய நிலையில், தைவான் ஆசியாவின் மிக முக்கிய மலிவு உழைப்பு தொழிலாளர் தளங்களில் ஒன்றாக மாறியது. தைவான், ஹாங்காங், தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நான்கு ஆசியப் புலிகள் (Asian Tigers) பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு புதிய முன்மாதிரியாக எடுத்துக்காட்டப்பட்டன.

உள்ளூர் தைவானிய உயரடுக்குகளின் இழப்பில், கோமின்டாங் 'பெருநிலத்தின்' கூட்டாளிகளின் ஊழலுடன் தொடர்புடைய, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட தேசிய பொருளாதாரத்தை கோமின்டாங் சர்வாதிகாரம் அடிப்படையாகக் கொண்டிருந்தது. அமெரிக்க அழுத்தத்தின் கீழ், அந்த ஆட்சி 1980 களில் அதன் பொருளாதாரத்தைத் திறந்து விட தொடங்கியது, அரசுக்கு சொந்தமான பெருநிறுவனங்களைத் தனியார்மயமாக்கியது மற்றும் அரசு பொருளாதார நெறிமுறைகளை அகற்றியது. இந்த நகர்வுகள் கோமின்டாங்கின் அரசியல் ஆதரவுத் தளத்தைப் பலவீனப்படுத்த வழிவகுத்தன.

இராணுவச் சட்டத்தின் கீழ் அரசியல் எதிர்ப்பு சட்டவிரோதமாக இருந்தது என்றாலும், அந்த ஆட்சியின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான எதிர்ப்புக்கள் மூலம் அதிகரித்தளவில் குரல் எழுப்பப்பட்டது. தைவானின் வேகமான பொருளாதார விரிவாக்கம் தொழிலாள வர்க்கத்தின் மிகப் பெரிய வளர்ச்சிக்கு வழிவகுத்ததுடன், அது அதிகரித்தளவில் போர்க்குணத்துடன், மேம்பட்ட சம்பளங்கள் மற்றும் நிலைமைகளைக் கோரி வேலைநிறுத்தங்களின் ஓர் அலையை நடத்தியது.

இதற்கு விடையிறுப்பாக, கோமின்டாங் தொடர்ச்சியாக பல மட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயக சீர்திருத்தங்களுக்கு ஒப்புக் கொண்டது. உள்ளூர் தைவானிய உயரடுக்குகள் தலைமையிலான முதலாளித்துவ அரசியல் எதிர்ப்பால் 1986 இல் ஜனநாயக முற்போக்குக் கட்சியை (Democratic Progressive Party - DPP) அமைக்க முடிந்தது, அதற்கடுத்த ஆண்டு தைவான் பிரதான தீவில் இராணுவச் சட்டம் அகற்றப்பட்டது. அந்த அரசாங்கமே அப்போதும் மொத்த சீனாவையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இந்த கட்டுக்கதையின் அடிப்படையில், யுவான் சட்டமன்றம் மற்றும் தேசிய சட்டமன்றம் ஆகிய பிரதான சட்டமன்ற அமைப்புகளில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத கோமின்டாங் பிரதிநிகள் பெருநில சீனாவின் மாகணங்களில் குவிக்கப்பட்டார்கள். 1991 இல் சீர்திருத்தப்பட்ட ஒரு முழு அளவிலான தேசிய சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டது, 1992 இல் சீர்திருத்தப்பட்ட ஒரு யுவான் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதிக்கான முதல் நேரடித் தேர்தல் 1996 இல் நடத்தப்பட்டது.

பெருநில சீனா உடனான உறவுகளுடன் பிரிக்க முடியாத வகையில் பின்னிப் பிணைந்துள்ள தைவான் அந்தஸ்து விவகாரமே, அதிகரித்தளவில் தைவான் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றது. மட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயக சீர்திருத்தங்களை முன்னெடுத்த ஜனாதிபதி லீ டெங்-ஹுய் (Lee Teng-hui), தைவானில் பிறந்த முதல் ஜனாதிபதியாக ஆனார். அவர் கோமின்டாங் உறுப்பினராக இருந்தாலும், DPP இன் செல்வாக்கை எதிர்கொள்ளவும் மற்றும் சர்வதேச அரங்கில் தைவானை முன்னிலைப்படுத்தவும் அவர் தைவானிய அடையாளத்தை ஊக்குவிக்க முயன்றார்.

1995 இல் கார்னெல் பல்கலைக்கழகத்தில் (Cornell University) அழைப்பை ஏற்று 'தைவானின் ஜனநாயகமயமாக்கல் அனுபவம்' என்ற உரை நிகழ்த்துவதற்காக, அமெரிக்காவுக்கான தைவானிய அதிகாரிகளின் உயர்மட்ட விஜயங்களுக்கு எதிராக இருந்த அமெரிக்காவின் நீண்டகால இராஜாங்க நெறிமுறைகளை லீ சவால் விடுத்தார். கிளின்டன் நிர்வாகம் அவரின் நுழைவனுமதி கோரிக்கையை நிராகரித்த போதினும், காங்கிரஸ் சபை அந்த விஜயத்தை ஆதரித்தது. அந்த பிரதிநிதிகள் குழு அங்கே சென்றது, இது பெய்ஜிங்கில் இருந்து ஒரு கோபமான எதிர்வினையைத் தூண்டியது, லீ சீனாவைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறார் அவர் ஒரு 'தேசத் துரோகி' என்று அது கண்டனம் செய்தது.

டெங் சியாப்பிங்கின் கீழ் இருந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி, அதன் பங்கிற்கு, 'ஒரே நாடு, இரண்டு அமைப்புமுறைகள்' என்ற சூத்திரத்தின் அடிப்படையில் தைவானின் மறுஇணைப்பை முன்நகர்த்தியது. அதாவது, அரசியல், அரசு கட்டமைப்புகள் மற்றும் பொருளாதாரத்தில் தைவான் கணிசமானளவு சுயாட்சியைத் தக்க வைத்திருக்கும். தைவான் முறையான சுதந்திரத்தை அறிவிக்கலாம் என்ற எந்தவொரு ஆலோசனைக்கும் விரோதமாக இருந்த பெய்ஜிங், அமெரிக்காவுக்கான லீ இன் விஜயத்தை 1979 இல் வாஷிங்டன் கொடுத்த உறுதிமொழிகளின் ஒரு மீறலாக கருதியது.

சீனாவுடனான அதன் உடன்பாடுகளை அமெரிக்கா தற்போது வேண்டுமென்றே மீறும் அபாயங்களை எடுத்துக் காட்டும் விதமாக, அந்த விஜயம் 1995-96 இல் மூன்றாவது தைவான் ஜலசந்தி நெருக்கடியைத் தூண்டியது. தைவான் ஜலசந்தி நெடுகிலும் தைவானுக்கு அருகில் உள்ள சீன மாகாணமான ஃபுஜியனில் (Fujian) ஏவுகணை சோதனைகளையும் மற்றும் இராணுவப் படைகளின் கட்டமைப்பையும் பெய்ஜிங் அறிவித்தது. வியட்நாம் போருக்குப் பின்னர் ஆசியாவில் மிகப் பெரிய இராணுவ வலிமையைக் காட்டும் விதமாக, தைவானுக்கு அருகிலுள்ள கடலில் இரண்டு விமானந்தாங்கி போர்க்கப்பல்களை அனுப்பியும் மற்றும் குறுகலான தைவான் ஜலசந்தி வழியாக ஒன்றை அனுப்பியும் கிளிண்டன் நிர்வாகம் விடையிறுத்தது. பெய்ஜிங் பின்வாங்கியது.

சுதந்திரத்திற்கு ஆதரவான DPP க்கும் மற்றும் சீனாவை நோக்கிய கோமின்டாங்கிற்கும் இடையிலான தைவான் அரசியலின் துருவமுனைப்பாடு அத்தீவின் பொருளாதாரத்தில் வேரூன்றி உள்ளது. ஒரு புறம், இராஜாங்கரீதியில் அங்கீகாரம் இல்லாததால், பொருளாதார அமைப்புகள் உட்பட சர்வதேச அமைப்புகளுக்குள் தைவான் நுழைவதற்கு அது ஒரு தடையாக உள்ளது. இது பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை அதிகமாக கடினமாக்குகிறது. மிகப் பெரியவில் தைவானிய சுயாட்சியை ஊக்குவித்தவரும் 2000 ஆம் ஆண்டு தேர்தலில் ஜனாதிபதியாக முதல் DPP தலைவர் Chen Shui-bian தேர்ந்தெடுக்கப்பட்டமை பெய்ஜிங் உடன் பதட்டங்களை அதிகரித்தது. தைவானிய சுதந்திரத்தை எந்தவிதத்திலும் உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்துவதற்கு அது படை பலத்தைக் கொண்டு விடையிறுக்கும் என்று பெய்ஜிங் எச்சரித்தது.

மறுபுறம், 1978 இல் இருந்து சீனாவில் முதலாளித்துவ மீட்டமைப்பு தைவானிய பெருநிறுவனங்களுக்கு மிகப் பெரும் பொருளாதார வாய்ப்புகளைத் திறந்துவிட்டது. தைவானிய வணிகங்கள் 1991 க்கும் 2020 தொடக்கத்திற்கும் இடையே சீனாவில் 118 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்தன, 2019 இல் அந்த ஜலசந்திக்கு இடையிலான வர்த்தக மதிப்பு $149.2 பில்லியனாக இருந்தது. 2008 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட கோமின்டாங் ஜனாதிபதி Ma Ying-jeou இன் கீழ், ஒரு வர்த்தக உடன்படிக்கை தைவானுக்கும் சீனாவுக்கும் இடையே நேரடி விமானங்கள் மற்றும் சரக்குக் கப்பல் போக்குவரத்தைத் திறந்துவிட்டதால் பொருளாதார உறவுகள் பலமடைந்தன.

2015 இல், தைவான் மற்றும் சீன ஜனாதிபதிகளான மா மற்றும் ஜி ஜின்பிங்கிற்கு இடையிலான முதல் சந்திப்பு சிங்கப்பூரில் நடந்தது. அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் 'மரியாதையுடன்' அழைத்து, மக்கள் சீனக் குடியரசு மற்றும் சீனக் குடியரசு என்று கூறாமல் 'இரண்டு கடற்கரைப் பகுதிகள்' என்று குறிப்பிட்டு, இரண்டு நாடுகளின் இரண்டு ஜனாதிபதிகளின் எந்தவொரு ஆலோசனையைச் சுற்றி மிகவும் கவனமாக முன்னெடுத்தனர். அவ்விருவருமே 1992 கருத்தொற்றுமையாக அறியப்படும் ஒன்றைக் கடைபிடிப்பதன் மூலம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் சரி கோமின்டாங்கும் சரி ஒரே சீனாவுடன் உடன்படுகிறார்கள் என்றாலும் அதை யார் ஆள்வது என்பதில் உடன்படவில்லை.

தைவான் சம்பந்தமான பதட்டங்களை அமெரிக்கா அதிகரிக்கிறது

ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கில் போர்களைத் தொடுத்திருக்கும் அதேவேளையில் ஆசியாவை புறக்கணித்திருப்பதாக முந்தைய புஷ் நிர்வாகம் மீதான ஜனநாயகக் கட்சியின் விமர்சனத்தை பிரதிபலிக்கும் விதமாக, 2009 இல் ஒபாமா ஜனாதிபதியாக பதவி ஏற்றமை சீனாவுடனான மோதலை நோக்கிய ஒரு கூர்மையான திருப்பத்தைக் குறித்தது. 'ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு' 2011 இல் தான் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்றாலும், ஒபாமா நிர்வாகம் ஆசியாவில் அமெரிக்க நிலையை உயர்த்துவதையும், பொருளாதார ரீதியாக சீனாவைப் பலவீனப்படுத்துவதையும், அப்பிராந்தியம் முழுவதிலும் அமெரிக்க இராணுவ இருப்பையும் கூட்டணிகளையும் வலுப்படுத்துவதையும் இலக்காகக் கொண்ட ஒரு பரந்தளவிலான தாக்குதலைத் தொடங்கியது. சீனாவுடனான போருக்கான பென்டகனின் வான்வழி-கடல்வழி போர் (AirSea Battle) மூலோபாயத்திற்குப் பொருந்திய விதத்தில், 2020 வாக்கில், அமெரிக்க கடற்படை மற்றும் விமானப்படை கையிருப்புகளில் 60 சதவீதம் இந்தோ-பசிபிக்கில் நிலைநிறுத்தப்பட இருந்தன.

சீனாவுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையிலான முக்கியத்துவம் குறைந்த பிராந்திய மோதல்களில் அதற்கு 'தேசிய நலன்' இருப்பதாக அறிவித்து, ஒபாமா நிர்வாகம் வேண்டுமென்றே தென் சீனக் கடலில் பதட்டங்களைத் தூண்டியது. வட கொரியாவின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக கொரிய தீபகற்பத்தில் அதிகரித்து வந்த பதட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர அது எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில், ஒபாமா நிர்வாகம் சீனாவுடனான அமெரிக்க உறவுகளுக்கு முக்கியமானதாக இருக்கும் தைவானின் நிலைப்பாடு தொடர்பாக அதன் வெடிப்பார்ந்த விளைவுகளுக்கான சாத்தியக்கூறுகளை அங்கீகரிக்கும் விதத்தில் அதில் தலையிடாமல் இருந்துகொண்டது.

ட்ரம்புக்கு அத்தகைய தயக்கங்கள் எதுவும் இருக்கவில்லை. அவர் முறையாக பதவி ஏற்பதற்கு முன்னரே, ஆத்திரமூட்டும் வகையில், 2016 இன் மத்திய பகுதியில் பதவியேற்றிருந்த DPP இன் தைவானிய ஜனாதிபதி Tsai Ing-wen இன் தொலைபேசி அழைப்பை ஏற்றார். தேர்தல் வெற்றிக்கு ட்ரம்பை வாழ்த்துவதற்கான தொலைபேசி அழைப்பு என்று பெயரளவுக்குக் கூறப்பட்டாலும், அது நிறுவப்பட்ட நெறிமுறைகளை மீறி இருந்தது.

சாய் இங்-வென் டிசம்பர் 2016 இல் அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் தொலைபேசியில் பேசினார் [ஆதாரம்: விக்கிமீடியா]

2016 டிசம்பர் ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் 'வர்த்தகம் உட்பட மற்ற விஷயங்களுடன் சீனாவுடன் நாம் ஓர் உடன்படிக்கை செய்து கொள்ளாமல், நாம் ஏன் ஒரே சீனா கொள்கைக்கு மட்டும் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை.' என்று பகிரங்கமாக அறிவித்ததன் மூலம் ட்ரம்ப் இதுதொடர்பாக பெய்ஜிங்கைக் கவனித்திற்குக் கொண்டு வந்தார். அந்த அறிக்கை, அமெரிக்க-சீன உறவுகளின் அடித்தளத்திலிருந்த 'ஒரே சீனா' கொள்கையை, ட்ரம்ப் கட்டவிழ்த்து விட இருந்த வர்த்தக மற்றும் பொருளாதார போர்முறையில் ஒரு பேரம்பேசும் துருப்புச்சீட்டாக மாற்றியது.

தைவானுடன் நீண்டகால உறவுகளைக் கொண்டிருந்த மற்றும் சீனாவுடன் ஆழ்ந்த விரோதப் போக்கு கொண்டிருந்த பல உயர்மட்ட அதிகாரிகள் ட்ரம்ப் நிர்வாகத்தில் உள்ளடங்கி இருந்தனர், ஆரம்பத்தில் அவரின் தலைமைத் தளபதிகளின் தலைவராக இருந்த ரியன்ஸ் பிரைபஸ் மற்றும் வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவார்ரோவும் அதில் உள்ளடங்குவர். ட்ரம்பின் கீழ், அமெரிக்கா தைவானுக்கு ஆயுத விற்பனையை அதிகரித்தது, தைவான் ஜலசந்தி வழியாக செல்லும் அமெரிக்க போர்க் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்தது, தைவானிய ஜனாதிபதி Tsai இன் சீன-எதிர்ப்பு நிலைப்பாட்டை ஆதரித்தது, அமெரிக்க மற்றும் தைவான் அதிகாரிகளுக்கு இடையிலான தொடர்பைப் பெருமையடித்தது. இவை அனைத்தும் சீன ஆட்சேபனைகளுக்கு மத்தியில் நடந்தன. 1979 க்குப் பின்னர் தைவானுக்கு விஜயம் செய்த உயர்-பதவி அமெரிக்க அதிகாரியாக சுகாதாரத்துறை செயலர் அலெக்ஸ் அசார் ஆகஸ்ட் 2020 இல் அங்கே விஜயம் செய்தார்.

தைவான் பிரச்சினையை ட்ரம்ப் வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் வகையில் தூண்டிவிட்டதால் போர் அபாயம் மிகப் பெரியளவில் அதிகரித்தது. 'சீன ஆக்கிரமிப்புக்கு' சாத்தியம் இருப்பதாக அமெரிக்கப் பிரச்சாரம் இடைவிடாமல் எச்சரிக்கின்ற அதேவேளை, இந்தாண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட்ட பாப் வூட்வார்ட் மற்றும் ராபர்ட் கோஸ்டாவின் ஒரு புதிய புத்தகமான Peril குறிப்பிடுகையில், ட்ரம்ப் அவரின் தேர்தல் தோல்வியை மாற்றுவதற்கான முயற்சியின் பாகமாக, சீனாவுடனான ஒரு போரைத் தூண்டிவிடுவதற்கான முயற்சிகளை தடுப்பதற்காக, கூட்டுப்படைகளின் தலைமை தளபதிகளின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லி அசாதாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள நிர்பந்திக்கப்பட்டதை வெளிப்படுத்தியது.

சீனா உடனான உறவுகளைச் சரி செய்ய முயற்சிப்பதற்குப் பதிலாக, பைடென் நிர்வாகம் தைவான் விவகாரம் உட்பட பதட்டங்களை இன்னும் அதிகரித்துள்ளது. பைடெனின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வாஷிங்டனுக்கான தைவானிய நடைமுறை தூதரை வரவேற்ற முதல் ஜனாதிபதியாக இருந்ததன் மூலம், பைடென் தைவானுடன் நெருக்கான உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கான அவரின் நோக்கங்களைச் சமிக்ஞை செய்தார். ட்ரம்ப் நிர்வாகத்தின் இறுதி நாட்களில், வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ அறிவிக்கையில், அமெரிக்க மற்றும் தைவான் அதிகாரிகள், படைத்துறை சாரா துறைகள் மற்றும் இராணுவத்திற்கு இடையிலான தொடர்புகள் மீதிருந்த எல்லா வரம்புகளையும் ஒவ்வொரு மட்டத்திலும் நீக்குவதாக அறிவித்திருந்தார். ஒரு சில சிறிய மாற்றங்களுடன், பைடென் நிர்வாகம் அந்தக் கொள்கையைத் தொடர்கிறது. ஜூன் மாதம், பைடெனின் ஆசீர்வாதத்துடன், அமெரிக்க செனட்டர்கள் குழு ஒன்று கோவிட்-19 தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க இருப்பதை அறிவிப்பதற்காக என்ற பெயரில் தைவானுக்கு விஜயம் செய்தனர்.

அமெரிக்க இராணுவமும் பொருளாதார அச்சுறுத்தல்களும்

தைவான் தொடர்பாக சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் வெறுமனே இராஜாங்க நெறிமுறைகள் சம்பந்தமானது அல்ல. தைவான் உடன் அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவது சீனாவுக்கு, மூலோபாய ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும், நிச்சயமாக அச்சுறுத்தல்களை முன்நிறுத்துகிறது. தைவானில் அமெரிக்க சிறப்புப் படை பயிற்சியாளர்கள் இரகசியமாக அனுப்பப்பட்டிருப்பது, இன்னும் வஞ்சகமான சாத்தியக்கூறுடன் பொருந்துகிறது, தைவான் உட்பட ஆசியாவில் மத்திய தூர தாக்குதல் ஏவுகணைகளை நிறுத்துவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது என்று இதை ஜப்பானிய Nikkei செய்தி நிறுவனம் அம்பலப்படுத்தியது.

தைவான் தீவு மூலோபாய ரீதியாக சீனப் பெருநிலப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது என்பது மட்டுமல்ல, ஜப்பானில் இருந்து பிலிப்பைன்ஸ் வரை நீண்ட முதல் தீவுகளின் சங்கிலியின் ஒரு பகுதியாகவும் உள்ளது, அமெரிக்காவின் மூலோபாய திட்ட வகுப்பாளர்கள் போர் ஏற்பட்டால் சீன கடற்படைகளைச் சுற்றி வளைப்பதற்கு இவற்றை முக்கியமானதாக கருதுகிறார்கள். கொரியப் போரின் போது, ஜெனரல் டக்ளஸ் மேக்ஆர்தர் கூறுகையில், தைவான் 'மூழ்க முடியாத விமானம் தாங்கிக் போர்க்கப்பல்', அதைக் கொண்டு கட்டுப்படுத்தும் மூலோபாயத்திற்காக சீனாவின் கடற்கரையில் அமெரிக்க சக்தியைக் காட்ட முடியும் என்றார்.

பொருளாதார ரீதியாக, தைவான் குறை கடத்தி (Semiconductor) உற்பத்தி நிறுவனத்திற்கு தைவான் தாயகமாக விளங்குகிறது. இது தொழில்துறை மற்றும் இராணுவம் இரண்டு பயன்பாட்டுக்கும் அவசியமான அதிநவீன நுண்தகடுகளில் (chips) 90 சதவீதத்தைப் பாரியளவில் உற்பத்தி செய்வதையும், சர்வதேச நுண்தகடு உற்பத்தியில் 55 சதவீதத்தையும் கணக்கில் கொண்டுள்ளது. ட்ரம்ப் ஏற்கனவே மிகப் பெரிய சீனத் தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய்க்கு அதன் நுண்தகடுகளை வினியோகிக்க வேண்டாமென அழுத்தமளித்து ஏற்கனவே அந்நிறுவனத்திற்கு ஒரு மிகப்பெரிய அடியைக் கொடுத்துள்ளார்.

அமெரிக்க இராணுவ வட்டாரங்களில் தைவான் தொடர்பாக சீனாவுடன் போர் அபாயம் குறித்து தீவிர விவாதம் நடந்து வருகிறது. சீனா உடனான எந்த மோதலிலும் முன்னணியிலும் இருக்கக்கூடிய அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளையகத்தின் வெளியேறும் தலைவரான அட்மிரல் பில் டேவிட்சன், மார்ச் மாதம் எச்சரிக்கையில், ஆறு ஆண்டுகளுக்குள் அமெரிக்கா சீனாவுடன் போரில் இருக்கக்கூடும் என்று எச்சரித்தார், அவர் கட்டளையகத்தின் வரவு-செலவுத் திட்டக் கணக்கை மிகப் பெரியளவில் அதிகரிக்கவும் அழைப்பு விடுத்தார். இராணுவத் தொழில்நுட்பத்தில் சீனாவின் முன்னேற்றங்களை சுட்டிக் காட்டிய டேவிட்சனும் மற்றவர்களும், சீனாவுடனான ஒரு மோதலில் பயன்படுத்துவதற்காக புதிய ஆயுத முறைகளின் அபிவிருத்தியை வேகப்படுத்த வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளனர்.

சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் முனைவுக்குப் பின்னால், பொருளாதார ரீதியில் அது பின்னுக்குத் தள்ளப்படுமோ என்ற அச்சமும் உள்நாட்டில் ஆழ்ந்த அரசியல் மற்றும் சமூக நெருக்கடி பற்றிய அச்சமும் உள்ளது. பெரும் சமூக பதட்டங்கள் மற்றும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், ஆளும் வர்க்கம் ஒரு வெளிப்புற எதிரிக்கு எதிராக சமூக பதட்டங்களை வெளிப்புறமாக திருப்புவதற்கும், அதே நேரத்தில் அதன் வரலாற்றுச் சரிவை மாற்றியமைப்பதற்கும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அது பெற்ற பிராந்திய மற்றும் உலகளாவிய மேலாதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கும் ஒரு வழிமுறையாக போரை நாடக்கூடும்.

தைவான் மீது படையெடுக்க சீனா பரிசீலித்து வருகிறது என்ற எல்லா கூற்றுக்களைப் பொறுத்த வரையில், ஒரே சீனா கொள்கையை கீழறுப்பதன் மூலமும், தைபே உடனான உறவுகளைப் படிப்படியாக வலுப்படுத்துவதன் மூலமும், அமெரிக்க போர் திட்டங்களில் அதை ஒருங்கிணைப்பதன் மூலமும், அமெரிக்கா தான் பெய்ஜிங்கை இராணுவ நகர்வுகளை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது. உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையிலான எந்தவொரு போரும், அவ்விரண்டுமே அணுஆயுதம் ஏந்தியவை என்ற நிலையில், சீனா, தைவான், அமெரிக்கா மற்றும் உலகில் உள்ள தொழிலாள வர்க்கத்திற்குப் பேரழிவுகரமாக இருக்கும்.

போருக்கு மூலகாரணமான இந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைப்பதற்காக உலகெங்கிலுமான தொழிலாளர்களும் இளைஞர்களும் நடவடிக்கை எடுக்க, தைவான் சம்பந்தமாக இந்த அதிகரித்து வரும் பதட்டங்களை ஒரு தீவிர அழைப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

Loading